Monday, March 26, 2018

அந்த மூன்று பேரில் நாம் யார்?

அந்த மூன்று பேரில் நாம் யார்?

இயேசு பந்தியில் அமர்ந்திருக்கிறார். அவரின் சீடர்கள் அவரோடு உடனிருக்கின்றனர். அவரின் இறுதி இரவு உணவு இது. அவரின் இறுதி உணவும்கூட இதுவே. உணவு மனித வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதது. தாவரங்கள், விலங்குகள் உணவு உண்டாலும் அவைகளுக்கு உணவு வெறும் உடல் வளர்ச்சிக்காகவே. ஆனால், மனிதர்களாகிய நமக்கு உணவு, உணர்வு வளர்ச்சிக்காகவும், உறவு வளர்ச்சிக்காகவும் பயன்படுகிறது.

நம் வாழ்வில் நாம் காணும் மூன்று உறவுநிலைகளை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 13:21-33, 36-38) மூன்று நபர்கள் வழியாகப் பார்க்கின்றோம்:

அ. காட்டிக் கொடுக்கும் அன்பு (யூதாசு)
ஆ. மார்பில் சாயும் அன்பு (யோவான்)
இ. மறுதலிக்கும் அன்பு (பேதுரு)

முதல்வகை உறவுநிலை யூதாசு மனநிலையைக் கொண்டிருக்கும். உணவறையில் உடன் அமர்ந்திருந்தாலும் காட்டிக்கொடுக்கத் துடிக்கும். 'எனக்கு என்ன தருவீர்கள்?' என்று விலைபேசத் துடிக்கும்.

இரண்டாம் வகை அன்பு யோவானின் அன்பு. மார்பில் சாய்ந்து இதயத்துடிப்பைக் கேட்கும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும். இந்த அன்பு துணிச்சல் மிக்கது. 'யார்? என்ன? எது? ஏன்?' என எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் இது.

மூன்றாம் வகை அன்பு பேதுரு போல மறுதலிக்கும். கொஞ்சம் அன்பு செய்யும். கொஞ்சம் விலகிக்கொள்ளும். தான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன் எனச் சொல்லும். ஆனால் ஓடிப்போய்விடும்.

இந்த மூன்று வகை மனிதர்களின் அன்பையும் தாண்டி இயேசுவின் அன்பும் இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. அதுதான் 'இறுதிவரை அன்பு செய்யும் அன்பு'.

இயேசுவின் அன்பிற்கு முடிவே கிடையாது. அந்த அன்பில் எல்லாருக்கும் இடமுண்டு. ஆகையால்தான் தன்னுடன் உண்பவர்கள் காட்டிக்கொடுத்தல், மார்பு சாய்தல், மறுதலித்தல் என மூன்றுநிலை உறவுநிலைகளில் இருந்தாலும், அவர்கள் அனைவரையும் சமநிலையோடு பார்க்கின்றார். மற்றவர்களின் அன்பால் அவர் மகிழ்ந்து குதிக்கவும் இல்லை. மற்றவர்களின் காட்டிக்கொடுத்தல் மற்றும் மறுதலிப்பால் அவர் சோர்ந்து கவலைப்படவும் இல்லை.

என் குடும்பம், நட்பு, சமூகம் என்று உறவுகொள்ளும் தளங்களில் ஒருவர் மற்றவரை எப்படி அன்பு செய்கிறேன்? என் உறவுநிலை எப்படி இருக்கிறது?

காட்டிக்கொடுக்கிறேனா?

இதயத்துடிப்பை கேட்கிறேனா?

மறுதலிக்கிறேனா?

அல்லது இயேசுபோல சமநிலையில் எல்லாரையும் தழுவிக்கொள்கிறேனா?

1 comment:

  1. இது எண்களின் காலம் போலும்! நேற்று தினங்கள் ஆறு; இன்று அன்பு மூன்று (வகை). நாளை என்னவோ!யூதாஸின் காட்டிக்கொடுத்தலுக்கும், யோவானின் மார்பு சாய்தலுக்கும்,பேதுருவின் மறுதலித்தலுக்கும்... எல்லாமே மூல காரணம் "அன்பு" தான்.இந்த 'அன்பு' தன்னைத் தனக்கு நெருக்கமானவர்களிடம் நிலைநிறுத்திக்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டியுள்ளது! ஆனால் அனைவரையும் சமநிலையில் பார்க்கும் இயேசுவின் அன்பு?! அந்த 'அன்பின் இலக்கணம்' என்னவென்று வரையறுக்கிறார் தந்தை. நானும் குடும்பம்,நட்பு,சமூகம் என்று உறவு கொள்ளும் தளங்களில் மற்றவரின் அன்பைக்கண்டு மகிழ்ந்து குதிக்காமலும்,பிறரின் காட்டிக்கொடுத்தல் அல்லது மறுதலிப்பால் சோர்ந்து போகாமலும் உள்ள சமநிலை அன்பைக் கேட்கிறேன் இறைவனிடம்! அவர் கொடுப்பவர் தான்.ஆனால் பெற்ற அந்த வரத்தை புனிதமாய்க் காக்கும் முதிர்ச்சி உள்ளதா என்னிடம்?அதையும் கேட்கிறேன் இறைவனிடம்...அவர் தருவார் என்ற நம்பிக்கையில்.அன்பின் தன்மை சொல்லும் பதிவிற்காகத் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete