Tuesday, July 8, 2014

தாய்மடி தவழும் குழந்தை என!

விவிலியத்தின் இரண்டாவது சிறிய அதிகாரம் திபா 131. மிகவும் சிறிய அதிகாரம் திபா 117 (2 வசனங்கள் மட்டும்). திபா 131ல் உள்ள மூன்று வசனங்களும் மிகவும் நேர்த்தியான கருத்துக்களைத் தாங்கியவை.

இது தாவீதின் பாடல் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று.

இந்தப் பாடலை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்:

அ. எது என்னிடம் இல்லை?

ஆ. எது என்னிடம் இருக்கிறது?

இ. எது எல்லாரிடமும் இருக்க வேண்டும்?

அ. எது என்னிடம் இல்லை?

க. உள்ளத்தில் இறுமாப்பு இல்லை.
ங. பார்வையில் செருக்கு இல்லை.
ச. மிஞ்சின அரிய, பெரிய செயல்களில் ஈடுபடுவதில்லை.

ஆ. எது என்னிடம் இருக்கிறது?

க. நெஞ்சத்தில் அமைதி.
ங. எத்தகைய அமைதி? தாய்மடி தவழும் குழந்தையென!

இ. எது எல்லாரிடமும் இருக்க வேண்டும்?
இப்போதும் எப்போதும் ஆண்டவர்மேல் நம்பிக்கை.

நம் சிந்தனையை 'ஆ'விலிருந்து தொடங்குவோம். தாவீதின் உள்ளத்தில் அமைதி இருக்கின்றது. நாம் படிக்கவும், தனிமையாக நேரத்தைச் செலவிடவும், முக்கியமான விடயங்களைச் சிந்திக்கவும், செபம் செய்யவும் அமைதியான இடத்தை நாடுகிறோம். எந்தவொரு சப்தமும் உள் நுழையாத அறைக்குள் அமர்ந்திருந்தாலும் நெஞ்சத்தில் அமைதி இல்லையென்றால் அது இன்னும் ஆபத்தானது. வெளியில் இருந்து வரும் சப்தத்தை நாம் நிறுத்தி விடலாம். ஆனால் உள்ளத்து சப்தங்கள் அடங்க வேண்டுமென்றால் நம் முயற்சிகளால் மட்டும் பலன் இல்லை. அது தானாக அடங்க வேண்டும். நாம் பிறந்த போது நம் உள்ளத்தில் இயல்பாகவே அமைதி இருந்தது. ஆனால் காலப்போக்கில் நாம் வளர வளர உள்ளத்து அமைதியை இழந்து விட்டோம்.

அந்த அமைதியை நாம் இழக்கக் காரணங்கள்தாம் 'அ': இறுமாப்பு கொண்டிருக்கும் உள்ளமும், செருக்கு கொண்ட பார்வையும், 'எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியும்' என்று பரபரப்பான சிந்தனையும் நம் அமைதியைக் கலைத்து விடுகிறது.

தாவீது ஒரு அளப்பரிய அரசர். அவர் நினைத்தால் செய்ய முடியாத காரியம் எதுவுமே இருந்திருக்க முடியாது. ஆனால் அவரே, 'எனக்கு மிஞ்சின அரிய, பெரிய காரியங்களைச் செய்வதில்லை!' என்று சொல்கின்றார். நம் வாழ்வில் 'என்னால் முடியும்!' என்று செய்யத் துணிந்து விட்டு பின் அவைகளைச் செய்ய முடியாமல் பாதியில் விட்ட காரியங்கள் நிறையவே இருக்கத்தானே செய்கின்றன.

திருப்பாடல் 131ல் வரும் அழகிய உருவகம் என்ன தெரியுமா? 'தாய்மடி தவழும் குழந்தை'.

தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் குழந்தை இந்த உலகத்தில் பாதுகாப்பின்மையை உணர்கிறது. இந்தப் பாதுகாப்பின்மையைப் போக்கும் ஒரு உன்னத உணர்வைத் தருவது 'தாய்ப்பால்'. தாய்ப்பால் குடிக்கும் போது ஏதோ தான் கருவறைக்குள்ளே இருப்பதாக உணர்ந்து கொள்ளுமாம் குழந்தை. ஆனால் எல்லா நாளும் பால்குடித்துக் கொண்டே இருக்க முடியுமா?

'பால்குடி மறக்கும் பருவம்!' (Weaning Period) - இதுதான் குழந்தையின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் பருவம். மிகப்பெரிய பாதுகாப்பின்மையை ஒரு குழந்தை உணரும் தருணம் இதுதான். இதை ஒரு குழந்தை எப்படி எடுத்துக் கொள்கிறதோ அதைப்பொறுத்தே அதன் பிற்கால வளர்ச்சி இருக்கின்றது. அதிக நாட்கள் தாய்ப்பால் பழகிய குழந்தைகள் வளர்ந்தபின்னும் பிறரைச் சார்ந்தே இருப்பதாகவும், தாய்ப்பால் மறுக்கப்பட்ட குழந்தைகள் அல்லது குறைவான காலம் குடித்த குழந்தைகள் ஒரு வித பய உணர்வுடன் தங்களையே குறுக்கிக் கொண்டு வளர்கிறார்கள் எனவும் ஆய்வுகள் சொல்கின்றன.

பால்குடி மறக்கும் பருவத்தில் குழந்தையின் செய்கையை மாற்ற வேண்டும் என்பதற்காக தாய் என்ன செய்வாள் என்றால், குழந்தையைத் தன் மடியில் குப்புறப் படுக்க வைப்பாள். இப்படிக் குப்புறப் படுத்தல் தாய்ப்பாலுக்கான ஏக்கத்தைத் தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தை தவழ்வதற்கான பயிற்சியாகவும் இருக்கின்றது. தாய்மடியில் குப்புற இருக்கும் குழந்தை அதிகமாகச் சிரிக்கும். கவனித்திருக்கிறீர்களா? அந்த சிரிப்பு அதிகமாக இருக்கக் காரணம் உள்ளத்தின் மகிழ்ச்சி.

வாழ்வில் ஒருபுறம் எல்லாம் மறுக்கப்பட்டாலும் தான் வளர்கிறேன் என்று நினைத்துச் சிரிக்கும் குழந்தை போல, தாவீது ஆண்டவரில் தான் அமைதி கொள்வதை மகிழ்வாக உணர்கின்றார். இந்த வாழ்க்கைப்படி நிலையில் தான் குழந்தை தன் தாயையும், உலகத்தையும் நம்பத் தொடங்குகிறது. இந்த நம்பிக்கை நலம் தரும் என்பதும் தாவீதின் வேண்டுகோள் (131:3).

'தாய்மடி தவழும் குழந்தை என' - நாமும் இன்றும் என்றும்!


1 comment:

  1. "தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை"...இவை கண்ணதாசனின் வரிகள்.வளர்ந்த குழந்தைகளுக்கு இது பொருந்துமென்றால் பச்சிளம் குழந்தைகளுக்கு தாயின் மடியைத் தவிர சுகமான உலகம் வேறு என்ன இருக்க முடியும்? எங்கு நமக்குப் பாதுகாப்பு உள்ளதோ அங்கு கண்டிப்பாக அமைதி நிலவும்.நாமும் கூட நம்மிடமுள்ள அகந்தை, இறுமாப்பு இவைகளைப் புறந்தள்ளிவிட்டுத் தாய்மடி தவழும் குழந்தைகளாக அவர் மடியில் ஆனந்தம் காணலாமே!எனக்கொரு சந்தேகம்....தங்களுக்கு அந்நியப்பட்ட விஷயங்கள் என்று ஏதேனும் உண்டா? எந்தத் தலைப்பையும் எப்படித் தங்களால் இவ்வளவு இலாவகமாக்க் கையாள முடிகிறது? பாராட்டுக்கள்...

    ReplyDelete