நாளைய நற்செய்திப் பகுதியில் (லூக்கா 8:4-15) விதைப்பவர் உவமையை வாசிக்கின்றோம். வழிகளில் விழுந்த விதைகள், பாறைமீது விழுந்த விதைகள், முட்செடிகள் நடுவே விழுந்த விதைகள், நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் என நான்கு வகை நிலப்பகுதிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
'பாறைமீது விழும் விதைகள் மேல்' எனக்கு எப்போதும் ஒரு கரிசணை உண்டு. ஏனெனில் இந்தவகை விதைகளோடுதான் நான் என்னையே அடிக்கடி இணைத்துப் பார்த்திருக்கிறேன். பாதையில் விழுந்த விதைகளுக்கும், முட்செடிகள் நடுவே விழுந்த விதைகளுக்கும் ஆபத்து வெளியில் இருக்கிறது. ஆனால், பாறைமீது விழுந்த விதைகளுக்கு ஆபத்து தன்னகத்தேதான் இருக்கின்றன. வேகமாக முளைக்கின்றன. ஆனால், ஈரமில்லாததால் கருகிப் போகின்றன.
இவ்வகை விதைகளுக்கு இயேசு கொடுக்கும் அர்த்தமும் மிக அழகாக இருக்கிறது: 'பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள். சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள். சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள்!'
இன்று எங்கள் கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சூழல் பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு தொடங்கியுள்ளது. திருத்தந்தை 'லௌதாத்தோ சீ' சுற்றுமடல் எழுதிய நாள் முதல் ஊரெல்லாம் சுற்றுச்சூழல்தான் பேச்சாக இருக்கிறது. ஆனால், அவரின் அடுத்த சுற்றுமடல் வரும்வரைதான் இந்தப் பேச்சு இருக்கும். பின் பேச்சு வேறுபக்கம் மாறிவிடும். ஆக, நம் ஒட்டுமொத்த பேச்சும்கூட பல நேரங்களில் பாறைநிலங்களில் விழுந்த விதைகளாகவே இருக்கின்றன.
மேலும், இன்றைய தகவல் தொழில்நுட்பமும், நாம் வாழும் நவநாகரீகமும் நீண்ட காலம் அல்லது நிலைத்து நிற்கும் எதையும் சந்தேகத்தோடே பார்க்கிறது. வேகமாக வாழ வேண்டும். வேகமாக அனுபவிக்க வேண்டும். வேகமாக மறைய வேண்டும். இப்படிப்பட்ட கருத்தியலைக் கொண்டிருக்கும் நம் உலகம் பாறைமீது விழுந்த விதையாக இருக்கவே நம்மை அழைக்கிறது. ஆழமான உறவுகள், நீண்டகால நட்பு, விட்டுக்கொடுக்க முடியாத மதிப்பீடு என்று எதுவும் இல்லை போல தெரிகிறது.
நாளைய முதல் வாசகத்தில் திமொத்தெயுவுக்கான தன் அறிவுரையை நிறைவு செய்யும் பவுல் இயேசு கிறிஸ்து தோன்றும் வரையில் எந்தவித குறைச்சொல்லும் ஆளாகாதவாறு வாழுமாறு சொல்கின்றார். ஆக, அப்பழுக்கு இல்லாமல் வாழ வேண்டும். அதையும் தொடர்ந்து வாழ வேண்டும். அதாவது, பாறைமீது விழுந்த விதைகளாக சில காலம் மட்டும் அப்பழுக்காமல் வாழ்ந்துவிட்டு பின் அழுக்காகிவிடாமல், என்றும் அழுக்கில்லாமல், இழுக்கில்லாமல் வாழ வேண்டும்.
பாறைமீது விழுந்த விதைகளின் நேர்முக குணம் என்னவென்றால் 'உடனடி வளர்ச்சி!' ஆனால், உடனடி வளர்ச்சி எப்போதும் நீண்டகால வளர்ச்சி அல்ல என்பதே எதார்த்தம்.
என் மதிப்பீடுகளிலும், என் அழைத்தல் வாழ்விலும், என் இறைநம்பிக்கையிலும் நான் பாறைமீது விழுந்த விதைகள் போல அல்லாமல், என்றும் ஈரத்தோடு இருந்தால் எத்துணை நலம்!
தந்தைக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்! " பாறைமீது விழுந்த விதைகள்" இந்த இனிய பதிவின் இறுதியில் மிக அழகாக முடித்துள்ளீர்கள் அதாவது என் மதிப்பீடுகளிலும், என் அழைத்தல் வாழ்விலும், என் இறைநம்பிக்கையிலும் நான் பாறைமீது விழுந்த விதைகள் போல அல்லாமல், என்றும் ஈரத்தோடு இருந்தால் எத்துணை நலம்! நாம் அனைவரும் நெஞ்சில் ஈரமுள்ள மனிதர்களாக என்றும் அழுக்கில்லாமலும்,இழுக்கில்லாமலும் வாழ வேண்டும் என்பதை மிகவும் அருமையாகவும் தெள்ளத்தெளிவாகவும் கூறியதற்கு எனது நன்றிகள். பொதுவாக எல்லோருக்கும் ஒரு ஆசை, எந்த காரியமும் வெகு சீக்கிரமாக முடியவேண்டும் என்று. அதிலும் ஆண்டவன் காரியம் இன்னும் மிகமிக வேகமாக நிறைவுபெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.ஆனால் இயேசு இறையரசின் செயல்பாடுகளை ஒரு சிறிய விதைக்கு ஒப்பிடுகிறார். அளவில் சிறியது விதை. பூமியில் புதைந்து சிதைகிறது. மண்ணில் மக்கி மடிகிறது. மண்ணின் ஈரத்தையும் உரத்தையும் நம்பி வளர்கிறது. வலுப்பெற சூரிய ஒளியையும் சுவாசத்ததிற்கு காற்றையும் நம்பி வளர்கிறது. கல்லும் முள்ளும், பறவையும் விலங்கும் மனிதனும் தடை செய்தபோதும் தடையைத்தாண்டி வளர்கிறது. மென்மையாக, மெதுவாக தொடங்கிய வளர்ச்சி, காலப்போக்கில் பெரிய மரமாகி நூறு மடங்கு பலன் கொடுக்கும் பெரிய மரமாகுவதைப்போல இறையறசின் செயல்பாடுகள் இருக்கும் என உணர்த்துகிறார்.விதையாக நாம் இருப்போம். பெரிய மரமாகி முழுமையாகப் பலன்கொடுக்கும் ஆற்றலை நம்முள் வைத்துள்ளார் நம் இறைவன். எதிரிகளை, எதிர்ப்புகளை தகர்த்து நன்மைகளைச் செய்யும வல்லமை நம்முள் பொதிந்து வைத்துள்ளார்.
ReplyDeleteஇதை தொடர்ந்து நாம் சிந்தித்து பார்த்தோம் என்றால் தந்தை அவர்கள் நாம் ஒவ்வொருவரையும் விதையாக விழுந்து உள்ளத்தை பண்படுத்தவும் நம்பிக்கை தான் வாழ்கை அதை கொண்டு வாழவும் வழி கூறியுள்ளார்கள். ஆக,விதைபோல எழுவோம். நூற மடங்கு பலன் கொடுப்போம்.தந்தையின் பதிவு என்னை இந்த அளவுக்கு சிந்திக்க தூண்டியதற்கு எனது பாராட்டுக்கள் தந்தைக்கு ! ..........
என்னதொரு அர்த்தமுள்ள,அழகான பதிவு! 'விதைப்பவன்' உவமை எத்துணை முறை வாசித்திருப்போம்; எத்துணை விளக்கங்களைக் கேட்டிருப்போம்.கண்டிப்பாக நாம் அனைவருமே பல்வேறு தருணங்களில் பல் வேறு நிலங்களுக்குச் சொந்தக்கார்ர்களாக இருந்திருப்போம்.இன்று தந்தை தன்னைக் குறித்துத் தந்திருக்கும் சுய விளக்கம் நம்மையும் யோசிக்க வைக்கிறது.பாறையான நம் மனத்தில் விழுந்த விதைகள் சிறிதுகாலம் வளர்ந்திடினும் ஈரமில்லா காரணத்தால் கருகிவிடுகின்றன.இது மறந்து போகும் மாயாஜாலங்களின் காலம்.மாறாத மதிப்பீடுகளுக்கு இங்கே விலையில்லை.இத்தகையதொரு உலகில்தான் நம்மை அப்பழுக்கில்லாமல் வாழச் சொல்கிறார் பவுல் திமோத்தேயுவுக்கு எழுதும் திருமுகத்தின் வழியாக.பாறைமீது விழுந்த விதைகளாக 'உடனடி வளர்ச்சியையும்' தாண்டி 'நீண்டகால வளர்ச்சிக்கு' வித்திட அழைப்பு விடுக்கும் தந்தையின் வார்த்தைகளுக்கு செவிமடுப்போம்.தந்தையே! தங்களின் மதிப்பீடுகளிலும்,அழைத்தல் வாழ்விலும்,இறை நம்பிக்கையிலும் பாறைமீது விழுந்த விதையாக இல்லாமல் என்றென்றும் ஈரத்தோடு இருக்க என் செபத்தில் தங்களை நினைவு கூறுகிறேன்.வாழ்த்துக்கள்!
ReplyDelete