செவ்வாய், 6 ஜூன் 2023
பொதுக்காலம் 9-ஆம் வாரம்
தோபித்து 2:9-14. மாற்கு 12:13-17.
கத்திய ஆட்டுக்குட்டி!
நேற்று நாம் வாசிக்கக் கேட்ட முதல் வாசகத்தில் தோபித்து என்னும் கதைமாந்தர் அறிமுகம் செய்யப்பட்டார். மிகவும் நேர்மையாளராக இருக்கிற தோபித்து சட்டம் வரையறுக்கிற நற்செயல்களையும், அறத்தின் அடிப்படையிலான செயல்களையும் செய்கிறார். தோபித்தின் நற்செயல்களில் முதன்மையானது இறந்தவர்களை அடக்கம் செய்தல். இறந்தவர் ஒருவரை அடக்கம் செய்துவிட்டு, இல்லம் வருகின்ற தோபித்து முற்றத்தில் உறங்குகிறார். அப்போது அங்கே கூரையில் நிற்கிற குருவிகளின் எச்சம் கண்களி;ல் விழ, அவர் பார்வை இழக்கிறார். நற்காரியம் செய்துவிட்டுத் தூங்கிய ஒருவரைக் கடவுள் காப்பாற்ற வேண்டாமா? நன்மை செய்கிற ஒருவருக்குத் தீமை நிகழ்வதேன்? என்னும் கேள்விகள் வாசகருக்கு எழுகிறது. 'பார்வை இழந்ததைப் பற்றித் தோபித்து முறையிடவில்லை' எனப் பதிவு செய்கிறார் ஆசிரியர். ஆக, நற்குணங்கள் செய்வதால் தீமை நம்மைவிட்டு அகலும் என்னும் உத்திரவாதம் இல்லை. தோபித்து எந்தவொரு முறைப்பாடும் இல்லாமல் இருக்கிறார். அதாவது, தன் கட்டுக்குள் இயலாத ஒன்றைப் பற்றி அவர் அக்கறைப்படவில்லை. நேர்மையாளர்கள் ஏன் துன்புற வேண்டும்? என்னும் கேள்விக்கான விடை புதிராகவே உள்ளது.
வாசகத்தின் பிற்பகுதியில், தோபித்துக்கும் அவருடைய மனைவி அன்னாவுக்கும் இடையேயான உரையாடல் தோபித்து பற்றிய இன்னொரு பார்வையைத் தருகிறது. தோபித்தின் மனைவி அன்னா கைவேலைப்பாடு செய்பரவாக அறிமுகப்படுத்துகிறார். அன்னா தன் வேலைக்கு அன்பளிப்பாகப் பெற்ற ஆட்டுக்குட்டி திருடப்பட்டதாக இருக்குமோ எனத் தன் மனைவிமீது சந்தேகம் கொள்கிறார் தோபித்து. நேர்மையாளர்கள் சில நேரங்களில் மற்றவர்களின் நேர்மை மற்றும் நன்மைத்தனம் பற்றிச் சந்தேகப்படுவதோடல்லாமல், மற்றவர்கள் அனைவரும் தீயவர்கள் என்றும் தீர்;ப்பளிக்கின்றனர். எனவேதான் நேர்மையாக இருப்பது ஒருவகை வெறி என மொழிகிறார் சபை உரையாளர்: 'நேர்மையாய் நடப்பதிலும் ஞானத்தைப் பெறுவதிலும் வெறிகொண்டவராய் இராதீர். அந்த வெறியால் உம்மையே அழித்துக்கொள்வானேன்?' (சஉ 7:16). தோபித்து தன் மனைவியின் செயலைக் குறித்து நாணுவதாகப் பதிவு செய்கிறார். அதாவது, இவர் எந்த அளவுக்கு நேர்மையாளர் என்றால் மற்றவர்கள் தவறு செய்தாலும் அவர்கள் சார்பாக வெட்கப்படுகிறார். இவ்வாறாக, தோபித்தின் நேர்மையை முன்மொழிகிறார் ஆசிரியர்.
நற்செய்தி வாசகத்தில், 'சீசருக்கு உரியதைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்கும் கொடுங்கள்' (மாற் 12:13-17) என்கிறார் இயேசு. அவரிடம் கேள்வி கேட்டவர்களுக்கு இந்த விடை புரிந்திருக்குமா எனத் தெரியவில்லை. ஏனெனில், அவர்களுடைய கேள்வி வரி செலுத்துவதைப் பற்றியதாக இருந்தது. 'நீதி என்பது அவரவருக்கு உரியதை அவரவருக்குக் கொடுப்பது.' ஒருவருக்கு உரியதைக் கொடுப்பது என்பதற்கு முன்னால், அவருக்கு உரியது எது என்பதை ஆய்ந்தறிய வேண்டும். ஆய்ந்தறிந்தபின் அதை அவருக்கு வழங்குவதில் சமரசம் செய்துகொள்ளாமல் இருத்தல் வேண்டும்.
கத்திய ஆட்டுக்குட்டி தோபித்தின் வாயைத் திறக்க வைத்தது.
இயேசுவைச் சோதிக்க வந்த ஏரோதியர் அவருடைய வாயைத் திறக்கிறார்கள்.
தோபித்தும் இயேசுவும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். 'ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோர் இதயம் உறுதியாய் இருக்கும்' என இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 112) வாசிக்கிறோம்.
இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) முறைப்பாடு தவிர்த்தல். நம் கட்டுக்குள் இல்லாதவை பற்றிய முறைப்பாடு பல நேரங்களில் நம்மைச் சோர்வாக்கிவிடுகிறது. நம் கட்டுக்குள் இல்லாதவை பற்றிய விழிப்புணர்வு இருத்தல் நலம். கட்டுக்குள் இல்லாதவற்றை அப்படியே ஏற்றுக்கொள்தலும் நலம்.
(ஆ) நேர்மையாளராக இருத்தல். நேர்மையாளராக இருந்தால் நல்லது நடக்கும் என்பதற்காக அல்ல, மாறாக, நேர்மையாளராக இருப்பதால் நல்லது நடக்கவில்லை என்றாலும் நேர்மையாளராக இருத்தல் சிறப்பு.
(இ) பொருள்சார்ந்த செயல்பாடுகளிலும் அருள்சார்ந்த செயல்பாடுகளிலும் முழுமையாக ஈடுபடுதல்.
No comments:
Post a Comment