பவுலோ கோயலோ அவர்களின் வெகு சமீபத்திய புதினம் 'தெ ஸ்பை' வாசித்து முடித்தேன்.
மாத்தா ஹரி என்ற நடன இளவல் உலகப்போரின்போது எதிரி நாட்டு உளவாளியாக மாறிய கதைதான் இது.
நடனம் செய்யவும், தன் கனவு நாட்டைக் காணவும் பாரிஸ் செல்லும் இளவல் அனுபவிக்கும் வாழ்க்கைப் போராட்டமே இந்தப் புதினம்.
இந்த நாவலில் என்னைக் கவர்ந்த சிலவற்றை நான் இங்கே பதிவு செய்கிறேன்:
'நீ இன்று எப்படி உணர்ந்தாலும், எழு, ஆடை அணி, வெளியே செல்!'
---
'நீ எதைப் பற்றியும் வெட்கப்படாதே. வாழ்க்கை உனக்குக் கொடுப்பதை அப்படியே எடுத்துக் கொள். எல்லாக் கோப்பையிலிருந்தும் குடி. சிலவற்றை சொட்டு சொட்டாக. சிலவற்றை அப்படியே. எப்படி வித்தியாசப்படுத்துவது? நீ சுவையற்றதை முதலில் குடித்திருந்தால் அடுத்து வருவது சுவையாக இருக்கும்.'
---
'ஒருவர் உன் வாழ்வில் இருந்து விலகுகிறார் என்றால், மற்றவர் வரப்போகிறார் என்று பொருள். நான் அன்பை திரும்பப் பெறுவேன்.'
---
'நீ எப்படி இருப்பதாக நம்புகிறாயோ அதுதான் நீ!'
---
'எதற்கும் விளக்கம் சொல்லாதே. உன் நண்பர்களுக்கு அது தேவையில்லை. உன் எதிரிகள் அதை நம்பப் போவதில்லை.'
---
'வாழ்க்கை நம்மை எப்படி கூட்டிச் செல்கிறது என்று தெரியாத ஒருவருக்கு எதுவும் இழப்பு அல்ல.'
---
'அன்பு ஒரு மறைபொருள்.'
---
'இளைஞன் ஒருவன் இருந்தான். இளவல் ஒருத்தி இருந்தாள். நீ என்னைக் கரம் பிடிக்க வேண்டுமெனில் சிகப்பு ரோஜா ஒன்று கொண்டு வா - என்றாள் இளவல். அந்த நாட்டில் வெள்ளை ரோஜாக்கள் மட்டுமே இருந்தன. அவளின் கரம் பிடிக்க இந்த இளைஞன் காடு மேடெல்லாம் சிகப்பு ரோஜா தேடினான். இதைப் பார்த்த நைட்டிங்கேல் பறவை இவனுக்கு உதவி செய்ய நினைத்தது.
ரோஜா செடியிடம் போய், 'எனக்காக ஒரு சிகப்பு ரோஜா கொடு!' என்றது.
செடி மறுத்தது. 'என்னால் சிகப்பு ரோஜா கொடுக்க முடியாது! வேண்டுமானால் ஒன்று செய்யலாம். முழு நிலவு நாளன்று என் முட்களில் உன்னை மோதிக்கொண்டே பாட்டுப்பாடு. அப்போது வடியும் உன் இரத்தம் என் வெள்ளை ரோஜாவை சிகப்பாக்கும்.
முழு நிலா இரவும் வந்தது. நைட்டிங்கேல் பாடிக்கொண்டே தன்னை ரோஜாவின் முள்மேல் மோதியது. அந்தப் பறவையின் இரத்தம் மெதுவாக ரோஜா செடியில் வடிந்து அதன் தண்டுக்குள் புகுந்து வெள்ளை ரோஜாவை சிகப்பாக்கத் தொடங்கியது.
'இன்னும் வேகமாக பாடு. சூரியன் வரப்போகிறது' என அவசரப்படுத்தியது செடி.
தன்னிடம் இருந்த அனைத்து இரத்தத்தையும் வடித்துவிட்டது நைட்டிங்கேல். முழுவதும் சிவந்த ரோஜாவை எடுத்துக்கொண்டு இளைஞனிடம் சென்றது பறவை. அவனிடம் கொடுத்த அடுத்த நொடி அது இறந்துவிட்டது.
சிகப்பு ரோஜாவை எடுத்துக்கொண்ட இளைஞன் தன் இளவலை நோக்கி ஓடினான்.
ஆசையாய் நீட்டினான். அவளின் கரம் நோக்கி தன் கரம் நீட்டினான்.
'இந்த ரோஜா இல்லை நான் கேட்டது!' 'இந்த சிவப்பு அல்ல நான் விரும்புவது!' 'இந்த பூ என் ஆடைக்கு பொருத்தமாக இல்லை' - இப்படிச் சொல்லி தட்டிக்கழிக்கிறாள் இளவல்.
இதற்கிடையில் மற்றொரு இளைஞன் அவளைக் கரம் பிடித்து விடுகிறான்.
சோர்வோடு வீடு திரும்பும் காதலன் ரோஜாவை சாலை ஓரத்தில் போடுகிறான். அவ்வழியே வந்த ஒரு டிரக் ரோஜாவை ஏற்றி நசுக்குகிறது.
அவன் தான் விரும்பிய புத்தகங்களுக்குள் தன்னை மறுபடியும் புதைத்துக்கொண்டான். காதலிகளை விட புத்தகங்கள் மேலானவை. இந்த உலகத்தில் கிடைக்காதவற்றை எனக்கு கொண்டு வா என அவைகள் சொல்வதில்லை.
அந்த நைட்டிங்கேல் போல தன்னை உணர்ந்தாள் மாத்தா ஹரி.
---
'வாழ்க்கை மிகவும் கடினமானது. எளிதானவைகளும் அதில் இருக்கின்றன.
ஐஸ் க்ரீம் சாப்பிடுவது.
உன் குழந்தைக்கு பொம்மை வாங்கிக் கொடுப்பது.
உன் அறையைப் பெருக்கி சுத்தப்படுத்துவது.'
---
உன் கையில் உள்ள விதைகள் தூலிப் பூக்களின் விதைகள்.
இவைகளை நீ எப்படி வைத்து வளர்த்தாலும் தூலிப் பூக்கள்தாம் வரும்.
அவற்றில் ரோஜா எதிர்பார்த்தால் நீ விதையை இழந்துவிடுவாய்.
உன் வாழ்க்கையும் அப்படியே!
---
பூக்களே சிறந்த ஆசிரியர்கள்.
வாழ்வின் நிலையாமையை அவைகள் அறிந்திருந்தாலும் காலையில் அழகாக சிரிக்கின்றன.
அவைகள் எந்நேரமும் தண்டுகளைப் பிடித்துக் கொண்டிருப்பதில்லை.
விழ வேண்டிய நேரத்தில் கீழே விழுந்து அடுத்த பூக்களுக்கு வழி விடுகின்றன.
---
கோயலோ ஒரு வித்தியாசமான நாவல் ஆசிரியர். இவரின் புதினத்தில் நிறைய கத்தோலிக்க சிந்தனைகளும், விவிலிய மேற்கோள்களும் காணக்கிடக்கும்.
செக்ஸ், காதல், அன்பு, பிரமாணிக்கமின்மை, பொறாமை, கோபம் என அனைத்தையும் போகிற போக்கில் இயல்பாக எழுதக்கூடியவர் இவர்.
'இது சரி! அது தவறு!' என்று எந்த அறநெறியையும் உட்புகுத்தாதவர்.
ஒவ்வொருவரும் தனக்கு விருப்பம் அல்லது சரி என்று சொல்வதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான்!