Wednesday, April 10, 2019

பேய் பிடித்தவன்

இன்றைய (11 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 8:51-59)

பேய் பிடித்தவன்

'ஒரு நாயைக் கொல்வதற்கான மிக எளிய வழி அந்த நாய்க்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என அழைப்பதுதான்' என்பது ஆங்கிலச் சொலவடை.

ஒருவரை எளிதாக அழிக்கும் வழி அவர்மேல் லேபிள் பதித்துவிடுவதுதான்.

லேபிள் அல்லது முத்திரை குத்திவிட்டால் அந்த முத்திரையே அந்த நபரை அழித்துவிடும்.

இந்த நாள்களில் எங்கு பார்த்தாலும், 'மோடி வெற்றி உறுதி' என்று திரும்ப திரும்ப ஊடகங்கள் சொல்லக் காரணம் என்ன? ரொம்ப சிம்பிள். ஒன்றை அடிக்கடி சொல்லும்போது அது உண்மையாகிவிடும். இதைத்தான் சமூகவியலில் 'லேபிளிங் தியரி' ('முத்திரையிடுதல் கோட்பாடு') என்றழைக்கின்றனர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இதுவரை இயேசுவோடு வாதிட்டுக்கொண்டிருந்த யூதர்கள் இன்று, 'நீ பேய் பிடித்தவன்' என்ற முத்திரையக் குத்துகிறார்கள். விளைவு, நற்செய்தியின் இறுதியில் நாம் வாசிக்கிறோம்: '... அவர்கள் இயேசுவின்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்'

ஏன் லேபிள்களால் இந்த வேலையைச் செய்ய முடிகிறது?

மனிதர்கள் இயல்பாகவே வெளிப்புற கவர்ச்சியின்படி தீர்ப்பிடக்கூடியவர்கள். ஆகையால்தான், 'ஒரு புத்தகத்தை அதன் அட்டையைக் கொண்டு தீர்மானிக்கக் கூடாது' என்ற எச்சரிக்கை தரப்படுகிறது.

லேபிள்களை நாம் ஏன் விரும்புகிறோம்?

மூன்று காரணங்கள்:

அ. லேபிள்கள், 'அவர்கள் - நாம்' அல்லது 'அவன் - நாம்' என்ற பிரிவை உண்டாக்கி நம்மை மேட்டிமை உணர்வுகொள்ள உதவுகின்றன. உரோமில் இருந்தபோது இதை நான் கண்டிருக்கிறேன். இந்தியர் ஒருவரும் பாகிஸ்தானி ஒருவரும் காஃபி அருந்தச் செல்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அங்கே அந்த பாகிஸ்தானி இன்னொரு பாகிஸ்தானியைக் காண நேர்ந்தால், உடனடியாக இந்த இந்தியரைக் கழற்றிவிட்டு அவருடன் சேர்ந்துகொள்வார். உடனடியாக அவருடைய மனத்தில், 'அவன் - நாம்' என்ற பிரிவு உண்டாகி இயல்பாகவே மேட்டிமை உணர்வுக்கு இட்டுச் செல்லும்.

ஆ. லேபிள்கள் நம் ஆழ்மனத்தைச் சென்றடைகின்றன. நம் மண்ணில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற பிரிவு நம்முடைய ஆழ்மனத்தில் பதிந்துவிட்டது. ஆக, அடுத்தவர்கள் நம்மை லேபிள் சொல்லி அழைக்கவில்லை என்றாலும், இயல்பாகவே என் ஆழ்மனது என் லேபிளைத் தக்கவைத்துக்கொள்ளவே விரும்புகிறது.

இ. லேபிள்கள் வேகமாகப் பரவக் கூடியவை. சின்ன உதாரணம். ஆப்பிள் ஃபோன் பற்றி அறியாத பலர், அல்லது அதைப் பயன்படுத்தாத பலர் ஆப்பிள் லோகோ பற்றி அறிந்திருப்பார்கள். ஆக, லோகோவை அறிந்தவுடன் தங்களுக்கு எல்லாம் தெரிந்ததாக நினைக்கத் தொடங்குவார்கள். லேபிள்கள் வேகமாகப் பரவுவதோடு ஆழமில்லாத தாக்கத்தையே ஏற்படுத்த வல்லவை.

இன்று நாம் இரண்டு கேள்விகள் கேட்போம்:

அ. 'இதுதான் நான்' என்று எனக்கு நானே வரையறுத்துக்கொண்ட லேபிள்கள் எவை? அவற்றைக் கடந்து என்னால் செல்ல முடிகிறதா?

ஆ. 'இதுதான் அவன்-அவள்' என்று மற்றவருக்கு நான் வரையறுக்கும் லேபிள்கள் எவை? அவற்றைக் களைய என்னால் முடிகிறதா?


1 comment:

  1. ஒருவர் மீது லேபிள் அல்லது முத்திரை குத்திவிட்டால் நாளடைவில் அதுவே அவர்களை அழித்து விடும்.இது நம்மைக்குறித்து நாம் வைத்திருக்கும் லேபிள்களுக்கும் பொருந்துமென நினைக்கிறேன்.ஆனால் ஒன்று......நாம் நம்மைப்பற்றியோ,அடுத்தவர் பற்றியோ குத்தும் லேபிள் ஏன் எதிர்மறையாகத்தான் இருக்குமென நினைக்க வேண்டும்? அவை நேர் மறையாகக் கூட இருக்கலாமே! லேபிள்களை வரையறுப்பதே தவறு என்பதற்குப்பதில் 'இதுதான் நான்' என்று எனக்கு நானே வரையறுக்கும் லேபிள்களும், 'இதுதான் அவன்- அவள்' என்று மற்றவருக்கு நான் வரையறுக்கும் லேபிள்களும் என்னையோ,பிறரையோ வாழவைப்பதாக இருக்கட்டும்! வாழ்வியல் அனுபவங்களை தினம் ஒரு பாடமாகத்தரும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete