Thursday, July 31, 2014

மடியச் சொல்லும் மனைவி!

ஓடொன்றை எடுத்துத் தம்மைச் சொறிந்து கொண்டு, யோபு சாம்பலில் உட்கார்ந்தார். அப்போது அவரின் மனைவி அவரிடம், 'இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே!' என்றாள். ஆனால் அவர் அவளிடம், 'நீ அறிவற்ற பெண்போல் பேசுகிறாய்! நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமைகளைப் பெறக்கூடாது?' என்றார். (யோபு 2:8-10)

இன்று நாம் சந்திக்கும் கதைமாந்தர் யோபின் மனைவி. 'மனைவி' என்ற காரணப்பெயரைத் தவிர நமக்கு வேறு எதுவும் கொடுக்கப்படவில்லை. யோபுவின் உடைமைகள் எல்லாம் அழிவதையும், அவரின் உடல்நலம் நாளுக்கு நாள் கெடுவதையும் நேரில் இருந்து காண்கின்ற மனைவி பேசும் வார்த்தைகளே மேற்காணும் வார்த்தைகள். இந்த இடத்தில் வரும் மனைவி நூல் முழுவதும் மறைந்தே இருக்கின்றார். நூலின் இறுதியில் யோபுவுக்கு எல்லாம் திரும்பக் கிடைத்த போதும் இவரைப் பற்றிய குறிப்பு அங்கு இல்லை. 'என் மனைவிக்கு என் மூச்சு வீச்சம் ஆயிற்று' (19:17) என்று போகிற போக்கில் யோபின் புலம்பலில் மட்டும் வந்து செல்கிறார் இவர்.

'இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்?'

'கடவுளைப் பழித்து மடிவதுதானே?'

இந்த இரண்டு கேள்விகளும் யோபின் சமகாலத்தவரின் கருத்தியல். அதாவது, துன்பம் என்பது நாம் செய்த பாவத்தின் விளைவு. அதிக பாவம் செய்தால் அதிக துன்பம் வரும். குறைவான பாவம் செய்தால் குறைவான துன்பம் வரும். இதையே ரிவர்ஸ் செய்தும் பார்த்தார்கள். அதாவது, ஒருவருக்கு அதிக துன்பம் இருக்கிறது என்றால் அவர் அதிகம் பாவம் செய்தவர். குறைவான துன்பம் இருக்கிறது என்றால் குறைவாகப் பாவம் செய்தவர்.

யோபின் மனைவி இந்தச் சமகாலத்தவரின் கருத்தியலைத் தான் கொண்டிருக்கின்றார். அவருடைய சொற்களும் இதையே வெளிப்படுத்துகின்றன. யோபு பெரும் பாவம் செய்தவர் என்றும், இவ்வளவு நாட்கள் நல்லவர் போல வேடமிட்டிருந்தார் எனவும் நினைக்கின்றார்.

'இன்னுமா மாசின்மையில் நிலைத்திருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்?' என்பதே சரியான மொழிபெயர்ப்பு.

யோபுவைப் பற்றிய ஒரு தவறான கருத்தைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு இன்ஸ்டன்ட் தீர்வையும் தருகின்றார்:

'கடவுளைப் பழித்து மடிவதுதானே?'

'நீரெல்லாம் மடிவதுதானே?' என்று மட்டும் கேட்டிருந்தால் அது எவ்வளவு வலி தருவதாக இருக்கும். 'இதற்கெல்லாம் காரணமான கடவுளை பழித்துவிட்டு' மடியும்! என்கிறார்.

அவரின் கண்டிப்பு இரண்டு: ஒன்று, கடவுளைப் பழி! இரண்டு, செத்து மடி!

இரண்டுமே இன்ஸ்டன்ட் தீர்வுகள்.
'கடவுளைப் பழிப்பது' என்பது பண்டைக்கால மக்களின் ஒரு ஆன்மீகச் செயல். அதாவது நாம் கோவிலுக்குப் போய் ஆடு வெட்டி பலி செலுத்துகிறது போல, கோவிலுக்குச் சென்று கடவுளைப் பழிக்கவும் செய்யலாம். இதற்கென்று பயிற்சி பெற்ற, தகுதி பெற்ற குருக்களும் இருந்தனர்.

இந்த ஆன்மீகச் செயலுக்கு ஒரு நல்ல உதாரணம் எண்ணிக்கை நூலில் (22) நாம் சந்திக்கும் பிலயாம் இறைவாக்கினர். பாலாக் மன்னன் இஸ்ரயேலரைச் சபிக்கவும், இஸ்ரயேலரின் கடவுளான யாவே இறைவனைப் பழிக்கவும் பிலயாமை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்புகின்றார். வானதூதரால் தடுத்து நிறுத்தப்பட்டு, பின் பழிப்பதற்குப் பதிலாக வாழ்த்தி விட்டுச் செல்கின்றார் பிலயாம்.

இந்த சித்தாந்தத்தின் பின் இருப்பது என்ன? கடவுள் ஒரு கைப்பாவை. நாம் புகழ்ந்தால் சந்தோஷமடைவார். இகழ்ந்தால் வருத்தப்படுவார். மனிதர்களின் உணர்வுகளையே கடவுளும் கொண்டிருக்கிறார் எனவும், கடவுள் நேரத்திற்கு நேரம் குணம் மாறக்கூடியவர் என்பதும் இந்தச் சித்தாந்தத்தின் பின்புலம்.

யோபு கடவுளைப் பழித்தால் அது 'கண்ணுக்குக் கண்! பல்லுக்குப் பல்!' என்று பலி தீர்த்துக் கொண்டதாக இருக்கும் என நினைக்கின்றார் மனைவி.

மனைவியின் அடுத்த வேண்டுகோள்: 'செத்து மடி!' இன்னும் கொஞ்சம் கொடூரமாகச் சொல்ல வேண்டுமானால் 'தற்கொலை செய்து கொள்!' வலிக்கு மிக எளிய மருந்து வலியை உணர வைக்கும் உயிரை எடுத்து விடுவது! என்ன அழகான தீர்வு!

துன்பப்படுகிறவர்கள், அதாவது பாவிகள், அதாவது கடவுளால் தண்டிக்கப்பட்டவர்கள் தங்கள் அருகில் இருந்தால் அது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அழிவு என்று நினைத்த அக்காலத்தவர் அவர்களை கொலை செய்யவும், தங்கள் ஊரை விட்டுத் தள்ளி வைக்கவும், அவர்களுக்கு மருத்துவ உதவிகளை மறுக்கவும் செய்தனர் என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

யோபின் மனைவி நமக்குச் சொல்வது என்ன?

அ. மாசின்மையில் நிலைக்க வேண்டுமா! நல்லவராய் இருப்பது ஒன்றும் பெரிய கஷ்டமல்ல. நல்லவராய் நிலைத்து நிற்பதுதான் கஷ்டம். நன்மைத்தனமும், விடாமுயற்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. அடிக்கடி நல்லராக இருப்பதற்கும், எப்போதும் நல்லவராக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. 'நன்மை செய்வதில் மனந்தளர வேண்டாம்!' என்ற தூய பவுலடியாரின் வார்த்தைகளே நமக்குப் பாடமாகட்டும்.

ஆ. கடவுளைப் பழி! இது ஒரு டிஃபென்ஸ் மெக்கானிசம். ஒன்று நமக்கு வலிக்கிறது என்றால் அந்த வலியை மற்றவர் மேல் திருப்பி விடுவது. இதை 'புரொஜெக்சன்' என்றும் அழைப்பர். இன்று நமக்குத் துன்பம் வந்தால் நாம் அதை நம் சமூகத்தின் மேலும், நம் குடும்பத்தின் மேலும், கடவுளின் மேலும் திருப்பிவிடவே செய்கின்றோம். இன்று நாடுகள் நாடுகளை எதிர்த்து போரிட்டுக்கொள்ளக் காரணமும் இதுவே.

இ. செத்து மடி! உயிரை ஆக்க நம்மால் முடியாது. ஆகையால் அழிக்கவும் நமக்கு உரிமையில்லை. சிம்பிள் லாஜிக். துன்பம், இழப்பு, வெறுமை தாங்காமல் இன்று தங்களையே அழித்துக்கொள்ளும் நபர்களைப் பற்றி நாம் அன்றாடம் கேள்விப்படுகிறோம். ஒரு பக்கம் அவர்களின் இழப்பு குறித்து நமக்கு தெரியாததுதான். வெளியில் இருந்து கொண்டு, 'அவர்கள் செய்தது தவறு!' என்று சுட்டிக்காட்டுவது எளிதுதான். ஆனால், அவர்கள் செயல்களும் சரி என்று சொல்லிவிட முடியாது தானே! அதேபோல, நான் வலிமையானவன். நீ வலிமையற்றவன். நீ வாழத்தகுதியற்றவள் என நாம் யாரையும் சொல்லவும், அடுத்தவரின் உயிரை எடுக்கவம் நமக்கு எந்நாளும் உரிமையில்லை. வாழ்விற்கு மட்டுமே துணை போக வேண்டும் என்று சொல்லும் கத்தோலிக்கத் திருஅவையும் கருக்கலைப்பு, யூத்தனாசியா, தற்கொலை, மரண தண்டனை என அனைத்திற்கும் எதிர் நிலைப்பாடு கொண்டிருப்பதன் பின்புலமும் இதுதான்.

யோபின் மனைவி நம்மில் எத்தனை பெர்சன்ட் இருக்கிறார்?


அன்புடன் அந்தரங்கம்!

நேற்று முன்தினம் மாலை கொலோன் நகரில் இருந்து ரோம் வந்து சேர்ந்தேன். எங்கும் அமைதி இன்று ஒரு மாதம் இருந்து விட்டு, எங்கும் சத்தத்தைக் கேட்டவுடன் ரோம் வந்துவிட்டது என்று உறுதிசெய்து கொண்டேன்.

செக்-இன் செய்த புல்மேன் எந்த பெல்ட்டில் வருகிறது என்று பார்த்துக் கொண்டிருந்தேன். திரையில் எண் '8' ப்ளிங் ஆனது. 15, 14, 13 என எல்லா பெல்ட்களும் ஓடிக்கொண்டிருக்க '8' மட்டும் ஓடாமல் நின்றிருந்தது. அந்த பெல்டைச் சுற்றி என்னுடன் உடன் வந்த பயணிகள். அவர்களைப் பார்த்தவுடன், 'சரியான பெல்டில்தான் நின்று கொண்டிருக்கிறேன்!' என்று உள்ளுக்குள் மகிழ்ச்சி. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 30 நிமிடங்கள் காத்திருக்கவும் என்று அறிவிப்பு வந்தது.

30 நிமிடம் என்ன செய்வது என்றபடி அங்கிருந்த வரிசை நாற்காலிகளில் ஒன்றைப் பார்த்து அமர்ந்தேன். எனக்கு முன் இரண்டு வரிசைகள் தள்ளி ஒரு பையன் அமர்ந்திருந்தான். அவன் மட்டும் எப்படி கண்ணில் பட்டான் என்கிறீர்களா? நாம் உட்கார்ந்து முதுகு சாயும் இடத்தில் அமர்ந்து, கால்களை அமரும் இடத்தில் வைத்திருந்தான். அவன் முன் அமர்ந்திருந்தது அவனது தோழி. அந்தத் தோழியின் அழகிய வெளிர்மஞ்சள் நிற முடியைக் கோதிக் கொண்டிருந்தான். கோதிக் கொண்டே அதை நுகர்ந்து பார்க்கத் தொடங்கினான்.

'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் இருக்கிறதா?' என்ற திருவிளையாடல் கேள்விக்கு விடை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறான் என நினைத்துக் கொண்டேன்.
இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவனது தோழி தன் ஐஃபோனில் யாருக்கோ மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள். இவனும் அவளது கூந்தலைக் கோதிக் கொண்டே அவள் என்ன அனுப்புகிறாள் என்று பார்க்க முனைந்து கொண்டிருந்தான். ஆனால், அவள் கள்ளி! இவன் அப்படிப் பார்க்க முயல்வதைக் கண்டுகொண்டு மிகவும் சிரத்தை எடுத்து மறைத்து, மறைத்து மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள்.

இப்ப உள்ள காதலில் இதுதான் ஸ்பெஷல். நீங்கள் காதலிக்கும் நபரின் உடலைத் தொட உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அவர்களின் மொபைலைத் தொட உங்களுக்கு உரிமை இல்லை.

'பிரைவசி' என்ற சொல்லுக்கு இன்று அர்த்தம் மாறிக்கொண்டே வருகின்றது. நாம் குளிக்கும் அறைக்குள் ஒருவர் அத்துமீறி நுழைந்தால் அவர் நம் 'பிரைவசிக்குள்' நுழைந்துவிட்டார் என்று சொல்ல முடியாது. ஆனால் அவர் நம் மெசேஜ்களை வாசித்தாலோ, நம் இன்பாக்ஸைப் பார்த்தாலோ, நம் கான்டாக்ட் லிஸ்டைப் பார்த்தாலோ நம் பிரைவசி பாதிக்கப்பட்டதாக நாம் புகார் கொடுக்கலாம்! அந்த நபரோடு சண்டை போட்டு உறவையே முறித்துக்கொள்ளலாம்!

இந்த பிரைவசி பிராப்ளம் இன்று பல நாடுகளுக்கிடையே பனிப்போரையும் தொடங்கி வைத்துவிட்டது. தன் நாட்டு விவரங்களை அமெரிக்கா உளவு பார்க்கிறது என்று உணர்ந்த ஜெர்மனி கம்ப்யூட்டரை விடுத்து டைப்ரைட்டர் பயன்படுத்த அனைவரையும் ஊக்குவிக்கிறது. இந்த மாதிரி பிரச்சனை வரும் என்று முன்கூட்டியே நினைத்த சீனா தனக்கென்று ஒரு இரும்புக்கோட்டையைக் கட்டி தனி கூகுள், தனி யூடியூப் என்று எல்லாமே தனியாக வைத்துக் கொண்டது. கடந்த வாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக நம் இந்திய அரசும் வழக்கு தொடர்ந்திருப்பது நினைவுகூறத் தக்கது.

கொஞ்ச வருடங்களுக்கு முன்பாக, ஜூனியர் விகடன் இதழில் 'அந்துமணி பதில்கள்' என்று ஒரு பக்கம் வந்து கொண்டிருந்தது. இன்னும் வருகிறது என்றே நினைக்கிறேன். 'அந்துமணி பதில்களுக்கு' முன்னால் உள்ள பக்கமோ, அடுத்த பக்கமோ ஒவ்வொரு வாரமும் வரும் மற்றொரு பகுதி 'அன்புடன் அந்தரங்கம்!'

'ஏபிசி வாசகி!' 'பெயர் வெளியிட விரும்பாத வாசகி!' 'உங்கள் தோழி!' என்ற பெயரில் யாராவது கேட்ட கேள்விக்கு ஒரு பெண் மருத்துவர் மற்றும் உளவியல் நிபுணர் பதில் சொல்வார். கேள்விகள் எல்லாம் உடலியலை மையப்படுத்தியதாகவும், உறவுகளில் எழும் சந்தேகம், பயம், கண்டுகொள்ளாத்தன்மை,
ஏமாற்றம், வெறுப்பு போன்றவை பற்றியதாகவும் இருக்கும். மருத்துவரும் மிகவும் சாமர்த்தியமாக பதில் சொல்வார். பதிலைப் படித்த பல நேரங்களில் நமக்கு என்னதான் அவர் சொல்கிறார் என்றும் புரியாது.

இன்னும் கொஞ்ச நாட்களில் 'அன்புடன் அந்தரங்கம்' பகுதிக்கு எப்படிப்பட்ட கேள்வி வரும் தெரியுமா?

இன்று என் கணவர் என்னுடைய மொபைலை எடுத்து அதில் இருக்கும் எல்லா எஸ்எம்எஸ்களையும் வாசித்து விட்டார். என் மேல் சந்தேகம் கொள்கின்றார். இதை அனுப்பியது யார்? அதை அனுப்பியது யார்? என்று கேட்கின்றார். எனக்கென்று பிரைவசி இல்லையா? நான் அவர் மொபைலைத் தொடுவதில்லையே! எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?

அன்புடன்,

எஸ்எம்எஸ் வாசகி

இதற்கு டாக்டரின் பதில் என்னவாக இருக்கும்?

அன்புடன் அந்தரங்கம்!


Wednesday, July 30, 2014

இது எதுக்குங்க எனக்கு?

இன்று நாம் சந்திக்கும் கதைமாந்தர்(கள்) யோபுவின் பிள்ளைகள். நூலின் தொடக்கத்திலேயே இவர்களைப் பற்றிய குறிப்பு இருக்கின்றது: 'யோபுவுக்கு ஏழு புதல்வரும் மூன்று புதல்வியரும் பிறந்தனர்' (யோபு 1:2). 'ஏழு' மற்றும் 'மூன்று' எனும் எண்கள் நிறைவைக் குறிப்பன. எதுவும் குறைவின்றி யோபு இருந்தார் என்று குறிப்பால் உணர்த்தவே இந்த எண்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

முதல் அதிகாரத்தில் வரும் இந்த 10 பேரும் அதே அதிகாரத்தில் அடுத்த 13 வசனங்களில் இறந்து போகின்றனர். 'எல்லாம் இருந்தது' என்ற நிலையிலிருந்து 'ஒன்றும் இல்லை' என்ற நிலைக்குப் போய்விடுகின்றார் யோபு.

19ம் அதிகாரம் 18ல் 'குழந்தைகள் என்னைக் கேலி செய்கின்றனர்' என்று சொல்லப்படுகின்றது. இங்கே குறிப்பிடப்படும் 'குழந்தைகள்' யோபுவின் குழந்தைகளா? அல்லது அவரின் பக்கத்து வீட்டுக் குழந்தைகளா? யோபுவின் குழந்தைகள் என்றால் அவரின் அனைத்துப் புதல்வர்களையும் அவர் இழக்கவில்லையா?

அதிகாரம் 42:13ல் 'அவருக்கு ஏழு புதல்வர்களும் மூன்று புதல்வியரும் பிறந்தனர்' என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். இந்த ஏழும், மூன்றும் ஏற்கனவே உள்ள புதல்வர், புதல்வியரா? அல்லது புதிதாகப் பிறந்த குழந்தைகளா? புதல்வர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால் யோபின் புதல்வியர் 'எமிமா', 'கெட்டிசியா' 'கெரேன் அப்பூக்கு' எனக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், யோபின் புதல்வியரைப் போல அழகுவாய்ந்த நங்கையர் நாடெங்கும் இருந்ததில்லை என்ற குறிப்பும் நூலில் உள்ளது.

யோபின் புதல்வரும், புதல்வியரும் சேர்ந்து விருந்துண்கிறார்கள். இது தவிர வேறு ஒன்றும் அவர்கள் செய்வதாகச் சொல்லப்படவில்லை. மேலும் 'விருந்துண்ணும்போது இவர்கள் ஒருவேளை கடவுளைப் பழித்துரைக்கலாம்' என யோபு பலி செலுத்துவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதிகம் மகிழ்பவர்களாகவும், அந்த மகிழ்வில் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாதவர்களாவும், தன் தந்தையின் சொத்தை அனுபவிப்பவர்களாகவும் மட்டுமே இவர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தக் கதை மாந்தர்(கள்) நமக்குச் சொல்வது என்ன?

யோபு தான் பெற்றதை கடவுளின் கொடையாகக் கருதியது போல, இவர்கள் தங்கள் சொத்து அனைத்தையும் தன் தந்தையின் கொடையாகக் கருதுகின்றனர். நமக்குத் தரப்படும் கொடைகளைப் பெற்றுக்கொள்ளவும் ஒரு தாராள மனம் வேண்டும். 'ஐயோ! இது எதுக்குங்க எனக்கு!' என்று நாம் சொல்கின்றோம். அடுத்தவர்கள் நமக்குக் கொடைகள் கொடுக்கும்போது கைகளை விரித்து ஏற்றுக்கொள்ளும் போது நாம் அவருடைய உரிமைச்சொத்தின், அவருடைய மகிழ்வின், அவருடைய அன்பின் பங்காளிகளாக மாறுகின்றோம்.

'இது என் உடல்! இது என் இரத்தம்!' என்று இயேசு தன் சீடர்களிடம் அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, 'ஐயோ! இது எதுக்குங்க எங்களுக்கு! நாங்கள் சாப்பிட்டு வந்துட்டோமே!' என்று சீடர்கள் சொல்லியிருந்தால், இயேசுவின் கொடையே நமக்குக் கிடைக்காமல் போயிருந்திருக்கும்.

எல்லாம் நம்மிடம் இருக்கத்தான் செய்கின்றது. நம்மால் தனியாக நிற்க முடியும் தான். ஆனால் நமது நீட்சியாக இருக்கும் நம் அன்பிற்குரியவர்கள் தங்கள் நேரத்தையும், ஆற்றலையும், அறிவையும், பொருளையும் நம்மோடு பகிரும்போது புன்னகையோடு ஏற்றுக்கொள்ளும் வரம் கேட்கலாமே இறைவனிடம்!


பேய் இருக்கா! இல்லையா?

கடவுள், இறைவன், தெய்வம், ஆண்டவர் நன்மை என்று 'நல்லவரை' குறிக்கும் வார்த்தைகள் தமிழில் இருப்பது போல, அலகை, பேய், சாத்தான், தீமை என்று 'தீயவரைக்' குறிக்கும் வார்த்தைகளும் இருக்கின்றன.

அலகை என்றால் யார்? அல்லது என்ன? என்று நம்ம ஊர் சின்னஞ் சிறுசுகளிடம் கேட்டால் கண்டிப்பாக அர்த்தம் தெரியாமல் விழிப்பார்கள். 'பேய்' என்றால் எல்லாருக்கும் தெரியும். 'சாத்தான்' என்ற வார்த்தை உடனடியாக மோடி மஸ்தானை நினைவுபடுத்துகிறது. பழைய விவிலிய மொழிபெயர்ப்பில் 'சாத்தான்' என்று இருக்க, புதிய மொழிபெயர்ப்பில் 'அலகை' என்று இருக்கிறது. அர்த்தம் எளிதில் விளங்காத வார்த்தையை ஏன் வைத்திருக்கிறார்கள் என்ற தெரியவில்லை. யோபு நூலில் வரும் எபிரேயச் சொல்லை இருப்பது போல மொழிபெயர்த்தால் 'சோதிப்பவன்' என்று பொருள் தருகிறது. 'சோதிப்பவன்' என்றாலே அலகை என்று நினைத்து விடுகிறோம். ஆனால் 'கடவுள் சோதிக்கிறார்' என்ற சொல்லாடலும் நமக்குப் பரிச்சயமானதே.

'நன்மை - தீமை', 'கடவுள் - பேய்' என்று இருதுருவங்களாகப் பிரித்துப் பார்க்கும் சிந்தனை கிரேக்க மூளையிடமிருந்து வருகிறது. இந்தக் கிரேக்க சிந்தனையைத்தான் அகுஸ்தினார் அவர்கள் மிகவும் சீரியஸாக எடுத்து கிறித்தவ சிந்தனைக்குள் நுழைத்தார். மத்திய கிழக்கு சிந்தனையில், அதாவது எபிரேய, அக்காடிய, உகாரித்து சிந்தனையில் பிளவுகள் இல்லை. இவர்கள் அனைத்தையும் ஒன்றாகவே பார்த்தனர். இவர்களின் சிந்தனையைப் பொறுத்த வரையில் சாத்தான் என்பவரும் ஒரு கடவுள். குட்டிக் கடவுள் என வைத்துக் கொள்ளலாம். கடவுளர்களை எதிர்த்து வைத்துப் பார்ப்பதை விடுத்து அடுக்கி வைத்துப் பார்த்தனர். எல்லாருக்கும் மேலே ஏல், பின் பாகால், பின் அசரா, பின் மோர்யா, பின் மோத் என அடுக்கினர். இவற்றில் ஏல் என்பவர் நன்மையின் உருவானவர். மோத் (இறப்பு) என்பவர் எல்லாருக்கும் தாழ்வானவர். அவர் தாழ்வானவராய் இருக்கக் காரணம் அவரது உறைவிடம் பாதாளத்தில் இருக்கின்றது. அவர் இருக்கும் இடத்தில் இருளும், குளிரும் மட்டுமே இருக்கின்றது. இறந்த ஒருவரை நாம் ஏன் குழி தோண்டி அடக்கம் செய்கிறோம்? நாம் வெட்டும் குழி இறந்தவர் பாதாளத்திற்குச் செல்லும் ஒரு கதவு. அந்தக் கதவு வழியே அவரை கீழே அனுப்பிவிட்டு நாம் கதவை மூடிவிடுகிறோம். இவர்களின் இந்த 'பாதாளம்' சிந்தனைதான் இன்று வரை நம்மால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு ஆயிரம் வருடங்கள் ஆனாலும் மனிதர்களுக்கென்று ஒருசில பொதுவானவைகள் இருக்கத்தானே செய்கின்றன.

யோபுவின் நூலில் வரும் அலகையும் கடவுளுக்கு எதிரானவர் அல்ல. அவர் ஒரு குட்டிக் கடவுள். அவரும் விண்ணக அவையில் பங்கேற்கின்றார். அவர் எதிரி என்றால் எப்படி அவரை அரசவையில் அனுமதிப்பார்கள்? கடவுளின் அரசவை கூடும் ஒரு நாளில் அலகையும், கடவுளும் பேசிக் கொள்வதாகத் தொடங்குகிறது யோபு நூல்.

யோபுவைப் பற்றிய சிறிய முகவுரையை அளித்துவிட்டு ஆசிரியர் நம்மை விண்ணக அரசவைக்கு அழைத்துச் செல்கின்றார். கடவுளின் சபையில் கடவுளும், குட்டிக் கடவுள்களும் கூடியிருக்கின்றனர். அந்தக் கூட்டத்தில் சாத்தானும் இருக்கின்றார். கடவுள் தான் இந்த நூலில் முதலும், கடைசியுமாகப் பேசுகின்றார்.

கடவுள்: 'எங்கிருந்து வருகிறாய்?'
அலகை: 'சும்மா ஊரையும் உலகையும் சுற்றிப்பார்த்துவிட்டு வந்தேன்!'
கடவுள்: 'என் நண்பன் யோபுவைப் பார்த்தாயா? அவனைப் போல கடவுள் பக்தி உள்ளவர்கள் யாராவது உண்டா? அவன் என் கட்டளைகளை எவ்வளவு நேர்த்தியாகக் கடைப்பிடிக்கிறான் பார்த்தாயா?'
அலகை: 'ஆமா! சும்மா யாராவது உங்க கட்டளையை கடைப்பிடிப்பாங்களா? நீங்க அவன நல்லா வச்சிருக்கீங்க. அதனால அவன் உங்க பின்னாலயே வர்றான். அவனது விவசாயம், குடும்பம், கால்நடை எல்லாத்தையும் நீங்க பத்திரமா பார்த்துக்கிடுறீங்க! அதனால அவனும் உங்களைச் சுத்தி சுத்தி வர்றான். உங்க கையை கொஞ்சம் அவன் மேல ஓங்குங்க! அப்புறம் தெரியும் அவன் உங்களைப் புகழ்கிறானா அல்லது இகழ்கிறானா என்று!
கடவுள்: 'என்னப்பா இது புது கதையா இருக்கு! சரி! உன் கையில எல்லாவற்றையும் கொடுக்கிறேன். உன் கைய அவன் மேல ஓங்கு! ஆனா அவன மட்டும் ஒன்னும் செஞ்சிடாத!'

முதல் உரையாடலின் தொடர்ச்சியாக ஒரு கதை நடை. யோபுவுக்கு என்ன ஆயிற்று என்று நமக்கு ஆசிரியர் சொல்கின்றார்.
கொஞ்ச நாட்கள் கழித்து மறுபடியும் அரசவை கூடுகிறது. கடவுளுக்கும், அலகைக்கும் உரையாடல் தொடர்கிறது.

கடவுள்: 'எங்கிருந்து வருகிறாய்?'
அலகை: 'சும்மா! ஊரையும் உலகையும் சுத்திப்பார்த்துட்டு வர்றேன்!'
கடவுள்: 'என் நண்பன் யோபுவைப் பார்த்தாயா? அவனது உடைமைகள், விவசாயம், குடும்பம் என எல்லாவற்றையும் நீ அழித்தாலும் அவன் இன்னும் நேர்மையாளனாய் இருக்கிறான் பார்த்தாயா?'
அலகை: 'அவன் உடம்பு நல்லா இருக்கு! அதான் கவலையில்லாம இருக்கிறான்.'
கடவுள்: 'என்னப்பா சொல்ற! சரி அவன் உடம்புலயும் நீ கைய வை! ஆனா உயிரை மட்டும் விட்டு வை!'

மறுபடியும் கதையாடல் தொடர்கிறது.

நூலின் தொடக்கத்தில் வரும் அலகை இறுதியில் வருவதில்லை. தொடக்கத்தில் கூடும் கடவுளின் அரசவை பற்றி இறுதியில் ஒன்றுமில்லை. அலகையின் வருகை தான் யோபு நூல் இயங்குவதற்குக் காரணமாக இருக்கின்றது. ஆசிரியரின் ஒரு கற்பனைப் படைப்பே அலகை என்று சொல்லலாம்.
அலகை என்பவர் இருக்கிறாரா?

சந்திரமுகி ஸ்டைல்ல சொல்லணும்னா, 'பேய் இருக்கா! இல்லையா? பேய் இருப்பதை எப்படித் தெரிஞ்சுக்கலாம்?'

'பேய்' என்பது 'கடவுளின் குறைவுத் தன்மை' எனச் சொல்வேன். அதாவது பேய் என்பதை '0' என வைத்துக்கொள்வோம். கடவுளை '10' என வைத்துக்கொள்வோம். இந்த எண்களை அப்படியே ஒரு கிராஃப் ஷீட்டில் எழுதுவோம். '0' விலிருந்து '10' ஐ நோக்கி ஒரு அம்புக்குறி போடுவோம். எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் இருந்தால் நாம் கடவுள். ஒன்றுமே இல்லையென்றால் நாம் அலகை. நமக்கு நம்பிக்கை தருவது அனைத்தும் நமக்குக் கடவுள். நமக்கு பயம் தருவது அனைத்தும் நம் அலகை.
'பேய்' என்பது கடவுளின் 'இல்லாத் தன்மை'. 'கடவுள்' என்பது 'பேயின் இல்லாத் தன்மை'.

இந்த 'அலகை' என்னும் கதைமாந்தர் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

அ. கடவுளின் பிரசன்னத்தில் அலகைக்கும் இடமுண்டு. கடவுளின் பெருந்தன்மையை இது காட்டுகிறது. இந்த பரந்த மனப்பான்மை நமக்க வந்தால் நம் குற்றவுணர்வு மறைந்து விடும். பல நேரங்களில் நமக்குக் கவலையும், கலக்கமும் தருவது நம் கூடவே வரும் குற்றவுணர்வு. ஆயிரம் நல்ல காரியங்கள் செய்திருப்போம். ஆனால் நாம் செய்த ஒரே ஒரு கெட்ட செயல் நமக்கு அதிகக் கலக்கத்தைத் தருகிறது. 'ஐயோ! கடவுள் தண்டிப்பார்!' என நாம் புலம்பத் தொடங்க விடுகிறோம். அதற்கு மாறாக, 'ஆம்! நான் தவறு செய்துவிட்டேன்! ஏற்றுக்கொள்கிறேன்! ஆனால் அந்தத் தவறுதான் நான் எனச் சொல்லிவிட முடியுமா? என்னிடம் நல்ல குணங்களும் இருக்கின்றவே! அதில் இன்னும் நான் அதிகம் வளர்வேனே! என்னிடம் நன்மையும் இருக்கு, தீமையும் இருக்கு! என்று ஏற்றுக்கொண்டால் நம் உள்ளமும் கடவுளின் அரசவையாக மாறும்.

ஆ. 'கடவுளை நாம் வழிபடுவது எதற்காக?' மனிதர்கள் தங்களிடமுள்ள ஒட்டு மொத்த நல்ல குணங்களையும் ஒன்றாகத் திரட்டி அதற்குக் கடவுள் என பெயர் வைத்து விட்டர்கள் எனவும் ஒவ்வொறு முறை கடவுளை வழிபடும் போது அவர்கள் தங்களையே வழிபடுகிறார்கள் எனவும் சொல்கிறார் சமூகவியல் ஆராய்ச்சியாளர் எலியாட். மக்கள் கடவுளை வழிபடுவது சுயநலத்திற்காக எனவும், 'கடவுளைக் கடவுளாக மட்டும் வழிபடுவதற்கு கடவுள் ஒன்றும் மேன்மையானவர் அல்லர்' என்று மக்களையும், கடவுளையும் ஒருசேரக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார் அலகை. இன்று நாம் கடவுளை எதற்காக வழிபடுகிறோம்? கடவுள் என்ற ஒரு கதைமாந்தர் நம் வாழ்வில் இல்லையென்றால் நாம் எப்படி இருப்போம்?

இ. அலகை கடவுளின் சொல்லைக் கேட்பவராகவும், கடவுளின் கட்டளைகளை நிறைவேற்றுபவராகவும் சித்தரிக்கப்படுகிறார். நாம் பல நேரங்களில், 'நான் கடவுளின் கட்டளைகளையும், திருச்சபையின் கட்டளைகளையும் நன்றாகத் தானே கடைப்பிடிக்கிறேன்!' என்று பெருமை கொள்கிறோம். நாம் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான்: 'பேய்களும் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கத்தான் செய்கின்றன! ஆனால் அவைகளின் குணம் மாறுவதில்லை!' நம்மிடம் உள்ள குணம் என்ன?

நொடிப்பொழுதில் மின்னி மறையும் அலகையும் ஒரு வாழ்வியல் எதார்த்தம்! அவன் நம்மிடம் கொஞ்ச நேரம் இருக்க வேண்டுமா? அல்லது நம்மோடு கட்டில் போட்டு தூங்க வேண்டுமா? என்பது நம் கையில் தான் இருக்கின்றது.


Tuesday, July 29, 2014

நம் தழுவலும், நூலின் நழுவலும்!

எல்லா மனிதர்களையும் ஒரே போல நாம் பார்ப்பதில்லை. ஒவ்வொரு மனிதரையும் நாம் ஒவ்வொரு விதமாக அணுகுகிறோம். எல்லாரையும் ஒரே அளவுகோலால் அளக்க முடியாது.

இந்த விதி எல்லாப் புத்தகங்களுக்கும் பொருந்தும். நாம் 'ஆனந்த விகடன்' படிப்பதற்கும், நம் இனியவளின் 'கடிதம்' வாசிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. இரண்டிலும் எழுத்துக்கள்தாம் இருக்கின்றன. நாம் விவிலியம் வாசிப்பதற்கும், ஹிட்லரின் 'எனது போராட்டம்' வாசிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

விவிலியத்தை வாசிக்கும் போதும் எல்லா நூலையும் ஒரே மாதிரி வாசிக்க முடியாது. ஒவ்வொரு நூலின் நடையும் வௌ;வேறாக இருப்பதால் ஒவ்வொன்றையும் நாம் அதன் நடைக்கேற்றாற் போலவே வாசிக்க வேண்டும்.

திருப்பாடல்களை நாம் செபமாக வாசிக்கின்றோம். நீதித்தலைவர்கள் நூலை ஒரு வரலாற்று நூல் போல வாசிக்கின்றோம். நீதிமொழிகள் நூலை ஒரு அறநூலாக வாசிக்கின்றோம். நற்செய்தி நூல்கள் வாசிக்கும் போது நம்மையறியாமலேயே இயேசு என்ற வரலாற்று நாயகன் நம்மோடு நடப்பது போல இருக்கிறது. திருவெளிப்பாடு வாசிக்கும் போது ஒரு பயம் நம்மை பற்றிக்கொள்கிறது.

ஒவ்வொரு நூல் நம்மேல் ஏற்படுத்தும் தாக்கமும் வௌ;வேறாக இருக்கிறது.

யோபு நூலை எப்படி வாசிப்பது?

தமிழ் எழுத்து நடையை உரைநடை, செய்யுள் என இரண்டாகப் பிரிக்கிறோம். இந்த நடை எபிரேய இலக்கியத்திற்கும் பொருந்தும்.

யோபு என்ற நூலை வெறும் எபிரேய இலக்கியம் என்று எடுத்து வாசித்தால் நமக்குத் தெரிவது இந்த இரண்டு தான்: உரைநடை, செய்யுள்.

யோபு நூலின் மூன்றில் இரண்டு பங்கு செய்யுள் அமைப்பிலும், ஒரு பங்கு உரைநடை அமைப்பிலும் உள்ளது. யோபுவின் செய்யுள் பகுதி எபிரேய இலக்கியத்தின் மிகவும் கடினமான பகுதி. ஏனெனில், இந்நூலில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் வேறு இலக்கியங்களிலும், வேறு விவிலிய நூல்களிலும் இல்லை. இந்நூலின் ஆசிரியர் நிறைய புதிய வார்த்தைகளை உருவாக்கியிருக்கின்றார்.
மற்றொரு கோணத்தில் பார்த்தால், யோபு நூலை வாசிக்கும் போது இரண்டு பேரின் குரல்கள் நமக்குக் கேட்கின்றன:

முதலாமவர், கதை சொல்பவர். அதாவது, ஒரு ஊரில் யோபு என்ற ஒருவர் இருந்தார். அவருக்கு நிறைய பிள்ளைகள் இருந்தார்கள். ஒரு நாள் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்...எனத் தொடரும் ஒரு நடைதான் கதை சொல்பவரின் நடை.

மற்றவர், உரையாடுபவர். யோபு நூல் முழுவதும் பலர் ஒருவர் மற்றவரோடு பேசும் உரையாடல் நிறைந்திருக்கின்றது. கடவுள் - அலகை, யோபு - மனைவி, யோபு - எலிப்பாசு, யோபு - பில்தாது, யோபு - சோப்பார், யோபு - எலிகு, யோபு - கடவுள் என ஏழு பெரிய உரையாடல்கள் இப்பகுதியில் உள்ளன.

நம் நோக்கம் யோபு நூலின் கதைமாந்தர்களைப் படிப்பது தான். இந்நூலில் வரும் கதைமாந்தர்கள் வாழும் மாந்தர்களாகிய நம்மைப் பிரதிபலிக்கிறார்கள். கடவுள், அலகை, யோபு, மனைவி, பிள்ளைகள், எலிப்பாசு, பில்தாது, சோப்பார், எலிகு என ஒன்பது நபர்களை நாம் இந்நூலில் சந்திக்கின்றோம்.
அ. இந்த ஒன்பது கதைமாந்தர்களும் 'கதையாடலிலும்', 'உரையாடல்களிலும்' எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள்?
ஆ. இவர்கள் இன்று நம் உள்ளத்தின் கேள்விக்கு பதிலாக இருக்கிறார்களா அல்லது நாம் கொண்டிருக்கும் பதில்களை கேள்விக்கு உட்படுத்துகிறார்களா?
இ. இந்த நூலின் கதாபாத்திரங்கள் நம் உள்ளத்தில் எழுப்பும் தாக்கங்கள் எவை?

நாம் என்ன முயற்சிகள் எடுத்து நூலைத் தழுவினாலும், அது நம்மை விட்டு நழுவிப் போய்க் கொண்டேதான் இருக்கும்!

தழுவலும், நழுவலும் தானே வாழ்க்கை!
(சும்மா சின்ன ரைமிங். ரொம்ப யோசிக்காதீங்க!)


நூலின் பக்கங்களின் பக்கம்

யோபு நூலில் மொத்தம் 42 அதிகாரங்கள் உள்ளன. இந்த நூலை நாம் எப்படிப் பிரிக்கலாம்?

அ. இன்பம் துன்பமாகிறது. (1-3)
ஆ. துன்பம் ஏன்? கேள்வியும் பதிலும். (4-37)
இ. துன்பம் இன்பமாகிறது. (38-42)

அ. இன்பம் துன்பமாகிறது (1-3)
க. யோபுவின் செல்வம் (1:1-5)
ங. யோபுவுக்கு நேர்ந்த இழப்பு (1:6-2:13)
ச. யோபுவின் குழப்பம் (3)

ஆ. துன்பம் ஏன்? கேள்வியும் பதிலும் (4-37)
க. முதல் சுற்று உரையாடல் (4-14)

  • எலிப்பாசு (4-5), யோபுவின் பதில் (6-7)
  • பில்தாது (8), யோபுவின் பதில் (9-10)
  • சோப்பார் (11), யோபுவின் பதில் (12-14)

ங. இரண்டாம் சுற்று உரையாடல் (15-21)

  • எலிப்பாசு (15), யோபுவின் பதில் (16-17)
  • பில்தாது (18), யோபுவின் பதில் (19)
  • சோப்பார் (20), யோபுவின் பதில் (21)

ச. மூன்றாம் சுற்று உரையாடல் (22-31)

  • எலிப்பாசு (22), யோபுவின் பதில் (23-24)
  • பில்தாது (25), யோபுவின் பதில் (26-31)

ஞ. இளவல் எலிகுவின் உரை (32-37)

  • யோபுவின் நண்பர்களின் தவறு (32)
  • யோபுவின் தவறு (33)
  • கடவுளின் நீதியும், நன்மைத்தனமும், மேன்மையும் (34-37)


இ. துன்பம் இன்பமாகிறது (38-42)
க. கடவுள்-யோபு உரையாடல் (38-42:6)
ங. யோபு அனைத்தையும் திரும்பப் பெறல் (42:7-17)

யோபு நூலின் அமைப்பு ஒரு சான்ட்விச் போன்றது. மேலும் கீழும் பிரட், இடையில் காய்கறி என்பது போல, மேலும் கீழும் யோபுவின் மேன்மை, இடையில் துன்பம் குறித்த நீண்ட உரையாடல். இந்த நூல் அமைப்பே நம் வாழ்வின் எதார்த்தத்தை பிரதிபலிப்பதாக இருக்கின்றது. வாழ்க்கை ஒரு சக்கரம். இன்று கீழே இருப்பது மேலே வரும். இன்று மேலே இருப்பது நாளை கீழே போகும். அனைத்தையும் ஒன்றாகுப் பார்க்கும் மனப்பக்குவமே ஞானம்.

கவிஞர் கண்ணதாசன் அழகாகச் சொல்வார்:

'கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்.
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்.
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா.
இதை உணர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா.'


Saturday, July 26, 2014

யோபு நூலின் நோக்கம் என்ன?

'நல்லவர்கள் ஏன் துன்புற வேண்டும்?' அல்லது 'நீதிமான்களுக்கு ஏன் கடவுள் துன்பத்தை அனுமதிக்க வேண்டும்?' என்பதே யோபு நூலின் பதில் என்று பலர் சொல்லியிருப்பர். ஆனால் இந்தக் கேள்விகளுக்கான பதில் யோபு நூலில் இல்லை. யோபுவுக்குத் தோன்றும் கடவுள் இந்தக் கேள்விகளுக்கான பதிலைச் சொல்லவில்லை. நல்லவர்கள் ஏன் துன்புற வேண்டும் என்பதற்குப் பதில், 'எப்படித் துன்புற வேண்டும்?' என்ற கேள்விக்குப் பதிலாகத் தான் இந்த நூல் அமைந்திருக்கின்றது.

அ. யோபு நூல் கடவுளின் மேன்மையையும், அவரின் நிறைவையும் நம் கண்முன் கொண்டு வருகின்றது. 'ஆண்டவரை நான் எந்நாளும் அழைப்பேன். அவர் ஒருவரே என்றென்றும் புகழ்ச்சிக்குரியவர்' (திபா 18:3) என்ற திருப்பாடலின் வசனம் யோபு நூல் முழுவதும் எதிரொலிக்கிறது.

ஆ. துன்பம் அல்லது வலி. இந்த நூல் முழுவதும் நிழலாடும் ஒரு வார்த்தை இது. மனிதன் துன்புறுவது மட்டுமல்லாமல், 'ஏன் எனக்குத் துன்பம்?' என்று கேட்கவும் முடியும். இதுதான் நம் வரம். இதுதான் நம் சாபம். நம் துன்பத்திற்கான காரணத்தை நம்மால் பல நேரங்களில் கண்டுபிடிக்கவே முடிவதில்லை. மேலும் துன்பம் என்பது நம் பாவத்தின் விளைவு அல்ல. யோபுவின் நண்பர்கள் யோபுவின் பாவத்தால் தான் அவருக்குத் துன்பம் வந்தது என்கின்றனர். ஆனால் வாசகருக்குத் தெரியும் யோபு நீதிமான் என்று.

இ. பொறுமையின் புகைப்படமே இந்த நூல். எவ்வளவு தன்பம் வந்தாலும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்கின்ற ஒரு பொறுமைசாலியை நாம் இந்த நூலில் சந்திக்கின்றோம்.

ஈ. இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் தன் வாழ்வில் ஏதோ ஒரு நிலையில் தானும் யோபுவைப் போல இருப்பதாக, தன் பிரதிபலிப்பைப் பார்க்கின்றார்.


இன்னும் இருக்கிறார்!

யோபு நூலை எழுதியது யார்? எப்போது? யாருக்கும் தெரியாது. யூதர்கள் காலங்காலமாக இதை மோசேயே எழுதியதாகக் கூறுகின்றனர். மற்றும் சிலர் யோபு, எலிகூ, சாலமோன், எசாயா, எசேக்கியா அல்லது பாருக்கு என்று யாராவது எழுதியிருக்கலாம் என்கின்றனர். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்: 'நாம் செய்யும் பாவத்தால் மட்டுமே நமக்குத் துன்பம் வரும்' என்று எல்லாரும் நம்பியிருந்த நேரத்தில், இந்த நம்பிக்கை தவறு என்று நினைத்த ஒருவர் தான் இந்த நூலை எழுதியிருக்க வேண்டும். இந்த நூல் அந்தக் காலத்தவரின் சிந்தனை ஓட்டத்தைப் புரட்டிப் போடுகிறது.

யார் எழுதியது என்று தெரியாததால், எப்போது எழுதப்பட்டதும் என்றும் நமக்குத் தெரியவில்லை. சிலர் கி.மு. 1500 எனவும், சிலர் கி.மு. 900 எனவும் மற்றும் சிலர் கி.மு. 600க்குப் பின்னும் எனவும் கருதுகின்றனர்.

ஆசிரியர் யார் என்றும் தெரியவில்லை, எப்போது எழுதப்பட்டது என்றும் தெரியவில்லை. அப்படியிருக்க இந்த நூல் எப்படி 'இறைவனால் தூண்டப்பட்டது' என்று சொல்ல முடியும்? அல்லது எப்படி விவிலியத்திற்குள் இது நுழைந்தது? தூய பவுலடியார் தனது திருமடல்களில் யோபு நூலைப் பற்றிக் குறிப்பிடுவது இதை நம் விவிலியத்திற்குள் நுழைய அனுமதித்து விட்டது (காண். 1 கொரி 3:19 - யோபு 5:13. உரோ 11:35 - யோபு 41:11).

யோபு நூலின் தொடக்கம் 1 சாமுவேல் 1:1 போலவும், லூக்கா 1:5 போலவும் இருக்கின்றது. எசேக்கியேல் இறைவாக்கினர் நோவா, தானியேல் வரிசையில் யோபுவின் பெயரையும் குறிப்பிடுகின்றார் (காண். எசே 14:14). யாக்கோபுவும் தனது திருமடலில் யோபுவை விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக முன்வைக்கின்றார் (காண். யாக் 5:11).

இந்த நூலின் நிகழ்வுகள் எந்தக் காலத்தில் நடந்திருக்க வேண்டும் என்று ஆராயும்போது, அது பிதாப்பிதாக்கள் காலம் என்று அழைக்கப்படும் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு காலத்தில் என்பது பலரின் கருத்து. நோவாவிற்கும், மோசேக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்ததாக இருக்கலாம். ஏனெனில் இந்த நூலில் குறிப்பிடப்படும் பெயர்கள் அனைத்தும் இக்காலத்திற்குரியவையே. மேலும்; நீடிய ஆயுள் என்னும் கருத்தியல் மோசேக்கு முன்தான் அதிகமாக நிலவியது (காண் யோபு 42:16 - தொநூ 11:22-26,32). ஆபிரகாமைப் போலவே யோபுவும் தன் குடும்பத்தாருக்காக பலி செலுத்துகின்றார் (காண். யோபு 1:5- தொநூ 12:7).

யோபு என்ற ஒரு நபர் வாழ்ந்தாரா? அல்லது யோபு என்பது வெறும் உருவகமா? என்பது இன்றும் நமக்கு விடை தெரியாத கேள்விகள். தானியேல், தோபித்து, யூதித்து என்ற பல புத்தகங்கள் சொல்லும் நபர்களும், நீதித்தலைவர்களில் வரும் சிம்சோனும் கூட கற்பனைக் கதாமாந்தர்கள் என்பது பலரின் கருத்து. அண்மைக்கால தொல்பொருள் ஆராய்ச்சி நடக்கும் வரை (1919) தாவீது அரசரும் கூட கற்பனை என்றே பலர் கருதினர்.

யோபு வாழ்ந்தாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நம் மண்ணின் இதிகாசங்கள் காட்டும் இராமன், இலக்குவன், சீதை, கண்ணன், தருமன், பீமன், விஜயன், நகுலன், சகாதேவன், பாஞ்சாலி என்ற கதைமாந்தர்கள் புராதணக் கதைமாந்தர்கள் என்றாலும், அவர்கள் இன்று நம் மண்ணின் மக்களோடு, கலாச்சாரத்தோடு, ஆன்மீகத்தோடு, கருத்தியலோடு ஒன்றிணைந்து விட்டார்கள்.

மனித உடலோடும், இரத்தத்தோடும் இருந்தவர்கள் நம்மீது ஏற்படுத்தாத தாக்கத்தைவிட, 'இப்படி இருந்திருக்கலாம்' என நாம் நினைப்பவர்கள் நம்மேல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

'யோபு' இருந்தார் என்று சொல்வதை விட, இன்னும் இருக்கிறார் என்று நான் சொல்வேன்!


Friday, July 25, 2014

இன்று பால் வேண்டாம்!

'நல்லது - கெட்டது' என்ற விதிமுறை தான் உயர்ந்தது எனவும், 'நல்லதைச் செய்ய வேண்டும்,' 'கெட்டதை விட வேண்டும்' எனவும் நம் மூளைக்குத் தெரிந்திருந்தாலும், அது எப்போதும் இந்த விதிமுறையின் படி நடப்பதில்லை.

தனக்கென்று மூளை ஒரு விதிமுறை வைத்திருக்கிறது. அதுதான் 'இன்பம் - துன்பம்' - அதாவது 'இன்பம்' தரும் ஒன்றைச் செய்ய வேண்டும். 'துன்பம்' தரும் ஒன்றை விலக்க வேண்டும்.

சின்ன உதாரணம். நமக்கு நிறைய கொழுப்பு கூடிடுச்சு என வைத்துக் கொள்வோம். டாக்டர் நம்மை டெய்லி வாக்கிங் போகச் சொல்றார். நாமும் ரொம்ப ஆர்வமா 'வாக்கிங்' போக முடிவெடுத்து, அதற்கான ஸ்பெஷல் டிரஸ் வாங்கி, ஆடிடாஸ் ஷூ வாங்கி, 'நாளை முதல் நான் வாக்கிங் போகிறேன்!' என ஃபேஸ்புக்கில் ஸ்டேடசும் போட்டு, அதற்கு 10 லைக்ஸ்ம் வாங்கிட்டு நைட் தூங்கப் போறோம். தூங்குறதுக்கு முன்னால அலார்ம் 5 மணிக்கு வச்சாச்சான்னு 5 முறை சரி பார்த்தும் கொள்கிறோம். காலையில் 5 மணிக்கு அலார்ம் அடிக்கிறது. எழுந்தும் விட்டோம்! ஆனால் வாக்கிங் போனோமா? என்றால் இல்லை. 'வாக்கிங் போவது' 'நல்லது', 'தொடர்ந்து சோம்பித் தூங்குவது' 'கெட்டது' என மூளைக்குத் தெரிந்தாலும், மூளை அதன்படி செயல்படுவதில்லை. 'தூங்குவது' இன்பம், 'எழுவது' துன்பம் என்ற அடிப்படையில் இயங்கி, நம்மைத் தூங்க வைப்பதுடன், அந்தத் தூக்கத்திற்கு வக்காலத்து வாங்க ஒரு காரணத்தையும் கண்டுபிடிக்கிறது.

மனித மனம் அடிப்படையில் துன்பத்தை விலக்க நினைக்கிறது. 'கேக்கை சாப்பிடுவதை விட கிரீமை முதல் சாப்பிட வேண்டும்,' 'சாப்பாட்டை விட கேசரியை முதலில் சாப்பிட வேண்டும்,' 'மாத்திரையை விட முதலில் தேன் சாப்பிட வேண்டும்', 'தேன் இல்லையென்றாலும் தண்ணீர் குடித்து கசப்பு தெரியாமல் விழுங்க வேண்டும்' என இனிமையையே எப்போதும் விரும்புகிறது.

துன்பம் என்றால் என்ன? துன்பங்கள் எத்தனை வகை? எல்லாத் துன்பமும் ஒன்றா?

துன்பத்தின் முதல் படி அசௌகரியம். காலையில் எழுவது, மாத்திரை சாப்பிடுவது, வெயிலில் நடந்து செல்வது போன்றவை எல்லாம் அசௌகரியங்கள். எல்லா அசௌகரியங்களும் ஒரே மாதிரியானவையும் அல்ல.

துன்பத்தை பலர் பல வகைகளில் பிரித்திருக்கின்றனர்.

'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்று சொல்லும் புத்தர் துன்பத்தை மூன்று வகைககளாகப் பிரிக்கிறார்:

அ. எழுவதால், இருப்பதால், மாறுவதால் வரும் துன்பம். நோய், முதுமை, நரை முடி, மூட்டு வலி, பசி, மயக்கம் என அனைத்துத் துன்பங்களும் இதில் அடங்கும்.

ஆ. மறைவதால் வரும் துன்பம். நம் அன்பிற்குரியவரின் பிரிவு, இறப்பு, போன்றவை தரும் துன்பம் இவ்வகை.

இ. 'இடம்-நேரம் நிர்ணயிக்கும்' துன்பம். இயற்கைச் சீற்றம், விபத்து, வன்முறை, பேரிடர் என மனிதர்கள் தங்கள் வலுவின்மையிலும் (human conditioning), கையாலாகாத நிலையிலும் எதிர்கொள்ளும் துன்பம்.

ஆனால் இந்த மூன்று வகைப்பாட்டிற்குள்ளும் வராத துன்பங்கள் நம் வாழ்வில் நிறையவே இருக்கின்றன:

அ. பிறந்தநாள் அன்று காலையில் புது சேலை கட்டி, தலை நிறைய மல்லிகைப் பூ வைத்து, கமகமவென்று 'புளு லேடி' அடித்து கோவிலுக்குப் போகும் போது இருக்கும் மகிழ்ச்சி, நாம் ஏற்றும் விளக்கின் ஒரு துளி எண்ணெய் பட்டதும், 'ஐயயோ! சேலை கறையாயிடுச்சே!' என்று துன்பம் நம்மைப் பற்றிக் கொள்கிறது. நம் பிறந்த நாள் மறந்து, நம் கடவுளை மறந்து, நம் காலை உணவை மறந்து, நம் மூளை சதா எண்ணெய் கறையையே நினைத்துக் கொண்டிருக்கிறது.

ஆ. துன்பம் என்பது தனிநபர் சார்ந்தது. எனக்குத் துன்பம் தரும் ஒன்று உங்களுக்கு இன்பம் தரலாம். கிரிக்கெட் விளையாடுவது எனக்கு துன்பமாகத் தெரியலாம். ஆனால் தோனிக்கும், டெண்டுல்கருக்கும் அது இன்பம். 'விமானம் ஏவுகணையில் தகர்க்கப்படுவது' எல்லாருக்கும் வருத்தம் தரும் என்று சொல்ல முடியுமா? அதைத் தகர்த்தவர்கள் சந்தோஷமாகச் சிரிக்கிறார்களே!

இ. சில நேரங்களில் நாம் இன்பம் என நினைப்பதே துன்பமாக மாறிவிடுகிறது. நல்ல உதாரணம், செல்ஃபோன். 'எங்கு போனாலும் பேசலாம்!' 'எதுவும் செய்யலாம்!' என உள்ளங்கையில் உலகம் இருப்பதாக நினைக்கும் நாம், நம்மையறியாமலேயே யாரோ நம்மை உளவு பார்ப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறோமே. ஸ்மார்ட்ஃபோன்களில் எதுவும் 'பிரைவசி' கிடையாது. ஜிபிஎஸ் வைத்து நாம் எங்கே இருக்கிறோம் எனச் சொல்லிவிடலாம். காதலிக்குச் சொல்லும் 'ஐ லவ் யூ'வில் இருந்து, 'இன்று பால் வேண்டாம்' என பால்காரருக்கு நாம் அனுப்பும் எஸ்எம்எஸ் வரை எங்கோ ஒரு டேட்டாவாக பதிவாகிக் கொண்டிருக்கின்றது.

யோபுவின் துன்பங்கள் எந்த வகை? யோபுவின் மூளை எந்த விதிமுறையின் அடிப்படையில் வேளை செய்தது?

இன்னும் சொல்வேன்...


Thursday, July 24, 2014

'முடியும்!' என்கிறது யோபு நூல்!

முதல் ஏற்பாட்டில் ஞானநூல்கள் என்று சொல்லப்படும் ஐந்து நூல்களில் திருப்பாடல்களில் பாடலாசிரியர் எழுப்பும் கேள்விகளை மையமாக வைத்து கடந்த 75 நாட்களாக நாம் சிந்தித்தோம்.

இன்று முதல் யோபு நூலும் அது நமக்குச் சொல்லும் பாடமும், இன்றைய சூழலில் அதன் இன்றியமையாமையும் என சிந்திப்போம்.

ஞானநூல்கள் எனப்படுபவை எவை?

யோபு, திருப்பாடல்கள், நீதிமொழிகள், சபை உரையாளர், இனிமைமிகு பாடல்

'நாம் எப்படி துன்புற வேண்டும்' என யோபுவும்,
'நாம் எப்படி செபிக்க வேண்டும்' என திருப்பாடல்களும்,
'நாம் எப்படி நடக்க வேண்டும்' என நீதிமொழிகளும்,
'நாம் எப்படி மகிழ வேண்டும்' என சபை உரையாளரும்,
'நாம் எப்படி அன்பு செய்ய வேண்டும்' என இனிமைமிகு பாடலும்
நமக்குச் சொல்கின்றன.

'வாழ்க்கை துன்பமயமானது!' என்றார் கௌதம புத்தர்.

இன்பம் - துன்பம், பகல் - இரவு, ஒளி - இருள், பிறப்பு - இறப்பு என இருதுருவ வாழ்க்கைக்குள் எறியப்பட்டுள்ள நமக்கு ஒன்றை எடுக்கும் போது மற்றொன்று சேர்ந்தே வருகின்றது.

'வாழ்க்கை மிகவும் கடினமானது! அல்லது துன்பமானது!' என்றவுடன் நம் பதில் பொதுவாக இரண்டு நிலைகளில் இருக்கின்றது:

அ. ஆன்மீகமயமாக்கல். துன்பத்திற்கு நாம் உடனடியாக ஒரு மெழுகு பூசி விடுகிறோம். நம் ஆண்டவர் இயேசு துன்பத்தின் வழியாக, சிலுவையின் வழியாக, இறப்பின் வழியாக மீட்பைக் கொண்டு வந்தார். ஆகையால் நாமும் துன்பம் வரும் போதும், இறப்பு வரும்போதும் துவண்டுவிடக் கூடாது. துணிந்து நிற்க வேண்டும். துன்பத்திற்குப் பின் நமக்கு இன்பமும் உயிர்ப்பும் வரும். இப்படிப்பட்ட எண்ண ஓட்டம் தான் ஆன்மீகமயமாக்கல்.

ஆ. அறநெறியாக்கல். துன்பத்தை நம் வாழ்வின் ஒரு அறநெறி பாடமாக எடுத்துக்கொள்வது இந்த நிலை. உளியின் வலி தாங்கும் கல் தான் சிற்பமாக முடியும் என்று சொல்லி எவ்வளவு வலி வந்தாலும் அது நல்லதுக்குத்தான். பொன்னை நெருப்பு தூய்மையாக்குவது போல துன்பம் நம்மைத் தூய்மையாக்குகிறது. இப்படிப்பட்ட எண்ண ஓட்டமே அறநெறியாக்கல்.

மேற்சொன்ன இரண்டு நிலைகளும் ஆபத்தானவை. இந்த இரண்டு நிலைகளிலுமே நாம் நம் துன்பத்தைப் பயன்படுத்தி அதை வேறொன்றாக மாற்றிக் கொள்ள முனைகிறோம்.

இந்த இரண்டு நிலைகளுக்கும் ஏதாவது மாற்று வழி இருக்கின்றதா?

நாம் உண்ணும் உணவு போல, குடிக்கும் தண்ணீர் போல, சுவாசிக்கும் காற்று போல, அனுபவிக்கும் சூரிய ஒளி போல, நனையும் மழை போல துன்பத்தை ஒரு வாழ்வியல் எதார்த்தமாக எடுத்துக்கொள்ள முடியாதா?

'முடியும்!' என்கிறது யோபு நூல்.

இன்னும் சொல்வேன் ...


Tuesday, July 22, 2014

நான் டெய்லி பிஸியாகவே இருக்கிறேன்!

விண்ணரசு பற்றிய இயேசுவின் தாலந்து உவமை நாம் பலமுறை கேட்ட ஒன்று. இந்த உவமை லூக்கா மற்றும் மத்தேயு நற்செய்திகளில் மட்டும் உள்ளது. மாற்கு நற்செய்தியாளாரின் கைக்கு எட்டாத ஒரு பாரம்பரியத்தை லூக்காவும், மத்தேயும் பெற்றதால் அவர்கள் மட்டும் இதை எழுதுகின்றனர். ஆனால் இந்த இருவரின் பதிவுகளும் பல முரண்பாடுகளைக் கொண்டுள்ளன.

மத்தேயு நற்செய்தியாளரில் வரும் வீட்டுத்தலைவன் தன் பணியாளர்களில் மூவருக்கு தலா ஐந்து, மூன்று மற்றும் ஒன்று என தாலந்துகளைக் கொடுத்து விட்டுப் பயணம் மேற்கொள்கிறான். ஐந்து பெற்றவன் மேலும் ஐந்து, மூன்று பெற்றவன் மேலும் மூன்று என ஈட்டினாலும், ஒன்று பெற்றவன் அதை நிலத்தில் புதைத்து வைக்கிறான்.

லூக்கா நற்செய்தியாளரில் அரசன் தன் பணியாளர்களுக்குச் சொத்தைப் பிரித்துக் கொடுக்கின்றார். பத்துப் பேருக்கு தலா ஒரு தாலந்து என பத்துத் தாலந்துகள் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றன. அரசுரிமை பெற வெளியூர் செல்கின்றான் தலைவன். இதற்கிடையில் 'இவன் எங்களுக்கு அரசனாக வேண்டாம்!' என ஒரு சிலர் தூது அனுப்புகின்றனர். இருந்தாலும் அரசுரிமை பெற்றுத் திரும்புகின்றான் தலைவன். அவன் திரும்பியபோது பணியாளர்களில் ஒருவன் ஒரு தாலந்தைக் கொண்டு பத்து சம்பாதித்ததாகவும், இரண்டாமவன் ஒன்றைக் கொண்டு ஐந்து சம்பாதித்ததாகவும், மூன்றாமவன் தலைவனுக்குப் பயந்து அதை கைக்குட்டையில் முடிந்து வைத்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் மற்ற ஏழு பேர் என்ன செய்தார்கள் என்பது பற்றி உவமையில் ஒன்றும் இல்லை.

மத்தேயு மற்றும் நற்செய்தியாளர்களில் பொதுவாகக் காணப்படுவை மூன்று: அ. முதல் இரண்டு பேர் நன்றாக சம்பாதிக்கின்றனர், மூன்றாமவன் சம்பாதிக்கவில்லை. ஆ. அதிகம் பெற்றவர்கள் இன்னும் அதிகம் பெறுகிறார்கள். இ. பொல்லார் தண்டிக்கப்படுகின்றனர்.

மத்தேயுவின் உவமையை நாம் சிந்தனைக்கு எடுப்போம். 'இக்கதையில் வரும் மூவரில் நாம் யார்?' என்று வெறும் கேள்வி கேட்டால் மறையுரை சப்பென்று போய்விடும். உவமையின் மௌனங்களை கொஞ்சம் ஆராய்வோம். இந்த உவமை எழுப்பும் சில கேள்விகள்:

அ. எதற்காக தலைவன் ஐந்து, மூன்று, ஒன்று என தாலந்துகளைக் கொடுக்க வேண்டும்? ஐந்து பெற்றவன் ஐந்து கொண்டு வந்தான், மூன்று பெற்றவன் மூன்று கொண்டு வந்தான். ஒன்று பெற்றவன் ஒன்று கொண்டு வந்தான். லாஜிக் சரிதானே! பின் ஏன் அவனுக்கு மட்டும் தண்டனை.

ஆ. ஒன்றை மட்டும் கொண்டுவந்தவன் அதையாவது கொண்டு வந்தானே. அவன் ஊதாரித்தனமாகச் செலவழிக்கவில்லை. அல்லது அதைத் தொலைத்துவிடவில்லை. பத்திரமாகத்தானே வைத்திருந்தான். அதற்காகவாவது அவனைப் பாராட்ட வேண்டமா?

இ. நிலத்தில் புதைத்து வைப்பது சாதாரண காரியம் அல்ல. நம் அலமாரியில் இருந்தால் கூட திறந்து பார்த்து 'ஆ! இருக்கிறது!' என்று சொல்லிக்கொள்ளலாம். நிலத்தில் புதைப்பதால் அவன் இன்னும் அதிக அலர்ட்டாக இருக்க வேண்டும். நிலத்தில் புதைத்து வைத்து அதைக் காவல் காப்பதும் பெரிய வேலைதானே!

இன்றைய நம் சிந்;தனையை மூன்றாம் நபரை மட்டும் மையமாக வைத்துப் பார்ப்போமோ?

அ. கோபம். மூன்றாம் பணியாளனுக்குத் தன் தலைவன் மேல் ஏதாவது கோபம் இருந்திருக்க வேண்டும். 'மற்றவர்களுக்கு ஐந்து, மூன்று எனக் கொடுத்துவிட்டு எனக்கு ஒன்றா கொடுக்கிறாய்!' என உள்ளத்தில் கொதித்திருக்கலாம். 'நீ என்னடா கொடுக்கிறது! நான் என்னடா உழைக்கிறது!' என்று நினைத்திருக்கலாம். சமூகத்தில் நடைபெறும் பல தீமைகளுக்குக் காரணம் கோபம்தான். திருடர்கள் திருடுவது எதற்காக? பணம் வைத்திருப்பவர்கள் மேலும், அல்லது தாங்கள் வாழும் சமூகத்தின் கட்டமைப்பின் மீதும் கோபம். தங்களின் கையாலாகாத நிலையில் அந்தக் கோபத்தைத் திருட்டாகக் காட்டுகின்றனர். ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்ட ஒருவன் காலப்போக்கில் பாலியல் பிறழ்வுகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த பெண் இனத்தின் மேல் பழிதீர்த்துக்கொள்ள நினைக்கிறான். நாம் கையாள முடியாத கோபம் எல்லாம் எதிர்வினைகளாக மாறிவிடுகின்றன. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு புற்றுநோய். என்னை விட கொஞ்சம் கூட வயது. நன்றாக மருத்துவம் பார்த்திருந்தால் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். ஆனால் அவனுக்கு கடவுளின் மேல் ஒரு கோபம்: ஏன் இது எனக்கு மட்டும் வருகிறது? என்ற சதா கேட்டுக் கொண்டிருந்தவன், புற்றுநோய் தன்னை ஏன் அழிக்க வேண்டும்? நானே அழித்துக்கொள்கிறேன் என்னை என அதிக மதுஅருந்தவும், மாத்திரைகளைப் புறக்கணிக்கவும் தொடங்கினான். விளைவு, விரைவில் இறந்துவிட்டான். நம் வாழ்வில் நாம் வாழ்வை முழுமையாக வாழத் தடையாக இருப்பது நம்மிடம் இருக்கும் கோபம். பெற்றோரிடம் கோபப்பட்டு வீட்டுக்கு வெளியே தங்கும் இளைஞர்கள், கணவன் மனைவியாக வீட்டில் தங்கியிருந்தாலும் ஒருவருக்கொருவர் வருடக்கணக்காக பேசமால் இருக்கும் நிலைகள், 'ஏதோ! குழந்தை இருக்குன்னு பார்க்கிறேன்! அல்லது எப்பவோ முறிச்சிறுப்பேன்!' என்று சண்டைபோட்டுக் கொள்ளும் தம்பதியினர், அருட்பணி நிலையிலும் தலைமையில் இருப்பவர்கள் மேல் கோபப்பட்டுக் கொண்டு, 'எனக்கு அந்த இடம் கொடுத்தால் தான் பணி செய்வேன். அல்லது தினமும் பூசை மட்டும் வைப்பேன். வேறு ஒன்றும் செய்ய மாட்டேன்!' என ஓய்ந்திருக்கும் நிலை என அனைத்திலும் நம் கதையின் மூன்றாம் கதைமாந்தர் ஒளிந்திருக்கிறார்.

ஆ. பயம். நம் மூன்றாம் பணியாளனுக்கு ஒரு பயம்: 'நம் தலைவன் தூவாத இடத்தில் சேகரிப்பவர்.  விதைக்காத இடத்தில் அறுவடை செய்பவர்'. இந்தப் பயத்தின் பிண்ணனி ஏதோ ஒரு முற்சார்பு எண்ணம். அந்த முற்சார்பு எண்ணம் பயமாகக் கனிந்து அவனின் கைகளைக் கட்டிப் போடுகின்றது. 'என்ன வேலை செஞ்சி என்ன நடக்கப் போகுது?' 'என்ன படிச்சாலும் அந்த வாத்தியார் அவனுக்குத்தான் மார்க் போடுவார்?' 'நாம எவ்வளவு மாஞ்சி மாஞ்சி வேலை பார்த்தாலும், புரோமஷன் அவன் ஜாதி ஆட்களுக்குத்தான் கிடைக்கும்!' என நாமும் முற்சார்பு எண்ணங்கள் கொண்டு, அவை நம் ஆழ்மன பயங்களாக மாறும் போது நாம் விளைச்சல் தர முடிவதில்லை.

இ. பணிப் பிறழ்வு. மூன்றாம் பணியாளனை நம் 'சோம்பேறி!' என்று அழைக்கிறோம். அவன் சோம்பேறி இல்லை. சோம்பேறியாக இருந்தால் பணம் கொடுக்கப்படும் போதே, 'ஐயா! நம்மால எல்லாம் இத வச்சு ஒன்னும் செய்ய முடியாது. அவன்கிட்டே சேர்த்துக் கொடுங்க!' என்று சொல்லியிருப்பான். செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் தன் ஆற்றலை பிறழ்வுபடுத்துவதுதான் அவனின் தவறு. நாணயத்தைப் பத்திரப்படுத்தியதில் செய்த வேலையை அவன் வட்டிக்கடைக்குச் செல்வதற்குப் பயன்படுத்தியிருக்கலாமே என்பதுதான் தலைவனின் ஆதங்கம். 'நான் டெய்லி பிஸியாகவே இருக்கிறேன்! எதையாவது செய்து கொண்டே இருக்கிறேன்!' என்று ஒருசிலர் பெருமையாகச் சொல்வார்கள். 'எதையாவது செய்து கொண்டே இருப்பது முக்கியமல்ல. எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறோமா?' என்பதுதான் முக்கியம்.


Monday, July 21, 2014

அன்பு என்பது சொல் அல்ல, செயல்!

'உன் முழு இதயத்தோடும், உன் முழு மனத்தோடும், உன் முழு ஆற்றலோடும் இறைவனை அன்பு செய்' மற்றும் 'உன்னை நீ அன்பு செய்வது போல உன் அயலாரையும் அன்பு செய்' என்ற இறையன்பு மற்றும் பிறரன்புக் கட்டளைகளைப் பற்றி வாசிக்கக் கேட்கும் போதெல்லாம் எனக்கு 'மிஸ்டர் காட்! திஸ் இஸ் அன்னா' என்ற நாவலில் வரும் இளவல் அன்னா தான் நினைவிற்கு வருகிறாள்.

அன்னாவின் வீட்டில் ஒரு ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் ஆலயத்திற்குச் சென்று திருப்பலி காண தயாராகிக் கொண்டிருப்பார்கள். அன்னா மட்டும் விளையாடிக் கொண்டிருப்பாள். 'சீக்கிரம் கிளம்பு! கோயிலுக்குப் போக வேண்டும்!' என அவள் அண்ணன் கட்டாயப்படுத்துவான். அப்போது அன்னா சொல்வாள்: 'எதற்காக வார வாரம் கோவிலுக்குப் போக வேண்டும்! எல்லா வாரமும் இறையன்பையும், பிறரன்பையும் பற்றித்தானே போதகர் சொல்கிறார். ஒரு வாரம் கேட்டால் போதாதா? மற்ற வாரங்கள் நாம் அதை செயல்முறைப்படுத்தலாமே!' - என்று சொல்லி ஆலயத்திற்குச் செல்ல மறுத்துவிட்டு தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் முதியவர் இல்லத்தில் உள்ள முதியவர்களைச் சந்திக்கச் சென்று விடுவாள்.

அதிகமாக கேட்டு அர்த்தம் இழந்த வார்த்தைகள் தாம் 'இறையன்பும்', 'பிறரன்பும்'. இது இயேசுவின் கட்டளைகள் அல்ல. இயேசு காலத்தில் வாழ்ந்த சம காலத்து யூதர்கள் இறைவனின் கட்டளைகளாகக் கருதியவையே இவை. இயேசு தன் இறுதி இராவுணவில், 'நான் உங்களுக்கு அன்பு செய்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்' என்று புதிய கட்டளை கொடுக்கின்றார்.

இறையன்பு, பிறரன்பு - இந்தச் சொற்களை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?

இறையன்பு என்றால் இறைவனை அன்பு செய்வது என்று சொல்வதற்குப் பதில், இறைவன் நம்மை அன்பு செய்தல் என்றும், பிறரன்பு என்றால் பிறரை அன்பு செய்வதற்குப் பதில், பிறர் நம்மை அன்பு செய்தல் என்றும் யோசித்துப் பார்த்தால் எப்படி இருக்கும்?

பழைய ஏற்பாட்டின் அன்புக் கட்டளை பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்ட இஸ்ரயேலிலும், பாலஸ்தீனத்திலும், அவைகளை ஒட்டிய பகுதிகளிலும் இன்று இறையன்பும் இல்லை, பிறரன்பும் இல்லை. நேற்றைய தினம் (20 சூலை 2014), ஈராக்கில் ஒரு சிலர் கட்டாயப்படுத்தப்பட்டு இசுலாம் மதத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதைக் கேட்டவுடன் கிறிஸ்தவக் கடவுளுக்கு கோபம் வந்ததோ இல்லையோ, நிறையக் கிறித்தவர்களுக்குக் கோபம் வந்தது. 'அது எப்படி?' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கிறித்தவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் மற்றவர்களை கிறித்தவர்களாக மாற்றியபோது மற்றவர்கள் அது எப்படி? என்று கேட்டிருந்தால் இவர்கள் பாடு என்னவாகியிருக்கும்?

இன்று இறைவனை நாம் அன்பு செய்யும் அளவிற்கு, இறைவன் நம்மை அன்பு செய்யவில்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கடவுள் நம்மை மீட்க வந்தார் என்று சொல்கின்றோம். ஆனால் இன்று கடவுளை மீட்பதே பெரும்பாடாக இருக்கின்றதே. 'கடவுளின் பெயரால்' ஏன் வன்முறை இருக்க வேண்டும்? நான் மறைசாட்சியாக இறப்பேன்! என்றும் ஒரு சிலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் இறந்து, இறந்தபின் கடவுள் இல்லை என்று தெரிந்தால் அவர்கள் பாடு என்னவாகும்? கடவுள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாமே! இல்லையா? இன்று நாம் எடுக்கும் வழிபாடுகள், கேட்கும் மறையுரைகள், சொல்லும் நவநாள்கள் எல்லாம் நம்மைக் காப்பாற்றவோ இல்லையோ, கடவுளைக் காப்பாற்றத்தான் அவைகளைச் சொல்கின்றோம். நல்ல உடல்நலம், நல்ல வாழ்க்கை நிலை என நமக்கு எதெல்லாம் தேவையோ அதெல்லாம் அவருக்குத் தெரியுமே. பின் ஏன் தினமும் போய் அவரிடம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்? அவர் அவர் வேலையைப் பார்க்க, நாம் நம் வேலையைப் பார்த்தால் இன்று கண்ணீர் வடிக்காமல், இரத்தம் வடிக்காமல் நாமும் இருக்கலாமே? இன்று நாம் இறைவனை அதிகமாகவே அன்பு செய்கின்றோம்.

எல்லாம் வல்ல ஒருவரை வல்லமையே இல்லாத ஒரு மனிதகுலம் அன்பு செய்வது என்பது இயலாத காரியம். சின்ன உதாரணம், நாய்க்குட்டி மனிதரை அன்பு செய்ய முடியுமா? நம் பின்னால் வேண்டுமானால் ஓடி வரும். ஆனால் நாம் 'அன்பு' என்று சொல்லும் உணர்வை அவற்றால் ஒருபோதும் உணர முடியாது. அதுபோலத்தான் இறைமைக்கும், மனிதத்திற்கும் உள்ள இடைவெளி. நாம் செய்ய வேண்டியதெல்லாம் பிறரை அன்பு செய்வது தான்.

மற்றொரு கேள்வி: நாம் படைக்கப்பட்டது பிறரை அன்பு செய்ய என்றால், பிறர் எதற்காகப் படைக்கப்பட்டார்கள்? நம்மை அன்பு செய்யத்தானே! ஆனால் அந்த அன்பை நாம் உணர்கிறோமோ? நமக்கு மற்றவர்கள் காட்டுவதெல்லாம் வெறுப்பும், கோபமும், ஏமாற்றுதலும் என்றால் நாம் ஏன் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும்?

கடவுளையும் அன்பு செய்ய முடியாது, மற்றவர்களையும் அன்பு செய்ய முடியாது என்றால் இன்றைய நற்செய்தியை எவ்வாறு புரிந்து கொள்வது?

அ. அன்பு ஒன்றே அறிவார்ந்தது. பலர் அன்புக்குக் கண்ணில்லை என்பார்கள். ஆனால் நிறைந்த அறிவோடுதான் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய முடியும். ஆகையால் தான் 'உன் முழு மனத்தோடு' என்று அன்பிற்கு அடைமொழி தருகிறது விவிலியம்.

ஆ. பிறர் என்றால் யார்? அமெரிக்காவில் இருக்கும் ஒருவரை அன்பு செய்வது எளிது. ஜப்பானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நம் கண்ணீர் வடிப்பது எளிது. ஆனால், நம் அருகில் இருப்பவர்களை அன்பு செய்யத்தான் இன்று நமக்குக் கடினமாக இருக்கிறது. நேரமில்லை. நேரமிருந்தால் விருப்பமில்லை. விருப்பம் இருந்தால் பொறுமை இல்லை. மற்றவரின் முகம் நம் முன் நின்று கேள்வி கேட்கிறது. மற்றவருக்கு நாம் பொறுப்பேற்க பயப்படுகிறோம். பிறரன்பின் முதற்படி 'பொறுப்பேற்றல்'. நம் குடும்பத்திலும், நம் சமுதாயத்திலும் ஒருவர் மற்றவருக்குப் பொறுப்பேற்றாலே அன்பு தானாய் வந்து விடும். இன்று யாரும் யாருக்கும் பொறுப்பேற்கத் தயாராக இல்லை. 'உன் வாழ்க்கை உன் கையில்' என்று சொல்லி நழுவி விடுகிறோம்.

இ. 'உன்னை அன்பு செய்வது போல!'. 'சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்' என்பார்கள். தன்னை அன்பு செய்யாத ஒருவரால் மற்றவரை அன்பு செய்ய முடியாது. நம்மிடம் இல்லாத ஒன்றை நாம் எப்படி மற்றவருக்குக் கொடுக்க முடியும்? நம்மை அன்பு செய்வது என்றால் நம்மை நாமே மதிப்பது, நம் உடலை, நம் உணர்வை, நம் இயல்பை இருப்பது போல ஏற்றுக்கொள்வது. நம்மிடமிருக்கும் எதிர்மறை உணர்வுகளைக் குறைத்து நேர்மறை உணர்வுகளில் வளர்வது.

முதல் ஏற்பாட்டுக் கட்டளைகளுக்கு மாற்றாக வந்ததே இயேசுவின் புதிய கட்டளை. அதை ஒருமுறை கேட்டால் போதும். 'அன்பு' என்பது சொல் அல்ல, செயல்!



இது யாருடைய உருவம்?

(19.10.2014 பொதுக்காலம் 29ஆம் ஞாயிறுக்கான மறையுரை. நற்செய்தி: மத்தேயு 22.15-21)

நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து உலகின் பல பகுதிகளிலும் ஒரு கருத்துப் புரட்சியை ஏற்படுத்திய புத்தகம்: 'Zealot: The Life and Times of Jesus of Nazareth'. இயேசுவின் சமகாலத்தை ஆராய்ச்சி செய்கின்ற ஆசிரியர் Reza Aslan, இயேசு 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாதாரண ஒரு போராளி எனவும், தூய பவுலடியார் தான் அவரை கிறிஸ்துவாக மாற்றி விட்டார் எனவும், 'கிறிஸ்து' என்ற ஒரு நபருக்கு நாம் அளிக்கும் மரியாதை, வழிபாடை விட இயேசு என்ற போராளிக்குத் தான் அதிக மரியாதை கொடுக்க வேண்டும் எனவும் எழுதுகின்றார். முழுக்க முழுக்க வரலாற்றுச் சுவடுகளைத் தழுவி எழுதப்பட்ட நூல். அவர் சொல்லும் கருத்துக்களுக்கு எதிர்ப்புக்கள் வராததற்குக் காரணம் அவர் வைக்கும் வரலாற்றுச் சான்றுகளே.

இயேசுவின் வாழ்வில் குறிப்பிடும் முதல் நிகழ்வாக அவர் குறிப்பிடுவது இன்றைய நற்செய்திப் பகுதியைத் தான்: 'சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள்'. பல நேரங்களில் இயேசுவின் மதிப்பீடுகளைச் சுருக்கிச் சொல்லும் போது 'இறையன்பு', 'பிறரன்பு' எனச் சொல்லுகிறோம். ஆனால் அன்பு என்ற வார்த்தையை வைத்து நாம் இயேசுவின் மதிப்பீடுகளைப் பிரிப்பது மிகவும் பரந்த ஒன்றாக இருக்கின்றது. இயேசு என்ற சாதாரண மனிதனின் கருத்தியல் மிக எளிதானது: 'சீசருக்கு உரியது சீசருக்கு. கடவுளுக்கு உரியது கடவுளுக்கு'.

இதற்கு ஒரு வரலாற்றுப் பின்புலம் இருக்கின்றது. இயேசுவின் காலத்தில் ஒருங்கிணைந்த இஸ்ரயேல் அரசு உரோமையர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. உரோமையின் அடிமைத்தளத்திலிருந்து யாராவது நம்மை விடுவிக்க மாட்டார்களா என எல்லாரும் எண்ணிக் கொண்டிருந்தனர். 'செலட்டுகள்' என்று அழைக்கப்பட்ட ஒரு குழுவினர், தீவிரவாதத்தின் வழியாகவும், வன்முறையின் வழியாகவுமே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என நினைத்தனர். இயேசுவும் அவர்களின் சிந்தனையைப் பகிர்ந்தவர் தான். 'சீசருக்கு உரியதை சீசருக்கு கொடுங்கள், கடவுளுக்கு உரியதை கடவுளுக்குக் கொடுங்கள்' என்று சொல்வதில் ஒரு கோபம் ஒளிந்திருப்பது உங்களுக்குத் தெரிகிறதா? அதாவது, சீசருக்கு உரியது உரோம். அதை விடுத்து விட்டு அவன் இங்கே என்ன செய்கிறான். இந்த மண்ணும், மக்களும் கடவுளுக்கு உரியது. அதை கடவுளுக்குக் கொடுத்துவிட்டு அவன் தன் ஊர் திரும்ப வேண்டும் என்ற தன் கருத்தை நாசுக்காகச் சொல்கின்றார் இயேசு.

இந்த வரலாற்றுப் பின்புலம் நற்செய்தி நூல்களில் கறுப்படிக்கப்பட்டுள்ளது. நற்செய்தியாளர்கள் இதை இயேசுவின் இறப்பின் பிண்ணனியில் நடக்கும் நிகழ்வாக எழுதுகின்றனர். இயேசு எருசலேமிற்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைகின்றார். அவரின் இறப்பிற்கு பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர், தலைமைக்குருக்கள் என எண்ணற்ற நபர்கள் காரணமாக இருக்கின்றனர். அவர்கள் எப்படிக் காரணமாக இருக்கின்றார்கள் என்பதற்கு காரணம் சொல்ல வேண்டுமல்லவா? நற்செய்தியாளர் இந்த அதிகாரம் முழுவதும் ஒவ்வொரு குழுவாக இயேசுவிடம் வருவதாக எழுதுகின்றார். அப்படி இன்று இயேசுவிடம் வருபவர்கள் 'ஏரோதியர்கள்'. ஏரோதியர்கள் என்பவர்கள் அந்தக் காலத்து 'ரெண்டுங்கெட்டான்கள்'. தங்களை ஒரு யூதர் தான் ஆள வேண்டும் என்று விரும்பியவர்கள். ஆகையால் தங்கள் பிரமாணிக்கத்தை ஏரோதுக்கு மட்டும் அளித்தனர். அதே நேரத்தில் உரோமை அரசுக்கு வரிகட்டுவதிலும், அவர்களுக்குக் கடை விரிப்பதிலும் மும்முரமாய் இருந்தனர். ஆகையால் தான் எந்நேரமும் சீசரின் முகம் பதித்த நாணயத்தை தூக்கிக் கொண்டு திரிகின்றனர்.

'சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?' - இதுதான் அவர்கள் இயேசுவிடம் வைக்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கு 'ஆம்' என்று சொன்னால், 'இயேசு மெசியா அல்ல!' என்று சொல்லத் தொடங்குவார்கள். 'இல்லை' என்று சொன்னால், 'உரோமைக்கு எதிரான தீவிரவாதி!' என்று பட்டம் கட்டுவர். பழிதீர்ப்பர். இப்படி எந்தப் பதில் சொன்னாலும் அவர் அகப்பட்டு விடுவார் என்று நினைத்தவர்களுக்கு, இயேசுவின் பதில் கண்டிப்பாக அவர்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

'சீசருக்கு உரியது சீசருக்கு! கடவுளுக்கு உரியது கடவுளுக்கு!' - இதை இன்று நாம் எப்படிப் புரிந்து கொள்வது?

அ. இன்று உலகின் பல பிரச்சினைகளுக்குக் காரணம், ஏன், இயேசு பிறந்த பாலஸ்தீனத்திலேயே இன்று இரத்தமும், கண்ணீரும் ஓடக் காரணம் சீசரும், கடவுளும் இணைந்திருப்பது தான். இருவரையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பி விட்டோம் நாம். 'ராம் ராஜ்யம்', 'ஜிகாத்', 'சிலுவைப் போர்' என வரலாற்றின் அனைத்து இரத்த வாடைக்கும் காரணமும் இந்தக் குழப்பம் தான். கடவுள் இல்லாமல் இருந்தால் மனுக்குலம் நன்றாக இருந்திருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. கிறித்தவர்களாகிய நாம் பல நேரங்களில் இந்திய அரசா, வத்திக்கான் அரசா என்ற குழப்பம் நிறையவே இருக்கிறது. வத்திக்கானுக்கு நாம் காட்டும் பிரமாணிக்கத்தை நம் தமிழக அரசுக்கு நாம் காட்டுவதில்லையே! 'கோவிலுக்கு வரி கட்டியாச்சா! திருவிழாவுக்கு வரி கட்டியாச்சா!' என்று மாய்ந்து, மாய்ந்து கேட்கும் பங்குத்தந்தையரும், அன்பியப் பொறுப்பாளர்களும் 'அரசுக்கு வரி கட்டியாச்சா!' என்று என்றாவது கேட்டதுண்டா? தமிழக அரசிடமும், இந்திய அரசிடமும் உரிமைகளைப் பெற விரும்பும் நாம், கடமைகளை மட்டும் வத்திக்கான் அரசுக்குக் காட்டுகிறோம். இந்த வத்திக்கானுக்கு நாம் கிறிஸ்தவர்களாய் இருந்தாலும் ஒன்றுதான், இல்லையென்றாலும் ஒன்றுதான். நாமெல்லாம் இவர்களுக்கு வெறும் 'நம்பர்' தான். நம்மால் இவர்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. அப்படியிருக்க நாம் ஏன் இயேசுவின் வார்த்தைகளை சீரியஸாக எடுக்கக் கூடாது?

ஆ. வழிபாடு என்ற வார்த்தையின் கிரேக்க மூலத்திற்கு அர்த்தம் என்ன? 'அவரவர்க்கு உரியதை அவரவர்க்குக் கொடுப்பது'. நம் அனைத்து உறவு நிலைகளிலும், நம் பணிகளிலும், படிப்பிலும் நம்மைச் சிறந்தவர்களாக்குவதும் இயேசுவின் இன்றைய போதனைதான். படிப்பிற்கு உண்டான நேரத்தைப் படிப்பிற்கும், காதலுக்கு உள்ள நேரத்தை காதலுக்கும், குடும்பத்திற்கு உள்ள நேரத்தை குடும்பத்திற்கும் கொடுக்க வேண்டும். இதில் குழப்பம் வரும்போதுதான் தோல்வியும், பின்னடைவும் வருகிறது. சில நேரங்களில் சமரசம் செய்யவும் தொடங்குகிறோம். படிக்கும் நேரத்தில் காதல், காதல் நேரத்தில் நட்பு, நட்பு நேரத்தில் வியாபாரம் என எண்ணற்ற நேரங்களில் நாம் அவரவருக்கு உள்ளதை அவரவருக்கு நாம் கொடுப்பதில்லை தானே!

இ. நாணயத்தில் பொறித்திருப்பது யாருடைய உருவம்? எனக் கேட்கிறார் இயேசு. நம் உள்ளத்தில் கடவுளின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. நம் அரசின் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கிறது. நம் மனத்திற்கு கடவுள் தேவைப்படுகிறார் என்றால், நம் உடலுக்கு இந்த உலகமும் நாடும் தேவைப்படுகிறது தானே. அப்படியிருக்க இரண்டையும் ஏன் நாம் சமநிலைப் பார்வையோடு பார்ப்பதில்லை?

Sunday, July 20, 2014

நண்பா! உன் ஆடை எங்கே?

(12.10.2014 பொதுக்காலம் 28ஆம் ஞாயிறுக்கான மறையுரை. நற்செய்தி: மத்தேயு 22.1-14)

விண்ணரசு பற்றிய மேலும் ஒரு எடுத்துக்காட்டைத் தருகின்றார் இயேசு: திருமண விருந்து. மத்தேயு நற்செய்தியில் நாம் வாசிக்கும் உவமைக்கும், லூக்கா நற்செய்தியில் வாசிக்கும் உவமைக்கும் (லூக்கா 14:15-24) நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இரண்டின் பின்புலங்களும் வேறு.

இந்த உவமையை புரிந்து கொள்ள யூதர்களின் திருமண நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். முந்தின நாள் நிச்சயதார்த்தம் வைத்து அடுத்த நாள் காலையில் தாலி கட்டி, அவசர அவசரமாய் வந்திறங்கும் கேட்டரிங் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, 'சரி நல்லா இருங்க!' என்று வாழ்த்திவிட்டு ஓடும் நம்ம ஊர் திருமணம் போல அல்ல அது. திருமண நிகழ்வு ஏறக்குறைய ஆறுமாதங்கள் நடக்கக் கூடிய நிகழ்வு. பெற்றோர் பெண் பார்த்தல், பையனும், பெண்ணும் ஒருவருக்கொருவர் விருப்பம் தெரிவித்தில், நிச்சயதார்த்தம் என முதல் படலம் நடந்தேறும். பையன் தன் வீடு திரும்ப, பெண்ணும் அவள் வீடு திரும்புவாள். முதல் படலம் நடந்தேறினாலே திருமணம் நடந்து விட்டதாகத்தான் அர்த்தம். பையன் தன் வீட்டில் இருக்கும் போது தந்தை தன் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு விருந்தளிப்பது மரபு. நம் கதையின் மகன் இளவரசன். தடபுடலாக விருந்தை ஏற்பாடு செய்கின்றார் தந்தை. விருந்து தயாராகிவிட்டதும் 'எல்லாரும் வந்தாச்சா!' என்று பார்க்கின்றார். யாரையும் காணோம்! முதல் அவமானம்! 'என்ன ஆயிற்று' என்று பார்க்க ஆள் அனுப்புகிறார். அழைக்கப்பட்டவர்கள் வர முடியவில்லை என்று சொல்வதை விட, 'வர விருப்பம் இல்லை!' என்றே சொல்கிறார்கள். உவமையை வாசிக்கும் போதே அவர்கள் மேல் நமக்கு கோபம் வருகிறது. அரசன் கூப்பிடுகிறான். அங்கே போனால் நன்றாக இருக்குமே. அரசனை வைத்து நாளைப்பின்னே நாலு காரியம் சாதிக்கலமே. பாவம் பிழைக்கத் தெரியாதவர்கள்.

பின் அழைப்பு பொதுவாக்கப்படுகிறது. வருவோர், போவோர், நல்லவர், கெட்டவர் என அனைவரும் வருகின்றனர். மண்டபம் நிறைந்து விட்டது. விருந்து பரிமாறத் தயாராகி விட்டது. அரசன் வந்திருந்தோரைப் பார்க்க வருகிறான். 'திருமண ஆடை அணியாத ஒருவன்' அங்கே அமர்ந்திருப்பது அவரின் கண்களில் படுகிறது. 'வெளியே எறியுங்கள் இவனை!' - இது அரச கட்டளை. இந்த இடத்தில் அரசன் மேல் தான் நமக்குக் கோபம் வரகிறது! 'நீ கூப்பிட்டவங்க வரலை. சரி நாங்களாவது வந்தோமே என்று சும்மாயிருப்பதை விட்டு விட்டு, சட்டை ஏன் போடலை! வேட்டி ஏன் கட்டலை?' என்று கேட்டிருப்பார் அந்த திருமண ஆடை இல்லாதவர். இங்கே ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். 'திருமண ஆடை' என்பது திருமண விருந்திற்கு வரும் அனைவருக்கும் விருந்து வைப்பவர் கொடுக்கும் பரிசு. மண்டபத்திற்குள் நுழையும் போது அவர்களின் உடல் அளவிற்கேற்ப உடைகள் கொடுக்கப்படும். நம்ம ஊரில் திருமணம் முடிந்து, மொய் எழுதும் போது கொடுக்கும் 'தாம்பூலப் பை' போல என வைத்துக் கொள்ளலாம். அப்படிப் பரிசாகக் கொடுக்கப்பட்ட ஆடையைத் தான் அந்த நபர் அணிய மறுத்திருக்கிறார். எதற்காக மறுத்தார் என்பதற்கு உவமையில் பதில் இல்லை. 'அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும்' என அவசர அவசரமாக உவமை முடிகிறது. இந்த வார்த்தைகளை வைத்துத்தான் கொஞ்சப் பேர் நரகம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இயேசுவின் உவமையின் நோக்கம் நரகத்தைப் பற்றியதோ, உத்தரிக்கிற நிலையைப் பற்றியதோ அல்ல. சரியா?

இந்த உவமை நம் முன் வைக்கும் சிந்தனைகள் என்ன?

அ. முதன்மைப்படுத்துதல். 'மோரியுடன் செவ்வாய்க்கிழமைகள்' என்ற திரைப்படத்தில் ஒரு இடத்தில் மோரி கதாநாயகனைப் பார்த்து இப்படிச் சொல்வார்: 'நம் தோள்பட்டையில் ஒரு குருவி அமர்ந்திருப்பது போல நாம் நினைத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குருவியிடம் நாம் தினமும் ஒன்று கேட்க வேண்டும். என் அருமைக் குருவியே! இந்த நாள்தான் என் வாழ்வின் இறுதி நாளா? அப்படியென்றால் என் வாழ்வின் முக்கியமானவற்றை நான் இன்று செய்கிறேனா?' விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் கொடுக்கும் காரணங்கள் விநோதமாக இருக்கின்றன: ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன், வயல் வாங்கியிருக்கிறேன், புதிதாக திருமணம் ஆகியிருக்கிறது! ஆகையால் வர முடியாது. அரசன் நினைத்தால் இந்த மூன்றையும் அழித்து விடலாம். நம் வாழ்வில் பல நேரங்களில் நாம் கண்ணீர்விடக் காரணம் என்ன? நாம் முதன்மைப்படுத்துதலில் தவறுவதுதான். அன்பு, ஆன்மீகம், கரிசணை, பகிர்வு, விழிப்பு நிலை - இவைதான் நம் வாழ்வில் என்றும் நம் உடன் இருப்பவை. இவைகளை விட்டுவிட்டு மற்றவைகளை நாம் தேடும்போது நாம் அரைத்தூக்கத்தில் இருப்பது போலத்தான் இருக்கிறோம். நம்மிடம் 'எப்படி இருக்கிறீர்கள்?' என்று யாராவது கேட்டால் உடனே பதில் சொல்கின்றோம். அதே நபர் நம்மிடம் 'ஏன் இருக்கிறீர்கள்?' என்று கேட்டால் நம் பதில் என்னவாக இருக்கும். பதிலுக்குப் பதில் நமக்குக் கோபம் தானே வரும்!

ஆ. எல்லாரும் வாருங்கள். தொடக்கத் திருச்சபையின் காலத்தில் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்த போது, நற்செய்தி புறவினத்தாருக்கு அறிவிக்கப்படுகிறது. யூதர்களே விருந்திற்கு வர மறுத்தவர்கள். புறவினத்தார்தான் மண்டபத்தில் இறுதியாக உணவருந்தியவர்கள். நற்செய்தி ஏற்றுக்கொள்ளப்படாதபோது அது மற்றவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. வாழ்வின் எதார்த்தமும் இதுதான். கடவுளின் அன்பையும், மற்றவர்களின் அன்பையும் நாம் ஏற்றுக்கொள்ளாதபோது அது மற்றவர்களுக்குத் திருப்பிவிடப்படுகின்றது. வாழ்வில் சிலவற்றை நாம் இழந்துவிட்டால் அதை நம்மால் திரும்பவும் பெற முடிவதேயில்லை. கண்ணீர் விட்டாலும், விழுந்து புரண்டாலும் சென்றது சென்றதுதான். ஆகையால் இருக்கும் போதே, இருக்கின்ற ஒன்றை, இருப்பது போல ஏற்றுக்கொண்டு அனுபவிக்கும் மனப்பக்குவம் அவசியம்.

இ. அழைக்கப்பட்டவர்களோ பலர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர். திருமண ஆடை என்பது இயேசு கொண்டு வந்த மீட்பு. திருமுழுக்கு வழியாக நாம் கிறித்தவர்களாக மாறினால் மட்டும் விருந்தில் பங்கேற்றுவிடலாம் என்று சொல்லி விட முடியாது. இறைவன் தரும் மீட்பு என்னும் ஆடையை நாம் அணிந்து கொள்ள வேண்டும். கடவுளின் பரிசாக வரும் அந்த ஆடையை நாம் மாசுபடாமல் வைத்திருப்பதும் அவசியம். அருட்பணியாளராக திருநிலைப்படுத்தப்படும் போது அருட்பணியாளருக்குத் திருவுடை அணிவிக்கும் சடங்கு நடைபெறும். அந்தச் சடங்கின் அர்த்தம் இந்த உவமையின் பின்புலத்தில் இன்னும் ஆழமான அர்த்தத்தைத் தருகின்றது. இறைவனின் விருந்தை, நற்கருணைப் பலியை, கொண்டாடும் போதெல்லாம் அருட்பணியாளர் இதை அணிகிறார். உடல் இதை அணிந்து கொண்டாலும், உள்ளம் அணியவில்லையென்றால், திருமண விருந்தில் நமக்கு இடமில்லை தானே! 'நண்பா! உன் ஆடை எங்கே?' என்று ஒருநாள் அவர் நம்மைக் கேட்டுவிட்டால்...!


Friday, July 18, 2014

வன்முறையின் குழந்தை வன்முறை

(05.10.2014 பொதுக்காலம் 27ஆம் ஞாயிறுக்கான மறையுரை. நற்செய்தி மத்தேயு 21:33-43)

விண்ணரசு பற்றிய இயேசுவின் தொடர் உவமை ரத்தமயமாக இருக்கிறது. உவமையின் கருப்பொருள் திராட்சைத் தோட்டம். இப்போது வாசகரின் கவனம் திராட்சைத் தோட்டப் பணியாளர்கள் மேல். திராட்சைத் தோட்டம் ஒப்பந்த அடிப்படையில் சில பணியாளர்களிடம் தரப்படுகிறது. தோட்டத்தின் விளைச்சலைப் பெற்று வருமாறு தலைவர் முதலில் பணியாளர்களை அனுப்புகின்றார். அவர்களில் சிலரை தோட்டத் தொழிலாளர்கள் கல்லால் எறிகின்றனர், சிலரை கொல்கின்றனர், சிலரை விரட்டி அனுப்புகின்றனர். இரண்டாவதாக, முன்பைவிட அதிக பணியாளர்கள் அனுப்பப்படுகின்றனர். அவர்களுக்கும் அதே கதிதான். இறுதியாக, தலைவரின் ஒரே மகன். தலைவரின் எதிர்பார்ப்பு ஒரு மாதிரி இருக்க, நடப்பது என்னவோ வேறு மாதிரி இருக்கிறது. 'இவனே சொத்துக்குரியவன். இவனைக் கொன்றால் தோட்டம் நம்முடையது!' என அவர்கள் சொல்லிக் கொண்டே அந்த மகன் மீது பாய்ந்து கொல்கிறார்கள்.

இந்த இடத்தில் வாசகருக்கு உச்ச கட்ட கோபம் வருகின்றது. மகன் சின்னஞ்சிறுவனாகத் தான் இருந்திருக்க வேண்டும். தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் திராட்சைத் தோட்டம் எடுத்தால் அது விளைந்தவுடன் முதல் வேலையாக தலைவனுக்குரிய பங்கைத் தர வேண்டும் என்பது இணைச்சட்ட நூலின் பரிந்துரை. அவர்களின் முதல் தவறு, 'தலைவனுக்குச் சேர வேண்டியதைத் தனக்கென வைத்துக்கொண்டது!' - இதை பேராசை, ஊழல், பதுக்குதல் என அழைக்கலாம். இரண்டாவதாக, வன்முறை. யார்மேல்? தலைவனின் பணியாளர்கள் மேல். மூன்றாவதாக, கொலை. யாரை? ஒரே மகனை.

இப்படிப்பட்ட தொழிலாளர்கள் பற்றி தலைவனுக்குத் தெரியவில்லையா? தெரிந்திருந்தும் அவர்களிடம் தோட்டத்தை ஏன் ஒப்படைத்தார்? தொழிலாளர்களுக்கு தலைவன் மேல் அப்படி என்ன கோபம்? அப்படிக் கோபம் இருந்தால் அதை தலைவன் மேல் காட்டியிருக்கலாமே? ஏன் மற்றவர்கள் மேல் காட்ட வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு உவமையில் பதில் இல்லை.

இந்த உவமையை இயேசுவே சொன்னார் என்றால் அது தன் இறப்பை முன்குறிப்பதாக இருக்கிறது. இல்லை, இது நற்செய்தியாளரின் கற்பனை என்போமாகில் இயேசுவின் படுகொலையை அவர்கள் உருவகமாக எழுதி, 'புதிய ஒப்பந்தப் பணியாளர்கள்' என்ற புதிய கிறித்தவர்களுக்கு ஆறுதல், நம்பிக்கை, புத்துணர்ச்சி தரவதற்காக எழுதப்பட்டது. இந்த இரண்டு எண்ண ஓட்டங்களிலும், தந்தை என்பது வானகத் தந்தையையும், தந்தையின் பணியாளர்கள் என்பவர்கள் இறைவாக்கினர்களையும், மகன் என்பவர் இயேசுவையும், தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் பரிசேயர்கள், மறைநூல் வல்லுநர்கள், தலைமைக்குருக்கள் எனவும் உருவகம் செய்து கொள்ளலாம்.

இந்த விண்ணரசு உவமை நமக்குச் சொல்வது என்ன?

அ. இந்த உவமையில் நாம் யார்? மற்றவர்களை அப்படியே நம்பும் 'தாராளமான' தந்தையா? தாங்கள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் தொடர்ந்து தங்கள் வேலையைச் செய்த தந்தையின் பணியாளர்களா? தந்தையின் ஒரே மகனா? அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்களா? இந்த நால்வருமே நம்மில் எங்கோ ஒளிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நான்காம் மனநிலை தான் நம்மிடம் இருக்கக் கூடாத மனநிலை.

ஆ. நேற்றைய தினம் (17 சூலை 2014) உக்ரைனின் வானின் மேல் பறந்து கொண்டிருந்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றை இரஷ்ய கிளர்ச்சி ஆதரவாளர்கள் ஏவுகணை கொண்டு தாக்க, அது வெடித்து அதில் பயணம் செய்த 295 பேரும் இறந்து விட்டார்கள் என்பது மிகவும் வருத்தம் தரும் ஒரு நிகழ்வு. கிளர்ச்சியாளர்களுக்கும், வானில் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்திற்கும், அதில் பயணம் செய்த அப்பாவி மனிதர்களுக்கும் என்ன தொடர்பு? எதற்காக கிளர்ச்சியாளர்கள் அவர்களைத் தாக்க வேண்டும்? நம்மையறியாமல் கிளர்ச்சியாளர்கள் மேல் ஒருவித கோபம் கொப்பளிக்கிறது. உனக்கும் பக்கத்து வீட்டுக்காரனுக்கும் பிரச்சனையென்றால் ஒருவர் மற்றவரை அடித்துக் கொள்ள வேண்டியதுதானே! பக்கத்துத் தெருவில் இருக்கிறவன் என்ன செய்தான்? மனித மனதில் குடிகொள்ளும் வன்முறை பல நேரங்களில் அப்பாவி மக்களிடமே திருப்பப்படுகின்றது. சிறு வயதிலேயே யாரோ மேல் உள்ள கோபத்தை தான் கையில் வைத்திருக்கும் பொம்மை மேல் காட்டிவிடுகிறது குழந்தை. இந்தக் கிளர்ச்சியாளர்களும் பொம்மை மேல் காட்டுவதற்குப் பதில் விமானத்தின் மேல் காட்டிவிட்டார்கள். உவமையில் வரும் தொழிலாளர்கள் தலைவனின் பணியாளர்மேலும், மகனின் மேலும் காட்டிவிட்டார்கள். வன்முறை வன்முறையைத் தான் பெற்றெடுக்க முடியும். 'பாலியல் உணர்வு, வன்முறை' - இந்த இரண்டும் மனிதர்களில் குடிகொள்ளும் மிகவும் சக்திவாய்ந்த உணர்வுகள் என்கிறார் பிராய்ட்.

இ. நம்மிடம் எதிர்பார்க்கப்படும் செயல் நம்மிடம் இல்லாதபோது வாய்ப்பு நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும். கதையின் இறுதியில் திராட்சைத் தோட்டம் மற்ற தொழிலாளர்களின் கையில் கொடுக்கப்படுகிறது. வன்முறையில் இறங்கிய தொழிலாளர்களும் அழிக்கப்படுகின்றனர். நம் வாழ்வில் நாம் அதற்கேற்ற கனிகள் கொடாதபோது வாழ்வு நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு விடுகிறது. இது உவமையின் பொருள் மட்டுமல்ல. டார்வினின் உயிரியல் பரிணாமக் கோட்பாடும் இதுதான். நாம் பயன்படுத்தாத, பயன் தராத எதுவும் காலப்போக்கில் அழிந்துவிடும்.


ஒன்றே சொல்வார்! ஒன்றே செய்வார்!

(28.09.2014 பொதுக்காலம் 26ஆம் ஞாயிறுக்கான மறையுரை. நற்செய்தி: மத்தேயு 21:28-32)

விண்ணரசு பற்றிய மற்றொரு உவமையைச் சொல்கின்றார் இயேசு. ஒருவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவனைப் பார்த்து என் தோட்டத்திற்கு வேலைக்குப் போ என்கிறார். 'போகிறேன்' என்று சொன்னவன் போகவில்லை. இரண்டாம் மகனிடமும் அதே விண்ணப்பம். 'போகவில்லை' என்கிறான். ஆனால் போகிறான். இந்த இரண்டு பேரில் இரண்டாம் மகன் சிறந்தவன் என்றும், அவன் வரிதண்டுவோரையும், பாவிகளையும், விபச்சாரரையும், புறவினத்தாரையும் குறிக்கின்றான் என்றும் உவமை நிறைவு பெறுகிறது.

இந்த உவமையை வாசிக்கும் போது ஏதோ குறைவுபடுவதாக இருக்கின்றது. இந்த உவமையின் பின்புலமும் தொடக்கத் திருச்சபைதான். 'யூதர்கள் தங்கள் சட்டத்தால் தாங்கள் விண்ணரசுக்குள் நுழையலாம்' என நினைக்கின்றனர். ஆனால் அவர்களால் நுழைய முடியவில்லை. அவர்கள்தாம் மூத்த மகன்கள். ஆனால் இரண்டாம் நிலையினர், புதிய கிறித்தவர்கள். அவர்கள் உள்ளே நுழைய முடியாது என்ற நிலையில் இருந்தாலும், உள்ளே நுழைந்து விடுகின்றனர். இவர்கள் இரண்டாம் மகன்கள். இந்த உவமை இயேசுவின் சமகாலத்தவருக்குத் தந்த ஊக்கத்தைவிட தொடக்கத் திருச்சபைக்கு இந்த உருவகம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கும்.

என்னைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு மகன்களின் நிலைப்பாட்டிலும் ஏதோ குறை இருக்கிறது. இந்த உவமையை கொஞ்சம் முன்னும், பின்னும் நீட்டித்துக் கற்பனை செய்து பார்ப்போம். ஒரு அப்பாவிற்கு நான்கு மகன்கள் இருந்தனர்: எல்லாரையும் ஒன்றாக அழைத்து, 'நீங்கள் என் தோட்டத்திற்கு வேலைக்குப் போங்கள்!' என்கிறார். மகன் 1 'போகிறேன்' என்று சொல்லவுமில்லை. போகவுமில்லை. மகன் 2 'போகிறேன்' என்று சொல்கிறான். ஆனால் போகவில்லை. மகன் 3 'போகிறேன்' என்று சொல்லவில்லை. ஆனால் போகிறான். மகன் 4 'போகிறேன்' என்று சொல்கிறான். போகிறான்.

முதல் நிலை 'கண்டுகொள்ளாத நிலை'. இரண்டாம் நிலை 'ஏமாற்று நிலை'. மூன்றாம் நிலை 'பின்புத்தி மனநிலை'. நான்காம் நிலை 'உண்மை மனநிலை'. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மனிதர்கள் தாம் இன்றைய நற்செய்தியில் வரும் மூத்த மற்றும் இளைய மகன்கள். மூத்த மகன் 'ஏமாற்றினான்' என்று நாம் குற்றம் சாட்ட வேண்டாம். ஆனால் ஏதோ ஒரு வகையில் அவனால் தன் தந்தைக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. இரண்டாம் மகனுக்கு முதலில் போக விருப்பமில்லை தான். ஆனால் தன் தந்தையின் பேரன்பையும், தாராள உள்ளத்தையும் எண்ணிப்பார்த்து 'சரி! அவருக்காகவாவது போவோம்!' என நினைத்திருக்கலாம். அல்லது 'இந்த வேலையைச் செய்யவில்லையென்றால் வேறு வேலை ஏதாவது கொடுத்து விடுவார். எப்படியோ தப்பித்து ஓடி செய்து விடுவோம்' என நினைத்திருக்கலாம். அல்லது 'இவர் பேச்சைக் கேட்கவில்லையென்றால் நாளைக்கு ஏதாவது தண்டனை கொடுப்பாரோ' என்று பயத்தில் சென்றிருக்கலாம். காரணம் உவமையில் இல்லை. வாசகர்தான் கற்பனை செய்து கொள்ள வேண்டும். மூத்த மற்றும் இளைய மகன்களின் மனநிலைகள் இரண்டுமே 'பொய் மனநிலைகள்' தாம்.

இந்த உருவகம் நமக்கு இன்று என்ன சொல்கிறது?

அ. வாழ்க்கை அல்லது உலகம் என்பது ஒரு திராட்சைத் தோட்டம். வாழ்வு என்னும் கொடையை தந்தையாகிய கடவுள் நமக்குக் கொடுத்து இங்கே அனுப்பியிருக்கிறார். அந்த வாழ்வு என்னும் அழைப்பிற்கு நாம் எப்படி பதில் சொல்கிறோம். மகன் 1 போல 'கண்டுகொள்ளாமல்' இருக்கிறோமா? மகன் 2 போல 'ஏமாற்று' மனநிலை கொள்கிறோமா? மகன் 3 போல 'பின்புத்தி மனநிலையில்' பயத்தால் வாழ்வை வாழ்கிறோமா? அல்லது மகன் 4 போல 'சொல்வதைச் செய்பவர்களாகவும், செய்வதைச் சொல்பவர்களாகவும்' இருக்கின்றோமா? மகன் 4க்குரிய மனநிலையை நாம் பெற வேண்டுமெனில் நல்ல முடிவெடுக்கும் திறனும், முடிவெடுத்தபின் மனதை மாற்றாத திடமும், எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் விடாமுயற்சியும் அவசியம். இந்த மூன்றில் ஒன்று குறைந்தால் கூட நாம் உண்மையிலிருந்து தவறி விடுவோம். நேற்றைய தினம் 'அருட்பணிநிலை கற்பும் போராட்டமும்' (Priestly Celibacy and Its Struggle) என்ற நூலை வாசித்தேன். அருட்பணி நிலைக்குள் நுழையும் ஒருவர் மேற்கொள்ளும் 'கற்பு' என்ற வாக்குறுதியில் நிலைத்து நிற்க அவர் மிகவும் போராட வேண்டியிருக்கிறது எனவும், 'என்னால் இருக்க முடியும்' என்று தன்னை மட்டும் நம்புபவர்கள் விரைவில் மனத்திடம் இழந்து விடுகிறார்கள் எனவும், 'இருக்கிறேன்!' என்று தயார்நிலையோடு நுழையும் சிலர் தாங்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை எதார்த்தங்களால் அலைக்கழிக்கப்படுகிறார்கள் எனவும், 'இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும்' என ஒருசிலர் பிளவுபட்டவர்களாகவும் இருக்கிறார்கள் எனவும் ஒவ்வொரு அருள்நிலை இனியவரின் மனப்போராட்டத்தை வெகு அழகாக எழுதியிருந்தார் ஆசிரியர். 'கற்பு' என்ற வாக்குறுதியில் மட்டுமல்ல, வாழ்க்கையில் நாம் எடுக்கும் சின்ன சின்ன வாக்குறதிகளில் கூட (உதாரணத்திற்கு, 5:30 மணிக்கு எழுந்திருப்பேன் என்று நாம் அலார்ம் கிளாக்கிற்கு அளிக்கும் வாக்குறுதியில் கூட) திடமும், விடாமுயற்சியும் அவசியம். யார் பார்க்கப் போகிறார்கள்? 5:30 மணிக்கு எழுந்தால் என்ன, 7:30 மணிக்கு எழுந்தால் என்ன என்று நாம் தவறும் சின்ன வாக்குறுதி, வாழ்க்கையில் நாம் எடுக்கும் பெரிய வாக்குறுதிகளிலும் சமரசம் செய்யுமாறு நம் மனச்சான்றை பிறழ்வுபடுத்துகிறது.

ஆ. வாக்கிங் தி எக்ஸ்டரா மைல். நம் வாழ்வின் வெற்றிக்கும், நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம் இதுதான். நம்மிடம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகச் செய்வது. நான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என வைத்துக்கொள்வோம். என்னிடம் எதிர்பார்க்கப்படுவது என்ன? பயணி விரும்பும் இடத்தில் அதற்குரிய தொகையைப் பெற்றுக்கொண்டு அங்கே சென்று அவரை நான் இறக்கி விட வேண்டும். இதையும் விட அதிகமாகச் செய்வது என்றால் என்ன? 'அவரின் உடைமைகளை ஆட்டோவில் இருந்த இறக்க உதவுவது. 'பத்திரமாய்ப் போய்வாங்க!' என்று கனிவுமொழி சொல்வது. 'பயணம் சௌகரியமாக இருந்ததா?' எனக் கேட்பது. இப்படிச் செய்வதால் என்னிடம் ஒன்றும் குறையப்போவதில்லை. ஆனால் அது எனக்கும் என் பயனாளருக்கும் மகிழ்ச்சி தருகிறது. உவமையில் வரும் மூத்த மகன் சொல் அளவில் மட்டும் தாராள உள்ளம் காட்டுகிறான். ஆனால் அவனிடம் செயல் இல்லை. மற்றவன் செயல்படுகிறான். ஆனால் செயல்பாடு தயக்கத்தோடு தொடங்குகிறது. வாழ்வதிலும், நம் உறவு நிலைகளிலும் நம்மிடம் எதிர்பார்ப்பதையும் விட கொஞ்சம் அதிகமாகச் செய்து பார்க்கலாமே?

இ. இரண்டு மகன்களுக்குமே அழைப்பு எதிர்பாராத நேரத்தில் தான் வருகிறது. அவர்கள் தயாராக இல்லாததால் ஒருவேளை அழைப்பிற்கு பதில் தரமுடியாமல் போயிருந்திருக்கலாம். எங்கள் பங்கில் ஒருவர் இருக்கிறார். எப்போது கூப்பிட்டாலும் வருவார். காலையில் வேளைக்குச் செல்வார். மதியம் மாணவர்களுக்கு கிட்டார் சொல்லிக் கொடுப்பார். மாலையில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் முதியவர்களுக்கு பால் மற்றும் உணவுப்பொருட்கள் வாங்கிக் கொண்டு போய்க் கொடுப்பார். எங்க ஏரியாவிற்குள் ஆம்புலன்ஸ் நுழைந்தால் அவரும் உடனடியாக அங்கே வந்து விடுவார். பிக்னிக்குக்கு பஸ் ஏற்பாடு செய்வார். பீட்சா வாங்கி வருவார். பார்ட்டி முடிந்ததும் அவரே அனைத்தையும் சுத்தம் செய்வார். ஒருநாள் அவரிடம் உங்களால் எப்படி இதெல்லாம் முடிகிறது எனக் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்: 'பைபளில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்ன தெரியுமா? கழுதைக் குட்டி. 'ஆண்டவருக்குத் தேவை' என்று எருசலேம் தெரு ஒன்றில் காத்துக் கொண்டே இருக்கிறது. நானும் ஒரு கழுதைக் குட்டிதான். எந்த நேரத்தில் யாருக்கு என்ன தேவையோ நான் ஓடிவிடுவேன். 'அவர்கள் உன்னைப் பயன்படுத்துகிறார்கள்!' என்று உள்மனம் என்னை பின்னடையச் செய்யும். 'அப்படியாவது நான் பயன்படட்டுமே!' என்று எதையும் பொருட்படுத்தாமல் ஓடி உதவி செய்வேன';. தயார்நிலையே வாழ்வின் வெற்றி நிலை.


Thursday, July 17, 2014

ஆளை ஆளைப் பார்க்கிறார்!

(21.09.2014 ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறுக்கான மறையுரை.
நற்செய்திப் பகுதி: மத்தேயு 20:1-16)

வாழ்க்கையில் நாம் நினைப்பது போலவே எல்லாம் அமைவதில்லை. உலகில் உள்ள மனிதர்கள் எல்லாம் ஒரே மாதிரி இல்லை. வாழ்வின் வாய்ப்புகளும் அனைவருக்கும் ஒரே மாதிரி கிடைப்பதில்லை. காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு பிறக்கும் நாம் நம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு மட்டும்தான் இயங்க முடியும். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை ஒவ்வொரு மாதிரி தான் இருக்கின்றது. அவரைப் போல நான் இல்லையே எனவும், அவளிடம் உள்ளது என்னிடம் இல்லையே என வருந்துவதும் பயனற்றது.

மேலும் வாழ்வில் நாம் ஒருசிலவற்றிக்குப் பெயரிட்டிருக்கின்றோம். எடுத்துக்காட்டாக, அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அண்ணன், அண்ணி, நண்பன் என்று உறவுகளுக்குப் பெயர் கொடுக்கின்றோம். ஆனால் இந்தப் பெயர்களின் அர்த்தம் எல்லாருக்கும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது? எனக்கு என் அப்பா என்பவர் யார் என்பதற்கும், உங்களுக்கு உங்கள் அப்பா யார் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது.

விண்ணரசு குறித்த ஒரு உவமையை இன்று நாம் வாசிக்கக் கேட்டோம். இந்த உவமையின் பின்புலம் என்ன? தொடக்கக் கிறித்தவர்களுக்குள், குறிப்பாக கிறித்தவம் தழுவிய யூதருக்கு ஒரு டவுட்டு: 'நம் யூத மரபில் கடவுளின் சட்டங்களுக்கும், அதற்கேற்ற செயல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டது. இப்போது நாம் புதிய நம்பிக்கைக்கு வந்து விட்டோம். நமக்கு சட்டங்கள் இல்லை. நாம் அதற்கேற்ற செயல்களையும் செய்ய முடியாது. செயல்கள் இல்லாமல் எப்படி மீட்பு பெற முடியும்?' இந்தக் கேள்விக்கு நற்செய்தியாளர் தரும் பதிலே இயேசுவின் விண்ணரசு பற்றிய உவமை. விண்ணரசு என்பது புதிய கிறித்தவ நம்பிக்கை. இந்தத் தோட்டத்தின் தலைவர் கிறஸ்து அல்லது கடவுள். காலையிலிருந்து மாலை வரை வெயிலின் கொடுமையில் வேலை செய்தவர்கள் யூதர்கள். வெயில் என்பது திருச்சட்டம். மாலையில் சில மணி நேரமே வேலை செய்தவர்கள் புதிய நம்பிக்கையின் உறுப்பினர்கள். மாலையில் சம்பளம் கொடுக்கும் போது அனைவருக்கும் ஒரே சம்பளமே கொடுக்கப்படுகிறது. தன் உழைப்பால் யாரும் அதிகம் பெற்றுவிட முடியாது எனவும், இறைவனின் கொடையால் தான் மீட்பு என்னும் சம்பளம் கிடைக்கிறது எனவும் இந்த எடுத்துக்காட்டு நமக்குச் சொல்கிறது.

மேலோட்டமாக வாசித்தால் இந்த உவமையில் வரும் தலைவன் அநீதியானவராகத் தெரிவார். ஆனால் ஆழமாக வாசிக்கும் போது தலைவன் யாரைக்கும் அநீதி இழைக்கவில்லை எனவும், மேலும் நீதியே செய்கிறார் எனவும் தெரிகிறது.

இந்த உவமை நமக்கு வைக்கும் பாடங்கள் மூன்று:

அ. வரிசை தலைகீழாகிறது. மேலிருந்து கீழ் என்னும் வரிசை கீழிருந்து மேல் எனத் திருப்பப்படுகிறது. முதலில் வந்தவர்கள், இரண்டாவது வந்தவர்கள், மூன்றாவது வந்தவர்கள், நான்காவது வந்தவர்கள், ஐந்தாவது வந்தவர்கள் என வேலைக்கு வந்தவர்கள், கூலி பெறும்போது ஐந்தாவது, நான்காவது, மூன்றாவது, இரண்டாவது, முதலாவது என வரிசை மாறுகிறது. இந்த மாற்றத்திற்கான காரணம் நமக்குத் தெரியவில்லை. அதுபோலத்தான் வாழ்க்கையும். அதுபோலத்தான் விண்ணரசும். 'ஏன்?' இப்படி என்று நம்மால் வாழ்வின் நிகழ்வுகளுக்கு அர்த்தம் தேட முடியாது. அப்படித் தேடினாலும் நாம் விரும்பும் பதில் நமக்குக் கிடைப்பதில்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் வரிசையைப் பின்பற்றுவதுதான். அப்படியென்றால் மனிதர்களுக்குச் சுதந்திரம் இல்லையா? என்றெல்லாம் மார்தட்டாதீர்கள். வாழ்வின் எதார்த்தங்கள் புரியாமல் இருப்பதுதான் வாழ்வின் இனிமையே.

ஆ. வேலைக்கு வந்தவர்கள் தங்களின் உழைப்பைப் பார்க்கின்றனர். ஆனால் தலைவனோ அவர்களின் தேவையைப் பார்க்கின்றார். ஒவ்வொருவருக்கும் திராட்சைத் தோட்டத்தில் வேலை பார்க்கக் கிடைத்த நேரம் வௌ;வேறாக இருந்தாலும் அனைவருக்கும் வயிறு ஒன்றுதூன். அனைவருக்கும் தேவை ஒன்றுதான். அவரவர் தேவைக்கேற்ப அனைத்தும் கிடைக்க வழி செய்கிறார் தலைவன். வேலைக்கு வந்தவர்கள் நேரத்தை வைத்து தங்கள் வாழ்க்கையின் பலனை கணக்குப் போடுகின்றனர். ஆனால் தலைவன் அவர்களின் உள்ளத்திற்கு மகிழ்ச்சி எது தரும் என நினைத்துப் பார்க்கின்றார். நாம் இறந்தபின் விண்ணகத்திற்குத் திரும்பும் போது (விண்ணகம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம்!) கடவுள் நாம் செய்த நற்செயல்களை ஆண்டுகளைக் கொண்டு கணக்கிட மாட்டார். கடைசி நாளில் ஒரு சின்ன நல்ல காரியம் செய்தால் போதும். பலன் எல்லாருக்கும் ஒன்றுதான். நம் கணக்கும், கடவுள் கணக்கும் ஒன்றாக இருப்பதில்லை என்பதே உண்மை.

இ. கடவுளின் பெருந்தன்மை. 'ஒரு தெனாரியத்திற்கு வா!' என்றுதான் காலை எட்டு மணிக்கு வேலைக்கு வந்தவர்களுக்கு அழைப்பு விடப்படுகிறது. பேசப்பட்ட கூலியும் அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. மற்றவர்கள் பெற்றதும் ஒரு தெனாரியம் என்றாலும் அது அவர்களின் உழைப்பின் பலன் என்று சொல்வதை விட தலைவனின் பெருந்தன்மை என்றே சொல்ல வேண்டும். 'நான் நல்லவனாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?' என்ற தலைவனின் கேள்வி இன்றும் நம்மிடம் கேட்கப்படுகிறது. பல நேரங்களில் நம் உழைப்பிற்கேற்ற பலன் நமக்குக் கிடைப்பதில்லை. நாம் வேண்டுவது நமக்குக் கிட்டுவதில்லை. வாழ்க்கை எனக்கு மட்டும் வஞ்சகம் செய்கிறது எனப் புலம்புகிறோம். இந்தப் புலம்பலில் நாம் செய்வது என்ன? அடுத்தவர்களின் கையில் என்ன இருக்கிறது என்று பார்க்கிறோம். பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதை நம் கையில் இருப்பதோடு ஒப்பீடும் செய்கின்றோம். ஒப்பீடு செய்வதோடு மட்டுமல்லாமல் அதைக் குறித்து புலம்பவும் செய்கின்றோம். 'கடவுளை நாம் கடவுளாக இருக்க விடுவதில்லை தானே!' எல்லாருக்கும் நடப்பதை விட மிக நன்றாக நமக்கு நடக்க வேண்டும் என நினைக்கின்றோம். ஆனால் எது நடக்க வேண்டுமோ, அது தானே நடக்கும். ஆகையால் புலம்பும் மனநிலை விடுத்து அதிகம் பெற்றவருடன் இணைந்து அவரின் மகிழ்ச்சியில் பங்குகொள்ளும் பரந்த மனப்பான்மை கொண்டால் கடவுள் நம்மைப் பார்த்துப் பொறாமைப்படுவார்.

'ஆளை ஆளைப் பார்க்காமல், ஆட்டத்தை மட்டும் பார்க்கலாமே!'


Tuesday, July 15, 2014

எங்கே இரண்டு மூன்று பேர்!

(07.09.2014 பொதுக்காலம் 23ஆம் ஞாயிறுக்கான மறையுரை. நற்செய்திப் பகுதி: மத்தேயு 18:15-20)

வாகன ஓட்டுநர் உரிமை பெறும்போது நமக்குச் சொல்லிக் கொடுக்கப்படும் ஒரு வார்த்தை 'பிளைன்ட் ஸ்பாட்'. அதாவது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும் போது அந்த வாகனத்திற்கு முன் என்ன இருக்கிறது என்பது முந்த நினைக்கும் வாகன ஓட்டிக்குத் தெரியாது. நம் கண்ணாடிக்குள் தெரிவது மட்டும்தான் எல்லாம் என்று நினைத்து விடக் கூடாது. கண்ணாடியில் பிடிபடாததும் இருக்கிறது என்பதே எதார்த்தம். இந்த 'பிளைன்ட் ஸ்பாட்டை' நாம் கண்டுகொள்ளவில்லையென்றால் சாலையில் விபத்துதான் நேரும்.

நம் வாழ்க்கை என்ற பயணத்தில் நம் அனைவருக்கமே 'பிளைன்ட் ஸ்பாட்' உண்டு. நமக்குத் தெரிகின்ற ஒன்று மற்றவர்களுக்குத் தெரிவதில்லை. மற்றவர்களுக்குத் தெரிகின்ற ஒன்று நமக்குத் தெரிவதில்லை. உளவியல் நிபுணர்கள் ஜோ-ஹரி அவர்களின் 'ஜன்னல்' முறை உளவியலின் உள்ளடக்கமும் இதுவே. ஒருவர் தவறு செய்யும் போது, அந்தத் தவறு அவர் பார்வைக்கு தவறு என்று தெரியாத போது அருகிலிருக்கும் அவரின் சகோதரரும், நண்பரும் தான் அவருக்கு அதைச் சுட்டிக் காட்ட வேண்டும்.

இன்றைய உலகின் மனிதர்களுக்கு சுட்டிக் காட்டுதல் பிடிப்பதில்லை. 'உன் வழி உனக்கு! என் வழி எனக்கு! இதில் நல்ல வழி என்றும் கெட்ட வழி என்றும் எதுவுமில்லை' என்று வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, 'யாரும் என்னை எதுவும் கேட்கக் கூடாது!' என்றும் 'எனக்கு எல்லாம் தெரியும்! எனவும் நினைப்பவர்களுக்கு இயேசுவின் இன்றைய போதனை முகம் சுளிக்க வைக்கும்.

இன்றைய நற்செய்தியின் பின்புலத்தையும் நாம் மனத்தில் கொள்ள வேண்டும். இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின் அவர்மேல் நம்பிக்கை கொண்ட மக்கள் ஒன்றாக வாழத் தொடங்குகின்றனர். அப்படி அவர்கள் ஒரே சமூகமாக இருக்கும் போது அவர்கள் நடுவில் கருத்தியல் ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் சின்னச் சின்ன சண்டைகளும், மனவருத்தங்களும் வருகின்றன. இப்படி சண்டைகள் வளர்ந்து கொண்டே போனால் என்ன செய்வது? இந்தச் சண்டைகளுக்கு எப்படித் தீர்வு காண்பது? என நினைக்கின்ற மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவே இதற்குத் தீர்வு கொடுப்பதாக எழுதுகின்றார். இயேசுவின் தீர்வு எப்படி இருக்கிறது?

சகோதரர் தவறு செய்தால்...அ) தனியே அறிவுறுத்த வேண்டும், ஆ) உடன் இரண்டு பேரை வைத்து அறிவுறுத்த வேண்டும், இ) திருச்சபையிடம் சொல்ல வேண்டும். திருச்சபையிடம் சொல்லியும் அவர் திருந்தவில்லையெனில் அவர் 'புறவினத்தார்' போல இருப்பார்!

தொடர்ந்து இயேசு மூன்று வாக்குறுதிகளும் கொடுக்கின்றார்: அ) நீங்கள் இங்கே கட்டுவது அங்கே உங்களுக்குக் கட்டப்படும், ஆ) நீங்கள் மனம் ஒத்திருந்து கடவுளிடம் கேட்டால் அது உங்களுக்குக் கிடைக்கும், இ) இரண்டு, மூன்று பேர் கூடிவரும் இடத்தில் நான் இருப்பேன்.

முதல் பகுதியில் இயேசு தவறு செய்யும் சகோதரரை எப்படித் திருத்துவது என்றும், இரண்டாம் பகுதியில் தவறுகள் திருத்தப்படுவதாலும், மனவருத்தங்கள் அகல்வதாலும் வரும் நன்மைகளையும் சொல்கின்றார்.

இயேசு வாழ்ந்த காலத்தில் 'திருச்சபை' என்ற ஒன்று இல்லை. அவரின் உயிர்ப்பிற்குப் பின்தான் 'திருச்சபை'(கள்) உருவாகின்றன. ஆகவே, இயேசு இந்த அறிவுரையைச் சொல்லியிருக்கும் வாய்ப்பில்லை. இயேசு சபையையோ, சமயத்தையோ உருவாக்க வந்தவர் அல்ல. பின் வந்த சீடர்கள், அரசர்கள், நிலாக்கிழார்களின் உருவாக்கமே சமயம் மற்றும் சபை. மேலும், இயேசு தரும் மூன்றாம் வாக்குறுதி நாம் அடிக்கடி கேட்டிருக்கும் ஒன்று: 'எங்கே இரண்டு மூன்று பேர் என் பெயரால்...' கிபி 70ஆம் நூற்றாண்டில் எருசலேம் ஆலயம் இடிக்கப்பட்ட பின் யூதர்களும், கிறித்தவர்களாக மாறிய யூதர்களும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை இதுதான்: 'கோயில் இடிந்து விட்டதே! இப்போது கடவுள் எங்கே போனார்?' அதற்கு விடையாக நற்செய்தியாளர் கண்டுபிடிக்கும் சொல்லாடல் தான் இது: 'கடவுள் உங்கள் நடுவில் இருக்கின்றார்!'

இந்த நற்செய்திப் பகுதியைச் சுற்றியிருக்கும் இந்தச் சின்னச் சின்ன பின்புலச் சிக்கல்களை நீக்கிவிட்டுப் பார்ப்போம். இன்று இயேசு நமக்கு என்னதான் சொல்கிறார்?

அ. தவறுகளைத் திருத்த முனைந்ததாலே பல உறவுகளை நம் வாழ்வில் நாம் இழந்திருக்கலாம். 'நீ என்ன யோக்கியமா?' எனவும், 'உன் வியாபாரத்தை மட்டும் பார்!' என்று கடின வார்த்தைகளை நாம் கேட்டிருக்கலாம். திருத்த நினைப்பது நல்லது தான். ஆனால் அதற்கான வழிமுறையும் சரியாக இருக்க வேண்டும். இயேசு இங்கே ஒரு சிறந்த உளவியல் நிபுணராக அறிவுரை கூறுகின்றார். முதலில் தவறு செய்தவரை தனிமையில் அணுக வேண்டும். இது திருத்த நினைப்பவரையும் சுயஆய்வுக்கு அழைக்கும் ஒரு தருணம். தவறுகள் தனிமையிலும், நன்மைகள் பொதுவிலும் பேசப்பட வேண்டும் என்பது மனித மூளை எதிர்பார்க்கும் ஒன்று. பின், இரண்டு அல்லது மூன்று பேர்.  அங்கும் அவர் சரியாகவில்லை எனில் பொதுவான சமூகத்திற்கு தவறு கொண்டுசெல்லப்பட வேண்டும். 'தப்பறையான போதனை' என்னும் தவறே இங்கு பேசப்படுகிறது. நம் தவறுகள் சிலவற்றுக்கு இயேசுவின் இந்தப் போதனை பொருந்தாமலும் போகலாம். சில நேரங்களில் 'சமூகம்' ஒருவரின் திருந்தாத நிலைக்குக் காரணமாகவும் மாறிவிடுகின்றது.

ஆ. நாம் இங்கு எப்படி இருக்கிறோமோ, அங்கும் அப்படித்தான் இருக்கும். 'எண்ணம் உனக்கு!' என்பது கண்ணதாசன் மொழி. நாம் மன்னிப்பை, இறங்கிவருதலை, பரந்த மனப்பான்மையைக் கொண்டிருந்தால் அதையே நாம் திரும்பவும் பெறுகிறோம். விண்ணகம் என்பது இதுதான். ரொம்ப நாள் சண்டை போட்டு, திடீரென்று சமாதானம் ஆகும் போது நம்மையறியாமல் ஒரு சுதந்திர உணர்வு நம்மைப் பற்றிக் கொள்கிறது. அதுதானே விண்ணகம்.

இ. நம் நடுவில் கடவுள். ஒருவர் மற்றவர் காட்டும் அன்பிலும், கரிசணையிலும், மனிதாபிமானத்திலும் தான் கடவுள் இருக்கின்றார். இந்த இடத்தில் அருமையான ஒரு வாழ்வியல் சிந்தனையும் ஒளிந்திருக்கிறது. அதாவது நாம் ஒருவர் மற்றவரைத் தண்டிக்க நமக்கு உரிமை இல்லை. சுட்டிக் காட்டுத்தான் முடியும். சின்னச் சின்ன உறவுச் சண்டைகளில் நாம் சுட்டிக் காட்டுவதற்குப் பதில் உடனடியாக தண்டனை தான் கொடுக்க நினைக்கிறோம். 'இனி உன் கூட பேச மாட்டேன்!' என்று ஒதுக்கி வைப்பதால் மனவருத்தம் போய்விடுமா? அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு எதிர்மறை உணர்வு நம் கன்னத்தில் அறையாதா? கடவுளை நாம் அண்ணாந்து பார்க்கத் தேவையில்லை. அருகில் பார்த்தாலே போதும்.


Monday, July 14, 2014

உமது அரசு வருக!

அப்பம் பகிர்ந்தளித்தலின் நிகழ்விற்குப் பின் தன்னை அவர்கள் பிடித்துக் கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்று எண்ணும் இயேசு அவர்களை விடுத்து ஓடுகின்றார். ஆனால், 'தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி! தந்தையாம் தாவீதின் அரசு வாழ்க!' என்று மக்கள் குருத்தோலைகள் ஏந்தி ஆரவாரம் செய்யும் போது அமைதி காக்கின்றார். 'நீ யூதர்களின் அரசனா?' என்ற பிலாத்துவின் கேள்விக்கும், 'அரசன் என்று நீர் சொல்கிறீர்!' என தொட்டும் தொடாமல் பதில் சொல்கின்றார். சிலுவையில் நல்ல கள்வன், 'நீர் அரசுரிமை பெற்று வரும்போது என்னை நினைவுகூறும்!' என்று சொல்லும் போது, மறுக்காமல், 'நீ இன்றே என்னோடு வான்வீட்டில் இருப்பாய்!' என்கிறார். இந்த நிகழ்வுகளை மட்டும் வைத்து இயேசுவை அரசர் என்று முடிவு செய்வது இயலாததாக இருக்கிறது.

13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து 'கிறிஸ்து அரசர்: அனைத்துலகிற்கும் ஆண்டவர்' என்ற திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நூற்றாண்டில் அரசர்கள் வரலாற்றில் கோலோச்சிய நேரம். தங்களைப் போல கடவுளையும் அரசராக்கி விட்டால் தங்களுக்கு எந்தவித குற்றவுணர்வும் இருக்காது என்று இயேசுவையும் அரசராக்கி விட்டார்களோ? என்றும் எண்ணத் தோன்றுகிறது.

தன் பணி வாழ்வு முழுவதும் இயேசு அரசர்கள் மற்றும் ஆள்வோரின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவராகவும், பதவி, அதிகாரம் இவற்றை நாடாதவராகவுமே காட்சியளிக்கின்றார். ஆனால் தொடக்க காலத் திருச்சபைக்கு எழுதப்பட்ட திருமுகங்களில் அவர் அரசுரிமை பெறுபவராக முன்வைக்கப்படுகின்றார். தூய பவுல் கொலோசை மற்றும் பிலிப்பி நகர மக்களுக்கு எழுதும் கடிதங்களிலும், தூய பேதுரு எருசலேமில் வாழும் தன் திருச்சபைக்கும் எழுதும் கடிதங்களிலும் இயேசு தந்தையின் வலப்பக்கத்தில் அரசுரிமை பெற்று வீற்றிருக்கிறார் என்று எழுதுவதுடன், அவர் மீண்டும் உலகை நடுத்தீர்க்க வருவார் என்றும் எழுதுகின்றனர்.

இயேசுவின் அரசுரிமையை எப்படிப் புரிந்து கொள்வது?

1. வில்லியம் ஷேக்ஸ்பியர் மேன்மையாக இருப்பதைப் பற்றி எழுதும்போது மூன்று விதமான மக்களைக் குறிப்பிடுகின்றார்: சிலர் பிறப்பிலேயே மேன்மையாக இருக்கின்றனர். சிலர் மேல் மேன்மை திணிக்கப்படுகின்றது. சிலர் மேன்மையை தங்கள் வாழ்வால் அடைகின்றனர். இது அரசுரிமைக்கும் பொருந்தும். மூன்று வகையான அரசர்களை நாம் வரலாற்றில் பார்க்கின்றோம்: ஒன்று, பிறப்பிலேயே அரசராக இருப்பவர்கள். உதாரணத்திற்கு, சாலமோன். இரண்டு, அரசுரிமை இவர்கள் மேல் திணிக்கப்படுகின்றது. உதாரணம், தாவீது. மூன்று, தங்கள் வாழ்வால் அரசுரிமையை அடைகின்றனர். உதாரணம், மோசே. இவர் அரசர் இல்லையென்றாலும் தலைவர் என்ற அடிப்படையில் இவரை அரசர் என்று எடுத்துக்கொள்ளலாம். நாம் விளையாடும் செஸ் விளையாட்டில் இந்த மூன்றையும் பார்க்கலாம். 'ராஜா!' இவர் பிறப்பால் அரசரால் இருப்பவர்கள். இவர் இல்லையென்றால் ஆட்டம் முடிந்துவிடும். 'ராணி! அமைச்சர்! பிஷப்! குதிரை! யானை!' - இவர்கள்மேல் அதிகாரம் திணிக்கப்படுகிறது. அதாவது இவர்களுக்கென்று பிரத்யேக பாதை ஆட்டத்தில் இருக்கிறது. மூன்றாவதாக, 'சிப்பாய்கள்!' - இவர்கள் அடிப்படையில் அதிகாரம் அற்றவர்கள் என்றாலும் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு முயற்சி செய்து கடந்து விட்டார்கள் என்றால் ஆட்டத்திலேயே அதிக அதிகாரம் பெற்றவர்களாக மாறி விடுகின்றனர். இயேசுவின் அரசுரிமை எந்த வகை? இயேசு இந்த மூன்று நிலைகளுக்கும் பொருந்துவார். கடவுளின் மகன் என்ற அடிப்படையில் அவர் பிறப்பால் அரசர். மற்றவர்கள் இவரை நம்பிய போது திணிக்கப்பட்ட அரசுரிமை பெறுகின்றார். இறுதியாக, தன் வாழ்வால், பணியால், இறப்பால், உயிர்ப்பால் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு கடந்து போனவராக அரசுரிமை பெறுகிறார்.
நாமும் அரசர்கள் தாம்! எப்போது? நம் வாழ்வின் அன்றாட கடமைகளைச் சரிவரச் செய்து, நாமும், நம் சக மனிதர்களும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, அதற்காக நம் ஆற்றலைச் செலவிடத் துணியும்போது!

2. அரசன் என்றால் 'பெஸ்ட்'. கால்பந்து உலகின் அரசன் 'ஜெர்மனி' என்றும், கிரிக்கெட்டின் அரசன் 'டெண்டுல்கர்' என்றும், அல்வாவின் அரசன் 'இருட்டுகடை' என்றும், பால்கோவாவின் அரசன் 'திருவில்லிபுத்தூர் புளியமரத்தடி' என்றும், சொகுசுப் பேருந்துகளின் அரசன் 'கே.பி.என்'(!) என்றும், ஃபோன்களின் அரசன் 'ஐஃபோன்' என்றும், கணிணிகளின் அரசன் 'விண்டோஸ்' என்றும் சொல்கின்றோம். அரசன் என்பவன் பெஸ்ட்டாக இருக்க வேண்டும். பெஸ்ட்டாக இருப்பது என்றால் என்ன? 'காம்ப்ரமைஸ்' செய்யாமல் இருப்பது. நம் வாழ்வின் மதிப்பீடுகளோடு நாம் சமரசம் செய்யும் போது நீர்த்துப்போய்விடுகிறோம். 'நம்ம பால்கோவா தான் ஃபேமஸ். கொஞ்சம் மைதா சேர்த்தால் யாருக்குத் தெரியும்' என்று பால்கோவாவில் சமரசம் செய்யப்பட்டால் அதை நாம் பெஸ்ட் என்று சொல்வதில்லை. இயேசு தன் வாழ்வில் ஒருபோதும் யாருடனும் 'காம்ப்ரமைஸ்' செய்யவேயில்லை. தன் மதிப்பீடுகளோடும் அவர் 'காம்ப்ரமைஸ்' செய்து கொண்டதில்லை. 'இது சரி!' என்றால் 'இது தான் சரி!' என்றார். 'இதுவும் சரி! அதுவும் சரி!' என்று சின்னச் சின்ன விஷயங்களில் செய்த சமரசங்களால் தான் சவுல், தாவீது, சாலமோன் என எல்லா அரசர்களும் தங்கள் 'பெஸ்ட்' நிலையை இழந்தனர். அரசன் என்றால் எப்போதும் 'பெஸ்ட் கண்ணா! பெஸ்ட்!' என்று இருக்க வேண்டும்.

3. இன்று நமக்குத் தேவையெல்லாம் நல்ல தலைமை. இன்று அரசர்களாக நிற்கும் அரசியல்வாதிகளும், கார்பரேட் முதலாளிகளும், ஏகாதிபத்திய நாடுகளும் அடுத்தவர்களை அழித்து தாங்கள் வாழ வேண்டும் என்றே நினைக்கின்றனர். 'தான் அழிந்தாலும் தன் மக்கள் வாழ்வு பெற வேண்டும்' என்ற இயேசுவின் அரசுரிமைச் சித்தாந்தம் இன்று செல்லாக் காசாகி விட்டது. 'எங்கிருந்தாவது ஒரு மெசியா வருவாரா? விலைவாசியைக் கட்டுப்படுத்துவாரா? வாழ்வாதாரங்களைப் பொதுவாக்குவாரா? மனித மாண்பைக் காப்பாற்றுவாரா?' என்று இன்று நாம் வானத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். 'நான் ஒரு அரசன்! நான் ஆளப்பிறந்தவன்! இலவசங்களால் என்னை வாங்க முடியாது! என் படிப்பு என் உரிமை! என் மொழி என் உரிமை! என் வேலை என் உரிமை!' என்று நாம் சிந்திக்கத் தொடங்கி நம் தன்மானத்தோடு 'காம்ப்ரமைஸ்' செய்யாமல் துணிவுடன் உறுதியாக நின்றால் நம்மைச் சுற்றி ஒரு இனிய அரசு மலரும்!

'உமது அரசு வருக!'


Sunday, July 13, 2014

இது உனக்கு! இன்னும் உனக்கு!

(திருச்சிலுவை மகிமைப் பெருவிழாவிற்கான (14.09.2014) மறையுரை)

இன்று திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். எருசலேமில் கிபி 335ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் ஆண்டவரின் உயிர்ப்புக்கென்று ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. 13ஆம் நாள் உயிர்ப்பை நினைவுகூர்ந்த மக்கள் 14ஆம் தேதி ஆண்டவரின் சிலுவைச்சாவை நினைவுகூர்ந்து சிலுவையை அடையாளமாக வைத்து வழிபட்டனர். 5ஆம் நூற்றாண்டிலிருந்து திருச்சிலுவை விழா செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது.

சிலுவை எப்படி திருச்சிலுவையாக மாறியது? சிலுவைச் சாவு என்றால் அது உரோமையர்கள் கொண்டு வந்தது என்பது பலரின் கருத்து. ஆனால் உலகின் பல்வேறு அரசியல் அமைப்பு முறைகளை ஆராய்ந்தால் இந்தியர்கள், கிரேக்கர்கள், எபிரேயர்கள், உரோமையர்கள் என எல்லா 'கலாச்சாரங்களிலும்' ஏதோ ஒரு வகையில் மக்கள் மரத்தால் அழிக்கப்பட்டிருக்கின்றனர். செலவில்லாத மரண தண்டனை சிலுவைத் தண்டனை. ஆகையால் தான் உரோமையர்கள் இதைக் கைக்கொள்கின்றனர். எதற்காக அழியப்போகும் கைதிகள் மேல் பணத்தைச் செலவழிக்க வேண்டும். மேலும் சிலுவை மரணத் தண்டனையில் யாரும் அருகில் இருந்து கவனிக்க வேண்டும் என்பதும் இல்லை.

இயேசுவின் காலத்தில் சிலுவைச் சாவு பல்வேறு வகைகளில் நிகழ்த்தப்பட்டது. வழக்கமாக மரண தண்டனை பெறுவோர் கொல்லப்பட்ட சிலுவை மரத்தில் ஏற்றப்பட்டனர். சிலுவையில் ஒருசிலர் அறையப்பட்டதாகவும், மற்றும் சிலர் கட்டப்பட்டதாகவும் ஜோசப் பிலேவுயுஸ் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். உயிருடன் யாராவது சிலுவையில் அறையப்பட்டால் அவர்களின் நாக்கு அறுக்கப்பட வேண்டும் எனவும், அவர்களின் ஆண்குறிகள் சிதைக்கப்பட வேண்டும் எனவும், ஆடையின்றி அறையப்பட வேண்டும் எனவும் செசரோவின் அரசியல் டைரிக்குறிப்புகள் தெரிவிக்கின்றனர். மேலும் சிலுவையில் அறையப்பட்ட உடல்களை யாரும் கல்லறையில் அடக்கம் செய்ய மாட்டார்கள். அவர்களின் உடல் வானத்துப் பறவைகளுக்கும், காட்டு நாய்களுக்கும் உணவாகப் போய்விடும். சில மாதங்கள் கழித்து சிலுவையில் தொங்கும் எலும்புக் கூட்டை எடுத்து ஒரு பள்ளத்தாக்கில் போடுவார்கள். அப்படி அவர்கள் பல ஆண்டுகளாக எலும்புக் கூடுகளை நிறைத்த இடம்தான் கொல்கொத்தா. இதன் மற்றொரு பெயர் மண்டை ஓட்டு இடம்.

சிலுவை மரணம் உரோமையருக்கு எதிராக அரசியல் குற்றம் புரிவோருக்கு என நியமிக்கப்பட்டிருந்தது. மேலும் சிலுவை மரணம் அனைவரும் பார்க்கும் வண்ணம் பொதுவாக நிறைவேற்றப்பட்டது. அப்படி இருந்தால் தான் அதைப் பார்ப்பவர்கள் திருந்துவர் என்பது அவர்களின் நம்பிக்கை.

இயேசு தலைமைக்குருவின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டபோது அவர் மேல் சுமத்தப்பட்ட ஒரே குற்றச்சாட்டு 'இவன் தன்னையே கடவுளின் மகன் என்று சொல்லி கடவுளுக்கு இணையாக்கிக் கொண்டான்!' என்பதுதான். கடவுளுக்கு எதிராக பேசும் ஒருவருக்கு யூத சட்டம் அனுமதித்த மரண தண்டனை 'கல்லெறிதல்'. ஆனால் இயேசுவுக்கு அரசியல் குற்றத்திற்கான தண்டனை வழங்கப்படுகிறது.

இயேசு சிலுவையில் அறையப்பட்டதற்கு வரலாற்றுக் குறிப்புகளை விட, 'ஆன்மீகக் குறிப்புகளே' மேலோங்கியுள்ளன. மானிடமகன் உயர்த்தப்பட்டபின் அனைவரையும் தன்னிடம் ஈர்த்துக்கொள்வார் என்று இயேசு நிக்கதேமிடம் கூறுகின்றார். இங்கே உயர்த்தப்படுதல் என்பது இயேசுவின் உயிர்ப்பை குறிக்கிறது என சிலர் வாதிட, மற்றவர்கள் சிலுவையில் அறையப்படுதலைக் குறிப்பிடுவதாகச் சொல்கின்றனர். மற்ற நற்செய்தியாளர்கள் 'உயர்த்தப்படுதல்' குறித்து எழுதவேயில்லை. வெறும் நற்செய்திக் குறிப்புகளை வைத்து இந்த விழாவிற்கு நம்மால் அர்த்தம் காண முடியாது.

வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும் போது சிலுவை இயேசுவுக்கு தந்த வலியை விட மனுக்குலத்திற்கு இன்னும் அதிக வலியைத் தந்திருக்கிறது. சிலுவைப் போர்களினால் மேற்கத்திய நாடுகள் ஒன்றைறொன்று அடித்துக் கொண்டதோடு மட்டுமல்லால், யூதர்கள், இஸ்லாமியர்கள் என மற்ற மதத்தினர் மேலும், தங்கள் காலனி ஆதிக்க நாடுகள் மேலும் போர் தொடுத்து செந்நீரும், கண்ணீரும் சிந்தி பலர் உறவுகளையும், உடைமைகளையும், உயிர்களையும் இழந்தது என்ற உண்மை நம் கன்னத்தில் அறைகிறது.

இந்தப் போர்களில் வெற்றி பெற்றவர்கள் வழியாகத் தான் திருச்சிலுவை மகிமை பெற்றதா? ஒருசிலரின் சுயநலத்திற்கான, அதிகாரத் தக்கவைப்பிற்கான முயற்சிக்காக சிலுவை பயன்பட்டதென்றால், அது அன்பின் சின்னமாக, இரக்கத்தின் சின்னமாக, மன்னிப்பின் சின்னமாக, மீட்பின் சின்னமாக எப்படி இருக்க முடியும்? என்பதும் நாம் கேட்க வேண்டிய கேள்வி.

நம் வழிபாடுகள், நம் பயணங்கள் அனைத்தையும் சிலுவை அடையாளமிட்டுத் தொடங்குகிறோம். சிலருக்கு சிலுவை இன்னும் துன்பத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. சிலர் ஆராதிக்கின்றனர். சிலர் அலறி ஓடுகின்றனர்.

இந்தச் சிலுவை நமக்கு இன்று சொல்வது மூன்று:

1. வெறுமை. கடவுள் தன்மையை தன் பிறப்பில் இழக்கின்ற இயேசு, தன் மனிதத்தன்மையை சிலுவையில் இறக்கின்றார். முந்தையதை விட அதிக வலி தருவதாக இது இருந்திருக்கும். 'இது எனக்கு! இன்னும் எனக்கு!' என்று அனைத்தையும் சேர்த்துக்கொண்டே போகும் நம் நவீன கலாச்சாரத்திற்கு மாற்றுதான் இயேசுவின் வெறுமை. 'இது உனக்கு! இன்னும் உனக்கு!' என்று மாற்றுச்சிந்தனையைத் தருவதுதான் சிலுவை.

2. சிலுவை ஒரு துணிச்சல். என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்! என்று துணிந்ததால் தான் இயேசுவால் சிலுவையை அரவணைக்க முடிகின்றது. நம் வாழ்வை நாம் முழுமையாக வாழத் தடையாக இருப்பது நம்மிடம் குறைந்து வரும் துணிச்சல். 'அதெல்லாம் நமக்கெதுக்குப்பா!' என்று ஒதுங்கும் மனநிலை வாழ்க்கையை நம்மால் முழுமையால் வாழ முடியாமல் செய்து விடுகிறது. துணிந்தவுனுக்கு தூக்கு மேடை ஒரு பொருட்டல்ல என்பதை உணர்ந்தவர்தான் இயேசு.

3. ரெட்கிராஸ், ஆஸ்பத்திரி என நாம் திரும்பும் பக்கமெல்லாம் சிலுவை நிற்கின்றது. சிலுவை என்றால் நலம் எனவும், உயிர்ப் பாதுகாப்பு எனவும் அர்த்தப்படுத்தப்படுகின்றது. நாம் சிலுவை அடையாளம் வரைவதாலும், சிலுவையால் அலங்காரம் செய்வதாலும் திருச்சிலுவைக்குக் கிடைக்காத பெருமை நாம் நலம் காப்பதிலும், உயிர் காப்பதிலும் தானே கிடைக்கிறது.