Sunday, April 14, 2019

இந்தத் தைலைத்தை

இன்றைய (15 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 12:1-11)

இந்தத் தைலைத்தை

'பாஸ்கா விழாவுக்கு ஆறு நாள்களுக்கு' முன் என இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகிறது. 'ஆறு நாள்களுக்கு' முன் என்று தொடங்கும் இன்றைய வாசகத்தில் ஆறு பேரை நாம் சந்திக்கின்றோம்:

(1) இரண்டாம் முறை வாழ வாய்ப்பு பெற்ற இலாசர், (2) மார்த்தா - உணவு பரிமாறுவதில் மும்முரமாய் இருக்கிறார், (3) மரியா - விலையுயர்ந்த தைலத்தால் இயேசுவின் காலடிகளில் பூசுகிறார், (4) யூதாசு - 'மரியாவைத் தடுக்க' நினைத்து தைலத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுக்க நினைத்தவர், (5) யூதர்கள் - இலாசரைக் காண வந்தவர்கள், காண வந்தவரையே கொலை செய்ய நினைத்தவர்கள், மற்றும் (6) இயேசு - தன் தலைக்கு மேல் வாள் தொங்கினாலும் எதையும் அலட்டிக்கொள்ளாமல் விருந்து உண்பவர்.

இயேசுவுக்கும் யூதாசுக்குமான உரையாடலை இன்று சிந்திப்போம்.

இதற்கு முன் ஒரு சின்ன பின்புலம். நற்செய்தியாளர் யோவானுக்கும் யூதாசுக்கும் இடையே ஏதோ மனக்கசப்பு இருந்ததை அவருடைய நற்செய்தியிலிருந்து ஊகிக்க முடிகிறது. ஏனெனில், யூதாசைப் பற்றிய சாடல் இந்நற்செய்தியில் நிறைய இருக்கும். அதுவும் தேவையற்ற இடங்களில். எடுத்துக்காட்டாக, பிலாத்து இயேசுவிடம், 'உன்னை விடுதலை செய்யவும் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?' என்று கேட்கிறார். இயேசு, 'மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது' என்கிறார். இத்தோடு முடித்திருந்தால் பரவாயில்லை. 'என்னை உம்மிடம் ஒப்புவித்தவன்தான் பெரும் பாவம் செய்தவன்' என்கிறார். இந்த இடத்தில் யூதாசைப் பற்றிய குறிப்பு ஏன்?

யூதாசின் ஒழுக்க நெறியை இன்றைய நற்செய்தியில் விமர்சிக்கிறார் யோவான்: 'ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல. மாறாக, அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக்கொள்வதுண்டு.' இது தேவையற்ற விமர்சனம் என நினைக்கிறேன். தன்னிடம் பணப்பை கொடுக்கப்படவில்லை என்ற கையாலாகாத நிலையில் இவர் எழுதினாரா, அல்லது தன்னைவிட யூதாசு நம்பிக்கைக்குரியவனாய் இன்னொருத்தன் இருக்கிறான் என்ற பொறாமையில் எழுதினாரா என்று தெரியவில்லை. அல்லது யூதாசு உண்மையிலேயே செய்தாரா என்று தெரியவில்லை. அப்படி எழுதியிருந்தாலும், 'அன்பு,' 'அன்பு' என்று மூச்சுக்கு முந்நூறு தடவை தன் நற்செய்தியிலும், கடிதங்களிலும் குரல் எழுப்பும் யோவான் அன்பின் நிமித்தமாவது இதை நீக்கியிருக்கலாம்.

நிற்க.

இன்றைய நற்செய்தியில் உள்ள வார்த்தைகளை அப்படியே வைத்து நாம் புரிந்துகொள்ள முன்வருவோம்.

'இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று ஏழைகளுக்கு கொடுக்கலாம்'

இதை யூதாசு செய்த செயலோடு ஒப்பிட்டால்,

'இந்த இயேசுவை முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விற்று பாவிகளுக்காக அல்லது பாவத்திற்காக கொடுக்கலாம்'
என்று அழகாக பொருந்துகிறது.

ஆகையால்தான், இயேசுவும் உடனடியாக இதில் தன்னை உருவகிப்பதுபோல, 'ஏழைகள்-பாவிகள் என்றும் உங்களோடு இருப்பார்கள். நான் உங்களோடு இருக்கப் போவதில்லை' என்கிறார்.

யூதாசு ஏற்கனவே பணத்தை எடுப்பவனாகவும், இன்று கடவுளையே எடுப்பவனாகவும் இருக்கிறார்.

'எடுப்பவர்கள்' எப்போதும் ஆபத்தானவர்கள்.

இன்றைய நற்செய்தியில் மார்த்தா விருந்து 'கொடுக்கிறார்,' மரியா தைலம் 'கொடுக்கிறார்,' இயேசு இலாசருக்கு உயிர் 'கொடுக்கிறார்.' ஆனால், யூதாசு பணத்தை 'எடுக்கிறார்,' யூதர்கள் இலாசரின் உயிரை 'எடுக்கின்றனர்.'

எடுப்பவர்களைப் பொறுத்தவரையில் வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் ஒரு விலைக்குறிப்பு உண்டு. எல்லாவற்றையும் இவர்கள் இக்கண்கள் கொண்டே பார்ப்பார்கள். பார்ப்பதோடல்லாமல் அதை அப்படியே அவர்கள் தங்களுக்கென ஆக்கிக்கொள்ளவும் நினைப்பார்கள்.

நம் வாழ்க்கையை 'தைலம்' என வைத்துக் கொள்வோம். அது எப்படி இருக்க வேண்டும்? கடவுளின் காலடியில் ஊற்றப்பட்டு வீடு முழுவதும் மணம் தருவதாக இருக்க வேண்டும். ஆனால், பல நேரங்களில் யூதாசு போல நாம் அதைக் கணக்கிட்டு கணக்கிட்டு வாழ்கிறோம். அவ்வகை மனநிலை நம் ஏழ்மை நிலையை - வெறுமை நிலையை - அதிகரித்துவிடும். ஆகையால், 'ஏழைகள் என்றும் உங்களோடு இருப்பார்கள்.'

இந்தத் தைலம் - அது இயேசுவாக இருந்தாலும், நம் வாழ்வாக இருந்தாலும் - விற்கப்படுவது தவறு!


1 comment:

  1. ஒரே பதிவிற்குள் ஏகப்பட்ட விஷயங்கள்.புரிவது போல் தெரிந்தாலும் புரியாத பல விஷயங்கள். திரும்பத் திரும்ப வாசிக்க வைக்கும் யுத்தியோ....தந்தையைத்தான் கேட்க வேண்டும்." தைலத்தை முந்நூறு தெனாரியத்திற்கு விற்று ஏழைகளுக்குக் கொடுப்பதும்,இயேசுவை முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விற்று பாவிகளுக்காக அல்லது பாவத்திற்காக கொடுப்பதும்" எத்துணை அழகாகப் பொருந்துகின்றது."கொடுக்கும்" இயேசுவுக்கும் "எடுக்கும்" யூதாசுக்குமிடையே ஒப்புமை."எடுப்பவர்கள்" ஆபத்தானவர்களா? தெரியவில்லை. ஆனால் பார்க்கும் அத்தனை பொருளையும் அதன் விலைப்பட்டியலை வைத்து எடை போடும் மக்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள்.இந்த காசு,பணம் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட விஷயங்களையும்,மனிதர்களையும் நாம் கண்டுகொள்ள வேண்டும். இயேசுவோ,தைலமோ...."அன்பின்" பின்புலத்தில் பார்க்கப்பட வேண்டிய ஒரு விஷயத்தை ....ஒரு நபரை விற்பனைப்பொருளாகப் பார்ப்பது தவறு....கடைசி வரிகள் நச்சென்று முடிக்கிறார் தந்தை.
    யூதாசின் மேல் கொஞ்சம் பரிதாபம் கலந்த அன்பு இருப்பதில் தவறில்லை...ஆனால் அதற்காக தந்தைக்கு யோவான் மீது ஏன் இத்தனை காழ்ப்புணர்ச்சி?தெரியவில்லை.இதற்குத்தான் என்னைப்போல அரைவேக்காடுகளாக இருப்பதே நல்லது எனத் தோன்றுகிறது. இருப்பினும் ஒரு வித்தியாசமான கோணத்தில்,வித்தியாசமான பதிவைத் தந்த தந்தையைப் பாராட்டியே தீர வேண்டும்!!!.

    ReplyDelete