Sunday, April 2, 2017

இருவராய்

'இருவரே (இறுதியில்) நின்றார்கள் - காயமும், கருணையும்'

"Relicti sunt duo, misera et misericordia." (Latin)
"Rimasero in due, la misera e la misericordia." (Italian)

விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணும் இயேசுவும் நிகழ்வைப் பற்றிய தனது மறையுரையை இப்படித்தான் நிறைவு செய்கிறார் தூய அகுஸ்தினார் ( (In Io. Ev. tra. 33, 5).

'காயமும், கருணையும்' - இந்த இரண்டு வார்த்தைகளைத்தான் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது இரக்கத்தின் ஆண்டு நிறைவு மடலின் தலைப்பாக (Misericordia et Misera) பயன்படுத்தினார்.

அகுஸ்தினாரின் இலக்கியத்திறத்திற்கு இது மிக நல்ல சான்று.

இலக்கியத்திறத்தை விட அவரின் ஆழ்மன ஆன்மீகத்தையே இந்த வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன.

இன்று மாலை சூர்யா நகர் திருப்பயண மாதா ஆலயத்திற்கு தவக்கால திருயாத்திரை சென்றோம். சிலுவைப்பாதையின்போதும், ஒப்புரவு அருளடையாளத்தின்போதும் நிறைய பேர் கசிந்துருகும் கண்களோடு நின்றனர். இவர்கள் எல்லாருக்கும் இந்த இரண்டு வார்த்தைகள் பொருந்தும்: 'காயமும், கருணையும்'

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்தான் 'காயம்.' ஏற்கனவே காயம் பட்டு நின்றிருந்த இந்த பெண்ணை இன்னும் காயப்படுத்த ஊர் நடுவில் இவரை இழுத்துவந்தார்கள். விபச்சார விடுதிகள் எல்லாம் ஊரின் வெளிப்புறம்தான் இருக்கும். ஆக, இவரை ஊருக்குள் இழுத்துவந்தது அவரை இன்னும் அழுக்காக்கவே.

ஊரின் நடுவில் இயேசு. தரையில் அமர்ந்திருக்கிறார். 'காயத்தையும்', அவர்களின் கரங்களில் இருந்த 'கற்களையும்' பார்த்தவுடன், தரையில் குனிந்து கையால் எழுத ஆரம்பிக்கின்றார். அதவாது, 'உனக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்பதுபோல இருக்கிறது அவரது செயல்.

காயம்பட்ட பெண்ணை அவர்கள் இழுத்து வந்தாலும், அவர்கள் காயப்படுத்த நினைத்தது என்னவே இயேசுவைத்தான்.

ஆக, கற்களுக்கு முன் 'காயமும்,' 'கருணையும்' நிற்கின்றன.

'உங்களில் பாவம் இல்லாதவர்...'

அதாவது,

'உங்களில் காயம் இல்லாதவர் இந்தக் காயத்தின் மேல் கல் எறியட்டும்!'

'காயம்' என்பதற்கு 'உடல்' என்ற பொருளும் தமிழில் உண்டு. ஆகையால்தான் 'காயமே இது பொய்யடா. வெறும் காற்றடைத்த பையடா' எனப் பாடுகின்றார் கவியரசு கண்ணதாசன்.

'காயத்தை' 'காயப்படுத்த' வந்த 'காயங்கள்' தங்கள் 'காயங்களை' கண்டவர்களாய், 'கற்களை' விட்டுவிட்டு வீடு திரும்புகின்றனர்.

'காயமும், கருணையும் இறுதியில் இருவராய் நின்றனர்'

கருணை காயத்தை காயப்படுத்தாமல் அனுப்பியது.

'இனி பாவம் செய்யாதே!'

மற்றவர்கள் 'முற்றுப்புள்ளி' இட நினைத்தவளுக்கு, 'தொடர்புள்ளி' போட்டு அனுப்புகின்றது கருணை.

நான் இறைவன் திருமுன் நிற்கும் போதும்,

'காயம்,' 'கருணை' என இருவர்தாம் நிற்கின்றோம்!

4 comments:

  1. விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணைக் குறித்த புனிந அகுஸ்தினாரின் மறையுரையில் ஆரம்பித்து " நான் இறைவனின் திருமுன் நிற்கும்போதும்,'காயம்', 'கருணை' என இருவர்தாம் நிற்கின்றோம்!" எனத் தன் சொந்த ஆய்வோடு முடிக்கிறார் தந்தை. தவக்காலச் சிந்தனைகளுக்கும்,திருயாத்திரைகளுக்கும் நாம் நேரம் ஒதுக்கும் இந்நாட்களில் இன்றையப்பதிவு இன்னும் அதிகம் பொருள் செறிந்ததாய்த் தோன்றுகிறது. "கற்களுக்கு முன் 'காயமும்', 'கருணையும்' நிற்கின்றன;" "கருணைக் காயத்தைக் காயப்படுத்தாமல் அனுப்பியது" போன்ற சொற்றொடர்கள் மனத்தைப் பிசைகின்றன. மற்றவர்கள் ' முற்றுப்புள்ளி' இட நினைத்தவளுக்கு,' தொடர்புள்ளி' போட்டு அனுப்புகின்றது கருணை. இந்த சம்பவத்தைப் புனிதப்படுத்த இதற்குமேல் வார்த்தைகள் இல்லை. "இனி பாவம் செய்யாதே!" என இந்தக் 'காயத்தைப்' பார்த்தும் 'கருணை' கிசுகிசுப்பது என் செவிகளில் விழுகிறது.உள்ளத்தை ஊடுருவிப் பாயும் ஒரு பதிவிற்காகத் தந்தையை இறைவன் தன் நலன்களால் நிரப்புவாராக!!!

    ReplyDelete
  2. காயமும், கருணையும் இறுதியில் இருவராய் நின்றனர்'
    கருணை காயத்தை காயப்படுத்தாமல் அனுப்பியது. - மிகவும் அருமையான கருத்துத்துக்கள் சிந்திக்க வைத்தது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. காயமும், கருணையும் இறுதியில் இருவராய் நின்றனர்'
    கருணை காயத்தை காயப்படுத்தாமல் அனுப்பியது. - மிகவும் அருமையான கருத்துத்துக்கள் சிந்திக்க வைத்தது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. அருமையான பதிவுக்கு நன்றி. ஆம் நாங்களும் காயத்தோடு தான் நிற்கிறோம் கருணையின் முன்பு! கருணையாம் இறைவன் எங்களையும் ஆற்றுப்டுத்துவாராக.. இறையருள் என்றும் உம்மோடு இருக்க இறைமகனை இறைஞ்சுகிறோம்.

    ReplyDelete