எனக்கு அடுத்திருப்பவர்
இன்றைய நற்செய்தி வாசகம் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம், 'நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்கின்றார். 'திருச்சட்டத்தின்படி செய்யும். நீர் வாழ்வீர்!' எனச் சொல்கின்றார் இயேசு. 'எனக்கு அடுத்திருப்பவர் யார்?' என அவர் மீண்டும் கேட்க, இரண்டாம் பகுதியில், இயேசு ஓர் எடுத்துக்காட்டை முன்மொழிகின்றார்.
'யூதர் யூதருக்கு உதவி செய்ய வேண்டும். ஒரு யூதருக்கு இன்னொரு யூதர்தான் அடுத்திருப்பவர்' என்ற அன்றைய புரிதலை இயேசு மாற்றுகின்றார்.
எருசலேமிலிருந்து எரிகோவுக்கு ஒரு நபர் செல்கின்றார். கள்வர் கையில் அகப்படும் அவர் ஆடைகள் உரியப்படுகின்றார். ஆக, குற்றுயிராய்க் கிடந்தவர் நிர்வாணமாகக் கிடக்கின்றார். அவ்வழியே வருகின்ற யூத குருவும், யூத லேவியரும் அவரைக் காண்கின்றனர். நிர்வாணமாகக் கிடந்த நபர் யூதர் அல்லர் என்பதை விருத்தசேதனத்தின் அடையாளம் கொண்டு அவர்கள் கணித்திருக்கலாம். 'அவர் யூதர் அல்லர்!' என்பதை அறிந்த அவர்கள் தங்கள் வழியே செல்கின்றனர். அவ்வழியே வருகின்ற சமாரியரும் அப்படியே காண்கின்றார். 'அவர் தன் இனத்தவர்' என்று உடனேயே கண்டுகொள்கின்றார். அவர் முதலில் கொள்கின்ற உணர்வு, 'பரிவு' என்று பதிவுசெய்கின்றார் ஆசிரியர். 'அடுத்தவரின் இடத்தில் தன்னை வைத்துப் பார்ப்பதும், நான் அவருக்கு உதவி செய்யவில்லை என்றால் அவருக்கு என்ன ஆகும் எனக் கேட்பதும்தான் பரிவு.' அந்தப் பரிவு அவரை அடுத்தடுத்த செயல்களுக்கு உந்தித் தள்ளுகிறது: 'அணுகினார்,' 'திராட்சையும் எண்ணெயும் வார்த்தார்,' 'காயங்களைக் கட்டினார்,' 'பயணம் செய்த விலங்கின்மேல் ஏற்றினார்,' 'சாவடிக்குக் கொண்டு சென்றார்,' 'இவரைக் கவனித்துக்கொள்ளும் என்று சாவடிக்காரரிடம் அறிவுறுத்தினார். ஆக, சமாரியர் தன் இனத்தவருக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்கிறார்.
இயேசு, இந்த நிகழ்வை எடுத்து, யூதர்கள் சமாரியர்களை விட இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டும் என அறிவுறுத்துகின்றார். அதாவது, அவர் செய்த அனைத்துச் செயல்களையும் செய்வதற்கு குருவுக்கும், லேவியருக்கும் வாய்ப்பு கிடைத்தும் அவர்கள் செய்யவில்லை. ஏனெனில், 'அவர் எனக்கு அடுத்திருப்பவர் அல்லர்!' என்ற புரிதலைக் கொண்டிருக்கின்றனர். ஆக, ஒருவர் சமாரியர் என்றாலும் அவர் எனக்கு அடுத்திருப்பவர் என்று அவர்களுடைய புரிதலைத் திருத்துகின்றார் இயேசு. இவ்வாறாக, யூத நெறி மற்றவர்களுடைய நெறியை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும் என முன்மொழிகின்றார். ஏனெனில், இங்கே கேள்வி, 'அடுத்திருப்பவர் யார்?' என்பதுதான் தவிர, 'காயப்பட்டவருக்கு அன்பு காட்டுவதா? அல்லது வேண்டாமா?' என்பது அல்ல.
சமாரியர், தானே அடுத்திருப்பவராக மாறுகின்றார். இங்கே இயேசு 'அடுத்திருப்பவர் என்றால் என்ன?' என்ற புரிதலைத் தருகின்றார். 'இரக்கம் காட்டுபவரே அடுத்திருப்பவர்!'
ஆக, முதலில் , 'எனக்கு அடுத்திருப்பவர் காயம் பட்டவர்' என்ற நிலையில் சமாரியர் அடுத்திருப்பவருக்கு உதவி செய்கின்றார்.
இரண்டாவதாக, இரக்கம் காட்டுவதன் வழியாக தானே ஓர் அடுத்திருப்பவராக மாறுகின்றார்.
அன்றைய நாளில், யூத-சமாரிய இனப் பாகுபாடு மிகவும் கொடுமையாக இருந்தது.
இதே உவமையை இன்று நாம் நம் மண்ணின் சாதியச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றினால், வழியில் அடிபட்டுக் கிடந்த ஒருவர் தோளில் பூணூல் இல்லாமல் கிடக்கிறார் என வைத்துக்கொள்வோம். அதைக் காண்கின்ற பிராமணரும், வைசியரும், 'இவர் நம் சாதிக்காரர் அல்லர்' என்று கடந்து செல்கின்றனர். அவ்வழியே வருகின்ற சூத்திரர் அல்லது பஞ்சமர், 'இவர் நம்மவராக இருக்குமோ!' என்று சொல்லி உதவி செய்கின்றார். 'சாதியின் மேன்மை என்பது பூணூலில் அல்ல, மாறாக, இரக்கம் காட்டுவதில்தான் உள்ளது. அந்த மனிதர் செய்தது போலச் செய்யுங்கள்' என அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு.
யூதர்கள் தங்கள் இனத்தின் மேன்மை விருத்தசேதனத்தில் இருக்கிறது என நினைத்து, அதை மட்டும் பற்றிக்கொண்டு, தங்கள் திருச்சட்டம் அறிவுறுத்திய பரிவு மற்றும் இரக்கத்தை மறந்துவிட்டதால், இயேசு அவர்களுக்கு மீண்டும் இதை நினைவூட்டுகின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்வது என்ன?
(அ) நாம் அனைவருமே ஒருவர் மற்றவருக்கு அந்நியராகத்தான் இருக்கின்றோம். கள்வருக்கு காயம் பட்டவர் அந்நியம், காயம் பட்டவருக்கு குரு அந்நியர், குருவுக்கு லேவியர் அந்நியர், காயம் பட்டவருக்கு சமாரியர் அந்நியர், சமாரியருக்கு சாவடிக்காரர் அந்நியர். ஆனால், அந்நியர்கள் அடுத்திருப்பவர்களாக மாற வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை மேம்படும். அந்நியத்தன்மை நமக்கு பாதுகாப்பு உணர்வைத் தருவதால், நாம் பல நேரங்களில் அப்படியே இருந்துவிட நினைக்கின்றோம். 'நான் யாரையும் கண்டுகொள்வதில்லை. யார் வம்புக்கும் போவதில்லை!' என்று நாம் ஓய்ந்திருப்பதை சிறப்பு எனக் கருதுகின்றோம். ஆனால், நாம் அருகில் செல்லச் செல்ல உறவு மேம்படுகின்றது. அருகில் செல்வது நமக்கு அறுவறுப்பாகத் தெரியலாம். அடுத்தவரின் நிர்வாணம், காயம், இரத்தம், வியர்வை, துர்நாற்றம் நம் கண்ணில்பட நாம் அவர்களிடமிருந்து பின்வாங்கலாம். ஆனால், அவற்றைப் பொறுத்துக்கொள்பவர் மட்டுமே அடுத்திருப்பவராக மாற வேண்டும். ஆக, இவ்வுலகிற்குள் நாம் அந்நியராக நுழைந்தோம். செல்லும்போதாவது அடுத்திருப்பவர்களாகச் செல்ல முயற்சி செய்யலாமே!
(ஆ) பரிவு. இது ஒரு மேன்மையான உணர்வு. சாலையில் விழுந்து கிடந்த அந்த மனிதர் உச்சகட்டக் கையறுநிலையிலும், நொறுங்குநிலையிலும், வலுவின்மையிலும் இருக்கின்றார். ஆனால், அதையெல்லாம் குருவும், லேவியரும் பொருட்படுத்தவில்லை. 'இவன் என் இனத்தவனா? இல்லையா?' என்ற கேள்வி மட்டுமே அவர்களுடைய இரக்கத்தின் அளவுகோலாக இருந்தது. பல நேரங்களில் பரிவு வெறும் அடையாளங்களுக்குள் சுருங்கிவிடுகிறது. நாம் யாரையாவது சந்திக்கும்போது அவர் நம் சமயத்தவரா? நம் இனத்தவரா? நம் சாதியரா? என்றெல்லாம் நாமும் கேள்விகள் கேட்கின்றோம். சமயம், இனம், சாதியம் தாண்டுவதை நாம் உள்ளார மறுக்கின்றோம். அடுத்தவரின் கையறுநிலை, நொறுங்குநிலை, மற்றும் வலுவின்மையை மட்டும் காண்கின்றவர் மற்ற எந்த அடையாளத்தையும் பொருட்படுத்த மாட்டார். இன்று என் வாழ்வில் பரிவு என்பது எதை மையமாக வைத்து வருகின்றது? 'இவருக்கு இரக்கம் காட்டினால் எனக்கு என்ன கிடைக்கும்?' என்ற நிலையில் பரிவு எழுந்தால், அது சாவடிக்காரரின் வியாபாரமே அன்றி, உண்மையான பரிவு ஆகாது.
(இ) நீரும் போய் அப்படியே செய்யும்!
நிலைவாழ்வு என்பது செயலில் அடங்கியுள்ளது. வெறும் நம்பிக்கை அறிக்கை செய்வதிலோ, அல்லது அருளடையாளக் கொண்டாட்டங்களிலோ நாம் சமயத்தைச் சுருக்கிவிட முடியாது. உண்மையான சமய நெறி, நாம் நம் வீட்டுக்கு வெளியே இருப்பவர்களையும், சாலையில் காண்பவர்களையும் எப்படி அணுகுகிறோம் என்பதில்தான் அடங்கியுள்ளது. சமாரியர் தன் இனத்தவருக்குத்தான் இரக்கம் காட்டினார் என்றாலும், அவருடைய பெருந்தன்மையும் தாராள உள்ளமும் நமக்கு ஆச்சர்யம் தருகின்றது. தன் பயணம் தடைப்பட்டாலும், தனக்கு பொருள்செலவு ஏற்பட்டாலும், தனக்கு இடர்ப்பாடு வந்தாலும் பொறுமையோடு அனைத்தையும் ஏற்றுக்கொள்கின்றார். பொறுமை இழந்துவிட்ட எவரும் பரிவை இழந்து விடுகின்றார். இளைய மகன் எடுத்துக்காட்டில் பொறுமையோடு காத்து நின்ற தந்;தை பரிவு கொள்கின்றார். அவசரமாக வேலைக்குச் சென்ற மூத்த மகனால் பரிவு கொள்ள இயலவில்லை.
No comments:
Post a Comment