இச 8:2-3,14-16. 1 கொரி 10:16-17. யோவா 6:51-58.
பசி – நற்கருணை - இணைந்திருத்தல்
கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவின் மறைபொருளை பசி, நற்கருணை, இணைந்திருத்தல் என்னும் மூன்று சொற்களால் புரிந்துகொள்ள முன்வருவோம்:
அ. நம் பசி அனுபவம்.
ஆ. நற்கருணை நம் வாழ்வின் மையம்.
இ. நற்கருணை வழியாக இயேசுவோடு இணைந்திருத்தல்
அ. நம் பசி அனுபவம்
இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழையுமுன் அவர்களோடு உரையாடுகிற மோசே, அவர்களுடைய பாலைவனப் பயணத்தை நினைவூட்டுகின்றார். நீண்ட பயணத்தின் நோக்கம் என்ன என்பதை எடுத்துரைக்கின்றார். 'அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார்' என உரைக்கிறார். பசி என்பது எல்லா உயிர்களுக்குமான அடிப்படையான உணர்வு. மனிதர்களைப் பொருத்தவரையில் அனைவருக்கும் பொதுவாக இருக்கக் கூடிய உணர்வு இது. ஏழைகள், பணக்காரர்கள், ஆள்பவர்கள், ஆட்சிசெய்யப்படுபவர்கள், குழந்தைகள், பெரியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், நோயுற்றவர்கள், நலம் பெற்றவர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், துறவிகள், போகிகள் என அனைவருக்கும் அடிப்படையாக இருக்கக்கூடிய உணர்வு இது. இந்த ஓர் உணர்வுதான் நம் வாழ்வின் இயக்கத்தை நிர்ணயிக்கின்ற உணர்வாக இருக்கிறது. பசி எடுக்கிற உயிர்தான் தொடர்ந்து வாழ முடியும். இஸ்ரயேல் மக்கள் பாலைவனத்தில் பசியாக இருந்தபோது அவர்களுக்கு மன்னமா பொழிகிறார் ஆண்டவராகிய கடவுள். தொடர்ந்து, வயிற்றுப் பசி நிறைவேறிய அவர்கள் கடவுளைப் பற்றிக்கொண்டு தங்கள் ஆன்ம பசி போக்க வேண்டும் என்பது கடவுளுடைய விருப்பமாக இருந்தது. ஆன்மப் பசியைப் போக்குவது ஆண்டவரின் வார்த்தைகளே. நற்செய்தி வாசகத்தில், இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு பலுகச் செய்து தந்து அவர்களுடைய உடல் பசியைப் போக்குகிறார். தொடர்ந்து, அழியாத வாழ்வுதரும் உணவு பற்றி அவர் அவர்களோடு உரையாடுகிறார்.
உடல் பசியை அல்ல, மாறாக, நம் ஆன்மிகப் பசியைப் போக்குவதே ஆண்டவராகிய கிறிஸ்துவின் திருவுடலும் திருஇரத்தமும். அப்படியெனில், என் உடல்சார் தேடலிலிருந்து ஆன்மிகத் தேடலுக்கு என்னால் கடந்து செல்ல இயல்கிறதா? உடல்பசியால் வாடும் என் சகோதர சகோதரிகள்மேல் நான் காட்டும் அக்கறை என்ன? உடல் பசியைத் தாண்டி, நீதிக்கான நேர்மையான வாழ்வுக்கான பசியை நான் கொண்டிருக்கிறேனா?
ஆ. நற்கருணை நம் வாழ்வின் மையம்
கொரிந்து நகரில் நற்கருணைக் கொண்டாட்ட நிகழ்வுகளில் எண்ணற்ற பிறழ்வுகள் இருந்தன. சிலை வழிபாடு, ஏற்றத்தாழ்வு போன்றவற்றைக் களைய வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்துகிற பவுல், திருவிருந்து கொண்டாடப்படுவதன் பொருளை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறார் (இரண்டாம் வாசகம்). அப்பம் பிடுதல் தொடக்கத் திருஅவையின் முதன்மையான செயல்பாடாக இருந்தது. இந்நிகழ்வு வழியாக அவர்கள் இயேசுவை நினைவுகூர்ந்து அவருடைய உடனிருப்பு உணர்வைப் புதுப்பித்துக்கொண்டனர். மேலும், ஒரே அப்பத்தை உண்பதன் வழியாக ஒரே உடலாக மாறுகிறோம். நம்மிடையே உள்ள வேற்றுமைகள் மறைகின்றன.
நற்கருணை என் வாழ்வின் மையமாக இருக்கிறதா? ஞாயிறு நற்கருணைக் கொண்டாட்டங்களுக்கு நான் எதற்காகச் செல்கிறேன்? ஞாயிறு கடமையை நிறைவேற்றுவதற்காகவா? அல்லது நற்கருணையால் ஊட்டம் பெறுவதற்காகவா? பங்குத் தளத்தில் ஒரே அப்பத்தில் பங்குபெறும் நான் ஒருவர் மற்றவரிடம் வேறுபாடு பாராட்டாமல், மற்றவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ள முயற்சி செய்கிறேனா? நற்கருணையிலிருந்து என் கவனத்தைத் திருப்பும் கவனச் சிதறல்கள் எவை?
இ. நற்கருணை வழியாக இயேசுவோடு இணைந்திருத்தல்
'இணைந்திருத்தல்' (கிரேக்கத்தில், 'மெனேய்ன்') என்னும் வினைச்சொல் யோவான் நற்செய்தியில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. கடவுள்மேல் நாம் வேரூன்றி நிற்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு இச்சொல் எடுத்துரைக்கிறது. 'எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன் ... அவர்களும் என்னால் வாழ்வர்' என உரைக்கிறார் இயேசு. இயேசுவின் திருவுடலையும் திருஇரத்தத்தையம் உண்பதன் வழியாக நான் அவரோடு இணைகிறேன். அவருடைய மதிப்பீடுகளும் பண்புகளும் என்னுடையவை ஆகின்றன.
நற்கருணை உண்ணும்போது, நற்கருணை வணங்கும்போது, நற்கருணை வழங்கும்போது, நானே நற்கருணையாக மாறும்போது இயேசுவோடு இணைகிறேன் எனில், இவற்றுக்கான தயாரிப்பும் தயார் மனநிலையும் என்னிடம் இருக்கின்றனவா? இயேசுவோடு இணைந்திருப்பதற்குப் பதிலாக நான் அவரிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கக் காரணங்கள் எவை?
ஆண்டவராகிய இயேசு மனிதர்களின் அடிப்படை உணர்வாகிய பசி உணர்வைக் கையிலெடுத்து, உணவின் வழியாகத் தம்மை நமக்கு வெளிப்படுத்தத் திருவுளம் கொண்டார். பசியற்ற வயிறுகள் மட்டுமே கடவுள்நோக்கிக் திரும்புகின்றன. கடவுள் நோக்கித் திரும்புகின்ற உள்ளங்கள் அவரோடு தம்மை இணைத்துக்கொள்கின்றன.
No comments:
Post a Comment