அவிலா நகர் தெரசா
அக்டோபர் மாதம் 1ஆம் தேதி, குழந்தை இயேசுவின் தெரசா (சிறுமலர்) திருநாளைக் கொண்டாடும் நாம், இன்று (15 அக்டோபர்) அவிலா நகர் தெரசாவின் திருநாளைக் கொண்டாடுகின்றோம். இவர் திருஅவையின் மறைவல்லுநர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். 'உள்மனக் கோட்டை' (The Interior Castle) என்பது இவரது புகழ்பெற்ற நூல்.
இவரைப் பற்றிய, மற்றும் இவரின் எழுத்துகளில் உள்ள சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறேன்:
1. புத்தக வாசிப்பிற்கு இவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். புத்தகம் வாசிக்காத நாள் தன் வாழ்வில் வீணாய்ப் போன நாள் என அவர் அடிக்கடிக் குறிப்பிடுகிறார். இன்று நாம் நிறைய வாசிக்கிறோம். நிறைய மின்பதிவுகளை வாசிக்கிறோம். ஆனால், அவற்றை விரைவில் மறந்துவிடுகிறோம். புத்தகங்கள் வாசிப்பில் தனியொரு மகிழ்ச்சி இருக்கிறது என்பதே உண்மை. நண்பர் ஒருவர் என்னிடம், 'இ-புக், அமேசான் கின்ட்ல் என வந்துவிட்டது. இனிமேல் யாரும் புத்தகங்கள் வாங்கவும், வாசிக்கவும் மாட்டார்கள். ஆக, புத்தகம் எழுதுவதை நிறுத்திக்கொள்!' என்றார். ஆனால், லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வந்துவிட்டதால் யாரும் படிக்கட்டுகளை இடித்துவிட்டார்களா? அல்லது படிக்கட்டுகள் இல்லாமல் கட்டடங்கள் கட்டப்படுகின்றனவா? புத்தகங்கள் அழிவதில்லை. ஏனெனில், அவை வாசகர்களின் உயிருக்குள் நுழைந்துவிடுகின்றன.
2. 'அந்தாரிகா'
இப்படித்தான் இவர் இஸ்பானிய மொழியில் அழைக்கப்பட்டார். அதாவது, 'நடக்கும் நபர்' அல்லது 'நடக்கும் புனிதை.' இஸ்பானிய நாட்டின் பல பகுதிகளுக்கு நடந்தே சென்றவர். சென்ற இடங்களிலெல்லாம் துறவற இல்லத்தை ஏற்படுத்தியவர். தான் நடக்கும்போது தன்னை அறிந்துகொண்டதாகவும், தன் வலிமையை நடையின் வலுவின்மையில் கண்டார் எனவும் எழுதுகின்றார்.
3. 'உன்னை அறிவதும் உன் மொழி பேசுவதும் செபம்'
அவருடைய சமகாலத்தில் நிறைய இறைவேண்டல்கள் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, நிறுவனமாக்கப்பட்ட வேளையில், தன் சகோதரிகளிடம், 'நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை அறிதலும், உங்கள் மொழியில் உங்கள் உள்ளத்து உணர்வுகளை இறைவனிடம் சொல்வதுமே செபம்' என ஒரு மாற்றுக் கருத்தை முன்வைத்தவர் அவிலா நகர் தெரசா. அவருடைய 'உள்மனக் கோட்டையின்' சாரமும் இதுவே. நம் உள்ளம் ஒரு கோட்டை போன்றது. ஆனால், அந்தக் கோட்டைக்குள் நுழைந்த ஒருவர் அங்கே காணும் புதையல்கள் அதிகம். பல நேரங்களில் நாம் கோட்டையைச் சுற்றிக்கொண்டே இருக்கிறோமே தவிர, அதனுள் நுழைய மறுக்கிறோம் அல்லது தயங்குகிறோம்.
4. சரணாகதி
'ஆண்டவரே! நான் உன்னவள்! நீர் என்னிடம் விரும்புவது என்ன?' - இதுதான் அவருடைய அன்றாட இறைவேண்டல். தான் எடுத்த முடிவு மற்றும் தீர்மானத்தில் நிலைத்து நிற்கும் வலிமை பெற்றவர் அவர்.
5. 'சிங்கமும் எறும்பும்'
தான் சில நேரங்களில் சிங்கம் போல உணர்ந்ததாகவும், சில நேரங்களில் எறும்பு போல உணர்ந்ததாகவும் எழுதுகிறார் தெரசா. ஒரே நேரத்தில் தன் வலிமை மற்றும் வலுவின்மையை ஏற்றுக்கொள்கிறார் அவர். பல நேரங்களில் நாம் நம் எதார்த்தங்களை ஏற்றுக்கொள்ளத் தயங்கி, எறும்பு போல இருந்தாலும் சிங்கம் போல இருப்பதாகத் தற்பெருமை அல்லது இறுமாப்பு கொள்கிறோம். இன்னும் சில நேரங்களில் சிங்கம் போல இருந்தாலும், நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டு எறும்பு போல நினைத்துக்கொள்கிறோம். நம் இரட்டைத் தன்மையை ஏற்று அதைக் கொண்டாடுவது தெரசா தரும் பாடம்.
6. துன்பமும் இன்பமும்
இவர் காட்சித் தியானத்தில் தன்னையே கரைத்து, தன்னைக் கடவுளின் காதலியாக உருவகித்துக் கொண்டவர். ஆனால், காதலின் இன்பம் சிலுவையின் துன்பத்தில் இருக்கிறது என்றவர். இயேசுவின் துன்பங்களில் தன்னை இணைத்துக்கொள்வதில் உள்ள இன்பத்தையே அவருடைய உணர்ச்சிப் பெருக்கு நமக்குக் காட்டுகிறது. துன்பம் என்பது நாம் தப்பிக்க வேண்டிய எதார்த்தம் அல்ல என்கிறார். 'இனிமைமிகு பாடல்' என்னும் விவிலிய நூலின் பின்புலத்தில்தான் இவர் தன் சகோதரிகளுக்கான கொள்கை வரைவை எழுதுகின்றார். தலைவன்-தலைவி உறவில் உள்ள காத்திருத்தல், வலி, ஏக்கம், பிரிவு, சோர்வு ஆகியவை இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவிலும் இருக்கும் என்பது இவருடைய புரிதல்.
திருஅவையின் வல்லுநராக இருக்கும் இவரைக் கொண்டாடும் இந்நாளில், இன்னும் அதிகம் புத்தகங்களை வாசிக்கவும், நம் வாழ்வின் இரட்டைத் தன்மையை ஏற்றுக்கொள்ளவும் முன்வருவோம்.
நம் இருத்தலும் இயக்கமும் இறைவனால், உலகம் தோன்றுவதற்கு முன்பே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதை அறிவதும், அதை வாழ்வாக்குவதும் நம் அன்றாடச் செயல் ஆக வேண்டும்.
நம் உள்மனக் கோட்டைக்குள் நுழைவதே முதல் படி.
தெரசாவின் எழுத்துகளில் என்னை மிகவும் கவர்ந்த கவிதை இது:
'எதுவும் உன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்.
எதுவும் உனக்கு அச்சம் தர வேண்டாம்.
எல்லாம் கடந்து விடும், மாறி விடும்.
கடவுள் ஒருவரே மாறாதவர்.
பொறுமை அனைத்தையும் வெல்லும்.
உன்னிடம் கடவுள் இருந்தால் உனக்குக் குறையொன்றும் இல்லை.
கடவுளே நம் நிறைவு - இன்றும் என்றும்!'
No comments:
Post a Comment