Friday, April 26, 2019

நம்பிக்கையின்மை

இன்றைய (27 ஏப்ரல் 2019) நற்செய்தி (மாற் 16:9-15)

நம்பிக்கையின்மை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மாற்கு நற்செய்தியாளரின் பதிவின்படி இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். மாற்கு நற்செய்தி இரண்டு இடங்களில் முடிகிறது: ஒன்று, மாற் 16:8 - இதன்படி, இயேசுவின் உயிர்ப்பு சீடர்களுக்கு அச்சத்தைத் தருகின்றது. இரண்டு, மாற் 16:20 - இதன்படி, இயேசு விண்ணேற்றம் அடைகின்றார். மாற் 16:9-20 என்னும் பகுதி அடைப்புக்குறிக்குள் உள்ளது. ஏனெனில், இது பல மாற்கு நற்செய்தி முதல் பிரதிகளில் இல்லை. இது பிற்சேர்க்கையாக இருந்திருக்கலாம்.

இயேசு உயிர்பெற்று எழுந்து பதினொருவருக்கும் தோன்றுகின்றார். ஆனால், அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கடிந்துகொள்கிறார் இயேசு.

மாற்கு நற்செய்தியில் நாம் காணும் சீடர்கள் மிகவும் பரிதாபத்துக்குள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இயேசுவைச் சில நேரங்களில் புரிந்துகொள்ளவில்லை. சில நேரங்களில் தவறாகப் புரிந்துகொண்டனர். இயேசு அவர்களின் இயலாமையைப் பல முறை கடிந்துகொள்கின்றார். இந்த நம்பிக்கையின்மையும் கடின உள்ளமும் இறுதிவரை தொடர்கின்றது.

'கடின உள்ளம்,' 'நம்பிக்கையின்மை' - இரண்டும் இணைந்தே செல்கின்றன. கடின உள்ளம் எதையும் எளிதாக நம்புவதில்லை. நம்பிக்கையின்மையால் துன்புறும் உள்ளம் கடினப்பட்டுப்போகும்.

முதல் ஏற்பாட்டில், எகிப்தின் கொள்ளை நோய்கள் நிகழ்வில், பாரவோனின் மனம் அடிக்கடி கடினப்படுகிறது. மூன்றுமுறை ஆண்டவராகிய கடவுளே பாரவோனின் மனத்தைக் கடினப்படுத்துகிறார். மற்ற நேரங்களில் பாரவோனின் மனம் தானாவே கடினப்பட்டுக்கொள்கிறது. ஆகையால், ஆண்டவரின் அரும்பெரும் செயல்களைக் கண்டாலும் அவரால் நம்ப முடியவில்லை.

மேலும், இஸ்ரயேல் மக்கள் பாலைவனத்தில் அவர்களுடைய கடின உள்ளத்திற்காக கடவுளின் தண்டனைக்கு உள்ளாகின்றனர்.

உள்ளம் எப்போது கடினப்படும்?

கசப்பாக இருக்கின்ற உள்ளம் கடினப்படும்

நம் வீட்டில் நடக்கிற ஒரு இழப்பு அல்லது இறப்பு அல்லது விபத்து ஒரு கசப்பான அனுபவத்தை நமக்கு விட்டுச் செல்கிறது. இந்த நேரத்தில் நம் மனம் எதையும் ஏற்காது, எதையும் நம்பாது, எதையும் எதிர்நோக்காது. மேலும், துன்பமே ஒருவருடைய வாழ்வில் அடிக்கடி வருகிறது என்றால் ஒரு கட்டத்தில் அவருடைய மனம் மரத்துப்போய்விடும். அவரால் ஒன்றும் செய்ய இயலாமல் போய்விடும்.

இயேசுவின் சீடர்கள் பெற்ற துன்ப அனுபவம் அவர்களின் உள்ளத்தைக் கடினப்படுத்துகிறது.

'எல்லாம் கடந்து போகும்' என்ற எண்ணம் சீடர்களுக்கு வரவில்லை. இயேசு அதைச் சுட்டிக்காட்டுகின்றார். அவர்கள் தங்களுடைய எண்ணங்களில் உறைந்துபோவதை இயேசு விரும்பவில்லை.

நம் வாழ்வு உறைந்து போகாமல் பார்த்துக்கொள்தல் நலம்.


1 comment:

  1. உண்மைதான்....பல நேரங்களில் நமக்கு ஏற்படும் இழப்புகள் நமக்கு வெறுப்பையும், கசப்பையும் ஒரு சேரக் கொண்டு வருகின்றன." பட்டைதீட்டத்தீட்டத்தான் வைரம்", "தீயில் காட்டக் காட்டத்தான் தங்கம்" எனும் பழமொழிகள் எல்லாம் அந்நேரத்தில் அர்த்தம் தராமல் போய்விடுகின்றன.'எல்லாம் கடந்து போகும்' எனும் வார்த்தைகள் யாருக்கோ சொல்லப்பட்டது போல் தோன்றும்.நமது மனம் கசப்படையவும்,கடினப்படவும் காரணங்கள் வெளியே இருந்து வரவேண்டுமென்பதில்லை.பல சமயங்களில் நாமே காரணியாகி விடுவோம்.அம்மாதிரி நேரங்களில் இறைவனின் அரும்பெரும் செயல்களை நினைவு கொள்வோம்; அவரின் உடனிருப்பிற்காக நன்றி சொல்வோம். எல்லாம் கடந்து போகும்...நம் கடின உள்ளமும்,கசப்பும் உட்பட.ஒரு தினப்போராட்டத்தையும்,அதற்கான தீர்வையும் பதிவாகத் தந்த தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete