Tuesday, September 30, 2014

கலப்பையில் கை வைத்தபின்!

இயேசு அவரை நோக்கி, 'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல' என்றார். (லூக்கா 9:62)

நான் எட்டாம் வகுப்பு முடித்த பின்பு, அருட்பணியாளர் ஆவதற்காக, குருத்துவப் பயிற்சி பாசறையில் சேர்ந்தேன். அருட்பணியாளர் பயிற்சி நிலைக்கு இன்று குறைந்த பட்ச தகுதி 12ஆம் வகுப்பு அல்லது இளங்கலை பட்டப்படிப்பு. அன்று 9 முதல் 12 வரை பள்ளிப்படிப்பு இருந்தாலும், வார இறுதியில் மற்றும் தினசரி பொது நிகழ்வுகளில் குருத்துவப் பயிற்சி நடைபெறும்.

ஒன்பதாம் வகுப்பு காலாண்டு விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தபோது, எனக்கு இரண்டாம் வகுப்பு சொல்லிக் கொடுத்த ஆசிரியை என்னைப் பார்த்து, 'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்க்கக் கூடாது!' என்றார். இந்த நற்செய்திப் பகுதியை வாசிக்கும் போதெல்லாம் அவர் என் கண்முன் வந்து போகிறார்.

குருத்துவம் பற்றிச் சொல்லப்படும் நற்செய்திப் பகுதி இது அல்ல என்றாலும், இந்தப் பகுதியின் மையக்கருத்து சீடத்துவம் என்பதால் குருத்துவமும் இதில் அடங்கும் என எடுத்துக் கொள்ளலாம்.

'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பது' - இதை எப்படி நாம் புரிந்து கொள்வது?

இது ஒரு விவசாய சமூக உருவகம். எருதுகள் பூட்டி உழும்போது கலப்பையை ஒருவர் ஏறி நின்றோ, அல்லது அழுத்தியோ பிடித்துக் கொண்டு பின்னாலேயே செல்ல வேண்டும். திரும்பிப் பார்க்கும் போது கலப்பையின் மீதுள்ள பிடி தானாகவே குறையும். திரும்பிப் பார்த்துக்கொண்டே உழுவது ஆழமாக இருக்காது. மேலும் திரும்பிப் பார்க்கும் போது பெரிய காக்கா கூட்டம் இருக்கும். அதாவது, உழும்போது நிலத்திலிருந்து வெளிவரும் சின்னஞ்சிறு புற்களின் பூண்டுகளைத் திண்ண காகங்களும், மற்ற பறவைகளும் இறங்கி வரும். அவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் உழும் வேலை கெடும். மூன்றாவதாக, பின்னால் பார்த்துக் கொண்டே உழுதால் கலப்பை நேர்கோட்டில் செல்லாமல் மாடுகளின் இஷ்டத்திற்குச் செல்லும். கோணல் மாணலாக உழுதால் நீர் பாய்ச்சும் போது சிரமம் ஏற்படும்.

ஆக, இயேசு சொல்ல வருவது என்ன?

அ. மேலோட்டமாக உழக் கூடாது.
ஆ. நம்மைச் சுற்றிவரும் பறவைகளால் நம் பார்வை சிதறக்கூடாது.
இ. கோணல் மாணலாக உழக் கூடாது.

இன்று அருட்பணி சீடத்துவத்தில் உள்ள பெரிய சோதனை இதுதான்: கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பது. கையை வைத்தாயிற்று என்றால் வைத்தாயிற்றுதான். அங்க பாரு! அந்த வயல்ல நல்லா இருக்கே! அந்த ரோட்டுல யாரு போறது? அங்க தூரத்துல நிக்குறது யாரு? என்றெல்லாம் கேட்கக் கூடாது - இதுதான் இயேசுவின் சீடத்துவத்தின் சவால். இயேசுவின் சீடர்களில் சிலர் அப்படி இருந்திருக்கலாம். ஆகையால் தான் இயேசு இந்த உருவகத்தைக் கையாளுகின்றார்.

இன்று நான் கேட்கும் வரமெல்லாம் இதுதான்: அடிக்கடி திரும்பிப் பார்க்கும் கழுத்து என்றும் முன்நோக்கி செல்லும் கலப்பையின் பக்கம் திரும்ப வேண்டும்!

(பின்குறிப்பு: 'கலப்பையில் கைவைப்பது அல்லது உழுவது' என்பதற்கு 'பெண்ணுடன் உடலுறவு கொள்ளுதல்' என்ற பொருளும் உண்டு. காண்க. நீதித்தலைவர்கள் 14:18ஆ. இந்தப் பொருளில் பார்த்தால் இயேசு மணத்துறவைப் பற்றிப் பேசியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இந்த நற்செய்திப் பகுதியில் குடும்ப உறவுகள் பற்றிப் பேசுவதால், மனைவி வைத்திருப்பவன் அல்லது 'உழுதவன்' இறையரசுக்குத் தகுதியில்லை என்று சொல்லியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதன்று. விவாதத்திற்குட்பட்டது.)

அதையே நான் நாடித் தேடுவேன்!

நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்.
அதையே நான் நாடித் தேடுவேன்.
ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம்
நான் குடியிருக்க வேண்டும்.
ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்.
அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.
(திபா 27:4)

இன்று காலை கல்லூரி நூலகத்தில் தன் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் அருட்பணியாளர் ஒருவரைச் சந்தித்தேன். அவரின் ஆய்வுக்காக அவர் எடுத்துக்கொண்டது 'திபா 27'.

திபா 27ஐ எபிரேய மொழியில் இருந்து 'லிட்டரலாக' (அதாவது இருப்பது போல!) மொழி பெயர்த்துத் தரச் சொன்னார்.

அதை மொழி பெயர்த்தபோது 'நான் நாடித் தேடுவேன்' என்ற வார்த்தை என்னைக் கவர்ந்தது. இந்தத் திருப்பாடலை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம் (1-4 மற்றும் 5-15). இரண்டு பகுதிகளிலும் மையமாக இருக்கின்ற வார்த்தை 'நாடித் தேடுதல்'.

தன் அரசில் தனக்கு பகைவர் மேல் வெற்றி, சுற்றிலும் மனைவியர், அறிவுரை கூறும் அமைச்சர், சொன்ன வேலையைச் செய்யும் பணியாட்கள், கருவூலம் நிறைய பணம், திடமான உடல், பாதுகாப்பு என எல்லாம் தனக்கு இருந்தாலும் தாவீது அரசர் நாடித் தேடுவது என்னவோ கடவுளைத் தான். நம்மைச் சுற்றியிருப்பவை ஒருகாலும் நம்முள் இருக்கும் வெற்றிடத்தை நிரப்பப் போவதேயில்லை. ஒரு வெற்றிடம் நிரம்பும்போது மற்றொரு வெற்றிடம் பிறந்து விடுகிறது. ஒரு நொடியில் நமக்கு மகிழ்ச்சி தரும் பொருள் அடுத்த நொடியில் துன்பம் தரும் பொருளாக மாறிவிடுகிறது.

தாவீதின் விண்ணப்பம் மூன்று கோரிக்கைகளை உள்ளடக்கி இருக்கிறது:

அ. ஆண்டவரின் இல்லத்தில் நான் குடியிருக்க வேண்டும்.
ஆ. அவரின் அழகை நான் காண வேண்டும்.
இ. அவரின் திருவுளத்தை அறிய வேண்டும்.

இஸ்ராயேல் மக்கள் வரலாற்றில் கோவில் மிக முக்கியமானதாக இருந்தது. இன்று நாம் ரொம்ப ஈஸியா சொல்லிடுறோம்: 'கடவுள் எங்கும் இருக்கிறார்!' 'அவரை வீட்டிலேயே கும்பிடலாம்!'

ஆனால் கோவில் என்ற இடம் கண்டிப்பாகத் தேவை என்றே எண்ணத் தோன்றுகிறது. கோவில் முக்கியமில்லையென்றால் எதற்காக நூற்றுக்கணக்கான கிமீ பயணம் செய்து எருசலேமுக்கு வர வேண்டும். 'கோயில்' என்றால் 'கடவுள்' என்றே நினைத்தார்கள்.

இன்று நாம் கடவுளை வெறும் ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் அப்ளிகேஷனாக மாற்றிவிட்டோமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. அதான் கடவுள் எல்லா இடத்திலயும் இருக்கார்ல என்று சொல்லிக் கொண்டு அவரை ஒரு அலைபேசியாக எல்லா இடத்திலும் தூக்கிக் கொண்டு போகப் பார்க்கிறோம்.

தியானம் செய்கிறேன் என்று சொல்லி ஒரு மணி நேரம் நம் டிவி அறையில் உட்கார்வதற்கும், கோவிலில் அமர்வதற்கும் வித்தியாசம் இருக்கவே செய்கின்றது.

ஆண்டவரைத் தேடுவோம்!
அவரை ஆலயத்தில் தேடுவோம்!

Sunday, September 28, 2014

தேவதைகள் தேசம்

அதற்கு இயேசு, 'இதைவிட பெரியவற்றைக் காண்பீர். வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்று நத்தனியேலிடம் கூறினார். (யோவான் 1:51)

அதிதூதர்கள் என்று சொல்லப்படும் தூய மிக்கேல், கபிரியேல், ரபேலின் விழாவைக் கொண்டாடுகிறோம். ஆங்கிலத்தில் இந்தத் தூதர்களின் முதல் எழுத்தைச் சுருக்கி, எம்.ஜி.ஆர் திருநாள் என்றும் இதை அழைப்பர்.

வானதூதர்கள் பற்றிய நம்பிக்கை எப்படி உருவானது?

முதல் ஏற்பாட்டு நூல்களில் விடுதலைப்பயணம், நீதித்தலைவர்கள், தானியேல் போன்ற நூல்களில் அடிக்கடி வரும் ஒரு நபர் 'மலாக் எலோகிம்' (கடவுளின் தூதர்). ஆனால் 'மலாக் எலோகிம்' வானதூதர் அல்ல. முதல் ஏற்பாட்டு நூலின் ஆசிரியர்கள் கடவுள் என்ற பெயரை பயன்படுத்தாமல் சில நேரங்களில் 'கடவுளின் பிரசன்னம்' மற்றும் 'கடவுளின் தூதர்' என்னும் வார்த்தைகளை மரியாதை நிமித்தமாகப் பயன்படுத்தினர்.

முதன்முதலாக முதல் ஏற்பாட்டில் வானதூதர் என்ற சிந்தனை இஸ்ரயேல் மக்களின் பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின்பே வந்தது. யூப்ரடிஸ், டைக்ரீஸ் நதியோரங்களில் வாழ்ந்த மக்கள் கடவுள் நம்பிக்கையை விட கடவுளின் தூதர்கள் மேல் நம்பிக்கை வைத்தனர். இறக்கும் நம் முன்னோர் அனைவரும் கடவுளி;ன் தூதர்களாக மாறிவிடுகிறார்கள் என்பதும் அவர்களின் நம்பிக்கை. இந்தக் கடவுளின் தூதர்கள் கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இடையே தூது செல்பவர்கள்.

தூதர்கள் என்பவர்களின் தலைவர்களே அதிதூதர்கள்.

வானதூதர்களின் மேல் உள்ள நம்பிக்கை கிறித்தவ மதத்தில் மட்டுமல்ல, மத்திய கிழக்கில் பிறந்த அனைத்து மதங்களுமே வானதூதர்கள் இருப்பதாக நம்புகின்றன. கிறித்தவர்களுக்கு, அதுவும் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல் என்னும் மூன்று அதிதூதர்கள் இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால் 'ஆர்த்தடாக்ஸ்' எனப்படும் கிறித்தவர்கள் மிக்கேல், கபிரியேல், ரபேல், உரியேல், செயால்தியேல், யெகுதியேல், பராக்கியேல் மற்றும் யெராமியேல் என்னும் எட்டு அதிதூதர்கள் இருப்பதாக நம்புகிறார்கள்.

யூத மரபில் ஏழும், இசுலாமில் நான்கும், ஸோராஸ்டிரியத்தில் ஏழும் கடவுளின் அதிதூதர்களின் எண்ணிக்கை.

மிக்கேல் என்றால் 'மிக்கா ஏல்', அதாவது 'கடவுளுக்கு நிகர் யார்?' என்பது பொருள். பாரம்பரியமாக வலது கையில் ஒரு அம்பை வைத்து லூசிஃபர் என்னும் சாத்தானின் தலைவனை தன் காலடியில் போட்டிருப்பவராகவும், மற்றொரு கையில் சில நேரங்களில் தராசும், சில நேரங்களில் ஒலிவக் கிளையும் ஏந்தியவராகச் சித்தரிக்கப்படுகிறார். யாக்கோபு 1:9, தானியேல் 10:13, 12:1 மற்றும் திவெ 12:7 ஆகிய இடங்களில் இவரைப் பற்றிய குறிப்புகள் உண்டு.

கபிரியேல் என்றால் 'கபார் ஏல்', அதாவது 'கடவுளின் வல்லமை'. 'கடவுள் வல்லமையானவர்' என்றும் மொழிபெயர்க்கலாம். மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் வரும் இயேசுவின் பிறப்பையொட்டிய நிகழ்வுகளில் சக்கரியாவுக்கு, மரியாவுக்கு, யோசேப்புக்கு மற்றும் வானதூதர்களுக்கு 'மங்கள வார்த்தை' சொல்பவர் இவரே.

ரபேல் என்றால் 'ரஃபா ஏல்', அதாவது 'கடவுள் குணமாக்குகிறார்' என்பது பொருள். தோபித்து நூலில் (3:17, 12:15) தோபியாவின் கண்ணுக்குப் பார்வை அளிப்பவராக, தோபித்தின் மனைவி சாராவைப் பிடித்திருந்த பேயை வெளியேற்றுபவராக வருகிறார். தோபித்தின் பயணத்தில் உடனிருப்பவர் இவரே.

நாம் அன்பு செய்யும் அனைவருமே நம்மைச் சுற்றியிருக்கும் தூதர்கள் தாம். நாம் முன்பின் பார்த்திராத கடவுளை நமக்குக் காட்டுபவர்கள் இவர்களே. இவர்களே நமக்கு கடவுளாகவும், கடவுளின் வல்லமையாகவும், குணமாக்குபவர்களாகவும் நம் அருகில் வருகிறார்கள்.


மோடி, ஜெயா, இரண்டு மகன்கள்!

ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், 'மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்' என்றார். அவர் மறுமொழியாக, 'நான் போக விரும்பவில்லை' என்றார். ஆனால் பின் மனதை மாற்றிக் கொண்டு சென்றார். அடுத்த மகனிடம் போய், 'நான் போகிறேன்' என்றார். ஆனால் அவர் போகவில்லை. (காண் மத்தேயு 21:28-32)

இந்த வார ஞாயிறு நற்செய்திக்கும் நேற்றும் இன்றும் நம் அரசியல் வானில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் ஒரு தொடர்பை உருவாக்கி இன்று சிந்திப்போம்.

நேற்றைய தினம் நம் பிரதமர் மேதகு மோடி அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக அவர் அமெரிக்கா செல்ல விழைந்தபோது குஜராத் கலவரத்தைக் காரணம் காட்டி அவருக்கு விசா மறுக்கப்பட்டது. ஆனால் பிரதமர் ஆனவுடன் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தது அமெரிக்கா. நேற்று அவர் நியூயார்க்கில் இறங்கியவுடன், நியூயார்க் நகர நீதிமன்றம் அவருக்கு ஒரு சம்மன் அனுப்பியது. சம்மனின் உட்பொருள் என்ன? '12 ஆண்டுகளுக்கு முன் நம் தாய்த்திருநாட்டின் குஜராத்தில் நடந்த கோத்ரா சம்பவத்திற்கு மறைமுகமாக அந்நாள் முதல்வராக இருந்த மோடி அவர்களுக்கு தொடர்பு இருந்ததா?' இவ்வளவு நாளாக தொடர்பு இருந்தது என்று விசா மறுத்த அமெரிக்காவின் கேள்வியைப் பாருங்கள்: 'தொடர்பு இருந்ததா?' இதிலேயே அதன் இரட்டை வேடம் தெரிகிறது: உலகத்தின் கட்டப்பஞ்சாயத்துக்காரர் அமெரிக்காவுக்கு இது ஒன்றும் புதிதல்லதான். எனக்கு ஒரு நெருடல், 'அமெரிக்காவிற்கே சம்பந்தம் இல்லாத ஒரு இந்தியக் குடிமகனுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் எப்படி சம்மன் அனுப்ப முடியும்?'

நம்ம வீட்டுக்கு முன்னால நடந்துபோற ஒருத்தரைப் பார்த்து, 'ஏம்பா உன் வீட்டில போன வாரம் ஏதோ ஒரு சண்டையாம்ல. நீ அதுக்குக் காரணமா இல்லையான்ன சொல்லிட்டு;போ!' அப்படின்னு நாம சொன்னா அவன் நம்மள சும்மா விடுவானா? அது முறையான செயலா?

ஆனால் அமெரிக்கா செஞ்சா அது முறையான செயல். ஏன்னா அது அமெரிக்கா!

சரி. அமெரிக்கா என்ன காரணம் சொல்லது தெரியுமா? 'அமெரிக்கா வாழ் இந்தியா வம்சாவழியினருக்கு அது பாதிப்பை ஏற்படுத்தியதால் எங்களின் அரசியலமைப்புச் சட்டப்படி நாங்கள் அவர்களின் நலன் காக்க இந்த சம்மனை அனுப்புகிறோம்!'

தம்பி! நீங்க அப்படி 'உங்களுக்கு எடுபிடி வேலை பார்க்கும் இந்திய வம்சாவழியினரோட நலன் காக்குறீங்கன்னா, நீங்க 12 வருடம் என்ன பண்ணுனீங்க? 12 வருடம் அவங்க நலமில்லாம இருந்துட்டு இப்ப என்ன அப்படி நலக்குறைவு வந்துடுச்சு?'

ஏன் இதே கேள்வியை நம்மளும் கேட்க முடியாதா? இரண்டு வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் பில் கேட்ஸ் வந்தார். அவருக்கு நம்ம உச்ச நீதிமன்றம் ஒரு சம்மன் அனுப்புகிறது என வைத்துக்கொள்வோம்: 'ஏப்பா கேட்சு! மதுரையில ஒருத்தர் வாங்குன விண்டோஸ் 8.1 அடிக்கடி ஹேங் ஆகுது. அவரு வாங்குனது உங்க ஊருல தான். இந்தப் பிரச்சினைக்கும் உனக்கும் தொடர்பு இருக்கா? 21 நாட்களுக்குள் நீ அதைச் சொல்ல வேண்டும்!' - இப்படி நாம சொன்னா எவ்வளவு அசிங்கமா இருக்கும்?

நம்ம வீட்டுக்குச் சாப்பிட ஒருத்தரைக் கூப்பிட்டு, தட்டுல சோறையும் போட்டு, 'ஆமா! அன்னைக்கு என் பையனை நீ கிள்ளி வச்சியா! இப்ப பதில் சொல்ல வேணாம். ஒரு ரெண்டு நாள் கழிச்சி சொல்லு' என்றால், அவர் எப்படிச் சாப்பிடுவார்? இதுதான் விருந்தோம்பலா.

ஆனால் அமெரிக்காவில் இதெல்லாம் நடக்கலாம். ஏன்னா! அது அமெரிக்கா! அவங்ககிட்ட டாலர் இருக்கு! நாம இன்னும் ரூபாய் தான வச்சிருக்கோம்!

'போக மாட்டேன்னு' சொல்லிட்டு 'போயி' மாட்டிக்கிட்ட மூத்த மகன் தான் மோடி.

ஆனாலும் அமெரிக்காவின் இந்த அவமானச் செயலுக்கு மோடியின் கோபம் இந்தியா வந்தவுடன் அதற்குக் காரணமானவர்கள் மேல் திரும்பும் என்பது என் ஊகம்.

இரண்டாவதாக, இன்று நம் தமிழக முதல்வரின் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியானது. 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கிற்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. ஆசிய விளையாட்டுக்களில் நாம் பெற்ற தங்கத்தைப் பற்றி ஒரு வரி கூட பேசாத மீடியாக்கள் இன்று வரிந்து கட்டிக்கொண்டு பெங்களுர் சென்றுவிட்டன. தெற்கு மாநிலங்களில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாhமல், டெல்லி, மும்பை, கொல்கத்தா தான் இந்தியா என நினைத்து அன்றாடம் செய்தி வழங்கிக் கொண்டிருக்கும் சிஎன்என்-ஐபின் மற்றும் என்டிடிவி கூட இன்று ஏறக்குறைய 8 மணி நேரம் இந்தத் தீர்ப்பு குறித்தே விவாதித்தனர். இந்தத் திடீர் ஆர்வம் அவர்களுக்கு எப்படி வந்தது?

ஒரு குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அவ்வளவுதான். ஜனநாயக நாட்டில் சட்டம் அரசமைப்பைவிட மேலாகக் கருதப்படும் போது அந்தச் சட்டம் வழங்கும் தண்டனையை ஏற்க வேண்டியது நம் கடமை. அன்றாடம் எவ்வளவோ நீதிமன்றங்களில் அப்பாவி சுப்பன்களும், குப்பன்களும் குற்றவாளிகளாகவோ, நிரபராதிகளாகவோ தண்டிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன்! அவங்க சொந்தக்காரங்க வெளியே ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா?

நித்தியானந்தாவுக்கு ஆன்மை இருக்கிறதா என்று சாமியார்களையும், ஜெவுக்கு தண்டனை கிடைக்குமா என்று அரசியல்வாதிகளையும் நாம் இன்னும் சுற்றிக் கொண்டேயிருப்பது வேதனை தருகிறது.

இன்று தண்டிக்கப்பட்டது ஜெயா மட்டுமல்ல. நம் ஒட்டு மொத்தத் தமிழகமும் தான். தனிநபரை மட்டும் மையமாக வைத்த கட்சி இனி விடுதலை பெற்றது என்ற எண்ணம் ஏன் நமக்கு வரவில்லை? இன்று தெருவில் போவோர், வருவோரையெல்லாம் கல்லால், கட்டையால் அடித்த அம்மாவின் தொண்டர்கள் தன் வீட்டில் தன் மனைவியையோ, பிள்ளைகளையோ அடிப்பார்களா? தன் சொந்த காரையோ, வீட்டையோ சேதப்படுத்துவார்களா? வேறொருவனோடது என்றால் அது அவனுக்கு வலிக்காதா? இன்று நாம் எரிக்கும் பேருந்துகள் நாளை நம் வரிப்பணத்தில் தானே வாங்கப்படும். இன்று வெளியூர் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. கர்ப்பிணிப் பெண்கள், பிறந்த குழந்தைகளைக் காண வந்திருக்கும் எளிய மக்கள், யார் வீட்டிலாவது இறப்பு அல்லது இழப்பு, அவசரம் என வந்தவர்களில், எத்தனை பேருக்கு பாவம் பிளாட்பாரங்களில் இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயம். இவர்கள் என்ன சாப்பிடுவார்கள்? எங்கே சாப்பிடுவார்கள்? கைச்செலவுக்கு என்ன செய்வார்கள்? அதிமுக நிர்வாகம் கொடுக்குமா? தமிழக அரசு கொடுக்குமா? அல்லது 'அம்மா அவசரச்செலவுக்கான உதவி' என்று ஏதாவது ஒரு திட்டம் தொடங்குவார்களா? 'அம்மா சிமெண்ட்' அதிமுகவின் அஸ்திவாரத்திற்கே போதவில்லை இன்று.

கலைஞர் மற்றும் சுப்பிரமணியசாமியின் கொடும்பாவியை எரித்தால் மட்டும் அம்மா பக்தி நிறைவேறிவிடுமா? முடிந்தால் நீ அவர்களை ஜெயிலுக்கு அனுப்;பு? இப்படி எல்லாரும் ஜெயில் சென்று ஒரு புதிய காற்றாவது தமிழ்நாட்டில் வீசட்டும்.

இன்று புதியதலைமுறை பேட்டியில் ஒருவர் கேட்கிறார்: 64 கோடிதான அடிச்சாங்க. திமுக ஆயிரக்கணக்கான கோடி அடிச்சுட்டு வெளியதான இருக்காங்கு? நிருபர் அழகாகப் பதில் சொன்னார்: '1 ரூபாய் அடிச்சாலும் ஊழல்தான். 1 கோடி ரூபாய் அடிச்சாலும் அது ஊழல்தான்! 1 ரூபாய் அடிக்கிறவன் 1 கோடி அடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பா அடிப்பான்!'

இன்னும் அன்றாடங்காய்ச்சிகளாய், வாய்க்கும், வயிறுக்கும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நம் நாட்டின் 42 விழுக்காடு மக்களுக்கு அரசு மேல் வெறுப்பும் நம்பிக்கையின்மையும் வராதா?

'நான் போகிறேன்' என்று போகாமல் பெங்களுரில் தங்கிவிட்ட ஜெயா தான் நம் உவமையின் இரண்டாம் மகன்.

இரண்டு மகன்களின் செயல்பாடும் தவறுதான். ஆனால் இயேசு அவர்களில் ஒருவரை உயர்த்தித்தான் பேசுகின்றார்.

'போகிறேன்' என்று சொல்லி 'போகும்' மனப்பக்குவம் பிறந்தால், சொல்வதைச் செய்பவர்களாக மட்டும் இருந்தால், வாழ்வு நலமாகும்!


Saturday, September 27, 2014

ச்சே! குழந்தையாகவே இருந்திருக்கலாமே!

இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே.
இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடனிருங்கள்.
மனம் விரும்புவதைச் செய்யுங்கள்.
கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள்.
ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள்.
மனக்கவலையை ஒழியுங்கள்.
உடலுக்கு ஊறு வராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
உன்னைப் படைத்தவரை இளமைப்பருவத்தில் மறவாதே.
(சபை உரையாளர் 11:9-12:1)

மனித வாழ்வின் இளமையில் அவர்கள் செய்ய வேண்டியதையும், செய்யக் கூடாததையும் சபை உரையாளர் இந்தப் பகுதியில் எழுதுகின்றார்.

11:9 முதல் 12:7 வரை மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் பல்வேறு உருவகங்களோடு விளக்கிச் சொல்கின்றார் சபை உரையாளர்.

மகிழ்ச்சியோடிருந்தாலும் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதற்கேற்ற தீர்ப்பை அடைவீர்கள் எனவும் எச்சரிக்கை செய்கின்றார்.
நேரம் இருக்கும் போது 12:1-7ஐ கண்டிப்பாக வாசித்துப் பாருங்கள். வாசிக்கும் போது ஒவ்வொரு உருவகத்திற்கும் கீழே விவிலியத்தில் கொடுக்கப்பட்டுள்ள அர்த்தத்தையும் பாருங்கள். முதுமையில் நாம் அனுபவிக்கும் அனைத்துத் துன்பங்களையும் அழகிய உருவகங்களாகத் தந்துள்ளார் ஆசிரியர்.

அந்தந்த வாழ்க்கை நிலையை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெற வேண்டும் என்பதே ஆசிரியரின் நோக்கம்.

புத்தர் அழகாகச் சொல்வார்:

மனிதர்களில் நான் காணும் விந்தை இதுதான்.
வேகமாக வளர வேண்டும் என நினைக்கிறார்கள்.
வளர்ந்த பின், 'ச்சே! குழந்தையாகவே இருந்திருக்கலாமே'
என வருந்துகின்றனர்.
அந்தந்த வயதுப் பருவத்தை முழுமையாய் ஏற்று வாழ அழைப்பு விடுக்கிறது நாளைய முதல் வாசகம்.

Thursday, September 25, 2014

எனக்கு எல்லாம் இருந்தால்

வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச் செய்யும்.
எனக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்.
எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்.
எனக்கு எல்லாம் இருந்தால், நான்
'உம்மை எனக்குத் தெரியாது' என்று மறுதலித்து
'ஆண்டவரைக் கண்டது யார்?' என்று கேட்க நேரிடும்.
நான் வறுமையுற்றால், திருடனாகி,
என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்.
(நீதிமொழிகள் 30:8-9)

4000 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் கடவுளை நோக்கி செபித்த செபத்தை நீதிமொழிகள் ஆசிரியர் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

மேற்காணும் செபம் மிகவும் எளிதாக உள்ளது. ஆசிரியர் தனக்காக இரண்டு விஷயங்களைக் கடவுளிடம் வேண்டுகிறார்:

அ. வஞ்சனையும், பொய்யும் என்னைவிட்டு அகலச் செய்யும்.
ஆ. வறுமையும் வேண்டாம், செல்வமும் வேண்டாம். அன்றைய உணவு அன்றைக்குப் போதும்.

இந்த ஒன்றை மட்டுமே என் இறைவேண்டலாக எடுத்துக் கொள்ளலாம் என நேற்று முடிவெடுத்தேன்.

இந்த செபத்தின் உட்பொருள் கடவுளிடமிருந்தே எல்லாம் வருகிறது என்ற தளராத நம்பிக்கையே.


மங்கள்யானும் செவ்வாய் தோஷமும்!


'உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும்
அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும்
நான் நோக்கும் போது,
மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்?'
(திபா 8:3-4)

இன்று நம் தாய்த்திருநாட்டின் விஞ்ஞான தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு மைல்கல்.

கடந்த நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி நாம் விண்ணில் ஏவிய 'மங்கள்யான்' செவ்வாயை இந்தப் புதன் கிழமை தொட்டுவிட்டது.

இதுவரை செவ்வாய் என்றால் கிழமை என்றும், திருமணத்தடைக்கான தோஷம் என எண்ணிக் கொண்டிருக்கும் நம் சிந்தனையைப் புரட்டிப்போட்டுவிட்டது இந்த முயற்சி.

இந்த வெற்றி குறித்து இன்று நான் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்!

'மங்கள்யான்' என்றால் என்ன?

சமஸ்கிருதத்தில், ஏன் அதையொட்டிய பாலி மற்றும் இந்தி மொழிகளிலும், 'மங்கள்' என்றால் 'செவ்வாய்'. வாரத்தின் செவ்வாய் கிழமையை இந்தியில் 'மங்கள்வார்' என அழைக்கின்றனர். 'யான்' என்றால் 'வாகனம்'. இது ஒரு பாலி மொழிச் சொல். எடுத்துக்காட்டாக, புத்தமதத்தில் 'மகாயானா' 'ஹீனயானா' என்ற இரு பெரும் பிரிவுகள் உண்டு. இவற்றிக்கு 'பெரிய வாகனம்' 'சாதாரண வாகனம்' என்பது பொருள். ஆக, 'மங்கள்யான்' என்பது 'செவ்வாய்க்கான அல்லது செவ்வாயை நோக்கிய வாகனம்'. 'சந்திரயான்' என்பதன் அர்த்தம் இப்போது புரிகிறதா?

எதற்காக செவ்வாயை ஆராய்ச்சி செய்ய வேண்டும்?

செவ்வாய் ஒரு ஆச்சர்யங்களின் கிரகம். பூமியைத் தாண்டி மனிதர்கள் வசிக்கக் கூடிய இடமாக இது இருக்கலாம் என்ற சந்தேகம் நாளுக்கு நாள் உறுதிப்பட்டு வருவதால் ஆராய்ச்சிகளும் கூடிக்கொண்டே வருகின்றன. சூரிய குடும்பத்தில் நான்காவது கிரகம் செவ்வாய். பூமிக்கு ஒரு நிலவு மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் செவ்வாய்க்கு இரண்டு நிலாக்கள். இந்த இரு நிலவுகளுக்கிடையில் மலர்ந்து நிற்கும் ஆகாயத்தாமரை தான் செவ்வாய். இரு நிலவுகளில் ஒன்றின் பெயர் 'ஃபோபோஸ்', அதாவது 'அச்சம்'. மற்றொன்றின் பெயர் 'டெய்மோஸ்', அதாவது 'அவசரம்'. இந்த இரண்டு நிலவுகளில் ஒன்று திருட்டு நிலாவாம். 'ஃபோபோஸ்' வேறு ஒரு கேலக்ஸிக்குச் சொந்தமானதாம். செவ்வாய் தன் ஈர்ப்பு விசையால் தன் பக்கம் இழுத்துக் கொண்டதாம். நமது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரம் 4 லட்சம் கிலோமீட்டர்கள். ஆனால் செவ்வாய்க்கும் அதன் நிலாவுக்குமான தூரம் வெறும் 5800 கிமீ தூரம் தான்.

அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா நாடுகளின் வரிசையில் இன்று ஆசியாவின் முதல் நாடாக, மிகக் குறைந்த செலவினத்தில் முதல் நாடாக, முழுக்க முழுக்க உள்நாட்டுத் தயாரிப்பில் முதல் நாடாக வரலாறு படைத்துள்ளது இந்தியா. மங்கள்யான் அனுப்ப நமக்கு ஆன செலவு வெறும் 454 கோடி ரூபாய் மட்டுமே. சில வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த செவ்வாய் கிரகம் பற்றி 'கிராவிட்டி' என்ற திரைப்படத்தின் செலவு 600 கோடி ரூபாய் என்பதும், கடந்த ஆண்டு 'மங்கள்யான்' செய்யும் இதே வேலையைச் செய்ய அமெரிக்கா அனுப்பிய கோளிற்கான செலவு 4084 கோடி ரூபாய் என்பதும் நினைவில் கொள்ள வேண்டியது.

அதை அனுப்பிய விதம் தான் பாராட்டுதற்குரியது. பகலும், இரவும் சரி சமமாக இருக்கும் நாடு இந்தியா. அமெரிக்க, ஐரோப்பிய, கிழக்காசிய, மேற்காசிய நாடுகளுக்கு இந்தக் கொடுப்பனை இல்லை. ஆகையால் தான் ஐரோப்பாவில் இரவு பத்து மணிக்கும் சூரியன் பார்க்கலாம். இப்படி சரி சமமான அமைப்பில் பூமி சூரியனைச் சுற்றுவது போல செவ்வாயும் தன் நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. கடந்த நவம்பர் 5 அன்று செவ்வாய் பூமியை மிக அருகில் நெருங்கி வந்தது. அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தினர் நம் விஞ்ஞானிகள். இதனால் மிகுந்த எரிபொருள் மிச்சமானது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 'மங்கள்யானின்' வெற்றி பற்றி நம் பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்த அதே நேரத்தில் மற்றொரு சேனலில் ஜோதிடர் ஒருவர் செவ்வாய் தோஷம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

செவ்வாய்க்கு கோள் அனுப்பியும் இன்னும் செவ்வாய் தோஷம் பயம் நீங்கவில்லை நமக்கு! செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

ஒன்பது கிரகங்களில் (இப்போது எட்டு என்று சொல்கின்றனர்!) மிகவும் ஆற்றல் கொண்டவர் திருவாளர் செவ்வாய். ஒருவர் இயல்பாகவே ஆற்றல் மிக்கவராக, தைரியம், நம்பிக்கை, நாணயம் இவற்றில் மேன்மையானவராக இருக்கிறார் என்றால் அவரில் செவ்வாயின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்று அர்த்தம். செந்நிறமானவர் செவ்வாய். உத்யோகம், சகோதர உறவுகள், மரபணுக்கள், விந்தின் வேகம், வெறித்தனம் என பலவற்றிற்குக் காரணம் இந்தக் கோளின் தாக்கம் தான் என்கின்றனர் சோதிடர்கள். செவ்வாய்க்கு அங்காரகன், குஜன், பவுமன், பூமி புத்திரன் என்ற பெயர்களும் உண்டு. ஒருவரின் ஜாதகத்தில் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அதை செவ்வாய் தோஷம் என அழைக்கின்றனர். இதைப்பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாது. ரோம் நகரின் கடவுளாக வழிபடப்படுபவர் செவ்வாய். ஆண்களைப் பொதுவாக செவ்வாய் கிரகத்தினர் என்று சொல்வார்கள்.

நம்மைச் சுற்றி இருக்கும் வான்வெளியைப் பார்க்கும் போது நம் ஒன்றுமில்லாமை விளங்குகிறது.

வானம் தொட்டுவிடும் தூரத்தில் தான் என்றும், கடுகளவு வாழாமல் ஆகாயம் போலப் பரந்து வாழவும் அழைப்பு விடுக்கிறது மங்கள்யான்.

இனி நம் எதிர்காலத் தலைமுறையினர் தங்கள் உறவினர்களைக் காண செவ்வாய் சென்று வருவர்!

ஒவ்வொரு நாளும் வாழ்க்கை ஆச்சர்யங்களைத் தந்து கொண்டே இருக்கிறது.

இறுதியாக இன்று இணையத்தில் கண்ட ஒரு கவிதை.

ஒரு காதலன் மங்கள்யானைப் பார்த்து எழுதுகிறான்:

'மங்கள்யான்! மங்கள்யான்!
நீ இன்று செவ்வாயைத் தொட்டதாக
எல்லாரும் உன்னைப் பாராட்டுகிறார்கள்.
என் இனியவளின் செவ்-வாயை
நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நான் தொட்டுவிட்டேன்!
போங்க தம்பி! நீங்க ரொம்ப லேட்டு...'

மங்கள்யான் நம் வாழ்வில் என்றும் மங்களம் கொண்டு வரட்டும்!


Wednesday, September 24, 2014

ஓடிக்கொண்டே இராதீர்கள்!

'நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள். அங்கிருந்தே புறப்படுங்கள்' (லூக்கா 9:4)

நாளைய நற்செய்தியில் இயேசு பன்னிரு திருத்தூதர்களை பணிக்கு அனுப்பும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

இயேசுவின் சீடர்களின் பணி அவரோடு இருப்பதற்கு மட்டுமல்ல, அனுப்பப்படுவதற்கே! அழைக்கப்படுதலும், அனுப்பப்படுதலும் சீடத்துவம் என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

அவர்களைப் பணிக்கு அனுப்பும்போது அவர் கொடுக்கும் 'யூஸர் மேனுவலே' இந்த நற்செய்திப் பகுதி.

தங்கியிருங்கள்! இதுதான் அறிவுரையின் மையம்.

'ஓடிக்கொண்டே இராதீர்கள்!'

இன்று நம் வாழ்வில் நமக்கு பெரிய போராட்டமாக இருப்பது இந்தந் தங்கியிருத்தல் தான். ஒரு இடத்தில் மனதையும், உடலையும் வைத்திருப்பது பெரிய போராட்டமாக இருக்கின்றது. இன்று இணையம் மற்றும் அலைபேசி வழியாக நாம் அதிகமாக விரிந்திருக்கிறோம். அதிகமாக வெளியே புறப்பட்டுப்போகின்றோம். நமக்கு நாமே தங்கியிருக்கிறோமா என்பது பெரிய கேள்விக்குறி!

பறக்கத் துடிக்கும் பறவை சற்று அமர்ந்தால் தானே மீண்டும் பறக்க முடியும்!


Tuesday, September 23, 2014

என் தாயும் என் சகோதரர்களும்

அவர் அவர்களைப் பார்த்து, 'இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுபவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்' என்றார். (லூக்கா 8:21)

இயேசு தன் தாயாகவும், சீடர்களாகவும் நாம் மாறுவதற்கு இரண்டு எளிய வழிமுறைகளைச் சொல்கின்றார்:

அ. இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.
ஆ. அவரின் அருகில் இருக்க வேண்டும்.

இன்று நாம் யாரையெல்லாம் சொந்தம் என நினைக்கின்றோம்? இன்றைய உலகில் சொந்தம் என்பது வெறும் எண்களைப் பொறுத்தே இருக்கின்றது. வாட்ஸ் ஆப்பில் உள்ள கான்டக்ட்சும், ஃபேஸ்புக்கில் உள்ள ஃரெண்ஸ்சும், ப்ளாக்கில் உள்ள வியூவர்சும் தான் நம் சொந்தம் என்று எண்களை வைத்து மாயையை உருவாக்குகிறது இன்றைய சமூகத்தொடர்பு.

The family of Jesus is characterized not by quantity but by quality.


Sunday, September 21, 2014

காயின் உருவாவது கடவுளாலே!

நேற்று நாம் பார்த்த 'திராட்சைத் தோட்ட வேலையாள்கள்' (காண். மத்தேயு 20:1-16) உவமை இறைவாக்குப் பகுதியையே இன்றும் எடுத்துக்கொள்வோம்.

அதை கொஞ்சம் கோணல், மாணலாக யோசித்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று இன்று பார்ப்போம்.

அ. நிதி நிர்வாகம்
இந்த உவமையில் ஐந்து குழுக்கள் ஐந்து மணிப்பொழுதுகளில் வேலைக்கு வருகின்றனர். முதல் குழுவினர் விடியற்காலையில் வருகின்றனர். காலை 6 மணி என வைத்துக்கொள்வோம். ஏனெனில் இயேசுவின் காலத்தில் நிலவிய கால அளவைப்படி விடியற்காலை என்பது நம் 6 மணி. இரண்டாம் குழுவினர் 9 மணிக்கு வருகின்றனர். மூன்றாம் குழுவினர் மதியம் 12 மணிக்கும், நான்காம் குழுவினர் பிற்பகல் 3 மணிக்கும், ஐந்தாம் குழுவினர் மாலை 5 மணிக்கும் வருகின்றனர். மாலை 6 மணிக்கு வேலை நிறைவு பெறுகிறது. முதல் குழுவினர் 12 மணி நேரம் தலைவனின் திராட்சைத் தோட்டத்தில் இருந்திருக்கின்றனர். 12 மணி நேரமும் வேலை செய்திருக்க வாய்ப்பில்லை. இப்போதுள்ள எட்டு மணி நேர வேலை நிர்ணயமும் அப்போது கிடையாது. அவர்கள் தோட்டத்தில் இருந்த நேரத்தை அப்படியே எடுத்துக்கொள்வோம். இரண்டாம் குழுவினர் 9 மணி நேரமும், மூன்றாம் குழுவினர் 6 மணி நேரமும், நான்காம் குழுவினர் 3 மணி நேரமும், ஐந்தாம் குழுவினர் 1 மணி நேரமும் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதும், திராட்சைத் தோட்டத்தில் என்ன மாதிரியான வேலை என்பதும், திராட்சைத் தோட்டம் எவ்வளவு பெரியதும், எவ்வளவு வெயில் அடித்தது என்றும் உவமையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. முதல் குழுவினரோடு பேசப்பட்ட சம்பளம் 'ஒரு தெனாரியம்'. ஒரு தெனாரியத்தின் மதிப்பு 120 ரூபாய் என வைத்துக்கொண்டால் முதல் குழுவினர் பெற வேண்டிய சம்பளம் 120. இரண்டாம் குழுவினர் 90, மூன்றாம் குழுவினர் 60, நான்காம் குழுவினர் 30 மற்றும் ஐந்தாம் குழுவினர் 10 ரூபாய் பெற வேண்டும். 10 ரூபாய்க்கான வேலையைத் தான் இறுதியாக வந்தவர் செய்கின்றார். ஆனால் அவரே முதலில் ஊதியம் பெறுகிறார். அவரே முழுமையாகவும் பெறுகிறார். இது ஒரு தவறான நிதி நிர்வாகம். இப்படிச் செய்வதால் அவருக்கு எவ்வளவு வருவாய் இழப்பு நேரிடும்?

ஆ. உறவு நிர்வாகம்
நம் வாழ்க்கையில் உள்ள உறவுகளுக்கும் இது பொருந்தும் என நினைக்கிறேன். திராட்சைத் தோட்டம் என்பது நம் வாழ்க்கை. இதில் விடியற்காலையில் வேலைக்கு வருபவர்கள் நம் பெற்றோர். நம்மோடு நம் வாழ்வில் அதிக ஆண்டுகள் இருப்பவர்கள் இவர்கள் தாம். இரண்டாம் குழுவைப் போல 9 மணிக்கு வருபவர்கள் நம் உடன்பிறந்தவர்கள். நமக்கு அடுத்தடுத்து வந்தவர்கள் இவர்கள். மூன்றாம் குழுவைப் போல 12 மணிக்கு வந்தவர்கள் நம் மாமா, மச்சான், சித்தப்பா, சித்தி போன்ற உறவினர்கள். நான்காம் குழுவைப் போல 3 மணிக்கு வருபவர்கள் நம் நண்பர்கள். இவர்கள் நம்மோடு கொஞ்ச காலம் தான் இருப்பார்கள். மேலும் இந்தக் குழுவில் உள்ளவர்கள் மாறிக்கொண்டும் இருப்பார்கள் - பள்ளியில், கல்லூரியில், பணியிடத்தில், கிளப்பில், சர்ச்சில் என மாறி மாறி வருவார்கள். இறுதியாக ஐந்து மணிக்கு வருபவர்கள் போல வருபவர்கள் தாம் 'மனைவி' அல்லது 'கணவன்'. இவர்கள் இறுதியில் வந்தார்கள் என்பதற்காக இவர்களை ஒரு மணி நேரம் மட்டும், கூடவே இருக்கிறார்கள் என்பதற்காக பெற்றோர்களை 12 மணிநேரமும் அன்பு செய்ய முடியுமா? அது நீதியாகுமா? மேலும் சில குடும்பங்களில் மாமியார்-மருமகள் பிரச்சனை வருவதற்குக் காரணம்; இதுதான். மாப்பிள்ளையின் தாயார் தன் மகனைப் பார்த்து, 'நேற்று வந்த ஒருத்திக்காக கூடவே இருக்கும் என்னை உதாசீனப்படுத்துகிறாயா?' என்று கேட்கும் போது அங்கே அந்த மகன் என்ன சொல்ல வேண்டும் தெரியுமா? 'அம்மா! உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?' நீங்க இப்படிச் சொல்லி உங்க அம்மாகிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டா அதற்கு கம்பெனி பொறுப்பாகாது! ஆனால் இதுவும் உண்மை!

இ. ஆன்மீக நிர்வாகம்
மோட்சம் இருக்கோ. இல்லையோ, ஆனா நம்ம எல்லாருக்குமே மோட்சத்துக்குப் போகனும்னு ஆசை இருக்கு! மோட்சத்துக்குப் போக எப்பவுமே நல்லவங்களா இருக்கனுமா அல்லது எப்பவாச்சும் நல்லவங்களா இருக்கனுமா? 12 மணி நேரம் நல்லவரா இருந்தாலும், 1 மணி நேரம் நல்லவரா இருந்தாலும் ஒன்னுதானேன்னு தோனுது இந்த உவமையைப் பார்த்தா. இதற்கு உதாரணம் இயேசுவோட வாழ்க்கையிலே இருக்கு தெரியுமா? இயேசு இறக்கும் தருவாயில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது, நல்ல கள்வன் சொன்னது நினைவிருக்கிறதா, 'நீர் அரசுரிமை பெற்று வரும் போது என்னை நினைவுகூறும்!' அதற்கு இயேசுவின் பதில் என்ன? 'நீர் இன்றே என்னோடு வான்வீட்டில் இருப்பீர்!' தன் வாழ்நாள் முழுவதும் தீமையே செய்துவிட்டு, கடைசி ஒரு நிமிடம் இயேசுவிடம் செபிக்கிறான். மோட்சத்துக்குச் சென்றுவிடுகிறான். இறைவனின் தோட்டத்தில் இவன் ஒரு நிமிடம் தானே வேலை செய்கிறான். இயேசு இப்படிச் சொல்லியிருக்கலாமே! 'அப்படியாப்பா! உன்னை நினைவுகூறனுமா? நீ நல்லவன் இல்லையே பா! இங்க கீழ பாரு! எங்கம்மா! என் அன்புச் சீடர்! எனக்குப் பணிவிடை செய்தவர்கள்! இவங்கள்லாம் முதலில் வான்வீட்டிற்கு வரட்டும்;. ஏன்னா அவங்க வாழ்க்கை பூரா நல்லவங்களாவே இருந்துட்டாங்க! நீ கொஞ்சம் வெயிட் பண்ணு!' ஆனால் இயேசுவின் சீனியாரிட்டி லிஸ்ட் வித்தியாசமா இருக்கிறது. ஆகையினால் நாம சாகும்போது நல்லவங்களா இருந்தாலே போதும்! நாம எப்போ இறப்போம்னு தெரியாது! ஆகையினால எப்பவுமே நல்லவங்களா இருப்போம்! சரியா?

ஈ. உளவியல் நிர்வாகம்
இன்றைய நற்செய்தியில் மனிதர்களின் உள் மன உணர்வுகள் மிகத் தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சோர்வு, திருப்தி, கோபம், பொறாமை, முணுமுணுப்பு இவையெல்லாம் இங்கே சொல்லப்பட்டுள்ள உணர்வுகள். ஒரு தெனாரியத்திற்கு ஒத்துக் கொண்டாலும் இன்னும் அதிகம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உணர்வும் இருந்தது. எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தில் ஏமாற்றமும் பாய் விரித்துப்படுத்துக்கொள்கிறது. தாங்கள் பேசிய கூலியை வாங்குவதில் ஏன் முதல் குழுவினருக்கு மகிழ்ச்சி இல்லை. தங்கள் கையிலிருப்பதை மட்டும் பார்த்திருந்தால் அவர்களின் மகிழ்ச்சி பறிபோயிருக்காது. ஆனால் அடுத்தவரின் கையையும் பார்க்கின்றனர். நமக்கு வெளியே மகிழ்ச்சியின் அளவுகோலைத் தேடினால் நாம் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்கவே போவதில்லை. வெளியே பார்க்கும் போது ஒப்பீடும், கோபமும், பொறாமையுமே வருகின்றது.

உ. சமூக நிர்வாகம்
ஒருவேளை வேலை பார்த்த ஐந்து குழுவினரும் பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என வைத்துக் கொள்வோம். சாயங்காலம் வீடு திரும்பியவுடன் சண்டைதான் வரும். சண்டைக்குக் காரணம் பொறாமை. ஒருவர் மற்றவரை முதலில் கேலி பேசுவார்கள்! 'அம்மா! இவன் காலையில இருந்து வேலை பார்த்தான்! ஆனா நான் ஒரு மணி நேரம் தான் வேலை பார்த்தேன். ஆனா எனக்கும் ஒரு தெனாரியம்! அவனுக்கும் ஒரு தெனாரியம்!' என்பான் கடைசியில் வந்தவன். முதலில் வந்தவன் கோபப்படுவான். வலிமையுள்ளவனாயிருந்தால் மற்றவனை அடிப்பான். ஒரு தலைவனின் தாராள குணத்தால் ஒரு குடும்பம் சின்னாபின்னமாகிறது. என்னைப் பொறுத்தவரையில் காயின்கள் உருவாகக் கடவுள்தான் காரணம். தன் பலிபொருள் ஏற்றுக்கொள்ளப்படாததால் காயினுக்கு பொறாமை வருகின்றது. காயின் பதரைக் கொடுத்தான் என்றும் ஆபேல் கொழுத்த ஆட்டைக் கொடுத்தான் என்றும் சொல்லாதீர்கள். பைபிளில் அப்படி ஒன்றும் இல்லை. அப்படிச் சொல்லி நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள்?

மேலும் இந்த ஒரு நாள் நடந்தது போலவே எல்லா நாளும் நடக்குது என வைத்துக் கொள்வோம். அங்கே ஒட்டு மொத்த சமூகத்திலும் சிக்கல் உருவாகும். காலையில் ஒருவன் வேலைக்குப் புறப்பட்டால் பக்கத்து வீட்டுக்காரன் என்ன சொல்வான்? 'டேய்! எங்கடா கிளம்பிட்ட! நீ காலையில வேலை பார்த்தாலும் ஒரே சம்பளம் தான்! சாயங்காலம் வேலை பார்த்தாலும் அதே சம்பளம் தான்! நம்ம சாயங்காலமே போவோம்!' இதனால் நன்றாக வேலை பார்ப்பவர்களின் 'மோட்டிவேஷனும்' கெடுகிறது அல்லவா?


ஏனென்று கேட்க முடிகிறதா நம்மால்?

அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, 'தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?' என்றார். (காண் 20:1-16அ)

இயேசு சொல்லும் உவமைகளில் பல கேள்விகளை எழுப்பும் உவமை தான் நாளை நாம் நற்செய்தி வாசகத்தில் வாசிக்க இருப்பது. எட்டு மணி நேரம் வேலை பார்த்தவர்களும், ஒரு மணி நேரம் வேலை பார்த்தவர்களும் ஒரே கூலியைப் பெறுகின்றனர். எட்டு மணி நேரம் வேலை பார்த்தவர்களால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 'இது அநீதி!' என்று கொடிபிடிக்கின்றனர். 'ஆனா தம்பி! நீ ஒத்துக்கிட்டதைத் தான் நான் கொடுத்துவிட்டேனே!' என்கிறார் தோட்ட உரிமையாளர்.

வாழ்க்கையின் அளவு கோல் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

ஒரு சிலரை வாழ்க்கை கழுத்தை நெரிக்கிறது.
ஒரு சிலரை மடியில் போட்டு வீசி விடுகிறது.
ஏனென்று கேட்க முடிகிறதா நம்மால்?


Friday, September 19, 2014

புத்துணர்வு பெற்றவர்களாக!

அ. எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுவோமாக. (12:1)

ஆ. நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம். (12:2)

இ. துன்புறக்கூடிய உடல் உங்களுக்கும் உள்ளதால், துன்புறுத்தப்படுபவர்களை மறவாதீர்கள். (13:3)

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் உதவியோடு இந்த ஐந்து நாட்களும் ஒரு தியான முயற்சியில் ஈடுபட்டோம். இயேசுவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் இந்தத் திருமுகத்திலிருந்து இன்று நாம் உலகத்திற்கு என்ன எடுத்துச் செல்லப்போகிறோம்.

ஒவ்வொரு முறை தியானம் செய்யும் போதும் நான் நினைத்துக்கொள்ளும் ஒரு உருவகம் கப்பல். கப்பல் கட்டப்படுவது துறைமுகத்தில் நிறுத்தப்படுவதற்காக அல்ல. கடலுக்குள் பயணம் செய்து, காற்றையும், அலையையும் எதிர்கொண்டு தன் இலக்கை அடைவதில் தான் அதன் பயன்பாடு அமைந்திருக்கிறது. தியானத்தின் நிறைவில், 'ஆண்டவரே! நாம் இங்கேயே இருப்பது எத்துணை நல்லது! உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றும் என மூன்று கூடாரங்களை அமைப்போம்' என்று தாபோர் மலையில் பேதுரு சொன்ன வார்த்தைகள் நம் மனதில் வரக் கூடாது. இந்த இடம் நன்றாக இருக்கிறது தான். ஆனால் இந்த இடம் நமக்கு நிரந்தரமானதல்ல.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் ஆசிரியரும் ஒரு மறையுரை போல தன் திருமுகத்தை எழுதி அதை நிறைவு செய்யும் போது தன் இலக்கு மக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்குகின்றார். அந்த அறிவுரைகளில் மூன்றை எடுத்து அதை நம் அருட்பணி வாழ்வில் செயல்படுத்திப் பார்க்க முயற்சி செய்வோம்.

அ. பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுங்கள். நாம் எல்லாருமே பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கோம். ஒவ்வொருவருக்கும் பந்தயத்திடல் வேறு வேறாக இருக்கின்றது. நான் 12ஆம் வகுப்பு படிக்கும் போது குருமாணவர் பயிற்சி மையத்தின் தோட்டத்தில் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த செல்வம் என்பவரை தினமும் பார்ப்பேன். புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்டவர். ரொம்ப ஜாலியாக நீர் பாய்ச்சிக் கொண்டிருப்பார். 'இந்த வருடத்தோடு படிப்பு முடிந்தது! இனி நிம்மதியாக இருக்கலாம்! செல்வத்தின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி இனி என் முகத்திலும் இருக்கும்!' என்று தினமும் சொல்லிக்கொள்வேன். ஆனால் 12ஆம் வகுப்போடு படிப்பு முடியவில்லை. இன்னும் முடிந்தபாடில்லை. ஒவ்வொருவருக்கும் பந்தயத்திடல் ஒவ்வொரு சவாலை வைக்கின்றது. அருட்பணி நிலையில் வரும் ஒரு சோதனை, 'அந்த டிராக் நல்லா இருக்கிறதே!' என்பதுதான். வாத்தியாரா ஆகியிருக்கலாமோ? வக்கீலா ஆகியிருக்கலாமோ? என்று ஒவ்வொரு நாளும் புதுப்புது ஆசைகள் வரும். நம்ம சும்மாயிருந்தாலும் நம்மைச் சுற்றியிருப்பவர்களும் உசுப்பேத்தி விடுவார்கள். 'ஃபாதர் உங்களுக்கு இருக்கிற டேலன்டுக்கு நீங்க ஏன் புத்தகம் எழுதக்கூடாது? நீங்க ஏன் மாதா டிவியில பேசக் கூடாது? நீங்க ஏன் பிஷப்பாகக் கூடாது?' என்று உடம்பை ரணகளமாக்கிவிடுவார்கள். 'என் பந்தயம் இதுதான். அதில் நான் நன்றாக ஓடினால் போதும்!' என நினைக்க மனஉறுதி அவசியம். கொஞ்சம் மனம் உறுதியை இழந்து விட்டால் தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் தக்கை போல வாழ்க்கை பரிதாபமாக மாறிவிடும்.

ஆ. இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைப்போம். நாம் ஒருவரைப் பார்ப்பதற்கும், அவர் மேல் கண்களைப் பதிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. நாம் பார்க்கும் போது பார்க்கப்படும் நபர் எல்லாப் பொருட்களையும் போல ஒரு பொருளாகத் தோன்றுகிறார். ஆனால் கண்கள் அவர் மேல் பதிய வைக்கப்படும் போது அவர் நம்மோடு உறவாடுகிறார். திருமணத்தின் முதல் நாள் அன்று புதிய மணமகன், புதிய மணமகள் மேல் கண்களைப் பதிய வைக்கிறார். ஐ! இங்க மச்சம் இருக்கே! அங்க தழும்பு இருக்கே! சிரிச்சா குழி விழுதே! நாக்கு பிங்க் கலரா இருக்கே! உதடு படுத்திருக்கும் வரிக்குதிரை போல இருக்கே! என்று ஒவ்வொன்றாக இரசிக்கம் பார்வை, ஆண்டுகள் கடக்கக் கடக்க, மனைவி வெறும் நடமாடும் பொருளாகவே கண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கின்றார். இது அருட்பணி நிலைக்கும் பொருந்தும். அருட்பணி நிலையில் ஆரம்ப காலத்தில் இருந்த ஆர்வம் வற்ற ஆரம்பிக்கிறது. நம் திராட்சை ரசம் குறைந்து போகின்றது. இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைத்த நாம், ஒவ்வொரு திருப்பலியையும் அர்த்தத்தோடு நிறைவேற்றிய நாம் திருப்பலி வைக்கும் ரோபோக்களாக மாறிவிடுகிறோம். அதே நற்செய்தி! அதே வாசகம்! அதே பீடம்! அதே அப்பம்! அதே இரசம்! அதே அங்கி! அதே திருவுடை! அதே! அதே! என்று எல்லாம் ஒன்றுபோலத் தெரிய ஆரம்பித்துவிட்டால் நம் கண்கள் இயேசுவின் மேல் பதியவில்லை என்றே அர்த்தம். இந்த இறைவாக்கின் மற்றொரு பரிணாமம் என்னவென்றால், நம் கண்கள் இயேசுவின் மேல் பதிந்துவிட்டால் வேறு எதுவும் அந்த இடத்தைப் பிடிக்கக் கூடாது. இன்று நம் ஸ்மார்ட்ஃபோன்களைப் பார்க்கும் நேரம் கூட இயேசுவைப் பார்ப்பதில்லையே.

இ. நாம் துன்புறுபவர்கள். ஆகையால் துன்புறும் மற்றவர்களின் மேல் பரிவு வேண்டும். பரிதாபப்படுவதற்கும், பரிவு காட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. பரிதாபம் என்பது ஒரு உணர்வு. பரிவு என்பது ஒரு செயல். எங்கோ நடந்த விமான விபத்தில் பலியானவர்களைக் குறித்த செய்த கேட்டு 'ஐயோ!' என்று நாம் சொல்வது பரிதாபப்படுவது. அது ஒரு உணர்வாக மட்டுமே நின்றுவிடுகிறது. ஆனால், அதுவே நமக்கு நெருக்கமான ஒருவர் தேவையில் இருக்கும் போது அங்கு ஓடிச்சென்று நம் ஒன்றிணைப்பைக் காட்டுவது பரிவு. இன்று இறைமக்கள் பரிதாபப்படும் அருட்பணியாளர்களை விரும்புவதில்லை. பரிவு காட்டும் அருட்பணியாளர்களையே விரும்புகிறார்கள். பரிதாபம் காட்டும் போது நம் மற்றவரிடமிருந்து விலகி நிற்கிறோம். அல்லது 'நல்ல வேளை! நான் நல்லா இருக்கிறேன்!' என்ற ஒரு மட்டுமித உணர்வு இருக்கிறது. ஆனால் பரிவில் நாம் ஒன்றாகி விடுகிறோம். இந்தப் பரிவில் நாம் இறைமகன் இயேசுவையே ஒத்திருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் நடக்கும் பிறப்பு, திருமணம், இறப்பு என எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்பதும், அழுவாரோடு அழுது, சிரிப்பாரோடு சிரிப்பதுமே பரிவு.

அருட்பணி நிலைக்கு நன்றி கூறியவர்களாக, இறைப்பற்றும், பிறரன்பும் கொண்டு ஒவ்வொரு பொழுதும் 'இன்றே!' என எண்ணி வாழ்ந்தால் இனி எல்லாம் சுகமே!

புத்துணர்வு பெற்றவர்களாக மதுரை உயர்மறைமாவட்ட இனியவளின் முகத்தை நிமிர்த்த வீறுகொண்டு புறப்படும் என் உடன்பணியாளர்களுக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்!

வாழ்க்கை சிலரை செங்கல்லால் முகத்தில் அடிக்கிறது.
சிலரை மயிலிறகால் வருடிக்கொடுக்கிறது.
ஏன் எனக்கு செங்கல், அவனுக்கு மயிலிறகு? -
என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே
முடிந்துவிடுகிறது வாழ்க்கை!


Thursday, September 18, 2014

டேஸ்ட் ஆஃப் தெ புட்டிங்

நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால் தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர். (எபிரேயர் 11:1-2)

நம்பிக்கை என்றால் என்ன என்பதற்கான வரையறையை நாம் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் மட்டுமே பார்க்கிறோம். கொரிந்தியருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் 13ஆம் அதிகாரத்தில் அன்பிற்கென ஒரு பாடல் இருக்கின்றது. நம்பிக்கைக்கென ஒரு பாடல் என்று நாம் எபிரேயர் 11ஐச் சொல்லலாம்.

நம்பிக்கை என்ற வார்த்தையைப் புரிவதில் இப்போது ஒரு குழப்பம் இருக்கிறது. பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டு இன்னும் 10 நிமிடத்தில் பஸ் வந்துடும்னு நம்புறேன்னு சொல்றதுக்கும், கடவுளை நம்புறேன்னு சொல்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

நம்பிக்கை என்ற வார்த்தையைப் புரிந்து கொள்ள நான் எப்போதும் எடுக்கும் மேற்கோள் 1 கொரிந்தியர் 13:13 தான்.

'ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது' (1 கொரி 13:13)

இந்த இறைவாக்கை பழைய மொழிபெயர்ப்பில் பார்த்தால், 'ஆக, விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் மேலானது அன்பே' என்று இருக்கிறது.

விசுவாசம், நம்பிக்கை, அன்பு என்ற வார்த்தைகளை இன்றைய மொழிபெயர்ப்பில் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு என மாற்றிவிட்டோம்.

இன்று நாம் எபிரேயர் திருமுகத்தில் பார்க்கும் மதிப்பீடு விசுவாசம். புதிய மொழிபெயர்ப்பில் நம்பிக்கை.

ஒவ்வொரு திருமுக ஆசிரியரும் ஒரு பிரச்சினையை மையமாக வைத்து தன் திருமுகத்தை எழுதுகிறார். கொரிந்து நகரத் திருச்சபையில் அன்பு குறைவாக இருந்தது. ஆகையால் அன்பின் மேன்மை குறித்து அவர்களுக்கு எழுதுகின்றார். உரோமைத் திருச்சபையில் செயல்கள் அதிகம் முன்வைக்கப்பட்டு விசுவாசம் ஓரங்கட்டப்பட்டது. ஆகையால் பவுல் விசுவாசத்தின் மேன்மை பற்றி அவர்களுக்கு எழுதுகின்றார். திருத்தூதர் யாக்கோபின் திருச்சபையில் விசுவாசத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு செயல்கள் மறுக்கப்பட்டது. ஆகையால் அவர்களுக்கு 'செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்' என எழுதுகிறார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் ஆசிரியர் சந்திக்கும் திருச்சபை யூத மரபிலிருந்து புதிதாக கிறிஸ்தவர்களாக மாறியவர்களை அதிகம் கொண்டதாக இருந்தது. யூதர்கள் விருத்தசேதனம் போன்ற வெளிப்புற செயல்களை மட்டும் வலியுறுத்தினர். அவர்களுக்கு விசுவாசமே மேன்மையானது என்பதை யூதர்களின் விவிலியத்தின் வழியாக மேற்கோள் காட்டுகின்றார் ஆசிரியர்.

வழக்கமாக நம்பிக்கைக்கு (விசுவாசம்) உதாரணமாக ஆபிராகமையே சொல்வர். ஆனால் ஆசிரியர் ஆபேலிலிருந்து அட்டவணைப்படுத்துகிறார். தொடக்கநூல் தொடங்கி மக்கபேயர் நூல் வரை குறிப்பிடப்பட்டுள்ள இஸ்ரயேல் மக்களின் முக்கிய கதாமாந்தர்களை நம்பிக்கையின் சான்றாக வைக்கின்றார் ஆசிரியர். இப்படியாக நம்பிக்கையின் வழியாகவே அனைவரும் மேன்மையடைந்தனர் எனவும், இந்த நம்பிக்கையில் தளராமல் தன் திருச்சபை இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறார்.

நம்பிக்கை என்பது கடவுளின் கொடை. நம்பிக்கை என்பது தனிப்பட்ட நபர் சார்ந்தது. நம்பிக்கை என்பது அன்பைப் போலவே ஒரு உறவு. எடுத்துக்காட்டாக. நம் பெற்றோர். நம் பக்கத்து வீட்டாரைப் பொறுத்த வரையில் நம் பெற்றோர் என்பர்கள் இவ்வுலகில் உடலோடு உலவும் இரண்டு மனித உயிர்கள். ஆனால் நாம் அவர்களை வெறும் உடலாகவோ, உணர்வுகளின் தொகுப்பாகவோ பார்ப்பதில்லை. அவர்களோடு நாம் ஒன்றாகிவிடுகிறோம். அன்பு, நம்பிக்கை, எதிர்நோக்கு என நம்மால் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. தன் அப்பா தன்னைப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருப்பதால் தான் குழந்தை நிம்மதியாகத் தூங்குகிறது. பக்கத்து வீட்டுக்காரர் நம்மைப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் அது தூங்கப் போகிறதா? அல்லது விழித்திருக்கிறதா? இல்லை!

நம்பிக்கை என்பது ஒரு நெருக்கம். நம்பிக்கைக்கு காரணம் தேவையில்லை.

நாம் செய்யும் எல்லா செயல்களிலும் நம் மனம் நம் மூளைக்கு அடிமை. ஆனால் காதலிலும், நம்பிக்கையிலும் மட்டும் தான் நம் மூளை நம் மனதிற்கு அடிமை. அப்படி இருந்தால் தான் அன்பும், நம்பிக்கையும் உயிரோட்டமாக இருக்க முடியும். மூளை மனதை அடிமையாக்க முயற்சித்தால் அங்கே பிரச்சனை வந்துவிடும். நம் மூளை நாம் அன்பு செய்பவரையும், நம்மை அன்பு செய்பவரையும், நாம் நம்பும் கடவுளையும் விமர்சிக்க ஆரம்பிக்கும், திறனாய்வு செய்யும், 'இது ஏன்! அது ஏன்!' என்று கேட்கும், 'அப்படி இருக்குமோ! இப்படி இருக்குமோ!' என்று சந்தேகம் கொள்ளும்.

அருட்பணியாளருக்கு அன்பிலும், நம்பிக்கையிலும் மூளை ஆட்சி செய்யவே கூடாது. ஒரு பங்குத்தளத்தில் இருந்துவிட்டு அடுத்த பங்குத் தளத்திற்குச் செல்லும் போது இந்தப் போராட்டம் இருக்கும். ஒரு பங்கில் நாம் பெற்ற அனுபவங்களை மூளை நினைவுபடுத்திக் கொண்டு அதை அப்படியே புதிய பங்குத்தளத்தில் தொடர்புபடுத்த நினைக்கும். பழைய பங்களில் எல்லா டீச்சரும் என்கிட்ட பேசினாங்களே. அப்படின்னா இங்க உள்ள டீச்சரும் பேசுவாங்க. பழைய பங்கில கான்வென்ட்டில் சிஸ்டர்ஸ்லாம் நம்ம கூட சண்டை போட்டாங்களே. அப்படின்னா இங்கயும் அப்படித்தான் இருப்பாங்க. பழைய பங்கில் அந்தோணியாருக்கு நிறைய பக்தர்கள் இருந்தார்களே, அப்படின்னா இங்கயும் ஒரு குருசடி அந்தோணியாருக்குக் கட்டணும். ஆனால் புதிய பங்கில் டீச்சர்ஸ் இல்லையென்றால் என்ன ஆகும்? நாம் வேறு யாரிடமும் பேசுவும் மாட்டோம். கான்வெண்ட் இல்லையென்றால் நாம் வேறு யார்கூடயாவது சண்டை போடவும். இந்த பங்கில் மாதா பக்திதான் அதிகம் என்றால் ஏன் அந்தோணியார் பக்தியைத் திணிக்க வேண்டும்?

அன்பிலும், நம்பிக்கையிலும் எப்போதும் திறந்த மனம் வேண்டும். மனம் மூடிவிட்டால் அங்கே அன்பும், நம்பிக்கையும் புழுக்கத்தில் இறந்துவிடும்.

அன்பும், நம்பிக்கையும் வெறும் மதிப்பீடுகள் மட்டுமல்ல. அவை வாழ்வில் செயல்களாக வெளிப்பட வேண்டும். 'டேஸ்ட் ஆஃப் தெ புட்டிங் இஸ் இன் தெ ஈட்டிங்' என்பார்கள். நாம் நல்லவர் என்றால் அது நற்செயல்களாக வெளிப்பட வேண்டும். அன்பும், நம்பிக்கையும் செயல்கள். அன்பிலும், நம்பிக்கையிலும் அடுத்தவர்தாம் மையப்படுத்தப்பட வேண்டும்.

உன்னிடம் இருப்பதை அவனுக்குக் கொடுப்பதை விட
அவனுக்குத் தேவையானதை அவனுக்குக் கொடுத்தால்
அவன் மகிழ்ச்சியாய் இல்லம் திரும்புவான்.
'ஐயோ! பசிக்கிறது!' என்று வருபவனுக்கு
உன்னிடம் இருக்கும் செபமாலையும், மாதா படமும் நீ கொடுத்தால்
அவன் பசியாறுமா?
அந்த நேரத்தில் பத்து ரூபாய் நோட்டுதான்
அவனது செபமாலை, மாதா எல்லாம்!

'இந்த நம்பிக்கையால் தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்!'


Wednesday, September 17, 2014

தலைமைக்குரு போல...

ஆதலால், தீய மனச்சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும், மிக உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக. அன்பு செலுத்தவும், நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக. (எபிரேயர் 10:22-24)

ஒவ்வொரு அருட்பணியாளரும் தன் இறைமக்களுடன் கொண்டிருக்க வேண்டிய உறவைப் பற்றிச் சிந்திக்க இன்றைய இறைவாக்குப் பகுதி நம்மை அழைக்கிறது. மேற்காணும் இறைவாக்குக்கிற்கு முந்தைய பகுதியில் இரண்டு அதிகாரங்களில் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் ஆசிரியர் மிகவும் சிரத்தையோடு ஆண்டவரின் குருத்துவத்தின் மேன்மையை முன்வைத்துள்ளார். இவர் எழுதும் விதம் மிக அழகான கட்டமைப்பு கொண்டது. 7, 8, 9 மற்றும் 10ஆம் அதிகாரங்களை வாசிக்கும் போது ஏதோ திரைப்படம் பார்ப்பது போலவே இருக்கும்.

யூதர்களின் எருசலேம் ஆலயத்தில் நடைபெற்ற பலி, எருசலேமின் ஆலயம், அப்போது நிலவிய குருத்துவம், அவர்களின் தலைவராக இருந்த தலைமைக்குரு என பல நிறுவனங்களைக் குறித்த நம் அறிவு இந்தத் திருமுகத்தால் தெளிவாகிறது.

இங்கே இரண்டு குருக்கள் பற்றிச் சொல்லப்படுகிறது. ஒருவர், மெல்கிசெதெக்கு. மற்றவர், தலைமைக்குரு. இவர்கள் யார்? மெல்கிசெதேக்கு ஆபிரகாமைச் சந்தித்ததை தொநூ 14:17-20ல் நாம் வாசிக்கிறோம். எபிரேயத்தில் 'மேலக்' என்றால் 'அரசர்'. 'செதேக்கு' என்றால் 'நீதி அல்லது நேர்மை'. ஆக, நீதியின் அரசர். இது ஒரு காரணப்பெயராகக் கூட இருக்கலாம். 'மெல்கிசெதேக்கைப் போல என்றென்றும் தலைமைக்குரு' என்றென்றும் குறிப்பிடுகிறார்கள். ஏன் அவர் என்றென்றும் இருக்கிறார்? மெல்கிசெதேக் ஆபிரகாமைச் சந்திக்குமுன் எங்கிருந்தார் எனவும், சந்தித்தபின் எங்கு சென்றார் என்றும் யாருக்கும் தெரியாது. ஆகையால் அவர் முதலும், முடிவும் அல்லாதவர் என்று சொல்வது மரபு.

இரண்டாவதாக, தலைமைக்குரு என்பவர் யார்? யூதர்களின் குருத்துவ முறையில், அதாவது, இயேசு காலத்துக் குருத்துவ முறையில் நான்கு வகையினர் இருந்தனர்: லேவியர், குருக்கள், முதன்மைக் குருக்கள் மற்றும் தலைமைக்குரு. லேவியர் என்பவர்கள் நம்ம ஊர் பீடப்பூக்கள் போல. குருக்கள் பலி செலுத்தும்போது உதவி செய்பவர்கள். பலிபீடத்தில் விறகு எடுத்து வைப்பார்கள். தண்ணீர் கொண்டு வருவார்கள். கத்தியைக் கழுவி வைப்பார்கள். துணியை மடித்து வைப்பார்கள். இப்படி எல்லா எடுபிடி வேலையையும் செய்வார்கள். இரண்டாம் வகையினர் குருக்கள். இஸ்ரயேலில் எண்ணற்ற குருக்கள் இருந்தனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் தங்களின் முறை எடுத்து பணி செய்வார்கள். இரண்டு வகையான பலிகள் செலுத்த இவர்கள் தயாரிக்கப்பட்டனர். ஒருவகையான பலி இரத்தப் பலி. அதாவது, ஆடு, மாடு, புறாக்களை வெட்டுவது. மற்ற பணி தூபப் பலி. சாம்பிராணி போடுவது. சாம்பிராணி ஒரு ஆன்டிசெப்டிக்காகவே பயன்படுத்தப்பட்டது. அந்தக் காலத்தில் எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன், சேனிடைசர், குளிர்சாதன வசதி எல்லாம் கிடையாது. இரத்தவாடை மற்றும் இறைச்சியின் வாடையை சாம்பிராணி போட்டே அகற்றினர். மேலும் இந்தப் பீடத்திலிருந்தே மிருகங்களின் இதயங்கள் போன்றவவை தீயில் போடப்படும். நாம் லூக்கா நற்செய்தியில் பார்க்கும் எலிசபெத்தம்மாளின் வீட்டுக்காரர் சக்கரியா இந்தப் பணியைத்தான் செய்து வந்தார். மூன்றாம் வகையினர் முதன்மைக் குருக்கள். இவர்கள் ஆலயத்தின் எல்லா மேலாண்மை வேலைகளையும் பார்ப்பவர்கள். எவ்வளவு பணம் வருது, எவ்வளவு பணம் போகுது, கூட்டம் இருக்கா, இல்லையா, சட்டம், ஒழுங்கு இருக்கா என்று பார்ப்பவர்கள். இவர்களுக்கென்று போலீசும் இருந்தது. இவர்கள் தாம் இயேசுவைக் கைது செய்தவர்கள், வாக்குவாதம் செய்தவர்கள், தண்டனை பெற்றுத் தந்தவர்கள். இவர்களுக்கெல்லாம் மேலாக இருப்பவர் தான் தலைமைக்குரு. இவர்தான் எல்லாருக்கும் பாஸ். பாஸ் என்றால் எல்லாரையும் ஆட்டிப்படைக்கக் கூடியவர். இந்த நிலைக்கு நிறைய பேர் பணம் கொடுத்தே வருவார்கள். இவரும், உரோமையின் கவர்னரும் தான் அந்தக்காலத்தில் இஸ்ரயேலை ஆண்டவர்கள். இவருக்குள்ள ஒரே வேலை ஆண்டுக்கு ஒரு முறை பலி செலுத்துவது. எருசலேம் ஆலயத்தின் கருவறைக்குள் இவர் மட்டும் தான் நுழைய முடியும். அதுவும், ஆண்டுக்கு ஒருமுறை. இவர் உள்ளே நுழையும் போது இவரின் இடுப்பில் கயிறு ஒன்றைக் கட்டி உள்ளே அனுப்புவார்களாம். பலி செலுத்தும் போது ஒருவேளை அவர் இறந்து விட்டால் மற்றவர்கள் வெளியிலிருந்தே இறந்தவரை வெளியே இழுத்துவிடலாம் அல்லவா! அப்படியாக ஆலயத்தின் கருவறைக்கு அவ்வளவு மதிப்பு தரப்பட்டது.

இன்றைக்கு உள்ள கத்தோலிக்க குருத்துவ முறை ஏறக்குறைய இதே அமைப்பையே கொண்டிருக்கிறது. லேவியர், குருக்கள், முதன்மைக் குருக்கள் மற்றும் தலைமைக்குரு என்று இருந்தது இன்று திருத்தொண்டர்கள். குருக்கள், ஆயர்கள் மற்றும் திருத்தந்தை என மாறி இருக்கிறது. அன்றைக்கு ஆடு வெட்டுன மாதிரி எல்லாம் இன்று இல்லை. இன்றைக்கு எல்லாமே ரொம்ப சோஃபியா மாறிடுச்சு. அவ்வளவுதான் வித்தியாசம். இன்னொரு பெரிய வித்தியாசம் இருக்கு. அன்று குருத்துவம் என்பது ஒரு குடும்பத் தொழில். என் தாத்தா, என் அப்பா, நான், என் மகன் என்று போய்க்கொண்டே இருக்கும். ஆனால் இன்று இது குடும்பத்தையோ, குலத்தையோ சார்ந்தது அல்ல. எல்லாருக்கும் பொதுவானது. திருமுழுக்கு பெற்ற எந்த ஆணும் குருவாக முடியும். பெண்களைக் குருக்கள் ஆக்கினால் என்ன என்று கேட்கிறீர்களா? அதற்கு காரணம் என்ன என்று தெரியுமா? அதைப்பற்றியெல்லாம் நாம் பேசக் கூடாது.

இயேசுவை மெல்கிசதேக்கு என்றும், மிகப்பெரும் தலைமைக்குரு என்றும் ஆசிரியர் எப்படிச் சொல்கின்றார்?

இயேசு கடவுள் என்பதால் அவருக்கு முதலும் இல்லை, முடிவும் இல்லை. ஆகவே அவர் மெல்கிசதேக்கு. தன் சிலுவை மரணத்தால் வழியாக திருத்தூயகத்தின் திரையைக் கிழித்து இனி யாரும் உள்ளே நுழையலாம் என்று அவர் ஆக்கிவிட்டதால்  இயேசு மிகப்பெரும் தலைமைக்குருவாகின்றார்.

இப்போ, நம்ம அருட்பணியாளருக்கு வருவோம். ஒவ்வொரு அருட்பணியாளரும் ஒரு மெல்கிசதேக்கு. ஒவ்வொரு அருட்பணியாளரும் ஒரு தலைமைக்குரு. அருட்பணியாளருக்கு முதலும் இருக்கின்றது, முடிவும் இருக்கின்றது. ஆனால் ஆன்மீக அடிப்படையில், அவர் தாம் பிறப்பதற்கு முன்பே தெரிவு செய்யப்படுகிறார் என்ற அடிப்படையில் பார்த்தால் அவருக்கு முதல் இல்லை. அதேபோல உடல் அளவில் இறந்தாலும் அவரது குருத்துவ முத்திரை அழியாமல் அவரது ஆன்மாவைப் பின்தொடர்கிறது என்பது திருச்சபையின் போதனை. ஆகையால் அவருக்கு முடிவும் இல்லை. தலைமைக்குரு போல அவர் கடவுளுக்கும், தன் இறைமக்களுக்கும் நடுவே நின்று அவர் பரிந்து பேசுவதால் அவரும் ஒரு தலைமைக்குருவே.

இந்த இரண்டு நிலைகளிலும் அவர் எப்படி இருக்க வேண்டும்?

அ. தீய மனச்சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளம். மனச்சான்று என்பது குடும்பத்தில் பிறக்கிறது. நாம் 5 வயதுக்குள் இருக்கும்போதே வாழ்க்கையின் அடிப்படை மதிப்பீடுகளை நாம் நம் குடும்பத்தில் கற்றுக்கொண்டுவிடுகிறோம். அதற்குப் பின் நாம் கற்பதெல்லாம் மிகக் குறைவே. இந்த மனச்சான்று, ஒருவேளை நேர்வழியில் நமக்குக் கற்றுக்கொள்ளப்படாமல் இருந்து, நாம் தீய மனச்சான்றை, பிறழ்வுபட்ட மனச்சான்றைக் கொண்டிருந்தால் அதிலிருந்து நம் உள்ளம் விடுவிக்கப்பட வேண்டும்.

ஆ. தூய நீரில் கழுவப்பட்ட உடல். இது திருமுழுக்கை அடையாளப்படுத்தினாலும், உடல் தூய்மையை முன்வைக்கிறது. நம் மேசையையும், நம் பாத்திரங்களையும் நாம் துடைக்கும் போது நம்மையறியாமல் நம் உள்ளமும் தூய்மையாகிறது என்பார் பவுலோ கோயலோ. நம் உடல் தூய்மை, நம் இருப்பிடத் தூய்மை, நம் ஆலயத்தூய்மை எல்லாம் இதில் அடங்கும்.

இ. நேரிய உள்ளம். குறுக்கும், சுருக்கமும் இல்லாமல் நன்றாக அயர்ன் செய்யப்பட்ட வெள்ளைக் கதர் சட்டை போல.

ஈ. மிக உறுதியான நம்பிக்கை. யார் மேல்? நம் மேல். கடவுள் மேல். நம் மக்கள் மேல்.

இவையெல்லாம் இருக்கும் போதுதான் நாம் அன்பு செலுத்தவும், நற்செயல்கள் புரியவும் முடியும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் நம் அன்பு வெறும் வார்த்தைப் பரிமாற்றமாகவும், நற்செயல்கள் ஃபளக்ஸ் போர்டுகளாகவும் மட்டுமே நின்றுவிடும்.

சுருங்கச் சொல்லின், யூதர்களின் குருத்துவத்தைவிட இயேசுவின் குருத்துவம் மேன்மையாக இருக்கிறது. அந்த மேன்மையான குருத்துவத்தில் பங்கேற்கும் அருட்பணியாளர்களும் தங்கள் தலைவராம் கிறிஸ்துவை ஒத்திருக்க அழைக்கப்படுகிறார்கள்.

Tuesday, September 16, 2014

அடுத்தவர்களின் ரெக்ரியேஷன் டாபிக் அல்ல!

அ. அன்பர்களே, நம்பிக்கை கொள்ளாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய உள்ளம் உங்களுள் எவருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு, ஒவ்வொரு நாளும் 'இன்றே' என எண்ணி, நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள். (எபி 3:12-13)

ஆ. நிலம், அதன்மீது அடிக்கடி பெய்யும் மழைநீரை உறிஞ்சி, வேளாண்மை செய்வோருக்குப் பயன் தரும் வகையில் பயிரை விளைவிக்குமாயின் அது கடவுளின் ஆசி பெற்றதாகும். மாறாக, முட்செடிகளையும், முட்புதர்களையும் முளைப்பிக்குமாயின், அது பயனற்றச் சாபத்துக்குள்ளாகும். (எபி 6:7-8)

இ. முன்பு காட்டிய அதே ஆர்வத்தை நீங்கள் இறுதிவரை காட்ட வேண்டும். நீங்கள், தளர்ச்சிக்கு இடம் கொடாமல், நம்பிக்கையாலும், பொறுமையாலும் இறைவாக்குறுதிகளை உரிமைப் பேறாகப் பெற்றவர்களைப் போல வாழுங்கள். (எபி 6:11-12)

இன்று மேற்காணும் மூன்று இறைவாக்குகளை மையமாக வைத்து, அருட்பணியாளர்களுக்கும், கடவுளுக்கும் உள்ள உறவு பற்றி சிந்தித்தேன். ஒவ்வொரு ஆண்டும் மறைமாவட்ட அருட்பணியாளர்கள் தங்கள் ஆயரோடும், இறைமக்களோடும் இணைந்து நிறைவேற்றும் திருத்தைலத் திருப்பலியில் பயன்படுத்தப்படும் தொடக்கவுரை இங்கு நினைவுகூறப்பட வேண்டியது. இந்தத் தொடக்கவுரை அருட்பணியாளருக்கும், கிறிஸ்துவுக்கும் உள்ள தொடர்பை மூன்று சொல்லாடல்களில் மிக அழகாகவும், தெளிவாகவும் எடுத்துரைக்கிறது:

அ. அருட்பணியாளர்கள் கிறிஸ்துவின் திருப்பணியில் பங்காளிகள்.
ஆ. கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்திருப்பார்கள்.
இ. கடவுளுக்குத் தங்கள் பற்றுறுதியையும், அன்பையும் வெளிப்படுத்துவார்கள்.

ஒரு அருட்பணியாளர் எந்த அளவிற்கு தன் பங்காளியான கிறிஸ்துவோடு இணைந்திருக்கிறாரோ, அந்த அளவிற்கே அவரால் தன்னையே விரித்துக் கொடுக்க முடியும். அருட்பணியாளர்களின் வேரூன்றல் அவர்களிடம் மிகவும் எதிர்பார்க்கப்படக் கூடிய ஒன்று. 'எங்க ஃபாதரை நாங்க கோயில்லயே பார்த்தது கிடையாது!' என்று ஒரு சில இறைமக்களின் புலம்பல்களைக் கேட்டிருப்போம். அல்லது சில அருட்பணியாளர்களே, 'கட்டளை செபம் எல்லாம் நான் சொல்வது கிடையாது!' என்றும், 'கோவிலில் உட்காரும் நேரத்திற்கு நான்கு மனிதர்களைச் சந்திப்பது மேல்' என்றும், 'நான் பஸ்ல போகும் போதே என்னோட ஸ்மார்ட்ஃபோன்ல உள்ள iBreviary தான் நான் வாசிப்பேன்' என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். நானும் கூட இதே போல சில தருணங்களில் செய்திருக்கிறேன். ஆனால் கொஞ்சம் உட்கார்ந்து யோசித்தால் இப்படிப் பேசியது தவறே என்று தோன்றுகிறது.

எனக்கு இறுதியாண்டு இறையியல் வகுப்பெடுத்த பேராசிரியர் ஒருநாள் எங்களைப் பார்த்து, 'குருத்துவத்தில் பெரிய இழப்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டார். நாங்கள் அனைவரும் கோரஸாக 'மணத்துறவு' (celibacy) என்றோம். அவரோ சிரித்துக் கொண்டே சொன்னார்: 'நான் எவ்வளவு வேண்டுமானாலும் bet கட்டுகிறேன். நீங்கள் அதை ஒருநாளும் இழப்பாகவே கருதமாட்டீர்கள்!' அன்று நாங்கள் எல்லாம் அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இன்று நிறைய நேரங்களில் அதை எண்ணிப்பார்த்து அதில் உண்மை இருக்கிறதே என்றே உணர்கின்றேன். மணத்துறவு என்பது உறவின் வெறுப்பு அல்ல. அது உறவின் பிறப்பு. ஒரு பெண்ணுக்கு என் உறவை மறுத்ததால் ஓராயிரம் உறவுகளுக்குள் ஒரு அருட்பணியாளர் பிறக்கின்றார். அந்த உறவின் முதற்கனி கிறிஸ்து. மணத்துறவுக்கு எதிராக இன்று நிறைய பேர் கொடி பிடித்தாலும், இந்த மணத்துறவு தான் அருட்பணியாளர்களின் நடுவில் பாலியல் பிறழ்வுகளுக்குக் காரணம் என்று சொன்னாலும் மணத்துறவிற்கென்று ஒரு மகத்துவம் இருக்கவே செய்கின்றது. திருமணம் முடித்தவர்களும் கூட பாலியல் பிறழ்வுகளுக்குக் காரணமாக இருக்கின்றனர் தாம். அதற்காக திருமணம் என்ற நிறுவனத்தை உடைத்து விட முடியுமா. பாலியல் என்பது ஒரு உணர்வு. எல்லா உணர்வுகளிலும் பிறழ்வுகள் இருப்பது போல பாலியலிலும் இருக்கத்தான் செய்யும்.

திருமணத்திற்காக இளைஞர், இளம்பெண்களைத் தயாரித்துக் கொண்டிருந்த ஒரு அருட்பணியாளரை ஒரு இளம்பெண் கேட்டாள். 'ஃபாதர் எங்களுக்கு திருமணம் பற்றி அழகாக வகுப்பு எடுக்கிறீர்கள். ஏன் தாம்பத்ய உறவு குறித்து ஒரு மருத்துவர் போல சொல்லிக் கொடுக்கிறீர்கள். 'ச்சே...நானும் திருமணம் முடித்திருக்கலாம்!' என்று உங்களுக்கு யோசனை வராதா?' அருட்பணியாளர் சிரித்துக் கொண்டே சொல்கிறார்: "I have said an unconditional 'yes' to something which the world can never understand!"

மணத்துறவில்தான் அருட்பணியாளர் கிறிஸ்துவோடு தன் முதல் ஒன்றிப்பைக் காட்டுகின்றார். இயேசுவுக்கு திருமணம் நடந்திருக்கலாம் என்றும் மகதலா மரியாள் அவரின் தோழி என்றும் வாதங்கள் இருக்கின்றன. ஆனால் அவைகளை நாம் இன்று பெரிதுபடுத்த வேண்டாம். இந்த ஒன்றிணைப்பின் வழியாக அருட்பணியாளர் தன் பற்றுறுதியையும், அன்பையும் கிறிஸ்துவுக்குக் காட்டுகின்றார்.

கிறிஸ்துவுக்கும், அருட்பணியாளருக்கும் ஒரு ஆழமான உறவு இருக்க வேண்டும். அது இறைவேண்டலிலும், மணத்துறவிலும், எல்லாரையும் ஏற்று அன்பு செய்வதிலும் வெளிப்பட வேண்டும்.

இப்படி எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் இதில் உள்ள பிரச்சினைகள் தாம் மேற்காணும் மூன்று இறைவாக்குகள். ஒவ்வொரு இறைவாக்கிலும் அருட்பணியாளர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை வருகிறது.

அ. நம்பிக்கையின்மை. யார் மேல்? கடவுள் மேல். நம்பிக்கை என்பது ஒரு கொடை. அது கடவுளிடமிருந்துதான் வர முடியும். நாம் படிக்கும் மெய்யியலும், இறையியலும் ஓட்டலில் நாம் பார்க்கும் மெனு கார்ட் போல. மெனு கார்டைப் பார்ப்பதாலும், வாசிப்பதாலும் மட்டும் நாம் பசியாறிவிட முடியுமா? தன் குடும்பத்தில் அருட்பணியாளர் பெறுகிற நம்பிக்கையும், குருமாணவப் பயற்சி மையத்தில் கிடைக்கும் தொடர் ஊக்கமும் ஒருநாள் சவால் விடப்படுகிறது. அருட்பணியாளரின் கிணறு கண்டிப்பாக ஒரு நாள் வற்றும். எல்லாம் விரக்தியாகத் தெரியும். நற்செய்தி நூல்கள் எல்லாம் பொய் என்றும், திருச்சபை என்பது ஒரு பெரிய அரசியல் தளம் என்றும், கடவுள் என்பது மாயை என்றும், நாம் தொடும் அப்பமும், இரசமும் வெறும் கோதுமையும், திராட்சையும் தான் என மூளை சொல்ல ஆரம்பிக்கும். மனம் பின்னோக்கி இழுக்கும். மூளை முன்னோக்கித் தள்ளும். 'எல்லாரையும் போல நான் ஏன் இருக்கக் கூடாது!' என்று கேட்கும். இப்படி எண்ணங்கள் வரும்போதெல்லாம் என்ன செய்ய வேண்டும்? 'கோயிலுக்குப் போய் செபம் செய்ய வேண்டுமா?' இல்லை. அறையைப் பூட்டிவிட்டு வெளியே எங்கேயாவது அல்லது சினிமாவுக்கு, பார்க்குக்கு, கண்காட்சிக்கு என சென்றுவிட வேண்டும். 'இது ஒரு ஏமாற்றம்!' என்றே திருமுகம் சொல்கிறது. இந்த ஏமாற்றத்திற்கு ஏமாந்து போகாதவர்களே நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

ஆ. பயன் கொடுக்க முடியவில்லையே! அருட்பணியாளர்கள் எழுப்பும் பல கேள்விகள் ஒன்று இதுதான்: 'என்னால் யாருக்குப் பயன்?' ஆயரும் கண்டுக்க மாட்றார். எழுதிப்போடற ப்ராஜக்டும் வர்றதில்ல. அசிஸ்டன்ட்டும் மதிக்க மாட்றார். சிஸ்டர்சும் சண்டை போடறாங்க. பங்குப் பேரவையிலயும் பிரச்சனை. திருமணம் முடிக்கின்ற தம்பதியினர் பத்து மாதத்தில் தங்கள் திருமணத்தின் பயனான குழந்தையைக் கைகளில் ஏந்திவிடுகின்றனர். புதிதாக என்ஜினியரிங், மருத்துவம் படித்தவரும் முதல் மாதத்தில் கைநிறைய சம்பளம் வாங்கி விடுகின்றார். ஆனால் அருட்பணிநிலையில் மட்டும்தான் 25 வருடங்கள் ஆனாலும் அப்படியே இருப்பது போல இருக்கும். அருட்பணியாளர் ஒருவர் இருக்கும் வரை அவரைக் குறைசொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர் இறந்துவிட்டால் அவரின் இடத்தை யாரும் நிரப்ப முடியாமலேயே போய்விடுகின்றது. இறைவாக்கு சொல்வது என்ன? பயன் கொடுக்க முடியவில்லையென்றாலும் பரவாயில்லை. தண்ணீரையாவது உரிஞ்சிக் கொண்டிருங்கள். கடினப்பட்டு விடாதீர்கள்! பின் உங்களிடம் முட்செடிகள் தாம் முளைக்கும்!

இ. தளர்ச்சி. 'முன்பு காட்டிய அதே ஆர்வத்தை இப்போதும் காட்டுங்கள்!' என அழைப்பு விடுக்கின்றார் திருமுக ஆசிரியர். அருட்பொழிவின் போதும், முதல் திருப்பலி நிறைவேற்றும் போதும் இருந்த ஆர்வம் காலப்போக்கில் குறைவதற்கு நிறைய வாய்ப்பிருக்கின்றது. விரக்தியும், தளர்ச்சியும் ஓடிவந்து ஒட்டிக்கொள்கின்றது. இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வைப் பொறுத்தே சரிசெய்ய முடியும். சிலர் மற்றவர்களோடு பேசிச் சிரிப்பதால் தங்களைப் புதுப்பித்துக் கொள்வார்கள். சிலர் புத்தகங்கள் படிப்பார்கள். சிலர் புதுப்பித்தல் வகுப்புகளுக்குச் செல்வார்கள். சிலர் மாற்றுப் பணிக்கு விண்ணப்பிப்பார்கள். தளர்ச்சியுறும் அருட்பணியாளர்களுக்குத் துணையாக அருட்பணியாளர்கள் மட்டுமே இருக்க முடியும். நாம் நமக்கு வெளியில் இருப்பவர்களிடம் சொன்னால் அவர்களால் நமக்கு அனுதாபம் மட்டுமே பட முடியும். சில நேரங்களில் அனுதாபத்தை அருட்பணியாளர்கள் அதீத அக்கறையாக எண்ணிக் கொண்டு அருட்பணிநிலையைப் புறக்கணித்த நிலைகளும் உண்டு. அருட்பணியாளர் அதிகமாகக் குடிக்கிறார் அல்லது சினிமா பார்க்கிறார் அல்லது தூங்குகிறார் என்றால் அதை ஒரு நோயாக எண்ணிவிடக் கூடாது. விரக்தி என்ற நோயின் அறிகுறிகள் அவை. வெறும் அறிகுறிகளைக் குணமாக்குவதற்குப் பதிலாக நோயைக் களைய முயற்சிகள் எடுக்க வேண்டும்.

இந்த மூன்று பிரச்சினைகளுக்கும் தீர்வு நமக்கு மேலிருந்து - கடவுளிடமிருந்து - வரவேண்டும். அல்லது நமக்குள்ளிருந்து வரவேண்டும்.

ஒவ்வொரு அருட்பணியாளருக்குள்ளும் ஒரு மனப்போராட்டம் இருக்க வேண்டும். ஒவ்வொரு பொழுதும் அவர் தன் பிரமாணிக்கத்தில் நிலைத்து நிற்பதற்காக, அழைத்தலைத் தக்க வைப்பதற்காக போராடிக்கொண்டே இருக்கிறார். இதை நாம் நினைத்தால் பங்குத்தளங்களில் அருட்பணியாளர்களை விமர்சனம் செய்யும் போக்கு மிகவும் குறையும்.

அடுத்தவர்களின் ரெக்ரியேஷன் டாபிக் அல்ல அருட்பணியாளர்.

காலத்தின் கன்னத்தில் வடியும் கண்ணீர்த்துளி அவர்!




Monday, September 15, 2014

தம் சகோதரர் சகோதரிகளைப் போல!

இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை. ஊனும் இரத்தமும் கொண்ட அப்பிள்ளைகளைப் போல் அவரும் அதே இயல்பில் பங்கு கொண்டார்...ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல ஆக வேண்டியதாயிற்று. (காண். எபிரேயர் 2:11-18)

இன்று அருட்பணியாளரின் உடல் குறித்து சிந்தித்தேன். அருட்பணியாளர்களுக்கும் இரத்தமும், சதையும் உண்டு. மனித உடலை ஏற்றதன் வழியாக இயேசு மனித உடலுக்குப் பெருமை சேர்க்கின்றார். நாம் நம் உடல் வழியாகவே இந்த உலகத்தோடும், மற்றவர்களோடும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறோம். உடல் இல்லையேல் தொடர்பும் இல்லை. இந்த உடல் ஒரு தொடர்பு ஏற்படுத்தும் கருவி.

அ. இயேசு மனித இயல்பில் பங்கு கொண்டார்.
ஆ. சகோதரர், சகோதரிகள் என அழைக்க வெட்கப்படவில்லை.
இ. இரக்கமும், நம்பிக்கையும் கொண்ட தலைமைக்குருவாய் இருந்தார்.

அ. அருட்பணியாளர் தன் உடலை ஏற்றுக்கொள்ள வேண்டும். அன்பு செய்ய வேண்டும். இதில் இரண்டு வகை உண்டு: ஒன்று, அதீதக் கவலை. மற்றொன்று, கண்டுகொள்ளாத நிலை. முதல் வகையினர் எந்நேரமும் தங்கள் உடல் குறித்த அக்கறை கொண்டவர்களாக இருப்பர். ஐயயோ! உடம்பு சுடுதே! கேன்சர் வந்துடுமோ? என்ற ரீதியில் இருப்பர். மற்ற வகையினர் முதல் அட்டாக் வந்தது தெரிந்தாலும் தவிர்க்கப்பட வேண்டிய உணவையும் உண்பர். தங்கள் உடலைப் பற்றியும், உடையைப் பற்றியும் அக்கறையற்றவர்களாக இருப்பர். 'நம்மள யார் பார்க்கப் போறா!' என்று சொல்லிக் கொண்டு அழுக்குத் துணிகளையே அணிந்து கொண்டு. பழைய கிழிந்த துண்டில் தலை துவட்டிக் கொண்டு இருப்பது சால்பு அன்று. தன் உடலின் வழியாகவே ஒரு அருட்பணியாளர் இறைப்பணி செய்கின்றார். மற்றவர்களோடு தொடர்பு கொள்கின்றார். ஊனும், இரத்தமும் உண்டு என்று சொல்லும் போது அருட்பணியாளர் தன் உணர்வுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பல நேரங்களில் நாம் உணர்வுகளோடு போராடுகின்றோம். அல்லது உணர்வுகளை விட்டுப் பயந்து ஓடுகின்றோம். இரண்டுமே நல்லதல்ல. குறிப்பாக, எதிர்பாலரிடம் பழகும் போது இதைப் பார்க்கலாம். அவர்களோடு பேசினாலே நாம் காதலில் விழுந்து விடுவோம் என்ற தொனியில் அவர்கள் மேல் எரிச்சல் படுவதும், அவர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும் தவறு. எல்லாருமே ஒன்று தான். ஆண் - பெண் என்ற பேதம் ஒரு உடலியல் கூறுதானே தவிர, தவிர்க்கப்பட வேண்டியதோ, ஓடிவிடக் கூடியதோ அன்று.

மேலும், உடல் என்பது இறைவனின் ஆலயம் என்கிறார் தூய பவுல். இந்த உடலின் வழியாகவே நாம் இயேசுவின் திருவுடலை பீடத்தில் தொட்டுத் தூக்குகிறோம். உடலுக்கு எதிராக நாம் செய்யும் எதுவும் தவறே. 'அருட்பணியாளரின் தனிப்பட்ட வாழ்க்கை நிலை அவர் கொண்டாடும் அருட்சாதனக் கொண்டாட்டங்களைப் பாதிப்பதில்லை' என்கிறது திருச்சபையின் போதனை. அருட்பணியாளரையும் தாண்டி கடவுள் செயலாற்ற முடியும் தான். அதற்காக தொடர்பே இல்லை என்று சொல்லிவிட முடியுமா? உதாரணத்திற்கு, ஒரு மருத்துவர் அறுவைச் சிகிச்சை செய்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் அதற்கேற்ற உடல், உள்ள தயாரிப்பு பெற்றிருந்தால் தானே மற்றவர்களுக்கு நலம் தர முடியும். என் தனிப்பட்ட வாழ்க்கை என் பணியைப் பாதிக்காது என்று அவர் சொல்ல முடியுமா?

ஆ. தன்னை ஏற்றுக் கொள்வது போல அடுத்தவர்களையும் ஏற்றுக் கொள்வதே 'சகோதரர், சகோதரிகள்' என அழைப்பது. 'சக உதரன்!' - அதாவது தாயின் உதரத்தைப் பகிர்ந்து கொள்பவர்களே சகோதரர், சகோதரிகள். 'நான் கடவுளின் மகன். எனக்கு எல்லாம் தெரியும். நீங்க என்ன சொல்றது!' என்று இயேசு ஒருபோதும் தன்னை உயர்த்திக் கொண்டதோ, மற்றவர்களை தாழ்வாக நினைத்ததோ கிடையாது. 'வானகத் தந்தை ஒருவர். நாமெல்லாம் சகோதர, சகோதரிகள்' என்றே எண்ணினார். நேற்றைய தினம் என் பங்கின் பழைய பாசுக்கு பிரியாவிடை நிகழ்வு நடந்தது. நிறைய மக்கள் வந்து வாழ்த்தினார்கள். அவர் இறுதியாகச் சொன்னது இதுதான்: இன்று முதல் எனக்கு வேறு குடும்பம். வேறு சகோதர, சகோதரிகள். அருட்பணியாளர் ஒருவர் மட்டும்தான் எல்லாக் குடும்பத்துக்கும் உரியவராகின்றார். ஒரு பள்ளியில் முதல்வராக இருக்கும் ஒரு துறவற நிலை குருவானவர் பள்ளியில் தன் மாணவர்களோடும், சக ஆசிரியர்களோடும் உறவு கொண்டிருந்தாலும், அவரை யாரும் (எக்செப்ஷன் இருக்கலாம்!) தன் வீட்டில் ஒருவராக ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் பங்கின் அருட்பணியாளர் ஒரு குடும்பத்தில் பிறப்பு, திருமுழுக்கு, படிப்பு, வேலை வாய்ப்பு, திருமணம், நோய், இறப்பு' என அனைத்திலும் உடனிருக்கிறார். இதில் உரிமையும் இருக்கின்றது. கடமையும் இருக்கின்றது. உரிமையை மட்டும் எடுத்துக் கொண்டு, கடமையைப் புறக்கணித்தல் கூடாது.

தன் உடன் அருட்பணியாளர்களையும், தனக்குக் கீழ் இருக்கும் அருட்பணியாளர்களையும், குருமாணவர்களையும் கூட சகோதரர்களாகவே பார்க்க வேண்டும். நான் குருமாணவராக இருந்தபோது எங்கள் பங்கில் ஒரு அருட்தந்தை இருந்தார். காலையிலிருந்து மாலை வரை வேலை வாங்குவார். எல்லாரும் சாப்பிட்ட பின் மிச்சம் இருக்கும் சாப்பாட்டை சமையற்கட்டில் வைத்துச் சாப்பிடச் சொல்வார். இரவில் வராண்டாவில் தூங்கச் சொல்லிவிட்டு கதவை அடைத்துக் கொள்வார். 'இவனும் நாளை நம்மைப் போல அருட்பணியாளர்' என்ற நிலையில் இல்லாவிட்டாலும், மனிதாபிமான அடிப்படையிலாவது நடத்தலாமே. இன்றும் அந்த அருட்பணியாளரைப் பார்த்தால் என் முகம் வேறு பக்கம் திரும்பிக் கொள்கிறது. அருட்பணியாளர்களின் தவறான அணுகுமுறைகளால் மக்கள் கோயிலுக்கு வராமல் இருக்கிறார்கள் என்பது மக்கள் கோவிலுக்கு வராததன் மூன்றாவது காரணமாக இருக்கின்றது ஒரு கணக்கெடுப்பில்.

இ. இரக்கமும், நம்பிக்கையும் கொண்ட குரு. கடவுளிடத்தில் நம்பிக்கை, சக மனிதரிடத்தில் இரக்கம். இன்று காலை என் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது, 'நான் பங்குப்பணிக்காக போகும் பங்கில் வரியே வாங்க மாட்டேன்' என்று சொன்னேன். 'வரி வாங்காமல் எப்படி சமாளிப்பாய்?' என்று கேட்டார்கள். 'அப்பகுதி அறநிலையத்தாரிடம் கோவிலை ஒப்படைத்து விடுவேன். அவர்களே வருமானத்தையும், செலவையும் பார்த்துக் கொள்வார்கள். அல்லது என் சொந்த உழைப்பால் என் செலவினங்களைக் கவனித்துக் கொள்வேன்' என்றேன். ஒருமுறை இறந்த ஒருவரின் அடக்கத்திற்காக அவரது உறவினர்கள் பங்குத்தந்தையிடம் வந்தனர். 'குடும்பக் கார்டு இருக்கா?' 'இருக்கு!' 'கொடுங்க பார்ப்போம்!' பார்க்கிறார். 12 ஆண்டுகளாக வரிப்பணம் செலுத்தவில்லை. கால்குலேட்டர் எடுத்து 12 ஆண்டுகளுக்கு என்ன என்று கணக்குப் பார்க்கிறார். 'இவ்வளவு பணம் கொடுங்கள்! நான் கல்லறைச் சீட்டு தருகிறேன்!' என்றார். பாவம்! வந்திருந்தவர்களும் எல்லாரும் கொஞ்சம், கொஞ்சம் போட்டு பணத்தைக் கட்டிவிட்டே முணுமுணுத்துக் கொண்டே சென்றார்கள். மதிய உணவு அருந்தும் போது பங்குச் சாமி என்னைப் பார்த்து, 'இப்படித்தான் சாமி! நாம ஸ்ட்ரிக்டா இருக்கணும். சமயம் பார்த்து வாங்கிப்புடணும்!' என்றார். நான் சாப்பிட்டுக் கொண்டே சொன்னேன்: 'சாமி நீங்க கணக்குப் பார்த்து 12 வருஷமா கட்டலன்னு சொன்னீங்களே! வந்திருந்தவர் உங்களைப் பார்த்து, 'சரி! இந்த 12 வருஷம் எங்களை உங்கள்ல யாராவது வந்து பார்த்தீங்களா? நாங்க எங்க தூங்குறோம்? என்ன வேலை செய்யறோம்? என்பதாவது தெரியுமா? எங்க நல்லது கெட்டது என்னன்னாவுது உங்களுக்குத் தெரியுமா?' இப்படின்னு நம்மைப் பார்த்துக் கேட்டா அதுக்கு நாம என்ன சாமி பதில் சொல்வோம்?'

துறவறசபைக் அருட்செல்வர்களும், அருட்செல்வியர்களும் அருட்பணியாளர்களைப் பார்த்து (அவர்களைப் பார்த்து அல்ல! தங்களுக்குள்!) சொல்லும் குற்றச்சாட்டு இதுதான்: 'நீங்க மக்களோட வரிப்பணத்துலயும், காணிக்கைக் காசுலயும் சாப்பிடுறீங்க! ஆனா, நாங்க பள்ளியிலும், கல்லூரியிலும் வேலை செய்கிறோம்.' இதற்கு மற்றொரு நாளில் பதில் சொல்வோம். இன்று அவர்களின் குற்றச்சாட்டை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

எதற்காக வரி கட்ட வேண்டும்? அரசுக்கு வரி கட்டலாம். சரி. இங்க நாமெல்லாம் ஒரே அரசுக்குள்ளதான இருக்கிறோம். அப்புறம் எதுக்கு வரி? வரி வாங்குவதால் தான் இன்றும் இந்த மண்ணில் இன்னும் ஆங்கிலேயராகவே நம்மைப் பார்க்கிறார்கள். இந்துக்களின் கோவில்களை அரசு பார்த்துக் கொள்வது போல நம் கோயில்களையும் பார்த்துக் கொள்ளட்டுமே. யாராவது ஒருவர் நாம் கொடுக்கும் குடும்ப கார்டு எனக்கு வேண்டாம் என்று சொன்னால் நம் நிலை என்னவாகும்? 'கேள்வி கேட்டா இரத்தம் கக்கிச் சாவான்!' என்ற வடிவேலு காமெடி சொல்லும் பயத்தில் மக்கள் இருப்பதால் தான் நம் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

பயம், குற்றவுணர்வு - இந்த இரண்டும் தான் மதத்தின் சக்கரங்கள். இவை இரண்டும் இல்லையென்றால் மதத்திற்கும், கடவுளுக்கும், அருட்பணியாளர்களுக்கும் வேலையில்லை.

நம் மனித இயல்பில் நாம் ஒருவர் மற்றவரைச் சார்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து , ஒருவர் மற்றவரை உரிமை கொண்டாடவும், இரக்கம் காட்டுவும் இன்று என்னை அழைக்கிறது இயேசுவின் அருட்பணிநிலை.


Sunday, September 14, 2014

நாளை நீ எழுந்து நிற்பாய்!

இன்று மாலை மதுரை உயர்மறைமாவட்ட அருட்பணியாளர்கள் தங்களின் (புதிய) பேராயரோடு இணைந்து தங்களின் ஆண்டு தியானத்தைத் தொடங்குகின்றனர். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்தத் தியானத்தில் பங்குபெரும் அருட்பணியாளர்களுக்காகவும், பேராயர் அவர்களுக்காகவும் சிறப்பாக செபிப்போம்.

உடல் தான் இன்று தூரமாக இருக்கின்றது. உள்ளம் என்னவோ இன்று காலை முதல் எனக்கு மதுரையிலேயே இருக்கின்றது. என் மறைமாவட்டப் பணியாளர்களோடு இணைந்து தியானம் செய்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஏன் தியானம் செய்தே மூன்று ஆண்டுகள் ஆகின்றன என்றும் சொல்வேன். இந்த வருடம் அவர்களோடு இணைந்து செய்ய முடியவில்லையென்றாலும் நான் தனிப்பட்ட முறையில் செய்யலாம் என்று முடிவெடுத்து நானும் அதை இன்றே தொடங்க விழைகின்றேன். வருகின்ற ஐந்து நாட்களும் என் வலைப்பதிவிலும் என் எண்ண ஓட்டங்களையே பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

நான் தியான உதவிக்காக எடுத்துக்கொள்பவை இரண்டு: அ. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம். ஆ. இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடான 'அருட்பணி நிலை' (அருட்பணியாளர்களின் பணியும், வாழ்வும் என்ற கொள்கைத் திரட்டு).

அ. தியானம் என்றால் ஒரு ஆடம்பரம் (லக்சரி). வருடத்தில் ஐந்து நாட்கள் ஒன்றும் செய்யாமல் எல்லாராலும் இருக்க முடியுமா? அன்றாடம் வேலை செய்தால் தான் சாப்பாடு என்று இருப்பவர்களுக்கும், ஒரு நாள் வேலைக்குப் போகவில்லையென்றாலும் 'லாஸ் ஆஃப் பே' என்று தலை வலித்தாலும் மாத்திரை போட்டுக் கொண்டு ஓடுவோர் நடுவில், அருட்பணி நிலையில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும் ஆடம்பரம் இது.

ஆ. ஆடம்பரம் என்றவுடன் அவர்கள் அனைவரும் கூடிவந்து ஓய்வு எடுப்பார்கள் என நினைத்து விட வேண்டாம். ஆண்டின் 360 நாட்களை நல்ல முறையில் வாழ இந்த 5 நாட்கள் திட்டமிடுதலும், சீர்தூக்கிப் பார்த்தலும் அவசியமே. சின்ன உருவகம்: ஒர்க்ஷாப்பில் நிற்கும் நம் பழைய மாருதி கார். ஒர்க்ஷாப்பில் கொண்டு போய் காரை விடுகிறோம் என வைத்துக்கொள்வோம். அந்தக் கார் ஒர்க்ஷாப்பில் ஓய்வு எடுக்கவா செய்கிறது? இல்லை. எந்நேரமும் அதைத் தட்டிக் கொண்டே இருப்பார்கள். நெளிவுகளை எடுப்பார்கள். ஸ்குரு போனதை மாற்றுவார்கள். பழுதான டயர்கள், பல்ப், ஸ்டீரியோ, வயரிங் என அனைத்தையும் மாற்றுவார்கள். எல்லா இணைப்புக்களிலும் ஆயில் விடுவார்கள். பிரேக் சரி செய்வார்கள். சக்கரங்களின் அலைன்மென்ட் பார்ப்பார்கள். புதிய வண்ணமேற்றுவார்கள். ஐந்து நாட்கள் அல்லது ஒரு வாரம் அந்த மாருதி கார் இந்த வலிகளையெல்லாம் தாங்கும் போதுதான் மற்ற 51 வாரங்களும் நம்மை பகுமானமாக சாலையில் அழைத்துச் செல்ல முடியும். இந்த ஐந்து நாளில் ஒருநாள் மெக்கானிக் சோர்ந்து போனாலும் அது வருட முழுவதும் நம் வண்டிக்கு செலவை இழுத்துவிடுகிறது.

இ. தியானம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு இருப்பது என்றே நாம் நினைப்போம். கண்ணை மூடிக்கொண்டே இருக்க வேண்டுமென்றால் அதைத் தான் நாம் தினமும் இரவில் செய்கிறோமே. உடம்பு முழுவதும் கண்களாக மாற்றிக் கொள்ளவேண்டிய பொழுதே தியானம். தியானத்தில் முதன்மைப்படுத்தப்படுவது உறவுநிலை. அதாவது இறைவனுக்கும், நமக்கும். நமக்கும் நம் அருகில் இருப்பவர்களுக்கும், நமக்கும், நாம் பணி செய்பவர்களுக்கும் என்ற மூன்று நிலையில் உறவுநிலைகளை சீர்தூக்கிப் பார்ப்பதே தியானம். நம் அனைத்துக் குற்றங்களும் உறவுநிலைகளையே பாதிக்கின்றன. ஆகையால் தான் நமது திருஅவையின் புதிய மறைக்கல்வி, 'பாவம் என்றால் உறவின் முறிவு' என்று சொல்கின்றது.

ஈ. அருட்பணியாளர்களின் பணி மற்றும் வாழ்வு என்ற வத்திக்கான் ஏட்டை இன்று மதியம் வாசிக்கத் தொடங்கினேன். இறையியில் படித்த போது இதைப் படித்திருந்தாலும் இன்று படிக்கும் போது புதுமையாக இருந்தது. அன்று தேர்வுக்காக படித்தேன். இன்று தியானத்திற்காகப் படிக்கிறேன். நோக்கம் மாறுபடத்தானே செய்கின்றது.

அருட்பணியாளரின் பணியும், வாழ்வும் கிறிஸ்துவை மையமாக வைத்தே இருக்க வேண்டும் என்று தொடங்கும் ஏடு, அருட்பணியாளர்களின் குருத்துவம் என்பது ஆயரின் குருத்துவத்திலோ அல்லது திருத்தந்தை (போப்)யின் குருத்துவத்திலோ பங்கு பெறுதல் அல்ல. ஒவ்வொரு அருட்பணியாளரும் கிறிஸ்துவின் குருத்துவத்தில் பங்குபெறுகின்றார். ஆகையால் ஆயர் மாறினாலோ, திருத்தந்தை மாறினாலோ அருட்பணி நிலையை ஒருவர் மாற்றிக் கொள்ள முடியாது. ஒருவர் என்றென்றும் அருட்பணியாளரே. மேலும், இந்த ஏடு அருட்பணியாளர்கள் என்று மறைமாவட்டக் குருக்களை மட்டுமே அழைக்கின்றது. வாசிக்கும் போதே எனக்குப் பெருமையாக இருந்தது. துறவற சபைக் குருக்களை, அதாவது இயேசு சபை, சலேசியன் சபை, இரட்சகர் சபை போன்ற குருக்களை அது 'துறவியர்' என்றும், அதிலும் துறவியர் (ஆண் மற்றும் பெண்) என்று குறிப்பிடுகிறது. ஆகையால் துறவியர் என்பவர்களில் யாரையும் அருட்பணியாளர் என்று அழைக்க வத்திக்கான் ஏடு மறைக்கின்றது. ப்ளீஸ்! என்மேல் கோபிக்காதீங்க! வத்திக்கான் ஏடு அப்படித்தான் சொல்கிறது!

கிறிஸ்துவோடு இணைந்திருப்பது முதல் வகை உறவு. இரண்டாவதாக, ஆயரோடும், சக அருட்பணியாளர்களோடும் இணைந்திருப்பது. இதை எந்த அளவுக்கு முன்வைக்கிறது என்றால், இந்த உறவுநிலை இருந்தால் அதுவே நிறைவான திருச்சபை என்றும், வேறு சபையே தேவையில்லை எனவும் சொல்கின்றது. ஒவ்வொரு மறைமாவட்டமும் ஒரு திருச்சபை. இந்த இடத்தில் அழகாக மற்றொன்றையும் சொல்கின்றது. ஆயரும், அருட்பணியாளர்களும் திருச்சபையின் தலைவர்கள். துறவியரும், பொதுநிலையினரும் பணிசெய்யப்பட வேண்டியவர்கள் எனவும், அவர்கள் நம் பணிக்காக பயன்படுத்தப்பட வேண்டியவர்கள் எனவும் சொல்கிறது. இதில் தலைவர்கள் என்றவுடன் ஆட்டிப்படைக்கும் தலைமையல்ல எனவும், பணிசெய்யும், பாதம் கழுவும் தலைமை என்றும் சொல்கிறது.

மூன்றாவதாக, பங்குப் பணி மற்றும் பங்குப் பணி சாராத அனைத்துப் பணி செய்பவர்களும் தங்கள் பணிக்கேற்ற வாழ்க்கை நிலையை தான் பணி செய்யும் நபர்களுக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், மேற்காணும் இரண்டு உறவுகளும் இருந்து, இந்த மூன்றாம் வகை உறவு இல்லையெனில் அருட்பணியாளர் 'அந்நியப்பட்டும்', 'உடைந்தும்' நிற்பார் என சொல்கின்றது.

இந்த மூன்று வகை உறவு சரிசெய்வது எப்படி எனவும், இந்த மூன்று உறவு நிலைகளிலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் தனிப்பெரும் தலைமைக்குருவாம் இயேசு எனவும் சொல்கிறது எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம்.

உறவுநிலைகள் சரிசெய்யப்படவும், புத்துணர்ச்சியோடு மதுரை உயர்மறைமாவட்டம் இறையரசுப் பாதையில் நிமிர்ந்த நடை போடவும் இன்று நான் செபிக்கிறேன். நீங்களும் செபியுங்கள்.

பாரதிதாசனின் குடும்பவிளக்கில் என்னைக் கவர்ந்த பகுதி இது. தலைவன் தன் தலைவியிடம் படுக்கையறையில் சொல்வான்.

"அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமது நலம் சேர்ப்பதைத் தவிர,
இதுவரைக்கும் பொதுநலத்திற்கென்ன செய்தோம்?
என்பதை நாம் நினைத்துப் பார்க்கவுமில்லை.
இன்றைக்குக் கறி என்ன? செலவு யாது?
ஏகாலி (சலவை செய்பவர்) வந்தானா? வேலைக்காரி சென்றாளா?
கொழுக்கட்டை செய்யலாமா? செந்தாழை வாங்குவோமா?
கடைச்சரக்கை ஒன்றுக்கு மூன்றாய் விற்போமோ?
மாடு குடம் நிறையக் கறப்பதுண்டா?
கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம்.
தமிழரென்று சொல்லிக் கொள்கின்றோம் நாமும்.
தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்புகின்றோம்.
எமதென்று சொல்கின்றோம் நாடோறுந்தான்.
எப்போது தமிழனுக்குக் கையாலான நமது உழைப்பை
ஒருகாசைச் செலவு செய்தோம்?"

இந்தப் பாட்டு குடும்ப நிலைக்கு மட்டுமல்ல, அருட்பணி நிலைக்கும் அழகாய்ப் பொருந்தும்.

"மதுரை உயர்மறைமாவட்டமே,
உன்னிடமிருந்து தூரமாய் இருக்கும் ஒன்றே
இன்று என்னிடம் இருக்கும் பெரும் சோகம்.
இன்று நீ எப்படி இருந்தாலும்
நாளை நீ எழுந்து நிற்பாய்!
உன்னைத் தன் உயிரினும் மேலாய்ப் பேணும் இளங்காளையர்
தோள்களில் சுமந்து பெருமிதமாய் நிற்பர்!"



Saturday, September 13, 2014

சிலுவை அன்றும், இன்றும், என்றும்!

யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள். கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும், பிற இனத்தாருக்கு மடமையாகவும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்களுக்கு கிறிஸ்து கடவுளின் வல்லமையும், ஞானமுமாய் இருக்கிறார். (1 கொரிந்தியர் 1:22-24)

நெம்புகோல் தத்துவத்தைக் கண்டுபிடித்த ஆர்க்கிமெடீஸ் ஒருநாள் என்ன சொன்னார் தெரியுமா? 'இந்தப் பால்வெளியில் நான் நிற்கக் கொஞ்சம் இடமும், நீண்ட நெம்புகோலும் கொடுங்கள். நான் இந்தப் பூமியின் இருப்பிடத்தை நகர்த்திக் காட்டுகிறேன்'. ஆனால் அன்று அதை அவருக்குக் கொடுப்பார் யாருமில்லை.

கல்வாரி என்ற இடத்தில் நின்று கொண்டு, சிலுவை என்ற நெம்புகோலால் அன்பை நோக்கி, மன்னிப்பை நோக்கி, தியாகத்தை நோக்கி பூமிப்பந்தை மாற்றிப் போட்டார் இயேசு.

நாளை திருச்சிலுவையின் மகிமை பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

எதற்காக தன் மகன் இயேசுவை கடவுள் சிலுவையில் அறையப்பட்டு இறக்க வேண்டும் என நினைத்தார்? ஒரு தந்தை எப்படி தன் மகனையே பலியாகக் கேட்டார்? சிலுவையில் இயேசு இறந்ததால் நம் பாவம் அழிக்கப்பட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்? சிலுவையில் இயேசு அறையப்பட்டபோது அங்கே அவர் கடவுளாக இறந்தாரா? அல்லது மனிதராக இறந்தாரா? கடவுளாக இறந்தார் எனில் அந்த நாளில் கடவுளின் முழுமைக்குக் குறைவு வருமே? மனிதராக இறந்தார் எனில் அவரோடு இறந்த மற்ற மனிதர்களைப் போலத்தானே அந்த இறப்பும் இருந்திருக்க வேண்டும்? இயேசுவின் மேல் சுமத்தப்பட்ட குற்றச் சாட்டு ஆலயம் சம்பந்தப்பட்டது. ஆலயம் சம்பந்தப்பட்ட குற்றத்திற்கு கல்லெறியே தண்டனை. பின் ஏன் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்? - இவைகள் எல்லாம் விடைதெரியா மில்லியன் டாலர் கேள்விகள்.

சிலுவை என்ற ஒரு எதார்த்தத்தை இறையியலாக மாற்றியவர் தூய பவுலடியார். யூதர்கள் வலுவின்மை எனவும், கிரேக்கர்கள் மடமை எனவும் நினைத்ததை கடவுளின் வல்லமை என்றும், கடவுளின் ஞானம் என்றும் எதிர்ப்பதங்களின் வாயிலாக சிலுவை இறையியலுக்கு அடித்தளமிடுகின்றார். பவுலடியாரின் இறையியில் பிலிப்பியருக்கு எழுதப்பட்ட திருமுகம் 2ஆம் அதிகாரத்தில் நிறைவு பெறுகிறது. 'கெனோசிஸ்' (வெறுமை) என்ற கிரேக்க வார்த்தையை மையமாக வைத்து இயேசுவின் வாழ்விற்கு சிலுவையின் வழியாக ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுக்கின்றார்.

இன்று நாம் வாழும் உலகம் 'ஐக்கன்களின்' உலகம். ஒவ்வொன்றையும் குறிக்க, அடையாளப்படுத்த நாம் 'ஐக்கன்களை' வைத்திருக்கிறோம். 'எஃப்' என்றால் ஃபேஸ்புக், 'டி' என்றால் டுவிட்டர், 'கடித்த ஆப்பிள்' என்றால் ஆப்பிள் தயாரிப்புகள், 'நான்கு ஜன்னல்கள்' என்றால் விண்டோஸ், 'கை உயர்த்தும் பச்சை மனிதன்' என்றால் ஆண்ட்ராய்ட், 'எம்' என்றால் மோட்டோரோலா, 'எம்' என்றால் மேக்டொனால்ட்ஸ் என ஐக்கன்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அந்த வகையில் 'கிராஸ்' என்பதும் இன்று ஒரு ஐக்கன். மருத்துவமனையில், ஆம்புலன்சுகளில், முதலுதவிப் பெட்டிகளில், பள்ளிகளில், ஆலயங்களில், கொடிக்கம்பங்களில், கால்குலேட்டர்களில், பெண்களின் சங்குக் கழுத்துக்களில், மோதிர விரல்களில் என எங்கும் நீக்கமற நிறைந்துவிட்டது. அதிகமாக நாம் பார்த்து அதன் பொருளை மறந்துவிட்ட ஒரு ஐக்கன் தான் 'கிராஸ்'.

சிலுவைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்க முடியும். சிலுவை என்றால் இணைப்பு, சிலுவை என்றால் பிறரன்பு மற்றும் இறையன்பின் பிணைப்பு, சிலுவை என்றால் துன்பம், சிலுவை என்றால் கூட்டல் என தனிநபரைப் பொறுத்தே அர்த்தம் இருக்கின்றது.

இன்று திருச்சிலுவையின் மகிமை என்று சொல்லும் போது கூட்டத்தோடு சேர்ந்து நாமும் அதே போல சொல்லிவிட்டு வருவதற்குப் பதிலாக, 'இந்தச் சிலுவை என்றால் என்ன?' 'இந்தச் சிலுவை அடையாளம் எனக்குக் கற்றுக்கொள்ளப்படாவிட்டால் அது எனக்கு என்ன அர்த்தம் கொடுக்கும்?' 'சிலுவை என்றால் என்ன?' என்று இன்று நம்மை யாராவது கேட்டால் நாம் என்ன சொல்வோம்?'

சிலுவை அன்றும், இன்றும், என்றும் மறைபொருளாகவே இருக்கும்.


நாம் ஆண்டவருக்கு எரிச்சலூட்டலாமா?

நீங்கள் ஆண்டவருடைய கிண்ணத்திலும் பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது. நீங்கள் ஆண்டவரின் பந்தியிலும், பேய்களுடைய பந்தியிலும் பங்குகொள்ள முடியாது? நாம் ஆண்டவருக்கு எரிச்சலூட்டலாமா? நாம் அவரைவிட வலிமைமிக்கவர்களா?
(1 கொரிந்தியர் 1:22)

சிலைவழிபாட்டைக் குறித்து கொரிந்து நகரத் திருச்சபையைச் சாடுகின்ற தூய பவுலடியார் அவர்களின் சிலை வழிபாட்டை பேய்களின் வழிபாடு என கடிந்து கொள்கின்றார்.

மற்றவர்களை அவர் பேய் என எப்படிச் சொல்லலாம்? என்று அவரோடு இன்று நாம் சண்டை போட வேண்டாம்.

பவுலடியாரின் கோபம் எல்லாம் இதுதான்:

'100 சதவிகிதம் பிரமாணிக்கம்!'

நம் அன்றாட வாழ்க்கையிலும் பாருங்களேன். பிரமாணிக்கம் பகிரப்படும்போது பாதிக்கப்படுபவருக்கு எரிச்சல் வந்துவிடுகிறது. அதையே தூய பவுலடியார், 'ஆண்டவருக்கு நாம் எரிச்சல் ஊட்டலாமா?' என்கிறார்.

யாராவது ஒருவருக்கு? புதிய இயேசுவுக்கு அல்லது பழைய சிலைக்கு.

50-50 பிரமாணிக்கம் ஆன்மீகத்திலும் நல்லதல்ல, வாழ்விலும் நல்லதல்ல. 

Friday, September 12, 2014

எல்லாருக்கும் எல்லாம் ஆனேன்!

வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவன் ஆனேன். எப்படியாவது ஒருசிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன். (1 கொரிந்தியர் 9:22)

தூய பவுலடியார் கொரிந்து நகரில் உள்ள திருச்சபையில் நிலவிய பல்வேறு பிரச்சினைகளுக்கு அறிவுரை கூறிக் கொண்டே வரும் போது அவருக்குத் தான் ஆற்றிய பணி நினைவிற்கு வருகிறது. 'எப்படியெல்லாம் நற்செய்தியை அறிவித்தேன்' - ஆனால் இப்படி இவர்கள் மறந்துவிட்டார்களே என்று தன்னையே நொந்து கொள்கிறார்.

'நீ யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே' என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பவுலடியாரைப் பாருங்களேன். 'நான் எல்லாருக்காகவும் என்னை மாற்றிக் கொண்டேன்' என்று பெருமைப் படுகிறார். அதன் பின் நிற்பது அவரின் அன்பே. கிறித்துவின் மேல் கொண்டுள்ள அன்பு.

இன்று 'மூன்றாம் பிறை' (1982) திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு விபத்தில் உள்ளம் 7ஆம் வயதில் உறைந்து விட்ட விஜியைப் பார்த்துக் கொள்ளும் சீனு அவருக்காக எல்லாமாக மாறுகி;ன்றார். 'ஆடுறா ராமா! ஆடுறா ராமா!' என குரங்குச் சேட்டையும் செய்கின்றார். ஆனால் அவர் நலம் பெற்றவுடன் அவரின் பெற்றோரும், அவரும் ஒரு நிமிடம் இருந்து தன் குழந்தையைப் பார்த்துக் கொண்டவர் யார் என்று பார்க்க மறந்து விடுகின்றனர். அதுதான் திரைப்படத்தின் அழகு போல. 'நினைவு திரும்புகிறது! ஆனால் காதல் மறந்து விடுகிறது!' - நல்ல கதைவரி.

இறையரசுப் பணியிலும் மக்கள் மறந்தாலும், தன் பணி மறக்கப்படும் எனத் தெரிந்தாலும் எல்லாருக்கும் எல்லாமாய் மாறத் துணிகிறார் தூய பவுல்.

இறையரசுப் பணியில் நாம் சந்திக்கும் அனைவரும் நம் 'கண்ணே! கலைமானே!' தான். ஒவ்வொருவருரையும் குழந்தைபோல பாவித்து அன்பு செய்யத் துணியலாமே!

Wednesday, September 10, 2014

உங்களுக்கு வரும் நன்மை என்ன?

உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன?
உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன?
திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? (லூக்கா 6:32-34)

மத்தேயு நற்செய்தியில் மலை மேல் நின்று மிக நீண்ட போதனையை நிகழ்த்தும் இயேசு லூக்கா நற்செய்தியில் அதே போதனையை சமவெளியில் நின்று நிகழ்த்துகின்றார். இது சமவெளிப் பொழிவு எனவும் அழைக்கப்படுகின்றது. மத்தேயு நற்செய்தியில் இயேசு புதிய மோசேவாக முன்வைக்கப்படுகின்றார். ஆகவே அவர் மலை மேல் நின்று போதிக்கின்றார். ஆனால் லூக்கா நற்செய்தியாளர் சமத்துவத்தின் நற்செய்தியாளர். ஆகவே இயேசுவை சமவெளியில் நிறுத்திப் பேச வைக்கின்றார்.

மலையில் நின்றாலும், சமதளத்தில் நின்றாலும் போதனை ஒன்றுதான்.

சாதாரணமாக இருப்பதை விட கொஞ்சம் சிறப்பாக இருந்து பாருங்களேன் என்று இயேசு அழைப்பு விடுக்கின்றார். இதுதான் இந்தப் போதனையின் சாராம்சம்.

'உங்களுக்கு வரும் நன்மை என்ன?'

இந்தக் கேள்வியை இயேசு மூன்று முறை கேட்கின்றார்.

அன்பு செய்வது, நன்மை செய்வது, கடன் கொடுப்பது - இந்த மூன்றிலும் மற்றவர்கள் இருப்பது போல இல்லாமல் கொஞ்சம் மேலாக இருக்கச் சொல்கின்றார்.

கந்து வட்டித் தொழிலை குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டு வரச் சொல்லி தமிழக அரசுக்கு இன்று உச்சநீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

இயேசு இன்று கடன் கொடுப்பதைப் பற்றிப் பேசுகின்றார். திரும்பக் கிடைக்கும் என நினைத்து நாம் கடன் கொடுக்கக் கூடாதாம். இயேசுவின் போதனை வட்டிக்கடை நடத்துபவர்களுக்கும், கிரெடிட் கார்ட் விநியோகிக்கும் வங்கிகளுக்கும், ஏன் அகில உலக பொருளாதாரத்திற்குமே பெரிய சவாலாக இருக்கும்.

நாம் செய்வது எதுவும் நமக்கே திரும்பக் கிடைக்கும் என்பதுதான் வாழ்க்கை நியதி. அப்படியிருந்தாலும் நாம் செய்வது நமக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்து எதையும் செய்யக் கூடாது என்றே இயேசு சொல்கின்றார். இதையே பகவத் கீதை 'நிஷ்காமகர்மா' என்று சொல்கின்றது.

எதிர்பார்ப்பு இல்லாமல் நம் அன்பையும், பணத்தையும், ஆற்றலையும் கொடுக்க இயேசு சவால் விடுகின்றார்? இன்றைக்கு எங்கு பார்த்தாலும் 'ஐஸ் பக்கெட்' சவால். இயேசுவின் இந்த பக்கெட் சவாலுக்கு நாம் தயாரா?


Tuesday, September 9, 2014

தற்கொலை செய்து கொள்ளப் போகிறாரோ?

இயேசு மீண்டும் அவர்களிடம், 'நான் போன பின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்' என்றார். யூதர்கள், ''நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது' என்று சொல்கிறாரே, ஒருவேளை தற்கொலை செய்து கொள்ளப் போகிறாரோ?' என்று பேசிக்கொண்டார்கள். (யோவான் 8:22)

நாளை, அதாவது செப்டம்பர் 10, உலக தற்கொலை தடுப்பு தினம் கொண்டாடப்படுகிறது. 2003ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பு இதைக் கொண்டாடி வருகின்றது. இந்த அமைப்பின் கருத்துக்கணிப்பின்படி உலகம் முழுவதும் 40 நிமிடங்களுக்கு ஒருவர் என்ற வீதியில் தினமும் 3000 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் முக்கியமாக 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் போர்களில் இறந்தவர்களை விட தற்கொலை செய்து இறந்தவர்களே அதிகம் எனவும், தற்கொலை இறப்புக்கான காரணங்களில் 13வது என்றும் சொல்லப்படுகிறது.

விவிலியத்தில் தற்கொலை பற்றிய படிப்பினை என்ன? என்பதையும், வாழ்க்கையை நாம் இனிமையாக வாழ்வதற்குத் தேவையான துணிவையும் பற்றி இன்று பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

விப 20:13 மற்றும் இச 5:17ல் உள்ள பத்துக்கட்டளைகளில் ஒன்றான 'கொலை செய்யாதீர்கள்!' என்ற கட்டளை எபிரேய விவிலியத்தில், அதாவது முதல் ஏற்பாட்டில், உயிருக்கான முக்கியத்துவம் பற்றிச் சொல்லப்பட்ட முதல் பதிவு. 'உங்களையும் கொல்லாதீர்கள்! மற்றவர்களையும் கொல்லாதீர்கள்!' என்பதே இதன் அர்த்தம்.

எண்ணிக்கை நூல் 11:12-15ல் தன் பணி மற்றும் பயணத்தின் வலி தாங்க முடியாத மோசே 'நீர் என்னை இப்படி நடத்துகிறீர் என்றால், என்னை இங்கேயே, இப்போதே கொன்றுவிடும்' என்று முறையிடுகின்றார். நீத 9:52-54ல் ஒரு பெண் தன் மேல் கல்லைத் தூக்கிப் போட்டதால் அது அவமானம் என்று கருதும் அபிமெலக் தன் பணியாளனை நோக்கி தன்னை வாளால் குத்திக் கொல்லுமாறு முறையிடுகிறான். நீத 16:29-30ல் மிகப்பெரும் நீதித்தலைவரான சிம்சோன் பிலிஸ்தியர்களைப் பழிவாங்குவதற்காக தான் கட்டப்பட்டிருந்த தூணைத் தகர்த்து கட்டிடத்தை விழச் செய்து கூடியிருந்த பிலிஸ்தியர்களை அழித்ததோடல்லாமல் தன்னையும் அழித்துக் கொள்கிறார். 1 சாமுவேல் 31:4-6ல் சவுல் அரசன் தன் வாளின் மேல் தானே விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறார். தன் காயங்கள் தான் தனது இந்த முடிவுக்குக் காரணம் என்று சாக்குப் போக்கும் சொல்கிறார் சவுல் (1 குறி 10:3-7). 2 சாமுவேல் 17:1-29ல் தாவீதை அழிக்கும் தன் திட்டம் நிறைவேறவில்லை என்று நினைக்கும் அகித்தோஃபேல் தூக்குப் போட்டு இறந்து விடுகிறான். 1 அரசர்கள் 16:15-20ல் சிம்ரி என்ற அரசன் தன் நகரம் முற்றுகையிடப்பட்டதால் தன் வீட்டிற்குத் தீயிட்டு அதில் விழுந்து தானும் மடிந்து விடுகிறான். 1 அரசர்கள் 18:40 மற்றும் 19:4ல் இசபெல் அரசியிடமிருந்து தப்பிவிடும் எலியா இறைவாக்கினர் தான் இறக்க வேண்டும் என்று கடவுளை மன்றாடுகின்றார். யோனா 4:1-11ல் கடவுளின் இரக்கத்தைப் பார்த்து அவர்மேல் கோபப்படும் யோனா இறைவாக்கினர் 'வாழ்வதை விட சாவதே மேல்' எனப் புலம்புகிறார்.

இவ்வாறாக, வாழ்வின் இக்கட்டான தருணங்களில் மோசேக்கும், எலியாவுக்கும் கூட தற்கொலை எண்ணங்கள் வந்திருக்கின்றன.

கிறித்தவர்களின் விவிலியத்தில், அதாவது இரண்டாவது ஏற்பாட்டில், தற்கொலை என்றவுடன் நம் நினைவிற்கு வருவது யூதாசு இஸ்காரியோத்து தான் (காண். மத் 27:5 மற்றும் திப 1:18). மேலும் 1 கொரி 3:17 தூய பவுல் ஆன்மீகத் தற்கொலை பற்றிப் பேசுகிறார். பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் அவர்களிடம் மனம் திறக்கும் பவுல் 'உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம்' என தன் இழுபறி மனநிலையை அவர்களோடு பகிர்ந்து கொள்கின்றார் (1:23-26). திருவெளிப்பாட்டில் ஐந்தாம் எக்காளம் ஊதப்படும் போது சொல்லப்படும் வார்த்தைகள் விந்தையாக இருக்கின்றன: 'அக்காலத்தில் மனிதர் சாவைத் தேடுவார்கள். ஆனால் சாக மாட்டார்கள். சாக விரும்புவார்கள். ஆனால் சாவு அவர்களை அணுகாது' (9:6).

விவிலியத்தின் கதை மாந்தர்கள் தங்களின் இக்கட்டான நிலையில் சிலர் இறப்பு வராது என்று காத்திருக்கின்றனர். சிலர் இறப்பை வருவித்துக் கொள்கின்றனர்.

தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்பதற்கான ஒரே காரணம் இதுதான்: 'நம்மால் உயிரை ஆக்க முடியாது. ஆகவே, அதை அழிக்கவும் நமக்கு உரிமை இல்லை'.

தற்கொலை ஒரு கொடுமையான சிந்தனை. தற்கொலை செய்து கொள்ளும் மனிதர் இரண்டு முறை இறக்கின்றார். முதலில் தன் மனதளவில் இறந்து விடுகின்றார். பின் தன் உடலை மாய்த்துக் கொள்கின்றார். 'ஐயோ! நான் சரியில்லை!' 'என்னிடம் நல்லது எதுவும் கிடையாது!' 'எனக்கு அழகு இல்லை!' 'நான் டேலன்ட் இல்லாதவன்!' என்று ஒவ்வொருமுறை நம்மைத் தாழ்வாக மதிப்பிடும்போதும் நாம் நம் உள்ளத்தைக் கொலை செய்கிறோம். உள்ளம் இறந்தபிறகு, உடலும் தன்னை மாய்த்துக்கொள்ளத் துணிகிறது.

பிரச்சினைகள் எல்லாருக்கும் தான் இருக்கும். ஒபாமாவுக்கும் பிரச்சினை இருக்கும். நம்ம ஊரில் ஆடு மேய்ப்பவருக்கும் பிரச்சினை இருக்கும். ஆனால் பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வாக தற்கொலையை தெரிவு செய்வது தவறு. இதில் தற்கொலை செய்து கொள்ள தைரியம் வேண்டும் என்று சப்பை கட்டும் கட்டுவார்கள் சிலர். இது என்ன ஒலிம்பிக்ஸா. தைரியத்தோடு சண்டை போட்டு வெற்றி பெற! ஒரு கண முயற்சி ஒரு குடும்பத்திலும், ஒரு சமுதாயத்திலும் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திவிடுகிறது. இறந்தவர் போய் விடுவார். ஆனால் இருப்பவர் அதே இடத்தில், அதே வீட்டில், அதே சூழலில் இருக்க வேண்டுமல்லவா!

கொலை, தற்கொலை, மரண தண்டனை. போர் என அனைத்தும் மனித உயிரின் மாண்பிற்கு எதிரானதுதான்.

துன்பம் வரும் போது கொஞ்சம் வெளியே பார்ப்போம். உள்ளே பார்த்தால் விரக்தி வரும். வெளியே பார்த்தால் உற்சாகம் வரும்.

யூதாசுக்கும், பேதுருவுக்கும் ஒரே துன்பம் தான் வந்தது. ஒருவர் காட்டிக் கொடுத்தார். மற்றவர் மறுதலித்தார். குற்றத்தின் தன்மை ஒன்றுதான். யூதாசு உள்ளே பார்த்தார். ஆனால் பேதுரு வெளியே பார்த்தார்.