Saturday, June 17, 2023

இறைவேண்டல் - பெயரிடப்படுதல் - கொடை

ஆண்டின் பொதுக்காலம் 11ஆம் ஞாயிறு

விப 19:2-6அ. உரோ 5:6-11. மத் 9:36-10:8.

இறைவேண்டல் - பெயரிடப்படுதல் - கொடை

முதல் வாசகப் பகுதி சீனாய் மலை உடன்படிக்கை நிகழ்வின் தொடக்கப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, செங்கடல் வழியாகக் கால் நனையாமல் கானான் நாட்டுக்குள் கடத்துகிறார். நீண்ட பயணம் செய்து அவர்கள் சீனாய் மலையை வந்தடைகிறார்கள். மோசே மட்டும் மலை ஏறிச் செல்கிறார். மக்கள் பாளையத்தில் குடியிருக்கிறார்கள். ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்கிறார். இது நிபந்தனை உடன்படிக்கை ஆகும். ஏனெனில், 'நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்தால்' என்னும் நிபந்தனை அதில் அடங்கியுள்ளது. மேலும், இந்த உடன்படிக்கை வழியாக அவர்கள் பெறுகின்ற உரிமைகளையும் முன்மொழிகிறார்.

கடவுளுக்கு ஏற்புடையவராக்கப்படுதல் (நியாயப்படுத்தப்படுதல்) என்னும் கருத்துருவை உரோமை நகரத் திருஅவைக்கு விளக்கும் பவுல், இயேசு கிறிஸ்துவின் இறப்பு வழியாக நாம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம் என முன்மொழிந்து, கடவுள்தாமே இந்நிகழ்வை முன்னெடுத்தார் என்றும், ஒப்புரவின் கனியான மகிழ்ச்சியைத் தருபவர் கடவுள் என்றும் கூறுகிறார்.

நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: முதல் பிரிவில், இயேசு மக்கள்கூட்டத்தின்மேல் பரிவு கொள்கிறார். அறுவடையின் ஆண்டவரை நோக்கி மன்றாடுமாறு சீடர்களை அழைக்கிறார். இரண்டாம் பிரிவில், பன்னிருவரைத் தம்மிடம் வரவழைத்து அவர்களைப் பணிக்கு அனுப்புகிறார். மூன்றாம் பிரிவில், பணிக்கான அறிவுரையை வழங்குகிறார்.

இன்றைய நாளின் வாசகங்களைப் பின்வரும் சொல்லாடல்களை அடிக்கோடிட்டுப் புரிந்துகொள்வோம்: பரிவு கொள்தல், பெயரிடப்படுதல், கொடையைப் பகிர்தல்.

அ. கடவுளின் பரிவை அனுபவித்தல், பரிவு கொள்தல்.

ஆ. கடவுளால் நாம் பெயரிடப்படுதல்.

இ. கடவுளின் கொடையைப் பேணிப் பகிர்ந்தளித்தல்.

அ. கடவுளின் பரிவை அனுபவித்தல், பரிவு கொள்தல்

திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் காணுகின்ற இயேசு, 'ஆயர் இல்லா ஆடுகளைப் போல அவர்கள் அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டதை' கண்டு அவர்கள்மேல் பரிவு கொள்கிறார். 'பரிவு' என்பதை 'இரக்கம்' என்றும் புரிந்துகொள்ளலாம். எபிரேயத்தில், 'ரஹெம்' ('பரிவு') என்னும் சொல்லுக்கு 'ஒரு தாய் தன் மடியிலிருக்கும் பிள்ளையைக் குனிந்து பார்க்கும் சொல்லோவியம்' தரப்படுகிறது. அதாவது, கையறு நிலையிலிருக்கும் தன் குழந்தையின் கண்களைக் கூர்ந்து நோக்குகிற தாய், அக்கண்கள் வழியாகக் குழந்தையின் தேவை அறிந்து அதை நிறைவு செய்கிறார். ஆக, இரக்கம் என்பது உணர்வாக எழுந்தாலும் அது செயலாகக் கனிகிறது. இயேசுவைப் பின்தொடர்ந்து நடந்த மக்கள் பொருளாதார, ஆன்மிக, அரசியல், மற்றும் சமூகத் தளங்களில் வலுவிழந்தவர்களாக இருந்தார்கள். அவர்களின் கையறுநிலை கண்டு அவர்கள்மேல் இரக்கம் கொள்கிறார் இயேசு. தாம் ஒருவரால் மட்டும் பணி சாத்தியமில்லை என உணர்ந்தவராக, தம்மோடு உடனுழைக்க பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பணிக்கு அனுப்புகிறார். அறுவடை செய்பவர்கள் சீடர்கள் என்றாலும் அறுவடையின் உரிமையாளர் கடவுளே என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறார். சீடர்கள் தாங்கள் செய்கிற பணிகள் வழியாகக் கடவுளின் பரிவை மனிதர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

பரிவு என்பது மேன்மையான உணர்வு. கடவுளின் பரிவை நாம் அன்றாட வாழ்வில் கண்டுணர்கிறோம். சில நேரங்களில் நம் வாழ்க்கையில் பிரச்சினைகள் அல்லது துயரங்கள் நம்மை அலைக்கழிக்கும்போது கடவுள் நம்மைவிட்டுத் தூரமாகச் சென்றுவிட்டதாக, அல்லது கடவுள் தம் முகத்தை மூடிக்கொண்டதாக உணர்கிறோம். நம் கையறுநிலைகண்டு பரிவுகொள்பவர் நம் இறைவன் என்னும் நம்பிக்கை பெறுவோம். கடவுளின் பரிவை அல்லது இரக்கத்தை அனுபவிக்கிற நாம் அதை மற்றவர்களுக்குக் கொடுக்க முயற்சி செய்வோம்.

ஆ. கடவுளால் பெயரிடப்படுதல்

'எல்லா மக்களிலும் நீங்களே என் உரிமைச் சொத்து,' 'நீங்களே குருத்துவ அரசர்,' 'தூய மக்களினம்' என்று இஸ்ரயேல் மக்களுக்குப் பெயர்களைக் கொடுக்கிறார் ஆண்டவராகிய கடவுள். சீடர்கள் என மொத்தமாகத் தெரிந்தவர்களில் பன்னிருவரை அழைத்து அவர்களுக்குப் புதிய பெயர்களை வழங்குகிறார் இயேசு. பெயரிடப்படுதல் என்பது உரிமை கொண்டாடப்படுதலைக் குறிக்கிறது. ஆண்டவராகிய கடவுள் தாம் கொண்ட பரிவின் காரணமாக இஸ்ரயேல் மக்களைத் தம் உரிமைச்சொத்து எனக் கொண்டாடுகிறார். மற்ற நாட்டினரைவிடச் சிறிய இனமாக இருந்த மக்களை அரசர்கள் என்றும், கடவுளின் தூய இனம் என்றும் அழைத்து அவர்களுக்கு மேன்மை அளிக்கிறார். சீடர்கள் என்ற நிலையில் இருந்தவர்களைப் பன்னிருவர் என்னும் நிலைக்கு உயர்த்துகிற இயேசு, தீய ஆவிகளை ஓட்டவும் நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் தந்து அவர்களை ஆற்றல்படுத்தி, அவர்களைத் தம் உடனுழைப்பாளர்களாக மாற்றுகிறார்.

திருமுழுக்கு நிகழ்வில் நாம் அனைவரும் பெயரிடப்படுகிறோம். பெயரிடப்பட்டுள்ள நாம் அனைவருமே ஓர் அழைப்பைப் பெற்றுள்ளோம். அந்த அழைப்பை நாம் நினைவுகூர்ந்து, அந்த அழைப்புக்கேற்ற வாழ்க்கை வாழ்கிறோமா?

இ. கடவுளின் கொடையைப் பேணிப் பகிர்ந்தளித்தல்

தம் சீடர்களைப் பணிக்கு அனுப்புகிற இயேசுவின் அறிவுரைப் பகுதி, 'கொடையாகப் பெற்றீர்கள். கொடையாகவே வழங்குங்கள்' என்று நிறைவுபெறுகிறது. 'இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே' என்று இரண்டாம் வாசகம் நிறைவுபெறுகிறது. கடவுள்தாமே ஒப்புரவின் மகிழ்ச்சியைக் கொடையாக வழங்குவதாக மொழிகிறார் பவுல். நம் ஒவ்வொருவரின் செயல்களை விட கடவுளின் அருளே மேன்மையாக இருக்கிறது. இதையே திருப்பாடல் ஆசிரியர், 'ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும். ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில் காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்' (127:1) எனப் பதிவு செய்கிறார். நாம் எந்த முயற்சியை எடுத்தாலும், முயற்சியின் பலன் கடவுளின் மடியில்தான் உள்ளது. அனைத்தையும் கடவுளின் கொடையாகப் பார்ப்பதற்கு நமக்கு நம்பிக்கைப் பார்வை அவசியம். 'இது என்னால் வந்தது, இதை நான் செய்தேன், இது என் முயற்சி' என நான் என் செயல்களுக்கு முதன்மையிடம் அளிக்கும்போதெல்லாம் மனச்சோர்வு அடைகிறேன். மற்றவர்களின் செயல்கள் மற்றும் முயற்சிகளோடு ஒப்பிட்டு வருத்தம் கொள்கிறேன். ஆனால், அனைத்தையும் அனைவரையும் கொடையாகப் பார்க்கிற உள்ளம் மனச்சோர்வு அடைவதில்லை. வருத்தம் கொள்வதில்லை. பன்னிருவராகத் தெரிந்துகொள்ளப்பட்டதும், தீய ஆவியின்மேலும் நோய்களின்மேலும் கொள்ளும் ஆற்றலும் கடவுளின் கொடைகள் என்பதை உணர்ந்தவர்களாகச் சீடர்கள் பணியாற்ற வேண்டும்.

கொடையாகப் பார்க்கும் உள்ளம் கணக்குப் பார்க்காது. கணக்குப் பார்க்கிற உள்ளம் கொடைகளைக் கொண்டாடாது. நம் ஆற்றல், திறன், வெற்றி, இருத்தல், இயக்கம் என அனைத்தையும் கடவுளின் கொடைகளாகப் பாவித்துக் கொண்டாடுகிறோமா? கொடையாகவே அவற்றை மற்றவர்களோடு பகிர்கிறோமா?

நிற்க.

கடவுளின் பரிவு, கடவுளின் உரிமை, கடவுளின் கொடை என அனைத்தும் கடவுளிடமிருந்தே ஊற்றெடுக்கின்றன. இன்றைய பதிலுரைப்பாடலில் ஆசிரியர் பாடுவது போல, 'ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள். அவர் மேய்க்கும் ஆடுகள்!' (திபா 100) அன்று அவரிடம் சரணடைவோம். அவருடைய பரிவையும் கொடையையும் பெற்றுள்ள நாம் அவற்றை ஒருவர் மற்றவருக்கு – குடும்பத்தில், பங்குத்தளத்தில், சமூகத்தில் - வழங்க முயற்சி செய்வோம்.


No comments:

Post a Comment