Tuesday, March 20, 2018

சலிப்பு

நாளைய (20 மார்ச் 2018) வாசகம்

'இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தது ஏன்?
இங்கு உணவுமில்லை. தண்ணீருமில்லை.
அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது.'
(காண். எண்ணிக்கை நூல் 21:4-9)

கடவுளின் பராமரிப்பு சில நேரங்களில் வெறுப்பையும், சலிப்பையும் உண்டாக்கிவிடலாம் என்பதை நாளைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது.

இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்துச் செல்லும் ஆண்டவராகிய கடவுள் அவர்களுக்கு வழியில் மன்னாவும், காடையும் பொழிகின்றார்.

ஒரே மாதிரி சாப்பிட்ட அவர்களுக்கு உணவு 'போர்' அடித்துவிட்டது.

நாளைய நற்செய்தியிலும் (காண். யோவான் 8:21-30) ஏறக்குறைய இதே நிலையைத்தான் வாசிக்கின்றோம்.

'நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது' என இயேசு சொல்ல, அதைக் கேட்ட யூதர்கள், 'ஒருவேளை தற்கொலை செய்துகொள்ளப்போகிறாரோ!' என கேலி பேசுகின்றனர்.

இயேசுவைப் பார்த்து பார்த்து சலித்துவிட்ட அவர்களுக்கு, அவர் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

தன் மேல் மக்களுக்கு 'போர்' அடித்ததால் அவர்கள் மேல் ஒரு சின்ன ட்ரிக் விளையாடுகிறார் கடவுள். விரியன் பாம்புகளை அவர்கள் மேல் ஏவி விடுகின்றார். தங்கள் தவற்றை உணர்ந்து மக்கள் கதறியபோது, விஷம் முறிக்கும் வழியையும் கற்றுக்கொடுக்கின்றார்.

கடவுள் நம் குற்றங்களுக்கு பழி வாங்குபவரா?

இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

ஆனால், அவரைப் பற்றிய சலிப்பு அல்லது வெறுப்பு நம்மில் எழும்போது ஏதோ ஒரு வகையில் தன் இருப்பை நமக்கு உணர்த்திவிடுகின்றார்.

1 comment:

  1. தன்னிடமிருந்து ஆசீர்வாதங்களை மட்டுமே பெற்றுவந்த இஸ்ரயேல் மக்கள் அந்த நன்றியை மறந்து முறையிட, அவர்கள் மேல் விரியன் பாம்புகளை ஏவி விடும் இறைவன்,அவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து கதறியபோது விஷத்தை முறிக்கும் வழியையும் சொல்லித்தருகிறார்.இதுதான் இறையுள்ளம்; ஒரு தாயுள்ளம்.பிள்ளை செய்த குற்றம் கண்டு கோபிப்பதும்,பின் அக்குற்றத்தை நினைத்து வருந்தும்போது தாங்கிப்பிடிப்பதும்.....பிள்ளையைப்பெற்றவர்களின் பெருந்தன்மை.ஆனால் அவரை/ அவர்களைப்பற்றிய சலிப்பு அல்லது வெறுப்பு நம்மில் எழும்போது ஏதோ ஒரு வகையில் தன்/ தங்கள் இருப்பை உணர்த்துவதும் பாதை மறந்த நம்மை பக்குவப்படுத்தவே! கண்ணுக்குத் தெரியாத இறைவனின் கண்கண்ட படைப்புக்களாம் பெற்றோருக்கு என் சமர்ப்பணம்! இதை சாத்தியமாக்கிய தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete