Monday, April 10, 2017

அந்த மூன்று பேரில் நாம் யார்?

[இன்று விருந்தினர் பதிப்பு. வழங்குபவர் என் நண்பர் அருள்திரு. சாம்சன் ஆரோக்கியதாஸ், திண்டுக்கல் மறைமாவட்டம். இந்தப் பதிவு இன்றைய தினத்தந்தி (திண்டுக்கல் பதிப்பில்) வெளியாகிறது. நன்றி.]

இயேசு பந்தியில் அமர்ந்திருக்கிறார். அவரின் சீடர்கள் அவரோடு உடனிருக்கின்றனர். அவரின் இறுதி இரவு உணவு இது. அவரின் இறுதி உணவும்கூட இதுவே. உணவு மனித வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதது. தாவரங்கள், விலங்குகள் உணவு உண்டாலும் அவைகளுக்கு உணவு வெறும் உடல் வளர்ச்சிக்காகவே. ஆனால், மனிதர்களாகிய நமக்கு உணவு, உணர்வு வளர்ச்சிக்காகவும், உறவு வளர்ச்சிக்காகவும் பயன்படுகிறது.

நம் வாழ்வில் நாம் காணும் மூன்று உறவுநிலைகளை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 13:21-33, 36-38) மூன்று நபர்கள் வழியாகப் பார்க்கின்றோம்:

அ. காட்டிக் கொடுக்கும் அன்பு (யூதாசு)
ஆ. மார்பில் சாயும் அன்பு (யோவான்)
இ. மறுதலிக்கும் அன்பு (பேதுரு)

முதல்வகை உறவுநிலை யூதாசு மனநிலையைக் கொண்டிருக்கும். உணவறையில் உடன் அமர்ந்திருந்தாலும் காட்டிக்கொடுக்கத் துடிக்கும். 'எனக்கு என்ன தருவீர்கள்?' என்று விலைபேசத் துடிக்கும்.

இரண்டாம் வகை அன்பு யோவானின் அன்பு. மார்பில் சாய்ந்து இதயத்துடிப்பைக் கேட்கும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும். இந்த அன்பு துணிச்சல் மிக்கது. 'யார்? என்ன? எது? ஏன்?' என எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் இது.

மூன்றாம் வகை அன்பு பேதுரு போல மறுதலிக்கும். கொஞ்சம் அன்பு செய்யும். கொஞ்சம் விலகிக்கொள்ளும். தான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன் எனச் சொல்லும். ஆனால் ஓடிப்போய்விடும்.

இந்த மூன்று வகை மனிதர்களின் அன்பையும் தாண்டி இயேசுவின் அன்பும் இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. அதுதான் 'இறுதிவரை அன்பு செய்யும் அன்பு'.

இயேசுவின் அன்பிற்கு முடிவே கிடையாது. அந்த அன்பில் எல்லாருக்கும் இடமுண்டு. ஆகையால்தான் தன்னுடன் உண்பவர்கள் காட்டிக்கொடுத்தல், மார்பு சாய்தல், மறுதலித்தல் என மூன்றுநிலை உறவுநிலைகளில் இருந்தாலும், அவர்கள் அனைவரையும் சமநிலையோடு பார்க்கின்றார். மற்றவர்களின் அன்பால் அவர் மகிழ்ந்து குதிக்கவும் இல்லை. மற்றவர்களின் காட்டிக்கொடுத்தல் மற்றும் மறுதலிப்பால் அவர் சோர்ந்து கவலைப்படவும் இல்லை.

என் குடும்பம், நட்பு, சமூகம் என்று உறவுகொள்ளும் தளங்களில் ஒருவர் மற்றவரை எப்படி அன்பு செய்கிறேன்? என் உறவுநிலை எப்படி இருக்கிறது?

காட்டிக்கொடுக்கிறேனா?

இதயத்துடிப்பை கேட்கிறேனா?

மறுதலிக்கிறேனா?

அல்லது இயேசுபோல சமநிலையில் எல்லாரையும் தழுவிக்கொள்கிறேனா?


2 comments:

  1. யூதாசின் 'காட்டிக்கொடுக்கும்' அன்பையும்,யோவானின் 'மார்பில் சாயும்'அன்பையும், பேதுருவின் ' மறுதலிக்கும்' அன்பையும் அதனதன் பின்பின்புலத்தோடு எடுத்து வைக்கிறார் விருந்தினர் தந்தை. யோவானின் அன்பை பெருமளவில் இரசிக்கும் நாம் மற்ற இருவருடைய அன்பைக் குறைத்து மதிப்பிடமுடியாது என்பது என் கருத்து.யூதாஸ்,பேதுரு இருவருமே சூழ்நிலைக் கைதிகள்...ஒருவர் பணத்துக்கும்,அடுத்தவர் பயத்துக்கும்.இதில் எந்த மாதிரி அன்பை நான் 'அவருக்குக்' கொடுப்பினும் என்னை அவர் குறைவின்றி அன்பு செய்கிறார் என்ற எண்ணம் தரும் உந்துதல் என் குடும்பம்,நட்பு,சமூகம் என்று உறவு கொள்ளும் தளங்களில் நான் மற்றவரை அன்பு செய்ய,மற்றவர் மேல் நான் காட்டும் உறவு நிலை சமநிலையிலிருக்க உதவினால் என்னாலும் இயேசுவின் மார்பில் சாய்ந்து அவரது இதயத்துடிப்பைக் கேட்க முடியும்.
    விருந்தினர் பதிப்பாகத் தந்தை 'சாம்சன் ஆரோக்கியதாஸ்' படைத்திருக்கும் அழகான படைப்பைக்கு என் பாராட்டுக்கள்! இந்த நல்லதொரு விஷயத்திற்கு கிரியாஊக்கியாக நிற்கும் தந்தை 'யேசு கருணா' அவர்களுக்கு ஒரு சபாஷ்!!!

    ReplyDelete
  2. உங்க இரண்டு பேரோட எழுத்து நடை ஒரே மாதிரி இருக்கு, சாமி. மடத்துல ஒண்ணா படிச்சீங்களா?

    ReplyDelete