Tuesday, April 30, 2019

மன அமைதிக்கான மூன்று வழிகள்

இன்றைய (1 மே 2019) திருநாள் (புனித யோசேப்பு - தொழிலாளர்களின் துணைவர்)

மன அமைதிக்கான மூன்று வழிகள்

'நான் இவ்வுலகில் எவற்றையெல்லாம் செய்துமுடிக்க உழைத்தேனோ அவற்றின் மீதெல்லாம் வெறுப்புக் கொண்டேன் ... என் உழைப்பும் வீணே ... நான் உலகில் செய்த எல்லா முயற்சிக்காகவும் மனமுடைந்து போனேன் ... உழைப்புக்காக ஒருவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? வாழ்நாளெல்லாம் அவருக்குத் துன்பம். வேலையில் தொந்தரவு. இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே.' (காண். சஉ 2:18-23)

இன்று மே தினம் என்றழைக்கப்படும் தொழிலாளர் அல்லது உழைப்பாளர் தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறோம். இந்த நாளில் புனித யோசேப்பை தொழிலாளர்களின் துணைவர் என்றும் கொண்டாடுகிறோம்.

'உழைப்பினால் ஒருவர் மன அமைதியை இழக்கிறார்' என தன் எண்ணத்தைப் பதிவு செய்கிறார் சபை உரையாளர்.

ஆனால், புனித யோசேப்பு மன அமைதிக்கான மூன்று வழிகளை நமக்குக் கற்பிக்கின்றார்:

முதல் வழி: 'மற்றவர்களை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாதே!'

பிறரை நாம் இகழ்ச்சிக்கு உள்ளாக்கும்போது நாம் அவருடைய குறைய கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்க்கிறோம். அப்படி நாம் பார்க்கும்போது அவருடைய மற்ற நல்ல குணங்களை நம்மால் பார்க்க முடிவதில்லை. நாம் மற்றவரைக் குறித்து எதிர்மறை பார்வையை வைத்திருக்கும்போது நாம் நம்மை அறியாமல் அவரை இகழ்ச்சிக்கு உள்ளாக்குகிறோம். இதனால் நாம் நம்முடைய மன அமைதியை இழக்கின்றோம்.

இரண்டாம் வழி: 'இறைவனின் குரலைக் கேள்!'

புனித யோசேப்பிடம் கடவுள் நேராகவோ, வானதூதர் வழியாகவோ பேசவில்லை. ஆனால், கனவின் வழியாகவே பேசுகின்றார். கனவில் தானே வந்தார் கடவுள் என்று கடவுளின் வார்த்தையை எளிதாக எடுத்துக்கொள்ளாமல் மிகவும் முக்கியமானதாக எடுத்துக்கொள்கிறார். மேலும், 'கேட்டல்' என்பது 'கீழ்ப்படிதல்' என்ற புரிதலையும் கொண்டிருக்கிறார் யோசேப்பு. பல நேரங்களில் நாம் நம்முடைய மூளையின் குரலைக் கேட்பதால்தான் மன அமைதி நம்மிடமிருந்து அகன்றுவிடுகிறது. ஆக, மூளையின் பேச்சை மிகவும் குறைக்க வேண்டும். ஜென் மதத்தில் மூளையை குரங்கிற்கு ஒப்பிடுகின்றனர். குரங்கு போல மூளை இங்கும் அங்கும் பாய்ந்துகொண்டே இருக்கும். ஒரு நேரத்தில் தான் சொல்வதை மறு நேரத்தில் அதுவே மறுக்கும். மூளை நம்மை ஏமாற்றிவிடும். மூளையின் சிந்தனை அனைத்தையும் உண்மை என அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது. மூளையின் குரலைவிட இறைவனின் குரல் மேலானது.

மூன்றாம் வழி: 'இனியவை செய்!'

மரியாளை மனைவியாக ஏற்றுக்கொள்கின்றார். மனைவியை அழைத்துக்கொண்டு மக்கள் தொகை பதிவிற்குச் செல்கின்றார். சத்திரத்தில் இடம் தேடுகின்றார். இடம் கிடைக்காததால் மாட்டுக் கொட்டகையிலும் மாளிகையைக் கண்டுகொள்கின்றார். பெத்லகேமிலிருந்து எகிப்துக்கும், எகிப்திலிருந்து நாசரேத்துக்கும், நாசரேத்திலிருந்து எருசலேமிற்கும் என ஓடிக்கொண்டே இருக்கின்றார் யோசேப்பு. இனியவற்றை மட்டுமே செய்கின்றார் அவர். இன்னாதவற்றைத் தன்னிடமிருந்தே அகற்றி விடுகிறார்.

இறுதியாக,

அமைதி என்பது வெறும் மௌனம் அல்ல. மாறாக, அது, 'கீறல் இல்லாத முழுமை.'

நம் உழைப்பு நம்மிடம் ஒரு கீறலை உருவாக்கி நம் ஆற்றலை வெளியேற்றிவிடுகிறது. கீறல் இல்லாத பானை தண்ணீரைத் தன்னகத்தே வைத்துக்கொள்ளும். கீறல் இல்லாத உள்ளம் அமைதியைத் தன்னகத்தே வைத்துக்கொள்ளும்.

இந்த மாதம் இனிய மாதமாகட்டும்!

Monday, April 29, 2019

தான் விரும்பிய திசையில்

இன்றைய (30 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 3:7-15)

தான் விரும்பிய திசையில்

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் நிக்கதேமும் உரையாடும் நிகழ்வின் முதல் பகுதியை வாசித்தோம். இன்று அதன் தொடர்ச்சியை வாசிக்கின்றோம்.

'காற்று தான் விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது' என்கிறார் இயேசு. யோவான் நற்செய்தியில் உரையாடல் எப்போதும் இரண்டு நிலைகளில் நடக்கும். ஒன்று மேலோட்டமான நிலை. இன்னொன்று ஆழ்ந்த நிலை. இயேசு ஆழ்ந்த நிலையில் சொல்வதை மக்கள் மேலோட்டமான நிலையில் புரிந்துகொள்வார்கள்.

'நான் உமக்கு வாழ்வுதரும் தண்ணீரைத் தருவேன்' என்று இயேசு சொல்ல, சமாரியப் பெண்ணோ, 'உம்மிடம் வாளி இல்லையே. கிணறோ ஆழமானது!' என்பார்.

இதன் முன்னோட்டமாக, 'ஒருவர் மறுபடியும் பிறக்க வேண்டும்' என இயேசு சொல்ல, நிக்கதேம், 'வயதானபின் ஒருவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?' என்று கேட்கிறார்.

'மறுபடியும் பிறப்பது' என்பதை 'தூய ஆவியால் பிறப்பது' என்று சொல்கின்ற இயேசு, இதன் உருவகமாக 'காற்று வீசுதலை' முன்வைக்கின்றார். தூய ஆவியால் பிறப்பவர் காற்றின் இயல்பைக் கொண்டிருப்பார். நம்மிடம் இரு இயல்புகள் இருக்கின்றன: ஒன்று, உடல் இயல்பு அல்லது பருப்பொருள் இயல்பு - நம் உடலின் குளிர்ச்சி, வெதுவெதுப்பு, நகர்வு, இருப்பு தொடர்பானது. இரண்டு, ஆவி இயல்பு - நம் உள்ளிருக்கும் மனம். உடலின் நகர்வை நாம் கணித்துவிடலாம். ஆனால், நம் மனம் எந்த நேரத்தில் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது. மேலும், உடலுக்கு வரையறை உண்டு. ஆனால், ஆவிக்கு வரையறையும் அழிவும் இல்லை. ஆகையால்தான், நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கையில் உடல் அழிந்தாலும் ஆன்மா வாழ்கிறது.

இதை ஒட்டிய ஒரு கருத்தை சபை உரையாளர் 11:5ல் வாசிக்கின்றோம்: 'காற்றின் போக்கையோ, கருவுற்ற பெண்ணின் வயிற்றில் உயிர் வளரும் வகையையோ நீ அறிய இயலாது. அவ்வாறே, அனைத்தையும் செய்கிற கடவுளின் செயல்களையும் உன்னால் அறிய முடியாது.'

கணிக்க முடியாததும், கண்டுகொள்ள முடியாததும், அறிய இயலாததும் ஆவியின் செயல் என்றால், இந்த ஆவியை நாம் எங்கே கண்டுபிடிப்பது?

கார்ல் ரானர் என்ற இறையியலாளர் குறிப்பிடுவது போல, உடலில்தான் ஆவியின் செயல் வெளிப்பட முடியும். ஆதாமை மண்ணிலிருந்து உருவாக்கிய ஆண்டவராகிய கடவுள் தன் ஆவியை அவனுக்குக் கொடுக்கின்றார். ஆக, ஆதாம் வாழும் வரை அவனுடைய உடலும் ஆவியும் ஒருங்கியக்கத்தைக் கொண்டிருக்கின்றன.

இன்று, நாம் ஆவியின் செயல்பாட்டை எப்படி உணர்வது?

இச்செயல்பாட்டை உணர்ந்தவர்களை இன்றைய முதல் வாசகம் (காண். திப 4:32-37) நமக்கு அடையாளம் காட்டுகிறது. 'ஆவியின் செயல்பாட்டை' கொண்டிருப்பவர்கள் 'ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருக்கின்றனர்.' அவர்கள் 'ஒருவர் மற்றவரை ஊக்குவிக்கின்றனர்.'

'உம் ஆவியும் என் ஆவியும் ஒன்றாக இணைந்துவிட்டால் ஆனந்தம் ஆனந்தமே' என்ற பாடல் வரியைப் போல, அவரின் ஆவி, நம் ஆவியில் இணைந்து செயல்பாடானால் எத்துணை நலம்! நம் உடலுக்கு வரையறை இருக்கிறது. அது தன் வரையறையைத் தாண்டி செயலாற்ற முடியாது. ஆனால், ஆவிக்கு, காற்றுக்கு இல்லை. ஆக, நம் வரையறையைத் தாண்டி நம்மை உயரே எழுப்புவது ஆவியே.

Friday, April 26, 2019

நம்பிக்கையின்மை

இன்றைய (27 ஏப்ரல் 2019) நற்செய்தி (மாற் 16:9-15)

நம்பிக்கையின்மை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மாற்கு நற்செய்தியாளரின் பதிவின்படி இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். மாற்கு நற்செய்தி இரண்டு இடங்களில் முடிகிறது: ஒன்று, மாற் 16:8 - இதன்படி, இயேசுவின் உயிர்ப்பு சீடர்களுக்கு அச்சத்தைத் தருகின்றது. இரண்டு, மாற் 16:20 - இதன்படி, இயேசு விண்ணேற்றம் அடைகின்றார். மாற் 16:9-20 என்னும் பகுதி அடைப்புக்குறிக்குள் உள்ளது. ஏனெனில், இது பல மாற்கு நற்செய்தி முதல் பிரதிகளில் இல்லை. இது பிற்சேர்க்கையாக இருந்திருக்கலாம்.

இயேசு உயிர்பெற்று எழுந்து பதினொருவருக்கும் தோன்றுகின்றார். ஆனால், அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கடிந்துகொள்கிறார் இயேசு.

மாற்கு நற்செய்தியில் நாம் காணும் சீடர்கள் மிகவும் பரிதாபத்துக்குள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இயேசுவைச் சில நேரங்களில் புரிந்துகொள்ளவில்லை. சில நேரங்களில் தவறாகப் புரிந்துகொண்டனர். இயேசு அவர்களின் இயலாமையைப் பல முறை கடிந்துகொள்கின்றார். இந்த நம்பிக்கையின்மையும் கடின உள்ளமும் இறுதிவரை தொடர்கின்றது.

'கடின உள்ளம்,' 'நம்பிக்கையின்மை' - இரண்டும் இணைந்தே செல்கின்றன. கடின உள்ளம் எதையும் எளிதாக நம்புவதில்லை. நம்பிக்கையின்மையால் துன்புறும் உள்ளம் கடினப்பட்டுப்போகும்.

முதல் ஏற்பாட்டில், எகிப்தின் கொள்ளை நோய்கள் நிகழ்வில், பாரவோனின் மனம் அடிக்கடி கடினப்படுகிறது. மூன்றுமுறை ஆண்டவராகிய கடவுளே பாரவோனின் மனத்தைக் கடினப்படுத்துகிறார். மற்ற நேரங்களில் பாரவோனின் மனம் தானாவே கடினப்பட்டுக்கொள்கிறது. ஆகையால், ஆண்டவரின் அரும்பெரும் செயல்களைக் கண்டாலும் அவரால் நம்ப முடியவில்லை.

மேலும், இஸ்ரயேல் மக்கள் பாலைவனத்தில் அவர்களுடைய கடின உள்ளத்திற்காக கடவுளின் தண்டனைக்கு உள்ளாகின்றனர்.

உள்ளம் எப்போது கடினப்படும்?

கசப்பாக இருக்கின்ற உள்ளம் கடினப்படும்

நம் வீட்டில் நடக்கிற ஒரு இழப்பு அல்லது இறப்பு அல்லது விபத்து ஒரு கசப்பான அனுபவத்தை நமக்கு விட்டுச் செல்கிறது. இந்த நேரத்தில் நம் மனம் எதையும் ஏற்காது, எதையும் நம்பாது, எதையும் எதிர்நோக்காது. மேலும், துன்பமே ஒருவருடைய வாழ்வில் அடிக்கடி வருகிறது என்றால் ஒரு கட்டத்தில் அவருடைய மனம் மரத்துப்போய்விடும். அவரால் ஒன்றும் செய்ய இயலாமல் போய்விடும்.

இயேசுவின் சீடர்கள் பெற்ற துன்ப அனுபவம் அவர்களின் உள்ளத்தைக் கடினப்படுத்துகிறது.

'எல்லாம் கடந்து போகும்' என்ற எண்ணம் சீடர்களுக்கு வரவில்லை. இயேசு அதைச் சுட்டிக்காட்டுகின்றார். அவர்கள் தங்களுடைய எண்ணங்களில் உறைந்துபோவதை இயேசு விரும்பவில்லை.

நம் வாழ்வு உறைந்து போகாமல் பார்த்துக்கொள்தல் நலம்.


Thursday, April 25, 2019

மீன்பிடிக்கப் போகிறேன்

இன்றைய (26 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 21:1-14)

மீன்பிடிக்கப் போகிறேன்

இயேசுவின் இறப்பு ஒரு தோல்வி என நினைத்த திருத்தூதர்கள், தங்களின் தொழிலைப் பார்க்கப் புறப்பட்டுவிடுகின்றனர். சீமோன் பேதுரு, 'நான் மீன் பிடிக்கப் போகிறேன்!' என்று சொல்ல, மற்றவர்களும், 'நாங்களும் உம்மோடு வருகிறோம்' என்று புறப்படுகின்றனர்.

ஏற்கனவே மீன்பிடித்துக்கொண்டிருந்த சீமோன் பேதுருவையும் மற்ற சீடர்களையும், 'உங்களை மனிதரைப் பிடிப்பவராக்குவேன்' என்று சொல்லி அழைக்கின்றார். மனிதர்களைப் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று மீன்பிடிக்கப் புறப்படுகின்றனர்.

ஏன் பேதுரு அப்படி புறப்பட்டார்? மனிதர்களைக் பிடிப்பது அவருக்குப் பிடிக்கவில்லையா?

அ. விரக்தி. 'இயேசுவை மெசியா என நினைத்தோம். உரோமையின் பிடியிலிருந்து மீட்பார் என நினைத்தோம். ஆனால், இப்படி தோல்வியாய் இறந்து போனாரே' என்று சிந்தித்த பேதுரு விரக்தி அல்லது சோர்வு அடைந்திருக்கலாம்.

ஆ. கோபம். இயேசுவின் இறப்புக்குக் காரணமான அவருடைய எதிரிகள் மேல் உள்ள கோபம். இந்தக் கோபத்தால் மனிதர்களையே பிடிக்காமல் போயிருக்கலாம் இவருக்கு. 'நீங்கள் எல்லாம் மனுஷங்களாடா? அவர் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்?' என்று தனக்குள்ளே கேட்டிருப்பார்.

இ. குற்ற உணர்வு. இயேசுவை தான் மூன்று முறை மறுதலித்ததால், 'ச்சே! நான் இப்படி செய்துவிட்டேனே!' என்ற குற்றவுணர்வு இவருடைய முகத்தில் அறைய, அதிலிருந்து தப்பிப்பதற்காக, அல்லது தன் மனத்தை மாற்றிக் கொள்வதற்காக, அல்லது, 'இனி நான் சீடர் எனப்பட தகுதியற்றவன்' என்ற தன்னிரக்கத்தில் அவர் மறுபடியும் மீன்பிடிக்கப் போயிருக்கலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும்,

கலப்பையில் கை வைத்த சீமோன் திரும்பிப் பார்க்கிறார்.

தன் இலக்கை மாற்றுகிறார்.

தன் முதன்மைகளை மாற்றுகிறார்.

வாழ்வில் நிகழ்வுகள் நம் எதிர்பார்ப்புகளுக்கு முரணாக நடக்கும்போது நாமும் பொறுமை இழந்து பாதையை மாற்றலாமே என்று அவசரப்படுகிறோம். 'புதிய வாழ்க்கை போரடிக்கிறது. பழைய வாழ்க்கைக்கே நான் போகிறேன்' என்று நாம் மீண்டும் நம் பழைய இயல்புக்குள் நுழைகிறோம்.

சீமோனின் இந்தச் செயலையும், திருத்தூதர்களின் இந்தப் பின்பற்றுதலையும் இயேசு கடிந்துகொள்ளவில்லை. இவர்கள் மீன்கள் இல்லாமல் கஷ்டப்படும்போது அங்கே வருகின்ற இயேசு அவர்கள் மிகுதியான மீன்பாட்டைக் கண்டுகொள்ள உதவுகிறார்.

மேலும், அவர்களை, 'பிள்ளைகளே' என அன்போடு விளித்து, 'உணவருந்த வாருங்கள்' என்று அவர்களை அழைக்கின்றார்.

ஆக, நாம் நம் வாழ்க்கைப் பாதையைத் திருப்பினாலும் நம்மைப் பின்தொடர்கின்ற தந்தையாக, நமக்கு உணவளிக்கும் தாயாக முன்வருகிறார் கடவுள்.

நம் வாழ்வின் விரக்தி, கோபம், குற்றவுணர்வும் கூட இறையனுபவத்தின் வாசல்கள் என்பதை உணர்த்துகின்றது இன்றைய வாசகம்.

'ஐயோ! என்னால் முடியவில்லை!' என்று முன்னேறிச் செல்ல முடியாமல் வாழ்க்கை முட்டுக்கட்டை போட்டாலும், நாம் நம் முடிவுகளில் பின்வாங்க நேரிட்டாலும் கவலை வேண்டாம்.

ஒவ்வொரு பின்னடைவும் இயேசுவோடு உணவருந்துவதற்கான ஒரு வாய்ப்பே!

அவர் நம்மை கடிந்துகொள்ளும் இறைவன் அல்லர்!

Wednesday, April 24, 2019

வேகவைத்த மீன் துண்டு

இன்றைய (25 ஏப்ரல் 2019) நற்செய்தி (லூக் 24:33-49)

வேகவைத்த மீன் துண்டு

'முத்தமிட்டுப் பசியாற முடியுமா? கண்ணீர் விட்டுத் தாகம் தீர்க்க முடியுமா?' என்ற சொலவடை நம் ஊரில் உண்டு.

'அழுதுகிட்டே இருந்தாலும் உழுதுகிட்டே இருக்கணும்' - இது இன்னொரு சொலவடை.

இயேசு இறந்துவிட்டார். உயிர்த்துவிட்டார். உயிர்த்த இயேசு எம்மாவு சீடர்களுக்குத் தோன்றுகிறார். இயேசுவின் உயிர்ப்பு அவரின் சீடர்களுக்கு பிதற்றலாகவும், வியப்பாகவும், திகிலாகவும், மகிழ்ச்சியாகவும் தோன்றுகிறதே தவிர அவர்கள் யாரும் நம்புவதாகத் தெரியவில்லை.

இறந்தவர்களின் கல்லறையில் மூன்று நாள்கள் வரை அவர்களின் ஆவி குடியிருக்கும் என்பது யூத நம்பிக்கை. இந்தப் பின்புலத்தில்தான் இயேசுவின் ஆவியை மற்றவர்கள் கண்டிருக்கலாம் என நினைத்து அமைதியாக இருக்கின்றனர். கொஞ்சம் அச்சமும் கொள்கின்றனர்.

இந்த நேரத்தில்தான் இயேசு அங்கே வருகின்றார்.

ஆவி போல திடீரென வருகின்றார். ஆனால், வந்தவர், தான் ஆவி அல்ல என்று காட்டுவதற்காக அவர்கள் முன் உணவு உண்கின்றார்.

'வேகவைத்த மீன் துண்டு'

இதுதான் இன்றைய சிந்தனையின் மையம்.

இயேசு உடலோடு உயிர்த்தார் என்பதைக் காட்டுகின்ற ஓர் அடையாளம் இது.

இது சீடர்களைப் பற்றி நமக்கு முக்கியமான விடயத்தைச் சொல்கிறது. இயேசு இறந்துவிட்டார் என்று சீடர்கள் வதங்கிவிடவும் இல்லை. உயிர்த்துவிட்டார் என்று துள்ளிக் குதிக்கவும் இல்லை.

தங்களுடைய வேலையைத் தாங்கள் செய்கிறார்கள். மீன் பிடிக்கிறார்கள். அல்லது மீன் வாங்குகிறார்கள். சமைக்கிறார்கள். உண்கிறார்கள்.

வாழ்வோ, சாவோ, வெற்றியோ, தோல்வியோ நம் வாழ்க்கையை நாம் நகர்த்தியே ஆக வேண்டும். துயரப்பட்டு சோர்ந்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

ஆக, நம் வாழ்வின் துன்பமான நேரங்களில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த வேகவைத்த மீன் துண்டு நமக்கு உருவகமாகச் சொல்கிறது.

ஒருவேளை, 'எங்களிடம் ஒன்றும் இல்லை' என்று சீடர்கள் சொல்லியிருந்தால் இயேசு கோபப்பட்டிருப்பார். ஏனெனில், தனக்குப் பின் தன் இறையாட்சி நகர வேண்டும் என நினைத்தாரே தவிர, தன் இறப்புக்காக துக்கப்பட வேண்டும் என்று ஒருபோதும் அவர்களிடம் சொல்லவில்லை.

இவ்வாறாக, முதலில் நாம் பசியாற வேண்டும். நம் வாழ்வை எதிர்கொள்ள நம் உடலுக்குத் தெம்பு அவசியம். இலத்தீனில், 'ப்ரீமும் எஸ்த் வீவேரெ' என்ற பழமொழி உண்டு - முதலில் உயிர், மற்றதெல்லாம் அடுத்துதான்.

உயிர் வாழத் தயாராக இருந்த இவர்களின் மனக்கண்களைத் திறக்கிறார் இயேசு. பசியால் புறக்கண்கள் அடைந்துவிட்டால் அகக்கண்களைத் திறக்க முடியாது இயேசுவாலும். மேலும், சீடர்கள் தொடர்ந்து காத்திருக்கவும் வேண்டும் என அறிவுறுத்துகிறார் இயேசு.

நம் வாழ்வு நாம் எதிர்பார்ப்பதுபோல நமக்கு அமையாதபோது, துன்பம் நம்மைச் சூழும்போது, நம் அன்பிற்குரியவர் நம்மைவிட்டு பிரிந்து வெறுமை ஏற்படும்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் ரொம்ப சிம்பிள்: 'வேக வைத்த மீன் துண்டை உண்பது'

மற்றதை நேரம் குணமாக்கும்.

Tuesday, April 23, 2019

எங்களோடு தங்கும்

இன்றைய (24 ஏப்ரல் 2019) நற்செய்தி (லூக் 24:13-32)

எங்களோடு தங்கும்

பாஸ்கா எண்கிழமையில் நாம் வாசிக்கும் நற்செய்திப் பகுதிகள் எல்லாம் இயேசுவின் உயிர்ப்பு மற்றும் உயிர்ப்புக்குப் பின் இயேசுவின் தோற்ற நிகழ்வுகளை மையப்படுத்தியதாக இருக்கின்றன. அவ்வகையில் இன்றைய நற்செய்தி வாசகம் 'எம்மாவு வழியில் சீடர்கள் இயேசுவைச் சந்திக்கும் நிகழ்வை' நமக்குப் படம் பிடித்துக்காட்டுகிறது.

சீடர்களின் சோகம், முகவாட்டம், ஏமாற்றம், வெகுளித்தனம், ஆச்சர்யம் என நிறைய உணர்வுகளை இங்கே பிரதிபலிக்கிறார் நற்செய்தியாளர் லூக்கா.

- 'எங்களோடு தங்கும். ஏனெனில், மாலை நேரம் ஆயிற்று. பொழுதும் போயிற்று' என்று கூறிக் கட்டாயப்படுத்தி இயேசுவை இணங்க வைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார் (காண். லூக் 24:29)

இந்த வசனத்தை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'விருந்தோம்பலுக்கு அழைப்பதும், அந்த அழைப்பை ஏற்பதும்' ஒரு நல்ல பண்பு. அழைப்பது எந்த அளவிற்கு நல்லதோ, அந்த அளவிற்கு ஏற்பதும் நல்லது.

என்னோடு உரோமையில் தங்கியிருந்த ஒரு வயதான பிரேசில் நாட்டு அருள்தந்தை, தன்னுடைய பாலிசியாக இதை வைத்திருந்தார்: 'நுல்லா க்யேதரே. நுல்லா ரிஃப்யூதாரே!' - அதாவது, 'நீயாக எதையும் கேட்காதே. வருகின்ற எதையும் நீயாக ஒதுக்காதே!' அதாவது, 'உங்க வீட்டுக்குச் சாப்பிட வரவா?' என்று யார்கிட்டயும் கேட்காதே. 'எங்க வீட்டுக்குச் சாப்பிட வர்றீங்களா?' என்று யாராவது கேட்டால் தட்டிக் கழிக்காதே. ஆனால், சில நேரங்களில் விருந்தோம்பலை ஏற்காமல் இருப்பதும் நன்றே என்பது என் கருத்து.

மேற்காணும் நிகழ்வில் வரும் இரண்டு சீடர்களும் ஒரு வழிப்போக்கரை எப்படி இரவு தங்க அழைத்தனர்?

வழிப்போக்கரை யாரும் எளிதில் நம்புவதில்லை. அதுவும் பாலஸ்தீனம் போன்ற பாலைவனப் பகுதியில் தெரியாத புது நபர்களை யாரும் நம்புவதில்லை. அவர்களை தங்கள் இல்லங்களுக்குள் அழைப்பதில்லை. இவர்களுக்காக ஒவ்வொரு ஊரிலும் சத்திரங்கள் இருந்தன.

இந்தச் சீடர்கள் வழிப்போக்கரை அழைப்பதோடல்லாமல், அவரை வற்புறுத்தி தங்களோடு தங்குமாறு இணங்க வைக்கிறார்கள். ஏன்?

நம் மனம் வெறுமையாக இருக்கும்போது ஆறுதல் சொல்கின்ற நபரை நம்மோடே எப்போதும் வைத்துக்கொள்ள நினைக்கிறது நம் ஏழை மனம். இந்த ஒரு காரணத்திற்காகத்தான் சீடர்கள் வழிப்போக்கரைத் தங்களோடு தங்கவைக்கின்றனர்.

ஆக, இன்று பல இதயங்கள் மற்றவரின் இதமான பேச்சுக்காகக் காத்திருக்கின்றன. உடைந்து போன உள்ளம் ஆறுதல் தரும் உள்ளத்தை அப்படியே நம்பி விடுகிறது. அதாவது, வறண்டு, பாளம் பாளமாக உடைந்து கிடக்கும் குளம் ஆற்று நீரை அப்படியே உறிஞ்சி தன்னகத்தே வைத்துக்கொள்வதுபோல.

அவர்கள் அழைக்கிறார்கள். இவர் செல்கிறார். இந்த நிகழ்வே ஒரு இறைவெளிப்பாட்டு நிகழ்வாக மாறுகிறது.

ஆக, நம் உள்ளம் உடைந்து போயிருக்கும் நேரத்தில் நாம் இன்னொருவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டால் பயணம் இனிதாகும். அப்பயணமே நம் வாழ்வின் இறையனுபவமாகும்.


Monday, April 15, 2019

மனமகிழ்வு நேரம்

இன்றைய (16 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 13:21-33, 36-38)

மனமகிழ்வு நேரம்

துறவு இல்லங்களிலும், விடுதிகளிலும், அருள்பணியாளர் பயிற்சி மையங்களிலும், கூட்டுக் குடும்பங்களிலும் இரவு உணவிற்குப் பின் 'மனமகிழ்வு நேரம்' என்று ஒன்று உண்டு. ஏறக்குறைய 30 நிமிடங்கள் நடக்கும் அந்நிகழ்வில் குழு விளையாட்டுக்கள், நகைச்சுவை பரிமாற்றம், நடந்த நிகழ்வுகளின் திறனாய்வு போன்றவை இருக்கும். இப்படி அமர்ந்து பேசிவிட்டவர்கள் எந்தவொரு மனத்தாங்கலும் இல்லாமல், வருத்தமும் இல்லாமல் தூங்கச் செல்வார்கள். மனமகிழ்வு நேரம் முடிந்து காலை உணவு முடியும் வரை 'நீண்ட அமைதி' (கிராண்ட் சைலன்ஸ்) கடைப்பிடிக்கப்படும்.

இயேசுவின் இறுதி இராவுணவு முடிந்து ஒரு மனமகிழ்வு நேரமாக இன்றைய நற்செய்தி வாசகம் இருக்கிறது. இயேசு அமர்ந்திருக்கிறார். அவருடைய மார்பில் அன்புச் சீடர் சாய்ந்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் திராட்சை இரசமும் ரொமம்டியும் மீதம் இருக்கிறது. மற்ற சீடர்களும் அமர்ந்திருக்கிறார்கள். உரையாடல் இயேசு-அன்புச் சீடர்-பேதுரு என்ற முக்கோணத்தில் நகர்கிறது. பேசு பொருளாக இங்கே யூதாசு இருக்கிறார்.

'உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்'

'உங்களுள் ஒருவன் என்னை மறுதலிப்பான்'

- இப்படியாக யூதாசு மற்றும் பேதுரு செய்யப்போகின்ற செயல்களை முன்னுரைக்கின்றார் இயேசு.

இரண்டிற்கும் இரண்டு அடையாளங்கள் தருகின்றார் இயேசு:

'இரசத்தில் தோய்த்த அப்பத்துண்டு' - யூதாசு

'சேவலின் கூவல்' - பேதுரு

யூதாசு தான் செய்யப்போவதைக் குறித்து மௌனம் காக்கிறார். பேதுரு தன்னையே, 'இல்லை, இல்லை, நான் அப்படிச் செய்ய மாட்டேன்' என மறுதலித்துக்கொள்கிறார்.

இந்த நிகழ்வை இயேசு பெரிய கட்டத்தில் வைத்துப் பார்க்கிறார்: அதுதான், கடவுள் அருளும் மாட்சி.

அதாவது, தனக்கு முன்னால் நடந்தேறுகின்ற நிகழ்வுகள் - காட்டிக்கொடுத்தலும், மறுதலித்தல் - அவரை அசைக்கவில்லை.

இயேசு எல்லாரையும் ஒரே மாதிரி பார்க்கும் பக்குவம் பெற்றிருக்கிறார். ஒரு சீடர் மார்பில் சாய்ந்து தன்னை அன்பு செய்கிறார் என்று துள்ளவும் இல்லை. மற்ற இவர் காட்டிக்கொடுக்கவும், மறுதலிக்கவும் இருக்கிறார்கள் என்று துவண்டுவிடவும் இல்லை. ஒரே மனநிலை. சமமான மனநிலை. அமைதியான நிலை.

இந்தச் சமநிலை எப்போது வரும்?

- தன்னை அறிந்த ஒருவர் இந்த மனநிலையை எளிதாகப் பெறுவார்

- தன் வாழ்வை பெரிய வட்டமாக இணைத்துப் பார்க்கிறவர் இம்மனநிலையை எளிதாகப் பெறுவார்

- எல்லாவற்றிலும் கடவுளின் விரல் செயலாற்றுவதைப் பார்க்கிறவர் இம்மனநிலையை எளிதாகப் பெறுவார்

இந்தச் சமநிலை நமக்கும் வந்தால், இரவு ஒன்பது மணி மட்டுமல்ல. எல்லா நேரமும் மனமகிழ்வு நேரமே.

Sunday, April 14, 2019

இந்தத் தைலைத்தை

இன்றைய (15 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 12:1-11)

இந்தத் தைலைத்தை

'பாஸ்கா விழாவுக்கு ஆறு நாள்களுக்கு' முன் என இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகிறது. 'ஆறு நாள்களுக்கு' முன் என்று தொடங்கும் இன்றைய வாசகத்தில் ஆறு பேரை நாம் சந்திக்கின்றோம்:

(1) இரண்டாம் முறை வாழ வாய்ப்பு பெற்ற இலாசர், (2) மார்த்தா - உணவு பரிமாறுவதில் மும்முரமாய் இருக்கிறார், (3) மரியா - விலையுயர்ந்த தைலத்தால் இயேசுவின் காலடிகளில் பூசுகிறார், (4) யூதாசு - 'மரியாவைத் தடுக்க' நினைத்து தைலத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுக்க நினைத்தவர், (5) யூதர்கள் - இலாசரைக் காண வந்தவர்கள், காண வந்தவரையே கொலை செய்ய நினைத்தவர்கள், மற்றும் (6) இயேசு - தன் தலைக்கு மேல் வாள் தொங்கினாலும் எதையும் அலட்டிக்கொள்ளாமல் விருந்து உண்பவர்.

இயேசுவுக்கும் யூதாசுக்குமான உரையாடலை இன்று சிந்திப்போம்.

இதற்கு முன் ஒரு சின்ன பின்புலம். நற்செய்தியாளர் யோவானுக்கும் யூதாசுக்கும் இடையே ஏதோ மனக்கசப்பு இருந்ததை அவருடைய நற்செய்தியிலிருந்து ஊகிக்க முடிகிறது. ஏனெனில், யூதாசைப் பற்றிய சாடல் இந்நற்செய்தியில் நிறைய இருக்கும். அதுவும் தேவையற்ற இடங்களில். எடுத்துக்காட்டாக, பிலாத்து இயேசுவிடம், 'உன்னை விடுதலை செய்யவும் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?' என்று கேட்கிறார். இயேசு, 'மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது' என்கிறார். இத்தோடு முடித்திருந்தால் பரவாயில்லை. 'என்னை உம்மிடம் ஒப்புவித்தவன்தான் பெரும் பாவம் செய்தவன்' என்கிறார். இந்த இடத்தில் யூதாசைப் பற்றிய குறிப்பு ஏன்?

யூதாசின் ஒழுக்க நெறியை இன்றைய நற்செய்தியில் விமர்சிக்கிறார் யோவான்: 'ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல. மாறாக, அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக்கொள்வதுண்டு.' இது தேவையற்ற விமர்சனம் என நினைக்கிறேன். தன்னிடம் பணப்பை கொடுக்கப்படவில்லை என்ற கையாலாகாத நிலையில் இவர் எழுதினாரா, அல்லது தன்னைவிட யூதாசு நம்பிக்கைக்குரியவனாய் இன்னொருத்தன் இருக்கிறான் என்ற பொறாமையில் எழுதினாரா என்று தெரியவில்லை. அல்லது யூதாசு உண்மையிலேயே செய்தாரா என்று தெரியவில்லை. அப்படி எழுதியிருந்தாலும், 'அன்பு,' 'அன்பு' என்று மூச்சுக்கு முந்நூறு தடவை தன் நற்செய்தியிலும், கடிதங்களிலும் குரல் எழுப்பும் யோவான் அன்பின் நிமித்தமாவது இதை நீக்கியிருக்கலாம்.

நிற்க.

இன்றைய நற்செய்தியில் உள்ள வார்த்தைகளை அப்படியே வைத்து நாம் புரிந்துகொள்ள முன்வருவோம்.

'இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று ஏழைகளுக்கு கொடுக்கலாம்'

இதை யூதாசு செய்த செயலோடு ஒப்பிட்டால்,

'இந்த இயேசுவை முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விற்று பாவிகளுக்காக அல்லது பாவத்திற்காக கொடுக்கலாம்'
என்று அழகாக பொருந்துகிறது.

ஆகையால்தான், இயேசுவும் உடனடியாக இதில் தன்னை உருவகிப்பதுபோல, 'ஏழைகள்-பாவிகள் என்றும் உங்களோடு இருப்பார்கள். நான் உங்களோடு இருக்கப் போவதில்லை' என்கிறார்.

யூதாசு ஏற்கனவே பணத்தை எடுப்பவனாகவும், இன்று கடவுளையே எடுப்பவனாகவும் இருக்கிறார்.

'எடுப்பவர்கள்' எப்போதும் ஆபத்தானவர்கள்.

இன்றைய நற்செய்தியில் மார்த்தா விருந்து 'கொடுக்கிறார்,' மரியா தைலம் 'கொடுக்கிறார்,' இயேசு இலாசருக்கு உயிர் 'கொடுக்கிறார்.' ஆனால், யூதாசு பணத்தை 'எடுக்கிறார்,' யூதர்கள் இலாசரின் உயிரை 'எடுக்கின்றனர்.'

எடுப்பவர்களைப் பொறுத்தவரையில் வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் ஒரு விலைக்குறிப்பு உண்டு. எல்லாவற்றையும் இவர்கள் இக்கண்கள் கொண்டே பார்ப்பார்கள். பார்ப்பதோடல்லாமல் அதை அப்படியே அவர்கள் தங்களுக்கென ஆக்கிக்கொள்ளவும் நினைப்பார்கள்.

நம் வாழ்க்கையை 'தைலம்' என வைத்துக் கொள்வோம். அது எப்படி இருக்க வேண்டும்? கடவுளின் காலடியில் ஊற்றப்பட்டு வீடு முழுவதும் மணம் தருவதாக இருக்க வேண்டும். ஆனால், பல நேரங்களில் யூதாசு போல நாம் அதைக் கணக்கிட்டு கணக்கிட்டு வாழ்கிறோம். அவ்வகை மனநிலை நம் ஏழ்மை நிலையை - வெறுமை நிலையை - அதிகரித்துவிடும். ஆகையால், 'ஏழைகள் என்றும் உங்களோடு இருப்பார்கள்.'

இந்தத் தைலம் - அது இயேசுவாக இருந்தாலும், நம் வாழ்வாக இருந்தாலும் - விற்கப்படுவது தவறு!


Friday, April 12, 2019

ஒரு மனிதன் இறப்பது

இன்றைய (13 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 11:45-57)

ஒரு மனிதன் இறப்பது

இயேசுவின் பணியாலும், போதனையாலும், அரும் அடையாளங்களாலும் மக்கள் ஈர்க்கப்படுவதையும், அதனால் கண்களில் விழுந்த தூசியாக இயேசுவை யூதத் தலைவர்கள் எண்ணிக்கொண்டிருப்பதையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம்.

'இவனை இப்படியே விட்டுவிட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே!' - இது அவர்களின் அச்சமாக இருக்கிறது.

அப்போது அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்த கயபா,

'உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இனம் முழுவதும் அழிந்துபோவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை' என்கிறார்.

அதாவது, பொதுநலனுக்காக தனிநபர்நலன் பலியிடப்படுவது நல்லது என்கிறார் கயபா.

இதையொட்டிய ஒரு நிகழ்வு மகாபாரதத்திலும் வருகின்றது.

பாண்டவர்களின் தலைவரான யுதிஷ்டிரர் கௌரவர்களால் - துரியோதன் மற்றும் அவருடைய மாமா சகுனி - ஏமாற்றப்பட்டு, சூதாடுவதற்காக திரிடிராஷ்டிரர் முன் அழைத்து வரப்படுகின்றார். சகுனி ஏமாற்றி விளையாடியதால் யுதிஷ்டிரர் ஒவ்வொன்றாக இழந்து வருவதைப் பார்த்து வருத்தப்படுகின்றன விதுரர் உடனடியாக அரசன் குறுக்கிட்டு சூதாட்டத்தை நிறுத்துமாறு கேட்கின்றார். 'ஒட்டுமொத்த அரசின் நலனை மையமாக வைத்து உம் மகனின் தன்னலத்தைக் கடிந்துகொள்ளும்' என்று விதுரர் கேட்கிறார்:

'ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு தனிநபரை இழக்கலாம்.
ஒரு கிராமத்தைக் காப்பாற்ற ஒரு குடும்பத்தை இழக்கலாம்.
ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு கிராமத்தை இழக்கலாம்.
ஒரு ஆன்மாவைக் காப்பாற்ற ஒட்டுமொத்த பூமியையே இழக்கலாம்' (மகாபாரதம், இரண்டு, 55.10)

ஆனால், திரிடிராஷ்டிரர் இவ்வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை. சற்று நேரத்தில் தன் மனைவி உள்பட அனைவரையும் அனைத்தையும் சூதாட்டத்தில் கௌரவர்களிடம் இழக்கிறார் தருமர் என்றழைக்கப்படுகின்ற யுதிஷ்டிரர்.

பெரியவற்றிக்காக சிறியது துன்புறலாம் என்பது நாம் காலங்காலமாக எழுதி வைத்துள்ள பாடம்.

ஒரு பெரிய மனிதனுடைய பாவத்திற்கு ஒரு சிறிய கோழிக்குஞ்சு பலியாக்கப்படுவதில்லையா?

இப்படிப்பட்ட புரிதல் ஒரு வகையான குழு சர்வாதிகாரம். இல்லையா?

அதே வேளையில் உயிர்காக்கும் மருத்துவத்தில் இம்முறையே பயன்படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த உடல் சர்க்கரை நோயில் அழிவதை விட ஒரு விரலை எடுப்பது அல்லது ஒரு காலை எடுப்பது போன்றது. ஆக, முழுமை முழுமையாக இருக்க அதன் பகுதிகள் துன்புறலாம் என்பது எழுதாத பாடமாக இருக்கிறது.

இங்கே இயேசு பிறருக்காக துன்புறத் தயாராகின்றார்.

ஒட்டுமொத்த குடும்ப நலனுக்காக ஒரு தாய் கஷ்டப்படுவது, தந்தை கஷ்டப்படுவது, பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்வது எல்லாமே ஏறக்குறைய இதே கோட்பாட்டின் நீட்சியே.

இந்த அறநெறி சரியா? என்று கேள்வி கேட்கலாம்.

ஆனால், 'எது தேவையோ அதுவே தருமம்' என்கின்றன புனித நூல்கள்.


Thursday, April 11, 2019

நீங்கள் தெய்வங்கள்

இன்றைய (12 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 10:31-42)

நீங்கள் தெய்வங்கள்

கடந்த சில நாள்களுக்கு முன் டுவிட்டரில் ஒரு கீச்சு வாசித்தேன்: 'நமக்கு அதிகமாக விரக்தி வருவது முட்டாள்களோடு பேசி அவர்களுக்கு ஒன்றைப் புரியவைக்கும்போதுதான்!'

இயேசுவின் நிலை இப்படித்தான் இருக்கிறது.

தன்னைப் பற்றியும் தனக்கும் தன் தந்தைக்கும் உள்ள உறவு பற்றியும் என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறார். ஆனால், அவர் மேலும் மேலும் விரக்திக்குத்தான் உள்ளாகின்றார். அவரைப் பேய் பிடித்தவன் என்கிறார்கள். 'தற்கொலை செய்துகொள்ளப் போகிறாரா?' என்று கேட்கின்றனர். அவர் மேல் எறியக் கற்களைச் சேகரிக்கின்றனர். இன்றைய நற்செய்தியில் அவரை மீண்டும் பிடிக்க முயல்கின்றனர்.

பிரச்சினை யார்மேல்?

இயேசு அவர்களின் புரிந்துகொள்ளும் திறனைவிட மேலானதாகப் பேசினாரா?

அல்லது

அவர்களின் புரிந்துகொள்ளும் திறன் மிகவும் குறைந்ததாக இருந்ததா?

அல்லது

வேறு ஏதாவது பிரச்சினையா?

தெரியவில்லை.

ஆனால், ஒன்று மட்டும் தெரிகிறது. இயேசு ஒருவகையான கையறு நிலையில் இருக்கிறார். 'என்னை யாரும் புரிந்துகொள்வதில்லையே!' என்று விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 20:10-13) ஏறக்குறைய இதே நிலையில்தான் இருக்கிறார். எரேமியாவின் நண்பர்களே அவருக்கு எதிராகக் கிளம்புகின்றனர்.

இயேசுவும் எரேமியாவும் உடனடியாக தங்களின் விரக்தியிலிருந்து எழும்புகின்றனர். எரேமியா, 'ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கிறார்' என்கிறார். இயேசுவும், 'நான் தந்தையுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறார்' என்கிறார்.

இன்றைய நற்செய்தி நமக்கு வைக்கும் பாடங்கள் இரண்டு:

ஒன்று, விரக்தி அல்லது கையறு நிலை வரும்போது, நாம் குனிந்து பார்ப்பதைவிட நிமிர்ந்து பார்க்க வேண்டும். இதை தனியொரு நிகழ்வாகப் பார்க்காமல் வாழ்வில் ஒட்டுமொத்த ஓட்டத்தின் ஒரு துளி என்று பார்க்க வேண்டும்.

இரண்டு, எரேமியா அல்லது இயேசுவின் சமகாலத்தவர்போல அல்லாமல் நம் எண்ணங்களை உயர்த்த வேண்டும். ஒரு மனிதரின் மேன்மை அவருடைய உள்ளத்தின் மேன்மையைப் பொறுத்தே அமையும். 'நீங்கள் கடவுளர்கள்' என்று இயேசு அவர்களுக்குச் சொல்கின்றார். ஆனால், அவர்களோ மனித நிலையில்கூட இல்லாமல், 'நாங்கள் மிருகங்கள்' என்ற நிலையில் தாழ்ந்து போகின்றனர். ஆக, எண்ணங்கள் தாழ்வாகும்போது நம் இயல்பும் தாழ்வாகிறது. உயர்ந்த எண்ணங்கள் அனைவரையும் உள்ளடக்கிப் பார்க்கும். அனைத்தையும் தாங்கும். அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும். அனைத்தையும் எதிர்கொள்ளும்.

Wednesday, April 10, 2019

பேய் பிடித்தவன்

இன்றைய (11 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 8:51-59)

பேய் பிடித்தவன்

'ஒரு நாயைக் கொல்வதற்கான மிக எளிய வழி அந்த நாய்க்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என அழைப்பதுதான்' என்பது ஆங்கிலச் சொலவடை.

ஒருவரை எளிதாக அழிக்கும் வழி அவர்மேல் லேபிள் பதித்துவிடுவதுதான்.

லேபிள் அல்லது முத்திரை குத்திவிட்டால் அந்த முத்திரையே அந்த நபரை அழித்துவிடும்.

இந்த நாள்களில் எங்கு பார்த்தாலும், 'மோடி வெற்றி உறுதி' என்று திரும்ப திரும்ப ஊடகங்கள் சொல்லக் காரணம் என்ன? ரொம்ப சிம்பிள். ஒன்றை அடிக்கடி சொல்லும்போது அது உண்மையாகிவிடும். இதைத்தான் சமூகவியலில் 'லேபிளிங் தியரி' ('முத்திரையிடுதல் கோட்பாடு') என்றழைக்கின்றனர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இதுவரை இயேசுவோடு வாதிட்டுக்கொண்டிருந்த யூதர்கள் இன்று, 'நீ பேய் பிடித்தவன்' என்ற முத்திரையக் குத்துகிறார்கள். விளைவு, நற்செய்தியின் இறுதியில் நாம் வாசிக்கிறோம்: '... அவர்கள் இயேசுவின்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்'

ஏன் லேபிள்களால் இந்த வேலையைச் செய்ய முடிகிறது?

மனிதர்கள் இயல்பாகவே வெளிப்புற கவர்ச்சியின்படி தீர்ப்பிடக்கூடியவர்கள். ஆகையால்தான், 'ஒரு புத்தகத்தை அதன் அட்டையைக் கொண்டு தீர்மானிக்கக் கூடாது' என்ற எச்சரிக்கை தரப்படுகிறது.

லேபிள்களை நாம் ஏன் விரும்புகிறோம்?

மூன்று காரணங்கள்:

அ. லேபிள்கள், 'அவர்கள் - நாம்' அல்லது 'அவன் - நாம்' என்ற பிரிவை உண்டாக்கி நம்மை மேட்டிமை உணர்வுகொள்ள உதவுகின்றன. உரோமில் இருந்தபோது இதை நான் கண்டிருக்கிறேன். இந்தியர் ஒருவரும் பாகிஸ்தானி ஒருவரும் காஃபி அருந்தச் செல்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அங்கே அந்த பாகிஸ்தானி இன்னொரு பாகிஸ்தானியைக் காண நேர்ந்தால், உடனடியாக இந்த இந்தியரைக் கழற்றிவிட்டு அவருடன் சேர்ந்துகொள்வார். உடனடியாக அவருடைய மனத்தில், 'அவன் - நாம்' என்ற பிரிவு உண்டாகி இயல்பாகவே மேட்டிமை உணர்வுக்கு இட்டுச் செல்லும்.

ஆ. லேபிள்கள் நம் ஆழ்மனத்தைச் சென்றடைகின்றன. நம் மண்ணில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற பிரிவு நம்முடைய ஆழ்மனத்தில் பதிந்துவிட்டது. ஆக, அடுத்தவர்கள் நம்மை லேபிள் சொல்லி அழைக்கவில்லை என்றாலும், இயல்பாகவே என் ஆழ்மனது என் லேபிளைத் தக்கவைத்துக்கொள்ளவே விரும்புகிறது.

இ. லேபிள்கள் வேகமாகப் பரவக் கூடியவை. சின்ன உதாரணம். ஆப்பிள் ஃபோன் பற்றி அறியாத பலர், அல்லது அதைப் பயன்படுத்தாத பலர் ஆப்பிள் லோகோ பற்றி அறிந்திருப்பார்கள். ஆக, லோகோவை அறிந்தவுடன் தங்களுக்கு எல்லாம் தெரிந்ததாக நினைக்கத் தொடங்குவார்கள். லேபிள்கள் வேகமாகப் பரவுவதோடு ஆழமில்லாத தாக்கத்தையே ஏற்படுத்த வல்லவை.

இன்று நாம் இரண்டு கேள்விகள் கேட்போம்:

அ. 'இதுதான் நான்' என்று எனக்கு நானே வரையறுத்துக்கொண்ட லேபிள்கள் எவை? அவற்றைக் கடந்து என்னால் செல்ல முடிகிறதா?

ஆ. 'இதுதான் அவன்-அவள்' என்று மற்றவருக்கு நான் வரையறுக்கும் லேபிள்கள் எவை? அவற்றைக் களைய என்னால் முடிகிறதா?


Tuesday, April 9, 2019

விடுதலை

இன்றைய (10 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 8:31-42)

விடுதலை

ஏறக்குறைய கடந்த 10 நாள்களாக நாம் யோவான் நற்செய்தியிலிருந்து வாசித்துக் கொண்டிருக்கிறோம். இயேசுவை ஏற்றுக்கொள்ள யூதர்கள் தயக்கம் காட்டுவதும், இயேசு தன்விளக்கம் தருவதும், பின் அவர்கள் அதை கேலியாக்குவதும் என நிகழ்வுகள் நகர்ந்துகொண்டே வருகின்றன.

இன்றைய நற்செய்தியில் இரண்டு வரையறை வாக்கியங்களை முன்வைக்கின்றனர் யூதர்கள்:

அ. 'நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை'

ஆ. 'ஆபிரகாமே எங்கள் தந்தை'

இவை இரண்டுமே பொய் என்பதை இயேசு அவர்களுக்கு தோலுரிக்கின்றார்.

அ. 'நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை'

இயேசுதான் இந்த விவாதத்தை தொடங்குகிறார்: 'என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள். உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்.'

இப்போதுதான் அவர்கள் தாங்கள் யாருக்கும் அடிமைகளாக இருந்ததில்லை என்கின்றனர். ஆனால், அவர்களின் முன்னோர் எகிப்தில் அடிமைகளாக இருந்ததையும், அவர்களை ஆண்டவராகிய கடவுள் வியத்தகு முறையில் விடுதலை செய்ததையும் அவர்கள் மறந்துவிடுகின்றனர். அடுத்ததாக, வெகு சில ஆண்டுகளுக்கு முன் பாபிலோனியாவில் அடிமைகளாக இருக்கின்றனர். இப்போது - அதாவது, இயேசுவின் சமகாலத்தில் - உரோமைக்கு அடிகைளாக இருக்கின்றனர். இப்படி அடிமைத்தனங்களை அனுபவித்தாலும் அவர்கள் பொய்யுரைக்கின்றனர்.

இயேசு அவற்றைச் சுட்டிக்காட்டாமல், இதையெல்லாம் கடந்த, எல்லாரும் அடிமையாக இருக்கின்ற ஒன்றைச் சுட்டிக்காட்டுகின்றார்: 'பாவம் செய்யும் யாவரும் பாவத்திற்கு அடிமை'. ஏனெனில், பாவம் செய்த ஒருவர் அதைத் திரும்பத் திரும்பச் செய்வதால் ஒரு கட்டத்தில் அவர் 'செய்தார்' என்ற நிலை மாறி, அவர் செய்யும் நிலைக்குத் 'தள்ளப்பட்டார்' என்ற நிலை உருவாகிவிடுகிறது. பாரவோன் மன்னன் போல. அவனுடைய உள்ளம் இறுக இறுக, ஒரு கட்டத்தில் அவன் விரும்பினாலும் அவன் நல்லவனாக இருக்க முடிவதில்லை.

ஆ. 'ஆபிரகாமே எங்கள் தந்தை'
முதல் ஏற்பாட்டில் ஆபிரகாமை 'நம்பிக்கையின் தந்தை' என இஸ்ரயேலர் அறிவித்தனர். இஸ்ரயேலரின் இனம் யாக்கோபில் தோன்றினாலும், அவர்கள் நம்பிக்கையில் தங்களுடைய தந்தையாக நினைப்பது ஆபிரகாமைத்தான்.

ஆனால், இயேசு இதிலிருந்த பொய்யையும் சுட்டிக்காட்டினார். நம்பிக்கையின் தந்தையின் பிள்ளைகளாக இருந்துகொண்டு நம்பிக்கை இல்லாமல் இருப்பது எப்படி? என்று கேட்கின்றார். மேலும், இயேசுவைக் கொல்ல அவர்கள் முயன்றதால் அவர்கள் ஆபிரகாமைப் போல இல்லாமல் தங்களின் முற்கால மண்ணகத் தந்தையர்போல இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றார்.

இவ்வாறாக, அவர்கள் தங்களின் அடையாளங்கள் என்று நினைத்த இரண்டு வரையறைகளையும் உடைக்கின்றார் இயேசு.

இந்த நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

'அடையாளம்' நமக்கு ஆட்டோமேடிக் வாழ்வைத் தந்துவிடாது. நான் 'கிறிஸ்தவன்,' நான் 'அருள்பணியாளன்,' நான் 'இப்படி,' நான் 'அப்படி' என்று நாம் வைத்திருக்கும் வரையறைகள் வெளிப்புறக் கொண்டாட்டமாக இருந்துகொண்டு, நம்மை உள்புறத்தில் அழிப்பவையாகவும் இருக்கும் அபாயம் இருக்கிறது. ஆக, அடையாளங்களை முழுமையாக ஏற்று வாழ்ந்து அதன்படி நடக்கும்போதுதான் அவை வாழ்வைத் தர முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில் நெபுகத்னேசர் தன் தெய்வங்களை வணங்குமாறு மூன்று இளைஞர்களுக்குக் கட்டளையிட அவர்கள் மறுக்கின்றனர். எரிகிற தீச்சூளையில் தள்ளப்பட்டாலும் எதிர்சான்றாக நிற்கின்றனர்.

Monday, April 8, 2019

உயர்த்திய பின்

இன்றைய (9 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 8:21-30)

உயர்த்திய பின்

ஆங்கில இலக்கியக்கூறுகளில் ஒன்று 'ஐரனி' ('முரண்' அல்லது 'நேர் எதிர்ப் பொருள் கொடுக்கும் சொற்றொடர்'). அதாவது, சொல்லுகின்ற ஒன்றாகவும் பொருள் வேறொன்றாகவும் இருப்பது.

யோவான் நற்செய்தியில் இது நிறைய இடங்களில் காணக்கிடக்கிறது. எப்படி? இயேசு ஒன்றைச் சொல்வார். அவருடைய சொற்களைக் கேட்பவர்கள் வேறொன்றைப் புரிந்துகொள்வார்கள். அல்லது வாசிக்கும்போது மேலோட்டமான ஒரு பொருள் தெரியும். ஆழ்ந்து வாசித்தால் பொருள் மாறுபடும். சிறந்த உதாரணம். கானாவூரில் திருமணம் ஒன்று நடந்தது (யோவா 2:1-12) என யோவான் எழுதுகிறார். திருமணத்தில் அங்கே எல்லாம் இருந்தது. ஆனால், மணமக்கள் இல்லை. இதுதான் முரண். ஆனால், ஆழமாக வாசித்தால் இயேசுவே அங்கே மணமகனாக இருப்பார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'நான் போனபின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்' என இயேசு சொல்ல, யூதர்களோ, 'ஒருவேளை தற்கொலை செய்துகொள்ளப் போகிறாரோ?' என்று கேட்கின்றனர்.

இயேசுவை எவ்வளவு மனம் உடையச் செய்ய முடியுமோ அவ்வளவு மனமுடையச் செய்திருக்கிறார்கள் அவருடைய எதிரிகள். நாம் பேசுவது ஒன்றாக இருக்க அடுத்தவர் அதை வேறு மாதிரியாகப் புரிந்துகொள்ளும்போது நாம் பெரிய தர்மசங்கடமான சூழலுக்குத் தள்ளப்படுவோம். அந்த ஒரு சூழலில்தான் இயேசு இருக்கின்றார். ஆனாலும், மிக இலகுவாக இதைக் கையாளுகின்றார்.

'மானிட மகனை உயர்த்திய பின்பு' என்ற ஒரு புதிய கருத்தை அவர்களுக்கு முன்வைக்கின்றார். 'உயர்த்தப்படுதல்' என்பது யோவான் நற்செய்தியில் இயேசுவின் 'சிலுவை இறப்பையும்' 'அவரின் விண்ணேற்றத்தையும்' குறிக்கிறது.

அதே வேளையில், இயேசு உயர்த்தப்படுவதை அறிய மனித மனமும் உயர்த்தப்பட வேண்டும். உயர்த்தப்பட்ட மனம் மட்டும்தான் நம்பிக்கை கொள்ளும். தாழ்வான எண்ணங்களிலும் செயல்களிலும் சிக்கிக்கொள்கிற மனம் மன்னிப்பு பெறாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறுதியில், 'இவற்றைச் சொன்னபோது பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்' என்ற வாக்கியம் ஆறுதல் தருவதாக இருக்கிறது.

ஆக, முரண்கள் நம் வாழ்வில் வருவது இயல்பு. பல நேரங்களில் நம் வாழ்வே ஒரு முரணாகவும் இருக்கும். ஆனால், முரண்களிலிருந்து நாம் வெளியேற எண்ணங்களை உயர்த்துதல் அவசியம்.


Sunday, April 7, 2019

என்னோடு இருப்பதால்

இன்றைய (8 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 8:12-20)

என்னோடு இருப்பதால்

இன்றைய நற்செய்தி வாசகம் யூதர்களின் 'பூரிம்' அல்லது 'கூடாரத்திருவிழாவின் இறுதி நாள்கள்' என்று சொல்லப்படுகின்ற திருவிழாவின் பின்புலத்தில் அமைந்துள்ளது. இறைவனின் திருச்சட்டத்தை வாசித்து, திருச்சட்டமே தங்களின் வாழ்வை வழிநடத்துகிறது என்று சிந்திக்கும் தன் சமகாலத்து யூத மக்களுக்கு, 'உலகின் ஒளி நானே. என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார். வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்' என்று முன்னுரைக்கின்றார்.

இவ்வளவு நாள்களாக, இஸ்ரயேல் மக்கள், 'என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு. என் பாதைக்கு ஒளியும் இதுவே' (காண். திபா 119:105) என்று இறைவனின் திருச்சட்டத்தைத் தங்களின் ஒளியாக எண்ணியிருந்தனர். இந்தப் பின்புலத்தில் இதற்கு மாற்றாக, 'நானே உலகின் ஒளி' என்று இயேசு சொல்லும்போது கண்டிப்பாக அவர்களுக்கு இடறலாக இருந்திருக்கும்.

இன்றைய பதிலுரைப் பாடலையும் (திபா 23) எண்ணிப்பார்ப்போம். திபா 23ல்,  'மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்' எனப் பாடுகிறார் ஆசிரியர்.

'இருள் இருக்கக் கூடாது' என்று இவர் செபிக்கவும் இல்லை. 'இருள் இருக்காது' என்று இயேசு வாக்குறுதி தரவும் இல்லை.

இருள் இருக்கும். இருள்சூழ் பள்ளத்தாக்கு இருக்கும். சாவின் நிழல் இருக்கும். அதே போல, அவரின் உடனிருப்பும் இருக்கும். அதுதான் அழகு.
ஆக, கடவுள் நமக்கு தீமையில்லாத உலகையும், தீமையில்லாத நபர்களையும் உருவாக்கி அங்கே நம்மை நடக்கவிடவில்லை. எல்லாம் இருந்தாலும் அவரின் உடனிருப்பு இருக்கும் என்ற நம்பிக்கையைத் தருகின்றார். இவ்வாறாக, திருச்சட்டம் தர முடியாத உடனிருப்பை இயேசு தருவதால் அவர் ஒளியாகின்றார் உலகிற்கு.

இதை இன்றைய முதல் வாசகம் ஓர் உருவகமாக பதிவு செய்கின்றது. சூசன்னாவுக்கு எதிர்சான்று பகர்ந்த மூன்று முதியவர்களின் வார்த்தைகளை நம்பி அவரைச் சாவுக்குத் தீர்ப்பிடுகிறது மக்கள் கூட்டம். சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் இருப்பது போல இருக்கிறார் சூசன்னா. அங்கே கடவுளின் உடனிருப்பாக, ஒளியாக வருகிறார் தானியேல். 'தானியேல்' என்றாலே 'கடவுளின் புரிதல்' அல்லது 'கடவுளின் அறிவு' அல்லது 'கடவுள் என் நீதி' என்று பொருள். சூசன்னா சாவின் கட்டுக்களிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

அவரின் ஒளியில் நாம் நடக்க, அவரின் இருப்பை நம்மில் என்றும் உணர்ந்தால் எத்துணை நலம்!


Thursday, April 4, 2019

நமக்குத் தெரியுமே!

இன்றைய (5 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 7:1,2,10-25-30)

நமக்குத் தெரியுமே!

கடந்த சில நாள்களாக இயேசு பல்வேறு நிலைகளில், பல்வேறு நபர்களால் நிராகரிக்கப்பட்டதை வாசித்துக் கொண்டிருக்கிறோம். ஆக, இயேசுவின் இறப்பு என்பது அவருடைய ஒருநாள் நிகழ்வு அல்ல. மாறாக, அவருடைய பணி வாழ்வில் அவர் சந்தித்த சின்ன சின்ன எதிர்ப்புகள் அனைத்தும் இணைந்து ஒருநாள் பெரிய நிராகரிப்பு நிகழ்வாக மாறுகிறது.

இன்றைய நற்செய்தியில் அவருடைய பிறந்து ஊரைப் பற்றி அவர்கள் இடறல் படுகின்றனர்.

அதாவது, 'மெசியா வரும்போது அவர் எங்கிருந்து வருகிறார் என்பது யாருக்கும் தெரியாது' என்பது அவர்கள் கேட்டிருந்த மரபு வழிச் செய்தி. ஆக, இயேசு தன்னை மெசியா என்று சொல்லும்போது, அவர்களின் மரபு வழிச் செய்திக்கு இது முரணாக அமைகின்றது. இயேசுவின் நாசரேத்து பிறப்பு பற்றி அவர்கள் அறிந்திருந்ததால் அவர்கள் அவரை ஏற்றக்கொள்ள மறுக்கின்றனர்.

இங்கே இயேசு அவர்களுக்கு பதிலுரைக்கின்றார்: 'நான் யார்? எங்கிருந்து வந்தேன்? என்பவை உங்களுக்குத் தெரியும்' என்று சொல்லிவிட்டு, அவர்கள் அறியாத ஒன்றை - அதாவது, தந்தையைப் பற்றி - அவர்களுக்கு விளக்குகின்றார். அதையும் ஏற்றுக்கொள்ள அவர்களால் முடியவில்லை.

காணக்கூடிய ஒன்றிலிருந்து காணக்கூடாத ஒன்றிற்கு இயேசு அவர்களை அழைத்துச் செல்ல, அவர்களால் அந்த நிலைக்குச் செல்ல முடியவில்லை.

இதற்குக் காரணம், அவர்களிடமிருந்த, 'நமக்குத் தெரியுமே' என்ற மனநிலை. இந்த மனநிலை நம்மில் அதீத நம்பிக்கையை உருவாக்கி, நம் மனத்தை மூடிவிடுகிறது. இப்படிப்பட்ட மனநிலையில் நம்மால் கடவுளையும் ஏற்றுக்கொள்ள முடியாது, மனிதர்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்று இந்த மனநிலை நம் நம்பிக்கை வாழ்வில் இருந்தால் அதைக் களைய முயற்சிக்கலாம்!

Wednesday, April 3, 2019

மோசே

இன்றைய (4 ஏப்ரல் 2019) முதல் வாசகம் (விப 32:7-14)

மோசே

இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகத்தில் பேசப்படும் ஒரு நபர் மோசே.

'தந்தையின் முன்னிலையில் உங்கள்மேல் குற்றம் சுமத்தப் போகிறவன் நான் என நினைக்காதீர்கள். உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார் ...' என்கிறார் இயேசு.

மோசே மக்கள் சார்பாக நிற்கும் நிகழ்வைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம்.

மோசே சீனாய் மலையில் நாற்பது பகலும் நாற்பது இரவும் இருக்கின்றார். இந்த நேரத்தில் இஸ்ரயேல் மக்கள் ஆரோனின் தலைமையில் தங்களுக்கென்று பொன்னாலான கன்றுக்குட்டி ஒன்றைச் செய்து அதை வழிபடுகின்றனர். கடவுளின் கோபம் பற்றி எரிகிறது. 'என் மக்கள், என் அன்புக்குரியவர்கள்' என்று தூக்கிவந்த கடவுள், 'உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக் கொண்டனர்' என்று மோசேயிடம் சொல்கின்றார் கடவுள். அவர் மக்களை அழித்தொழிக்கப் போவதாகச் சொன்னபோது அவர்களுக்காக மன்றாடுகிறார் மோசே.

மூன்று காரணங்களைச் சொல்லி கடவுளின் கோபத்தைத் தணிக்கிறார் மோசே.

(அ) நீர் அரும் பெரும் செயல்கள் புரிபவர். உமக்கு இம்மக்களின் செயல் எல்லாம் ஒரு பொருட்டா - என்று கடவுளின் மாண்பையும் ஆற்றலையும் சுட்டிக்காட்டுகின்றார்.

(ஆ) எபிரேயர்களின் ஏளனப் பேச்சு - அதாவது, நீர் மக்களை அழித்துவிட்டால் அது பகைவர்கள் உம்மைக் குறித்து ஏளனம் செய்யுமாறு ஆகிவிடும்.

(இ) மூதாதையருக்கு அளித்த வாக்குறுதி - வானத்து விண்மீன் போல கடற்கரை மணலைப் போல பலுகச் செய்வதாக வாக்களித்த கடவுள் இப்போது அழிக்க முற்படலாமா?

இந்தப் பின்புலத்தில்தான் 'மோசே தங்கள் சார்பாக நிற்பதாக' மக்கள் எண்ணினார்கள். ஆனால், தங்களிலேயே இயல்பு மாற்றம் இல்லாமல் வெறும் ஒருவரின் சான்றை மட்டும் வாழ்தல் நல்லதன்று என்கிறார் இயேசு. மோசேயின் பரிந்து பேசுதல் மக்களைக் காப்பாற்றியது எனினும், கடவுள் மக்களைக் கொள்ளை நோயால் தண்டிக்கவே செய்தார்.

ஆக, மோசே என்பவர் ஒளியைச் சுட்டிக்காட்டினார். அவரின் சுட்டிக்காட்டுதலைக் கைக்கொண்டு ஒளியை நோக்கி வருதலே சால்பு.

Tuesday, April 2, 2019

மறக்கவே மாட்டேன்

இன்றைய (3 ஏப்ரல் 2019) முதல் வாசகம் (எசா 49:8-15)

மறக்கவே மாட்டேன்

இன்றைய நாள்களில் நம் வீதிகளுக்கு நம் 'பொன்னான' வாக்குகளைக் கேட்டு வரும் வேட்பாளர்கள், 'மறக்காம உங்க ஓட்ட இந்த முத்திரைக்குப் போடுங்க!' என்று சொல்லிக்கொண்டே வருகிறார்கள். என்னதான் நாம 'மறக்காம' போட்டாலும், அவர்கள் நம்மை 'மறந்துவிடுவது' உறுதி. இல்லையா?

'மறத்தல்' - மேலிருப்பவர்கள் கீழிருப்பவர்கள்மேல் தொடுக்கும் ஒரு வன்முறை.

இன்றைய முதல் வாசகம் 'மறத்தல்' என்ற ஒற்றைச் சொல்லை மையமாக வைத்துச் சுழல்கிறது. இந்தப் பாடத்தின் சூழல் பாபிலோனிய அடிமைத்தனம். பாபிலோனியாவுக்கு அடிமைகளாக நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள், தங்கள் கடவுள் தங்களை மறந்துவிட்டதாக எண்ணினர்.

கடவுளால் மறக்கப்படுவதுதான் உச்சகட்ட துன்பம். ஏனெனில், அவர் அனைத்தையும் நினைவில் கொள்பவர்.

ஆண்டவராகிய கடவுள் தங்களை தூய இனமாகத் தெரிவு செய்ததை மறந்துவிட்டார் என்றும், தங்களோடு ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையை மறந்துவிட்டார் என்றும், தங்களுக்குச் செய்த வல்ல செயல்களை, தங்களை தமது புனித புயத்தால் வழிநடத்தி வந்ததை மறந்துவிட்டார் எனவும் கருதினர்.

ஏனெனில், கடவுள் மறக்கும் நபர் இறக்கிறார்  - அல்லது இறக்கும் நபர் கடவுளின் நினைவிலிருந்து மறைகிறார் - என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது.

இந்நிலையில்தான் கடவுள் எசாயா வழியாக, மாபெரும் வாக்குறுதி ஒன்றைக் கொடுக்கின்றார்: 'பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளை மீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும் நான் உன்னை மறக்கவே மாட்டேன்.'

இங்கே, கடவுள் தன் நினைவுகூறுதலை, 'குனிந்து பார்த்தல்' என்ற வார்த்தையைக் கொண்டு விளக்குகிறார். எப்படி?

'இரக்கம் காட்டுதல்' ('ஹனான்') என்ற எபிரேய வார்த்தைக்கு 'தன் மடியில் அல்லது வயிற்றில் இருக்கும் குழந்தையைக் குனிந்து பார்த்தல்' என்பது பொருள். குனிந்து பார்க்கும்போது நம் பார்வை ஒன்றின் மேல் கூர்மைப்படுகிறது. பலவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்கள் ஓரிடத்தில் குவிக்கப்படுகின்றன. படிப்பது, பணம் எண்ணுவது, மாத்திரை எடுப்பது, எழுதுவது போன்ற முக்கியமான தருணங்களில் நாம் குனிந்தே இருக்கின்றோம். குனிந்து பார்ப்பது எதுவும் நம் மனதில் பதிந்துவிடுகிறது.

அப்படியே இறைவன் தன்னை தாய்க்கும் மேலாக உருவகப்படுத்தி தான் மறப்பதில்லை என்றும், தன் நினைவுகூறுதலால் இஸ்ரயேல் மறுபடியும் தழைக்கும் என்றும் உறுதிகூறுகின்றார்.

இந்த வாக்குறுதி நமக்குத் தரும் பாடம் என்ன?

இறைவனின் உடனிருப்பு.

இந்த உடனிருப்பு நமக்கு வாழ்வும் வளமும் தருகிறது.

இன்று அவர் நம்மை மறப்பதைவிட நாம்தான் அதிக நேரம் அவரை மறந்துவிடுகிறோம்.

மறதி - ஒரு வன்முறை. அது மனிதர் மேலும் வேண்டாம். கடவுள் மேலும் வேண்டாம்.


Monday, April 1, 2019

முப்பத்தெட்டு ஆண்டுகளாய்

இன்றைய (2 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 5:1-3,5-16)

முப்பத்தெட்டு ஆண்டுகளாய்

'முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார். இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, 'நலம் பெற விரும்புகிறீரா?' என்று அவரிடம் கேட்டார். 'ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்' என்று உடல்நலமற்றவர் அவரிடம் கூறினார்.' (யோவா 5:5-7)

இன்றைய நற்செய்திப் பகுதியில் நாம் காணும் இந்த நலமற்ற நபர் ஒருசேர என் உள்ளத்தில் கோபத்தையும் இரக்கத்தையும் வருவிக்கிறார்.

ஏன்?

ஏன் கோபம்?

ஓராண்டல்ல. ஈராண்டல்ல. முப்பத்தெட்டு ஆண்டுகள் இவர் இந்த மண்டபத்தில் இருக்கிறார். 'ஏன் இன்னும் குணமாகவில்லை?' என்று இயேசு கேட்டபோது, 'யாரும் இறக்கிவிடவில்லை' என்று மற்றவர்களைக் குறைசொல்கின்றார். தொல்பொருள் ஆராய்ச்சியின் படி இக்குளத்தில் பதினெட்டு படிகள் உள்ளன. இவர், வருடத்திற்கு ஒரு படி இறங்கினால்கூட பதினெட்டு ஆண்டுகளில் பதினெட்டு படிகள் இறங்கி நலம் பெற்றிருப்பார். ஆனால், இவர் அதற்கான எந்த முயற்சியையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக, யார் இறங்குகிறார்? யார் யாரைத் தள்ளிவிடுகிறார்? என்று வேடிக்கை பார்க்கிறவராகவும், ஒரு வேலைக்கும் போகாமல், 'யாராவது கொடுத்தால் சாப்பிடுவோம். சாப்பிட்டுவிட்டு தூங்குவோம். எதுக்க சரியாகணும்? எதுக்கு வேலைக்குப் போகணும்?' என்று ஓய்ந்திருக்கிறார். மேலும், தன் வாழ்க்கை இப்படி இருக்கக் காரணம் மற்றவர்களின் கண்டுகொள்ளாமையும், மற்றவர்களின் போட்டிமனப்பான்மையும் என்று குறைகூறுகின்றார்.

ஏன் இரக்கம்?

முப்பத்தெட்டு ஆண்டுகள் குளிரையும், வெயிலையும், மழையும், குளத்தின் ஈரத்தையும் பொறுத்துக்கொண்டு இந்த நபர் எப்படி மண்டபத்துக்குள் கிடந்திருப்பார்? எத்தனை பேர் அவரைக் கண்டும் காணாமலும் சென்றிருப்பார்கள்? எத்தனை பேர் இவரை இடையூறாக நினைத்து முணுமுணத்திருப்பார்கள்? இவருடைய பெற்றோர் அல்லது உடன் பிறந்தோர் எங்கே போனார்கள்? அவரைத் தேட யாரும் இல்லையா? 'வானத்துப் பறவைகளுக்கு உணவளிக்கும் இறைவன் எனக்கும் உணவளிப்பார். வயல்வெளி மலர்களை உடுத்தும் கடவுள் என்னையும் உடுத்துவார்' என்று எப்படி முழுக்க முழுக்க இறைப்பராமரிப்பை இவரால் நம்ப முடிந்தது? அல்லது ஒருவேளை கடவுளின் தூதர் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் அந்தக் குளத்தில் இறங்கி நீரைக் கலக்காமல் இருந்திருக்கலாம். ஆக, கடவுள் வருவார் என்ற உச்சகட்ட எதிர்நோக்கில் இவர் இருந்திருக்கலாம்.

இப்படியாக ஒரே நேரத்தில் கோபமும் இரக்கமும் தூண்டுகின்ற இந்த நபர் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

'பழக்கத்தின் ஆபத்து'

அது என்ன?

ஒன்று நம் வாழ்வில் பழக்கப்படுமுன் அதைக் களைந்துவிட வேண்டும். 

ஒருவர் மருந்துக்கடைக்கு சென்று அடிக்கடி அமிர்தாஞ்சன் தைலம் வாங்கினாராம். கடைக்காரர் அவரிடம், 'சார், இத அடிக்கடி பயன்படுத்தாதீங்க! அப்புறம் இதுவே பழக்கமாயிடும்! அப்புறம் ஆபத்தாயிடும்!' என்றார். அதற்கு வேடிக்கையான இந்த வாடிக்கையாளர், 'பதினெட்டு ஆண்டுகளாக நான் தைலம் தேய்க்கிறேன். இது என்ன பழக்கமாவா ஆகிவிட்டது?' என்று கேட்டாரம்.

பதினெட்டு ஆண்டுகளாகத் தைலம் தேய்த்தல் தன் விடமுடியாத பழக்கம் ஆகிவிட்டதை அவர் உணரவில்லை. 

முடக்குவாதம் நம் நற்செய்திக் கதைமாந்தரின் பழக்கமாகிவிட்டது. அந்த இடம் பழகிவிட்டதால் அந்த நோயும் அவருக்குப் பழகிவிட்டது. தீய பழக்கங்களை நாம் உள்வாங்கிக்கொள்ளும்போது நாமும் அடுத்தவரைக் குறை சொல்ல ஆரம்பிப்போம். பழக்கத்தை விட மறுப்போம். சாக்குப் போக்குகள் சொல்வோம். 'எல்லாரும்தான் இந்த மண்டபத்தில் இருக்கிறார்கள். நான் மட்டுமா இருக்கிறேன்?' என்று அந்த நபர் கேட்டதுNபுhல, 'எல்லாரும்தான் இதைச் செய்கிறார்கள். நான் மட்டுமா இதைச் செய்கிறேன்?' என்று கேள்விகள் கேட்க ஆரம்பிப்போம் நாம்.

இன்று நான் கற்றுக்கொண்ட அல்லது என்னைச் சுற்றிக்கொண்ட பழக்கம் எது?

அதை விட நான் என்ன முயற்சி செய்கிறேன்?

'நல்லாதானே இருக்கேன்! இப்பழக்கம் இன்னும் கொஞ்சநாள் இருக்கட்டும்' அல்லது 'இப்பழக்கம் இல்லாமல் நான் எப்படி இருப்பேன்?' என்று பயப்படுகிறேனா?

'அவர் வந்து விடுவிப்பார்' என்று ஆண்டவருக்காக காத்திருக்கிறேனா? அல்லது கொஞ்சம் கொஞ்சமாய் படிக்கட்டுக்களில் இறங்க நான் ஆரம்பிக்கிறேனா?

எந்தவொரு கெட்ட பழக்கத்தையும் ஒருநாள் விடத்தான் வேண்டும். அந்த நாள் இந்நாளாக ஏன் இருக்கக் கூடாது?

மண்டபத்தில் படுத்திருந்தது போதும். எழுவோம். இல்லம் செல்வோம்.