Sunday, October 23, 2022

ஆபிரகாமின் மகள்

இன்றைய (24 அக்டோபர் 2022) நற்செய்தி (லூக் 13:10-17)

ஆபிரகாமின் மகள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பதினெட்டு ஆண்டுகளாய் தீய ஆவி பிடித்திருந்த ஒரு பெண்ணுக்கு குணம் தருகின்றார். இயேசுவின் சமகாலத்து யூதர்களுக்கு மூன்று விடயங்கள் இங்கே இடறலாக இருக்கின்றன: (அ) ஓய்வுநாளில் இயேசு நலம் தந்தது, (ஆ) ஓய்வுநாளில் பெண்ணுக்கு நலம் தந்தது, (இ) அப்பெண்ணை 'ஆபிரகாமின் மகள்' என அழைத்தது

இயேசுவின் சமகாலத்து யூதர்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதில் மிகவும் ஓயாமல் இருந்தனர். ஓய்வுநாள் சட்டங்களில் சில விநோதமாக உள்ளவை. 'ஓய்வுநாளில் (சனிக்கிழமை) பெண்கள் கண்ணாடி பார்க்கக் கூடாது' என்று ஒரு சட்டம் இருக்கிறது. ஏனெனில், கண்ணாடியில் தன் முகம் பார்க்கின்ற ஒரு பெண் தன் தலையில் நரைமுடி ஒன்று இருப்பதைக் கண்டு அதைப் பிடுங்குவதற்குத் தன் கையை உயர்த்தினால் அது வேலையாகக் கருதப்பட்டு, அவர் ஓய்வுநாளை மீறியதாகவும் கருதப்படுவார்.

'நலம் தருவது' ஓய்வுநாளில் செய்யக்கூடாது ஒரு செயலாக இருந்தது. மேலும், அவசரத்திற்காக ஓய்வுநாள் சட்டத்தை மீறுவதாக இருந்தாலும், அதை ஒரு பெண்ணுக்காக மீறுவது இன்னும் இடறலாகக் கருதப்பட்டது. '18 ஆண்டுகள் பொறுத்துக்கொண்டாள். இன்னும் ஒரு நாள் பொறுக்க மாட்டாளா?' என்பதுதான் மற்றவர்களின் கேள்வியாக இருக்கிறது. ஆனால், இயேசு அவர்களின் வெளிவேடத்தைக் கடிந்துகொள்கின்றார். மாடு, கழுதை போன்றவற்றிற்கே தேவையானதை ஓய்வுநாளில் செய்வதுபோல மனிதர்களுக்குச் செய்யக்கூடாதா? எனக் கேட்கின்றார். இன்னும் ஒரு படி போய், அப்பெண்ணை, 'ஆபிரகாமின் மகள்' என அழைக்கிறார் இயேசு.

'ஆபிரகாமின் மகன்' என்ற சொல்லாடல் இயேசுவால் சக்கேயுவைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது: 'இவரும் ஆபிரகாமின் மகன்தானே!' (காண். லூக் 19:9). மேலும், யோவான் நற்செய்தியில் இயேசுவுக்கும் யூதர்களுக்குமான வார்த்தைப் போரில் 'ஆபிரகாமின் மக்கள் அல்லது பிள்ளைகள்' என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது: 'அவர்கள் அவரைப் பார்த்து, 'ஆபிரகாமே எங்கள் தந்தை' என்றார்கள். இயேசு அவர்களிடம், 'நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போல செயல்படுவீர்கள்' என்றார்.' (யோவா 8:39)

'ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு  ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான்' என்ற இயேசுவின் வார்த்தைகள், 'ஆபிரகாமின் பிள்ளைகள்' யாருக்கும் அடிமைகளாக இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கிறது. 'அடிமையாக' இருப்பவர்களைத்தான் கயிற்றால் அல்லது சங்கிலியால் கட்டி வைத்திருப்பார்கள். மேலும், அடிமையாக இருந்த இந்தப் பெண் 'கூன் விழுந்த நிலைக்குப் போய்விடுகின்றார்.' கூன் விழுந்தால் நம் பார்வை சுருங்கிவிடும். 'இவ்வளவுதான் உலகம்' என நினைக்க ஆரம்பித்துவிடுவோம். ஆனால், இயேசு நலம் தந்தவுடன் அனைவரையும் அனைத்தையும் நிமிர்ந்து பார்க்கிறார். மேலும், 'நிமிர்தல்' தன்மானத்தின், கட்டின்மையின் அடையாளமாகவும் இருக்கிறது.

தொழுகைக் கூடத் தலைவர், 'வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே. அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக்கொள்ளுங்கள்' என்று கடிந்து கொள்கின்றார். இவ்வார்த்தைகளுக்கு இயேசு பதிலிறுப்பு செய்கின்றார். தன்னை எதிர்த்த அனைவரையும் வெட்கமுறச் செய்கின்றார்.

'ஆறு நாள்களில் செய்திருக்கலாமே?' எனக் கேட்கின்றார் தொழுகைக்கூடத் தலைவர். ஆனால், 18 நாள்களாக அல்ல, மாறாக, 18 ஆண்டுகளாக ஒரு பெண் அங்கேயே உடல் நலமில்லாமல் இருக்கின்றார். எத்தனை 6 நாள்கள் கடந்து போயிருக்கும்? யாரும் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை! 

(அ) கைகளை வைத்து

இயேசு முதலில் தன் சொல்லாலும் தொடர்ந்து, கைகளை அவர்மீது வைக்கும் தன் செயலாலும் அவருக்கு நலம் தருகின்றார். இதுவும் ஓய்வுநாள் மீறலாகக் கருதப்பட்டது.

(ஆ) இரட்டை வேடம்

ஓய்வுநாள் சட்டம் பற்றிப் பேசுகின்ற இயேசுவின் எதிராளிகள் தாங்களே ஓய்வுநாள் சட்டத்தை மீறி, மாட்டையும் கழுதையையும் தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டு போய் தண்ணீர் காட்டுகின்றனர். அவர்களின் இரட்டை வேடத்தைச் சுட்டிக்காட்டுகின்றார் இயேசு.

இந்த இறைவாக்குப் பகுதி நமக்குச் சொல்லும் பாடங்கள் இரண்டு:

(அ) நீண்ட நாள்களாக அல்லது ஆண்டுகளாக நாம் நம்மிலேயே வைத்துக்கொண்டிருக்கும் தீய ஆவி அல்லது தீய செயல் என்ன? அந்தப் பெண்ணிடம் இருந்த தீய ஆவி தொழுகைக்கூடத்திற்கு 18 ஆண்டுகளாக வருகின்றது. ஆனால், அதன் இருப்பு பற்றி யாரும் கவலைப்படவே இல்லை.

(ஆ) எனக்கு அடுத்திருப்பவரின் வாழ்க்கையில் கடவுள் நற்காரியங்களைச் செய்யும்போது என் பதிலிறுப்பு என்ன? தொழுகைக்கூடத் தலைவர்போல எரிச்சல் அல்லது கோபம் கொள்கிறேனா? அல்லது கூடியிருந்த மக்கள் கூட்டத்தினர்போல மகிழ்ந்து ஆர்ப்பரிக்கின்றேனா?


No comments:

Post a Comment