திங்கள், 26 ஜூன் 2023
பொதுக்காலம் 12-ஆம் வாரம்
தொநூ 12:1-9. மத் 7:1-5.
தீர்ப்பு அளிக்காதீர்கள்!
'பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்' என்று தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் இயேசு. கிரேக்கத்தில் 'மே க்ரிநெடே' என்று ஒற்றை வினைச்சொல்லாகத் தரப்பட்டுள்ளது இந்த அறிவுரை. 'க்ரினோ' என்னும் வினைச்சொல்லுக்கு, 'தீர்ப்பிடுதல், குற்றம் சுமத்துதல், அளவிடுதல், விமர்சனம் செய்தல்' என்று பல பொருள்கள் உண்டு.
ஒரு பொருளை அல்லது நபரை நாம் பார்க்கும்போது நம்மை அறியாமலேயே அதை அளவிடுகிறோம், அல்லது விமர்சனம் செய்கிறோம். எடுத்துக்காட்டாக, என் கண் யாராவது ஒருவர் ஒரு புத்தகத்தை நீட்டினால், அதை வெறும் புத்தகம் என்று பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், என் மூளை உடனடியாக அதை அளவிடுகிறது அல்லது விமர்சனம் செய்கிறது. புத்தகத்தின் தலைப்பு, புத்தகம் எழுதப்பட்ட மொழி, புத்தகத்தின் தடிமன், அட்டையின் நிறம், புத்தகத்தின் வழுவழுப்பு என அனைத்தையும் அளவிட்டு, விமர்சனம் செய்கிறது. இவ்வளவு விமர்சனமும் இணைந்து அந்தப் புத்தகத்திற்கும் எனக்கும் இடையே ஒரு திரையாக நின்றுகொள்கிறது.
எனக்கு முன் ஒரு நபர் நிற்கும்போதும் இப்படித்தான் நிகழ்கிறது. நிற்கிற நபர் ஆணா பெண்ணா, கறுப்பா சிவப்பா, குட்டையா வளர்த்தியா, திருமணம் ஆணவரா ஆகாதவரா, குழந்தையா வளர்ந்தவரா, தமிழ் பேசுபவரா வேறு மொழி பேசுபவரா என என் மூளை விமர்சனம் செய்துகொண்டே செல்கிறது. இப்படி விமர்சனம் செய்துகொண்டே செல்லும்போது நான் என்னை அறியாமலேயே அந்த நபர்மேல் தீர்ப்புகளை எழுதிக்கொண்டே இருக்கிறேன். இன்னும் சில நேரங்களில் என் மூளை அடுத்தவரின் எண்ணங்களையும் ஆராய்ந்துபார்க்கத் தொடங்கிவிடுகிறது. இவ்வளவு அடையாளங்களுடன்தான் நான் அவரைப் பார்க்கிறேனே தவிர, அவரை நான் அவராக மட்டும் பார்ப்பதில்லை.
'விமர்சனம் இல்லாத பார்வையே மனமுதிர்ச்சியின் அடையாளம்' என்கிறார் ஜித்து கிருஷ்ணமூர்த்தி. வெறும் மலரை மலராகவும், மலையை மலையாகவும், ஆளை ஆளாகவும் மட்டும் பார்த்தல் சிறப்பு.
தூர நாட்டிலிருந்து இல்லம் திரும்பி வந்த தன் இளைய மகனுக்காகக் காத்திருக்கிற தந்தை, 'என்னப்பா இப்படி வந்துருக்க?' என்று கேட்கவில்லை. வந்த மகனை அப்படியே தழுவிக்கொள்கிறார். அதுதான் தீர்ப்பு அளிக்காத பார்வை. விமர்சனம் செய்யாத மூளை. அவன் வந்து நின்ற நிலையை விமர்சனம் செய்துபார்த்தால் அவனைத் தழுவியிருக்க இயலாது அவரால். தன் மகனை மகன் என்று மட்டுமே பார்க்கிறார். ஆனால், மூத்த மகனோ வந்திருந்த தன் தம்பியைப் பார்க்கிறான், அவனுடைய வெறுங்கையைப் பார்க்கிறான். அவன் பழைய வாழ்க்கையை விமர்சனம் செய்கிறது இவனுடைய மூளை. விளைவு, தன் தம்பி என உழைக்காமல், 'இந்த உன் மகன்' என அந்நியப்படுத்துகிறான்.
விமர்சனம் இல்லாத பார்வையை நாம் பெறத் தடையாக இருப்பது நம் கண்ணில் உள்ள கட்டை. இந்தக் கட்டை நம் கண்களுக்கு வெளியே இல்லை. மாறாக, நம் மூளையிலிருந்து நம் கண்களை நோக்கியதாக இருக்கிறது. அதை நாம் நீக்கிவிட்டால் விமர்சனம் செய்யாத, தீர்ப்பிடாத, குற்றம் சுமத்தாத பார்வையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் ஆபிராமை (ஆபிரகாமை) அழைக்கிறார். 'நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டுக்குச் செல்' என்னும் குரலைக் கேட்டவுடன் புறப்படுகிறார் ஆபிராம். இதுதான் அவருடைய நம்பிக்கைப் பார்வை. அந்த நம்பிக்கைப் பார்வையில் எந்தவொரு விமர்சனமும், தீர்ப்பும், ஆராய்ச்சியும் இல்லை.
இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 33) வரிகளில், 'ஆண்டவர் கண்ணோக்குகிறார்' என வாசிக்கிறோம். ஆண்டவரின் பார்வை தீர்ப்பிடாத, குற்றம் சுமத்தாத, விமர்சனம் செய்யாத பார்வை. அப்படியே நம் பார்வையும் அமைவதாக!
No comments:
Post a Comment