Saturday, July 26, 2014

யோபு நூலின் நோக்கம் என்ன?

'நல்லவர்கள் ஏன் துன்புற வேண்டும்?' அல்லது 'நீதிமான்களுக்கு ஏன் கடவுள் துன்பத்தை அனுமதிக்க வேண்டும்?' என்பதே யோபு நூலின் பதில் என்று பலர் சொல்லியிருப்பர். ஆனால் இந்தக் கேள்விகளுக்கான பதில் யோபு நூலில் இல்லை. யோபுவுக்குத் தோன்றும் கடவுள் இந்தக் கேள்விகளுக்கான பதிலைச் சொல்லவில்லை. நல்லவர்கள் ஏன் துன்புற வேண்டும் என்பதற்குப் பதில், 'எப்படித் துன்புற வேண்டும்?' என்ற கேள்விக்குப் பதிலாகத் தான் இந்த நூல் அமைந்திருக்கின்றது.

அ. யோபு நூல் கடவுளின் மேன்மையையும், அவரின் நிறைவையும் நம் கண்முன் கொண்டு வருகின்றது. 'ஆண்டவரை நான் எந்நாளும் அழைப்பேன். அவர் ஒருவரே என்றென்றும் புகழ்ச்சிக்குரியவர்' (திபா 18:3) என்ற திருப்பாடலின் வசனம் யோபு நூல் முழுவதும் எதிரொலிக்கிறது.

ஆ. துன்பம் அல்லது வலி. இந்த நூல் முழுவதும் நிழலாடும் ஒரு வார்த்தை இது. மனிதன் துன்புறுவது மட்டுமல்லாமல், 'ஏன் எனக்குத் துன்பம்?' என்று கேட்கவும் முடியும். இதுதான் நம் வரம். இதுதான் நம் சாபம். நம் துன்பத்திற்கான காரணத்தை நம்மால் பல நேரங்களில் கண்டுபிடிக்கவே முடிவதில்லை. மேலும் துன்பம் என்பது நம் பாவத்தின் விளைவு அல்ல. யோபுவின் நண்பர்கள் யோபுவின் பாவத்தால் தான் அவருக்குத் துன்பம் வந்தது என்கின்றனர். ஆனால் வாசகருக்குத் தெரியும் யோபு நீதிமான் என்று.

இ. பொறுமையின் புகைப்படமே இந்த நூல். எவ்வளவு தன்பம் வந்தாலும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்கின்ற ஒரு பொறுமைசாலியை நாம் இந்த நூலில் சந்திக்கின்றோம்.

ஈ. இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் தன் வாழ்வில் ஏதோ ஒரு நிலையில் தானும் யோபுவைப் போல இருப்பதாக, தன் பிரதிபலிப்பைப் பார்க்கின்றார்.


1 comment:

  1. பொதுவாக ஒருவரின் வாழ்க்கையில் வலியோ வேதனையோ வரும்போதுதான் இறைவனை ஏறெடுக்கின்றன நம் கண்கள்.ஆனால் ஏற்கனவே இறைவனையே தன் நிழலாகப் பற்றிக்கொண்டு வாழ்ந்த யோபுவின் வாழ்க்கையில் எதற்காக இந்தத் சோதனையும்,வேதனையும்? காரணம் அறியக் காத்திருக்கிறோம்.ஞாயிறு வாழ்த்துக்கள்...

    ReplyDelete