வெள்ளி, 16 ஜூன் 2023
பொதுக்காலம் 10-ஆம் வாரம்
இச 7:6-11. 1 யோவா 4:7-16. மத் 11:25-30.
இயேசுவின் தூய்மைமிகு இதயம்
அ. விழா வரலாற்றுப் பின்புலம்
1. தொடக்கத் திருஅவை இயேசுவின் அன்பு மற்றும் இரக்கம் குறித்து தியானித்தது. தொடக்கத் திருஅவைத் தந்தையர்களில் புனித அகுஸ்தீன் மற்றும் புனித கிறிஸோஸ்தம் ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்ட விலா குறித்தும் இயேசுவின் இதயம் குறித்துக்காட்டும் அன்பு பற்றியும் எழுதியுள்ளார்கள்.
2. மத்தியக் கால மறைஞானியர் ('மிஸ்டிக்') புனித ஜெர்ட்ருட் மற்றும் புனித மெக்டில்ட் போன்றோர் இரக்கம்நிறை இயேசு பற்றிய அனுபவங்களையும் காட்சிகளையும் பெற்றனர்.
3. இயேசுவின் திருஇதய பக்தியும் வணக்கமும் பரவலாக்கம் செய்ததில் முக்கியமானவர் புனித மார்கரெட் மேரி அலகாக் (1647-1690) ஆவார். பல முறை இவருக்குத் தோன்றுகிற இயேசு தம் இதயத்தைத் திறந்து காட்டி, திருஇதய பக்தி முயற்சிகளைத் தொடங்குமாறு அறிவுறுத்துகிறார். மனம் திரும்புதல், நற்கருணை ஆராதனை, முதல் வெள்ளிக் கிழமைகளில் நற்கருணை, திருஇதயத்துக்கு அர்ப்பணித்தல், திருஇதயப் படம் நிறுவுதல் என பல பக்தி முயற்சிகள் உருவாகின்றன.
4. திருத்தந்தை 9ஆம் பயஸ் (1856) அகில உலக திருஅவையின் கொண்டாட்டமாக இத்திருவிழாவை அறிவித்தார். திருத்தந்தை 13ஆம் லியோ (1899) அகில உலகத்தையும் இயேசுவின் திருஇதயத்துக்கு அர்ப்பணம் செய்தார். திருத்தந்தை 11ஆம் பயஸ் 'இரக்கம்நிறை மீட்பர்' என்னும் சுற்றுமடல் (1928) வழியாக இயேசுவின் திருஇதய பக்தி முயற்சியின் பொருளை உலகறியச் செய்தார்.
ஆ. திருஇதய பக்தி முயற்சிகள்
1. படம் அல்லது திருவுருவம் நோக்குதல்: இயேசுவின் திருஇதயப்படத்தை அல்லது திருவுருவத்தை நோக்கி, அதில் காணும் அடையாளங்களை தியானித்தல்.
2. இயேசுவின் திருஇதயத்துக்கு தனிநபர் மற்றும் குடும்பங்களை அர்ப்பணம் செய்தல்: தங்களுடைய வாழ்வு இயேசுவின் திருஇதயத்தை மையமாகக் கொண்ட வாழ்வாக இருக்கும் என்று உறுதி ஏற்றல்.
3. பரிகாரங்கள் செய்தல்: நம் குற்றங்கள் அல்லது தவறுகளால் இயேசுவின் திருஇதயத்தை மனம் நோகச் செய்த நேரங்களுக்காகப் பரிகாரம் செய்தல்.
4. நற்கருணை ஆராதனை: முதல் வெள்ளிக் கிழமைகளில் தனிப்பட்ட அல்லது குழும நற்கருணை ஆராதனை செய்தல். திருப்பலி கண்டு நற்கருணை உட்கொள்தல்.
5. இல்லம் மற்றும் பணியிடங்களில் படம் அல்லது திருவுருவம் நிறுவுதல்: அவருடைய கண்கள் நம்மை நோக்கியிருக்குமாறு, அவருடைய கண்பார்வையில் நம் வாழ்க்கையை வாழ்தல்.
6. திருஇதய செபமாலை: திருஇதய செபமாலை, மன்றாட்டு மாலை செபித்தல்.
இ. திருஇதயம் நமக்கு முன்வைக்கும் பாடங்கள்
1. அன்பு என்னும் செயல்
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தேர்ந்துகொண்டதன் நோக்கத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார் மோசே. மக்கள் சொற்பமாக இருந்தார்கள் என்பதற்காக அல்ல, மாறாக, தாம் அவர்கள்மேல் கொண்ட அன்பினால் ஆண்டவர் அவர்களைத் தேர்ந்துகொள்கிறார். இந்த அன்பு வெறும் உணர்வு அல்ல. மாறாக, ஒரு செயல்பாடு. இந்த அன்பே அவர்களைப் பாரவோனின் அடிமைத்தளையிலிருந்து மீட்கிறது, செங்கடலைக் கால் நனையாமல் கடக்கச் செய்கிறது, தண்ணீர் தருகிறது, மன்னாவும் இறைச்சியும் பொழிகிறது, சீனாய் மலையில் உடன்படிக்கை செய்கிறது. மக்கள் தவறிச் சென்றாலும் ஆண்டவராகிய கடவுளின் அன்பு நீடித்ததாக, நிலையானதாக இருக்கிறது. ஆக, இத்திருநாள் நமக்கு நினைவூட்டுவது அன்பு. அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல. மாறாக, அது ஒரு செயல்பாடு. அன்பினால் இறைவன் நம்மைத் தேர்ந்துகொண்டார் எனில், அதே அன்பை நாம் ஒருவர் மற்றவருக்குப் பகிர்தல் நலம். இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில், அன்பு கடவுளிடமிருந்து வருகிறது' என எழுதுகிறார் திருத்தூதர் யோவான்.
2. பெருஞ்சுமையும் இயேசுவின் சுமையும்
'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களைத் தம்மிடம் அழைக்கிற இயேசு,' தாம் கனிவும் மனத்தாழ்மையும் உடையவராக இருப்பதாக முன்மொழிந்து, 'என் நுகம் அழுத்தாது, என் சுமை எளிதாயுள்ளது' என்கிறார். இயேசுவிடம் நாம் கனிவையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொள்ள வேண்டும். கனிவு அவருக்கும் மற்றவர்களுக்குமான உறவில் வெளிப்படுகிறது. மனத்தாழ்மை அவருக்கும் தந்தை கடவுளுக்கும் உள்ள உறவில் வெளிப்படுகிறது. கனிவு கொண்ட உள்ளம் யாரையும் காயப்படுத்துவதில்லை. மனத்தாழ்மை என்பது மற்றவர்கள்மேல் உள்ள சார்புநிலையைக் கொண்டாடுவது. இயேசு நம் சுமைகளை அகற்றுவதில்லை. மாறாக, அவற்றை எதிர்கொள்வதற்கான பாடத்தைக் கற்பிக்கிறார். அனைத்தையும் அன்பினால் எதிர்கொண்டால் நுகம் அழுத்துவதில்லை, சுமையும் எளிதாகும்.
3. ஆண்டவர் அருளும் மன்னிப்பு
பல நேரங்களில் நாம் பயம் மற்றும் குற்றவுணர்வுடன் வாழ்கிறோம். இறைவன் நம்மைத் தண்டிக்கிற நீதிபதி என நினைக்கிறோம். இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 103) ஒரு புதிய புரிதலை நமக்குத் தருகிறது: 'அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கிறார். நோய்களையெல்லாம் குணமாக்குகிறார் ... ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.' இயேசுவின் இதயம் கடவுளின் மன்னிப்பை நமக்கு அடையாளப்படுத்துகிறது.
இறுதியாக,
இயேசுவின் இதயம் சிலுவையில் குத்தித் திறக்கப்பட்டபோது, இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தன. இரத்தம் அவருடைய இறையியல்பையும், தண்ணீர் நம் மனித இயல்பையும் குறிக்கிறது. நம் மனித இயல்பை ஏற்ற அவர், நம் இயல்பையும் இருத்தலையும் இயக்கத்தையும் அறிவார்.
No comments:
Post a Comment