Friday, October 28, 2022

தாழ்ச்சி

இன்றைய (29 அக்டோபர் 2022) நற்செய்தி (லூக் 14:1,7-11)

தாழ்ச்சி

படைப்பின் தொடக்கத்தில், படைப்பின் இரண்டாம் கதையாடலின்படி ஆணும் பெண்ணும் ஆடையின்றி இருக்கின்றனர். ஆனால், அவர்கள் வெட்கப்படவில்லை. விலக்கப்பட்ட கனியை உண்ட பின்னர் அவர்களை வெட்கம் பற்றிக்கொள்கின்றது. அதே இரண்டு நபர்கள்தாம் தோட்டத்தில் இருந்தாலும் அவர்கள் வெட்கப்படுகின்றனர். 'அடுத்தவர் நம்மைப் பார்க்கிறார்' என்ற உணர்வே நமக்கு வெட்கம் தருகிறது. அந்த அடுத்தவர் நம்மைவிடத் தூரமானவராக இருக்கும்போது வெட்கம் குறைகிறது. 

'மதிப்பும் வெட்கமும்' நம் சமூகத் தொடர்பால் நமக்கு வருபவை. 

நான் மட்டும் தனியாக இருக்கும் வீட்டில், யாரும் என்னைக் காணாத தனிமையில் நான் என் மதிப்பு பற்றியும் கவலைப்படுவதில்லை, வெட்கம் பற்றியும் கவலைப்படுவதில்லை. மற்றவர்கள் முன்னர் நான் வரும்போது, அல்லது நான் வீட்டின் கதவுகளைத் திறந்து வெளியே வரும்போது, 'எது மதிப்பு தரும்?' 'எது வெட்கம் தரும்?' என உணர்ந்து அதற்கேற்றாற் போல என் நடை, உடை, இயக்கம் அனைத்தையும் மாற்றிக்கொள்கின்றேன். 

இயேசு பரிசேயரின் இல்லத்தில் உணவருந்தும் நிகழ்வு, தாழ்ச்சி பற்றிய போதனையின் தளமாகவும் அமைகின்றது.

தன் கண்முன்னே விருந்தினர்கள் முதன்மையான இருக்கைகளை நாடி அமர்வதை இயேசு காண்கின்றார். 

முதன்மையான இருக்கையை நாம் தேடுவது ஏன்? 

இருக்கை என்பது இடம் சார்ந்தது. சினிமா தியேட்டரில் நாம் முதன்மையான இருக்கையை நாடுவதில்லை. ஒருவேளை அங்கே எல்லா விளக்குகளும் ஏற்றப்பட்டால் முதன்மையான இருக்கையை நாம் தேடுவோம். தியேட்டரின் இருட்டில், முதன்மை-இறுதி என்பது கிடையாது. எது வசதியாக இருக்கிறதோ அதை மட்டுமே அங்கே நாம் தேடுகின்றோம்.

விருந்து, மற்றும் பொதுவான நிகழ்வுகளில் முதன்மையான இருக்கையை அல்லது பெருமையை நாம் பின்வரும் காரணங்களுக்காகத் தேடுகின்றோம்:

(அ) பெருமை அல்லது முதன்மை உணர்வு

இது இயல்பாக நம்மிடம் எழுகின்ற ஓர் உணர்வு. இந்த உணர்வை நாமாக முயற்சி எடுத்துக் கட்டுப்படுத்தாவிட்டால் அது இன்னும் தன்னை முதன்மைப்படுத்திக்கொள்ளவே விரும்பும். சில மாதங்களுக்கு முன்பாக, கூகுள் மீட் செயலி வழியாகக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ஒருவர், தன் வீடியோ எல்லாத் திரைகளிலும் முதன்மையாகத் தெரியுமா? எனக் கேட்டார். ஆக, காணொலியிலும் நாம் அனைவர்முன்னும் தெரிய வேண்டும் என்றே விரும்புகின்றோம். 

(ஆ) இடம் அல்லது நபர் அல்லது நிலையோடு நம் பெருமையைக் கட்டுவது

இருக்கைக்கும் மதிப்புக்கும் எந்தத் தொடர்பும் அல்ல. மதிப்பு என்பது நம் உள்ளிருந்து புறப்படுவது. மற்றவர்கள் தரும் மதிப்பின்மேல் நான் நாட்டம் கொண்டால், என் மதிப்பை நான் அவர்களிடம் கொடுத்துவிடுகிறேன். ஆனால், மற்றவர் என்முன் எழுந்து நின்றாலும், என்முன் அமர்ந்திருந்தாலும் அவர் என் மதிப்பைக் கூட்டுவதோ, குறைப்பதோ இல்லை என நான் உணர்ந்தால் என் மதிப்பை நான் எனக்குள்ளே காண முடியும்.

(இ) தாழ்த்தப்பட்டுவிடுமோ என அஞ்சுவது

நம் தாழ்ச்சிக்குப் பெரிய தடையாக இருப்பது, 'நான் மற்றவர்கள்முன் தாழ்த்தப்பட்டுவிடுவேனோ?' என்ற அச்சமே. இங்கே மீண்டும் மறுபடியும் நாம் நம் மதிப்பை மற்றவர்களோடு இணைத்தே அறிந்து புரிந்துகொள்கின்றோம்.

இந்த உணர்விலிருந்து நாம் வெளிவர என்ன செய்வது?

'தாழ்ச்சி' என்ற மதிப்பீட்டை அணிந்துகொள்ள இயேசு அழைப்பு விடுக்கின்றார்.

தாழ்ச்சி என்பதை நாம் தாழ்ந்து போதல் என்று புரிந்துகொள்ளக் கூடாது. அதாவது, இன்னொருவர் என்மேல் அதிகாரம் செலுத்த நான் அனுமதிப்பது தாழ்ந்து போதல். அது தாழ்ச்சி அல்ல.

அதே போல, தாழ்ச்சி என்பது மற்றவர்கள் எடுத்தது போக, எனக்குக் கிடைப்பதை நான் எடுத்துக்கொள்வது அல்ல. எனக்கு எது தேவையோ அதை நான் முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் தாழ்ச்சி பார்க்கவே கூடாது. மற்றவர்கள் நம் வாழ்வைத் தீர்மானிக்க அனுமதித்தல் கூடாது.

மேலும், தாழ்ச்சி என்பது அநீதி கண்டு பொறுப்பதும் அல்ல.

தாழ்ச்சி என்ற மதிப்பீட்டை அடைந்த ஒருவர் தன்னை 'ஹ்யூமுஸ்' (களிமண்) – படைப்பின் தொடக்கத்தில் கடவுள் பயன்படுத்தி நம்மை உருவாக்கிய களிமண் - என்ற உணர்கிறார். தன் லேபிள்கள் மற்றும் முத்திரைகள் அனைத்தையும் அகற்றிய நிலைதான் தாழ்ச்சி. இந்த மதிப்பீடு நம் கைவசம் வந்தால், நாம் வெளியிலிருந்து வரும் எல்லா அடையாளங்களையும் கடந்துவிடலாம்.

மற்றும், இந்த நிலையில் நான் மற்றவரையும் அவருடைய அடையாளங்கள் நீக்கிக் கண்டுகொள்வேன். அடையாளங்களும், முத்திரைகளும், லேபிள்களும் பல நேரங்களில் மற்றவரை நம்மிடமிருந்து மறைத்துவிடுகின்றன.

தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர் என்று சொல்லும் வார்த்தைகள், 'மற்றவர்கள் நம்மை உயர்த்துவர்' என்று சொல்வதில்லை. மாறாக, நம் பார்வையிலேயே நாம் உயர்வுபெறுவோம் என்று நமக்கு உணர்த்துகின்றன.


No comments:

Post a Comment