Tuesday, September 16, 2014

அடுத்தவர்களின் ரெக்ரியேஷன் டாபிக் அல்ல!

அ. அன்பர்களே, நம்பிக்கை கொள்ளாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய உள்ளம் உங்களுள் எவருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு, ஒவ்வொரு நாளும் 'இன்றே' என எண்ணி, நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள். (எபி 3:12-13)

ஆ. நிலம், அதன்மீது அடிக்கடி பெய்யும் மழைநீரை உறிஞ்சி, வேளாண்மை செய்வோருக்குப் பயன் தரும் வகையில் பயிரை விளைவிக்குமாயின் அது கடவுளின் ஆசி பெற்றதாகும். மாறாக, முட்செடிகளையும், முட்புதர்களையும் முளைப்பிக்குமாயின், அது பயனற்றச் சாபத்துக்குள்ளாகும். (எபி 6:7-8)

இ. முன்பு காட்டிய அதே ஆர்வத்தை நீங்கள் இறுதிவரை காட்ட வேண்டும். நீங்கள், தளர்ச்சிக்கு இடம் கொடாமல், நம்பிக்கையாலும், பொறுமையாலும் இறைவாக்குறுதிகளை உரிமைப் பேறாகப் பெற்றவர்களைப் போல வாழுங்கள். (எபி 6:11-12)

இன்று மேற்காணும் மூன்று இறைவாக்குகளை மையமாக வைத்து, அருட்பணியாளர்களுக்கும், கடவுளுக்கும் உள்ள உறவு பற்றி சிந்தித்தேன். ஒவ்வொரு ஆண்டும் மறைமாவட்ட அருட்பணியாளர்கள் தங்கள் ஆயரோடும், இறைமக்களோடும் இணைந்து நிறைவேற்றும் திருத்தைலத் திருப்பலியில் பயன்படுத்தப்படும் தொடக்கவுரை இங்கு நினைவுகூறப்பட வேண்டியது. இந்தத் தொடக்கவுரை அருட்பணியாளருக்கும், கிறிஸ்துவுக்கும் உள்ள தொடர்பை மூன்று சொல்லாடல்களில் மிக அழகாகவும், தெளிவாகவும் எடுத்துரைக்கிறது:

அ. அருட்பணியாளர்கள் கிறிஸ்துவின் திருப்பணியில் பங்காளிகள்.
ஆ. கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்திருப்பார்கள்.
இ. கடவுளுக்குத் தங்கள் பற்றுறுதியையும், அன்பையும் வெளிப்படுத்துவார்கள்.

ஒரு அருட்பணியாளர் எந்த அளவிற்கு தன் பங்காளியான கிறிஸ்துவோடு இணைந்திருக்கிறாரோ, அந்த அளவிற்கே அவரால் தன்னையே விரித்துக் கொடுக்க முடியும். அருட்பணியாளர்களின் வேரூன்றல் அவர்களிடம் மிகவும் எதிர்பார்க்கப்படக் கூடிய ஒன்று. 'எங்க ஃபாதரை நாங்க கோயில்லயே பார்த்தது கிடையாது!' என்று ஒரு சில இறைமக்களின் புலம்பல்களைக் கேட்டிருப்போம். அல்லது சில அருட்பணியாளர்களே, 'கட்டளை செபம் எல்லாம் நான் சொல்வது கிடையாது!' என்றும், 'கோவிலில் உட்காரும் நேரத்திற்கு நான்கு மனிதர்களைச் சந்திப்பது மேல்' என்றும், 'நான் பஸ்ல போகும் போதே என்னோட ஸ்மார்ட்ஃபோன்ல உள்ள iBreviary தான் நான் வாசிப்பேன்' என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். நானும் கூட இதே போல சில தருணங்களில் செய்திருக்கிறேன். ஆனால் கொஞ்சம் உட்கார்ந்து யோசித்தால் இப்படிப் பேசியது தவறே என்று தோன்றுகிறது.

எனக்கு இறுதியாண்டு இறையியல் வகுப்பெடுத்த பேராசிரியர் ஒருநாள் எங்களைப் பார்த்து, 'குருத்துவத்தில் பெரிய இழப்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டார். நாங்கள் அனைவரும் கோரஸாக 'மணத்துறவு' (celibacy) என்றோம். அவரோ சிரித்துக் கொண்டே சொன்னார்: 'நான் எவ்வளவு வேண்டுமானாலும் bet கட்டுகிறேன். நீங்கள் அதை ஒருநாளும் இழப்பாகவே கருதமாட்டீர்கள்!' அன்று நாங்கள் எல்லாம் அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இன்று நிறைய நேரங்களில் அதை எண்ணிப்பார்த்து அதில் உண்மை இருக்கிறதே என்றே உணர்கின்றேன். மணத்துறவு என்பது உறவின் வெறுப்பு அல்ல. அது உறவின் பிறப்பு. ஒரு பெண்ணுக்கு என் உறவை மறுத்ததால் ஓராயிரம் உறவுகளுக்குள் ஒரு அருட்பணியாளர் பிறக்கின்றார். அந்த உறவின் முதற்கனி கிறிஸ்து. மணத்துறவுக்கு எதிராக இன்று நிறைய பேர் கொடி பிடித்தாலும், இந்த மணத்துறவு தான் அருட்பணியாளர்களின் நடுவில் பாலியல் பிறழ்வுகளுக்குக் காரணம் என்று சொன்னாலும் மணத்துறவிற்கென்று ஒரு மகத்துவம் இருக்கவே செய்கின்றது. திருமணம் முடித்தவர்களும் கூட பாலியல் பிறழ்வுகளுக்குக் காரணமாக இருக்கின்றனர் தாம். அதற்காக திருமணம் என்ற நிறுவனத்தை உடைத்து விட முடியுமா. பாலியல் என்பது ஒரு உணர்வு. எல்லா உணர்வுகளிலும் பிறழ்வுகள் இருப்பது போல பாலியலிலும் இருக்கத்தான் செய்யும்.

திருமணத்திற்காக இளைஞர், இளம்பெண்களைத் தயாரித்துக் கொண்டிருந்த ஒரு அருட்பணியாளரை ஒரு இளம்பெண் கேட்டாள். 'ஃபாதர் எங்களுக்கு திருமணம் பற்றி அழகாக வகுப்பு எடுக்கிறீர்கள். ஏன் தாம்பத்ய உறவு குறித்து ஒரு மருத்துவர் போல சொல்லிக் கொடுக்கிறீர்கள். 'ச்சே...நானும் திருமணம் முடித்திருக்கலாம்!' என்று உங்களுக்கு யோசனை வராதா?' அருட்பணியாளர் சிரித்துக் கொண்டே சொல்கிறார்: "I have said an unconditional 'yes' to something which the world can never understand!"

மணத்துறவில்தான் அருட்பணியாளர் கிறிஸ்துவோடு தன் முதல் ஒன்றிப்பைக் காட்டுகின்றார். இயேசுவுக்கு திருமணம் நடந்திருக்கலாம் என்றும் மகதலா மரியாள் அவரின் தோழி என்றும் வாதங்கள் இருக்கின்றன. ஆனால் அவைகளை நாம் இன்று பெரிதுபடுத்த வேண்டாம். இந்த ஒன்றிணைப்பின் வழியாக அருட்பணியாளர் தன் பற்றுறுதியையும், அன்பையும் கிறிஸ்துவுக்குக் காட்டுகின்றார்.

கிறிஸ்துவுக்கும், அருட்பணியாளருக்கும் ஒரு ஆழமான உறவு இருக்க வேண்டும். அது இறைவேண்டலிலும், மணத்துறவிலும், எல்லாரையும் ஏற்று அன்பு செய்வதிலும் வெளிப்பட வேண்டும்.

இப்படி எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் இதில் உள்ள பிரச்சினைகள் தாம் மேற்காணும் மூன்று இறைவாக்குகள். ஒவ்வொரு இறைவாக்கிலும் அருட்பணியாளர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை வருகிறது.

அ. நம்பிக்கையின்மை. யார் மேல்? கடவுள் மேல். நம்பிக்கை என்பது ஒரு கொடை. அது கடவுளிடமிருந்துதான் வர முடியும். நாம் படிக்கும் மெய்யியலும், இறையியலும் ஓட்டலில் நாம் பார்க்கும் மெனு கார்ட் போல. மெனு கார்டைப் பார்ப்பதாலும், வாசிப்பதாலும் மட்டும் நாம் பசியாறிவிட முடியுமா? தன் குடும்பத்தில் அருட்பணியாளர் பெறுகிற நம்பிக்கையும், குருமாணவப் பயற்சி மையத்தில் கிடைக்கும் தொடர் ஊக்கமும் ஒருநாள் சவால் விடப்படுகிறது. அருட்பணியாளரின் கிணறு கண்டிப்பாக ஒரு நாள் வற்றும். எல்லாம் விரக்தியாகத் தெரியும். நற்செய்தி நூல்கள் எல்லாம் பொய் என்றும், திருச்சபை என்பது ஒரு பெரிய அரசியல் தளம் என்றும், கடவுள் என்பது மாயை என்றும், நாம் தொடும் அப்பமும், இரசமும் வெறும் கோதுமையும், திராட்சையும் தான் என மூளை சொல்ல ஆரம்பிக்கும். மனம் பின்னோக்கி இழுக்கும். மூளை முன்னோக்கித் தள்ளும். 'எல்லாரையும் போல நான் ஏன் இருக்கக் கூடாது!' என்று கேட்கும். இப்படி எண்ணங்கள் வரும்போதெல்லாம் என்ன செய்ய வேண்டும்? 'கோயிலுக்குப் போய் செபம் செய்ய வேண்டுமா?' இல்லை. அறையைப் பூட்டிவிட்டு வெளியே எங்கேயாவது அல்லது சினிமாவுக்கு, பார்க்குக்கு, கண்காட்சிக்கு என சென்றுவிட வேண்டும். 'இது ஒரு ஏமாற்றம்!' என்றே திருமுகம் சொல்கிறது. இந்த ஏமாற்றத்திற்கு ஏமாந்து போகாதவர்களே நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

ஆ. பயன் கொடுக்க முடியவில்லையே! அருட்பணியாளர்கள் எழுப்பும் பல கேள்விகள் ஒன்று இதுதான்: 'என்னால் யாருக்குப் பயன்?' ஆயரும் கண்டுக்க மாட்றார். எழுதிப்போடற ப்ராஜக்டும் வர்றதில்ல. அசிஸ்டன்ட்டும் மதிக்க மாட்றார். சிஸ்டர்சும் சண்டை போடறாங்க. பங்குப் பேரவையிலயும் பிரச்சனை. திருமணம் முடிக்கின்ற தம்பதியினர் பத்து மாதத்தில் தங்கள் திருமணத்தின் பயனான குழந்தையைக் கைகளில் ஏந்திவிடுகின்றனர். புதிதாக என்ஜினியரிங், மருத்துவம் படித்தவரும் முதல் மாதத்தில் கைநிறைய சம்பளம் வாங்கி விடுகின்றார். ஆனால் அருட்பணிநிலையில் மட்டும்தான் 25 வருடங்கள் ஆனாலும் அப்படியே இருப்பது போல இருக்கும். அருட்பணியாளர் ஒருவர் இருக்கும் வரை அவரைக் குறைசொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர் இறந்துவிட்டால் அவரின் இடத்தை யாரும் நிரப்ப முடியாமலேயே போய்விடுகின்றது. இறைவாக்கு சொல்வது என்ன? பயன் கொடுக்க முடியவில்லையென்றாலும் பரவாயில்லை. தண்ணீரையாவது உரிஞ்சிக் கொண்டிருங்கள். கடினப்பட்டு விடாதீர்கள்! பின் உங்களிடம் முட்செடிகள் தாம் முளைக்கும்!

இ. தளர்ச்சி. 'முன்பு காட்டிய அதே ஆர்வத்தை இப்போதும் காட்டுங்கள்!' என அழைப்பு விடுக்கின்றார் திருமுக ஆசிரியர். அருட்பொழிவின் போதும், முதல் திருப்பலி நிறைவேற்றும் போதும் இருந்த ஆர்வம் காலப்போக்கில் குறைவதற்கு நிறைய வாய்ப்பிருக்கின்றது. விரக்தியும், தளர்ச்சியும் ஓடிவந்து ஒட்டிக்கொள்கின்றது. இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வைப் பொறுத்தே சரிசெய்ய முடியும். சிலர் மற்றவர்களோடு பேசிச் சிரிப்பதால் தங்களைப் புதுப்பித்துக் கொள்வார்கள். சிலர் புத்தகங்கள் படிப்பார்கள். சிலர் புதுப்பித்தல் வகுப்புகளுக்குச் செல்வார்கள். சிலர் மாற்றுப் பணிக்கு விண்ணப்பிப்பார்கள். தளர்ச்சியுறும் அருட்பணியாளர்களுக்குத் துணையாக அருட்பணியாளர்கள் மட்டுமே இருக்க முடியும். நாம் நமக்கு வெளியில் இருப்பவர்களிடம் சொன்னால் அவர்களால் நமக்கு அனுதாபம் மட்டுமே பட முடியும். சில நேரங்களில் அனுதாபத்தை அருட்பணியாளர்கள் அதீத அக்கறையாக எண்ணிக் கொண்டு அருட்பணிநிலையைப் புறக்கணித்த நிலைகளும் உண்டு. அருட்பணியாளர் அதிகமாகக் குடிக்கிறார் அல்லது சினிமா பார்க்கிறார் அல்லது தூங்குகிறார் என்றால் அதை ஒரு நோயாக எண்ணிவிடக் கூடாது. விரக்தி என்ற நோயின் அறிகுறிகள் அவை. வெறும் அறிகுறிகளைக் குணமாக்குவதற்குப் பதிலாக நோயைக் களைய முயற்சிகள் எடுக்க வேண்டும்.

இந்த மூன்று பிரச்சினைகளுக்கும் தீர்வு நமக்கு மேலிருந்து - கடவுளிடமிருந்து - வரவேண்டும். அல்லது நமக்குள்ளிருந்து வரவேண்டும்.

ஒவ்வொரு அருட்பணியாளருக்குள்ளும் ஒரு மனப்போராட்டம் இருக்க வேண்டும். ஒவ்வொரு பொழுதும் அவர் தன் பிரமாணிக்கத்தில் நிலைத்து நிற்பதற்காக, அழைத்தலைத் தக்க வைப்பதற்காக போராடிக்கொண்டே இருக்கிறார். இதை நாம் நினைத்தால் பங்குத்தளங்களில் அருட்பணியாளர்களை விமர்சனம் செய்யும் போக்கு மிகவும் குறையும்.

அடுத்தவர்களின் ரெக்ரியேஷன் டாபிக் அல்ல அருட்பணியாளர்.

காலத்தின் கன்னத்தில் வடியும் கண்ணீர்த்துளி அவர்!




1 comment:

  1. அருட்பணியாளர்களின் உண்மை நிலை பற்றிக்கூறும் ஒரு உருக்கமான பதிவு.ஒரு பெண்ணுக்குத்தன் உறவை மறுத்ததால் ஓராயிரம் உறவுகளுக்குள் ஒரு அருட்பணியாளர் பிறக்கிறார்...மிகச்சரியான,போற்றப்படவேண்டிய உண்மை! தன் பிரமாணிக்கத்தையும்,அழைத்தலையும தக்கவைத்துக்கொள்ள அனுதினமும் போராடும் ஒரு அருட்பணியாளரின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் அவரைவிமர்சிப்பது ஒரு அருவருக்கத்தக்க செயல்." ஒரு அருட்பணியாளர் அடுத்தவரின் ரெக்ரியேஷன் டாபிக் அல்ல; காலத்தின் கன்னத்தில் வடியும் கண்ணீர்த்துளி அவர்".. என்கண்களையும் கசிய வைத்த வரிகள்.அருட்பணியாளர்களின் உண்மைநிலையை உலகத்துக்கு எடுத்துரைக்க விழைந்துள்ள தந்தையையும்,அனைத்து அருட்பணியாளர்களையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete