Sunday, September 28, 2014

மோடி, ஜெயா, இரண்டு மகன்கள்!

ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், 'மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்' என்றார். அவர் மறுமொழியாக, 'நான் போக விரும்பவில்லை' என்றார். ஆனால் பின் மனதை மாற்றிக் கொண்டு சென்றார். அடுத்த மகனிடம் போய், 'நான் போகிறேன்' என்றார். ஆனால் அவர் போகவில்லை. (காண் மத்தேயு 21:28-32)

இந்த வார ஞாயிறு நற்செய்திக்கும் நேற்றும் இன்றும் நம் அரசியல் வானில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் ஒரு தொடர்பை உருவாக்கி இன்று சிந்திப்போம்.

நேற்றைய தினம் நம் பிரதமர் மேதகு மோடி அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக அவர் அமெரிக்கா செல்ல விழைந்தபோது குஜராத் கலவரத்தைக் காரணம் காட்டி அவருக்கு விசா மறுக்கப்பட்டது. ஆனால் பிரதமர் ஆனவுடன் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தது அமெரிக்கா. நேற்று அவர் நியூயார்க்கில் இறங்கியவுடன், நியூயார்க் நகர நீதிமன்றம் அவருக்கு ஒரு சம்மன் அனுப்பியது. சம்மனின் உட்பொருள் என்ன? '12 ஆண்டுகளுக்கு முன் நம் தாய்த்திருநாட்டின் குஜராத்தில் நடந்த கோத்ரா சம்பவத்திற்கு மறைமுகமாக அந்நாள் முதல்வராக இருந்த மோடி அவர்களுக்கு தொடர்பு இருந்ததா?' இவ்வளவு நாளாக தொடர்பு இருந்தது என்று விசா மறுத்த அமெரிக்காவின் கேள்வியைப் பாருங்கள்: 'தொடர்பு இருந்ததா?' இதிலேயே அதன் இரட்டை வேடம் தெரிகிறது: உலகத்தின் கட்டப்பஞ்சாயத்துக்காரர் அமெரிக்காவுக்கு இது ஒன்றும் புதிதல்லதான். எனக்கு ஒரு நெருடல், 'அமெரிக்காவிற்கே சம்பந்தம் இல்லாத ஒரு இந்தியக் குடிமகனுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் எப்படி சம்மன் அனுப்ப முடியும்?'

நம்ம வீட்டுக்கு முன்னால நடந்துபோற ஒருத்தரைப் பார்த்து, 'ஏம்பா உன் வீட்டில போன வாரம் ஏதோ ஒரு சண்டையாம்ல. நீ அதுக்குக் காரணமா இல்லையான்ன சொல்லிட்டு;போ!' அப்படின்னு நாம சொன்னா அவன் நம்மள சும்மா விடுவானா? அது முறையான செயலா?

ஆனால் அமெரிக்கா செஞ்சா அது முறையான செயல். ஏன்னா அது அமெரிக்கா!

சரி. அமெரிக்கா என்ன காரணம் சொல்லது தெரியுமா? 'அமெரிக்கா வாழ் இந்தியா வம்சாவழியினருக்கு அது பாதிப்பை ஏற்படுத்தியதால் எங்களின் அரசியலமைப்புச் சட்டப்படி நாங்கள் அவர்களின் நலன் காக்க இந்த சம்மனை அனுப்புகிறோம்!'

தம்பி! நீங்க அப்படி 'உங்களுக்கு எடுபிடி வேலை பார்க்கும் இந்திய வம்சாவழியினரோட நலன் காக்குறீங்கன்னா, நீங்க 12 வருடம் என்ன பண்ணுனீங்க? 12 வருடம் அவங்க நலமில்லாம இருந்துட்டு இப்ப என்ன அப்படி நலக்குறைவு வந்துடுச்சு?'

ஏன் இதே கேள்வியை நம்மளும் கேட்க முடியாதா? இரண்டு வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் பில் கேட்ஸ் வந்தார். அவருக்கு நம்ம உச்ச நீதிமன்றம் ஒரு சம்மன் அனுப்புகிறது என வைத்துக்கொள்வோம்: 'ஏப்பா கேட்சு! மதுரையில ஒருத்தர் வாங்குன விண்டோஸ் 8.1 அடிக்கடி ஹேங் ஆகுது. அவரு வாங்குனது உங்க ஊருல தான். இந்தப் பிரச்சினைக்கும் உனக்கும் தொடர்பு இருக்கா? 21 நாட்களுக்குள் நீ அதைச் சொல்ல வேண்டும்!' - இப்படி நாம சொன்னா எவ்வளவு அசிங்கமா இருக்கும்?

நம்ம வீட்டுக்குச் சாப்பிட ஒருத்தரைக் கூப்பிட்டு, தட்டுல சோறையும் போட்டு, 'ஆமா! அன்னைக்கு என் பையனை நீ கிள்ளி வச்சியா! இப்ப பதில் சொல்ல வேணாம். ஒரு ரெண்டு நாள் கழிச்சி சொல்லு' என்றால், அவர் எப்படிச் சாப்பிடுவார்? இதுதான் விருந்தோம்பலா.

ஆனால் அமெரிக்காவில் இதெல்லாம் நடக்கலாம். ஏன்னா! அது அமெரிக்கா! அவங்ககிட்ட டாலர் இருக்கு! நாம இன்னும் ரூபாய் தான வச்சிருக்கோம்!

'போக மாட்டேன்னு' சொல்லிட்டு 'போயி' மாட்டிக்கிட்ட மூத்த மகன் தான் மோடி.

ஆனாலும் அமெரிக்காவின் இந்த அவமானச் செயலுக்கு மோடியின் கோபம் இந்தியா வந்தவுடன் அதற்குக் காரணமானவர்கள் மேல் திரும்பும் என்பது என் ஊகம்.

இரண்டாவதாக, இன்று நம் தமிழக முதல்வரின் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியானது. 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கிற்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. ஆசிய விளையாட்டுக்களில் நாம் பெற்ற தங்கத்தைப் பற்றி ஒரு வரி கூட பேசாத மீடியாக்கள் இன்று வரிந்து கட்டிக்கொண்டு பெங்களுர் சென்றுவிட்டன. தெற்கு மாநிலங்களில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாhமல், டெல்லி, மும்பை, கொல்கத்தா தான் இந்தியா என நினைத்து அன்றாடம் செய்தி வழங்கிக் கொண்டிருக்கும் சிஎன்என்-ஐபின் மற்றும் என்டிடிவி கூட இன்று ஏறக்குறைய 8 மணி நேரம் இந்தத் தீர்ப்பு குறித்தே விவாதித்தனர். இந்தத் திடீர் ஆர்வம் அவர்களுக்கு எப்படி வந்தது?

ஒரு குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அவ்வளவுதான். ஜனநாயக நாட்டில் சட்டம் அரசமைப்பைவிட மேலாகக் கருதப்படும் போது அந்தச் சட்டம் வழங்கும் தண்டனையை ஏற்க வேண்டியது நம் கடமை. அன்றாடம் எவ்வளவோ நீதிமன்றங்களில் அப்பாவி சுப்பன்களும், குப்பன்களும் குற்றவாளிகளாகவோ, நிரபராதிகளாகவோ தண்டிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன்! அவங்க சொந்தக்காரங்க வெளியே ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா?

நித்தியானந்தாவுக்கு ஆன்மை இருக்கிறதா என்று சாமியார்களையும், ஜெவுக்கு தண்டனை கிடைக்குமா என்று அரசியல்வாதிகளையும் நாம் இன்னும் சுற்றிக் கொண்டேயிருப்பது வேதனை தருகிறது.

இன்று தண்டிக்கப்பட்டது ஜெயா மட்டுமல்ல. நம் ஒட்டு மொத்தத் தமிழகமும் தான். தனிநபரை மட்டும் மையமாக வைத்த கட்சி இனி விடுதலை பெற்றது என்ற எண்ணம் ஏன் நமக்கு வரவில்லை? இன்று தெருவில் போவோர், வருவோரையெல்லாம் கல்லால், கட்டையால் அடித்த அம்மாவின் தொண்டர்கள் தன் வீட்டில் தன் மனைவியையோ, பிள்ளைகளையோ அடிப்பார்களா? தன் சொந்த காரையோ, வீட்டையோ சேதப்படுத்துவார்களா? வேறொருவனோடது என்றால் அது அவனுக்கு வலிக்காதா? இன்று நாம் எரிக்கும் பேருந்துகள் நாளை நம் வரிப்பணத்தில் தானே வாங்கப்படும். இன்று வெளியூர் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. கர்ப்பிணிப் பெண்கள், பிறந்த குழந்தைகளைக் காண வந்திருக்கும் எளிய மக்கள், யார் வீட்டிலாவது இறப்பு அல்லது இழப்பு, அவசரம் என வந்தவர்களில், எத்தனை பேருக்கு பாவம் பிளாட்பாரங்களில் இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயம். இவர்கள் என்ன சாப்பிடுவார்கள்? எங்கே சாப்பிடுவார்கள்? கைச்செலவுக்கு என்ன செய்வார்கள்? அதிமுக நிர்வாகம் கொடுக்குமா? தமிழக அரசு கொடுக்குமா? அல்லது 'அம்மா அவசரச்செலவுக்கான உதவி' என்று ஏதாவது ஒரு திட்டம் தொடங்குவார்களா? 'அம்மா சிமெண்ட்' அதிமுகவின் அஸ்திவாரத்திற்கே போதவில்லை இன்று.

கலைஞர் மற்றும் சுப்பிரமணியசாமியின் கொடும்பாவியை எரித்தால் மட்டும் அம்மா பக்தி நிறைவேறிவிடுமா? முடிந்தால் நீ அவர்களை ஜெயிலுக்கு அனுப்;பு? இப்படி எல்லாரும் ஜெயில் சென்று ஒரு புதிய காற்றாவது தமிழ்நாட்டில் வீசட்டும்.

இன்று புதியதலைமுறை பேட்டியில் ஒருவர் கேட்கிறார்: 64 கோடிதான அடிச்சாங்க. திமுக ஆயிரக்கணக்கான கோடி அடிச்சுட்டு வெளியதான இருக்காங்கு? நிருபர் அழகாகப் பதில் சொன்னார்: '1 ரூபாய் அடிச்சாலும் ஊழல்தான். 1 கோடி ரூபாய் அடிச்சாலும் அது ஊழல்தான்! 1 ரூபாய் அடிக்கிறவன் 1 கோடி அடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பா அடிப்பான்!'

இன்னும் அன்றாடங்காய்ச்சிகளாய், வாய்க்கும், வயிறுக்கும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நம் நாட்டின் 42 விழுக்காடு மக்களுக்கு அரசு மேல் வெறுப்பும் நம்பிக்கையின்மையும் வராதா?

'நான் போகிறேன்' என்று போகாமல் பெங்களுரில் தங்கிவிட்ட ஜெயா தான் நம் உவமையின் இரண்டாம் மகன்.

இரண்டு மகன்களின் செயல்பாடும் தவறுதான். ஆனால் இயேசு அவர்களில் ஒருவரை உயர்த்தித்தான் பேசுகின்றார்.

'போகிறேன்' என்று சொல்லி 'போகும்' மனப்பக்குவம் பிறந்தால், சொல்வதைச் செய்பவர்களாக மட்டும் இருந்தால், வாழ்வு நலமாகும்!


1 comment:

  1. இன்றையப்பதிவின் இறுதி இரு வரிகளைத்தவிர எதுவுமே விளங்கவில்லை என்பதுதான் உண்மை.நேற்றைய சம்பவங்களை அசைபோட்டால் மிஞ்சுவதெல்லாம் நம் மக்களின் அறியாமை குறித்த விரக்தியே.நேற்று நம் தெருக்களில் அதுவும் சென்னையில் கட்டவிழ்த்துப்பட்ட வன்முறை..யார் காரணம்? நல்ல தலைவர்களைத்தேர்ந்தெடுக்காத மக்கள் இல்லை மக்களுக்கு நல்வழி காட்டாத தலைவர்களா? இம்மாதிரி நேரங்களில் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்படுவதெல்லாம் அரசியல் என்றால் என்ன என்று கூடத் தெரியாத அப்பாவிகளும்,பேருந்து ஓட்டுநர்களும்,நடத்துநர்களும்,போலீஸாரும்,தெருவோரம் வியாபாரம் நடத்தி அன்றாடம் வயிற்றைக்கழுவும் நம் அன்றாடம் காய்ச்சிகளும்தான்..இதை மக்களுக்குப் புரிய வைத்திருக்கிறார்களா நம் தலைவர்கள்?..இரு மட்டுமே என் ஆதங்கம்.மற்றபடி மோடி,ஜெயா,இருமகன்கள்...யார் போனார்?யார் வந்தார்? ...ஒன்றுமே விளங்கவில்லை.இன்றையப் பதிவிலிருந்து நான் புரிந்துகொண்டதெல்லாம் ஒன்றுதான்...'நான் ஒரு அரசியல் சூன்யம்'.அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்!

    ReplyDelete