Wednesday, March 28, 2018

உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்

உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்

நற்கருணை, பணிக்குருத்துவம், அன்புக் கட்டளை - இந்த மூன்றையும் இன்றைய நாளில் கொண்டாடுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு வினைச்சொற்கள் இரண்டு முறை கையாளப்படுகின்றன: 'அறிதல்', 'புரிதல்.'

அ. தன் நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருக்கிறார் (13:1)
ஆ. அனைத்தையும் தந்தை தன் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் அறிந்திருக்கிறார் (13:3)

அ. நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது. பின்னரே புரியும். (13:7)
ஆ. நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? (13:12)

'அறிதல்' எப்போதும் இயேசுவுக்கு மட்டுமே சாத்தியமாகிறது. புரிதல் எப்போதும் நமக்கு தாமதமாகவே நடக்கிறது.

நற்கருணை, குருத்துவம், அன்பு - இந்த மூன்றையும் அறிந்தவர் இயேசு. இது இறுதிவரை நமக்குப் புரிந்தும் புரியாமலும் இருப்பதே வாழ்வியல் எதார்த்தம்.

இந்த மூன்றையும் இணைக்கின்ற மூன்று வாழ்க்கைப் பாடங்களை இன்றைய நாள் நமக்குக் கற்றுத்தருகிறது:

1. 'தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார்'

இந்த வரி உண்மையிலேயே எனக்கு ஆச்சர்யம் தருகிறது. அதாவது, இயேசுவைச் சுற்றி இன்னும் சில மணி நேரங்களில் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். இருந்தாலும் அவரிடம் 'அனைத்தும் தம் கையில் உள்ளன' என்ற நிறைவு மனப்பான்மை இருக்கிறது.

ஒரு ஊரில் ஏழை ஒருவன் இருந்தானாம். அவனுக்கு நிறைய தங்கக் காசுகள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. அவனது ஆசையை நிறைவேற்ற நினைக்கின்ற தேவதை ஒரு பை நிறைய தங்கக்காசுகளை அவனது வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டு மறைந்துவிடுகிறது. காலையில் துயில் எழுந்து கதவு திறக்கும்போது இவனது கண்களில் அந்தப் பை படுகின்றது. வேகமாக பையை எடுத்து வீட்டிற்குள் ஓடி நாணயங்களைக் கொட்டி எண்ணுகின்றான். '99 நாணயங்கள்' இருக்கின்றன. அவனுக்குள் சின்ன நெருடல்: '100 நாணயங்கள் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே!' 'அந்த 100வது நாணயத்தை ஒருவேளை பக்கத்து வீட்டுக்காரன் எடுத்திருப்பானோ?' 'வீடு பெருக்க வந்த மனைவி எடுத்திருப்பாளோ?' அல்லது 'மகன் எடுத்திருப்பானோ' அவனுடைய மகிழ்ச்சி கொஞ்ச நேரத்தில் மறைந்துவிடுகிறது. தன்னிடம் இருக்கின்ற ஒன்றை மறைந்து இல்லாத ஒன்றை கற்பனை செய்து வாழ்தல் நமக்குள் குறைவு மனப்பாங்கை உருவாக்கிவிடுகிறது.

தன்னிடம் உள்ளது அனைத்தும் எடுக்கப்படும் என்பதை இயேசு அறிந்திருந்தும் எப்படி அவரால் தன் கையில் தந்தை அனைத்தையும் ஒப்படைத்துள்ளார் என்று நினைக்க முடிந்தது. இதுதான் உண்மையான மனச்சுதந்திரம் அல்லது கட்டின்மை. இயேசு ஒருபோதும் குறைவு மனப்பான்மை கொண்டிருக்கவில்லை. ஆகையால்தான் யாரையும் அவரால் குறைத்துப் பார்க்க முடியவில்லை.

நற்கருணை - இங்கே அப்பத்திலும், இரசத்திலும் இறைமை நிறைகின்றது.
குருத்துவம் - 'எனக்கு எதுவுமே வேண்டாம்' என முன்வரும் அருள்பணியாளர் தன் நிறைவை இறைவனில் காண்கின்றார்.
அன்பு - அடுத்தவரிடம் நிறைவை பார்க்கிற அன்பு மட்டுமே நீண்ட பயணம் செய்கிறது.

2. தற்கையளிப்பு

தன்னிடம் அனைத்தும் கையளிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்கின்ற இயேசு அப்படியே தன்னிடம் உள்ளது அனைத்தையும் இழக்கின்றார். தன்னிடம் உள்ளது அனைத்தையும் அவர் இழந்தாலும் தன்னிடம் நிறைவு இருக்கும் என்ற மனநிலையில் இருந்தார் இயேசு.

யோவான் நற்செய்தியாளர் மட்டும் இயேசு நற்கருணையை ஏற்படுத்தும் நிகழ்வை பதிவு செய்யாமல் விடுகின்றார். அல்லது மற்ற நற்செய்தியாளர்கள் அப்பம், இரசம் கொண்டு நற்கருணையை ஏற்படுத்த யோவான் மட்டும் அதை தண்ணீர்-துண்டு என மாற்றிப் போடுகின்றார்.
பந்தியிலிருந்து எழுந்து - அப்பத்தை எடுத்து
தம் மேலுடையைக் கழற்றிவிட்டு - நன்றி செலுத்தி
துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு - வாழ்த்துரைத்து
தண்ணீர் எடுத்து சீடர்களின் பாதங்களைக் கழுவினார் - அதைப் பிட்டு அவர்களுக்கு வழங்கினார்.

'எழுதல்' என்பது புதிய செயலின் அடையாளம். அல்லது புதிய செயலைத் தொடங்குவதற்கான தயார்நிலையை இது குறிக்கிறது.
'மேலுடை' என்பது பாதுகாப்பு. இயேசு தன் வெளிப்புற பாதுகாப்பை அகற்றுகின்றார்.
'துண்டு' என்பது 'குறைவு' - பட்ஜெட்டில் துண்டு விழுந்தது என்கிறோம். நீண்ட துணியில் குறைவான பகுதியே 'துண்டு' - குறைவை அணிந்துகொண்டு
'தண்ணீர் எடுத்து சீடர்களின் பாதங்களைக் கழுவித் துடைக்கின்றார்.'

குருத்துவத்தில் ஓர் அருள்பணியாளர் செய்வதும் இதுவே.
தன் குடும்பத்திலிருந்து எழுகின்றார். தன் குடும்பம், தன் படிப்பு, தன் பின்புலம் என்னும் மேலுடையை அகற்றுகின்றார். தன்னிடம் உள்ள வலுவின்மை என்ற துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, தான் செல்லும் இடங்களில் பணிசெய்யத் தொடங்குகின்றார்.

அன்பிலும் இதுவே நிகழ்கிறது.
ஒருவர் தன் உறவுநிலையிலிருந்து எழ வேண்டும். தன் பாதுகாப்பு வளையத்தை அகற்ற வேண்டும். தன்னிடம் உள்ள குறைவை அடுத்தவரின் நிறைவு கொண்டு நிரப்பிக்கொள்ள வேண்டும்.

நற்கருணையிலும் இது நடந்தேறுகிறது.
அப்பமும், இரசமும் கோதுமை மற்றும் திராட்சைத் தோட்டத்திலிருந்து எழுகின்றன. தங்கள் இயல்பைக் களைகின்றன. ரொட்டியும், திராட்சை இரசமும் என புதிய உருப் பெறுகின்றன.

3. 'உன் காலடிகளைக் கழுவாவிட்டால்'

இயேசுவைப் போல பாதம் கழுவுவதைவிட அவரை நோக்கி பாதத்தை நீட்டுவது அடுத்த பாடம். சீமோன் பேதுரு தன் பாதத்தை நீட்ட மறுக்கின்றார்.

புதிதாக குருத்துவ அருள்பொழிவு செய்யப்படுபவர், அந்த அருள்பொழிவு நிகழ்வில், தன் பெயர்  வாசிக்கப்பட்டவுடன், 'இதோ வருகிறேன்' என்று சொல்லிவிட்டு, தன் பாதத்தை ஒரு அடி முன்னால் நகட்டி வைக்கின்றார். அந்த ஒற்றை அடி முன்னால் வைத்ததில் அவரின் நீண்ட பயணம் தொடர்கின்றது. சீமோன் பேதுருவின் இந்த தயக்கத்தைக் கடிந்துகொள்கின்றார் இயேசு.

புதிதாக காலடியை எடுத்வைத்து நாம் செல்லும் பயணத்தில்தான் அன்பும் அடங்கியுள்ளது.
மேலும் நற்கருணையில் இயேசு தன் உடலையும் இரத்தத்தையும் கொடுக்கும் நிகழ்விலும் அவரின் அந்த ஒற்றை அடியை நாம் பார்க்கிறோம்.

இந்த மூன்றிலும், 'நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்' என்கிறார் இயேசு.

'நான் உங்களுக்கு செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு' - என தன்னைப் பற்றிய நினைவை நீங்காத ஒன்றாக ஆக்குகின்றார் இயேசு.


Monday, March 26, 2018

அந்த மூன்று பேரில் நாம் யார்?

அந்த மூன்று பேரில் நாம் யார்?

இயேசு பந்தியில் அமர்ந்திருக்கிறார். அவரின் சீடர்கள் அவரோடு உடனிருக்கின்றனர். அவரின் இறுதி இரவு உணவு இது. அவரின் இறுதி உணவும்கூட இதுவே. உணவு மனித வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதது. தாவரங்கள், விலங்குகள் உணவு உண்டாலும் அவைகளுக்கு உணவு வெறும் உடல் வளர்ச்சிக்காகவே. ஆனால், மனிதர்களாகிய நமக்கு உணவு, உணர்வு வளர்ச்சிக்காகவும், உறவு வளர்ச்சிக்காகவும் பயன்படுகிறது.

நம் வாழ்வில் நாம் காணும் மூன்று உறவுநிலைகளை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 13:21-33, 36-38) மூன்று நபர்கள் வழியாகப் பார்க்கின்றோம்:

அ. காட்டிக் கொடுக்கும் அன்பு (யூதாசு)
ஆ. மார்பில் சாயும் அன்பு (யோவான்)
இ. மறுதலிக்கும் அன்பு (பேதுரு)

முதல்வகை உறவுநிலை யூதாசு மனநிலையைக் கொண்டிருக்கும். உணவறையில் உடன் அமர்ந்திருந்தாலும் காட்டிக்கொடுக்கத் துடிக்கும். 'எனக்கு என்ன தருவீர்கள்?' என்று விலைபேசத் துடிக்கும்.

இரண்டாம் வகை அன்பு யோவானின் அன்பு. மார்பில் சாய்ந்து இதயத்துடிப்பைக் கேட்கும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும். இந்த அன்பு துணிச்சல் மிக்கது. 'யார்? என்ன? எது? ஏன்?' என எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் இது.

மூன்றாம் வகை அன்பு பேதுரு போல மறுதலிக்கும். கொஞ்சம் அன்பு செய்யும். கொஞ்சம் விலகிக்கொள்ளும். தான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன் எனச் சொல்லும். ஆனால் ஓடிப்போய்விடும்.

இந்த மூன்று வகை மனிதர்களின் அன்பையும் தாண்டி இயேசுவின் அன்பும் இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. அதுதான் 'இறுதிவரை அன்பு செய்யும் அன்பு'.

இயேசுவின் அன்பிற்கு முடிவே கிடையாது. அந்த அன்பில் எல்லாருக்கும் இடமுண்டு. ஆகையால்தான் தன்னுடன் உண்பவர்கள் காட்டிக்கொடுத்தல், மார்பு சாய்தல், மறுதலித்தல் என மூன்றுநிலை உறவுநிலைகளில் இருந்தாலும், அவர்கள் அனைவரையும் சமநிலையோடு பார்க்கின்றார். மற்றவர்களின் அன்பால் அவர் மகிழ்ந்து குதிக்கவும் இல்லை. மற்றவர்களின் காட்டிக்கொடுத்தல் மற்றும் மறுதலிப்பால் அவர் சோர்ந்து கவலைப்படவும் இல்லை.

என் குடும்பம், நட்பு, சமூகம் என்று உறவுகொள்ளும் தளங்களில் ஒருவர் மற்றவரை எப்படி அன்பு செய்கிறேன்? என் உறவுநிலை எப்படி இருக்கிறது?

காட்டிக்கொடுக்கிறேனா?

இதயத்துடிப்பை கேட்கிறேனா?

மறுதலிக்கிறேனா?

அல்லது இயேசுபோல சமநிலையில் எல்லாரையும் தழுவிக்கொள்கிறேனா?

Sunday, March 25, 2018

ஆறு நாட்களுக்கு முன்பு

நாளைய (26 மார்ச் 2018) நற்செய்தி

ஆறு நாட்களுக்கு முன்பு

'பாஸ்கா விழாவுக்கு ஆறு நாட்களுக்கு முன்பு' - இப்படித்தான் தொடங்குகிறது நாளைய நாளின் நற்செய்தி வாசகப் பகுதி (யோவான் 12:1-11). ஏறக்குறைய நாற்பது நாட்களாக, செபம், நோன்பு, பிறரன்புச் செயல்கள் என நம் உடலை ஒறுத்து, பக்குவப்படுத்தி, நம் மனத்தை ஒருமுகப்படுத்தி, ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு என்னும் பாஸ்கா விழாவைக் கொண்டாடத் தயாரித்தோம். நாம் மேற்கொண்ட இந்தத் தயாரிப்பு இன்று நாம் தொடங்கி கொண்டாடும் ஏழாம் நாள் கொண்டாடும் திருநாளிற்காகத்தான்.

இன்னும் அந்த நாளுக்கு ஆறு நாட்கள் இருக்க, இன்றைய நற்செய்தி வாசகம் ஆறு பேரை நம் முன் வைக்கிறது. இந்த ஆறு பேர் யார்? இந்த ஆறு பேர் நமக்கு வைக்கும் சவால்கள் எவை? என்று பார்ப்போம்.

1. இலாசர். இவர் மார்த்தா மற்றும் மரியாளின் சகோதரர். இயேசுவின் நண்பர்களாக இருந்த இந்தக் குடும்பம் வசித்தது பெத்தானியாவில். நோயுற்றிருந்து இறந்துபோன இலாசரை இயேசு உயிரோடு மீண்டும் எழுப்புகின்றார். இந்த உயிர்ப்பு நிகழ்வால் இயேசுவின்மேல் பலர் நம்பிக்கை கொள்கின்றனர். இயேசுவின் எதிரிகளுக்கு இவரின் உயிர்ப்பு கண்ணில் விழுந்த தூசியாய் உறுத்துகிறது. இயேசுவோடு இணைந்து இவரையும் கொன்றுவிட நினைக்கின்றனர். வாழ்க்கையை இரண்டாம் முறையாக வாழும் வாய்ப்பு பெற்றவர் இலாசர். நம் வாழ்க்கையை நாம் ஒரேமுறைதான் வாழ்கிறோம். இந்த ஒற்றை வாழ்வை நாம் வாழும் விதம் எப்படி?

2. மார்த்தா. மூத்த சகோதரி. விருந்தோம்பலில் இவரை யாராலும் மிஞ்ச முடியாது. முன்னொரு நாள் இயேசு இவர்கள் வீட்டிற்கு வந்தபோது, இயேசுவைக்குப் பணிவிடை செய்வதில் இவர் மும்முரமாய் இருக்கிறார். 'மார்த்தா, நீ பலவற்றைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்!' எனக் கடிந்து கொள்கின்றார். நம் வாழ்வில் நாம் எதை முதன்மைப்படுத்த வேண்டும்? என்பதை நாம் இவரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்.

3. மரியா. இயேசுவின் காலடிகளில் நறுமணத் தைலம் பூசி, தமது கூந்தலால் துடைக்கின்றார். மிக உயர்ந்த நறுமணத் தைலம் அது. அந்த தைலத்தால் அந்த வீடே கமகமக்கிறது. தன்னிடம் இருக்கும் மிகச் சிறந்த ஒன்றை இயேசுவுக்காக இழக்கின்றார் மரியா. மதிப்பு மிக்க ஒன்றை நாம் கண்டுகொள்ளும்போது, அதனிலும் மதிப்பு குறைந்த ஒன்றை இழந்தால் தவறில்லையே என்பது இவரின் வாதம். இயேசுவே இவர் கண்ட புதிய புதையல்.

4. யூதாசு இஸ்காரியோத்து. இவர்தான் இயேசுவை எதிரிகளிடம் முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்தவர். இவர் கணக்கில் புத்திசாலி. இவரிடம்தான் சீடர்குழுவின் பணப்பை இருந்தது. 'இது என்ன விலை?' 'அது என்ன விலை?' என்று இவரின் மூளை எல்லாவற்றிற்கும் விலை குறிக்கும். ஆகையால்தான் இயேசுவை முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விலை பேசுகின்றார். இங்கே, 'நறுமணத் தைலத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம்' என்று போலி அக்கறை காட்டுகின்றார். நம் வாழ்வில் நாம் எல்லாவற்றிற்கும் விலைபேசிவிட முடியுமா?

5. யூதர்களும் அவர்களின் குருக்களும். இவர்கள் வந்திருந்தது இயேசுவைக் கொன்றுவிடும் திட்டத்தோடு. இயேசுவின்மேல் மக்கள் நம்பிக்கை கொண்டது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. தங்களின் மதம் மற்றும் அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிரான இயேசுவின் குரலும் இவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. நாமும் பல நேரங்களில் நம் மனச்சான்றின், நம் கடவுளின் குரலை அழித்துவிடத் துடிக்கிறோம். இல்லையா?

6. இயேசு. இவர்தான் இந்த நிகழ்வின் கதாநாயகன். நடக்கும் அனைத்தும் தன் இறுதிநாளை ஒட்டியே நடக்கிறது என்று எப்போதும் தன் இறப்பையும், அதன் வழியாக நடந்தேறவிருக்கும் மனிதகுல மீட்பையும் மனத்தில் நிறுத்தியவர். இவரைத் தான் வானகத் தந்தை, தான் பூரிப்படையும் மகன் (காண். முதல் வாசகம், எசாயா 42:1-7) என உச்சி முகர்கின்றார். இவரே மக்களின் புதிய உடன்படிக்கை. இவரே உலகின் ஒளி. இவரே ஆண்டவர். அதுவே இவரின் பெயர்.

7. நாம். இந்த ஆறு நபர்களுக்குப் பின் நிழலாடுவது நீங்களும், நானும். இந்த கதாபாத்திரங்களில் நம் எல்லாரிடத்திலும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கின்றனர். மற்றெல்லாம் மறைந்து இயேசு மட்டும் வளர்ந்தால் இந்த நாள் மட்டுமல்ல. எல்லா நாளுமே நமக்கு உயிர்ப்பு நாளே.

Tuesday, March 20, 2018

சலிப்பு

நாளைய (20 மார்ச் 2018) வாசகம்

'இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தது ஏன்?
இங்கு உணவுமில்லை. தண்ணீருமில்லை.
அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது.'
(காண். எண்ணிக்கை நூல் 21:4-9)

கடவுளின் பராமரிப்பு சில நேரங்களில் வெறுப்பையும், சலிப்பையும் உண்டாக்கிவிடலாம் என்பதை நாளைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது.

இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்துச் செல்லும் ஆண்டவராகிய கடவுள் அவர்களுக்கு வழியில் மன்னாவும், காடையும் பொழிகின்றார்.

ஒரே மாதிரி சாப்பிட்ட அவர்களுக்கு உணவு 'போர்' அடித்துவிட்டது.

நாளைய நற்செய்தியிலும் (காண். யோவான் 8:21-30) ஏறக்குறைய இதே நிலையைத்தான் வாசிக்கின்றோம்.

'நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது' என இயேசு சொல்ல, அதைக் கேட்ட யூதர்கள், 'ஒருவேளை தற்கொலை செய்துகொள்ளப்போகிறாரோ!' என கேலி பேசுகின்றனர்.

இயேசுவைப் பார்த்து பார்த்து சலித்துவிட்ட அவர்களுக்கு, அவர் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

தன் மேல் மக்களுக்கு 'போர்' அடித்ததால் அவர்கள் மேல் ஒரு சின்ன ட்ரிக் விளையாடுகிறார் கடவுள். விரியன் பாம்புகளை அவர்கள் மேல் ஏவி விடுகின்றார். தங்கள் தவற்றை உணர்ந்து மக்கள் கதறியபோது, விஷம் முறிக்கும் வழியையும் கற்றுக்கொடுக்கின்றார்.

கடவுள் நம் குற்றங்களுக்கு பழி வாங்குபவரா?

இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

ஆனால், அவரைப் பற்றிய சலிப்பு அல்லது வெறுப்பு நம்மில் எழும்போது ஏதோ ஒரு வகையில் தன் இருப்பை நமக்கு உணர்த்திவிடுகின்றார்.

Friday, March 16, 2018

அவரைப் போல எவரும் பேசியதில்லை

நாளைய (17 மார்ச் 2018) நற்செய்தி (யோவான் 7:40-53)

அவரைப் போல எவரும் பேசியதில்லை

அவர்கள்: 'ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?'

காவலர்கள்: 'அவரைப் போல எவரும் என்றும் பேசியதில்லை!'

அவர்கள்: 'நீங்களும் ஏமாந்து போனீர்களோ?'
(யோவான் 7:45-46)

இந்த உரையாடல் நடப்பது யூதர்களின் சட்டமன்றம் என்று சொல்லப்படும் 'சேனட்ரின்' என்ற இடத்தில் தாம். பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் என எல்லாரும் அமர்ந்திருக்கின்றனர். இவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு வரும்படி ஒரு காவலர் குழுவை அனுப்புகின்றனர். அந்தக் குழு இயேசுவைப் பிடித்துக்கொண்டு வருவதற்குப் பதிலாக, வெறுங்கையினராய் வந்து நின்று கொண்டு 'அவரைப் போல நல்லவர் யாரும் இல்லை!' என்று எதிர்சாட்சி சொல்கின்றனர். 

'அவரைப் போல எவரும் என்றும் பேசியதில்லை!'

காவலர்களின் இந்தச் சான்று 'பேசுவதை' மையப்படுத்தியிருக்கின்றது. 'பேசுவது' என்பது முதல் ஏற்பாட்டில் யாவே கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட வார்த்தை. யாவே இறைவன் தான் சீனாய் மலையில் மோசேயுடன் பேசுகிறார். அவரைப் போல வேறு எந்தக் கடவுளும் பேசியதில்லை. அவர் பேசிய வார்த்தைகள் தாம் அவர்களுக்குப் பத்துக் கட்டளைகள் ஆயிற்று. அவரின் வார்த்தைகள் தாம் அவர்களுக்கு பாலைநிலத்தில் உண்பதற்கு மன்னாவும், இறைச்சியும், குடிப்பதற்கு தண்ணீரும் கொடுத்தன. ஆக, கடவுளின் வார்த்தை என்றால் வாழ்வு.
காவலர்களின் சான்று மறைமுகமாகச் சொல்வதும் இதுதான்:

'வாழ்வின் காரணியைக் கொண்டிருக்கும் ஒருவரைச் சாகடிக்கப் பார்க்கிறீர்களே!' என்று கேட்காமல் கேட்கின்றனர்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால், காவலர்களின் வேலை தங்களுக்குச் சொல்லப்பட்ட கட்டளையை நிறைவேற்றுவதுதான். இந்தக் காவலர்கள் கட்டளையை நிறைவேற்றத் தவறியதுமன்றி, இயேசுவைப் பற்றி வாழ்த்தியும் பேசுகின்றனர்.

மற்றவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது வாழ்க்கையின் நியதி அல்ல. உண்மைக்கேற்ப நாம் எந்த இடத்திலும் வாழ முடியும். மேலும், இயேசுவைச் சந்தித்தபின் ஒருவர் பொய் பேச முடியாது. உண்மையை மட்டும் தான் பேச முடியும்.

நாம் இயேசுவை இன்றும் சந்திக்கிறோம் தானே? விவிலியத்தில், நற்கருணையில், அண்டை அயலாரில். நாம் மற்றவர்களிடம் போய் என்ன சொல்லப் போகிறோம்?

'அவரைப் போல எவரும் என்றும் பேசியதில்லை!'

Thursday, March 15, 2018

அவருடைய நேரம் வராததால்

நாளைய (16 மார்ச் 2018) நற்செய்தி (யோவா 7:1-2,10,25-30)

அவருடைய நேரம் வராததால்

சபை உரையாளர் நூலில் 'நேரம்' பற்றிய பதிவு நாம் அறிந்ததே:

'ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு' எனத் தொடங்கும் இப்பதிவு 'பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்' என தொடங்கி, 'கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார். காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார்' என நிறைவு செய்கின்றார் ஆசிரியர்.

இந்த இடத்தில் வரும் 'நேரம்' என்பது நாம் நாள்காட்டியில் பார்க்கும் நேரம் அல்ல. மாறாக, இது நிகழ்வு நேரம்.

'நேரம்தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது' - இது பழங்காலம் தொட்டு மக்களால் அதிகம் நம்பப்படும் ஒன்று.

'உனக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது' என்றும், 'உனக்கு இது கெட்ட நேரம்' என்று சொல்வதும் நாம் கேட்டதுண்டு.

'நேரம்தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது' - இதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். இதை இப்படியே ஏற்றுக்கொண்டுவிடுவது நம் வாழ்வில் பல விரக்திகளை நம்மிடமிருந்து விரட்டியடிக்கின்றது.

நற்செய்தியாளர் யோவானுக்கும் இத்தகைய நேரம் பற்றிய நம்பிக்கை இருப்பதை நாம் நாளைய நற்செய்தியில் வாசிக்கின்றோம்.

அதாவது, இயேசுவைக் கொல்லத் தேடுகிறார்கள் யூதர்கள். யூதர்கள் அதிகம் கூடி வரும் கூடாரத் திருவிழாவில் இயேசு வெளிப்படையாக நடந்துகொண்டிருக்கிறார். ஆனால், யாரும் அவர்மேல் ஒரு விரலையும் வைக்கவில்லை. ஏனெனில் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.

நாம பாத்திருப்போம்.

ஒருவர் கார் விபத்தில் நேருக்கு நேராக மோதி இறக்கும் தருவாயில் இருந்திருப்பார். ஆனால் அவர் பிழைத்து நடமாடத் தொடங்குவார்.

மற்றவர் சின்ன கல் தட்டி காலில் நகம் பெயர்ந்திருக்கும். அவர் அது ஸெப்டிக் ஆகி சில மாதங்களில் இறந்துவிடுவார்.

இதை நேரம் என்று சொல்வதைத் தவிர வேறில்லை.

முன்னவருக்கு அவரின் நல்ல நேரம் அவரைக் காப்பாற்றுகிறது.

பின்னவருக்கு அவரின் கெட்ட நேரம் அவரை அழித்துவிடுகிறது.

இன்னொரு பக்கம், நேரம் பார்த்து செய்யப்படும் செயல்கள் நிறைவேறாமால் போவதும் உண்டு. அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்? நேரம் நன்றாக இருந்தது. ஆனால் பார்த்தவரின் நேரம் சரியில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.

இந்த நேரம் என்னும் வலையிலிருந்து விடுபட வழியே இல்லையா?

இருக்கிறது.

ஒரே வழி.

நேரத்தை தன் கையில் வைத்திருக்கின்ற அவரில் நம்மை இணைத்துக்கொள்வது.

நாளை எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியாது.

ஆனால் நாளையைத் தன் கரங்களில் வைத்திருக்கின்ற அவரை நமக்குத் தெரியும்.

இந்தத் தெளிவு இருந்ததால்தான் இயேசுவால் எதிரியின் கூடாரத்திலும் நடமாட முடிந்தது.

Tuesday, March 13, 2018

இன்றும் செயலாற்றுகிறார்!

நாளைய (14 மார்ச் 2018) நற்செய்தி (யோவான் 5:17-30)

இன்றும் செயலாற்றுகிறார்!

'என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார். நானும் செயலாற்றுகிறேன்' என்று ஓய்வுநாள் பற்றிய விவாதத்திற்கு விளக்கம் தருகிறார் இயேசு.

'இன்றும்'

வானகத்தந்தைக்கு ஓய்வுநாள் என்று எதுவும் கிடையாது.

சன்னுக்கு எது சன்டே? என்பது போல அனைத்து நாள்களிலும் கடவுள் இயங்கிக்கொண்டே இருக்கிறார்.

கடந்த ஞாயிறு பார்லர் சென்றிருந்தேன். முடிவெட்டிக் கொண்டிருந்த முருகன் அண்ணன் தன் குடும்ப பின்புலம் பற்றிப் பேச்சுக்கொடுத்தார். 'நீங்க என்னைக்காவது லீவ் எடுப்பீங்களா?' என்று கேட்டேன். 'காசு நிறைய வச்சிருக்கிறவன் அந்தக் காசை என்ன செய்ய என்று யோசித்தபோது வந்ததுதான் சார் லீவ்!' என்றார். 'புரியவில்லை' என்றேன். 'கையில் ஒன்னும் இல்லாதவனுக்கு எல்லா நாளும் ஒன்னுதான். அவன் அன்னைக்கு வேலை செஞ்சாதான் அவனுக்குச் சாப்பாடு. காக்கா கூட்டத்தை பாருங்கள். காலையில இந்த வாசலுக்கு தினமும் ஒரு காக்கா வரும். நான் தண்ணியும் சோறும் வைப்பேன். அந்தக் காக்காவுக்கு லீவும் கிடையாது ஒன்னும் கிடையாது. நாமளா லீவை உருவாக்கி நாமே அதுக்கு ஒரு தியரி வைத்துக்கொள்கிறோம்.

இது உண்மைதான்.

பொதுவுடைமை சமுதாயத்தில் விடுமுறை என்பது கிடையாது. ஓய்வு நேரத்தைக் கூட மற்றவர்களின் முன்னேற்றத்திற்கான நேரமாக மாற்ற வேண்டும் என பொதுவுடைமை அழைப்பு விடுத்தது.

ஆனால் முதலாளித்துவத்தின் முதுகெலும்பு விடுமுறை. வெளிநாட்டு வாழ்க்கையை கொஞ்ச நேரம் யோசித்துப் பார்;த்தால் இது விளங்கும். விடுமுறைக்காக வேலை செய்பவர்கள் போல வேலை செய்வார்கள் அவர்கள். தங்கள் வீக்எண்டைக் கொண்டா திட்டம் பேடுவார்கள். இப்படி நிறைய நடக்கும். ஏனெனில் அவர்கள் ஓய்வு எடுத்தால் அடுத்த ஐந்து நாள்கள் தங்கள் முதலாளிகளுக்கு வேலை செய்ய முடியும்.

இயேசுவின் தந்தை ஒரு பொதுவுடைமைவாதி.

எல்லா நாளும் மக்களின் தேவை உண்டு. எல்லா நாளும் மக்களுக்காக அவர் உண்டு.

விடுமுறை அல்லது ஓய்வு என்பது தன்மையம் கொண்டது.

வேலை அல்லது பணி என்பது பிறர்மையம் கொண்டது.

இயேசு எப்போதும் பிறர்மையம் கொண்டவராகவே இருப்பதால் அவர் தன் ஓய்வைப் பற்றிக் கவலைப்படவில்லை.


Sunday, March 11, 2018

உம் மகன் பிழைத்துக்கொள்வான்

நாளைய (12 மார்ச் 2018) நற்செய்தி (யோவான் 4:43-54)

உம் மகன் பிழைத்துக்கொள்வான்

நாளைய நற்செய்தியில் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் அரும அடையாளத்தை வாசிக்கின்றோம். அரச அலுவலரின் மகன் ஒருவன் நலம் பெறுகிறார்.

'ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்!' என்று இயேசுவை அவசரப்படுத்துகிறார் அலுவலர்.

ஒருவேளை தன் மகன் இறந்துபோய்விட்டால் இந்த போதகரால் அவருக்கு உயிர் தர முடியாதோ என்ற தயக்கம் வந்துவிட்டது அலுவலருக்கு.

'உம் மகன் பிழைத்துக்கொள்வான்' என்று சொல்லி அவரை அனுப்புகின்றார் இயேசு.

இவரும் நம்பி புறப்பட்டுச் செல்கின்றார். போகின்ற வழியிலேயே இவர்களது பணியாள்கள் வீட்டின் அந்தப்பக்கம் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இக்கால கட்டத்தில் என்றால் ஒரு ஃபோன் செய்து விசாரித்திருப்பார் அல்லது வீடியோ அழைப்பு செய்து தன் மகனைக் கண்டிருப்பார் அலுவலர்.

அவர்கள் சொன்ன செய்தி இயேசுவின் வார்த்தைகளுக்குச் சான்று பகர்வனவாக இருக்கின்றன.

இந்தச் செய்தியைக் கொண்டு வந்த பணியாளர்களுக்கு இயேசுவைப் பற்றியோ, அலுவலர் இயேசுவைக் கேட்டுக்கொண்டது பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பையனின் அருகில் அமர்ந்து காவல் காத்தவர்கள் பையனின் உடலில் நடக்கும் மாற்றங்களை அருகில் இருந்து கவனித்துக்கொண்டுதால் அவர்கள் உடனடியாக பறப்பட்டு தம் தலைவரிடம் வருகின்றனர். இங்கே அலுவலரின் நம்பிக்கை பணியாளர்களைச் சந்திப்பதில் நிறைவு பெறுகிறது. ஏனெனில் அவர்களின் சொற்களுக்குப்பின்னே அவனது நம்பிக்கை நிறைவு பெறுகிறது.

இங்கே அறிகுறி எப்படி நடக்கிறது என்றால் வார்த்தையில்தான்.

இயேசுவின் வார்த்தை செயலாக அங்கெ செல்ல நொடிப்பொழுது போதும்.

ஆனால், பணியாளர்களின் வார்த்தை அலுவலரை எட்ட ஒரு நாள் தேவைப்படுகிறது.

அவரின் வார்த்தையின் ஆற்றலே இயேசுவின் இரண்டாம் அரும் அடையாளம்.

Friday, March 9, 2018

ஏற்புடையவராய்!

நாளைய (10 மார்ச் 2018) நற்செய்தி (லூக் 18:9-14)

ஏற்புடையவராய்!

நாளைய நற்செய்தி வாசகத்திற்கு இயேசு ஒரு முன்னுரை கொடுக்கின்றார்: 'தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு கூறிய உவமை.' இதற்கு முந்தைய உவமையிலும் இரண்டு கதைமாந்தர்கள் (நேர்மையற்ற நடுவன் - கைம்பெண்). இன்றைய உவமையிலும் இரண்டு கதைமாந்தர்கள் (பரிசேயர் - வரிதண்டுபவர்). முந்தைய கதைமாந்தர்கள் வீட்டில் சந்தித்துக் கொண்டனர். இன்றைய கதைமாந்தர்கள் கோவிலில் நின்றுகொண்டிருக்கின்றனர்.

இயேசுவின் சமகாலத்துச் சமுதாயத்தில் பரிசேயர்கள் அவர்களின் தவமுயற்சிகளுக்காக அதிகமாக பாராட்டப்பெற்றவர்கள். கோவிலுக்கு வரும் பரிசேயர் கடவுளின் முன்னிலையில் நிற்கின்றார். 'நின்றுகொண்டு பேசுவது' என்பது மரியாதையைக் குறிக்கிறது. நின்றதோடு மட்டுமல்லாமல் இறைவேண்டல் செய்கின்றார் பரிசேயர். அவரின் இறைவேண்டல் மூன்று சொற்றொடர்களாக இருக்கின்றது:

அ. நான் அவன்-அவள்-அது போல் இல்லாததற்காக நன்றி கூறுகின்றேன்.
ஆ. வாரத்தில் இருமுறை நோன்பிருக்கிறேன்.
இ. என் வருவாயில் பத்தில் ஒரு பங்கைக் கொடுக்கிறேன்.

பரிசேயர் சொல்லும் நன்றி எதிர்மறையாகவும், ஒப்பீடு நிறைந்ததாகவும் இருக்கிறது. அதாவது, மற்றவர்களுக்கு எதிர்மறையான உருவத்தைக் கொடுத்து தான் நேர்முகமாக ஒளிர நினைப்பது. அதாவது, நான் வெள்ளை என்று காட்டுவதற்கு அடுத்தவர்களை கறுப்பாக்கிவிடுவது. 'கொள்ளையர் போலவும், நேர்மையற்றோர், விபச்சாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ, இந்த வரிதண்டுபவரைப் போலவோ' என சொல்கின்றார். 'கொள்ளையர்' என்பவர் 'அடுத்தவருடையவதும் தன்னுடையது' என நினைப்பவர்கள். 'நேர்மையற்றோர்' என்பவர் 'இரண்டு அளவுகோல்களை வைத்திருப்பவர்'. 'விபச்சாரர்' என்பவர் 'பிரமாணிக்கம் தவறுபவர்கள்.' 'வரிதண்டுபவர்கள்' என்பவர் 'மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்.' 'நான் அவர்களைப் போல இல்லாததற்காக நன்றி சொல்கிறேன்' என்று பரிசேயர் சொல்வது அந்த மனிதர்களைவிட தான் மேன்மையானவர் என்றும், இந்த மேன்மையான நிலையை தானே தன் நற்செயல்களால் சம்பாதித்துக் கொண்டதாகவும் பெருமைப்பட்டுக்கொள்கின்றார். தனக்குப் பின்னால் நிற்கும் வரிதண்டுபவரையும் அவர் பார்க்கின்றார் என்றால், அவரின் செபம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவே இருந்திருக்கிறது. 'என்னை மற்றவர்கள் பார்க்கிறார்களா? அடுத்தவர்கள் என்னை எப்படிப் பார்க்கிறார்கள்?' என்ற நிலையில்தான் அவரின் மனநிலை இருக்கின்றது.

இதே நேரத்தில் கோவிலுக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் வரிதண்டுபவர் கடவுளை ஏறெடுக்கவும் துணியாமல், 'கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்!' என்கின்றார்.

இரண்டாம் கதைமாந்தரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்புகிறார் என முடிக்கின்றார் இயேசு.

அதாவது, நான் மற்ற மனிதர்களுக்கு ஏற்புடையவராக இருப்பதை விட, கடவுளுக்கு ஏற்புடையவராக இருக்கின்றேனா என்பதுதான் உவமை முன் வைக்கும் கேள்வி.

மனிதர்களுக்கு முன் ஏற்புடையவராக நற்செயல்கள் நிறையச் செய்ய அவசியம்.

ஆனால், கடவுள்முன் ஏற்புடையவராக ஒருவர் தன்னையே அறிந்தால் போதுமானது. தன்னையே அறிந்து கொண்ட ஒருவர், தன்னறிவு என்னும் ஞானம் பெற்ற ஒருவர் எந்நேரமும் தன் மதிப்பீடுகளிலும், நற்செயல்களிலும் பெருமை கொள்ள மாட்டார். மாறாக, தன்னையும், தன் இருப்பையும் கடவுளின் கொடை என்றே உணர்வார்.

ஆக, ஒருவர் நேர்மையாளர் என்பது அவரின் நற்செயல்களில் அல்ல. மாறாக, அவர் கடவுளுக்கு ஏற்புடையவரா என்பதில்தான் அடங்கியிருக்கிறது.

அப்படி என்றால், நாம் நற்செயல்கள் செய்யத் தேவையில்லையா? நல்லவராக இருக்கத் தேவையில்லையா?

நற்செயல்கள் செய்யலாம். நல்லவராக இருக்கலாம். ஆனால், அந்த நன்மைத்தனம் அடுத்தவர்களை அளக்கும் அளவுகோல்களாக மாறிவிடக் கூடாது.

தொலைவில் இல்லை

நாளைய (9 மார்ச் 2018) நற்செய்தி (மாற் 12:28-34)

தொலைவில் இல்லை

'நீ இறையாட்சியினின்று தொலைவில் இல்லை' (மாற்கு 12:28-34)

இயேசு தான் சந்தித்த இரண்டு இளைஞர்களிடம் இறையாட்சி பற்றிப் பேசுகிறார்.

முதல் இளைஞரை நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற்கு 12:28-34) சந்திக்கின்றோம். இவர் ஒரு திருச்சட்ட அறிஞர். எல்லாம் தெரிந்தவர். நல்லவர் யார், கெட்டவர் யார், நல்லது எது, கெட்டது எது, கடவுள் யார், கடவுள் அன்பு என்ன என்ற எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்தவர் இவர்.

ஆகையால்தான் முதன்மையான கட்டளை எது? என்று இயேசு சொன்னதை அப்படியே பற்றிக்கொள்கின்றார்.

இவரிடம் இயேசு, 'நீர் இறையாட்சியினின்று தொலைவில் இல்லை' என்கிறார்.

இன்னொரு இளைஞரை நாம் லூக்கா நற்செய்தியில் (23:32-43) சந்திக்கின்றோம்.

இவருக்கு எதுவுமே தெரியாது. கடவுள் என்ன, யார் என்பதும், நல்லது, கெட்டது பற்றியும் கண்டுகொள்ளாதவர்.

ஆனால், இவர் இயேசுவைப் பார்த்து சொன்னதெல்லாம், 'நீர் அரசுரிமை பெற்று வரும்போது என்னை நினைவுகூறும்!' என்ற ஒற்றை வரிதான்.

இதுதான் முழுமையான நம்பிக்கை. முழுமையான சரணாகதி.

ஆகையால்தான், 'நீ இன்றே என்னோடு இறையாட்சியில் இருப்பாய்' என இயேசு அவரை அரவணைத்துக்கொள்கிறார்.

இறையரசு நோக்கிய பயணம் மூன்று நிலைகளில் நடக்கிறது:

அ. 'எல்லாம் நான். எதுவும் அவரல்ல'
ஆ. 'நான் பாதி. அவர் பாதி'
இ. 'எல்லாம் அவர். எதுவும் நானல்ல'

இந்த மூன்றையும் நாம் மகாபாரதத்திலும் பார்க்கின்றோம். பாஞ்சாலியின் சேலை துச்சாதனால் உரியப்படுகிறது. தன்னைக் காப்பாற்ற, 'கண்ணா!' என்று கிருஷ்ணபகவானை அழைக்கிறார்.

அ. முதலில் இரண்டு கைகளாலும் தன் சேலையை பற்றிக்கொள்கின்றார்.
ஆ. ஒரு கையைக் கொண்டு சேலையையும் மறு கையால் வானை நோக்கி கண்ணனையும் அழைக்கின்றார்.
இ. சேலையை விட்டுவிட்டு இரண்டு கைகளையும் தூக்கி, 'கண்ணா' என்கிறார். சேலை உரிய உரிய வந்துகொண்டே இருக்கிறது.

'நானல்ல அவர்' என்ற நிலையே இறையாட்சியின் உன்னத நிலை.

இந்த நிலையை நோக்கி திரும்பி வந்தவர்களின் ஆசியைப் பட்டியல் இடுகின்றது இன்றைய முதல் வாசகம் (காண். ஓசேயா 14:1-9)

Wednesday, March 7, 2018

பின்னோக்கி

நாளைய (8 மார்ச் 2018) வாசகம்

'முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள்' (காண். எரே 7:23-28)

நாளைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக எரேமியா இறைவாக்கினர் வைக்கும் குற்றச்சாட்டுக்களில் முக்கியமானது இதுதான்: 'பின்னோக்கிச் சென்றார்கள்'

திரைப்படங்களில் 'பின்னோக்கிய ஒளிப்பதிவு' (ரிவர்ஸ் ஷாட்)இருப்பதை நாம் பார்த்திருப்போம். தன் வீட்டின் தோட்டத்தின் நடுவில் நிற்கும் கதாநாயகியின்மேல் அங்கே மறைந்திருக்கும் கதாநாயகன் பக்கெட் தண்ணீரை எடுத்து ஊற்றுவான். கதாநாயகி சொத சொத என்று நனைந்து போவாள். அதற்கு அடுத்த ஷாட்டில் அப்படியே அவள்மேல் ஊற்றப்பட்ட தண்ணீர் மீண்டும் பக்கெட்டுக்குள் சென்று சேரும். கதாநாயகி மீண்டும் தண்ணீர் மறைந்து காய்ந்துவிடும்.

ஆக, பின்னோக்கி நடக்கும் நிகழ்வில் நிகழ்வின் நோக்கம் நிறைவேறுவதில்லை. அதாவது, கதாநாயகி நனைவதில்லை.

அடுத்ததாக, பின்னோக்கி செல்லும்போது நாம் நம் இலக்கை அடைய முடிவதில்லை.

மாட்டுத்தாவணியில் இருந்து நான் ஆரப்பாளையம் நோக்கிச் செல்கிறேன் என வைத்துக்கொள்வோம். கோரிப்பாளையம் சிக்னலில் இருக்கும் நான் அப்படியே திரும்பி வந்த வழியில் பயணம் செய்தால், நான் மாட்டுத்தாவணியைத்தான் அடைய முடியுமே தவிர, ஆரப்பாளையத்தை அடைய முடியாது.

ஆனாலும், பின்னோக்கி நடப்பது நமக்கு சில நேரங்களில் பிடிக்கிறது.

நாம் வயது வந்து வளர வளர வாழ்வில் நிறைய சவால்களை, பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட நேரங்களில், 'ச்சே, குழந்தையாகவே இருந்திருக்கலாமே!' என நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், பின்னோக்கி நடப்பதால் நம் பிரச்சினைகள் தீர்ந்துவிடுவதில்லை.

இல்லையா?

ஓடாத கடிகாரம் கூட இரண்டு முறை சரியான நேரம் காட்டும்.

ஆனால், பின்னோக்கி ஓடும் அல்லது மெதுவாக ஓடும் கடிகாரம் எப்போதும் சரியான நேரத்தை காட்டுவதில்லை.

அதுதான் இஸ்ரயேல் மக்களிடமிருந்த பிரச்சினை.

தங்கள் வேர்களை மட்டும் நினைத்துக்கொண்டு அதை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்க விரும்பினார்களே தவிர, விழுதுகளை நோக்கி நகர விரும்பவில்லை.

இயேசுவிடம் நாளைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11:14-23) வரும் சிலர், 'பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்' என்கின்றனர். இயேசுவுக்கு முன் இருந்தவர்கள் அப்படித்தான் பேய்களை ஓட்டினர். ஆக, அந்த சிலரும் தங்கள் சிந்தனையில் பின்னோக்கி ஓடுகிறார்கள்.

வாழ்வில் நடந்து முன்னேறுவோம்.

முன்னேற கஷ்டமாக இருந்தால், நன்றாக காலை ஊன்றி ஒரே இடத்தில் நின்றுகொள்வோம். அப்படி நின்று கொள்ள கஷ்டமாக இருந்தால் ஒரு பெரிய கல்லை எடுத்து முட்டுக்கொடுப்போம். ஒருபோதும் பின்னோக்கி சென்றுவிட வேண்டாம்.


அகம் சார்ந்தது

நாளைய (7 மார்ச் 2018) வாசகம்

அகம் சார்ந்தது

மனித உந்தியக்கங்களில் ஒன்று 'தன்னை முதன்மைப்படுத்துவது அல்லது முக்கியப்படுத்துவது.'

இயேசுவிடம் வந்த செபதேயுவின் மக்கள் யாக்கோபு மற்றும் யோவானின் கோரிக்கை என்ன? 'ஒருவர் வலப்புறமும், மற்றவர் இடப்புறமும் அமர வேண்டும்.' அதாவது, மற்றவர்கள் நின்றுகொண்டிருந்தாலும் தாங்கள் உட்கார வேண்டும். அல்லது எல்லாரும் உட்கார்ந்திருந்தாலும் தாங்கள் முக்கியமான இடத்தில் உட்கார்ந்திருக்க வேண்டும்.

இந்த உந்தியக்கம்தான் நம்மில் 'பெருமை,' 'சிறுமை' என்ற உணர்வை உருவாக்குகிறது.

இப்படிப்பட்ட உணர்வைத்தான் நாளைய முதல்வாசகம் (இச 4:1,5-9) இஸ்ரயேல் மக்களுக்குத் தருகிறது.

தங்கள் சுற்றுவட்ட நாடுகள் மற்றும் மக்களினங்களோடு தங்களையே ஒப்புமை செய்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். அப்படி ஒப்பீடு செய்யும்போது, 'அவர்களிடம் இல்லாத ஒன்று என்னிடம் என்ன இருக்கிறது?' என்ற கேள்வியை எழுப்புகின்றனர். அந்தக் கேள்விக்கு நிறைய விடைகள் கிடைக்கின்றன.

'இவர்களுக்குத்தான் பாலும் தேனும் பொழியும் கானான் நாடு வாக்களிக்கப்பட்டது.'

'இவர்களைத்தான் கடவுள் பாலைவனத்தில் பசியாற்றினார்.'

'இவர்கள் கடவுள்தான் நெருக்கமான கடவுள். இவரோடு நண்பர்கள்போல உரையாட முடியும்.'

'இந்த இனம் ஞானமும், அறிவாற்றலும் பெற்றிருந்தது.'

'இவர்களின் கடவுள் இவர்களின் குரலுக்குச் செவிகொடுப்பார்.'

இப்படியாக பெரிய லிஸ்டே வருகிறது.

நிற்க.

இந்த 'பெருமை' என்ற அடையாளம் இவர்களுக்கு வெளியே இருந்து வருகிறது.

ஆனால், இந்த இனத்தைச் சாராத நமக்கு எங்கிருந்து வரும்?

அது நம் உள்ளத்தில் கண்டுகொள்ளப்பட வேண்டும்.

ஆக, பெருமை என்பதை நாம் நமக்கு வெளியில் ஒன்றோடு அல்லது ஒருவரோடு கட்டிவைக்கக்கூடாது. அப்படி வைக்கும்போது என்ன ஆகும்? அந்த ஒன்று அல்லது ஒருவரிடமிருந்து விலக நேர்ந்தால் சிறுமை உணர்வு பற்றிக்கொள்ளும்.

எடுத்துக்காட்டாக, முதல் இருக்கையில் அமர்வது எனக்கு பெருமை உணர்வு தருகிறது என வைத்துக்கொள்வோம். நான் என் உணர்வை அந்த இருக்கையில் கட்டி வைத்துவிடுகிறேன். ஒருவேளை எனக்கு அந்த முதல் இருக்கை கிடைக்கவில்லை என்றால் நான் சிறுமைப்படுத்தப்பட்டதாக உணரத் தொடங்குகிறேன்.

ஆனால், அதற்கு மாறாக நான் பெருமை உணர்வை என் அகத்துள் கண்டுகொண்டேன் என்றால், முதல் இருக்கை என் பெருமையை கூட்டாது, கடைசி இறுக்கை எனக்கு சிறுமை தராது.

ஆக, நாளைய நற்செய்தி வாசகம் (மத் 5:17-19) சொல்வது போல, விண்ணரசில் சிறியவர் அல்லது பெரியவர் என்பது ஒருவரின் அகம் சார்ந்தது.

Monday, March 5, 2018

உடன் பணியாளர்

நாளைய (6 மார்ச் 2018) நற்செய்தி (18:21-35)

உடன் பணியாளர்

தூய பவுல் தன் திருத்தூது அடையாளத்தை மற்ற திருத்தூதர்களோடு அல்லது திருத்தூது பணி செய்பவர்களோடு இணைத்துப் பேசும்போதெல்லாம் 'உடன்பணியாளர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் 'உடன் பணியாளர்' வருகின்றார்.

அரசன் ஒருவன் இருக்கின்றான். அவன் தன் பணியாள் ஒருவரின் கடனை மன்னிக்கின்றான். அந்த பணியாளனின் உடன் பணியாளன் அவனிடம் கடன்பட அவன் அவனை மன்னிக்க மறுக்கின்றான். இந்த செய்தியை உடனடியாக மற்ற உடன்பணியாளர்கள் அரசனிடம் கொண்டு செல்கின்றனர்.

சில நேரங்களில் உடன் பணியாளனோடு வாழ்வதுதான் மிகவும் கடினம்.

எதற்காக அவனது உடன் பணியாளர்கள் அரசனிடம் இவனைப் பற்றி சொன்னார்கள்?

உடன் பணியாளனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலா?
அல்லது
இவனுக்கு இவ்வளவு கடன் மன்னிக்கப்பட்டதே என்ற பொறாமையிலா?
அல்லது
'அரசன் ஒரு மடையன். இவன் கடனாகிய வாங்கிய பணத்தை என்னவெல்லாம் செய்தான். இது அரசனுக்குத் தெரியவில்லை' என்ற கோபத்தாலா?
அல்லது
அடிபட்ட உடன்பணியாளன் இவர்களிடம் வந்து முறையிட்டானா?
அல்லது
;கீழிருப்பதை மேலே சொல்லும்' இன்ஃபார்மர்களாக இவர்கள் இருந்தார்களா?
பாருங்களேன். இந்;த அரசன் அவர்கள் சொன்னதை வெரிஃபை பண்ணக்கூட இல்லை. பல நேரங்களில் இதுதான் உண்மை. யார் முதலில் பிரச்சினையை மேலே கொண்டு சொல்கிறாரோ அவர்தான் மேலிருப்பவரால் உடனடியாக நம்பப்படுவார். அடுத்து வருவதெல்லாம் இரண்டாம் செய்திதான் அவருக்கு.

எது எப்படி இருந்தாலும், இவர்களால் பணியாளன் அரசனிடம் மாட்டிக்கொண்டான்.

ஒருவேளை இந்த உடன்பணியாளர்களே உட்கார்ந்து இரண்டு பேரையும் கூட்டி வைத்து அவர்களுக்குப் புரிய வைத்திருக்கலாமே? ஏன் அவர்கள் உடனடியாக அரசனிடம் ஓட வேண்டும்? தாங்கள் தப்பித்துக்கொள்வதற்காக?

இன்று நாம் வீட்டில் 50 சதவிகிதம் இருக்கிறோம் என்றால், நாம் பணி செய்யும் இடத்தில் மற்ற 50 சதவிகிதம் இடத்தில் இருக்கிறோம். அருள்பணி நிலை, குருத்துவம், துறவறம் போன்ற நிலைகளில் இருப்பவர்களுக்கு இந்த பிரிவும் கிடையாது. அவர்கள் எப்போதும் உடன்பணியாளர்களோடுதான் இருக்க வேண்டும்.

நமக்கு நன்றாக அறிமுகமான நம் வீட்டில் வாழ்வதே நமக்கு கஷ்டமாக இருக்கும்போது, நமக்கு அறிமுகம் இல்லாத, வேலை என்ற ஒற்றை இணைப்பை மட்டும் நம்பி, எந்நேரமும் போட்டியும், பொறாமையும், முந்துதலும், தள்ளுதலும் இருக்கும் உடன்பணியாளர்களோடு உள்ள வாழ்வு நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்?

பணியாளர்களுக்குத் தலைவராக இருப்பது எளிது.
தலைவனுக்கு பணியாளராக இருப்பது கொஞ்சம் கஷ்டம்.
உடன்பணியாளராக இருப்பது ரொம்ப கஷ்டம்.

கொஞ்சம் தாராள உள்ளம், நிறைய கண்டுகொள்ளாமை - உடன்பணியாளரோடு ஓரளவு நன்றாக வாழ்ந்துவிடலாம்.

உடன்பணியாளரோடு உள்ள உறவு சரியில்லை எனில் வதைப்போரிடம் ஒப்படைக்கப்படுவோம் என்பது இன்றைய நற்செய்தி விடுக்கும் எச்சரிக்கை.

Sunday, March 4, 2018

தம் சொந்த ஊரில்

நாளைய (5 மார்ச் 2018) நற்செய்தி (லூக் 4:24-30)

தம் சொந்த ஊரில்

தம் சொந்த ஊராகிய நாசரேத்தில் தன் பொதுவாழ்வைத் தொடங்குகின்றார் இயேசு. 'இவர் யாரோ!' என வியந்த மக்கள் உடனே அவரைக் குறித்தும், அவரின் சாதாரண பின்புலம் குறித்தும் இடறல்படுகின்றனர்.

நாமும் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போது அவரை வியந்து பார்க்கிறோம். ஆனால், அவரின் எளிய பின்புலம் தெரிந்தவுடன் உடனடியாக அவருடனான நம் பேச்சின் தொணியும் மாறுபட்டுவிடுகிறது.
இயேசு நாசரேத்து மக்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுக்கள் சொல்கிறார்:

அ. இஸ்ரயேலரின் கைம்பெண்களுக்கு எலியா அனுப்பப்படவில்லை.
ஆ. இஸ்ரயேலரின் தொழுநோயாளர்களுக்கு எலிசா நலம் தரவில்லை.

ஆக, கடவுள்தாம் கதி என்று கிடந்த கைம்பெண்களும், தொழுநோயாளர்களும் கூட தங்கள் சொந்த ஊர்க்காரர்களை இறைவாக்கினர்களாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர்.

சொந்த ஊரில் ஒருவர் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்க காரணம் என்னவாக இருக்கும்?

பொறாமையோ, கண்டுகொள்ளாத்தன்மையோ அல்ல. மாறாக, இவன் என்னைவிட வித்தியாசமாக இருக்கிறானே! என்ற எண்ணம்தான்.

பிறந்த கிராமத்திலேயே ஒருவன் மாடு மேய்த்து ஒன்றுமில்லாமல் போகிறான் என வைத்துக்கொள்வோம். மற்றவன், மற்ற ஊரில் போய் ஆடு மேய்த்து கோடீஸ்வரன் ஆனால் முதலாமவனை ஏற்றுக்கொள்ளும் ஊர், இரண்டாமவனை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் அவன் மாட்டிற்கு பதில் ஆட்டையல்லவா மேய்த்தான்?

இறைவாக்கினர் மற்ற மனிதர்களிடமிருந்து மாறுபட்டிருப்பது ஊரார் கண்களுக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை.

இதை மற்ற பக்கம் பார்த்தால்,

அடுத்தவர் நம்மைவிட வித்தியாசமாக இருந்தால் நமக்குப் பிடிப்பதில்லைதானே.

இப்படிப்பட்ட நேரங்களில் நாமும் நாசரேத்தூரர் போல அடுத்தவரை மலையின் உச்சிக்கு ஏற்றி அவரை அழித்துவிட முயல்கின்றோம். இப்படிப்பட்ட சூழலில் நழுவி நகர்வதே சாமர்த்தியம். அதையே செய்கிறார் இயேசு.

Saturday, March 3, 2018

அண்டிப் பிழைக்கச் சென்றார்

இன்றைய (3 மார்ச் 2018) நற்செய்தி (லூக் 15:1-3,11-32)

அண்டிப் பிழைக்கச் சென்றார்

தந்தையை விட்டுப் பிரிந்த இளைய மகன் மற்ற நாட்டவர் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார்.

ஆக, மகனாக இருந்தவர் வேலைக்காரராக மாறுகின்றார். இதுதான் அவர் அனுபவித்த மிகப் பெரிய வலியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். மகனாக இருக்கும் வரை அவருக்கு எல்லாம் இருந்தது. தந்தையின் வீட்டில் அனைத்து உரிமைகளும் இருந்தன. வேலை வாங்குவதற்கு ஏவலர்களும், வேலைக்காரர்களும் இருந்தனர். ஆனால் இப்போது அந்த நிலையிலிருந்து அவர் இறங்க வேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது.

'அண்டிப் பிழைத்தல்' என்பது தனது தனிப்பட்ட சுதந்திரத்தை மற்றவர்களுக்கு கொடுத்துவிடுவது. உதாரணத்திற்கு, போர் மற்றும் இயற்கைச் சீற்றத்தால் நாடுவிட்டு நாடு புலம்பெயர்ந்து செல்பவர்கள் தங்கள் சொந்த நாட்டின் மேல் உள்ள உரிமையை விட்டுக்கொடுத்தால்தான் அடுத்த நாடு அவர்களைத் தன் நாட்டிற்குள் வர அனுமதிக்கும்.

இவ்வாறாக, 'அண்டிப் பிழைத்தல்' நம் வாழ்வின் சுதந்திரத்தை நம்மிடமிருந்து எடுத்துவிடுகிறது. மேலும், அது நம்மை மகன் நிலையிலிருந்து அடிமை நிலைக்குத் தள்ளிவிடுகின்றது.

Thursday, March 1, 2018

இவன்தான் சொத்துக்கு உரியவன்!

நாளைய (2 மார்ச் 2018) நற்செய்தி (மத் 21:33-43, 45-46)

இவன்தான் சொத்துக்கு உரியவன்!

நாளைய நற்செய்தி வாசகத்தில் கொடிய குத்தகைக்காரர் எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம்.

ஒரு குழுவிடம் ஒரு திராட்சைத் தோட்டம் குத்தகையின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. குத்தகைக்கு எடுப்பவர் தோட்டத்தின் விளைச்சலில் பங்கைச் சுவைக்கலாமே தவிர தோட்டத்தின்மேல் உரிமை கொண்டாட முடியாது. ஆக, உரிமை இல்லாத இடத்தில் உரிமை கொண்டாடுவது வன்முறை அல்லது அத்துமீறல்.

கடந்த ஒரு வாரமாக சிரியாவின் போர் உக்கிரமாகிக்கொண்டு வருகின்றது. அப்பாவி குழந்தைகளும், பெண்களும் வன்முறைக்குப் பலியாகின்றனர். இந்தக் குழந்தைகளின் உயிரை எடுத்துக்கொள்ளும் உரிமை எந்த அரசுக்கும் எழுதி தரப்படவில்லைதானே!

மேலும், மேற்காணும் திராட்சைத் தோட்ட குத்தகைகாரர்கள் தலைவரை நேரடியாக எதிர்கொள்ள பயந்து அவரது பணியாளர்கள் மற்றும் மகன் மேல் தங்கள் வன்மத்தை தீர்த்துக்கொள்கின்றனர். இது அவர்களின் இரண்டாவது தவறு. அதாவது, ஒருவருடைய இயலாமையை அல்லது மென்மையைப் பயன்படுத்தி தங்களுக்கு இயல்வது அல்லது தங்கள் வன்மையைச் சாதித்துக்கொள்வது.

இவ்வாறாக,

அத்துமீறல் அகற்றி அடுத்தவரின் உரிமையை மதிக்க நம்மை அழைக்கிறது நாளைய வாசகம்.