Monday, October 31, 2022

அருளின் கனியே புனிதம்

இன்றைய (1 நவம்பர் 2022) திருநாள்

புனிதர் அனைவர் பெருவிழா

திருவெளிப்பாடு 7:2-4,9-14 1 யோவான் 3:1-3 மத்தேயு 5:1-12

அருளின் கனியே புனிதம்

இன்று புனிதர் அனைவர் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம். பயணம் செய்யும் திருஅவை, மகிமை பெற்ற திருஅவை, துன்புறும் திருஅவை என்னும் நம் திருஅவையின் மூன்று நிலைகளில் இரண்டாம் நிலையின் திருநாள் இது. இவர்கள் தூய்மை அல்லது புனித நிலையை அடைந்தவர்கள்? 'நான் ஒருவரே தூயவர்' என்று கடவுள் சொல்ல, தூய்மை அல்லது புனிதம் என்பது கடவுளின் பண்பு என வரையறுக்கப்பட்டிருக்க, 'மனிதர்களாகிய' நாம் புனித நிலையை அடைய முடியுமா? அல்லது சிலர் சொல்வது போல, 'மனிதமே புனிதமா'?

மனிதப் புனிதம் அல்லது தூய்மை என்பது கடவுளின் அருளுக்கு நாம் செய்யும் தொடர் பதிலிறுப்பு எனவும், அவரின் அருளைப் பெற்ற நாம் அவருக்குக் கொடுக்கும் கனிகள் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.

ஒரு சிறிய உருவகத்தோடு தொடங்குவோம். பள்ளிக்கூடத்திற்குக் குழந்தைகள் வருவதைப் பார்த்திருக்கிறீர்களா? குழந்தைகள் வரும் நிகழ்வை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: (அ) சில குழந்தைகளை அவர்களுடைய அம்மா, அல்லது அப்பா, அல்லது ஆட்டோக்காரர் கொண்டு வந்து விடுவார், (ஆ) சில குழந்தைகள் வீட்டிலிருந்து நடந்து வருவார்கள், (இ) சில குழந்தைகள் அப்பா வாங்கிக் கொடுத்த சைக்கிளை ஓட்டிக்கொண்டோ, அல்லது அப்பா தந்த பணத்தைக் கொண்டு பொதுப் போக்குவரத்திலோ வருவர். முதல் வகை குழந்தைகளுக்கு எல்லாமே அவர்களது பெற்றோரால் கொடுக்கப்பட்டுவிடுகிறது. அவர்களது வேலையெல்லாம் படிப்பதும், பெற்றோரின் எதிர்பார்ப்பின்படி நடப்பதும்தான். இதே போல, கடவுள் சிலருக்கு அவர்களது பிறப்பிலேயே புனிதத்தைக் கொடுத்துவிடுகிறார். புனிதம் என்பது இவர்களுக்குக் கடவுள் கொடுத்த கொடை. எடுத்துக்காட்டாக, அன்னை கன்னி மரியாள். இரண்டாம் வகைக் குழந்தைகள் தாங்களே நடந்து செல்ல வேண்டும். முதுகில் சுமை, வயிற்றில் பசி, பள்ளி மணி ஒலிக்கும் அவசரம் எனக் குழந்தைகள் நடந்து செல்ல வேண்டும். சில குழந்தைகள் பள்ளிவரை செல்லும், சில குழந்தைகள் வழியில் யாரிடமாவது லிஃப்ட் கேட்கும், சில குழந்தைகள் தங்களால் இயலாது என்று பாதி வழி நின்றுவிடும். இத்தகைய மனிதர்கள் புனிதத்தை அடையப் போராடுபவர்கள். ஏறக்குறைய புனித நிலையை அடைபவர்கள். இவர்களுக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படும். இவர்கள்தாம் உத்தரிக்கிற நிலை ஆன்மாக்கள் அல்லது துன்புறும் திருஅவையின் உறுப்பினர்கள். மூன்றாவதாக உள்ள குழந்தைகள், தங்கள் பெற்றோர் கொடுத்த அருள் என்னும் மிதிவண்டியைப் பயன்படுத்துவதுடன், தாங்களே மிதித்து பள்ளிக்கு வருவார்கள். இவ்வகை மனிதர்கள், கடவுளின் அருள் அல்லது அழைப்பைத் தங்கள் வாழ்வில் ஏற்று, அதற்கேற்ற பதிலிறுப்பு செய்து, தங்கள் வாழ்விலும் வாழ்வாலும் கனி தந்தவர்கள். இம்மூன்றாம் வகை மனிதர்களைத்தான், அவர்கள் அடைந்த புனித நிலையைத்தான், இன்றைய நாளில் 'புனிதர் அனைவர் பெருவிழாவில்' கொண்டாடி மகிழ்கிறோம். பள்ளிக்குள் வந்துவிட்டால் அனைத்துக் குழந்தைகளும் ஒன்றென ஆகிவிடுகிறார்கள். அது போல, இறைவனின் திருமுன்னிலையில் அனைத்துப் புனிதர்களும் ஒன்றென ஆகிவிடுகின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திவெ 7:2-4,9-14), திருவெளிப்பாடு நூல், கடவுளின் புனித மக்கள் பற்றிய வியத்தகு காட்சியை நம்முன் கொண்டுவருகிறது. கடவுளின் புனித மக்கள் இரு குழுவினர்களாக இருக்கின்றனர். முதல் காட்சியில், அல்லது முதல் குழுவில் உள்ளவர்கள் 'முத்திரையிடப்பட்டவர்கள்.' முத்திரை என்பது ஒருவருக்கு அது உடைமை என்பதையும், ஒருவர் அதன்மேல் உரிமை கொண்டாடுகிறார் என்பதையும் குறிக்கிறது. 144 ஆயிரம் மக்கள் அவ்வாறு முத்திரையிடப்பட்டுள்ளதாக யோவான் காண்கிறார். முத்திரையிடப்பட்ட இவர்கள் அனைவரும் கடவுளின் மக்கள். இங்கே, '144' என்பது ஓர் உருவக அல்லது அடையாள எண். இஸ்ரயேலின் 12 குலங்களும், அவற்றின் வழி மரபுகளாக 12 ஆயிரம் மக்களின் பெருக்கல் தொகையே 144 ஆயிரம் (காண். திவெ 7:5-8). இந்த முதல் குழு இஸ்ரயேல் மக்களைக் குறிக்கின்றது. இந்த மக்களையே கடவுள் தன் சொந்த மக்களினமாகத் தெரிந்தெடுத்து, தனக்குப் பணி செய்யவும், தன் செய்தியை அனைத்துலக்குக்கும் அறிவிக்கவும் பணித்தார் (காண். விப 19:5-6).

இரண்டாம் குழுவினர் 'வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்கள்.' இவர்கள், 'கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள். தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக் குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.' இவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள், கிறிஸ்துவுக்காகத் துன்பம் ஏற்றவர்கள். அவர்களின் வெண்ணிற ஆடை தூய்மை மற்றும் வெற்றியைக் குறிக்கிறது. கிறிஸ்துவைப் போல அவர்கள் இருந்ததால் அவர்கள் செம்மறியின் விருந்தில் பங்கேற்கின்றனர். அவர்கள் இப்போது அனுபவிக்கும் புனிதம் அல்லது தூய்மை என்பது கடவுள் அவர்களுக்கு அளித்த கொடை. இஸ்ரயேல் மக்கள் கடவுளால் முத்திரையிடப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் அனைவரும் பாஸ்காச் செம்மறியின் இறப்பால் புனிதப்படுத்தப்படுகின்றனர்.

புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் வாசகம் (காண். 1 யோவா 3:1-3), கடவுளின் அன்பு மற்றும் அன்பின் விளைவுகள் பற்றிச் சிந்திக்கும் அழைப்போடு தொடங்குகிறது. யோவானின் குழுமத்தினர் கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்றதால் துன்புறுகின்றனர். ஆனால், அத்துன்பம் தற்காலிகமானது என்றும், நம்பிக்கையாளர்களின் நோக்கம் தூய்மையை அடைவது என்றும் அறிவுறுத்துகின்றார் யோவான்.

நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 5:1-12), மத்தேயு நற்செய்தியில் காணும் மலைப்பொழிவின் தொடக்கப் பகுதியை வாசிக்கின்றோம். எட்டு பேறுபெற்ற நிலைகள் இங்கே முன்வைக்கப்படுகின்றன. இவற்றின் நோக்கம் கடவுளின் ஆசீரை நமக்கு வழங்குவதும், அதன் வழியாக நம்மைப் புனிதத்துக்கு இட்டுச் செல்வதுமே.

முதல் நான்கு பேறுபெற்ற நிலைகள் நம்பிக்கையாளரைக் கடவுளோடும், இரண்டாவது நான்கு பேறுபெற்ற நிலைகள் நம்பிக்கையாளர்களை ஒருவர் மற்றவரோடும் இணைக்கின்றன. முதலில், 'ஆன்மீக ஏழ்மை அல்லது எளிமை' முன்வைக்கப்படுகிறது. இது ஒருவர் கடவுள்மேல் கொண்டுள்ள சார்புநிலையைக் குறிக்கிறது. இரண்டாவது, துயருறுவோர் பற்றியது. துயரம் கடவுள் தரும் மீட்பை முன்குறிக்கிறது. மூன்றாவது பேறுபெற்ற நிலை திபா 37:11இலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கனிவுடையோர் நாட்டை உரிமையாக்கிக்கொள்கின்றனர். நாடு என்பது கடவுள் அளிக்கும் கொடை. நான்காவது, நீதிக்கான ஏக்கம் கொள்வோர் பெறும் நிறைவை எடுத்துச் சொல்கிறது. நீதி என்பது கடவுளோடும், ஒருவர் மற்றவரோடும் ஒருவர் ஏற்படுத்திக்கொள்ளும் சரியான உறவுநிலையைக் குறிக்கிறது. ஐந்தாவது, இரக்கம் காட்டுபவர் இரக்கம் பெறுவார். இரக்கம் என்பது ஒருவர் மற்றவர்மேல் காட்டும் உடல் மற்றும் உள்ளம்சார் அன்பைக் குறிக்கிறது. ஆறாவதாக, தூய்மையான உள்ளம் என்பது ஒருவரின் நாணயத்தையும், நம்பகத்தன்மையையும் காட்டுகிறது. உறவுகளில் தூய்மையாக இருக்கும் இவர்கள் கடவுளின் திருமுன்னிலை நோக்கி ஈர்க்கப்படுவார்கள், ஏனெனில், கடவுள் தூயவராக இருக்கிறார். ஏழாவது, அமைதியை ஏற்படுத்துவது. அமைதி என்பது ஒருங்கிணைந்த இசைவு நிலை. அந்த இசைவு நிலையில் ஒருவர் இந்த உலகத்தோடு தான் கொண்டுள்ள இணைப்பைக் கண்டுணர்கிறார். எட்டாவது பேறுபெற்ற நிலை, நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுபவர் பற்றிப் பேசுகிறது. இவர்கள் கடவுளுக்குப் பிரமாணிக்கமாய் இருப்பதால், கடவுளின் அரசில் பங்கேற்கின்றனர்.

நற்செய்தி வாசகத்தின் இறுதிப் பகுதி, 'மகிழ்ந்து அக்களியுங்கள்' என்ற வாழ்த்தோடு நிறைவுறுகிறது. இந்த வார்த்தைகளைக் கொண்டே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதம் பற்றிய திருத்தூது ஊக்கவுரையை (2018) எழுதுகின்றார்.

ஆக, முதல் வாசகத்தில், கடவுளின் அருளை அனுபவித்தவர்கள் அவருக்காக மறைசாட்சியம் ஏற்றதால் கனி தருகின்றனர்.

இரண்டாம் வாசகத்தில், புனிதம் என்பது நாம் அடைய வேண்டிய இலக்காக வரையறுக்கப்படுகின்றது.

நற்செய்தி வாசகம், பேறுபெற்ற நிலைகளை முன்வைப்பதுடன், மகிழ்ச்சிக்கான இயேசுவின் அழைப்பே புனிதத்தின் தொடக்கம் என முன்வைக்கிறது.

பதிலுரைப் பாடல் ஆசிரியரும், இதையொட்டி, 'ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே' (காண். திபா 24) துள்ளிக் குதிக்கின்றார். 

இறுதியாக,

புனிதர்கள் வானத்திலிருந்து கீழே குதித்தவர்கள் அல்லர். மாறாக, நம்மைப் போல வாழ்ந்து, நமக்கு முன் கடந்து சென்றவர்கள். இங்கு செய்யப்பட்டு அங்கே ஏற்றுமதி செய்யப்படுபவர்கள் இவர்கள். தாங்கள் பெற்ற அருளுக்கு ஏற்ற கனிகள் தருபவர்கள் இவர்கள். இவர்கள் விழுந்தாலும் எழுபவர்கள். புனித மரிய வியான்னி சொல்வது போல, 'புனிதர்கள் சரியாகத் தொடங்கவில்லை என்றாலும், மிகச் சரியாக முடித்தார்கள்.' நாம் அனைவரும் சரியாக, நல்லதாக முடிக்க முடியும். புனிதம் என்பது நாம் மேற்கொள்ள வேண்டிய தெரிவு. அந்தத் தெரிவின்மேல் கொள்ள வேண்டிய மனவுறுதி.

மதிப்பற்றவை நீண்ட நாள்கள் நீடிப்பதில்லை. மதிப்பு மிக்கவை என்றும் நீடிக்கின்றன.

அன்றாட தெரிவுகள் தெளிவானால், புனிதம் என்பது உணர்வு அல்லது செயல் என்பது தெளிவானால், நாமும் புனிதர்களே.


Sunday, October 30, 2022

கைம்மாறு

இன்றைய (31 அக்டோபர் 2022) நற்செய்தி (லூக் 14:12-14)

கைம்மாறு

இயேசு இன்னும் விருந்து நடக்கும் இடத்தில்தான் இருக்கிறார். இதற்கு முந்தைய நற்செய்திப் பகுதியில் (லூக் 14:1,7-11) விருந்தினர்களிடம் பேசிய இயேசு, இன்றைய நற்செய்திப் பகுதியில் விருந்துக்கு அழைத்தவரிடம் பேசுகின்றார். இன்றைய விருந்துகள் தங்களின் பொருளை இழந்துகொண்டே வருகின்றன என்பது கண்கூடு. 'என்னால் எவ்வளவு முடியும் பார்!' என்று மற்றவரைக் கூப்பிட்டுக் காட்டுவதாகவும், விருந்திற்கு வருபவர்களும், 'என்னிடமும் நிறைய உள்ளது' என்று காட்டுவது போலவும் இருக்கிறது. வருகின்ற விருந்தினர்களுக்கு விருந்து வைத்து அனுப்புவதோடு அல்லாமல், இப்போது 'ரிட்டர்ன்' கிஃப்ட் என்ற ஒன்றும் பிரசித்தியாக உள்ளது. அதாவது, வருகின்ற விருந்தினர்களின் பிரசன்னத்தையும், அவர்கள் கொண்டுவரும் அன்பளிப்புக்களையும் திரும்பச் செலுத்தும்விதமாக இப்போது ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்கிறோம். இதன் பொருள் என்ன? 'நானும் உனக்குக் கடன் பட்டவர் அல்லர். நீயும் எனக்குக் கடன் பட்டவர் அல்லர். நீ கொடுத்ததை நான் உனக்கு கை மாற்றிவிட்டேன்' என்பதுதான். இவ்வாறாக, ஒருவர் கொடுத்ததை நாம் நம் கைகளால் வாங்கி, அதே கைகளில் வேறொன்றைக் கொடுத்து விடுகிறோம். இதுதான் கைம்மாறு.

யாரையெல்லாம் விருந்துக்கு அழைக்கக்கூடாது, விருந்துக்கு அழைக்க வேண்டும் என்று சொல்கின்ற இயேசு, 'நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றவரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்கு கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை' என்கிறார். இதை ஒருவேளை ஏழையோ, அநாதையோ, கால் ஊனமுற்றவரோ, அல்லது பார்வையற்றவரோ வாசித்தால் அல்லது கேட்டால் அவருடைய மனம் எப்படி பதைபதைக்கும்? ஏன் அவர்களிடம் கைம்மாறு செய்ய ஒன்றுமே இல்லையா? பொருளால் செய்வதுதான் கைம்மாறா? அன்பால், உடனிருப்பால் செய்வது கைம்மாறு ஆகாதா? இன்றைய நாளில் கால் ஊனமுற்றவர் அல்லது பார்வையற்றவர் செல்வத்தில் உயர்ந்த நிலையில் இல்லையா? 

நிற்க.

ஆனால், இயேசுவின் காலத்தில் நிலை அப்படி அல்ல. ஏழைகளும், உடல் ஊனமுற்றவர்களும், அநாதைகளும், கைம்பெண்களும் சமூகத்தின் சாபங்களாகக் கருதப்பட்டனர். இன்றைய நம் அரசியல் சூழல்கூட, ஏழ்மையைக் களைவதற்குப் பதிலாக, ஏழையரையே ஒட்டுமொத்தமாகக் களைய மெனக்கெடுவதுபோலத்தான் இருக்கிறது.

இயேசுவின் சமகாலத்தில் விருந்தோம்பல் என்பது ஒருவரின் சமூக அந்தஸ்தை மற்றவர்களுக்குக் காட்டி பெருமை கொள்ளவும், அல்லது மற்றவர்களைவிட தான் உயர்ந்தவர் என்று பெருமிதம் கொள்ளவும், அல்லது இல்லாதவர்களை அவமானப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகவும் இருந்தது. மேலும், விருந்தோம்பல் செய்பவர் கைம்மாறு கருதியே விருந்தோம்பல் செய்தார். இந்த நிலையில் விருந்தோம்பல் பற்றிப் பேசுகிற இயேசு ஏழைகளால் விருந்தோம்பல் செய்ய முடியாது என்று சொன்னாலும், கடவுள் அவர்கள் சார்பாக விருந்தோம்பல் செய்வார் என்று சொல்வதன் வழியாக அவர்கள் கடவுளின் கண்மணிகள் என்றும், கடவுளின் பார்வையில் உயர்ந்தவர்கள் என்றும் சொல்லி அவர்களுடைய சமூக நிலையை உயர்த்துகின்றார்.

இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லும் பாடம் எவை?

அ. நான் அனைத்திலும் கைம்மாறு செய்ய நினைப்பது தவறு. ஏனெனில், கடவுளிடமிருந்து நான் பெற்ற கொடைகளுக்கு நான் ஒருபோதும் கைம்மாறு செய்ய முடியாது. அதுபோல, தாயின் அன்பு, தந்தையின் தியாகம், உடன்பிறப்புக்களின் உடனிருப்பு, தோழர்களின் தோழமை போன்றவற்றிற்கு நான் ஒருபோதும் கைம்மாறு செய்யவே முடியாது. கைம்மாறு செய்வதைப் பற்றி நான் யோசிக்கும்போது கணக்குப் பார்ப்பவனாக மாறிவிடுகிறேன். இன்று என் வாழ்வில் கடவுள் இனியவர்கள் பலர் வழியாக ஆற்றிய செயல்களை நாம் பட்டியல் இடுவோமா? கைம்மாறு செய்ய முடியாத இந்நிலையில் அவர்களை நான் கடவுளின் கொடையாக ஏற்றுக்கொள்கிறேனா?

ஆ. விருந்து கொடுப்பவரை மனிதர் நிலையிலிருந்து கடவுள் நிலைக்கு உயர்த்துகிறார் இயேசு. திரும்ப விருந்து கொடுக்க முடிபவர்களை நாம் விருந்துக்கு அழைக்கும்போது நாம் மனிதர் நிலையில் இருக்கிறோம்.திரும்ப விருந்து கொடுக்க முடியாதவர்களை நாம் அழைக்கும்போது நாம் கடவுள் நிலையில் இருக்கிறோம்.மேலும், கடவுள் செய்யும் செயல்களுக்கு நாம் கைம்மாறு செய்ய முடியாது. அதுபோல, அடுத்தவர்கள் நமக்கு கைம்மாறு செய்ய முடியாத நிலையில் நாமும் கடவுளாகத்தான் இருக்கிறோம். பிறரைப் பார்க்கும் என்னுடைய பார்வை எப்படி இருக்கிறது? ஒருவரின் அடையாளங்களைக் கடந்து என்னால் பார்க்க முடிகிறதா? நான் பார்க்கும் ஒருவரில் என்னுடைய வலுவின்மையையும் நொறுங்கிநிலையையும் நான் அனுபவிக்க முடிகிறதா?

இ. இன்றைய முதல் வாசகத்தில் (பிலி 2:1-4) பவுலடியாரும், 'நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்' என்கிறார். தன்மையம் கைம்மாறு கருதும். பிறர்மையம் கருதாது.


Friday, October 28, 2022

தாழ்ச்சி

இன்றைய (29 அக்டோபர் 2022) நற்செய்தி (லூக் 14:1,7-11)

தாழ்ச்சி

படைப்பின் தொடக்கத்தில், படைப்பின் இரண்டாம் கதையாடலின்படி ஆணும் பெண்ணும் ஆடையின்றி இருக்கின்றனர். ஆனால், அவர்கள் வெட்கப்படவில்லை. விலக்கப்பட்ட கனியை உண்ட பின்னர் அவர்களை வெட்கம் பற்றிக்கொள்கின்றது. அதே இரண்டு நபர்கள்தாம் தோட்டத்தில் இருந்தாலும் அவர்கள் வெட்கப்படுகின்றனர். 'அடுத்தவர் நம்மைப் பார்க்கிறார்' என்ற உணர்வே நமக்கு வெட்கம் தருகிறது. அந்த அடுத்தவர் நம்மைவிடத் தூரமானவராக இருக்கும்போது வெட்கம் குறைகிறது. 

'மதிப்பும் வெட்கமும்' நம் சமூகத் தொடர்பால் நமக்கு வருபவை. 

நான் மட்டும் தனியாக இருக்கும் வீட்டில், யாரும் என்னைக் காணாத தனிமையில் நான் என் மதிப்பு பற்றியும் கவலைப்படுவதில்லை, வெட்கம் பற்றியும் கவலைப்படுவதில்லை. மற்றவர்கள் முன்னர் நான் வரும்போது, அல்லது நான் வீட்டின் கதவுகளைத் திறந்து வெளியே வரும்போது, 'எது மதிப்பு தரும்?' 'எது வெட்கம் தரும்?' என உணர்ந்து அதற்கேற்றாற் போல என் நடை, உடை, இயக்கம் அனைத்தையும் மாற்றிக்கொள்கின்றேன். 

இயேசு பரிசேயரின் இல்லத்தில் உணவருந்தும் நிகழ்வு, தாழ்ச்சி பற்றிய போதனையின் தளமாகவும் அமைகின்றது.

தன் கண்முன்னே விருந்தினர்கள் முதன்மையான இருக்கைகளை நாடி அமர்வதை இயேசு காண்கின்றார். 

முதன்மையான இருக்கையை நாம் தேடுவது ஏன்? 

இருக்கை என்பது இடம் சார்ந்தது. சினிமா தியேட்டரில் நாம் முதன்மையான இருக்கையை நாடுவதில்லை. ஒருவேளை அங்கே எல்லா விளக்குகளும் ஏற்றப்பட்டால் முதன்மையான இருக்கையை நாம் தேடுவோம். தியேட்டரின் இருட்டில், முதன்மை-இறுதி என்பது கிடையாது. எது வசதியாக இருக்கிறதோ அதை மட்டுமே அங்கே நாம் தேடுகின்றோம்.

விருந்து, மற்றும் பொதுவான நிகழ்வுகளில் முதன்மையான இருக்கையை அல்லது பெருமையை நாம் பின்வரும் காரணங்களுக்காகத் தேடுகின்றோம்:

(அ) பெருமை அல்லது முதன்மை உணர்வு

இது இயல்பாக நம்மிடம் எழுகின்ற ஓர் உணர்வு. இந்த உணர்வை நாமாக முயற்சி எடுத்துக் கட்டுப்படுத்தாவிட்டால் அது இன்னும் தன்னை முதன்மைப்படுத்திக்கொள்ளவே விரும்பும். சில மாதங்களுக்கு முன்பாக, கூகுள் மீட் செயலி வழியாகக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ஒருவர், தன் வீடியோ எல்லாத் திரைகளிலும் முதன்மையாகத் தெரியுமா? எனக் கேட்டார். ஆக, காணொலியிலும் நாம் அனைவர்முன்னும் தெரிய வேண்டும் என்றே விரும்புகின்றோம். 

(ஆ) இடம் அல்லது நபர் அல்லது நிலையோடு நம் பெருமையைக் கட்டுவது

இருக்கைக்கும் மதிப்புக்கும் எந்தத் தொடர்பும் அல்ல. மதிப்பு என்பது நம் உள்ளிருந்து புறப்படுவது. மற்றவர்கள் தரும் மதிப்பின்மேல் நான் நாட்டம் கொண்டால், என் மதிப்பை நான் அவர்களிடம் கொடுத்துவிடுகிறேன். ஆனால், மற்றவர் என்முன் எழுந்து நின்றாலும், என்முன் அமர்ந்திருந்தாலும் அவர் என் மதிப்பைக் கூட்டுவதோ, குறைப்பதோ இல்லை என நான் உணர்ந்தால் என் மதிப்பை நான் எனக்குள்ளே காண முடியும்.

(இ) தாழ்த்தப்பட்டுவிடுமோ என அஞ்சுவது

நம் தாழ்ச்சிக்குப் பெரிய தடையாக இருப்பது, 'நான் மற்றவர்கள்முன் தாழ்த்தப்பட்டுவிடுவேனோ?' என்ற அச்சமே. இங்கே மீண்டும் மறுபடியும் நாம் நம் மதிப்பை மற்றவர்களோடு இணைத்தே அறிந்து புரிந்துகொள்கின்றோம்.

இந்த உணர்விலிருந்து நாம் வெளிவர என்ன செய்வது?

'தாழ்ச்சி' என்ற மதிப்பீட்டை அணிந்துகொள்ள இயேசு அழைப்பு விடுக்கின்றார்.

தாழ்ச்சி என்பதை நாம் தாழ்ந்து போதல் என்று புரிந்துகொள்ளக் கூடாது. அதாவது, இன்னொருவர் என்மேல் அதிகாரம் செலுத்த நான் அனுமதிப்பது தாழ்ந்து போதல். அது தாழ்ச்சி அல்ல.

அதே போல, தாழ்ச்சி என்பது மற்றவர்கள் எடுத்தது போக, எனக்குக் கிடைப்பதை நான் எடுத்துக்கொள்வது அல்ல. எனக்கு எது தேவையோ அதை நான் முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் தாழ்ச்சி பார்க்கவே கூடாது. மற்றவர்கள் நம் வாழ்வைத் தீர்மானிக்க அனுமதித்தல் கூடாது.

மேலும், தாழ்ச்சி என்பது அநீதி கண்டு பொறுப்பதும் அல்ல.

தாழ்ச்சி என்ற மதிப்பீட்டை அடைந்த ஒருவர் தன்னை 'ஹ்யூமுஸ்' (களிமண்) – படைப்பின் தொடக்கத்தில் கடவுள் பயன்படுத்தி நம்மை உருவாக்கிய களிமண் - என்ற உணர்கிறார். தன் லேபிள்கள் மற்றும் முத்திரைகள் அனைத்தையும் அகற்றிய நிலைதான் தாழ்ச்சி. இந்த மதிப்பீடு நம் கைவசம் வந்தால், நாம் வெளியிலிருந்து வரும் எல்லா அடையாளங்களையும் கடந்துவிடலாம்.

மற்றும், இந்த நிலையில் நான் மற்றவரையும் அவருடைய அடையாளங்கள் நீக்கிக் கண்டுகொள்வேன். அடையாளங்களும், முத்திரைகளும், லேபிள்களும் பல நேரங்களில் மற்றவரை நம்மிடமிருந்து மறைத்துவிடுகின்றன.

தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர் என்று சொல்லும் வார்த்தைகள், 'மற்றவர்கள் நம்மை உயர்த்துவர்' என்று சொல்வதில்லை. மாறாக, நம் பார்வையிலேயே நாம் உயர்வுபெறுவோம் என்று நமக்கு உணர்த்துகின்றன.


Thursday, October 27, 2022

புனித சீமோன், யூதா

இன்றைய (28 அக்டோபர் 2022) திருநாள்

புனித சீமோன், யூதா

இன்று நம் தாய்த்திருச்சபை திருத்தூதர்களும் புனிதர்களுமான சீமோன், யூதா திருநாளைக் கொண்டாடுகிறது. 'தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா அல்லது ததேயு' என்று இவர்களை அழைக்கின்றார் லூக்கா. சீமோனை மையமாக வைத்த பக்தி முயற்சிகள் அதிக அளவில் இல்லை. ஆனால், அன்னை மரியாள், அந்தோனியார்க்கு அடுத்த நிலையில் உலகெங்கும் அதிக பக்தர்களை ஈர்க்கக்கூடியவர் யூதா ததேயு எனலாம். 'கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலர்' அல்லது 'கையறுநிலையின் பாதுகாவலர்' இவர். இவர் இயேசுவின் உறவினர் என்பதும், கானாவூரில் இயேசு தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றிய நிகழ்வு நடந்தது இவருடைய திருமணத்தில்தான் என்பதும் மரபுவழிச் செய்தி. நான் உரோமையில் என் படிப்பிற்காகச் சென்றிருந்தபோது எனக்கு அடைக்கலம் தந்தது புனித யூதா ததேயு பங்குத்தளம்தான். இன்று அந்தப் பங்குத்தளத்தின் திருநாள். கையின் இடுக்கில் ஒரு பெரிய கட்டையும், இடுப்பில் தான் எழுதிய கடிதப் பகுதியையும், இரண்டு கைகளில் இயேசுவின் முகம் தாங்கிய துணியையும் (வெரோணிக்காவுக்கு இயேசு வழங்கியது) ஏந்தியவராக இவர் காட்சி அளிப்பார் அந்தப் பங்குத்தளத்தில். 

திருத்தூதர்கள் இயேசுவுக்கும் நமக்கும் உள்ள இணைப்புக் கோடுகள் அல்லது பாலங்கள். இவர்களை அடித்தளங்கள் என்கிறார் பவுல் (காண். முதல் வாசகம்). 

இவ்விரு திருத்தூதர்களும் இன்று நமக்குச் சொல்வது என்ன?

அ. அழைத்தல் அனுபவம் பெறுதல்

'இயேசு ஒரு மலைக்குப் போனார். கடவுளிடம் வேண்டினார். விடிந்ததும் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்' என்று வேகமாக நாம் நற்செய்தி நூலில் வாசித்துவிடுகின்றோம். ஆனால், அந்த நிகழ்வைக் கற்பனை செய்து பார்த்தால் நமக்கு வியப்பின்மேல் வியப்பாக இருக்கிறது. பெரிய கூட்டம். அந்தக் கூட்டத்தின் நடுவில் சில சீடர்கள். எல்லாரும் நிற்கிறார்கள். இயேசு அவர்கள் முன்னால் நின்று, 'நீ வா! சீமோன் ... நீ வா! ததேயு! உன்னைத்தான் ... வா!' என்று சொல்லும்போது மற்ற சீடர்கள் நடுவில், மற்ற மக்கள் நடுவில் அவர்கள் எவ்வளவு ஆனந்தம் அடைந்திருப்பார்கள்! 'நானா!' என்று ஓடியிருப்பார்கள். சிலர் தயங்கியிருப்பார்கள். ஆனால், அழைக்கப்பட்ட அனைவரும் சென்றுவிடுகின்றனர். கூட்டத்திலிருந்து பெயர் சொல்லி அழைக்கப்படுதல் ஒரு முக்கியமான அனுபவம். நம்மை யாராவது கூட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதிச் செயல்பட்டால் நமக்குப் பிடிப்பதில்லை. ஏனெனில், கூட்டத்தில் நம்முடைய தனித்தன்மை அழிக்கப்படுகிறது. ஆக, என்னுடைய தனித்தன்மையை இறைவன் எனக்கு நினைவூட்டும் நிகழ்வுதான் அழைத்தல் அனுபவம். இன்றும் குருத்துவ அருள்பொழிவில் திருத்தொண்டர்களையும், திருத்தொண்டர் அருள்பொழிவில் மாணவர்களையும், துறவற சபையில் முதல் மற்றும் இறுதி வார்த்தைப்பாடு கொடுக்கும் இளவல்களையும், திருமுழுக்கின் போது நம்மை பெயர் சொல்லி அழைப்பதன் பொருள் இதுதான். இந்த அழைத்தல் அனுபவம் ஒருநாள் அனுபவம் அல்ல. இது அன்றாட அனுபவமாக இருத்தல் வேண்டும். 

ஆ. அவரோடு நிற்றல்

இவர்கள் இயேசுவுடன் நிற்க வேண்டும். ஆக, இவர்களுக்கென்ற தனிப்பட்ட நிற்றல் இனி இல்லை. இவர்கள் தங்கள் குடும்பத்தோடும், உறவினர் நண்பர்களோடும் இனி நிற்க முடியாது. இயேசுவோடு நிற்க அவர்கள் மற்றவற்றை இழக்க வேண்டும். இல்லை என்றால், இயேசுவை நெறித்துக்கொண்டு நிற்பது போல ஆகவிடும். இயேசுவுடன் நிற்க நான் என்னுடைய முதன்மைகளைக் கைவிட வேண்டும். எடுத்துக்காட்டாக, நான் என் இல்ல அதிபருடன் வெளியே செல்ல வேண்டுமென்றால், எனக்கென அன்று நான் வைத்திருக்கும் வேலைகளை விட்டு எழ வேண்டும். இதையும் பார்த்துக்கொண்டே அவரோடு செல்ல முடியாது. அவரோடு சென்றுகொண்டே இவற்றைப் பார்க்க முடியாது. அப்படிப் பார்க்க நேரிட்டால் இரண்டிலும் முழுமை இராது.

இ. அவருடைய பணிகளைச் செய்தல்

இயேசு திருத்தூதர்களுடன் சமவெளில் நின்றுகொண்டு மூன்று பணிகளைச் செய்வதாகப் பதிவு செய்கிறார் லூக்கா: மக்களுடன் பேசுகிறார் அல்லது போதிக்கிறார், அவர்களின் பிணிகளை நீக்குகின்றார், தீய ஆவியை அகற்றுகிறார். போதித்தல், நலம் தருதல், தீமையை அகற்றுதல் - இம்மூன்றும்தான் திருத்தூதருடைய பணிகள். திருத்தூதராக இருப்பவர் இந்த மூன்று பணிகளிலும் சமரசம் செய்துகொள்ளவே கூடாது. இன்று பல நேரங்களில் நான் போதிக்கத் தயங்குகிறேன். நலம் தரும் வார்த்தைகளைக் பேசுவதில்லை. என்னிடம் உள்ள தீமையை அகற்றுவதையே பெரிய போராட்டமாகக் கருதுகிறேன். இப்பணிகளோடு சமரசம் செய்துகொள்ளும்போது என் பணியில் பிறழ்வு ஏற்பட வாய்ப்பு உண்டு.

இறுதியாக,

'மக்கள் யாவரும் இயேசுவைத் தொட முயன்றனர்' என முடிகிறது நற்செய்தி வாசகம்.

இயேசுவைத் தொடுவதற்கான கருவிகள்தாம் திருத்தூதர்கள். நீங்களும் நானும் திருத்தூதர்களாக இருந்தால் இன்னும் பலர் இயேசுவைத் தொட முடியும் - இன்றும் என்றும்!

யூதா ததேயுவின் படம் அல்லது திருஉருவத்தை நாம் கண்டிருப்போம். பச்சைநிற மேலாடை அணிந்து, ஒரு கையில் கையில் கோல், இன்னொரு கையில் சுருள், உச்சந்தலையில் நெருப்புத் துண்டு எனக் காட்சியளிக்கிறார் இப்புனிதர்.

இப்புனிதரின் பக்தி முயற்சி அமெரிக்காவில், குறிப்பாக இஸ்பானியம் பேசும் மக்கள் வாழுகின்ற பகுதிகளில், மிகவும் பிரபலமானது. பல மணி நேரங்கள் செலவழித்து மக்கள் இப்புனிதரை நாடிச் செல்வர். இஸ்பானிய மக்கள் பத்திரமாக அமெரிக்காவில் கால் பதிக்க இவர் உதவியதாக நம்புகின்றனர் இம்மக்கள்.

புனித யூதா ததேயுவின் கையில் இருக்கும் சுருள் பற்றிய கதையாடல் ஒன்றும் பாரம்பரியத்தில் உண்டு. அதன்படி, எதேஸ்ஸா நாட்டைச் சார்ந்த (இன்றைய துருக்கி) அரசர் அப்கார் என்பவர் தனது தொழுநோயைப் போக்க இயேசு வருமாறு அவருக்குக் கடிதம் ஒன்றை அனுப்புகிறார். எதேஸ்ஸாவுக்குச் செல்ல மறுக்கின்ற இயேசு, தன் முகத்தை ஒரு சுருள்துணி ஒன்றில் பதித்து, அதை யூதா ததேயுவிடம் கொடுத்தனுப்புகிறார். அந்த முகத்தைக் கொண்டு அரசரின் தொழுநோயைப் போக்குகின்றார் புனிதர்.

பெந்தகோஸ்தே திருவிழாவுக்குப் பின், மத்திய கிழக்கு நாடுகளில் மறைப்பணி செய்கின்ற புனிதர் அங்கேயே மறைசாட்சியாக இறக்கின்றார். இவருடைய எலும்புகள் உரோமைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, புனித பேதுருவின் கல்லறைக்கு அருகில் வைக்கப்படுகின்றன. 

புனித ப்ரிஜித் மற்றும் புனித பெர்நார்துக்குத் தோன்றுகிற இயேசு, 'கைகூடாதவற்றைக் கைகூடச் செய்பவர் புனித யூதா ததேயு' என வெளிப்படுத்துகிறார். அன்றுமுதல், கைவிடப்பட்டவர்களின், கையறுநிலையில் இருப்பவர்களின் காவலராக இருக்கின்றார் புனித யூதா ததேயு.

இவர் நமக்கு இன்று மூன்று வாழ்வியல் பாடங்களைக் கற்பிக்கின்றார்:

(அ) இயேசு கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை வையுங்கள்

புனித யூதா ததேயு எழுதிய கடிதம் ஒன்று நம் புதிய ஏற்பாட்டில் இருக்கின்றது. மிகச் சிறிய புத்தமாக அது இருந்தாலும் மிகப் பெரிய கருத்துகளைத் தாங்கியுள்ளது. யூதா திருமுகம் ஒட்டுமொத்த விவிலிய வரலாற்றையும் ஒரே அதிகாரத்தில் சொல்லி, இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ள அழைக்கிறது. 'தூய்மைமிகு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்' (காண். வ. 20). மேலும், 'நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள்' (காண். வ. 22) என்று நம்பிக்கையில் தளர்பவர்களையும் ஏற்றுக்கொள்ள அழைக்கின்றார். நம் வாழ்வில் வரும் எதிர்பாராத இழப்பு, சோர்வு, நம்பிக்கையின்மை ஆகிய நேரங்களிலும் கடவுள் நம்மேல் இரக்கம் காட்டுகிறார் என்பது இவருடைய புரிதல்.

(ஆ) இயேசுவுக்கு அருகில் இருங்கள்

திருத்தூதர்களில் ஒருவராக இயேசுவோடு எப்போதும் உடனிருக்கும் யூதா ததேயு, தன் உடனிருப்பில் இறுதிவரை நிலைத்திருக்கின்றார். இன்பத்தில் மட்டுமல்ல, துன்பத்திலும் இறைவனோடு நாம் உடனிருத்தல் அவசியம்.

(இ) கடவுள் உன்னை அனுப்பும் இடத்திற்குச் செல்லத் தயாராக இரு!

கடவுள் தன்னை அனுப்ப விரும்பிய நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார் யூதா. நம் இருத்தலிலும், நம் இயக்கத்திலும் இறைவனோடு இணைந்து கனிதருகிறோம். எனவே, அவர் அனுப்பும் இடத்துக்குச் செல்லத் தயாராக இருத்தல் நலம்.

நிற்க.

புனித யூதா ததேயுவை நோக்கிச் செபம்

மாட்சிக்குரிய திருத்தூதர் புனித யூதா ததேயுவே!

இயேசுவின் திருஇருதயத்தின் நிழலில் நின்றுகொண்டு 

நான் உமக்கு வணக்கம் செய்கிறேன்.

உம்மேல் கடவுள் பொழிந்த அளவற்ற இரக்கப் பெருக்கிற்காக, 

இயேசுவின் திருஇருதயத்தின் வழியாக, கடவுளைப் போற்றிப் புகழ்கிறேன்.

அவரின் அன்பிரக்கத்தின் வழியாக என்மேல் நீர் இரக்கம் காட்டுவீராக!

என் எளிய வேண்டுதலைப் புறக்கணியாதேயும்!

என் நம்பிக்கை உழன்றுபோக விடாதேயும்!

கைவிடப்பட்டவர்களின் காவலராகக் கடவுளால் நியமிக்கப்பெற்றவரே!

என் அருகில் வாரும்!

அதனால், நான் கடவுளின் இரக்கப் பெருக்கைப் புகழ்ந்து பாடுவேன்.

என் வாழ்வு முழுவதும் உமக்கு நன்றி சொல்லும் நான்,

விண்ணகத்தில் உம்மைக் கண்டும் உமக்கு நன்றி பகர்வேன்!

ஆமென்.

புனித யூதா ததேயுவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

உம் துணையை நாடும் அனைவருக்கும் துணைவராய் இரும்!

Wednesday, October 26, 2022

உனக்கு விருப்பமில்லையே

இன்றைய (27 அக்டோபர் 2022) நற்செய்தி (லூக் 13:31-35)

உனக்கு விருப்பமில்லையே

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், ஏரோது, இயேசுவைக் கொல்லத் தேடுவதாக, பரிசேயர் வந்து அவர்களிடம் சொல்கின்றனர். இரண்டாம் பகுதியில், இயேசு எருசலேம் நகரத்தின் கடின உள்ளத்தை நினைத்துப் புலம்புகிறார். 

பரிசேயர் இயேசுவிடம் வந்து ஏரோது பற்றிச் சொல்லக் காரணம் என்ன? இயேசுவின்மேல் உள்ள அக்கறையில் சொன்னார்களா? அல்லது அவரை எச்சரிக்கும் நோக்கில் ஏரோதுவின் பெயரை இழுத்தார்களா? காரணம் எப்படி இருந்தாலும், இயேசு, தன் பணி மற்றும் பயணத்தின் இலக்கு என்பதை மிக அழகாக அவர்களுக்குத் தெளிவுபடுத்துகின்றார். தன் பயணம் இறப்பு நோக்கியே என்பதை இயேசு நன்கு அறிந்தவராக இருக்கிறார். 

'இன்றும் நாளையும் நான் பேய்களை ஓட்டுவேன், பிணிகளைக் குணமாக்குவேன். மூன்றாம் நாளில் என் பணி நிறைவு பெறும்' எனச் சொல்கிறார் இயேசு.

இங்கே, 'மூன்றாம் நாள்' என்பது இயேசுவின் உயிர்ப்பு நாளைக் குறிப்பதாக இருக்கிறது. இன்னொரு பக்கம், இயேசுவைப் பொருத்தவரையில் எல்லா நாள்களும் பணியின் நாள்களே. அவர் தன் பணியைத் தொடர்ந்து ஆற்றிக்கொண்டே இருப்பார்.

மேலும், இரண்டாம் பகுதியில், தனக்கு எருசலேம் இழைக்கப்போகும் அநீதியை நினைத்து அதன்மேல் கோபப்படாமல், அதைக் கண்டு பரிதாபம் கொள்கிறார். கோழி தன் இறக்கைகளுக்குள் வந்து அடைக்கலம் புகாத தன் குஞ்சுகள்மேல் கோபம் கொள்வதில்லை. அவை அழிந்து விடுமோ என்று அச்சப்படுகின்றன, அல்லது அவற்றின் இயலாமை நினைத்துப் பரிதாபப்படுகின்றன.

இந்த வாசகம் நமக்கு மூன்று வாழ்க்கைப் பாடங்களைத் தருகின்றது:

(அ) நமக்கு எதிர்வரும் பிரச்சினைகள் மற்றும் ஆபத்துகளை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் எனக் கற்பிக்கிறது. பிரச்சினைகள் மற்றும் ஆபத்துகள் வரலாம். ஆனால், அவை வரும் என எதிர்பார்பத்தவருக்கு அவை எந்தவொரு அச்சுறுத்தலையும் தருவதில்லை.

(ஆ) நம் பணி மற்றும் பயணத்தின் இலக்கு தெளிவாக இருக்க வேண்டும். இயேசுவுக்கு இருந்தது போல.

(இ) நமக்கு எதிராகத் தீங்கு நினைப்பவர்கள், அல்லது நம்மைப் புரிந்துகொள்ளாதவர்கள்மேல் கோபப்படுவதற்குப் பதிலாக இரக்கம் கொள்வது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எபே 6:10-20), தன் திருமுகத்தை நிறைவு செய்யும் பவுல், எபேசு நகரத் திருஅவையினர் எதிர்கொள்ள வேண்டிய துன்பங்களைச் சுட்டிக்காட்டுவதோடு, அதற்குத் தேவையான படைக்கலன்கள் - உண்மை, நீதி, நற்செய்தி அறிவிப்புக்கான ஆயத்தநிலை, மீட்பு, கடவுளின் வார்த்தை - தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார்.



Monday, October 24, 2022

விதையும் மாவும்

இன்றைய (25 அக்டோபர் 2022) நற்செய்தி (லூக் 13:18-21)

விதையும் மாவும்

இறையாட்சி பற்றிய இயேசுவின் உருவகங்கள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன. நம்ம வீட்டு அஞ்சறைப்பெட்டியின் மூடியைச் சுற்றிவிட்டு, அதன் ஒரு பெட்டியில் கிடக்கும் கடுகுமணிகளைக் கையில் எடுத்து, 'இதோ! இறையாட்சி இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்!' என்கிறார். பின் அப்படியே கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறார். ஒரு டம்ளரில் வீட்டுத்தலைவி எடுத்து வைத்த புளிக்கார மாவு இருக்கிறது. இன்னும் கொஞ்சம் தள்ளிப் பார்க்கிறார். அங்கே ஒரு பானை நிறைய புதிதாய் அரைத்த மாவு இருக்கிறது. 'இந்தப் புளிக்காரத்தை இந்த மாவில் கொட்டவா?' என்று அந்தப் பெண்மணியிடம் கேட்டுக்கொண்டே அந்த மாவில் கொட்டி, அருகிலிருந்த அகப்பையை எடுத்து மெதுவாகக் கிண்டி விடுகின்றார். 'மொத்தத்தையும் போட்டுட்டீங்களா?' என்று சிணுங்குகிறாள் அந்தப் பெண்மணி. 'ஆம்!' என்று சொல்லிக்கொண்டே வரவேற்பரைக்குள் ஓடியவர், அங்கே இருந்த சீடர்களிடம், 'இறையாட்சி இந்தப் புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்' என்கிறார்.

இயேசுவின் உருவகங்கள் வெகுசன மக்களுக்கும் புரியக்கூடிய வகையில் இருக்கின்றன. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறையாட்சியை கடுகுவிதை மற்றும் புளிப்புமாவுக்கு ஒப்பிடுகின்றார். 

முதலில் இறையாட்சி என்றால் என்ன? இறையாட்சி என்றால் (அ) திருச்சபை, (ஆ) விழுமியங்கள், (இ) இறப்புக்குப் பின் வாழ்வு என்று நிறைய புரிதல்கள் இருக்கின்றன. ஆனால், இறையாட்சி என்பது இயேசு. அவ்வளவுதான். அதனால்தான், 'இறையாட்சி உங்கள் நடுவே இருக்கிறது. ஏனெனில் நான் உங்கள் நடுவில் இருக்கிறேன்' என்கிறார் இயேசு. இயேசு இயங்கும் இறையாட்சித் தளம் இந்த உலகம். 

அ. கடுகுவிதை

யூதர்கள் கடுகுவிதையை எல்லா விதைகளிலும் மிகச் சிறியதாகக் கருதினார்கள் (காண். மத் 13:31-33, மாற் 4:30-32). இயேசுவும் 'கடுகளவு நம்பிக்கை' (காண். லூக் 17:6) என்று சொல்லும்போது, கடுகின் சிறிய அமைப்பையே சொல்கின்றார். 'கடுகு' என்பது 'ஸினாப்பிஸ் நீக்ரா' என்ற தாவரத்திலிருந்து பெறப்படும் விதைகளையே குறிக்கிறது. இத்தாவரம் நான்கு அடிகளிலிருந்து பதினைந்து அடிகள் வரை வளரும். ஆகையால் இதை மரம் என்றும் அழைப்பர். இயேசு கடுகுவிதையின் வளர்ச்சியைப் பற்றிப் பேசினாலும், அவருடைய அழுத்தம் கடுகுவிதையின் தொடக்கம் மற்றும் இறுதியைப் பற்றியே இருக்கின்றது. சிறிய தொடக்கம். ஆனால், பெரிய முடிவு. சிறிய விதை பெரிய மரமாகிறது.

இங்கே மற்றொரு வாக்கியத்தையும் சொல்கின்றார்: 'வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின.' இயேசுவின் 'விதைப்பவர்' எடுத்துக்காட்டில், பறவைகள் விதைகளின் எதிரிகளாக இருக்கின்றன (காண். லூக் 8:5, 12). ஆனால், இங்கே அவைகள் விருந்தினர்களாக வருகின்றன. ஆக, இறையாட்சி என்ற கடுகு மரம் வெறும் 'செல்ஃபோன் டவர்' அல்ல. மாறாக, பறவைகளை ஈர்த்து அவைகளுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும் தன்மை கொண்டது. 'பறவைகள்' என்பது 'புறவினத்தாரைக்' குறிப்பதாக திருஅவைத் தந்தையர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள் (காண். தானி 4:12, 21, திபா 104:13, எசே 17:23). உருவகத்தை நிறைவேற்றும் விதமாகக் கூட 'பறவைகளைப் பற்றி' இயேசு சொல்லியிருக்கலாம்.

ஆ. புளிப்புமாவு

புளிப்புமாவு என்பது நாம் பாலில் ஊற்றும் தயிர் உறை போன்றது. பழைய தயிர் புதிய பாலில் ஊற்றப்படும்போது பாலும் தயிராகிவிடுகின்றது. 'புளிப்புமாவு' என்று சொல்வது இன்று நாம் ரொட்டி அல்லது கேக் செய்யும்போது சேர்க்கும் 'ஈஸ்ட்' என்ற பாக்டீரியா. இது மாவில் சேர்க்கப்பட்டு கொஞ்ச நேரத்தில் மாவு நெகிழ்வுத்தன்மை அடைகிறது. மாவில் உள்ள க்ளுக்கோஸூடன் சேரும் இந்தப் பாக்டீரியா கார்பன்-டை-ஆகஸ்ஸைடாக மாறி சின்ன சின்ன காற்றுப் பைகளை மாவில் உருவாக்குகிறது. இப்போது அடுமனையில் இடப்படும்போது வெப்பத்தில் காற்றுப் பைகள் இன்னும் விரிய மணமான, சுவையான கேக் அல்லது பிரட் கிடைக்கிறது. மாவு எந்த அளவில் இருந்தாலும் புளிக்காரம் அந்த அளவிற்குச் செயலாற்றும். அதே செய்திதான். சிறிய தொடக்கம். பெரிய முடிவு.

புளிக்காரம் யார் பார்த்தாலும்பார்க்காவிட்டாலும் தன் வேலையைச் செய்துகொண்டிருக்கும். இதன் வேலையைப் பாதி இரவில் நிறுத்த முடியாது. இது செய்து முடித்த வேலையை மீண்டும் திருப்ப முடியாது. இறையாட்சியும் அத்தகையதே.

இன்றைய முதல் வாசகத்தில் (எபே 5:21-33), கிறிஸ்துவை மணமகனாகவும் திருஅவையை மணமகளாகவும் உருவகிக்கின்ற பவுல், உருவகத்தின் பின்புலத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நிலவ வேண்டிய அன்புறவை எடுத்துரைக்கின்றார். 


Sunday, October 23, 2022

ஆபிரகாமின் மகள்

இன்றைய (24 அக்டோபர் 2022) நற்செய்தி (லூக் 13:10-17)

ஆபிரகாமின் மகள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பதினெட்டு ஆண்டுகளாய் தீய ஆவி பிடித்திருந்த ஒரு பெண்ணுக்கு குணம் தருகின்றார். இயேசுவின் சமகாலத்து யூதர்களுக்கு மூன்று விடயங்கள் இங்கே இடறலாக இருக்கின்றன: (அ) ஓய்வுநாளில் இயேசு நலம் தந்தது, (ஆ) ஓய்வுநாளில் பெண்ணுக்கு நலம் தந்தது, (இ) அப்பெண்ணை 'ஆபிரகாமின் மகள்' என அழைத்தது

இயேசுவின் சமகாலத்து யூதர்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதில் மிகவும் ஓயாமல் இருந்தனர். ஓய்வுநாள் சட்டங்களில் சில விநோதமாக உள்ளவை. 'ஓய்வுநாளில் (சனிக்கிழமை) பெண்கள் கண்ணாடி பார்க்கக் கூடாது' என்று ஒரு சட்டம் இருக்கிறது. ஏனெனில், கண்ணாடியில் தன் முகம் பார்க்கின்ற ஒரு பெண் தன் தலையில் நரைமுடி ஒன்று இருப்பதைக் கண்டு அதைப் பிடுங்குவதற்குத் தன் கையை உயர்த்தினால் அது வேலையாகக் கருதப்பட்டு, அவர் ஓய்வுநாளை மீறியதாகவும் கருதப்படுவார்.

'நலம் தருவது' ஓய்வுநாளில் செய்யக்கூடாது ஒரு செயலாக இருந்தது. மேலும், அவசரத்திற்காக ஓய்வுநாள் சட்டத்தை மீறுவதாக இருந்தாலும், அதை ஒரு பெண்ணுக்காக மீறுவது இன்னும் இடறலாகக் கருதப்பட்டது. '18 ஆண்டுகள் பொறுத்துக்கொண்டாள். இன்னும் ஒரு நாள் பொறுக்க மாட்டாளா?' என்பதுதான் மற்றவர்களின் கேள்வியாக இருக்கிறது. ஆனால், இயேசு அவர்களின் வெளிவேடத்தைக் கடிந்துகொள்கின்றார். மாடு, கழுதை போன்றவற்றிற்கே தேவையானதை ஓய்வுநாளில் செய்வதுபோல மனிதர்களுக்குச் செய்யக்கூடாதா? எனக் கேட்கின்றார். இன்னும் ஒரு படி போய், அப்பெண்ணை, 'ஆபிரகாமின் மகள்' என அழைக்கிறார் இயேசு.

'ஆபிரகாமின் மகன்' என்ற சொல்லாடல் இயேசுவால் சக்கேயுவைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது: 'இவரும் ஆபிரகாமின் மகன்தானே!' (காண். லூக் 19:9). மேலும், யோவான் நற்செய்தியில் இயேசுவுக்கும் யூதர்களுக்குமான வார்த்தைப் போரில் 'ஆபிரகாமின் மக்கள் அல்லது பிள்ளைகள்' என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது: 'அவர்கள் அவரைப் பார்த்து, 'ஆபிரகாமே எங்கள் தந்தை' என்றார்கள். இயேசு அவர்களிடம், 'நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போல செயல்படுவீர்கள்' என்றார்.' (யோவா 8:39)

'ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு  ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான்' என்ற இயேசுவின் வார்த்தைகள், 'ஆபிரகாமின் பிள்ளைகள்' யாருக்கும் அடிமைகளாக இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கிறது. 'அடிமையாக' இருப்பவர்களைத்தான் கயிற்றால் அல்லது சங்கிலியால் கட்டி வைத்திருப்பார்கள். மேலும், அடிமையாக இருந்த இந்தப் பெண் 'கூன் விழுந்த நிலைக்குப் போய்விடுகின்றார்.' கூன் விழுந்தால் நம் பார்வை சுருங்கிவிடும். 'இவ்வளவுதான் உலகம்' என நினைக்க ஆரம்பித்துவிடுவோம். ஆனால், இயேசு நலம் தந்தவுடன் அனைவரையும் அனைத்தையும் நிமிர்ந்து பார்க்கிறார். மேலும், 'நிமிர்தல்' தன்மானத்தின், கட்டின்மையின் அடையாளமாகவும் இருக்கிறது.

தொழுகைக் கூடத் தலைவர், 'வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே. அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக்கொள்ளுங்கள்' என்று கடிந்து கொள்கின்றார். இவ்வார்த்தைகளுக்கு இயேசு பதிலிறுப்பு செய்கின்றார். தன்னை எதிர்த்த அனைவரையும் வெட்கமுறச் செய்கின்றார்.

'ஆறு நாள்களில் செய்திருக்கலாமே?' எனக் கேட்கின்றார் தொழுகைக்கூடத் தலைவர். ஆனால், 18 நாள்களாக அல்ல, மாறாக, 18 ஆண்டுகளாக ஒரு பெண் அங்கேயே உடல் நலமில்லாமல் இருக்கின்றார். எத்தனை 6 நாள்கள் கடந்து போயிருக்கும்? யாரும் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை! 

(அ) கைகளை வைத்து

இயேசு முதலில் தன் சொல்லாலும் தொடர்ந்து, கைகளை அவர்மீது வைக்கும் தன் செயலாலும் அவருக்கு நலம் தருகின்றார். இதுவும் ஓய்வுநாள் மீறலாகக் கருதப்பட்டது.

(ஆ) இரட்டை வேடம்

ஓய்வுநாள் சட்டம் பற்றிப் பேசுகின்ற இயேசுவின் எதிராளிகள் தாங்களே ஓய்வுநாள் சட்டத்தை மீறி, மாட்டையும் கழுதையையும் தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டு போய் தண்ணீர் காட்டுகின்றனர். அவர்களின் இரட்டை வேடத்தைச் சுட்டிக்காட்டுகின்றார் இயேசு.

இந்த இறைவாக்குப் பகுதி நமக்குச் சொல்லும் பாடங்கள் இரண்டு:

(அ) நீண்ட நாள்களாக அல்லது ஆண்டுகளாக நாம் நம்மிலேயே வைத்துக்கொண்டிருக்கும் தீய ஆவி அல்லது தீய செயல் என்ன? அந்தப் பெண்ணிடம் இருந்த தீய ஆவி தொழுகைக்கூடத்திற்கு 18 ஆண்டுகளாக வருகின்றது. ஆனால், அதன் இருப்பு பற்றி யாரும் கவலைப்படவே இல்லை.

(ஆ) எனக்கு அடுத்திருப்பவரின் வாழ்க்கையில் கடவுள் நற்காரியங்களைச் செய்யும்போது என் பதிலிறுப்பு என்ன? தொழுகைக்கூடத் தலைவர்போல எரிச்சல் அல்லது கோபம் கொள்கிறேனா? அல்லது கூடியிருந்த மக்கள் கூட்டத்தினர்போல மகிழ்ந்து ஆர்ப்பரிக்கின்றேனா?


Friday, October 21, 2022

மனமாற்றத்திற்கான நேரம்

இன்றைய (22 அக்டோபர் 2022) நற்செய்தி (லூக் 13:1-9)

மனமாற்றத்திற்கான நேரம்

இயேசுவின் சமகாலத்தில் ஒருவர் செய்த பாவத்திற்கு அவர் உடனடியாகத் தண்டிக்கப்படுவார் என்றும், ஒருவருக்கு நேர்கின்ற விபத்து மற்றும் ஆபத்துகளுக்கு அவருடைய பாவச் செயல்களே காரணம் என்றும் மக்கள் புரிந்துகொண்டனர். இதே புரிதலை முன்வைத்து சில இடங்களில் இன்றும் போதகர்கள் போதிக்கின்றனர். கடவுள் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை என்ற புரிதல் நமக்கு அவசியம்.

இயேசுவைப் பொருத்தவரையில், விபத்துகள் மற்றும் ஆபத்துகள் இயல்பாக நடக்கக் கூடியவை. மேலும், அவற்றால் ஒருவர் பலியானார் என்றால் அதற்குக் காரணம் அவர் பாவி என்பது அல்ல. அதே வேளையில், நமக்கு விபத்தும் ஆபத்தும் எந்த நேரமும் வரலாம் என்ற நிலையில் உடனடியாக மனமாற்றம் அடைய வேண்டும்.

இரண்டாம் பகுதியில், மூன்று ஆண்டுகளாகக் கனி கொடாத அத்தி மரத்திற்கு மீண்டும் ஒரு வருடம் அவகாசம் கேட்கின்றார் தொழிலாளர். இது உருவகமாக இயேசுவின் போதனையைக் கேட்டு மனம் மாறாதவர்களைக் குறித்தாலும், இன்னொரு பக்கம் கடவுளின் பொறுமையையும் காட்டுகின்றது. கடவுளின் பொறுமை நம் மனமாற்றத்திற்கான நேர அவகாசமே.

இன்றைய நற்செய்தி நமக்கு முன்வைக்கும் பாடங்கள் எவை?

(அ) ஒருவரின் இல்லாமை மற்றும் இயலாமை கண்டு அவரைப் பாவி எனச் சாடுதல் தவறு.

(ஆ) மனமாற்றத்திற்கான வாய்ப்பு இன்றே, இப்போதே வழங்கப்படுகிறது என்ற நிலையில், நாம் உடனடியாக நம்மை மாற்றிக்கொள்வது.

(இ) கடவுள் நமக்கு எப்போதும் இரண்டாம் வாய்ப்பை வழங்குகின்றார். எப்படியாவது கொத்தி எருப்போட்டு நம்மைக் கனிகொடுக்க வைக்க முயற்சி செய்கின்றார். அந்த இரண்டாம் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது நலம்.


Thursday, October 20, 2022

காலத்தை ஆய்ந்து பார்த்தல்

இன்றைய (21 அக்டோபர் 2022) நற்செய்தி (லூக் 12:54-59)

காலத்தை ஆய்ந்து பார்த்தல்

நிறைவுகாலம் அல்லது இறுதிக்காலம் பற்றிய இயேசுவின் போதனை இன்றைய நற்செய்தி வாசகத்திலும் தொடர்கிறது. தனது சமகாலத்து பாலஸ்தீனத்தில் விளங்கிய காலநிலையை மேற்கோள் காட்டி, அந்தக் காலநிலையை அறிந்திருக்கின்ற மக்கள், 'இக்காலத்தை, அதாவது, இறையரசின் காலத்தை ஆராயாமல் இருப்பது எப்படி?' என்ற கேள்வியை எழுப்புகின்றார். 

மேலும், நடுவரிடம் இழுத்துப் போகுமுன் செய்ய வேண்டிய சமரசம் என்னும் உருவகத்தின் பின்புலத்தில், இறையாட்சி பற்றிய அறிதலின் உடனடித் தன்மையையும் எடுத்துரைக்கின்றார்.

முதலில், காலத்தை அறிதல்.

காலத்தை அறிவதற்கு முதலில் தேவை, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற தன்னுணர்வும், நுண்ணுனர்வும். இவை இரண்டும் இல்லாமல் காலத்தை அறிவது சாத்தியமில்லை.

மேலும், காலத்தை அறிதல் உடனடியாக நம் செயல்களின் திசையைத் திருப்புகிறது. மழை வருவது போலத் தெரிந்தவுடன், நம் கால்கள் வேகமாக நடக்கின்றன. மாடியில் காயப்போட்ட துணிகளை எடுக்க ஓடுகிறோம், நம் அறையின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை அடைக்கின்றோம், மின்னணுச் சாதனங்களை மின்னேற்றியிலிருந்து அகற்றுகிறோம், மெழுகுதிரி மற்றும் தீப்பெட்டி எடுத்து வைக்கிறோம், சுடுதண்ணீர் போட்டு சேமித்து வைத்துக்கொள்கிறோம். ஆக, மேகங்களிலிருந்து விழும் சில துளிகள் என்னை எட்டியவுடன், நான் அதுவரை பார்த்துக்கொண்டிருந்த எல்லா வேலைகளையும் உதறிவிட்டு, என் முதன்மைகளை மாற்றிக்கொள்கிறேன்.

இயேசுவின் உடனிருப்பும் அவர் தரும் செய்தியும் புதிய புதிய காலநிலை மாற்றங்கள் போல என்னைச் சுற்றி வருகின்றன. நான் அவற்றை அறியவும், அந்த அறிதலுக்கு ஏற்ப என் முதன்மைகளை மாற்றிக்கொள்ளவும் செய்கிறேனா?

இரண்டாவதாக, 'நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்' என எச்சரிக்கிறார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில், பணம், அதிகாரம், மற்றும் ஆள்பலத்தைப் பொருத்தே நீதியின் கரம் உயரவும் தாழவும் செய்தது. தன்னை வலுவற்றவர் என அறிந்த ஒருவர், உடனடியாக எதிரியிடம் சரணடைவது மேல் என்றும், தாமதித்தால் தண்டனையின் கொடுமை அதிகமாகிவிடும். கடைசிக் காசும் என்னிடமிருந்து போய்விடும். 

இதில் மறைமுகமாக இயேசு சொல்வது என்ன? நாம் எல்லாரும் ஏதோ ஓர் ஆட்சியாளரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். செல்லும் வழியில் எந்தவொரு வன்முறையும் வன்மமும் வேண்டாம். நமக்குத் தேவையானதெல்லாம் அமைதியும் சமரசமும்தான்.

இதையொட்டியே, இன்றைய முதல் வாசகத்தில், 'முழுமனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்' என்று எபேசு நகரத் திருஅவைக்கு அறிவுறுத்துகிறார் பவுல்.


Wednesday, October 19, 2022

மிகவும் மேலாக

இன்றைய (20 அக்டோபர் 2022) முதல் வாசகம் (எபே 3:14-21)

மிகவும் மேலாக

தனது மனமாற்றத்தின் பேறுகால வேதனை நிறைவுற்று, தன் பழைய வாழ்க்கைக்கு, 'இல்லை' என்று சொல்லித் தன் முதுகைத் திருப்பி, புதிய வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறார் அகுஸ்தினார். 'நான் மனம் மாறிவிட்டேன். இனி மனிக்கேயத்தின் பின்னும், பிறழ்வுபட்ட வாழ்க்கையின் பின்னும் நான் செல்ல மாட்டேன்' என உறுதியெடுக்கிறார் அவர். இந்த நற்செய்தியைச் சொல்ல அவர் தன் தாய் மோனிக்காவிடம் ஓடுகின்றார். மூச்சிரைக்க ஓடிய அவர், 'அம்மா! நான் கிறிஸ்தவத்தில் திருமுழுக்கு பெற வேண்டுமென விரும்பினீர்கள். நானோ, கிறிஸ்துவின் பணியாளராக மாற விரும்புகிறேன்' என அவர் மொழிந்தபோது, மோனிக்காவின் உள்ளத்தில் எழுந்த வார்த்தைகளாக புனித அகுஸ்தினார் இன்றைய முதல் வாசகத்தின் வார்த்தைகளையே பதிவு செய்கின்றார்:

'என் மனமாற்றத்தின் செய்தி கேட்ட உம் அடியவள், நம்முள் வல்லமையோடு செயல்பவரும், நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமான உம் அருள்பெருக்கை நினைத்துக் கண்ணீர் மல்கி, உமக்கு நன்றி செலுத்தினாள்.'

புனித பவுல், எபேசியருக்கு எழுதும் திருமடல், அவரது ஆன்மீக முதிர்ச்சியையும், ஆழ்ந்த இறையனுபவத்தையும் கண்டுகொள்ள உதவுகிறது.

எபேசு நகர இறைமக்கள் ஒருவரையொருவர் அன்பு செய்ய வேண்டும் என முதலில் அறிவுறுத்துகிறார் பவுல்: 'அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!' முதல் உருவகம் விவசாயம் சார்ந்தது, இரண்டாவது கட்டடம் கட்டுதல் சார்ந்தது. ஆணிவேர் ஒரு மரத்தின் நிமிர்ந்து நிற்பதற்கான வலுவைத் தருவதுடன், மரத்திற்குத் தேவையான ஊட்டத்தை மிக ஆழத்திலிருந்து பெற்றுத் தருகிறது. கட்டடம் நிலைத்து நிற்பதும், அதன் மேல் இன்னொரு மாடி எழுப்பவதும் அடித்தளத்தின் வலிமையைப் பொருத்ததே. ஆனால், ஆணிவேரையும் அடித்தளத்தையும் நம் கண்களால் காண இயலாது என்றாலும், மறைந்திருக்கும் அவையே, முறையே, மரத்திற்கும், கட்டடத்திற்கும் தாங்குதளமாய் இருக்கின்றன. ஆக, இறைமக்களின் வாழ்வு அன்பில் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். அன்பு என்பதற்கு, 'அகாபே' ('தற்கையளிப்பு செய்யும் அன்பு') என்னும் சொல்லாடலைப் பயன்படுத்துகிறார் பவுல்.

தொடர்ந்து, அவர்கள் இறைமக்களோடு இணைய வேண்டும்.

ஆக, அன்பு என்பது தனக்கென வைத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றல்ல. மாறாக, பகிரப்பட வேண்டியது.

அப்படி இறைமக்களோடு இணைவதால் என்ன நடக்கிறது?

ஒருவர், 'கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற முடியும்!'

இங்கும் பவுல் கட்டடத்தின் உருவகத்தையே பயன்படுத்துகிறார். அறிவுக்கு எட்டாத கிறிஸ்துவின் அன்பை நமக்கு அருகில் இருக்கும் சகோதர சகோதரிகளை அன்பு செய்வதில் அறிந்துகொள்ளலாம் என நமக்குப் பவுல் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது, ஒருவர் மற்றவரை அன்பு செய்யத் தூண்டி எழுப்புகிறது.

இறுதியாக, கடவுள் நம்முள் வல்லமையோடு செயலாற்றுவதுடன், நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மேலாகக் கொடைகளால் நம்மை அணிசெய்கின்றார். 'என் பாத்திரம் நிரம்பி வழிகிறது' (காண். திபா 23:5) என்னும் திருப்பாடல் ஆசிரியரின் அனுபவத்தை ஒத்த வார்த்தைகளாக இருக்கின்றன இவை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 12:49-53), கடவுளை ஒருவர் தெரிந்துகொண்டு அன்பு செய்வதால் உறவுகள் நடுவில் ஏற்படும் பிளவுகள் மற்றும் அமைதியின்மை பற்றி இயேசு பேசுகின்றார். கடவுளின் அன்பை அறிவதற்கான முதற்படியில் பிரிவுகள் வரலாம். ஆனால், பிரிவுகள் வந்தாலும் அவர்களை அவர்களுக்காகத் தழுவிக்கொள்ளும்போது, கடவுள் மிகவும் மேலாக நம்மிடம் செயலாற்றுவார்.

Tuesday, October 18, 2022

மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம்

இன்றைய (19 அக்டோபர் 2022) நற்செய்தி (லூக் 12:39-48)

மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம்

இன்றைய முதல் வாசகத்திலும் நற்செய்தி வாசகத்திலும் இரு வார்த்தைப் படங்கள் உள்ளன: பணியாளர், பொறுப்பாளர். முதல் வாசகத்தில், புறவினத்தாருக்கு தான் செய்த நற்செய்திப் பணியைப் பொருத்தவரையில் தான் ஒரு பொறுப்பாளர் என்றும், தான் கிறிஸ்துவின் பணியாளர் என்றும் முன்மொழிகின்றார் பவுல். நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் சீடர்கள் விழிப்புநிறை பணியாளர்களாகவும், நம்பிக்கைக்குரிய மற்றும் விவேகமான பொறுப்பாளராகவும் திகழ வேண்டும் என அறிவுறுத்துகின்றார்.

'மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்' என இறுதியில் மொழிகின்றார் இயேசு.

இதை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

தாலந்து அல்லது மினா எடுத்துக்காட்டில், 'உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதவரிடமிருந்து உள்ளதாகக் கருதப்படுவதும் எடுக்கப்படும்' என்கிறார் இயேசு. ஏறக்குறைய இதன் தழுவலாகவே இருக்கின்றது இயேசு சீடர்களுக்குச் சொல்லும் அறிவுரை அல்லது எச்சரிக்கை.

மேலும், தன் சீடர்கள் தன்னைக் காணும் பேறு பற்றியும் இயேசு கூறுகின்றார். மற்றவர்களுக்கு மறைபொருளாக உள்ளது தன் சீடர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதை எண்ணி அவர்களைப் பாராட்டுகின்றார் இயேசு. 

'மிகுதியாகக் கொடுக்கப்பட்டது' என்பது பொறுப்புணர்வையே குறிக்கிறது.

2 அரசர்கள் நூலில் அரசர்களின் சிலை வழிபாட்டால் ஒட்டுமொத்த யூதா நாடும் தண்டனைக்கு உள்ளாகிறது. அதாவது, அரசர்கள் தங்கள் பொறுப்புணர்வை மறந்து செயல்பட்டார்கள். தங்களிடம் அதிகம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் மறந்திருந்தார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தரும் செய்தி என்ன?

(அ) கடவுள் நம்மிடம் ஒப்படைத்தவை பற்றியும், நம் அழைத்தல் பற்றியும் அக்கறையுடன் இருப்பது.

(ஆ) பொறுப்புணர்வுடன் வாழ்க்கை நடத்துவது.

(இ) நமக்கு மேல் உள்ள கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவராகவும், நம் நிலையில் உள்ளவர்களோடு விவேகமாகவும் செயல்படுவது.


Monday, October 17, 2022

புனித லூக்கா

இன்றைய (18 அக்டோபர் 2022) திருநாள்

புனித லூக்கா

நற்செய்தியாளரும், பவுலின் உடனுழைப்பாளருமான புனித லூக்காவின் திருநாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். 'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கின்றார். மாற்கை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர்' என்று இன்றைய முதல் வாசகத்தில் (2 திமொ 4:9-17) பவுல் திமொத்தேயுவுக்கு அறிவுறுத்துகின்றார். பவுலின் தனிமை, பணிச்சுமை, மற்றும் பணித்தேவை ஆகியவற்றை இந்த வாக்கியம் நமக்கு எடுத்துச் சொல்வதோடு, லூக்காவின் உடனிருப்பையும், மாற்கின் தேவையையும் நமக்கு உணர்த்துகிறது.

லூக்கா மற்றும் மாற்கு என்னும் பெயர்கள் இங்கே அடுத்தடுத்து கொடுக்கப்பட்டுள்ளன. நம் புதிய ஏற்பாட்டில் உள்ள நான்கு நற்செய்தியாளர்களில் மத்தேயு மற்றும் யோவான் திருத்தூதர்கள் குழாமைச் சார்ந்தவர்கள். லூக்கா மற்றும் மாற்கு ஆகியோர் திருத்தூதர்கள் வழியாக – பவுல் மற்றும் பேதுரு - இயேசுவைப் பற்றி அறிந்துகொள்கின்றனர். மேலும், லூக்கா மற்றும் மாற்கு ஆகியோர் தாங்கள் எழுதவிருக்கும் நற்செய்தி பற்றி ஒருவர் மற்றவருடன் கலந்தாலோசித்திருப்பார்களா? என்றும் தோன்றுகிறது. இங்கே என்ன ஆச்சர்யம் என்றால், பவுல், லூக்கா, மற்றும் மாற்கு ஆகியோரின் எண்ணம் முழுவதிலும் இயேசு மட்டுமே நிறைந்திருக்கிறார். அப்படி என்றால், எந்த அளவுக்கு இயேசு அனுபவம் அவர்களைப் பாதித்திருக்கும்!

இன்று பல சமூக வலைதளங்களில் இளவல்களும், பெரியவர்களும் தங்கள் பணிகளுக்கு நடுவே இறைவார்த்தை அறிவிப்பதையும், இறைவார்த்தைப் பணியில் ஈடுபடுவதையும் காணும்போதும், ப்ரென்டன் வோக்ட் போன்ற இளவல்கள் கத்தோலிக்கத் திருஅவையின்மேல் கொண்ட தாகத்தாலும், இயேசு அனுபவத்தாலும் உந்தப்பட்டு செய்யும் பணிகளையும் காணும்போதும் என்னை அறியாமல் ஒரு குற்றவுணர்வு பற்றிக்கொள்கின்றது. இறையாட்சிப் பணிக்காக என்னையே அர்ப்பணம் செய்வதாகச் சொல்லும் நான் எந்த அளவுக்கு என் நேரத்தையும் ஆற்றலையும் இப்பணிக்கென செலவழிக்கிறேன்? என் ஆற்றலும் நேரமும் சிதறிப் போகக் காரணம் என்ன? அல்லது இயேசு அனுபவம் என்னைப் பாதிக்கவில்லையா? தேவையற்ற பேச்சு, பயணம், நிர்வாகம்சார் பிரச்சினைகள், கவனச்சிதறல்கள் என என் பணி பாதிக்கப்படுவது ஏன்?

இன்று லூக்கா நம் அனைவருக்கும் உந்துசக்தியாக இருக்கட்டும் என்பதே என் இறைவேண்டல்.

லூக்கா தன் நற்செய்தியை மிக அழகாக எழுதுகின்றார். இயேசுவின் குழந்தைப் பருவம் முதல் விண்ணேற்றம் வரை உள்ள நிகழ்வுகளை, 'பயணம்' என்ற ஒற்றைக் கயிற்றில் கட்டுகின்றார். இவரே திருத்தூதப் பயணத்தில் ஈடுபட்டிருந்தார் என்பதாலும், 'வாழ்க்கை என்பது ஒரு பயணம்' என்ற ஞானத்தை இவர் பெற்றிருந்ததாலும் இவர் இப்படிப் பதிவு செய்திருக்க வேண்டும்.

கடவுளின் இரக்கத்தை, இயேசுவின் இறைவேண்டலை, தூய ஆவியாரின் ஆற்றலை என இவருடைய நற்செய்தி கடவுளைப் பற்றிய புதிய பார்வையை நமக்குத் தருகின்றது. இத்திருநாளில் நாம் இவரிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

அ. இரக்கத்தின் நற்செய்தி

லூக்காவின் நற்செய்தியை நாம் இரக்கத்தின், மகிழ்ச்சியின் நற்செய்தி என்று சொல்கின்றோம். 'கடவுளின் முகம் இரக்கம்' என்ற புதிய புரிதலைத் தந்தவர் லூக்கா மட்டுமே. இவரின் இந்தப் புரிதல் இயேசுவைப் பற்றி மட்டுமல்ல, கடவுளைப் பற்றியே நாம் புதிய புரிதலைப் பெற்றுக்கொள்ள நமக்கு உதவுகிறது. இன்று கடவுளை நாம் இரக்கம் என்று பார்க்கத் தொடங்கினால், ஒருவர் மற்றவரையும் இரக்கத்தின் கண்கொண்டு நம்மால் பார்க்க முடியும்.

ஆ. இலக்கியத்திறன்

லூக்காவின் கிரேக்க எழுத்து நடையும், வாக்கியப் பயன்பாடும் மற்ற புதிய ஏற்பாட்டு நூல்களின் கிரேக்க எழுத்து நடை மற்றும் வாக்கியப் பயன்பாட்டைவிட நேர்த்தியாகவும், மேன்மையாகவும் இருப்பதாக விவிலிய ஆய்வாளர்கள் சொல்கின்றனர். தன்னுடைய வாழ்க்கைக்கு தான் தேர்ந்துகொண்டது மருத்துவப் பணி என்றாலும், எழுத்துப்பணியிலும், இலக்கியத் திறத்திலும், சிறந்து விளங்கியதோடல்லாமல், அதை நற்செய்தி எழுதுவதற்குப் பயன்படுத்தியதால் இறவாமைக்குச் சென்றுவிடுகிறார் லூக்கா. இன்று நாம் நம்முடைய திறன்கள் மற்றும் திறமைகளை நற்செய்தி அறிவிப்புக்குப் பயன்படுத்துகிறோமா? எந்த அளவிற்கு நம்முடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள நினைக்கிறோம்?

இ. பயணமும் தொடர்பும்

திருத்தூதர் பணிகள் நூலில் பெரும்பாலும் லூக்கா பவுலோடு உடனிருக்கிறார். மேலும், அவருடைய தொடர்பு மேன்மக்களோடும் அரச அதிகாரிகளோடும் இருக்கிறது. சென்றவிடமெல்லாம் தன்னுடைய மருத்துவப் பணியாலும் பலரை இவர் தன்னிடம் ஈர்த்திருக்க வாய்ப்பு உண்டு. அயராமல் பயணம் செய்வதிலும், மிகுதியான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதிலும் இவர் சிறந்தவராக இருக்கிறார். 'நீ பலரால் பார்க்கப்படவில்லை என்றால், உன்னை எளிதாக மறந்துவிடுவார்கள்' என்பது ஆங்கிலப் பழமொழி. பல இடங்களுக்குப் பயணம் நம் பார்வையை அகலமாக்குகிறது. நாம் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புகளும், அத்தொடர்பில் உள்ளவர்களுக்கு நாம் தரும் மதிப்பீடுகளும் நமக்கு பன்மடங்கு பலனைத் தருகின்றன. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 10:1-9) இயேசு தன்னுடைய சீடர்கள் 72 பேரை இருவர் இருவராக அனுப்புகிறார். அங்கேயும் மேற்காணும் மூன்று பாடங்களே வலியுறுத்தப்படுகின்றன. (அ) சீடர்கள் தங்களுடைய கடவுள் அனுபவத்தை நற்செய்தியாக அறிவிக்க வேண்டும், (ஆ) தங்களுடைய திறனைப் பயன்படுத்த வேண்டும், (இ) நிறையத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஈ. பிளவுபடா அர்ப்பணம்

லூக்கா நற்செய்தியாளர் பற்றிய நாவல் ஒன்றில், அவருடைய இளவயது காதலியை திருமணம் செய்யத் துடிக்கின்றார். அப்போது அக்காதலி சொல்லும் வார்த்தைகள் மிக அழகானவையாக இருக்கும்: 'நீ நிரந்தரத்திற்காகப் படைக்கப்பட்டவன். தற்காலிகத்தின்மேல் உனக்கு நாட்டம் வேண்டாம். உன் எழுத்துகள் நிரந்தரமாக வேண்டுமெனில், உன் ஆசை வார்த்தைகளைச் சுருக்கிக்கொள்!' எல்லாவற்றுக்கும் ஒரு விலை கொடுக்க வேண்டும். தன் பிளவுபடா அர்ப்பணத்துக்காக லூக்கா கொடுத்த விலை அதிகம். இன்று அவருடைய எழுத்துகள் நிரந்தரமாகிவிட்டன. அவருடைய எழுத்துகளில் பொதிந்துள்ள இலக்கியத் திறமும் மொழிப் புலமையும் நமக்கு வியப்பளிக்கின்றன. நாம் எடுக்கின்ற எந்த வேலையாக இருந்தாலும் அந்த வேலையிடம் பிளவுபடா அர்ப்பணம் கொண்டிருத்தல் நலம்.

உ. வரலாற்று உணர்வு

லூக்கா, கிறிஸ்து நிகழ்வை வெறும் இறையியல் நிகழ்வாகப் பதிவு செய்யாமல், மனுக்குலத்தின் வரலாற்றில் - நேரத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டு  - நடந்த நிகழ்வாகப் பதிவு செய்கின்றார். 'வரலாற்று உணர்வு' நம்மை வேரூன்றியவர்களாகவும், கிளைபரப்புபவர்களாகவும் இருக்கச் செய்கின்றது. வரலாற்று உணர்வுதான் நாம் ஏதாவது ஒன்றை இந்த மனுக்குலத்திற்குச் செய்ய வேண்டும் என்று நம்மைத் தூண்டுகின்றது. நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொன்றுக்கும், நமக்கும் ஒரு வரலாறு இருக்கின்றது. வரலாற்று உணர்வு நமக்கு எதிர்நோக்கைத் தருகின்றது. வரலாற்று உணர்வு, நாம் யாவரும் தனிமை அல்ல என்று நமக்கு உணர்த்துகிறது.

ஊ. இயேசுவின்மேல் கண்கள்

தன் பணி மற்றும் பயணத்தின் தடைகள் அனைத்திலும் லூக்கா வெற்றி காணக் காரணம் அவருடைய கண்கள் மேல்நோக்கியே இருந்தன. மேலிருந்து பார்க்கும் இயேசுவின் கண்கள் வழியாக நாம் பார்க்கும்போது நம் கண்முன் நிற்கும் அனைத்தும் சிறியதாகவே தெரிகின்றது. ஆக, நாம் பெருமை பாராட்டவோ, தயங்கி நிற்கவோ எதற்கும் இடமில்லை. இயேசுவைப் பற்றிய பல தகவல்களை லூக்கா மரியாவிடம் சேகரித்ததாக திருஅவை மரபு நமக்குச் சொல்கிறது. இது லூக்காவிடம் விளங்கிய உறவு ஆற்றலைக் காட்டுகிறது. மனித உறவுகள் அல்லது தொடர்புகளே நம்மையும் நம் பணியையும் மேம்படுத்தும் என்ற லூக்காவின் அறிதல் நமக்கு வியப்பாக இருக்கிறது.

லூக்காவும், லூக்கா எழுதிய நற்செய்தியும் இன்று நம் உள்ளத்தில் நிறையட்டும்!


Saturday, October 15, 2022

இறை மின்னேற்றிகள்

ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு

I. விடுதலைப் பயணம் 17:8-13 II. 2 திமொத்தேயு 3:14-4:2 III. லூக்கா 18:1-8

இறை மின்னேற்றிகள்

சில ஆண்டுகளுக்கு முன் டுவிட்டரில் வந்த கீச்சு இது: 'நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் முன்பெல்லாம் நினைவுகளை விட்டுச் சென்றார்கள், இன்றோ வெறும் சார்ஜர்களை மட்டுமே விட்டுச்செல்கிறார்கள்.' 

'சார்ஜர்கள்' அல்லது 'மின்னேற்றிகள்' அல்லது 'மின்மாற்றிகள்' - இவை இன்று பல வீடுகளில் மின்பகிர்வுப் பெட்டியின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன. 'உடுக்கை இல்லாதவன் கை போல சார்ஜர் இல்லாதவன் கை' பரிதவித்து நிற்கும். இன்று நம்முடைய மடிக்கணினி, ஐபேட், ஸ்மார்ட்ஃபோன் போன்றவை இயங்க வேண்டுமெனில் ஆற்றல் தேவை. இந்த ஆற்றல் மின்சாரம் வழியாக நமக்குக் கிடைத்தாலும், மின்சாரத்தை குறைந்த அழுத்தத்திற்கு மாற்றி அவற்றை நம் கருவிகளுக்குக் கொடுப்பவை சார்ஜர்களே. சார்ஜர்கள் தங்களில் பயனற்றவை. ஆனால், அவை தங்களை மின்சாரத்தோடும் கருவிகளோடும் இணைத்துக்கொண்டால்தான் அவற்றால் கருவிகளுக்குப் பயனுண்டு.

நம்மையும், இறைவனையும் இணைக்கும் மூன்று சார்ஜர்களைப் பற்றிப் பேசுகின்றன இன்றைய வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகம் (காண். விப 17:8-13) நம்மை ஒரு போர்க்களத்திற்கு அழைத்துச் செல்கிறது. இஸ்ரயேலர் செங்கடலைக் கடந்துவிட்டனர். அவர்கள் வாக்களித்த நாட்டிற்குப் பயணம் செய்கின்றனர். அவர்கள் செல்லும் வழியில் அமலேக்கியர் என்னும் நாடோடிக் குழுவினர் குடியிருக்கின்றனர். அவர்களுடைய எல்கையையும் பாதையையும் பயன்படுத்த அவர்கள் இஸ்ரயேலர்களை அனுமதிக்கவில்லை. எனவே, போர் அவசியமாகிறது. அமலேக்கியர்கள் ஏற்கெனவே போர்ப்பயிற்சி பெற்றவர்கள். இஸ்ரயேலர்கள் ஏறக்குறைய 400 ஆண்டுகளாக செங்கல் தயாரித்துக்கொண்டிருந்தவர்கள். அவர்களுக்குப் போரைப் பற்றி ஒன்றும் தெரியாது. கடவுள்தாமே இங்கே குறுக்கிட்டு அவர்களுக்கு அமலேக்கியர்மேல் வெற்றியைத் தருகின்றார். யோசுவாவின் தலைமையில் ஒரு குழுவினர் - கொஞ்சம் குச்சி, மட்டை பிடிக்கத் தெரிந்தவர்கள் - அமலேக்கியருக்கு எதிராகப் போரிடுகின்றனர். இவற்றால் வெல்ல முடியாது என்று நினைக்கின்ற மோசே, ஆரோன், மற்றும் கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச்செல்கின்றனர். மோசே வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்துகின்றார். எப்போதெல்லாம் அவருடைய கைகள் உயர்ந்து இருந்தனவோ அப்போதெல்லாம் இறைவல்லமை கீழே போரிட்டுக்கொண்டிருக்கும் யோசுவா மற்றும் வீரர்களுக்குப் பாய்கிறது. கைகள் தளர்வுறும்போதெல்லாம் படையும் பின்வாங்குகிறது. இதைக் காண்கின்ற ஆரோனும் கூரும் உடைந்த சார்ஜருக்குச் ஸெல்லோ டேப் போடுவதுபோல, தளர்ந்து போன மோசேயை ஒரு பாறையில் அமரச் செய்து இரு கைககளையும் ஆளுக்கொன்றாகப் பிடித்துக்கொள்கின்றனர். இஸ்ரயேலர் போரில் வெற்றிபெறுகின்றனர்.

இங்கே வெற்றி என்பது கடவுளின் செயலாற்றலால் நடந்தேறுகிறது. கடவுளின் செயலாற்றல் இங்கே எப்படி நடக்கிறது? ஒரு குழுமத்தின் வழியாக அல்லது கூட்டுமுயற்சியின் வழியாக. யோசுவா, அவருடைய தலைமையில் வீரர்கள், மோசே, ஆரோன், மற்றும் கூர் ஆகியோரின் கூட்டுமுயற்சி அவர்களைக் கடவுளையும் மக்களையும் இணைக்கும் மின்னேற்றியாக (சார்ஜராக) மாற்றுகிறது.

ஆக, நாம் வாழும் குழுமம் அல்லது சமூகம் அல்லது குடும்பம் இறைமின்னேற்றியாக இருக்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 திமொ 3:14-4:2) பவுல் திமொத்தேயுவுக்கு வழங்கும் அறிவுரைகளைக் கொண்டிருக்கிறது. இந்த அறிவுரைப் பகுதியில்தான் மறைநூலைப் பற்றிய ஒரு முக்கியமான உண்மையை வெளியிடுகிறார் பவுல்: 'மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது.' எபேசுத் திருச்சபையில் நிறைய போலிப் போதகர்களும் போலிப் போதனைகளும் இருந்தன. மக்கள் எளிதாக மற்ற போதனைகளால் ஈர்க்கப்பட்டனர். மேலும், இயேசு கிறிஸ்துவைப் பற்றி பவுல் மற்றும் திமொத்தேயு போதித்தவற்றை அவர்கள் எதிர்க்கவும் செய்தனர். இத்தகைய போலிப் போதனைகளுக்கு எதிராக திமொத்தேயு என்ற இளவல் துணிவாக நிற்க வேண்டுமென்றால், அவர் மறைநூலை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். இந்த மறைநூலை திமொத்தேயு அவருடைய இளமைப் பருவம் முதலாகக் கற்றிருக்கின்றார். இந்த மறைநூல் நான்கு நிலைகளில் பயன்படுவதாக பவுல் எழுதுகிறார்: (அ) கற்பிப்பதற்கு - புதிய நம்பிக்கையாளர்களுக்குக் கற்பிக்கவும், பழையவர்களுக்கு கற்பித்தலை நினைவூட்டவும், (ஆ) கண்டிப்பதற்கு - தவறான போதனையைப் போதிப்பவர்களை, போதனையில் பிறழ்வுகளை ஏற்படுத்துபவர்களை, (இ) சீராக்குவதற்கு - நேரிய வழியில் செல்லும் ஒருவரைத் தொடர்ந்து நேரிய வழியில் நடக்கச் செய்வதற்கும், வழி தவறுபவர்களைச் சரியான வழிக்குக் கொண்டுவந்து சேர்க்கவும், மற்றும் (ஈ) நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கு - அறநெறி வாழ்வுப் பயிற்சிக்கு. 

இப்படியாக மறைநூலை சிறுவயதிலிருந்தே கற்றிருக்கின்ற, அதன் பயன்களை அறிந்திருக்கின்ற திமொத்தேயு, 'இறைவார்த்தையை அறிவிக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் கருத்தாய் இருக்க வேண்டும். கண்டித்துப் பேசவும், கடிந்துகொள்ளவும் அறிவுரை கூறவும், பொறுமையோடு கற்றுக்கொடுக்கவும் வேண்டும்.'

ஆக, பவுலைப் பொருத்தவரையில் மறைநூல் அல்லது விவிலியம் இறைமின்னேற்றியாக இருக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 18:1-8) இயேசு தன்னுடைய இரண்டாம் வருகையை முன்னறிவித்தலின் பின்புலத்தில் இருக்கின்றது. அதையொட்டியே இன்றைய நற்செய்திப் பகுதியின் இறுதியில், 'மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?' எனக் கேட்கின்றார். தன்னுடைய சீடர்களும் அவர்களுக்குப் பின் வருகின்ற நம்பிக்கையாளர்களும் தன்மேல் நம்பிக்கையை இழந்துவிடுவார்களோ என்ற ஐயம் இயேசுவுக்கு இருக்கவே செய்தது. அப்படி நம்பிக்கை இழப்பதற்கான வாய்ப்பும் இயேசுவின் சமகாலத்திலேயே நிறைய இருந்தது. இந்த அபாயத்தை அவர்கள் எதிர்கொள்ள இயேசுவே ஓர் உவமையைச் சொல்கின்றார். 

இந்த உவமையில் வரும் நடுவர் 'கடவுளுக்கும் அஞ்சுவதில்லை. மனிதர்களையும் மதிப்பதில்லை.' திருச்சட்டத்தின் முதன்மையான மற்றும் இரண்டாவது கட்டளைகளான இறையன்பும், பிறரன்பும் இவரிடம் அறவே இல்லை. யாருக்கும் எதிலும் கடன்படாதவராக, யாருக்கும் பயப்படாதவராக, யாரையும் திருப்திப்படுத்த விரும்பாதவராக இருக்கிறார். 'இதைச் செய்' என்று இவரிடம் யாரும் வற்புறுத்தவோ, பரிந்துபேசவோ, விரும்பிக் கேட்கவோ முடியாது. தன்னுடைய வாடிக்கையாளரான ஒரு கைம்பெண்ணுக்கு நீதி வழங்கும் கடமையையும் அவர் செய்யவில்லை. யாருக்கும் அஞ்சாத அவர் ஒரு கைம்பெண் என்ற பிள்ளைப்பூச்சிக்கா அஞ்சுவார்? இல்லை. ஆனாலும், கைம்பெண்ணின் தொல்லையின்பொருட்டு அவருக்கு நீதி வழங்குகிறார். 

இந்தப் பின்புலத்தில் நீதியற்ற நடுவரோ நீதி வழங்கினார் என்றால் நீதியும் இரக்கமுமான கடவுள் நீதி வழங்கத் தாமதம் செய்வாரோ? என்ற கேள்வியை எழுப்புகின்றார் இயேசு. 

இயேசு இறந்து உயிர்த்து விண்ணேற்றம் அடைந்தபின் திருத்தூதர்கள் ஏறக்குறைய இக்கைம்பெண் போல நிர்க்கதியாக நின்றனர். அவர்களுக்கென்று எந்தவொரு உடைமையும், உறவும் இல்லை. நீதியும் இல்லை என்றால் அவர்கள் இன்னும் அதிகம் அவதிப்படுவார்கள். கைம்பெண்ணுடைய விடாத வேண்டுதல் அவருடைய விண்ணபத்தை நிறைவேற்றியதுபோல, விடாமுயற்சியுடன்கூடிய இறைவேண்டல் நம்பிக்கையைக் காத்துக்கொள்ள உதவும் என்று அறிவுறுத்துகிறார் இயேசு.

ஆக, விடாமுயற்சியுடன் கூடிய இறைவேண்டல் இறைமின்னேற்றியாக இருக்கிறது.

இவ்வாறு, இறைமின்னேற்றியாக இன்றைய முதல் வாசகம் குழுமத்தையும், இரண்டாம் வாசகம் மறைநூலையும், நற்செய்தி வாசகம் விடாமுயற்சியுடன் கூடிய இறைவேண்டலையும் முன்வைக்கிறது.

இந்த மூன்று சார்ஜர்களை - குழுமம், மறைநூல், இறைவேண்டல் - நம்முடைய இறைமின்னேற்றிகளாக வைத்துக்கொள்வது எப்படி?

1. குழுமமும் கூட்டு முயற்சியும்

இஸ்ரயேல் மக்கள் அமலேக்கியரோடு போரிட்டு பெற்ற வெற்றி இறைவனின் அருள் மற்றும் மனித முயற்சி ஆகியவற்றின் இனிய கலவையாக இருக்கிறது. மேலும், சிறிய குழுமத்தின் முயற்சி பெரிய குழுமத்திற்கு வெற்றியைத் தருகின்றது. ஆக, நாம் வாழும் நம்முடைய குடும்பம், சமூகம், குழுமம், பங்கு, ஊர், நகரம் ஆகிய அனைத்தும் குழுமங்களே. இவை அனைத்துமே இறைமின்னேற்றிகளே. இவை அனைத்தின் வழியாகவும் இன்று நாம் நம்மையே ஆற்றல்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், இதற்கு மாற்றாக இன்றைய உலகம் தனிநபர் வாழ்வை அதிகமாக முதன்மைப்படுத்துகிறது. ஒவ்வொருவரும் தன்னுடைய வீடியோ கேம், காணொளி, சமூக வலைதளம் என்று மூடிக்கிடக்கவும், அல்லது எல்லா மனிதர்களையும் துறந்துவிடும் பின்நவீன சந்நியாசிகளை உருவாக்குவதையும் இன்றைய உலகம் விரும்புகிறது. ஆனால், 'யாரும் எனக்கு வேண்டாம்' என்று எல்லாரையும் இயல்பு வாழ்க்கையில் துறந்துவிட்டு, செயற்கையான எண்ணியல் வாழ்வில் நண்பர்கள் வட்டத்தைப் பெருக்கிக் கொள்ளும் அதிநவீன சந்நியாசிகள் தங்களுடைய குழுமங்களுக்குத் திரும்ப வேண்டும். ஏனெனில், ஒருவர் மற்றவரை அன்பு செய்யும் குழுமத்தில் அவர்கள் தங்களையே இணைத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்திலும், குழுமத்திலும்தான் ஒருவருக்கு முதல் இறைமின்னேற்றி கிடைக்கிறது.

2. மறைநூல் அல்லது இறைவார்த்தை

'மறைநூல் அனைத்தும் கடவுளால் தூண்டப்பட்டது' என்று பவுல் சொல்லும்போது அவர் முதல் ஏற்பாட்டு மறைநூலையே மனத்தில் வைத்திருக்கிறார். ஏனெனில் பவுல் இத்திருமுகத்தை எழுதும் காலத்தில் இரண்டாம் ஏற்பாட்டு நூல்களும் திருமுறையும் முழுமை பெறவில்லை. இயேசு நிகழ்வில் வார்த்தையே மனிதராக நம்மோடு குடிகொண்டுள்ளது. விவிலியத்தை நாம் வாசிக்கும்போது நாம் இறையறிவில் வளர்வதோடு, நம்மைப் பற்றிய, உலகைப் பற்றிய, மற்றவர்களை பற்றிய அறிவும் நமக்கு வளர்கிறது. இன்று நாம் மறைநூலை இறைமின்னேற்றியாகப் பயன்படுத்துகிறோமா? நாம் மறைநூல் அறிவைப் பெற விரும்புகிறோமா? கற்பிக்கவும், கண்டிக்கவும், சீராக்கவும், நேரிய வழியில் நடக்கப் பயிற்றுவிக்கவும் மறைநூலைப் பயன்படுத்துகிறோமா? அல்லது ஆலயத்திலும் செபக்கூட்டங்களிலும் மட்டுமே வாசிக்கப்படும் நூலாக நாம் அந்நியப்படுத்திடுவிடுகிறோமா?

3. விடாமுயற்சியுடன்கூடிய இறைவேண்டல்

நாம் செபிக்கின்றோம். சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி, முறைப்படுத்தப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி செபிக்கின்றோம். ஆனால், வேண்டுவது கிடைக்கும் வரை செபிப்பதில்லை. பல நேரங்களில் மனம் தளர்ந்து போகின்றோம். நம்முடைய தவறான வாழ்க்கை முறை, மற்றவர்களைப் பற்றிய எண்ணம், கடவுளைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஆகியவற்றால் இறைவேண்டலைக் கைவிடுகிறோம். கைம்பெண்ணுக்கு வேறு வழியே இல்லை. ஆகையால் நடுவரை உறுதியாகப் பற்றிக்கொண்டாள். இந்த இறைச்சார்பு நிலை என்னிடத்தில் இருக்கிறதா? சில நேரங்களில் கடவுளை நான் என் வாழ்வில் இறுதியான தேடுபொருளாகவே வைத்துள்ளேன். என்னுடைய மனமும் கால்களும் தளர்வதற்கான காரணிகள் எவை? கைகள் செய்யாததை முழங்கால்கள் செய்யும் என்றால் நான் அவர்முன் எத்தனை முறை மண்டியிடத் தயாராக இருந்துள்ளேன்? இறைவேண்டலை நான் ஆற்றல்பெறும் இடமாக பார்க்கிறேனா?

இறுதியாக,

இன்று நம்மைச் சுற்றி நிறைய போலி சார்ஜர்கள் இருக்கின்றன. இவை நம்மை சார்ஜ் செய்வதுபோல செயல்பட்டு நம் உடலில் எஞ்சியிருக்கும் ஆற்றலையும் உறிஞ்சிவிடுகின்றன. குழுமமும், இறைவார்த்தையும், இறைவேண்டலும் நம்மை உற்சாகப்படுத்தும், நமக்கு வெற்றியைக் கொடுக்கும் மின்னேற்றிகள். 

இதை அறிந்ததால்தான் திருப்பாடல் ஆசிரியர், 'மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன். விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்' (121:1) என்று முழங்குகின்றார். இறைமின்னேற்றிகளோடு நாம் தொடர்பு கொண்டிருந்தால், 'போகும் போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் நம்முடைய வாழ்வு என்னும் அலைபேசியும் மடிக்கணினியும் இயக்கத்தில் இருக்கும்!'


Friday, October 14, 2022

அவிலா நகர் தெரசா

இன்றைய (15 அக்டோபர் 2022) திருநாள்

அவிலா நகர் தெரசா

அக்டோபர் மாதம் 1ஆம் தேதி, குழந்தை இயேசுவின் தெரசா (சிறுமலர்) திருநாளைக் கொண்டாடும் நாம், இன்று (15 அக்டோபர்) அவிலா நகர் தெரசாவின் திருநாளைக் கொண்டாடுகின்றோம். இவர் திருஅவையின் மறைவல்லுநர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். 'உள்மனக் கோட்டை' (The Interior Castle) என்பது இவரது புகழ்பெற்ற நூல்.

இவரைப் பற்றிய, மற்றும் இவரின் எழுத்துகளில் உள்ள சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறேன்:

1. புத்தக வாசிப்பிற்கு இவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். புத்தகம் வாசிக்காத நாள் தன் வாழ்வில் வீணாய்ப் போன நாள் என அவர் அடிக்கடிக் குறிப்பிடுகிறார். இன்று நாம் நிறைய வாசிக்கிறோம். நிறைய மின்பதிவுகளை வாசிக்கிறோம். ஆனால், அவற்றை விரைவில் மறந்துவிடுகிறோம். புத்தகங்கள் வாசிப்பில் தனியொரு மகிழ்ச்சி இருக்கிறது என்பதே உண்மை. நண்பர் ஒருவர் என்னிடம், 'இ-புக், அமேசான் கின்ட்ல் என வந்துவிட்டது. இனிமேல் யாரும் புத்தகங்கள் வாங்கவும், வாசிக்கவும் மாட்டார்கள். ஆக, புத்தகம் எழுதுவதை நிறுத்திக்கொள்!' என்றார். ஆனால், லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வந்துவிட்டதால் யாரும் படிக்கட்டுகளை இடித்துவிட்டார்களா? அல்லது படிக்கட்டுகள் இல்லாமல் கட்டடங்கள் கட்டப்படுகின்றனவா? புத்தகங்கள் அழிவதில்லை. ஏனெனில், அவை வாசகர்களின் உயிருக்குள் நுழைந்துவிடுகின்றன.

2. 'அந்தாரிகா'

இப்படித்தான் இவர் இஸ்பானிய மொழியில் அழைக்கப்பட்டார். அதாவது, 'நடக்கும் நபர்' அல்லது 'நடக்கும் புனிதை.' இஸ்பானிய நாட்டின் பல பகுதிகளுக்கு நடந்தே சென்றவர். சென்ற இடங்களிலெல்லாம் துறவற இல்லத்தை ஏற்படுத்தியவர். தான் நடக்கும்போது தன்னை அறிந்துகொண்டதாகவும், தன் வலிமையை நடையின் வலுவின்மையில் கண்டார் எனவும் எழுதுகின்றார்.

3. 'உன்னை அறிவதும் உன் மொழி பேசுவதும் செபம்'

அவருடைய சமகாலத்தில் நிறைய இறைவேண்டல்கள் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, நிறுவனமாக்கப்பட்ட வேளையில், தன் சகோதரிகளிடம், 'நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை அறிதலும், உங்கள் மொழியில் உங்கள் உள்ளத்து உணர்வுகளை இறைவனிடம் சொல்வதுமே செபம்' என ஒரு மாற்றுக் கருத்தை முன்வைத்தவர் அவிலா நகர் தெரசா. அவருடைய 'உள்மனக் கோட்டையின்' சாரமும் இதுவே. நம் உள்ளம் ஒரு கோட்டை போன்றது. ஆனால், அந்தக் கோட்டைக்குள் நுழைந்த ஒருவர் அங்கே காணும் புதையல்கள் அதிகம். பல நேரங்களில் நாம் கோட்டையைச் சுற்றிக்கொண்டே இருக்கிறோமே தவிர, அதனுள் நுழைய மறுக்கிறோம் அல்லது தயங்குகிறோம்.

4. சரணாகதி

'ஆண்டவரே! நான் உன்னவள்! நீர் என்னிடம் விரும்புவது என்ன?' - இதுதான் அவருடைய அன்றாட இறைவேண்டல். தான் எடுத்த முடிவு மற்றும் தீர்மானத்தில் நிலைத்து நிற்கும் வலிமை பெற்றவர் அவர்.

5. 'சிங்கமும் எறும்பும்'

தான் சில நேரங்களில் சிங்கம் போல உணர்ந்ததாகவும், சில நேரங்களில் எறும்பு போல உணர்ந்ததாகவும் எழுதுகிறார் தெரசா. ஒரே நேரத்தில் தன் வலிமை மற்றும் வலுவின்மையை ஏற்றுக்கொள்கிறார் அவர். பல நேரங்களில் நாம் நம் எதார்த்தங்களை ஏற்றுக்கொள்ளத் தயங்கி, எறும்பு போல இருந்தாலும் சிங்கம் போல இருப்பதாகத் தற்பெருமை அல்லது இறுமாப்பு கொள்கிறோம். இன்னும் சில நேரங்களில் சிங்கம் போல இருந்தாலும், நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டு எறும்பு போல நினைத்துக்கொள்கிறோம். நம் இரட்டைத் தன்மையை ஏற்று அதைக் கொண்டாடுவது தெரசா தரும் பாடம்.

6. துன்பமும் இன்பமும்

இவர் காட்சித் தியானத்தில் தன்னையே கரைத்து, தன்னைக் கடவுளின் காதலியாக உருவகித்துக் கொண்டவர். ஆனால், காதலின் இன்பம் சிலுவையின் துன்பத்தில் இருக்கிறது என்றவர். இயேசுவின் துன்பங்களில் தன்னை இணைத்துக்கொள்வதில் உள்ள இன்பத்தையே அவருடைய உணர்ச்சிப் பெருக்கு நமக்குக் காட்டுகிறது. துன்பம் என்பது நாம் தப்பிக்க வேண்டிய எதார்த்தம் அல்ல என்கிறார். 'இனிமைமிகு பாடல்' என்னும் விவிலிய நூலின் பின்புலத்தில்தான் இவர் தன் சகோதரிகளுக்கான கொள்கை வரைவை எழுதுகின்றார். தலைவன்-தலைவி உறவில் உள்ள காத்திருத்தல், வலி, ஏக்கம், பிரிவு, சோர்வு ஆகியவை இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவிலும் இருக்கும் என்பது இவருடைய புரிதல்.

திருஅவையின் வல்லுநராக இருக்கும் இவரைக் கொண்டாடும் இந்நாளில், இன்னும் அதிகம் புத்தகங்களை வாசிக்கவும், நம் வாழ்வின் இரட்டைத் தன்மையை ஏற்றுக்கொள்ளவும் முன்வருவோம்.

நம் இருத்தலும் இயக்கமும் இறைவனால், உலகம் தோன்றுவதற்கு முன்பே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதை அறிவதும், அதை வாழ்வாக்குவதும் நம் அன்றாடச் செயல் ஆக வேண்டும்.

நம் உள்மனக் கோட்டைக்குள் நுழைவதே முதல் படி.

தெரசாவின் எழுத்துகளில் என்னை மிகவும் கவர்ந்த கவிதை இது:


'எதுவும் உன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்.

எதுவும் உனக்கு அச்சம் தர வேண்டாம்.

எல்லாம் கடந்து விடும், மாறி விடும்.

கடவுள் ஒருவரே மாறாதவர்.

பொறுமை அனைத்தையும் வெல்லும்.

உன்னிடம் கடவுள் இருந்தால் உனக்குக் குறையொன்றும் இல்லை.

கடவுளே நம் நிறைவு - இன்றும் என்றும்!'


Thursday, October 13, 2022

அச்சம்

இன்றைய (14 அக்டோபர் 2022) நற்செய்தி (லூக் 12:1-7)

அச்சம்

இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடக்கத்தில் மிக அழகானதொரு வார்த்தைப்படத்தை லூக்கா பதிவு செய்கின்றார்: 'ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர்'. இன்று நாம் ஏதாவது ஒரு செபக்கூட்டம் அல்லது சிறப்பு நிகழ்வு வைக்க வேண்டுமென்றால், ஆயிரக்கணக்கில் முயற்சிகள் எடுத்து விளம்பரம் செய்ய வேண்டியுள்ளது. ஒரு நிகழ்வுக்கு மக்களை வரச் சொல்லுமாறு நாம் ஆயிரக்கணக்கில் குறுஞ்செய்திகள் அனுப்புகின்றோம், பதாகைகள் வைக்கின்றோம், நினைவூட்டல் அளிக்கின்றோம். இருந்தாலும் நாம் கூடும் இடங்கள் (வெகு சில இடங்கள் தவிர) அனைத்திலும் மக்களின் பங்கேற்பு குறைவாகவே இருக்கின்றது. ஆனால், எந்தவொரு விளம்பரமும், நினைவூட்டலும், பதாகைகளும் இல்லாமல் இயேசுவைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். தனிவரம் அல்லது அருள் மறைந்து நிறுவனமயம் தொடங்கும்போது ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடுகிறது என்பது நிதர்சனமான உண்மை. 

இன்றைய நற்செய்தி வாசகம், 'அச்சம்' என்ற உணர்வை நாம் எப்படி கையாளுவது எனக் கற்றுத்தருகிறது. 'அச்சம்' ஒரு நடுநிலையான உணர்வு. நேர்முக அச்சம் நம்மைக் கவனமுள்ளவர்களாக இருக்க உதவி செய்வதுடன், நம் வாழ்க்கையைக் காத்துக்கொள்ள உதவி செய்கிறது. எடுத்துக்காட்டாக, சாலையில் செல்லும்போது எதிர்வரும் வாகனங்கள் பற்றிய அச்சமே நாம் சாலைமேல் கவனமாக இருக்க நம்மைத் தூண்டுகிறது. எதிர்மறையான அச்சம் நம்மை முடக்கிப் போடுகிறது. எடுத்துக்காட்டாக, பொதுவெளியில் பேசுவதை அச்சமாகக் கருதுகின்ற குழந்தை இறுதி வரையில் பொதுவெளியைக் கண்டு பயந்துகொண்டே இருக்கின்றது.

மூன்று நிலைகளில் அச்சம் நமக்கு வருகின்றது என்று இன்றைய நற்செய்தி உணர்த்துகின்றது:

(அ) அடுத்தவரின் தீமை அல்லது தீய எண்ணம்

எடுத்துக்காட்டாக, எனக்கு அடுத்த அறையில் இருக்கும் ஒருவர் எனக்கு எதிராகத் தீங்கு செய்வார் என்ற எண்ணம் எனக்குத் தோன்றுகிறது என வைத்துக்கொள்வோம். மனிதர்கள் நாம் இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்டிருந்தாலும் நம் எண்ணம், செயல் ஆகியவற்றில் தீமை நிறைந்து நிற்கின்றது. நாம் அதை முயற்சி எடுத்து வெற்றி கொள்ள வேண்டும். 'பரிசேயரின் புளிப்பு மாவு குறித்து எச்சரிக்கையாக இருங்கள்' என்கிறார் இயேசு. இங்கே 'புளிப்பு மாவு' என்பது எதிர்மறையான வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, புளிப்பு மாவு தவிர்க்கப்பட வேண்டியது. ஏனெனில், அது பார்ப்பதற்கு நல்ல மாவு போல இருந்தாலும் உள்புறத்தில் புளிப்பாக இருக்கின்றது. மேலும், அது எளிதில் நல்ல மாவையும் புளிப்பு மாவாக்கிவிடும். ஆக, அடுத்தவரில் இருக்கும் புளிப்பு என்னும் தீமை நமக்கு அச்சம் தருகின்றது. இந்த அச்சத்தைக் களைய நாம் என்ன செய்ய வேண்டும்? எச்சரிக்கையாக, முன்மதியோடு இருக்க வேண்டும்.

(ஆ) இரகசியம் வெளியிடுதல்

நம்மைப் பற்றிய இரகசியம் மற்றவர்களுக்குத் தெரிந்தால் நம்மை ஒருவிதமான அச்சம் பற்றிக்கொள்கின்றது. ஏனெனில், நம் வலுவின்மை மற்றவர்களுக்குத் தெரிந்தவுடன் நம் வலிமை நம்மைவிட்டு எளிதில் அகன்றுவிடுகிறது. இன்னொரு பக்கம், மற்றவர்கள் நமக்குத் தெரிவித்த இரகசியத்தை நாம் வெளியிடும்போதும் நாம் அஞ்சுகிறோம். ஏனெனில், அது நமக்கே தீங்காக முடியும். இன்றைய உலகில் இரகசியம் என்று எதுவும் இல்லை. நாம் இருளில் செய்வது வெளிச்சத்தில் தெரியும். உள்ளறையில் காதோடு காதாய்ப் பேசுவது கூரை மீதிருந்து அறிவிக்கப்படும். இந்த அச்சத்தை நாம் எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்? நம் உள்ளேயும் வெளியேயும் ஒரே மாதிரியான இயல்பு இருக்க வேண்டும். நமக்கு நாமே முரண்படுபவர்களாக வாழக் கூடாது.

(இ) தாழ்வாக மதிப்பிடுதல்

'சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்' என்கிறார் இயேசு. இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் எனில், ஐந்தாவது குருவி இலவசக் குருவி, அல்லது கொசுறுக் குருவி. மற்றவர்களின் இரக்கத்தில் இருக்கின்ற அந்தக் கொசுறுக் குருவியே இறைவனின் பார்வையில் மதிப்புள்ளதாக இருக்கிறது எனில், இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்டுள்ள நாம் எவ்வளவு உயர்ந்தவர்கள்! ஆக, நம்மைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை அல்லது குறைவான மதிப்பீட்டைக் களைதல் அவசியம். 'நான் இதுதான்!' 'நான் இப்படித்தான்!' என்று தன்னையே உணர்பவர் எதைக் கண்டும் அஞ்சுவதில்லை. ஆக, 'சிட்டுக்குருவியை விட நான் மேலானவர்' என்ற உணர்வு என் அச்சத்தைக் களைகிறது.

நம் அச்சம் மற்றும் முற்சார்பு எண்ணம் நம்மை விட்டு அகன்றால், சிட்டுக்குருவிகள் போல நாம் கட்டின்மையோடு இலகுவாகப் பறக்க முடியும்.


Wednesday, October 12, 2022

பகைமை உணர்வு மிகுந்தவராய்

இன்றைய (13 அக்டோபர் 2022) நற்செய்தி (லூக் 11:47-54)

பகைமை உணர்வு மிகுந்தவராய்

பரிசேயர் ஒருவரின் வீட்டுக்கு உணவருந்தச் சென்ற இயேசு, அங்கே, தூய்மை பற்றிய போதனையில் தொடங்கி, அவர்களின் முதன்மை விரும்பும் எண்ணம், இரட்டை வேடம், வெளிவேடம், திருச்சட்ட அறிஞர்கள் நடந்துகொள்ளும் விதம் என அனைத்தையும் சாடுகின்றார். அவரின் சாடுதல் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நிறைவு பெறுகிறது. 

இயேசு பரிசேயர்களைச் சாடும் பகுதிகள் பலருக்கு நெருடலை ஏற்படுத்துகின்றன. பகைவருக்கும் அன்பு எனக் கற்பித்த இயேசு தனக்குப் பகைவர்களாக இருந்த பரிசேயர்கள்மேல் அன்பு காட்டாதது ஏன்? என்றும் மாணவர்கள் கேள்வி எழுப்புவதுண்டு.

இயேசு சாடுதல் பகுதியை எப்படிப் புரிந்துகொள்வது?

(அ) தவற்றைச் சுட்டிக்காட்டுதல் இறைவாக்குப் பணியே. அருள்பணி அல்லது இறைவாக்குப் பணி என்பது வெறும் அன்பையும் இரக்கத்தையும் போதிக்கும் பணி அல்ல. மாறாக, தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைத் திருத்துவதும் அருள்பணியே. நாம் தவறு செய்பவர்களைக் கடிந்துகொள்ளக் கூடாது. ஆனால், தவறுகளைக் கடிந்துகொள்ள வேண்டும். இயேசு தவறுகளைக் கடிந்துகொள்ள விரும்புவதால் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றார்.

(ஆ) மனமாற்றத்திற்கான அழைப்பு. தவறுகளைச் சுட்டிக்காட்டுவதன் வழியாக இயேசு அவர்களை மனமாற்றத்திற்கு அழைக்கின்றார். வெளிவேடம், போலியான வாழ்க்கை ஆகியவற்றை விட்டு அவர்கள் உண்மையின்பால் திரும்ப வேண்டும் என்பது இயேசுவின் விருப்பமாக இருக்கிறது.

(இ) தன் சீடர்கள் நடுவே அவை இருத்தல் ஆகாது. மற்றவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதன் வழியாக, அத்தவறுகள் தன் சீடர்களின் குழுவிலும் இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகின்றார். பரிசேயர்கள் மற்றும் திருச்சட்ட அறிஞர்களின் தவறுகள் சீடர்கள் நடுவிலும் எழ வாய்ப்பிருக்கிறது என்பதால் இயேசு மறைமுகமாகத் தன் சீடர்களையும் எச்சரிக்கின்றார்.

இயேசுவின் சாடுதல்கள் பகைவர்களை மனமாற்றுவதற்குப் பதிலாக அவர்களின் கோபத்தைத் தூண்டி எழுப்புகின்றன. தன் செயல்களின் விளைவை அறிந்தவராக இருக்கும் இயேசு தொடர்ந்து வழிநடக்கின்றார்.


Tuesday, October 11, 2022

இருவகை இயல்புகள்

இன்றைய (12 அக்டோபர் 2022) முதல் வாசகம் (கலா 5:18-25)

இருவகை இயல்புகள்

ஆகார் உடன்படிக்கை, சாரா உடன்படிக்கை என்று இரு உருவகங்களைக் கையாண்டு, முதல் வகை உடன்படிக்கை மனித இயல்பு அல்லது செயல்களின் அடிப்படையில் ஆனது என்றும், இரண்டாம் வகை உடன்படிக்கை வாக்குறுதி அல்லது அருளின் அடிப்படையில் ஆனது என்றும் வரையறுக்கின்ற புனித பவுல், இருவகை இயல்புகள் பற்றிப் பேசுகின்றார்: (அ) ஊனியல்பு, மற்றும் (ஆ) ஆவிக்குரிய இயல்பு.

ஊனியல்பின் செயல்களாக, பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் ஆகியவற்றை முன்வைக்கிறார்.

தொடர்ந்து, தூய ஆவியின் கனிகள் என, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகியவற்றைப் பதிவு செய்கின்றார்.

பவுலின் சமகாலத்துக் கிரேக்க இலக்கியத்தில், நேர்முக மற்றும் எதிர்மறை மதிப்பீடுகளைப் பட்டியலிட்டு எழுதுவது மரபு. அந்த மரபின் பின்புலத்தில்தான், பவுல் மேற்காணும் பட்டியலை வரைகின்றார்.

தொடர்ந்து, 'நீ கிறிஸ்து இயேசுவுக்கு உரியவரா? இல்லையா?' என்ற கேள்வியை எழுப்புகின்றார்.

கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர் என்றால் ஊனியல்பை அதன் உணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிடு என்கிறார்.

உணர்ச்சிகள் மற்றும் இச்சைகள் நம் பாதையிலிருந்து நம்மைப் பிறழ்வுபடுத்துகின்றன. இவை சிறிது நேரம் நீடிப்பவை. ஆனால், அவற்றின்பின் செல்வதால் ஏற்படும் தாக்கங்கள் நிறைய ஆண்டுகள் நீடிப்பவை.

சிலுவையில் அறைந்துவிடுதல் என்பது, அவற்றை முழுமையாக அழித்துவிடுவது.

அதன் முதற்படியாக, 

நம் உணர்ச்சிகள் மற்றும் இச்சைகள் ஆகியவற்றைப் பட்டியலிட வேண்டும்.

இரண்டு, அவற்றை விடுவதற்கான தீர்மானம் எடுக்க வேண்டும்.

மூன்று, ஒவ்வொரு நாளும் என்னும் பாதையைத் தெரிவு செய்ய வேண்டும்.

ஊனியல்பின்படி நடந்துகொண்டு, ஆவிக்குரிய இயல்பை நாடும்போது நம் வாழ்வு முன்னுக்குப் பின் முரணாக இருக்கும்.

அப்படிப்பட்ட முரண்பட்ட வாழ்வு வாழ்ந்த பரிசேயர்களையும், திருச்சட்ட அறிஞர்களையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 11:42-46) சாடுகின்றார் இயேசு.


Monday, October 10, 2022

உட்புறத்தில் உள்ளவற்றை

இன்றைய (11 அக்டோபர் 2022) நற்செய்தி (லூக் 11:37-41)

உட்புறத்தில் உள்ளவற்றை

பரிசேயர் ஒருவர் இயேசுவைத் தன்னோடு உணவருந்த அழைக்கின்றார். இயேசு, எந்த சானிட்டைஸரும் போடாமல், அல்லது 99 சதவிகிதம் கிருமிகளைக் கொல்லும் எந்த ஹேன்ட் வாஷூம் பயன்படுத்தாமல் அப்படியே பந்தியில் அமர்கிறார்.

தன் கைகழுவாத நிகழ்வை முன்வைத்து, மற்றவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கிறார் இயேசு. அதாவது, வெளிப்புறத் தூய்மையைவிட உள்புறத் தூய்மை அவசியமானது என்று அவர்களுக்குக் கற்பிக்கிறார்.

மேலும், லூக்கா நற்செய்தியில், உள்புறத்தைத் தூய்மைப்படுத்துவதற்கு இயேசு ஓர் அழகான வழியை முன்வைக்கின்றார்:

'உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்போது உங்களுக்கு அனைத்தும் தூய்iமாய் இருக்கும்'

நம் பாத்திரத்தைத் தூய்iமாக்குவதற்கான இனிய வழி, பாத்திரத்தில் உள்ள அனைத்தையும் வழித்து தர்மமாகக் கொடுத்துவிடுவது.

இது ஒரு புரட்சிகரமான செய்தியாக இருக்கிறது.

அதாவது, வெறும் சோப்பு போட்டு பாத்திரங்களைக் கழுவுவதைவிட, பாத்திரம் தூய்மையாகும் அளவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தல் சிறப்பு.

இதையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். கலா 5:1-6), 'அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கையே இன்றியமையாதது' என்கிறார். நான் கொண்டிருக்கிற நம்பிக்கை என் அன்புச் செயலாக வெளிப்பட வேண்டும்.

என் சேமிப்பறையை நான் தூய்மையாக்குவதற்கான வழி, அதில் உள்ளவற்றை அப்படியே துடைத்து எடுத்து தர்மம் செய்துவிடுவது.

இப்படிச் செய்யும்போது, சேமிப்பறை தூய்மையாவதோடு, என் மனமும் பேராசை என்ற அழுக்கிலிருந்து தூய்மையாகிறது. பாத்திரத்தில் உள்ளதையும் அப்படியே கொடுக்கும்போது என் தன்னலமும், உணவின் மேலுள்ள பேராவலும் மறைந்து போகும்.

என் பாத்திரத்தோடு என் உள்ளமும் தூய்மையானால் எத்துணை நலம்!


Sunday, October 9, 2022

அடிமைத்தளை என்னும் நுகம்

இன்றைய (10 அக்டோபர் 2022) முதல் வாசகம் (கலா 4:22-24, 26-27, 51, 5:1)

அடிமைத்தளை என்னும் நுகம்

கலாத்திய நகரத் திருஅவைக்கு நற்செய்தி அறிவிக்கிறார் பவுல். ஆனால், அவர்கள் சிறிது காலத்தில் இன்னொரு நற்செய்தியைப் பற்றிக்கொள்கின்றனர். அதாவது, போலிப் போதகர்களின் போதனைகளால் கவரப்பட்டு அதன் பின் செல்கின்றனர். மேலும், சட்டம் சார்ந்த செயல்களுக்கு, குறிப்பாக, விருத்தசேதனம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதைக் கடிந்துகொள்கின்ற பவுல், 'கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார். அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்' என அறிவுறுத்துகின்றார்.

நம் வாழ்க்கையை நாம் பல நேரங்களில் அடிமை என்ற நிலையில்தான் வாழ்கிறோம்.

அடிமை போல 24 மணி நேரங்கள் வேலை செய்கிறோம். ஆனால், அந்த வேலையில் எஞ்சியது சோர்வும் விரக்தியுமே.

அடிமை போல உறவு நிலைகளில் ஒருவர் மற்றவரை மகிழ்ச்சிப்படுத்தவும், திருப்திப்படுத்தவும் நினைக்கிறோம். ஆனால், அதில் எஞ்சுவது எதிர்பார்ப்பும் ஏமாற்றமுமே.

ஆன்மீக வாழ்விலும், நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதை மறந்து, பிள்ளைகளுக்குரிய உரிமையை மறந்து, அடிமைகள் அல்லது பணியாளர்கள் போல நிறைய பக்தி முயற்சிகள் மேற்கொண்டு அவரைத் திருப்திப்படுத்த நினைக்கிறோம்.

தனிநபர் உறவு வாழ்விலும், நம் பணிகளிலும், ஆன்மீக உறவிலும் கட்டின்மையோடு (சுதந்திரத்தோடு) வாழ்வது எப்படி?

புனித பவுல் இரண்டு உருவகங்கள் வழியாக இதை நமக்கு உணர்த்துகிறார். 

முதல் உருவகம், ஆகார். அடிமைப் பெண்ணாகிய ஆகாரின் வழியாக ஆபிரகாம் பெற்றெடுத்த மகன் மனித இயல்பின்படி பிறந்தவன். இங்கே, 'என்னால் முடியும்' என்ற நிலையில் ஆகார் ஆபிரகாமுடன் இணைகிறாள்.

இரண்டாம் உருவகம், சாரா. சாராவின் வழியாக ஆபிரகாம் பெற்றெடுத்த மகன் வாக்குறுதியின் பயனாய்ப் பிறந்தவன். இங்கே, 'அவரால் எல்லாம் முடியும்' என்ற நிலையில் சாரா ஆபிரகாமுடன் இணைகிறார்.

'என்னால் முடியும்,' 'என்னால்தான் எல்லாம்' என்ற நிலையில் நாம் அடிமைத்தனத்தில் இருக்கிறோம்.

'எல்லாம் அவரால்,' 'அவரால்தான் எல்லாம்' என்ற சரணாகதியில் நாம் விடுதலை பெறுகிறோம்.

இன்று, நான் என்னைக் கட்டி வைத்துள்ள, அல்லது நானே என்னைக் கட்டிக்கொண்ட அடிமைத்தளைகளை எண்ணிப் பார்த்து அவற்றிலிருந்து விடுபடுதல் நலம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 11:29-32), இயேசு, 'யோனா' மற்றும் 'சாலமோன்' உருவகங்கள் வழியாகத் தன்னை மேன்மையானவர் என முன்வைக்கிறார். இறைத்திருவுளத்திற்கு தொடக்கமுதல் பணிந்ததில் யோனாவை விடவும், இறுதிவரை நிலைத்திருந்ததில் சாலமோனை விடவும் மேன்மையாக இருக்கிறார் இயேசு.


Saturday, October 8, 2022

திரும்பி வருதல்

ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு

2 அரசர்கள் 5:14-17 2 திமொத்தேயு 2:8-13 லூக்கா 17:11-19

திரும்பி வருதல்

அவள் பெயர் அன்னா. அவளுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. அவளுடைய ஓரகத்தி அவளைக் கேலி செய்கின்றாள். அவளுடைய கணவன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றான். அவள் ஆண்டவருடைய சந்நிதிக்கு ஓடுகின்றாள். மண்டியிட்டுச் செபிக்கின்றாள். சந்நிதியில் இருந்த குருவும் இவளைச் சாடுகின்றார். இறுதியில் நம்பிக்கை வார்த்தைகள் கூறுகின்றார். அன்னா வீடு திரும்புகிறாள். ஆண்மகவைப் பெற்றெடுக்கிறாள். குழந்தையின் பால்குடி காலம் முடிந்ததும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆண்டவரின் இல்லம் ஓடுகிறாள். கடவுளிடம் சென்றவள் அவரிடமே திரும்பிச் செல்கின்றாள்.

அவர் பெயர் அலங்காரம். அவருடைய மகளுக்குத் திருமணம். திருமண நாள் நெருங்கி வர அவர் சேமித்து வைத்திருந்த நிதி நிறுவனம் தலைமறைவாகிவிட்டது. திருமண நாளை மாற்றவும் விருப்பமில்லை. திருமணத்திற்குப் பணமும் கைவசம் இல்லை. கையறுநிலையில் இருக்கின்ற அவரிடம் வருகின்ற அவருடைய நண்பர் அவருக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து, 'திருமணத்தை நன்றாக நடத்து. அப்புறம் பார்க்கலாம்!' என்று சொல்லிவிட்டுச் செல்கின்றார். திருமணம் நன்றாக முடிந்தது. அலங்காரம் தன் மகளையும் மருமகனையும் அழைத்துக்கொண்டு முதல் வேலையாக அந்த நண்பரின் இல்லம் நோக்கிச் செல்கின்றார். 'உன் உதவியால் திருமணம் நடந்தது' என்கிறார் அலங்காரம். 'உன்னுடைய நட்பால் திருமணம் நடந்தது' என்று வழியனுப்புகிறார் நண்பர். நண்பரிடம் சென்றவர் அவரிடமே திரும்பிச் செல்கின்றார்.

மேற்காணும் அனுபவங்கள் நமக்கும் நடந்திருக்கலாம். வேளாங்கண்ணி அல்லது பூண்டி திருத்தலத்தில் நாம் செய்த நேர்ச்சை நிறைவேறி, நாம் நன்றிக்கடன் செலுத்த அத்திருத்தலங்களுக்குத் 'திரும்பச் செல்கின்றோம்.' அல்லது நமக்குத் தேவையில் உதவியவர்களிடம் திரும்பச் சென்று அவர்களுக்கு நன்றி கூறுகின்றோம்.

இவ்வாறு திரும்பி வருதலின் இனிமையை நமக்கு எடுத்துரைக்கின்றது இன்றைய திருவழிபாடு.

இன்றைய முதல் வாசகத்தின் (காண். 2 அர 5:14-17) கதாநாயகன் நாமான். இவர் சிரிய நாட்டுப்படைத்தலைவர். 'வலிமைமிக்க வீரர். மதிப்பிற்குரிய தலைவர். ஆனால், தொழுநோயாளர்.' மற்ற நோய் என்றால் கூட மூடி மறைத்துவிடலாம். தோல் தொடர்பான நோய் என்பதால் எளிதாக மற்றவர்களுக்குத் தெரியக்கூடிய, அதனால் மற்றவர்கள் விலகி ஓடக்கூடிய ஒரு நோய். இவருடைய வீட்டில் அடிமைச் சிறுமியாக இஸ்ரயேல் சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் நாமானின் மனைவியிடம், 'என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றால் அவர் இவரது நோயைக் குணமாக்குவார்' என்கிறார். இங்கே சிறுமியின் வார்த்தைகள் நமக்கு ஆச்சர்யமாக இருக்கின்றன. ஒருவன் தன்னை அடிமையாகக் கடத்தி வந்திருக்கிறான் என்ற கோபம் அந்தச் சிறுமிக்கு இல்லை. தன்மேல் விழும் கடப்பாரையைத் தாங்கும் நிலம் போல தன் தலைவனைத் தாங்குகிறாள் அவள். தலைவனின் நலத்தை நாடுகிறாள். நாமான் இதை உடனடியாகச் செயல்படுத்துகிறார். ஆனாலும், அவரிடம் மூன்று தயக்கங்கள் இருந்திருக்க வேண்டும்: ஒன்று, சிறுமியின் பேச்சைக் கேட்பதா? என்பது. இரண்டு, வேற்று நாட்டுக்குச் செல்வதா? அப்படி என்றால், என் ஊர் மருத்துவத்தை நான் கேலி செய்வது போல் ஆகாதா? மூன்று, ஒருவேளை அங்கு சென்று சரியாகாவிட்டால் இந்த ஊர் இன்னும் அதிகம் கேலி பேசுமே? தயக்கங்களை ஒதுக்கிவிட்டு உடனே செல்கின்றார் என்றால் அவருடைய அவசியம் நமக்குப் புரிகிறது. சிரியா மன்னரும் பரிந்துரைக் கடிதம் கொடுத்து அனுப்புகின்றார். நாமான் ஏறக்குறைய 400 கிலோ வெள்ளிக்காசு, 6000 பொற்காசுகள், 10 பட்டாடைகள் என எடுத்துக்கொண்டு புறப்படுகிறார். இறைவாக்கினருக்கு இவர் வழங்க நினைத்த பரிசாக இருக்கலாம் இது. இஸ்ரயேல் அரசன் பரிந்துரைக் கடிதம் பெற்றவுடன், ஆடைகளைக் கிழித்துக் கொண்டு சிரியா அரசன் தன்னை வம்புக்கு இழுப்பதாக நினைக்கிறார்: 'நானென்ன கடவுளா?' என்று கேட்கின்றார். அக்காலத்தில் தொழுநோய் குணமாக்க முடியாத நோயாக இருந்தது. கடவுள் மட்டுமே குணமாக்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் இருந்தது. அரசன் தன்னுடைய ஆடைகளைக் கிழித்ததை எலிசா அறிகின்றார். கடவுளின் மனிதர் எப்படி தொடர்பில் இருக்கிறார் என்று பாருங்கள்! நாம் கடவுளோடு தொடர்பில் இருக்கும்போது மற்ற எல்லாத் தொடர்புகளும் மிகவும் பொருத்தமாகவும், ஒருங்கமைந்தும் இருக்கின்றன. ஆளனுப்பி, 'நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டீர்? அவன் என்னிடம் வரட்டும். இஸ்ரயேலில் ஓர் இறைவாக்கினர் உள்ளார் என அவன் அறியட்டும்' என்கிறார் எலிசா. 'இறைவாக்கினர் ஒருவர் உள்ளார்' என்றால், 'இறைவன் ஒருவர் உள்ளார்' என்று பொருள். ஆக, இப்போது சிரியாவின் கடவுளுக்கும் இஸ்ரயேலின் கடவுளுக்குமான போட்டியாக மாறுகிறது நிகழ்வு.

நாமான் படை பரிவாரங்களுடன் எலிசாவின் வீட்டு வாசலில்முன் வந்து நிற்கிறார். எலிசா பதற்றமில்லாமல் வீட்டிற்குள் அமர்ந்திருக்கிறார். படை பரிவாரங்களைக் கண்டு பயப்படவோ, அவருடன் வந்திருக்கும் பரிசுகளைக் கண்டு கையேந்தவோ இல்லை. அவருடைய தன்மதிப்பைக் காட்டுகிறது இது. அல்லது கடவுளே போதும் என்றிருப்பவருக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்பதும், கடவுளுக்கு பணிகிற ஒருவர் வேறு எவருக்கும் பணியத் தேவையில்லை என்பதும் தெரிகிறது. தன்னுடைய வேலைக்காரர் ஒருவரை அனுப்பி, 'நீ போய் யோர்தானில் ஏழு முறை மூழ்கினால் உன் உடல் நலம் பெறும்' என்று சொல்லி விடுகின்றார். கூடவும் பேசவில்லை, குறைவாகவும் பேசவில்லை. நாமானுக்கு கோபம், சினம்! தன்னை இறைவாக்கினர் அவமானப்படுத்திவிட்டார் என்றும், என் படைவீரர்கள்முன் அவமானப்படுத்திவிட்டார் என்றும் கோபம்! மேலும், 'எங்க ஊர் ஆறுகளைவிடவா யோர்தான் சிறந்தது?' என்கிறார். யோர்தான் வெறும் ஓடைதான்! அப்பொழுது, அவருடைய வேலைக்காரருள் ஒருவர், 'எம் தந்தையே! இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குச் சொன்னால் செய்திருப்பீர் அல்லவா! குளிக்கிறதுதானே! குளித்துவிடுங்கள்!' என்கிறார். அங்கே சிறுமி! இங்கே வேலைக்காரர்! கடவுள் சின்னஞ்சிறியவர்கள் வழியாக அவரைத் தொடுகின்றார். நாமானின் குழந்தையுள்ளத்தை இங்கே பார்க்கிறோம். 'நீ யாருடா எனக்கு புத்தி சொல்ல!' என்று வேலைக்காரரைப் பார்த்துக் கோபிக்காமல், உடனே போய் யோர்தானில் மூழ்கி எழுகின்றார் ஏழுமுறை! அதிசயம்! அற்புதம்! அவருடைய தோல் சிறுபிள்ளையின் உடல் போல் மாறினது. சிறுமியின் வார்த்தையைக் கேட்ட வந்த பெரியவர் ஒருவரின் உடல் சிறுபிள்ளையின் உடல் போல மாறுகிறது - மிகப்பெரிய அற்புதம்! அந்த நேரம் அவர் தன்னுடைய அவமானம் எல்லாம் அழிந்ததாக உணர்ந்திருப்பார்! ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார்! எல்லாரையும் கட்டிப்பிடித்துக் கதறியிருப்பார்! அங்கேயே மண்ணில் புரண்டு கொண்டாடியிருப்பார்! 'அவர் கடவுளின் அடியவரிடம் திரும்பினார்' என்று சொல்கிறார் ஆசிரியர். 'இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லை என உறுதியாக அறிந்துகொண்டேன்' என்கிறார். எவ்வளவு பெரிய வார்த்தைகள் இவை! தொழுநோயைக் கடவுள்தான் குணமாக்க முடியும். நான் எங்கெங்கோ சென்று குணமாகவில்லை. இங்கே குணமாகியிருக்கிறது. ஆக, இங்கே மட்டுமே இறைவன் இருக்கிறார். திரும்பி வந்தவர் அன்பளிப்புகள் கொடுக்கிறார் எலிசாவுக்கு. ஆனால், 'நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன்!' என்கிறார் எலிசா. வற்புறுத்தியும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது நாமான் ஒரு வேண்டுகோள் வைக்கிறார். 'இங்கிருந்து இரண்டு பொதி மண் எடுத்துச் செல்ல அனுமதியும்!' அந்த மண்ணில் இறைவன் குடியிருக்கிறார் எனவும், அந்த இறைவனைத் தான் வணங்க விரும்புவதாகவும் சொல்கின்றார். இறைவாக்கினரும் அனுமதிக்கின்றார்.

நாமான் நம்பிக்கையால் கடவுளின் அடியவரிடம் திரும்பி வருகின்றார். அவருக்கு நிகழ்ந்த அற்புதம் அவருடைய நம்பிக்கையை உறுதி செய்கிறது. அவர் உடல் அளவில் தொழுநோய் நீங்குகிறார். உள்ளத்தளவில் உண்மையான கடவுளைக் கண்டு கொள்கிறார். இவ்வாறாக, முதல் வருகை அவருடைய உடல் நோயையும், திரும்பி வருதல் அவருடைய உள்ளத்து நோயையும் குணமாக்குகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 திமொ 2:8-13), நம்பிக்கையில் தான் பெற்றெடுத்த பிள்ளை திமொத்தேயுவிடம், 'நீ ஒரு நல்ல படைவீரனாய், விளையாட்டு வீரனாய், நிலத்தில் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளராய் இருக்க வேண்டும்' என்று அறிவுறுத்துகின்ற பவுல், தான் சிறைப்பட்டிருப்பதையும் சொல்கின்றார். தொடர்ந்து, அக்காலத்தில் பரவலாக மொழியப்பட்ட இறையியல் கூற்று ஒன்றை மேற்கோள் காட்டுகின்றார்: 'நாம் அவரோடு இறந்தால் அவரோடு வாழ்வோம். அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார்' - இரண்டு நிபந்தனை வாக்கியங்கள் இவை. 'இதைச் செய்தால் அது நடக்கும்' என்று சொல்லிவிட்டு, 'நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது' என்று கடவுளின் நம்பகத்தன்மையை அடிக்கோடிடுகின்றார். இங்கே, 'அவரோடு இறத்தல்' என்பதை 'அவரிடம் திரும்பி வருதல்' என்று நாம் பொருள்கொள்ளலாம். நம்பிக்கை கொண்டால்தான் ஒருவர் அவரிடம் திரும்பி வர முடியும். 

திமொத்தேயு தன்னுடைய நம்பிக்கையால் கடவுளிடம் திரும்பி வர வேண்டும் என்று சொல்வதோடு, இதையே அவர் தன்னுடைய சபையிலும் கற்பிக்க வேண்டும் என்றும் சொல்கின்றார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 17:11-19) முதல் வாசகத்தின் நீட்சியாக இருக்கிறது. இயேசு தொழுநோயாளர் ஒருவரைக் குணமாக்குவதை (காண். மத் 8:1-4) அல்லது தொழுநோயாளர்களைக் குணமாக்கும் அதிகாரத்தை திருத்தூதர்களுக்கு வழங்குவதை (காண். மத் 10:8) மத்தேயு நற்செய்தியில் பார்க்கிறோம். ஆனால், இயேசு பத்து தொழுநோயாளர்களைக் குணமாக்கும் நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே உள்ளது. இயேசு நயீன் நகர நுழைவாயிலில் கைம்பெண்ணின் மகனுக்கு உயிர்தந்த நிகழ்வின் இறுதியில், 'நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்' என்று மக்கள் ஆர்ப்பரிக்கின்றனர். இஸ்ரயேலில் பெரிய இறைவாக்கினர்கள் என்று மக்களால் எண்ணப்பட்டவர்கள் எலியாவும், எலிசாவும். இந்த இரண்டு இறைவாக்கினர்கள் செய்ததை இயேசுவும் செய்ததாக எழுதுவதன் வழியாக, இயேசுவை பெரிய இறைவாக்கினர் என்று அறிமுகம் செய்கிறார் லூக்கா. எலியா சாரிபாத்துக் கைம்பெண்ணின் மகனுக்கு உயிர் தருகிறார் (காண். 1 அர 17:17-24). அதே போல இயேசு நயீன் நகரப் பெண்ணின் மகனுக்கு உயிர் தருகின்றார். எலிசா தொழுநோயாளர் நாமானுக்கு நலம் தருகிறார் (காண். முதல் வாசகம்). அது போல இயேசு பத்துத் தொழுநோயாளர்கள் நோயை நீக்குகின்றார். நாமான் சிரிய நாட்டினர் - புறவினத்தவர். இங்கே, திரும்பி வருகின்ற ஒருவர் சமாரியர் - புறவினத்தவர். அங்கே நாமான் யோர்தான் ஆற்றில் ஏழு முறை மூழ்கி ஏழுகின்றார். இங்கே இவர்கள் குருக்களை நோக்கிச் செல்கின்றனர். அங்கே நாமான் திரும்பி வந்து இஸ்ரயேலின் கடவுளே உண்மையான கடவுள் என அறிக்கையிடுகின்றார். இங்கே இவர் இயேசுவின் காலில் முகங்குப்புற விழுகின்றார் - கடவுளைத் தொழுதலின் அடையாளம். ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறார் லூக்கா. தொழுநோய் நீக்கிய அந்த நொடியில் அவரை எலிசா போன்ற இறைவாக்கினர் எனவும், தொழுநோய் நீங்கியவர் காலில் விழுவதால் யாவே கடவுள் போல இயேசுவே ஆண்டவர் என்றும் சொல்கின்றார்.

திரும்பி வந்த அந்த நபரை மட்டும் எடுத்துக்கொள்வோம். 'மற்ற ஒன்பது பேர் எங்கே?' மற்ற ஒன்பது பேர் இங்கே இல்லை. அவ்வளவுதான் விடை. மற்றவர்கள், 'இன்னும் நாங்கள் நலமாகவில்லை' என்றோ, அல்லது 'அவர் சொன்னபடி குருக்களிடம் செல்வோம்' என்றோ, அல்லது 'நலம் பெற்றாயிற்று. நாம் வீட்டிற்குச் செல்வோம்' என்றோ நினைத்திருக்கலாம். யாரையும் இயேசு திரும்பிவரச் சொல்லவில்லையே. அப்புறம் ஏன் இந்த ஒரு நபர் திரும்பி வந்தார்? இவர் சமாரியர் என்பதால் குரு இவரைச் சோதிக்கமாட்டார் என எண்ணி இயேசுவிடம் இவர் திரும்பினாரோ? ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இவர் மற்றவர்களைப் போல இருக்கவில்லை. வித்தியாசமாக இருந்தார். அவர்கள் குருவைத் தேடிச் சென்றனர். இவரோ கடவுளைத் தேடி வந்தார். இதுதான் அந்த வித்தியாசம். முதலில், 'இயேசுவே நலம் தந்தார்' என நம்புகிறார். இரண்டாவது, 'நான் திரும்பிப் போவேன்' என முடிவெடுக்கின்றார். மூன்றாவது, 'நான் திரும்பிப் போனால் இவர் என்ன நினைப்பார் அவர் என்ன நினைப்பார்' என்று தன் கூட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் துணிவுடன் இயேசுவிடம் வருகின்றார். நான்காவது, 'நலம் பெற்ற பிறகு ஏன் தொழுநோயாளரின் குழு? உடனே புது வழியைத் தேடுவேன்' என தேடுகிறார் இயேசுவை. ஆக, இந்தச் சமாரியர் நமக்கு நன்றிக்கான பாடம் அல்ல. அதைவிட, நம்பிக்கைக்கான பாடம். மேற்காணும் நான்கு வழிகளும்தான் நம்பிக்கைக்கான வழிகள்.

ஆக, முதலில் இயேசுவிடம் வந்தபோது உடல்நலம் பெற்றவர், திரும்பி வந்தபோது உள்ள நலம் பெறுகின்றார்.

இன்று நாம் ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் கடவுளிடம் வருகின்றோம். ஆனால், என்றாவது ஒருநாள் திரும்பி வந்திருக்கிறோமா? திரும்பி வருதலுக்கான அற்புதம் நம் வாழ்வில் நடந்ததா? நாம் கடவுளிடம் தினமும்கூட வரலாம். ஆனால், அவரிடம் திரும்பி வரும் அந்த ஒரு நாளே நம் வாழ்வைப் புரட்டிப் போடும். சில நேரங்களில் அற்புதங்கள் பெற்ற நமக்கு மற்ற வேலைகள் வந்துவிட்டதால் அல்லது மற்ற கவனச் சிதறல்கள் வந்துவிட்டதால் அவரிடம் திரும்பி வருவதற்கு நாம் தாமதம் செய்யலாம். அல்லது அவரிடம் திரும்பி வந்தார் இன்னும் அவர் நம்மைக் குணமாக்கிவிடுவார் என்ற பயத்தில், 'அரைகுறை குணமே போதும்' என்று ஓய்ந்திருந்து, நாமே நம் நோய்க்கு மருந்திட்டுக் கொள்ளும் மடமையில் இருக்கலாம். 

இன்று அவரிடம் திரும்பி வர நாம் என்ன செய்ய வேண்டும்?

அ. அவரால்தான் எல்லாம் என்ற உறுதியான நம்பிக்கை வேண்டும் - இந்த நம்பிக்கை நாமானுக்கும், பவுலுக்கும், திமொத்தேயுவுக்கும், சமாரியருக்கும் இருந்தது. தொழுநோய் என்பது தோலை மூடும் அல்லது சிதைக்கும் ஒரு திரை. நம்பிக்கையின்மைகூட தொழுநோய்தான். கடவுளை அது நம் வாழ்விலிருந்து மூடிவிடுகிறது அல்லது கடவுளின் முகத்தை அடையாளம் தெரியாதவாறு சிதைத்துவிடுகிறது. இதிலிருந்து வெளிவர நாம் சில நேரங்களில் கொஞ்சம் நடந்தால் போதும். இன்னும் சில நேரங்களில் நாம் ஏழு முறை மூழ்கி எழ வேண்டிய நிலையும் வரும். ஆனால், அற்புதம் நடந்தவுடன் அங்கே அவரின் கைவன்மையைக் காண வேண்டும். 'ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது. நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!' (திபா 118:23) என்று ஆச்சர்யப்பட வேண்டும்.

ஆ. அவரோடு இணைய வேண்டும் - முதலில் 'அவரால்தான்' என்று அறிகின்றோம். பின், 'அவரோடு' என இணைந்துகொள்ள வேண்டும். இரண்டு பொதி மண் எடுத்துக் கொண்டு தன் நாட்டிற்குச் செல்வதன் வழியாக எப்படியாவது இஸ்ரயேலின் கடவுளோடு தன்னை இணைத்துக்கொள்கிறார் நாமான். இயேசுவின் காலடிகளில் விழுந்து நன்றி செலுத்துவதன் வழியாக அவரோடு தன்னை இணைத்துக்கொள்கிறார் சமாரியர். இன்று நான் இயேசுவோடு என்னை இணைத்துக்கொள்கின்றேனா? எந்த அளவிற்கு?

இ. அவரே என்று நம் வழி புறப்பட வேண்டும் - குணம் பெற்ற நாமான் எலிசாவிடமும், சமாரியர் இயேசுவிடமும் தங்கிவிடவில்லை. தங்கள் வழி திரும்புகின்றனர். மீண்டும் தங்கள் வாழ்வை வாழப் புறப்படுகின்றனர். 'நானே' என்று வாழ்ந்தவர்கள் 'அவரே' என்று வாழப் புறப்படுகின்றனர்.

இவ்வாறாக, 'அவரால்,' 'அவரோடு,' 'அவரே' என்ற இறைமையமே நம்மை திரும்பி வரச் செய்கிறது. நலமுடன் திரும்பி வருக! ஏனெனில், திரும்பி வருதலே நலம்!