Monday, September 21, 2015

உம் தாயும், சகோதரர்களும்

'உம் தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்!'

இந்தக் கேள்வியை பல மாதங்கள் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் ஒரு பையனையோ, பொண்ணையோ பார்த்துச் சொன்னால், இருப்பதை இருந்த இடத்தில் விட்டுவிட்டு, 'எங்கே?' என்று தேடி ஓடியிருப்பார்கள்.

ஆனால், இந்தக் கேள்வி தன்னிடம் கேட்கப்பட, இருந்த இடத்திலேயே ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கின்றார் இயேசு.

ஆச்சர்யமாக இல்லையா?

ஹாஸ்டல் மாணவர்கள் ஏன் ஓடுகிறார்கள்? என்னதான் உணவும், உடையும், இருப்பிடமும் கொடுத்தாலும், ஹாஸ்டலும், வார்டனும் ஒருபோதும் தாயின் அல்லது உடன்பிறந்தவரின் இடத்தை நிரப்புவதில்லை. மாணவரும் தான் இருக்கும் இடத்தை தன் வீடு போல நினைப்பதில்லை.

ஆனால், தான் இருக்கின்ற இடத்தை வீடுபோல நினைப்பவருக்கு, அருகில் இருப்பவர் அனைவரும் தாயும், உடன்பிறந்தவர்களே.

இந்தப் பார்வையைப் பெற வேண்டுமென்றால் தான் இருக்கும் இடத்தோடு ஒரு தொப்புள்கொடி உறவை ஒருவர் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தொப்புள்கொடி உறவு வர வேண்டுமென்றால், தனக்குள்ளேயே ஒருவர் பிளவுகள் இன்றி இருக்க வேண்டும். இயேசு அப்படிப்பட்ட மனிதர். தனக்குள்ளே பிளவுபடாதவர்.

பிளவுபடாத உள்ளம்தான் இறைவனை மட்டுமல்ல, ஒருவர் மற்றவரிடம் தாய்மையைக் காண முடியும்.

நேற்று ஃபுல்டன் ஷீன் அவர்கள் அருட்பணியாளர்களுக்கு ஆற்றிய தியான உரை ஒன்றைக் கேட்டேன். அவரின் வார்த்தைகளை அப்படியே மொழிபெயர்த்துத் தருகிறேன்:

'அன்புமிகு அருட்பணியாளர்களே, என்னிடம் வரும் அருட்பணியாளர்களிடம், 'உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?' என்று கேட்டால், பலர் உடனடியாக, 'மணத்துறவுதான் கஷ்டமாக இருக்கிறது!' என்கிறீர்கள். சிலர், 'முதல் ஏற்பாட்டில் மணத்துறவு இல்லை!' என்றும் வாதாடுகிறீர்கள். ஆனால், நீங்கள் ஏன் சுமையாக நினைக்கிறீர்கள்? சுமக்க முடியாத ஒன்றை உங்கள்மேல் கடவுள் சுமத்துவாரா? அவர் என்ன கொடுங்கோலனா? இல்லை. முதல் ஏற்பாட்டில் மணத்துறவு இல்லைதான். ஆனால், தற்காலிக மணத்துறவைப் பற்றி நாம் மூன்று இடங்களில் வாசிக்கின்றோம்: (1) கடவுள் சீனாய் மலையில் இறங்கி வருமுன், அனைவரும் தூய்மையாக இருக்க வேண்டும். ஆண்கள், பெண்களோடு உறவு தவிர்க்க வேண்டும். பெண்கள் தங்களையே தூய்மையாக்கிக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுகின்றார். (2) தாவீதும் அவர் சார்ந்த நண்பர்களும் போர்க்காலத்தில் தலைமைக்குரு அபியத்தாரை நாடி உணவு கேட்டு நின்றபோது, 'இவர்கள் எல்லாம் பெண்கள் உறவிலிருந்து தூய்மையாக்கிக்கொண்டவர்கள்' என அறிமுகம் செய்கின்றார். ஆக, கடவுளின் போரின் போது தூய்மை அவசியம். (3) இரண்டாம் மக்கபேயர் காலத்தில் எருசலேம் ஆலயம் அர்ப்பணம் செய்யப்படும்போது மக்கள் அனைவரும் தங்களையே உடலுறவிலிருந்து தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகின்றனர். ஆக, கடவுளை அணுகிச்செல்பவர்களுக்கும், கடவுள் செயலாற்றும் இடத்திலும் தற்காலிக மணத்துறவு முன்வைக்கப்படுகின்றது...'

ஷீன் அவர்களின் உரை அப்படியே தொடர்கிறது. நாம் இங்கேயே நிறுத்திக்கொள்வோம்.

பெண்ணுடன் கூடும் உடலுறவு தீட்டு என்பது மேற்காணும் இறைவாக்குப் பகுதிகளின் பொருள் அன்று. மாறாக, மனித வாழ்வின் உச்சகட்ட இன்பம் அதைவிட இன்பம் தரும் இறைப்பிரசன்னத்திற்காக தியாகம் செய்யப்படல் வேண்டும் என்பதே பொருள்.

இதை நான் இங்கே சொல்லக் காரணம் என்னவென்றால், தன்னிடம் பிளவு இல்லாத ஒருவர் மட்டுமே எல்லாரிடமும் தாய்மையைக் காண முடியும். இந்த மனநிலை வரவேண்டுமென்றால், தன்னிடம் மேலோங்கி இருக்கும் வன்முறை, பாலுணர்வு என்ற இரண்டு உணர்வுகளையும் ஒருமுகப்படுத்தல் வேண்டும்.

இயேசுவுக்கு இது இயல்பாகவே இருந்தது. நமக்கு அது கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்கிறது.



2 comments:

  1. 'தான் இருக்கின்ற இடம் எதுவாயினும் அதைத் தன் சொந்த வீடாக நினைப்பவருக்குத் தன்னைச் சுற்றியுள்ள அனைவருமே தாயும்,சகோதர்ர்களும்' தான்...மிக அழகானதொரு பதிவு.இப்படியொரு தொப்புள் கொடி உறவு நம்மிடம் உருவாவது என்பது சொல்லும் அளவுக்கு அத்தனை எளிதல்ல.அப்படி எளிதாகிவிடுமேயாயின் 'தாய்மை'என்ற சொல்லே அர்த்தமற்றதாகிவிடும். எனக்கடுத்தவரிடம் ஒளிந்திருக்கும் 'தாய்மை' என் கண்களுக்குப் புலப்படுவது எப்பொழுது? எனக்குள் பிளவுகள் இல்லாத தருணங்களில் தான் என்கிறார் தந்தை.எனக்குள் உறைந்திருக்கும் இறைவனையும்,எனக்கடுத்தவரிடம் ஒளிந்திருக்கும் தாய்மையையும் நான் புரிந்து கொள்ள வேண்டுமெனில் என்னிடம் மேலோங்கியிருக்கும் வன்முறை,பாலுணர்வு என்ற உணர்வுகள் அகற்றப்பட வேண்டும்.இயேசுவுக்கு இயல்பாக இருந்த ஒன்று நம் இயல்பாகவும் மாற அவரின் அருள் வேண்டுவோம்.இன்றையத் தேவையை மிக அழகாக ஒரு ஹாஸ்டல் அனுபத்தின் பின்னனியில் எடுத்தியம்பியுள்ள தந்தைக்கு என் நன்றியும்,பாராட்டும்! இறைவனின் அருள் தங்களை என்றென்றும் வழிநடத்தட்டும்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்!இன்றைய பதிவில் உறவின் அவசியம்,உண்மையான உறவு, வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள் மற்றும் தெய்வீக உறவு இவைகளின் அடிப்படையில் என்னால் சிந்திக்க முடிந்தது.இரத்த உறவும் சொந்தமும் பந்தமும்தான் பெரிதென நினைக்கும் இந்த உலகில், அன்பு என்னும் ஆற்றின் கரையை அகலமாக்கியிருக்கிறேன் என்று உறவுக்கும் பாசத்திற்கும் உள்ள வரம்பை, எல்லையைக் கடந்ததாக்கியவர் நம் இயேசு. நேற்று என் அம்மாவிடம் போனில் உரையாடி கொண்டிருக்கும் போது அவரிடம் கேட்டேன் என் மகள் எப்படி இருக்காளோ என்று ஏன் கவலைபடுகிறீர்கள்.மற்ற மகள்களை தாரைவார்த்து கொடுத்தது மாதிரி என்னையும் கடவுளுக்காக கொடுத்துள்ளீர்கள்,பின்னே ஏன் என்று வினவினேன்.அதற்கு என் தாய் மற்ற மகள்களுக்கு எல்லாம் பிள்ளைகள் இருக்கிறார்கள் உறவு இருக்கிறது ஆனால் உனக்கு அப்படி இல்லை என்று கூறினார்கள்.என் பதில் மை டியர் மம்மி (கோபம் வந்தால் மட்டும் அம்மாவை மம்மி என்று சொல்வேன் ) இறைவனுக்காக நான் வாழும் போதுதான் எனக்கு நிறைய உறவுகள் என்னை தேடி வருகிறது நானும் அவர்களை தேடி செல்லவும் அவர்களுக்காக ஜெபிக்கவும் முடிகிறது என்று ஒரு வாக்குவாத்துடன் முடித்தேன். ஆம், அன்பால் ஒன்றித்து சகோதர சகோதரிகள் கூடி வாழும் சமூகத்தில் உள்ளோர் அனைவரும் இயேசுவின் தாயும் சகோதர சகோதரிகளே. .எதையாவது எதிர்பார்த்து பழகுகின்ற இன்றைய காலச்சூழ்நிலையில், இயேசு கூறுகின்ற உறவைக் கண்டுபிடிப்பது கடினமான ஒன்று. கண்டுபிடிப்பதற்கு பதிலாக நாமே அப்படிப்பட்ட உறவாக மாறுவதுதான் சரியான பார்வையாக இருக்கும்.இரத்த உறவு அதற்கான நல்ல அடித்தளமாக இருக்கமுடியுமேயன்றி, உபகரணமாக இருக்க முடியுமேயன்றி, நிரந்தரத்திற்கான அடையாளமாக இருக்க முடியாது. உண்மையான உறவுகளைப் பெறுவதற்கு முயற்சி எடுப்போம். நாம் உண்மையான உறவுகளாய் வாழ்வோம். நாம் அனைவரும் இயேசுவின் தாயாகலாம், சகோதர சகோதரியாகலாம்.வாழத்தொடங்குவோமா?.தந்தைக்கு எனது பாராட்டுகளும் ,ஜெபங்களும் !

    ReplyDelete