Thursday, October 20, 2022

காலத்தை ஆய்ந்து பார்த்தல்

இன்றைய (21 அக்டோபர் 2022) நற்செய்தி (லூக் 12:54-59)

காலத்தை ஆய்ந்து பார்த்தல்

நிறைவுகாலம் அல்லது இறுதிக்காலம் பற்றிய இயேசுவின் போதனை இன்றைய நற்செய்தி வாசகத்திலும் தொடர்கிறது. தனது சமகாலத்து பாலஸ்தீனத்தில் விளங்கிய காலநிலையை மேற்கோள் காட்டி, அந்தக் காலநிலையை அறிந்திருக்கின்ற மக்கள், 'இக்காலத்தை, அதாவது, இறையரசின் காலத்தை ஆராயாமல் இருப்பது எப்படி?' என்ற கேள்வியை எழுப்புகின்றார். 

மேலும், நடுவரிடம் இழுத்துப் போகுமுன் செய்ய வேண்டிய சமரசம் என்னும் உருவகத்தின் பின்புலத்தில், இறையாட்சி பற்றிய அறிதலின் உடனடித் தன்மையையும் எடுத்துரைக்கின்றார்.

முதலில், காலத்தை அறிதல்.

காலத்தை அறிவதற்கு முதலில் தேவை, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற தன்னுணர்வும், நுண்ணுனர்வும். இவை இரண்டும் இல்லாமல் காலத்தை அறிவது சாத்தியமில்லை.

மேலும், காலத்தை அறிதல் உடனடியாக நம் செயல்களின் திசையைத் திருப்புகிறது. மழை வருவது போலத் தெரிந்தவுடன், நம் கால்கள் வேகமாக நடக்கின்றன. மாடியில் காயப்போட்ட துணிகளை எடுக்க ஓடுகிறோம், நம் அறையின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை அடைக்கின்றோம், மின்னணுச் சாதனங்களை மின்னேற்றியிலிருந்து அகற்றுகிறோம், மெழுகுதிரி மற்றும் தீப்பெட்டி எடுத்து வைக்கிறோம், சுடுதண்ணீர் போட்டு சேமித்து வைத்துக்கொள்கிறோம். ஆக, மேகங்களிலிருந்து விழும் சில துளிகள் என்னை எட்டியவுடன், நான் அதுவரை பார்த்துக்கொண்டிருந்த எல்லா வேலைகளையும் உதறிவிட்டு, என் முதன்மைகளை மாற்றிக்கொள்கிறேன்.

இயேசுவின் உடனிருப்பும் அவர் தரும் செய்தியும் புதிய புதிய காலநிலை மாற்றங்கள் போல என்னைச் சுற்றி வருகின்றன. நான் அவற்றை அறியவும், அந்த அறிதலுக்கு ஏற்ப என் முதன்மைகளை மாற்றிக்கொள்ளவும் செய்கிறேனா?

இரண்டாவதாக, 'நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்' என எச்சரிக்கிறார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில், பணம், அதிகாரம், மற்றும் ஆள்பலத்தைப் பொருத்தே நீதியின் கரம் உயரவும் தாழவும் செய்தது. தன்னை வலுவற்றவர் என அறிந்த ஒருவர், உடனடியாக எதிரியிடம் சரணடைவது மேல் என்றும், தாமதித்தால் தண்டனையின் கொடுமை அதிகமாகிவிடும். கடைசிக் காசும் என்னிடமிருந்து போய்விடும். 

இதில் மறைமுகமாக இயேசு சொல்வது என்ன? நாம் எல்லாரும் ஏதோ ஓர் ஆட்சியாளரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். செல்லும் வழியில் எந்தவொரு வன்முறையும் வன்மமும் வேண்டாம். நமக்குத் தேவையானதெல்லாம் அமைதியும் சமரசமும்தான்.

இதையொட்டியே, இன்றைய முதல் வாசகத்தில், 'முழுமனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்' என்று எபேசு நகரத் திருஅவைக்கு அறிவுறுத்துகிறார் பவுல்.


1 comment:

  1. Anonymous10/20/2022

    காலத்தை அறிவதற்கு முதலில் தேவை, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற தன்னுணர்வும், நுண்ணுனர்வும். /// இது இரண்டும் இல்லாதோர் சங்கம் சார்பாக வாழ்த்துகள் சாமி..!

    ReplyDelete