புதன், 7 ஜூன் 2023
பொதுக்காலம் 9-ஆம் வாரம்
தோபித்து 3:1-11, 16-17. மாற்கு 12:18-27.
அவர் வாழ்வோரின் கடவுள்
தோபித்து நூலின் கதைமுடிச்சு இறுகுகிறது. நன்மைகள் மட்டுமே செய்து வந்த தோபித்து பார்வை இழக்கிறார். இகுவேலின் ஒரே மகளாகிய சாரா அடுத்தடுத்து கணவர்களை இழந்து பணிப்பெண்ணின் பழிச்சொல்லுக்கு ஆளாகிறார். தன் உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணி வீட்டின் மாடியறைக்கு வருகிறார். தோபித்து வீட்டு முற்றத்தில் அமர்ந்துகொண்டு இறைவேண்டல் செய்கிறார். சாரா வீட்டின் மாடியில் அமர்ந்து இறைவேண்டல் செய்கிறார். இறைவேண்டல் முடித்து இருவரும் தத்தம் வீட்டினுள் நுழைகிறார்கள். பார்வை போய்விட்டது என்றால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்பது அன்றைய கால நம்பிக்கை. இதை ஒட்டியே, 'கண்தான் உடலுக்கு விளக்கு' (மத் 6:22) என்கிறார். தோபித்தைப் பொருத்தவரையில் இனி எல்லாமே இருள்தான். இறந்தவர்கள் இருக்கும் இடம் இருள் எனக் கருதப்பட்டது. இறந்தோரை அடக்கம் செய்யும்போது அவர்கள் கீழுலுகுக்கு, இருளின் உலகுக்குச் செல்கிறார்கள். ஏழு முறை திருமணம் செய்துகொண்ட சாராவை பேய் பிடித்தவர் என ஊரார் தூற்றுகிறார்கள். தூற்றுச்சொல் படிப்படியாகப் பரவி பணிப்பெண் வழியாக சாராவின் காதுகளை எட்டுகிறது. மற்றவர்கள்முன் மானம் இழந்துவிட்ட சாரா தன் உயிரையும் இழக்க நினைக்கிறார்.
ஆனால், இருவருமே இறைவனை நினைவுகூர்ந்து அவரிடம் இறைவேண்டல் செய்கிறார்கள். இறைவேண்டல் செய்த அந்த நொடி அவர்கள் வாழ்க்கையின் திசையை மாற்றுகிறது. பிரச்சினையைத் தங்கள் கண்களுக்கு அருகில் வைத்துப் பிடிக்கும் கல் போலப் பார்க்காமல், சற்றே தள்ளி வைத்துப் பார்க்கிறார்கள். தங்கள் கடவுள் வாழ்வோரின் கடவுள் என்பதை உணர்ந்துகொள்கிறார்கள்.
நற்செய்தி வாசகத்தில், இயேசுவிடம் வருகிற சதுசேயர்கள் உயிர்த்தெழுதல் பற்றிய கேள்வியை எழுப்புகிறார்கள். ஒரு பெண்ணும் ஏழு கணவர்களும் என்னும் உருவகம் வழியாக உயிர்ப்புக்குப் பின் உள்ள வாழ்வைக் கேலி செய்கிறார்கள் சதுசேயர்கள். ஏனெனில், அவர்கள் உயிர்த்தெழுதலை நம்பவில்லை. வாழ்க்கை என்பது இவ்வுலகில் முடிந்துவிடக் கூடியது என்னும் குறுகிய பார்வை கொண்டிருந்த சதுசேயர்களின் பார்வையைச் சற்றே நீட்டி, கடவுளின் முன்னிலையில் இறந்தோரும் வாழ்கின்றனர் என்பதால் அவர் வாழ்வோரின் கடவுள் என முன்மொழிகிறார் இயேசு.
இவ்விரு வாசகங்களும் நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) இருள் மற்றும் பழிச்சொல் ஏற்றல். நம் வாழ்வின் சில பொழுதுகளில் நாம் இருளில் நடப்பது போல உணர்கிறோம். நம் கண்கள் திறந்திருந்தாலும் நம்மால் எதையும் பார்க்க முடியாமல், குழப்பத்தில் இருக்கிறோம். மேலும், நமக்கு அருகில் இருப்பவர்கள் நம்மைப் பற்றிய தவறான புரிதல்கொண்டு நம்மேல் பழிச்சொல் கூறுவர். இம்மாதிரியான நேரங்களில் பொறுமை மிக அவசியம். இல்லை எனில், உணர்வுகளால் நாம் அலைக்கழிக்கப்பட நேரிடும்.
(ஆ) இறைவேண்டல் செய்தல். இறைவனை நோக்கி இறைவேண்டல் செய்யும்போது, அச்சொற்கள் இறைவனைத் தேடிச் செல்கின்றனவோ என்னவோ, அவை நம்மை நோக்கி வந்து நம் வாழ்க்கை மாற்றுகின்றன. நாம் சொல்லும் நேர்முகச் சொற்கள் நமக்கு ஊக்கம் தருகின்றன. இறைவனின் உடனிருப்பு நமக்குப் பலம் தருகிறது.
(இ) இறப்பின் காரணிகள் தவிர்த்தல். நம் கடவுள் வாழ்வோரின் கடவுள் எனில், நாம் வாழும் கடவுளின் மக்கள் எனில் இறப்பு எண்ணங்களும், செயல்பாடுகளும் நம் வாழ்வில் மறைய வேண்டும். 'எல்லாம் முடிந்தது', 'என்னால் இயலாது', 'இது போதும்', 'மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்' போன்ற எண்ணங்கள் நம் வாழ்வின் இயக்கத்தை மெதுவாக நிறுத்துகின்றன. இத்தகைய எண்ணங்களிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.
No comments:
Post a Comment