'உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும்
அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும்
நான் நோக்கும் போது,
மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்?'
(திபா 8:3-4)
கடந்த நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி நாம் விண்ணில் ஏவிய 'மங்கள்யான்' செவ்வாயை இந்தப் புதன் கிழமை தொட்டுவிட்டது.
இதுவரை செவ்வாய் என்றால் கிழமை என்றும், திருமணத்தடைக்கான தோஷம் என எண்ணிக் கொண்டிருக்கும் நம் சிந்தனையைப் புரட்டிப்போட்டுவிட்டது இந்த முயற்சி.
இந்த வெற்றி குறித்து இன்று நான் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்!
'மங்கள்யான்' என்றால் என்ன?
சமஸ்கிருதத்தில், ஏன் அதையொட்டிய பாலி மற்றும் இந்தி மொழிகளிலும், 'மங்கள்' என்றால் 'செவ்வாய்'. வாரத்தின் செவ்வாய் கிழமையை இந்தியில் 'மங்கள்வார்' என அழைக்கின்றனர். 'யான்' என்றால் 'வாகனம்'. இது ஒரு பாலி மொழிச் சொல். எடுத்துக்காட்டாக, புத்தமதத்தில் 'மகாயானா' 'ஹீனயானா' என்ற இரு பெரும் பிரிவுகள் உண்டு. இவற்றிக்கு 'பெரிய வாகனம்' 'சாதாரண வாகனம்' என்பது பொருள். ஆக, 'மங்கள்யான்' என்பது 'செவ்வாய்க்கான அல்லது செவ்வாயை நோக்கிய வாகனம்'. 'சந்திரயான்' என்பதன் அர்த்தம் இப்போது புரிகிறதா?
எதற்காக செவ்வாயை ஆராய்ச்சி செய்ய வேண்டும்?
செவ்வாய் ஒரு ஆச்சர்யங்களின் கிரகம். பூமியைத் தாண்டி மனிதர்கள் வசிக்கக் கூடிய இடமாக இது இருக்கலாம் என்ற சந்தேகம் நாளுக்கு நாள் உறுதிப்பட்டு வருவதால் ஆராய்ச்சிகளும் கூடிக்கொண்டே வருகின்றன. சூரிய குடும்பத்தில் நான்காவது கிரகம் செவ்வாய். பூமிக்கு ஒரு நிலவு மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் செவ்வாய்க்கு இரண்டு நிலாக்கள். இந்த இரு நிலவுகளுக்கிடையில் மலர்ந்து நிற்கும் ஆகாயத்தாமரை தான் செவ்வாய். இரு நிலவுகளில் ஒன்றின் பெயர் 'ஃபோபோஸ்', அதாவது 'அச்சம்'. மற்றொன்றின் பெயர் 'டெய்மோஸ்', அதாவது 'அவசரம்'. இந்த இரண்டு நிலவுகளில் ஒன்று திருட்டு நிலாவாம். 'ஃபோபோஸ்' வேறு ஒரு கேலக்ஸிக்குச் சொந்தமானதாம். செவ்வாய் தன் ஈர்ப்பு விசையால் தன் பக்கம் இழுத்துக் கொண்டதாம். நமது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரம் 4 லட்சம் கிலோமீட்டர்கள். ஆனால் செவ்வாய்க்கும் அதன் நிலாவுக்குமான தூரம் வெறும் 5800 கிமீ தூரம் தான்.
அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா நாடுகளின் வரிசையில் இன்று ஆசியாவின் முதல் நாடாக, மிகக் குறைந்த செலவினத்தில் முதல் நாடாக, முழுக்க முழுக்க உள்நாட்டுத் தயாரிப்பில் முதல் நாடாக வரலாறு படைத்துள்ளது இந்தியா. மங்கள்யான் அனுப்ப நமக்கு ஆன செலவு வெறும் 454 கோடி ரூபாய் மட்டுமே. சில வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த செவ்வாய் கிரகம் பற்றி 'கிராவிட்டி' என்ற திரைப்படத்தின் செலவு 600 கோடி ரூபாய் என்பதும், கடந்த ஆண்டு 'மங்கள்யான்' செய்யும் இதே வேலையைச் செய்ய அமெரிக்கா அனுப்பிய கோளிற்கான செலவு 4084 கோடி ரூபாய் என்பதும் நினைவில் கொள்ள வேண்டியது.
அதை அனுப்பிய விதம் தான் பாராட்டுதற்குரியது. பகலும், இரவும் சரி சமமாக இருக்கும் நாடு இந்தியா. அமெரிக்க, ஐரோப்பிய, கிழக்காசிய, மேற்காசிய நாடுகளுக்கு இந்தக் கொடுப்பனை இல்லை. ஆகையால் தான் ஐரோப்பாவில் இரவு பத்து மணிக்கும் சூரியன் பார்க்கலாம். இப்படி சரி சமமான அமைப்பில் பூமி சூரியனைச் சுற்றுவது போல செவ்வாயும் தன் நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. கடந்த நவம்பர் 5 அன்று செவ்வாய் பூமியை மிக அருகில் நெருங்கி வந்தது. அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தினர் நம் விஞ்ஞானிகள். இதனால் மிகுந்த எரிபொருள் மிச்சமானது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 'மங்கள்யானின்' வெற்றி பற்றி நம் பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்த அதே நேரத்தில் மற்றொரு சேனலில் ஜோதிடர் ஒருவர் செவ்வாய் தோஷம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.
செவ்வாய்க்கு கோள் அனுப்பியும் இன்னும் செவ்வாய் தோஷம் பயம் நீங்கவில்லை நமக்கு! செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
ஒன்பது கிரகங்களில் (இப்போது எட்டு என்று சொல்கின்றனர்!) மிகவும் ஆற்றல் கொண்டவர் திருவாளர் செவ்வாய். ஒருவர் இயல்பாகவே ஆற்றல் மிக்கவராக, தைரியம், நம்பிக்கை, நாணயம் இவற்றில் மேன்மையானவராக இருக்கிறார் என்றால் அவரில் செவ்வாயின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்று அர்த்தம். செந்நிறமானவர் செவ்வாய். உத்யோகம், சகோதர உறவுகள், மரபணுக்கள், விந்தின் வேகம், வெறித்தனம் என பலவற்றிற்குக் காரணம் இந்தக் கோளின் தாக்கம் தான் என்கின்றனர் சோதிடர்கள். செவ்வாய்க்கு அங்காரகன், குஜன், பவுமன், பூமி புத்திரன் என்ற பெயர்களும் உண்டு. ஒருவரின் ஜாதகத்தில் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அதை செவ்வாய் தோஷம் என அழைக்கின்றனர். இதைப்பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாது. ரோம் நகரின் கடவுளாக வழிபடப்படுபவர் செவ்வாய். ஆண்களைப் பொதுவாக செவ்வாய் கிரகத்தினர் என்று சொல்வார்கள்.
நம்மைச் சுற்றி இருக்கும் வான்வெளியைப் பார்க்கும் போது நம் ஒன்றுமில்லாமை விளங்குகிறது.
வானம் தொட்டுவிடும் தூரத்தில் தான் என்றும், கடுகளவு வாழாமல் ஆகாயம் போலப் பரந்து வாழவும் அழைப்பு விடுக்கிறது மங்கள்யான்.
இனி நம் எதிர்காலத் தலைமுறையினர் தங்கள் உறவினர்களைக் காண செவ்வாய் சென்று வருவர்!
ஒவ்வொரு நாளும் வாழ்க்கை ஆச்சர்யங்களைத் தந்து கொண்டே இருக்கிறது.
இறுதியாக இன்று இணையத்தில் கண்ட ஒரு கவிதை.
ஒரு காதலன் மங்கள்யானைப் பார்த்து எழுதுகிறான்:
'மங்கள்யான்! மங்கள்யான்!
நீ இன்று செவ்வாயைத் தொட்டதாக
எல்லாரும் உன்னைப் பாராட்டுகிறார்கள்.
என் இனியவளின் செவ்-வாயை
நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நான் தொட்டுவிட்டேன்!
போங்க தம்பி! நீங்க ரொம்ப லேட்டு...'
மங்கள்யான் நம் வாழ்வில் என்றும் மங்களம் கொண்டு வரட்டும்!
அற்புதம்....எது என்றுதான் சொல்ல முடியவில்லை.நம் விஞ்ஞானிகள் செவ்வாயைத் தொட்டுவிட்ட சாதனையா?!.இல்லை, அதைப்பற்றிய நுணுக்கங்களைப் பாமரனும் புரிந்துகொள்ளும் வண்ணம் தங்களுக்கே உரித்தான நகைச்சுவையுடன் கூடிய விளக்கமா?! ஏன்,என்னைப்போன்றவர்களுக்கு என் தாய்த்திருநாட்டின் மூவர்ணக் கொடியைக்கொடியைக் காட்டியிருக்கும் விதம் கூட விந்தைதான்...எதைப்பாராட்டுவது என்றுதான் தெரியவில்லை..அந்நிய மண்ணில் இருப்பினும் தன் தாய்நாட்டின் எந்த ஒரு சாதனையையும் உலகுக்குப் பெருமையுடன் உரக்கச்சொல்லும் இந்தத் தமிழனுக்கு ஒரு சபாஷ்!....
ReplyDelete