Sunday, June 17, 2018

தீமை செய்பவரை

நாளைய (18 ஜூன் 2018) நற்செய்தி (மத் 5:38-42)

தீமை செய்பவரை

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் மலைப்பொழிவு தொடர்கிறது.

'கண்ணுக்குக் கண்,' 'பல்லுக்குப் பல்' என்ற பழைய கட்டளையை புரட்டிப்போடும் இயேசு, 'தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்'

இங்கே 'ஆன்டிஸ்டேமி' என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. 'ஹிஸ்டேமி' என்றால் 'நிற்றல்' என்பதும், 'ஆன்டி' என்றால் 'எதிர்த்து' அல்லது 'நேருக்கு நேர்' என்றும் பொருள்.

எனக்கு முன் இருப்பவர் ஒரு வினையாற்ற, நான் நேருக்கு நேர் நின்று மற்றொரு வினை ஆற்றினால் அதற்குப் பெயர் எதிர்வினை ஆற்றுதல்.

எதிர்வினை மீண்டும் மற்றொரு எதிர்வினையைத்தான் வருவிக்கும்.

ஆக, எதிர்வினை ஆற்றுதலை விடுத்து நேர்முகமாக வினையாற்ற அழைக்கின்றார் இயேசு.

நேர்முக வினையாற்ற வேண்டும் என்றால் நாம் அடுத்தவருக்கு முன் நேருக்கு நேராக நிற்கக் கூடாது. மாறாக, அவரை விட சற்று மேலே அல்லது உயர்ந்த நிலையில் நிற்க வேண்டும். தொடர்ந்து இயேசு தரும் 'கன்னம்,' 'மேலாடை,' 'மைல்கல்' என எல்லா எடுத்துக்காட்டுக்களிலும் 'எதிர்வினை' மறைந்து 'நேர்முக வினை' முன்நிற்கிறது.

எதிர்வினை ஆற்றும்போது நம் சிந்தனை, சொல், செயல் என அனைத்தையும் நம் முன்னால் நிற்கும் அந்த எதிராளிக்கு விற்றுவிடுகிறோம். நான் எப்படி செயலாற்ற வேண்டும் என்பதை எனக்கு முன் நிற்கும் அந்த எதிராளி தீர்மானிக்குமுhறு விட்டுவிடுகிறோம்.

நேர்முக வினை ஆற்ற வேண்டுமெனில் முதலில் பொறுமை வேண்டும். அதாவது, அடித்தவுடன் திரும்ப அடித்தால் அங்கே நாம் பொறுமை இல்லாமல் இருக்கின்றோம். 'பொறுமையோடு' இணைந்து நிற்பது 'அறிவு'. 'அவன் செஞ்சான்னா நீயும் செய்வியா. உனக்கு அறிவு எங்க போச்சு' என்று என்னிடம் சிலர் கேட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் எல்லாம் நான் அறிவை பயன்படுத்தத் தவறியிருக்கிறேன் என நான் பின்னால் நினைத்ததுண்டு. 'பொறுமை,' 'அறிவு' ஆகியவற்றோடு சேர்ந்து கொஞ்சம் 'சொரணைக் குறைவு' வேண்டும். சூடு, சொரண இருந்து என்ன ஆகுப்போகுது? நடப்பது நடந்துதான் தீரும். அவனை திரும்ப அடித்து என் கை ஏன் வலிக்க வேண்டும்? அவன் அடித்ததோடு விட்டால் எனக்கு கன்னம் மட்டும்தான் வலிக்கும். அவனைத் திருப்பி அடித்தால் எனக்கு கையும் அல்லவா வலிக்கும்!


1 comment:

  1. தந்தையின் அனுபவம் நிறைய பேசுகிறது.நேர்முக வினையாற்ற வேண்டுமெனில்
    நமக்கு முன்னால் நிற்பவரை விட சற்று மேலே நிற்க வேண்டும்.சரியே!ஆனால் இயேசு தரும்'கன்னம்','மேலாடை','மைல்கல்' எல்லாம் இன்றைய காலகட்டத்துக்குப்பொருந்துமா? அப்படியே நடந்தாலும் 'பிழைக்கத்தெரியாதவன்' என உலகம் பழிக்காதா? ஏன் எனக்கென்று நான் ஒரு வழியைப்பின்பற்றக்கூடாதா? ' நேர் முகவினையாற்ற' வேண்டும் என்று எனக்கெதிரில் இருப்பவர் செய்வதையே நானும் செய்தால் 'ஆட்டுமந்தை' கூட்டத்தோடு நானும் சேர்ந்து விடமாட்டேனா?சூடு சொரணையை ஓரங்கட்டி,கன்னம்,கை இவற்றின் வலியைத்தாங்கிக்கொள்ளலாம்; ஆனால் பிறகு மனம் வலிக்குமே...அதை யார் சமாதானப்படுத்துவது? கொஞ்சம் குழப்புகிற பதிவுதான்.ஆனாலும் தந்தையின் அனுபவ அறிவு என்றோ ஒருநாள் நமக்கும் உதவலாம். அனுபவத்தைப் பகிர்ந்த தந்தைக்கு நன்றிகள்! இந்த வாரம் இனியவாரமாக வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete