புனிதர் அனைவர் பெருவிழா
திருவெளிப்பாடு 7:2-4,9-14 1 யோவான் 3:1-3 மத்தேயு 5:1-12
அருளின் கனியே புனிதம்
இன்று புனிதர் அனைவர் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம். பயணம் செய்யும் திருஅவை, மகிமை பெற்ற திருஅவை, துன்புறும் திருஅவை என்னும் நம் திருஅவையின் மூன்று நிலைகளில் இரண்டாம் நிலையின் திருநாள் இது. இவர்கள் தூய்மை அல்லது புனித நிலையை அடைந்தவர்கள்? 'நான் ஒருவரே தூயவர்' என்று கடவுள் சொல்ல, தூய்மை அல்லது புனிதம் என்பது கடவுளின் பண்பு என வரையறுக்கப்பட்டிருக்க, 'மனிதர்களாகிய' நாம் புனித நிலையை அடைய முடியுமா? அல்லது சிலர் சொல்வது போல, 'மனிதமே புனிதமா'?
மனிதப் புனிதம் அல்லது தூய்மை என்பது கடவுளின் அருளுக்கு நாம் செய்யும் தொடர் பதிலிறுப்பு எனவும், அவரின் அருளைப் பெற்ற நாம் அவருக்குக் கொடுக்கும் கனிகள் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.
ஒரு சிறிய உருவகத்தோடு தொடங்குவோம். பள்ளிக்கூடத்திற்குக் குழந்தைகள் வருவதைப் பார்த்திருக்கிறீர்களா? குழந்தைகள் வரும் நிகழ்வை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: (அ) சில குழந்தைகளை அவர்களுடைய அம்மா, அல்லது அப்பா, அல்லது ஆட்டோக்காரர் கொண்டு வந்து விடுவார், (ஆ) சில குழந்தைகள் வீட்டிலிருந்து நடந்து வருவார்கள், (இ) சில குழந்தைகள் அப்பா வாங்கிக் கொடுத்த சைக்கிளை ஓட்டிக்கொண்டோ, அல்லது அப்பா தந்த பணத்தைக் கொண்டு பொதுப் போக்குவரத்திலோ வருவர். முதல் வகை குழந்தைகளுக்கு எல்லாமே அவர்களது பெற்றோரால் கொடுக்கப்பட்டுவிடுகிறது. அவர்களது வேலையெல்லாம் படிப்பதும், பெற்றோரின் எதிர்பார்ப்பின்படி நடப்பதும்தான். இதே போல, கடவுள் சிலருக்கு அவர்களது பிறப்பிலேயே புனிதத்தைக் கொடுத்துவிடுகிறார். புனிதம் என்பது இவர்களுக்குக் கடவுள் கொடுத்த கொடை. எடுத்துக்காட்டாக, அன்னை கன்னி மரியாள். இரண்டாம் வகைக் குழந்தைகள் தாங்களே நடந்து செல்ல வேண்டும். முதுகில் சுமை, வயிற்றில் பசி, பள்ளி மணி ஒலிக்கும் அவசரம் எனக் குழந்தைகள் நடந்து செல்ல வேண்டும். சில குழந்தைகள் பள்ளிவரை செல்லும், சில குழந்தைகள் வழியில் யாரிடமாவது லிஃப்ட் கேட்கும், சில குழந்தைகள் தங்களால் இயலாது என்று பாதி வழி நின்றுவிடும். இத்தகைய மனிதர்கள் புனிதத்தை அடையப் போராடுபவர்கள். ஏறக்குறைய புனித நிலையை அடைபவர்கள். இவர்களுக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படும். இவர்கள்தாம் உத்தரிக்கிற நிலை ஆன்மாக்கள் அல்லது துன்புறும் திருஅவையின் உறுப்பினர்கள். மூன்றாவதாக உள்ள குழந்தைகள், தங்கள் பெற்றோர் கொடுத்த அருள் என்னும் மிதிவண்டியைப் பயன்படுத்துவதுடன், தாங்களே மிதித்து பள்ளிக்கு வருவார்கள். இவ்வகை மனிதர்கள், கடவுளின் அருள் அல்லது அழைப்பைத் தங்கள் வாழ்வில் ஏற்று, அதற்கேற்ற பதிலிறுப்பு செய்து, தங்கள் வாழ்விலும் வாழ்வாலும் கனி தந்தவர்கள். இம்மூன்றாம் வகை மனிதர்களைத்தான், அவர்கள் அடைந்த புனித நிலையைத்தான், இன்றைய நாளில் 'புனிதர் அனைவர் பெருவிழாவில்' கொண்டாடி மகிழ்கிறோம். பள்ளிக்குள் வந்துவிட்டால் அனைத்துக் குழந்தைகளும் ஒன்றென ஆகிவிடுகிறார்கள். அது போல, இறைவனின் திருமுன்னிலையில் அனைத்துப் புனிதர்களும் ஒன்றென ஆகிவிடுகின்றனர்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். திவெ 7:2-4,9-14), திருவெளிப்பாடு நூல், கடவுளின் புனித மக்கள் பற்றிய வியத்தகு காட்சியை நம்முன் கொண்டுவருகிறது. கடவுளின் புனித மக்கள் இரு குழுவினர்களாக இருக்கின்றனர். முதல் காட்சியில், அல்லது முதல் குழுவில் உள்ளவர்கள் 'முத்திரையிடப்பட்டவர்கள்.' முத்திரை என்பது ஒருவருக்கு அது உடைமை என்பதையும், ஒருவர் அதன்மேல் உரிமை கொண்டாடுகிறார் என்பதையும் குறிக்கிறது. 144 ஆயிரம் மக்கள் அவ்வாறு முத்திரையிடப்பட்டுள்ளதாக யோவான் காண்கிறார். முத்திரையிடப்பட்ட இவர்கள் அனைவரும் கடவுளின் மக்கள். இங்கே, '144' என்பது ஓர் உருவக அல்லது அடையாள எண். இஸ்ரயேலின் 12 குலங்களும், அவற்றின் வழி மரபுகளாக 12 ஆயிரம் மக்களின் பெருக்கல் தொகையே 144 ஆயிரம் (காண். திவெ 7:5-8). இந்த முதல் குழு இஸ்ரயேல் மக்களைக் குறிக்கின்றது. இந்த மக்களையே கடவுள் தன் சொந்த மக்களினமாகத் தெரிந்தெடுத்து, தனக்குப் பணி செய்யவும், தன் செய்தியை அனைத்துலக்குக்கும் அறிவிக்கவும் பணித்தார் (காண். விப 19:5-6).
இரண்டாம் குழுவினர் 'வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்கள்.' இவர்கள், 'கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள். தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக் குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.' இவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள், கிறிஸ்துவுக்காகத் துன்பம் ஏற்றவர்கள். அவர்களின் வெண்ணிற ஆடை தூய்மை மற்றும் வெற்றியைக் குறிக்கிறது. கிறிஸ்துவைப் போல அவர்கள் இருந்ததால் அவர்கள் செம்மறியின் விருந்தில் பங்கேற்கின்றனர். அவர்கள் இப்போது அனுபவிக்கும் புனிதம் அல்லது தூய்மை என்பது கடவுள் அவர்களுக்கு அளித்த கொடை. இஸ்ரயேல் மக்கள் கடவுளால் முத்திரையிடப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் அனைவரும் பாஸ்காச் செம்மறியின் இறப்பால் புனிதப்படுத்தப்படுகின்றனர்.
புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் வாசகம் (காண். 1 யோவா 3:1-3), கடவுளின் அன்பு மற்றும் அன்பின் விளைவுகள் பற்றிச் சிந்திக்கும் அழைப்போடு தொடங்குகிறது. யோவானின் குழுமத்தினர் கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்றதால் துன்புறுகின்றனர். ஆனால், அத்துன்பம் தற்காலிகமானது என்றும், நம்பிக்கையாளர்களின் நோக்கம் தூய்மையை அடைவது என்றும் அறிவுறுத்துகின்றார் யோவான்.
நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 5:1-12), மத்தேயு நற்செய்தியில் காணும் மலைப்பொழிவின் தொடக்கப் பகுதியை வாசிக்கின்றோம். எட்டு பேறுபெற்ற நிலைகள் இங்கே முன்வைக்கப்படுகின்றன. இவற்றின் நோக்கம் கடவுளின் ஆசீரை நமக்கு வழங்குவதும், அதன் வழியாக நம்மைப் புனிதத்துக்கு இட்டுச் செல்வதுமே.
முதல் நான்கு பேறுபெற்ற நிலைகள் நம்பிக்கையாளரைக் கடவுளோடும், இரண்டாவது நான்கு பேறுபெற்ற நிலைகள் நம்பிக்கையாளர்களை ஒருவர் மற்றவரோடும் இணைக்கின்றன. முதலில், 'ஆன்மீக ஏழ்மை அல்லது எளிமை' முன்வைக்கப்படுகிறது. இது ஒருவர் கடவுள்மேல் கொண்டுள்ள சார்புநிலையைக் குறிக்கிறது. இரண்டாவது, துயருறுவோர் பற்றியது. துயரம் கடவுள் தரும் மீட்பை முன்குறிக்கிறது. மூன்றாவது பேறுபெற்ற நிலை திபா 37:11இலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கனிவுடையோர் நாட்டை உரிமையாக்கிக்கொள்கின்றனர். நாடு என்பது கடவுள் அளிக்கும் கொடை. நான்காவது, நீதிக்கான ஏக்கம் கொள்வோர் பெறும் நிறைவை எடுத்துச் சொல்கிறது. நீதி என்பது கடவுளோடும், ஒருவர் மற்றவரோடும் ஒருவர் ஏற்படுத்திக்கொள்ளும் சரியான உறவுநிலையைக் குறிக்கிறது. ஐந்தாவது, இரக்கம் காட்டுபவர் இரக்கம் பெறுவார். இரக்கம் என்பது ஒருவர் மற்றவர்மேல் காட்டும் உடல் மற்றும் உள்ளம்சார் அன்பைக் குறிக்கிறது. ஆறாவதாக, தூய்மையான உள்ளம் என்பது ஒருவரின் நாணயத்தையும், நம்பகத்தன்மையையும் காட்டுகிறது. உறவுகளில் தூய்மையாக இருக்கும் இவர்கள் கடவுளின் திருமுன்னிலை நோக்கி ஈர்க்கப்படுவார்கள், ஏனெனில், கடவுள் தூயவராக இருக்கிறார். ஏழாவது, அமைதியை ஏற்படுத்துவது. அமைதி என்பது ஒருங்கிணைந்த இசைவு நிலை. அந்த இசைவு நிலையில் ஒருவர் இந்த உலகத்தோடு தான் கொண்டுள்ள இணைப்பைக் கண்டுணர்கிறார். எட்டாவது பேறுபெற்ற நிலை, நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுபவர் பற்றிப் பேசுகிறது. இவர்கள் கடவுளுக்குப் பிரமாணிக்கமாய் இருப்பதால், கடவுளின் அரசில் பங்கேற்கின்றனர்.
நற்செய்தி வாசகத்தின் இறுதிப் பகுதி, 'மகிழ்ந்து அக்களியுங்கள்' என்ற வாழ்த்தோடு நிறைவுறுகிறது. இந்த வார்த்தைகளைக் கொண்டே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதம் பற்றிய திருத்தூது ஊக்கவுரையை (2018) எழுதுகின்றார்.
ஆக, முதல் வாசகத்தில், கடவுளின் அருளை அனுபவித்தவர்கள் அவருக்காக மறைசாட்சியம் ஏற்றதால் கனி தருகின்றனர்.
இரண்டாம் வாசகத்தில், புனிதம் என்பது நாம் அடைய வேண்டிய இலக்காக வரையறுக்கப்படுகின்றது.
நற்செய்தி வாசகம், பேறுபெற்ற நிலைகளை முன்வைப்பதுடன், மகிழ்ச்சிக்கான இயேசுவின் அழைப்பே புனிதத்தின் தொடக்கம் என முன்வைக்கிறது.
பதிலுரைப் பாடல் ஆசிரியரும், இதையொட்டி, 'ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே' (காண். திபா 24) துள்ளிக் குதிக்கின்றார்.
இறுதியாக,
புனிதர்கள் வானத்திலிருந்து கீழே குதித்தவர்கள் அல்லர். மாறாக, நம்மைப் போல வாழ்ந்து, நமக்கு முன் கடந்து சென்றவர்கள். இங்கு செய்யப்பட்டு அங்கே ஏற்றுமதி செய்யப்படுபவர்கள் இவர்கள். தாங்கள் பெற்ற அருளுக்கு ஏற்ற கனிகள் தருபவர்கள் இவர்கள். இவர்கள் விழுந்தாலும் எழுபவர்கள். புனித மரிய வியான்னி சொல்வது போல, 'புனிதர்கள் சரியாகத் தொடங்கவில்லை என்றாலும், மிகச் சரியாக முடித்தார்கள்.' நாம் அனைவரும் சரியாக, நல்லதாக முடிக்க முடியும். புனிதம் என்பது நாம் மேற்கொள்ள வேண்டிய தெரிவு. அந்தத் தெரிவின்மேல் கொள்ள வேண்டிய மனவுறுதி.
மதிப்பற்றவை நீண்ட நாள்கள் நீடிப்பதில்லை. மதிப்பு மிக்கவை என்றும் நீடிக்கின்றன.
அன்றாட தெரிவுகள் தெளிவானால், புனிதம் என்பது உணர்வு அல்லது செயல் என்பது தெளிவானால், நாமும் புனிதர்களே.
No comments:
Post a Comment