Friday, June 15, 2018

வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ

நாளைய (16 ஜூன் 2018) நற்செய்தி (மத் 5:33-37)

வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ

நாளை நம் இசுலாமிய சகோதர, சகோதரிகள் ரமலான் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். இசுலாமில் எனக்கு பிடித்த பலவற்றில் ஒன்று அவர்களின் மசூதி அறிவிப்புக்கள். இன்று மாலை 6 மணிக்கு அவர்களின் மசூதியில் ஒரு சிறப்பு நிகழ்வு நடக்கிறது என வைத்துக்கொள்வோம். மாலை 5 மணிக்கு அதைப்பற்றி அறிவிப்பு செய்யும்போது, 'இன்ஸா அல்லா - கடவுளுக்குத் திருவுளமானால்' என்று தொடங்கி அறிவிப்பார்கள். 1 மணி நேரத்திற்குள் என்ன ஆகிவிடப் போகிறது? என நான் நினைத்ததுண்டு.

ஆனால், இதையொட்டிய ஒரு பகுதி யாக்கோபு எழுதிய திருமடலிலும் உள்ளது.

'நாளைக்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதே! நொடிப் பொழுதில் தோன்றி மறையும் புகை போன்றவர்கள் நீங்கள். ஆகவே, அவ்வாறு சொல்லாமல், 'ஆண்டவருக்குத் திருவுளமானால், நாங்கள் உயிரோடிருப்போம். இன்னின்ன செய்வோம்' என்று சொல்வதே முறை' (யாக் 4:15) என்கிறார் யாக்கோபு.

அதாவது, நம்மால் இயலாதது எதையும் நம்மால் இயலும் என்பது போல பேசக்கூடாது.

நம்மையும் தாண்டிய, நம் ஆற்றலையும், வரையறையையும் தாண்டிய நிகழ்வுகள் நிறைய நடக்கின்றன. ஆனால் பல நேரங்களில் அவற்றை நாம் கன்ட்ரோல் செய்ய நினைக்கும்போது நாம் விரக்திக்கு ஆளாகிறோம். அவற்றை கன்ட்ரோல் செய்யலாம் என நாம் நமக்கு நாமே அல்லது நாம் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுத்துவிடுகின்றோம். பின் அதை நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றோம்.

'உங்கள் தலைமுடியை வெள்ளையாக்கவோ, கறுப்பாக்கவோ முடியாது' எனச் சொல்லும் இயேசு, 'ஆம்' என்றால் 'ஆம்' என்றும், 'இல்லை' என்றால் 'இல்லை' என்றும் சொல்லுங்கள் எனச் சொல்கிறார் இயேசு.

ஆக, தேவையில்லாமல் நான் எனக்கு நானே வாக்குறுதி கொடுப்பதும், மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதும் தவறு. இல்லையா,

நாளைய நற்செய்தி நமக்கு இரண்டு பாடங்களைக் கற்றுத் தருகிறது:

அ. எனக்கு நானே, நான் மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் கொடுக்கத் தேவையில்லை. ஏனெனில் அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. என்னால் மாற்ற இயலாததை மாற்ற முடியாது.

ஆ. என் கன்ட்ரோல் வரையறையைத் தாண்டி இருப்பதைப் பற்றி நான் கவலைப்படுதல் கூடாது.

1 comment:

  1. இன்றையப் பதிவு நம் அனைவருக்குமே தேவையானதொன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தேவையற்ற வாக்குறுதிகளை நமக்கு நாமேயும்,பிறருக்கும் அள்ளி வீசி விட்டுப் பின் அவற்றை செயலாக்க முடியாதபோது விரக்தியின் உச்சத்தை அடைவது நமக்கெல்லாம் பழக்கப்பட்ட ஒன்றுதான்.இன்று காலை நான் சமைக்கும் உணவை மதியம் சாப்பிட நான் உயிருடன் இருப்பேனா என்று தெரியாதபோது இன்னும் விடியாத நாளையைக் குறித்தும்,அது சுமந்து வரும் விஷயங்கள் குறித்தும் வாக்குறுதி கொடுப்பதால் யாருக்கு என்ன இலாபம்? இசுலாமிய சகோதரரின் " இன்ஸா அல்லா" அடிக்கடி கேட்டதுண்டு....ஆனால் அது இத்தனை அழகான விஷயங்களைச் சுமந்து வருகிறது என்று தெரியாமலே.இன்றைக்கு நான் எடுக்க வேண்டிய வாக்குறுதி.."என் கன்ட்ரோல் வரையறையைத்தாண்டி இருப்பதைப் பற்றி நான் கவலைப்படுதல் கூடாது." ( அச்சச்சோ...இதுவும் ஒரு வாக்குறுதி தானே! கடவுளே என்ன செய்ய?)எங்கிருந்தாலும் நல்ல விஷயங்களைத் தோண்டி எடுக்கும் தந்தையின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete