Tuesday, April 23, 2019

எங்களோடு தங்கும்

இன்றைய (24 ஏப்ரல் 2019) நற்செய்தி (லூக் 24:13-32)

எங்களோடு தங்கும்

பாஸ்கா எண்கிழமையில் நாம் வாசிக்கும் நற்செய்திப் பகுதிகள் எல்லாம் இயேசுவின் உயிர்ப்பு மற்றும் உயிர்ப்புக்குப் பின் இயேசுவின் தோற்ற நிகழ்வுகளை மையப்படுத்தியதாக இருக்கின்றன. அவ்வகையில் இன்றைய நற்செய்தி வாசகம் 'எம்மாவு வழியில் சீடர்கள் இயேசுவைச் சந்திக்கும் நிகழ்வை' நமக்குப் படம் பிடித்துக்காட்டுகிறது.

சீடர்களின் சோகம், முகவாட்டம், ஏமாற்றம், வெகுளித்தனம், ஆச்சர்யம் என நிறைய உணர்வுகளை இங்கே பிரதிபலிக்கிறார் நற்செய்தியாளர் லூக்கா.

- 'எங்களோடு தங்கும். ஏனெனில், மாலை நேரம் ஆயிற்று. பொழுதும் போயிற்று' என்று கூறிக் கட்டாயப்படுத்தி இயேசுவை இணங்க வைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார் (காண். லூக் 24:29)

இந்த வசனத்தை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'விருந்தோம்பலுக்கு அழைப்பதும், அந்த அழைப்பை ஏற்பதும்' ஒரு நல்ல பண்பு. அழைப்பது எந்த அளவிற்கு நல்லதோ, அந்த அளவிற்கு ஏற்பதும் நல்லது.

என்னோடு உரோமையில் தங்கியிருந்த ஒரு வயதான பிரேசில் நாட்டு அருள்தந்தை, தன்னுடைய பாலிசியாக இதை வைத்திருந்தார்: 'நுல்லா க்யேதரே. நுல்லா ரிஃப்யூதாரே!' - அதாவது, 'நீயாக எதையும் கேட்காதே. வருகின்ற எதையும் நீயாக ஒதுக்காதே!' அதாவது, 'உங்க வீட்டுக்குச் சாப்பிட வரவா?' என்று யார்கிட்டயும் கேட்காதே. 'எங்க வீட்டுக்குச் சாப்பிட வர்றீங்களா?' என்று யாராவது கேட்டால் தட்டிக் கழிக்காதே. ஆனால், சில நேரங்களில் விருந்தோம்பலை ஏற்காமல் இருப்பதும் நன்றே என்பது என் கருத்து.

மேற்காணும் நிகழ்வில் வரும் இரண்டு சீடர்களும் ஒரு வழிப்போக்கரை எப்படி இரவு தங்க அழைத்தனர்?

வழிப்போக்கரை யாரும் எளிதில் நம்புவதில்லை. அதுவும் பாலஸ்தீனம் போன்ற பாலைவனப் பகுதியில் தெரியாத புது நபர்களை யாரும் நம்புவதில்லை. அவர்களை தங்கள் இல்லங்களுக்குள் அழைப்பதில்லை. இவர்களுக்காக ஒவ்வொரு ஊரிலும் சத்திரங்கள் இருந்தன.

இந்தச் சீடர்கள் வழிப்போக்கரை அழைப்பதோடல்லாமல், அவரை வற்புறுத்தி தங்களோடு தங்குமாறு இணங்க வைக்கிறார்கள். ஏன்?

நம் மனம் வெறுமையாக இருக்கும்போது ஆறுதல் சொல்கின்ற நபரை நம்மோடே எப்போதும் வைத்துக்கொள்ள நினைக்கிறது நம் ஏழை மனம். இந்த ஒரு காரணத்திற்காகத்தான் சீடர்கள் வழிப்போக்கரைத் தங்களோடு தங்கவைக்கின்றனர்.

ஆக, இன்று பல இதயங்கள் மற்றவரின் இதமான பேச்சுக்காகக் காத்திருக்கின்றன. உடைந்து போன உள்ளம் ஆறுதல் தரும் உள்ளத்தை அப்படியே நம்பி விடுகிறது. அதாவது, வறண்டு, பாளம் பாளமாக உடைந்து கிடக்கும் குளம் ஆற்று நீரை அப்படியே உறிஞ்சி தன்னகத்தே வைத்துக்கொள்வதுபோல.

அவர்கள் அழைக்கிறார்கள். இவர் செல்கிறார். இந்த நிகழ்வே ஒரு இறைவெளிப்பாட்டு நிகழ்வாக மாறுகிறது.

ஆக, நம் உள்ளம் உடைந்து போயிருக்கும் நேரத்தில் நாம் இன்னொருவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டால் பயணம் இனிதாகும். அப்பயணமே நம் வாழ்வின் இறையனுபவமாகும்.


1 comment:

  1. " அவர்கள் அழைக்கிறார்கள்.இவர் செல்கிறார்.இந்த நிகழ்வே ஒரு இறைவெளிப்பாட்டு நிகழ்வாக மாறுகிறது." இறைப்பிரசன்னம் நம்முடன் இருக்கையில் எந்த நிகழ்வுமே இறைவெளிப்பாட்டு நிகழ்வே! " எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" ....... எனக்குப் பிடித்த,நான் எனக்குள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள் இவை."நம் உள்ளம் உடைந்து போயிருக்கும் நேரத்தில் நாம் இன்னொருவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டால் பயணம் இனிதாகும்." தந்தையின் கூற்று சரியே! ஆனால் நம்மையடுத்த ஒருவரின் உள்ளம் உடைந்து போயிருக்கும் நேரத்தில் நாம் அவருக்குத் துணை சென்றாலும் அவரின் பயணம் இனிதாகும் இல்லையா? அந்த பயணமும் நம் வாழ்வின் மிகச்சிறந்த இறையனுபவமாகுமே! யோசிப்போம்! உயிர்த்த ஞாயிறுக்குப்பின் தந்தை தரும் முதல் பதிவு.அருமை! வாழ்த்துக்களும்!! நன்றியும்!!!

    ReplyDelete