Sunday, March 4, 2018

தம் சொந்த ஊரில்

நாளைய (5 மார்ச் 2018) நற்செய்தி (லூக் 4:24-30)

தம் சொந்த ஊரில்

தம் சொந்த ஊராகிய நாசரேத்தில் தன் பொதுவாழ்வைத் தொடங்குகின்றார் இயேசு. 'இவர் யாரோ!' என வியந்த மக்கள் உடனே அவரைக் குறித்தும், அவரின் சாதாரண பின்புலம் குறித்தும் இடறல்படுகின்றனர்.

நாமும் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போது அவரை வியந்து பார்க்கிறோம். ஆனால், அவரின் எளிய பின்புலம் தெரிந்தவுடன் உடனடியாக அவருடனான நம் பேச்சின் தொணியும் மாறுபட்டுவிடுகிறது.
இயேசு நாசரேத்து மக்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுக்கள் சொல்கிறார்:

அ. இஸ்ரயேலரின் கைம்பெண்களுக்கு எலியா அனுப்பப்படவில்லை.
ஆ. இஸ்ரயேலரின் தொழுநோயாளர்களுக்கு எலிசா நலம் தரவில்லை.

ஆக, கடவுள்தாம் கதி என்று கிடந்த கைம்பெண்களும், தொழுநோயாளர்களும் கூட தங்கள் சொந்த ஊர்க்காரர்களை இறைவாக்கினர்களாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர்.

சொந்த ஊரில் ஒருவர் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்க காரணம் என்னவாக இருக்கும்?

பொறாமையோ, கண்டுகொள்ளாத்தன்மையோ அல்ல. மாறாக, இவன் என்னைவிட வித்தியாசமாக இருக்கிறானே! என்ற எண்ணம்தான்.

பிறந்த கிராமத்திலேயே ஒருவன் மாடு மேய்த்து ஒன்றுமில்லாமல் போகிறான் என வைத்துக்கொள்வோம். மற்றவன், மற்ற ஊரில் போய் ஆடு மேய்த்து கோடீஸ்வரன் ஆனால் முதலாமவனை ஏற்றுக்கொள்ளும் ஊர், இரண்டாமவனை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் அவன் மாட்டிற்கு பதில் ஆட்டையல்லவா மேய்த்தான்?

இறைவாக்கினர் மற்ற மனிதர்களிடமிருந்து மாறுபட்டிருப்பது ஊரார் கண்களுக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை.

இதை மற்ற பக்கம் பார்த்தால்,

அடுத்தவர் நம்மைவிட வித்தியாசமாக இருந்தால் நமக்குப் பிடிப்பதில்லைதானே.

இப்படிப்பட்ட நேரங்களில் நாமும் நாசரேத்தூரர் போல அடுத்தவரை மலையின் உச்சிக்கு ஏற்றி அவரை அழித்துவிட முயல்கின்றோம். இப்படிப்பட்ட சூழலில் நழுவி நகர்வதே சாமர்த்தியம். அதையே செய்கிறார் இயேசு.

1 comment:

  1. " Familiarity brings contempt".... எனக் கேள்விப்பட்டிருப்போம்; அதை அனுபவித்தும் கூட இருப்போம். ஒருவர் ' நம்மவராக', 'நம்முள் ஒருவராக' இருக்கும் காரணத்தாலேயே அவர்களின் அருமை பெருமைகளை நம்மால். ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.இயேசுவையே " இவர் தச்சனின் மகன்தானே!" என்று ஏளனப்பார்வை பார்த்தவர்களின் சந்ததியினர் தாமே நாம்! நமக்கு நல்லது எங்கிருந்து,யார் வழியாக வந்திடினும மனதார, வாயாரப் பாராட்டுவோம்; இருகரம் நீட்டி ஏற்றுக்கொள்வோம்...அதன் நதிமூலம் ரிஷி மூலம் பாராமல்....ஏனெனில் நாம் மீண்டும் அவர்களைத்தேடும்போது அவர்கள் நம் கைக்கெட்டாத தூரம் போயிருக்கலாம். இழப்பு நமக்கேயன்றி அவர்களுக்கல்ல.நமக்கு மிகவும் பரிட்சயமானதொரு விஷயத்தை அவருக்கே உரிய பாணியில் தந்துள்ள தந்தைக்கு என் காலை வணக்கங்கள்! இந்த வாரம் இனிய வாரமாய் அமைந்திட என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete