Monday, April 15, 2019

மனமகிழ்வு நேரம்

இன்றைய (16 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 13:21-33, 36-38)

மனமகிழ்வு நேரம்

துறவு இல்லங்களிலும், விடுதிகளிலும், அருள்பணியாளர் பயிற்சி மையங்களிலும், கூட்டுக் குடும்பங்களிலும் இரவு உணவிற்குப் பின் 'மனமகிழ்வு நேரம்' என்று ஒன்று உண்டு. ஏறக்குறைய 30 நிமிடங்கள் நடக்கும் அந்நிகழ்வில் குழு விளையாட்டுக்கள், நகைச்சுவை பரிமாற்றம், நடந்த நிகழ்வுகளின் திறனாய்வு போன்றவை இருக்கும். இப்படி அமர்ந்து பேசிவிட்டவர்கள் எந்தவொரு மனத்தாங்கலும் இல்லாமல், வருத்தமும் இல்லாமல் தூங்கச் செல்வார்கள். மனமகிழ்வு நேரம் முடிந்து காலை உணவு முடியும் வரை 'நீண்ட அமைதி' (கிராண்ட் சைலன்ஸ்) கடைப்பிடிக்கப்படும்.

இயேசுவின் இறுதி இராவுணவு முடிந்து ஒரு மனமகிழ்வு நேரமாக இன்றைய நற்செய்தி வாசகம் இருக்கிறது. இயேசு அமர்ந்திருக்கிறார். அவருடைய மார்பில் அன்புச் சீடர் சாய்ந்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் திராட்சை இரசமும் ரொமம்டியும் மீதம் இருக்கிறது. மற்ற சீடர்களும் அமர்ந்திருக்கிறார்கள். உரையாடல் இயேசு-அன்புச் சீடர்-பேதுரு என்ற முக்கோணத்தில் நகர்கிறது. பேசு பொருளாக இங்கே யூதாசு இருக்கிறார்.

'உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்'

'உங்களுள் ஒருவன் என்னை மறுதலிப்பான்'

- இப்படியாக யூதாசு மற்றும் பேதுரு செய்யப்போகின்ற செயல்களை முன்னுரைக்கின்றார் இயேசு.

இரண்டிற்கும் இரண்டு அடையாளங்கள் தருகின்றார் இயேசு:

'இரசத்தில் தோய்த்த அப்பத்துண்டு' - யூதாசு

'சேவலின் கூவல்' - பேதுரு

யூதாசு தான் செய்யப்போவதைக் குறித்து மௌனம் காக்கிறார். பேதுரு தன்னையே, 'இல்லை, இல்லை, நான் அப்படிச் செய்ய மாட்டேன்' என மறுதலித்துக்கொள்கிறார்.

இந்த நிகழ்வை இயேசு பெரிய கட்டத்தில் வைத்துப் பார்க்கிறார்: அதுதான், கடவுள் அருளும் மாட்சி.

அதாவது, தனக்கு முன்னால் நடந்தேறுகின்ற நிகழ்வுகள் - காட்டிக்கொடுத்தலும், மறுதலித்தல் - அவரை அசைக்கவில்லை.

இயேசு எல்லாரையும் ஒரே மாதிரி பார்க்கும் பக்குவம் பெற்றிருக்கிறார். ஒரு சீடர் மார்பில் சாய்ந்து தன்னை அன்பு செய்கிறார் என்று துள்ளவும் இல்லை. மற்ற இவர் காட்டிக்கொடுக்கவும், மறுதலிக்கவும் இருக்கிறார்கள் என்று துவண்டுவிடவும் இல்லை. ஒரே மனநிலை. சமமான மனநிலை. அமைதியான நிலை.

இந்தச் சமநிலை எப்போது வரும்?

- தன்னை அறிந்த ஒருவர் இந்த மனநிலையை எளிதாகப் பெறுவார்

- தன் வாழ்வை பெரிய வட்டமாக இணைத்துப் பார்க்கிறவர் இம்மனநிலையை எளிதாகப் பெறுவார்

- எல்லாவற்றிலும் கடவுளின் விரல் செயலாற்றுவதைப் பார்க்கிறவர் இம்மனநிலையை எளிதாகப் பெறுவார்

இந்தச் சமநிலை நமக்கும் வந்தால், இரவு ஒன்பது மணி மட்டுமல்ல. எல்லா நேரமும் மனமகிழ்வு நேரமே.

1 comment:

  1. அழகான,மனத்தைத் தட்டிக்கொடுப்பது போன்றதொரு உணர்வு இன்றையப் பதிவைப் படித்தவுடன்." தனக்கு முன்னால் நடந்தேறப்போகும் காட்டிக்கொடுத்தலும்,மறுதலித்தலும் அவரை அசைக்க வில்லை" இரண்டு நிகழ்வுகளுமே "அவரை" அசைத்துவிடவில்லை. காரணம்....ஒரே மனநிலை,சமமான மனநிலை,அமைதியான மனநிலை.எல்லாவற்றிலும் கடவுளின் விரல் செயலாற்றுவதைப்பார்க்கிறவர் இம்மனநிலையை எளிதாகப் பெறுவார். தந்தையின் வார்த்தைகள் மிகச்சரியே! இந்த சமநிலையான மனநிலை நமக்கும் வந்தால்,இரவு ஒன்பது மணி மட்டுமல்ல, எல்லா நேரமும் மனமகிழ்வு நேரமே!
    " மனமகிழ்வு நேரம்" அழகான விஷயம்.தான் சொல்ல வந்த கருத்தை வாசகரின் மனத்தில் பதிய வைக்க சில,பல விஷயங்களைக் கலந்து தரும் தந்தையின் யுத்திக்கு (presence of mind)ஒரு சபாஷ்!!!

    ReplyDelete