Thursday, September 24, 2015

நெஞ்சம்நிறை நன்றியோடு


நாளையுடன் என் புனே வகுப்புகள் நிறைவடைகின்றன.

7 ஆண்டுகளுக்கு முன் ஏறக்குறைய இதே நாளில் இந்த இடத்திலிருந்து குருமாணவர் படிப்பை முடித்து வெளியேறினேன்.

7 ஆண்டுகளுக்குப் பின் இன்று அருட்பணியாளராக, ஆசிரியராக இந்த இடத்தில் மீண்டும் நிற்கிறேன்.

திருமணம் முடித்து மணமகன் இல்லம் செல்லும் மணப்பெண், தன் தாயகம் திரும்பியதுபோல உணர்வு.

'எல்லாமே மாறிடுச்சு!' என்றும் சொல்லலாம்.

'எதுவுமே மாறல!' என்றும் சொல்லலாம்.

'மாற்றம்' 'முன்னேற்றம்' 'அன்புமணி'

என்று எங்கு பார்த்தாலும் புதிய போஸ்டர்கள் நம் ஊரில் முளைத்துக் கொண்டிருக்க,

'மாற்றம்' 'முன்னேற்றம்' 'பாப்பிறைக் குருமடம்'

என்று சொன்னால் பொருத்தமாகவே இருக்கும்.

நான் மாணவனாக இருந்த நாட்களில் இருந்த பேராசிரியர்கள், உதவியாளர்கள் இன்னும் இங்கே இருக்கிறார்கள்.
நான் 9ஆம் வகுப்பு படிக்கும்போது இறுதியாகப் பார்த்து, இன்று மீண்டும் ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பின் அருட்பணியாளர்களாக இருவரை இங்கே சந்தித்தேன்.

இந்த 20 நாட்கள் 'மோசேயின் பாடல்' (இணைச்சட்டம் 32) பற்றிப் பாடம் எடுத்தேன். நான் சொல்லிக் கொடுத்தேன் என்று சொல்வதைவிட நிறையக் கற்றுக்கொண்டேன் என்று சொல்வேன்.

புனே குருமடம் ஒரு மினி இந்தியா.

இங்கு வந்த நேரம் ஆதார் கார்டும் வாங்கியாயிற்று.

புதிய அறிமுகங்கள்.

இறைவன் பாப்பிறைக் குருமடத்தை என்றும் தன் கைகளில் வைத்து

வழிநடத்தட்டும்!

'இந்தியாவே! உன் பிள்ளைகள் உன்னைத் தாங்கிக் கொள்வார்கள்!'

என்று திருத்தந்தை 13ஆம் லியோ அவர்களால் தொடங்கப்பட்ட இப்பாசறை

இன்னும் நிறைய மனங்களை ஊக்குவிக்கட்டும்...


Wednesday, September 23, 2015

எதற்காக கோவில் கட்ட வேண்டும்?

நாளைய முதல் வாசகத்தில் (ஆகாய் 1:1-8) நாம் காணும் ஆகாய் இறைவாக்கினர் எருசலேம்வாழ் மக்களிடம் ஆண்டவரின் ஆலயத்தை மீண்டும் கட்ட அழைப்பு விடுக்கின்றார். அவர் விடுக்கும் அழைப்பு ஆச்சர்யமாக இருக்கிறது.

எதற்காக கோவில் கட்ட வேண்டும்?

இரண்டு காரணங்கள்:

1. நீங்கள் மாட மாளிகையில் வசித்துக்கொண்டிருக்க, உங்கள் கடவுள் பாழடைந்த இடத்தில் வசிக்கலாமா?

2. ஆண்டவரின் அருள் இல்லாவிட்டால், 'நீங்கள் விதைப்பது மிகுதி. அறுப்பது குறைவு. நீங்கள் உண்பீர்கள். ஆனால் வயிறு நிரம்பாது. குடிப்பீர்கள். ஆனால் தாகம் அடங்காது. ஆடை அணிவீர்கள். ஆனால் குளிர் நீங்காது. கூலியை வாங்கி பையில் போட்டாலும், அது ஓட்டை வழியாக நழுவி ஓடிவிடும்!'

இரண்டாவது உருவகம் ஆண்டவரின் பிரசன்னம் எந்த அளவிற்கு தேவை என்பதை உணர்த்துகிறது.

இரண்டாம் ஏற்பாட்டு புரிதலின்படி ஒவ்வொரு மனிதரும் ஆலயம். ஆக, ஒவ்வொரு மனிதரும் நிறைவைக் கண்டால்தான் நமக்கு வாழ்வில் நிறைவு கிடைக்கும்.

இல்லையா?

Tuesday, September 22, 2015

ஓர் அங்கி

இன்று இரவு உணவருந்திக் கொண்டிருந்தபோது உணவறைக்கு சப்பாத்தி கொண்டு வந்த உதவி சமையற்காரர் திரு. அகஸ்டஸைப் பார்த்தவுடன் ஒரு ஃபாதர், 'அப்பாடா! இன்னைக்குதான் சட்டையை மாத்தியிருக்கிறான்!' என்றார்.

'ஒருவேளை அவரிடம் ஒரு சட்டைதான் இருக்கிறதோ என்னவோ!' என நான் நினைத்துக் கொண்டேன். அப்படி நினைத்துவிட்டு அவரைப் பார்க்கும் போது, என் பார்வை வேறு மாதிரி இருந்தது.

நாளைய நற்செய்தியில் தன் சீடர்களை பணிக்கு அனுப்பும் இயேசு அவர்களுக்குக் கொடுக்கும் அறிவுரையில், 'ஓர் அங்கி போதும்!' என்கிறார்.

பணிக்குச் செல்பவர்களுக்கு மாற்று ஆடைகூட இயேசு அனுமதிக்காமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

நான் இறையியல் பயின்றபோது அணில் என்ற ஒரு மாணவன் உடன் பயின்றார். அவன் கொஞ்சம் ரேடிகலான கிறிஸ்தவன். மொத்தமே இரண்டு பேண்ட், இரண்டு சட்டைதான் வைத்திருந்தான். ஒன்றை அணிந்திருக்கும்போது மற்றது கொடியில் காயும். மூன்று வருடங்கள் அவன் அப்படியே வாழ்ந்தும் விட்டான். மழை, வெயில், பனி, ஈரம் போன்ற எதுவும் அவனை அசைக்கவில்லை.

இயேசுவின் 'ஓர் அங்கி' கட்டளையின் பொருள் என்ன?

ஒரே அங்கி அணிந்து ஒருவர் பணி செய்தால் மற்றவர் அவரைப்பற்றி என்ன நினைப்பார்?

இப்படி அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கேள்விதான் இங்கே முக்கியமானது.

நாம் ஆடை அணிவதன் நோக்கம் நம் நிர்வாணம் மறைக்க மட்டுமல்ல. மற்றவர்கள்முன் 'நான் இதுதான்!' என்று காட்டுவதற்குத்தான். குறிப்பாக 'பிராண்டட்' ஆடை அணியும்போது மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து பிரமிக்கும் ஒரு பிராண்டை நாம் அணியும்போது நம்மையறியாமலேயே நம்மேல் பெருமிதமும், மற்றவர்கள்மேல் பரிதாபமும் வருகிறது.

அடுத்தவர்களைப் பற்றி கவலைப்படாதே. அடுத்தவர்களை மகிழ்விப்பதில் அக்கறையாய் இருக்காதே. நீ உன் வேலையைச் செய்.

இவைதான் இயேசுவின் அறிவுரையாக இருக்கிறது.


Monday, September 21, 2015

உம் தாயும், சகோதரர்களும்

'உம் தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்!'

இந்தக் கேள்வியை பல மாதங்கள் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் ஒரு பையனையோ, பொண்ணையோ பார்த்துச் சொன்னால், இருப்பதை இருந்த இடத்தில் விட்டுவிட்டு, 'எங்கே?' என்று தேடி ஓடியிருப்பார்கள்.

ஆனால், இந்தக் கேள்வி தன்னிடம் கேட்கப்பட, இருந்த இடத்திலேயே ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கின்றார் இயேசு.

ஆச்சர்யமாக இல்லையா?

ஹாஸ்டல் மாணவர்கள் ஏன் ஓடுகிறார்கள்? என்னதான் உணவும், உடையும், இருப்பிடமும் கொடுத்தாலும், ஹாஸ்டலும், வார்டனும் ஒருபோதும் தாயின் அல்லது உடன்பிறந்தவரின் இடத்தை நிரப்புவதில்லை. மாணவரும் தான் இருக்கும் இடத்தை தன் வீடு போல நினைப்பதில்லை.

ஆனால், தான் இருக்கின்ற இடத்தை வீடுபோல நினைப்பவருக்கு, அருகில் இருப்பவர் அனைவரும் தாயும், உடன்பிறந்தவர்களே.

இந்தப் பார்வையைப் பெற வேண்டுமென்றால் தான் இருக்கும் இடத்தோடு ஒரு தொப்புள்கொடி உறவை ஒருவர் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தொப்புள்கொடி உறவு வர வேண்டுமென்றால், தனக்குள்ளேயே ஒருவர் பிளவுகள் இன்றி இருக்க வேண்டும். இயேசு அப்படிப்பட்ட மனிதர். தனக்குள்ளே பிளவுபடாதவர்.

பிளவுபடாத உள்ளம்தான் இறைவனை மட்டுமல்ல, ஒருவர் மற்றவரிடம் தாய்மையைக் காண முடியும்.

நேற்று ஃபுல்டன் ஷீன் அவர்கள் அருட்பணியாளர்களுக்கு ஆற்றிய தியான உரை ஒன்றைக் கேட்டேன். அவரின் வார்த்தைகளை அப்படியே மொழிபெயர்த்துத் தருகிறேன்:

'அன்புமிகு அருட்பணியாளர்களே, என்னிடம் வரும் அருட்பணியாளர்களிடம், 'உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?' என்று கேட்டால், பலர் உடனடியாக, 'மணத்துறவுதான் கஷ்டமாக இருக்கிறது!' என்கிறீர்கள். சிலர், 'முதல் ஏற்பாட்டில் மணத்துறவு இல்லை!' என்றும் வாதாடுகிறீர்கள். ஆனால், நீங்கள் ஏன் சுமையாக நினைக்கிறீர்கள்? சுமக்க முடியாத ஒன்றை உங்கள்மேல் கடவுள் சுமத்துவாரா? அவர் என்ன கொடுங்கோலனா? இல்லை. முதல் ஏற்பாட்டில் மணத்துறவு இல்லைதான். ஆனால், தற்காலிக மணத்துறவைப் பற்றி நாம் மூன்று இடங்களில் வாசிக்கின்றோம்: (1) கடவுள் சீனாய் மலையில் இறங்கி வருமுன், அனைவரும் தூய்மையாக இருக்க வேண்டும். ஆண்கள், பெண்களோடு உறவு தவிர்க்க வேண்டும். பெண்கள் தங்களையே தூய்மையாக்கிக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுகின்றார். (2) தாவீதும் அவர் சார்ந்த நண்பர்களும் போர்க்காலத்தில் தலைமைக்குரு அபியத்தாரை நாடி உணவு கேட்டு நின்றபோது, 'இவர்கள் எல்லாம் பெண்கள் உறவிலிருந்து தூய்மையாக்கிக்கொண்டவர்கள்' என அறிமுகம் செய்கின்றார். ஆக, கடவுளின் போரின் போது தூய்மை அவசியம். (3) இரண்டாம் மக்கபேயர் காலத்தில் எருசலேம் ஆலயம் அர்ப்பணம் செய்யப்படும்போது மக்கள் அனைவரும் தங்களையே உடலுறவிலிருந்து தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகின்றனர். ஆக, கடவுளை அணுகிச்செல்பவர்களுக்கும், கடவுள் செயலாற்றும் இடத்திலும் தற்காலிக மணத்துறவு முன்வைக்கப்படுகின்றது...'

ஷீன் அவர்களின் உரை அப்படியே தொடர்கிறது. நாம் இங்கேயே நிறுத்திக்கொள்வோம்.

பெண்ணுடன் கூடும் உடலுறவு தீட்டு என்பது மேற்காணும் இறைவாக்குப் பகுதிகளின் பொருள் அன்று. மாறாக, மனித வாழ்வின் உச்சகட்ட இன்பம் அதைவிட இன்பம் தரும் இறைப்பிரசன்னத்திற்காக தியாகம் செய்யப்படல் வேண்டும் என்பதே பொருள்.

இதை நான் இங்கே சொல்லக் காரணம் என்னவென்றால், தன்னிடம் பிளவு இல்லாத ஒருவர் மட்டுமே எல்லாரிடமும் தாய்மையைக் காண முடியும். இந்த மனநிலை வரவேண்டுமென்றால், தன்னிடம் மேலோங்கி இருக்கும் வன்முறை, பாலுணர்வு என்ற இரண்டு உணர்வுகளையும் ஒருமுகப்படுத்தல் வேண்டும்.

இயேசுவுக்கு இது இயல்பாகவே இருந்தது. நமக்கு அது கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்கிறது.



Sunday, September 20, 2015

நான் இவ்வளவுதான்!

நாளை மத்தேயு நற்செய்தியாளரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

வங்கிகளில் பணிபுரிவோர், தணிக்கையாளர்கள், கணக்கர்கள் அனைவரின் பாதுகாவலர் இவர். இந்தப் பணிகளில் இருக்கும் அனைவருக்கும் நம் வாழ்த்துக்களும், செபங்களும்.

இயேசுவைப் பின்சென்ற பன்னிரு திருத்தூதர்களில் வெறும் ஐந்துபேரின் பணி பற்றி மட்டுமே நமக்குத் தெரிகிறது. அந்திரேயா, பேதுரு, யோவான், யாக்கோபு இந்த நால்வரும் மீனவர்கள். மத்தேயு வரிவசூலிப்பவர்.

யூத சமூகத்தில் வரிவசூலிப்பவர்கள் விபச்சாரம் செய்பவர்கள் என்ற அளவில்தான் நடத்தப்பட்டனர். அதாவது, தங்கள் நாட்டு மக்களின் பணத்தில் வாழ்ந்துவிட்டு, தங்களை ஆண்டுகொண்டிருக்கும் உரோமை நாட்டிற்கு பிரமாணிக்கம் காட்டியதால் அவர்கள் அவ்வாறு கருதப்பட்டனர். மற்றொரு பக்கம் இந்த வரிவசூலிப்பவர்களுக்கு இரண்டு பக்கமும் கஷ்டம்: வரி வாங்கப் போனால் தங்கள் சொந்த மக்களே அவர்களை தரக்குறைவாகப் பேசுவர். வரி வாங்கவில்லையென்றால் இவர்களுக்கு மேலிருக்கும் உரோமை அரசு இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும்.

இப்படி இரண்டு பக்கமும் அடி வாங்கிக் கொண்டிருந்ததால் என்னவோ, 'என்னைப் பின்பற்றி வா!' என்று இயேசு சொன்னவுடன், மத்தேயு உடனே எழுந்து சென்றுவிட்டார்போல!

மத்தேயுவின் உடனடி பின்பற்றுதல் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதை சிந்தித்துக் கொண்டிருக்கும்போது என் மனதின் ஓட்டம் என்னவென்றால் 14 வருடங்கள் குருமடப் பயிற்சி முடித்து, அருட்பொழிவு பெற்ற எனக்கு சில நேரங்களில் 'பின்பற்றுதல்' கடினமாக இருக்கிறது என்பதுதான். ஆனால், தன் குடும்பம், பிள்ளைகள், தன் வேலை, உடன் பணியாட்கள் என இருந்த மத்தேயு எப்படி உடனே சென்றுவிட்டார்?

நிற்க.

காலையில் இயேசு மத்தேயு அழைக்கும் நிகழ்வு நடக்கிறது. அதே நாள் மாலையில் மத்தேயுவின் இல்லத்தில் விருந்து ஒன்று நடக்கிறது. முதன்மை விருந்தினர் இயேசுதான். தன்னுடன் வேலை செய்தவர்கள், தன் நண்பர்கள், தன் உறவினர்கள் என அனைவரையும் விருந்திற்கு அழைத்திருக்கிறார் மத்தேயு.

ஒருவேளை இதுதான் மத்தேயுவின் பிரியாவிடை விருந்தோ?

அல்லது

இந்த விருந்தின் வழியாக மத்தேயு தன் உள்ளத்து மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள நினைத்தாரா?

அல்லது

இந்த விருந்தின் வழியாக, 'ஆண்டவரே! நான் இவ்வளவுதான்! என் குடும்பம், உறவுகள் இவர்கள்தாம்!' என இயேசுவுக்கு அறிமுகம் செய்துவைக்க விழைந்தாரோ?

இந்த மூன்று காரணங்களுமே இருந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் இந்த மூன்று காரணங்களிலும் முதன்மையான காரணம் என்னவாக இருக்குமென்றால், 'இதுதான் நான்!' என்று இயேசுவுக்கு அவர் சொல்ல விழைந்ததுதான்.

இன்று மாலை எங்கள் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய சேன்ட்லர் என்ற ஆஸ்ட்ரிய இறையியல் பேராசிரியர் உரையாற்றிவிட்டு அமர்ந்தார். மிக அழகாக உரையாற்றினார். கேள்வி நேரம் தொடங்கியது. அமர்ந்திருந்த பேராசிரியர்களில் ஒருவர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். கேள்வி முடிவில் குறுக்கிட்ட சேன்ட்லர், 'எனக்கு கேட்பதில் குறைபாடு இருக்கிறது. யாராவது ஒருவர் என்னிடம் கேள்வியை எழுதிக் காட்டுவீர்களா?' என்று கேட்டார்.

எனக்கு ரொம்ப புல்லரித்துப் போனது. இவ்வளவு பெரிய கூட்டத்தின்முன், 'நான் இவ்வளவுதான்!' என்று சொல்லிவிட இவரால் எப்படி முடிந்தது?

எனக்கு அறிமுகமானவர்களிடம் அல்லது என் நண்பர்களிடம்கூட என் குறைகளை மறைக்க நான் அதிகம் முயற்சிகள் செய்கிறேன். 'நான் இப்படி அல்ல!' என்று சொல்வதிலேயே அல்லது என்னிடம் இருக்கும் குறையை மறைப்பதிலேயே ஆர்வமாயும் இருக்கிறேன். எனக்கு இன்று மத்தேயுவும், சேன்ட்லரும் சவால்களாய் இருக்கிறார்கள்.

நாளை என் மதுரை உயர்மறைமாவட்ட அருட்பணியாளர்கள் தங்கள் ஆயர்களோடு இணைந்து, ஆண்டு தியானத்தைத் தொடங்குகின்றனர். அவர்களுக்கு நம் செபங்களும், வாழ்த்துக்களும்.

'நான் இவ்வளவுதான்!' என்று இறைவனிடம், ஒருவர் மற்றவரிடமும் திறந்து காட்டும் மனநிலை இருந்தால் எத்துணை நலம்!


Saturday, September 19, 2015

எப்படி அவரால் மட்டும்

'2015 செப்டம்பர் 27க்கும் 28க்கும் இடையே உள்ள இரவில் நிலவு சிகப்பு நிறமாக மாறும். பைபிளில் உள்ள அறிகுறிகள் எல்லாம் தோன்றும். உலகம் விரைவில் அழியும்.'

இப்படி ஒரு செய்தி இணையதளத்தில் வேகமாகப் பரவிக் கொண்டு வருகிறது.

உலகம் அழியுமா? அழியாதா? என்ற கேள்வி உலகம் தோன்றியது முதல் கேட்கப்படுகின்ற கேள்வி. 'மழை வரும்! ஆனால் வராது!' என்றுதான் இதற்கு நம்மால் பதில் சொல்ல முடியும்.

'தொடங்கும் அனைத்தும் முடியும்!' என்பதுதான் இயற்கையின் விதி என்றால், அது இயற்கைக்கும் பொருந்தத்தான் செய்யும்.

இந்த இயற்கையன்னையின் மடிசுகம் அனுபவித்த நமக்கு அந்த அன்னை நம்மை எழுப்பிவிடுவது கஷ்டமாகத்தான் இருக்கும்.

இன்று காலை முதல் எங்கள் கல்லூரி வளாகத்தில், 'இயற்கையைக் காப்போம்!' என்று அடுத்தடுத்து பேராசிரியர்கள் முழங்கிக் கொண்டே இருந்தனர். ஆனால் 'இயற்கைதான் நம்மைக் காக்கிறது!' என்பதை நாம் மறந்துவிட்டோமோ என்றுதான் எனக்குத் தோன்றியது.

ஒருவர் மற்றவர்மேல் பழியைப் போட்டுவிட்டு 'என் வேலை முடிந்துவிட்டது!' என்று சொல்வதுதான் இன்று சுற்றுச்சூழல்குறித்த கருத்தரங்குகளில் நடக்கிறது. ஒரு சுற்றுமடல், ஒரு கருத்தரங்கு, ஒரு உரை, ஒரு விவாதம் என்று மட்டும் சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியுமா?

இயேசுவால் எப்படி தன்னை இயற்கையோடும், மக்களோடும் ஒன்றித்துப் பார்க்க முடிந்தது? எந்தவித பேதமும் பாராட்டாமல் எப்படி இணைந்து வாழ முடிந்தது?

பிறப்பு, இறப்பு, சிலுவை, உயிர்ப்பு, அன்பு செய்தவர்கள், காட்டிக் கொடுத்தவர்கள் என எல்லாரையும், எல்லாவற்றையும் எப்படி அவரால் மட்டும் சமமாகப் பார்க்க முடிந்தது?


Friday, September 18, 2015

பாறைமீது விழுந்த விதைகள்

நாளைய நற்செய்திப் பகுதியில் (லூக்கா 8:4-15) விதைப்பவர் உவமையை வாசிக்கின்றோம். வழிகளில் விழுந்த விதைகள், பாறைமீது விழுந்த விதைகள், முட்செடிகள் நடுவே விழுந்த விதைகள், நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் என நான்கு வகை நிலப்பகுதிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

'பாறைமீது விழும் விதைகள் மேல்' எனக்கு எப்போதும் ஒரு கரிசணை உண்டு. ஏனெனில் இந்தவகை விதைகளோடுதான் நான் என்னையே அடிக்கடி இணைத்துப் பார்த்திருக்கிறேன். பாதையில் விழுந்த விதைகளுக்கும், முட்செடிகள் நடுவே விழுந்த விதைகளுக்கும் ஆபத்து வெளியில் இருக்கிறது. ஆனால், பாறைமீது விழுந்த விதைகளுக்கு ஆபத்து தன்னகத்தேதான் இருக்கின்றன. வேகமாக முளைக்கின்றன. ஆனால், ஈரமில்லாததால் கருகிப் போகின்றன.

இவ்வகை விதைகளுக்கு இயேசு கொடுக்கும் அர்த்தமும் மிக அழகாக இருக்கிறது: 'பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள். சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள். சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள்!'

இன்று எங்கள் கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சூழல் பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு தொடங்கியுள்ளது. திருத்தந்தை 'லௌதாத்தோ சீ' சுற்றுமடல் எழுதிய நாள் முதல் ஊரெல்லாம் சுற்றுச்சூழல்தான் பேச்சாக இருக்கிறது. ஆனால், அவரின் அடுத்த சுற்றுமடல் வரும்வரைதான் இந்தப் பேச்சு இருக்கும். பின் பேச்சு வேறுபக்கம் மாறிவிடும். ஆக, நம் ஒட்டுமொத்த பேச்சும்கூட பல நேரங்களில் பாறைநிலங்களில் விழுந்த விதைகளாகவே இருக்கின்றன.

மேலும், இன்றைய தகவல் தொழில்நுட்பமும், நாம் வாழும் நவநாகரீகமும் நீண்ட காலம் அல்லது நிலைத்து நிற்கும் எதையும் சந்தேகத்தோடே பார்க்கிறது. வேகமாக வாழ வேண்டும். வேகமாக அனுபவிக்க வேண்டும். வேகமாக மறைய வேண்டும். இப்படிப்பட்ட கருத்தியலைக் கொண்டிருக்கும் நம் உலகம் பாறைமீது விழுந்த விதையாக இருக்கவே நம்மை அழைக்கிறது. ஆழமான உறவுகள், நீண்டகால நட்பு, விட்டுக்கொடுக்க முடியாத மதிப்பீடு என்று எதுவும் இல்லை போல தெரிகிறது.

நாளைய முதல் வாசகத்தில் திமொத்தெயுவுக்கான தன் அறிவுரையை நிறைவு செய்யும் பவுல் இயேசு கிறிஸ்து தோன்றும் வரையில் எந்தவித குறைச்சொல்லும் ஆளாகாதவாறு வாழுமாறு சொல்கின்றார். ஆக, அப்பழுக்கு இல்லாமல் வாழ வேண்டும். அதையும் தொடர்ந்து வாழ வேண்டும். அதாவது, பாறைமீது விழுந்த விதைகளாக சில காலம் மட்டும் அப்பழுக்காமல் வாழ்ந்துவிட்டு பின் அழுக்காகிவிடாமல், என்றும் அழுக்கில்லாமல், இழுக்கில்லாமல் வாழ வேண்டும். 

பாறைமீது விழுந்த விதைகளின் நேர்முக குணம் என்னவென்றால் 'உடனடி வளர்ச்சி!' ஆனால், உடனடி வளர்ச்சி எப்போதும் நீண்டகால வளர்ச்சி அல்ல என்பதே எதார்த்தம்.

என் மதிப்பீடுகளிலும், என் அழைத்தல் வாழ்விலும், என் இறைநம்பிக்கையிலும் நான் பாறைமீது விழுந்த விதைகள் போல அல்லாமல், என்றும் ஈரத்தோடு இருந்தால் எத்துணை நலம்!


Thursday, September 17, 2015

இறைப்பற்று

நாளைய முதல் வாசகத்தில் (காண். 1 திமொத்தெயு 6:2-12) விசுவாசத்தில் தான் பெற்றெடுத்த அன்பு மகன் திமொத்தெயுவுக்கு பவுல் வழங்கும் அறிவுரை தொடர்கிறது.

'இறைப்பற்று பெறும் ஆதாயம் தருவதுதான். ஆனால் மனநிறைவு உள்ளவர்களுக்கே தரும்'

இப்படிச் சொல்லும் பவுல் தொடர்ந்து செல்வத்தினால் அருட்பணி நிலைக்கு வரும் தீமையையும் விளக்கிச் சொல்கிறார்.

செல்வத்திற்கு மாற்றாக, நீதி, இறைப்பற்று. நம்பிக்கை, மனவுறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடச் சொல்கின்றார்.

செல்வம் வந்தவுடன் நம்மால் நீதியை வாங்கிவிட முடிகிறது. இறைவனின் மேல் உள்ள பற்று குறைந்து, நாம் கொண்டிருக்கும் பொருட்களைப் பற்றிக்கொள்ளவே மனம் விரும்புகிறது. பணமே நம்பிக்கையின் ஆதாரமாகிவிடுகிறது. எல்லாவற்றோடும் சமரசம் செய்து கொள்ள விரும்புவதால் மனவுறுதியும் அசைவு கண்டுவிடுகிறது. இறுதியாக, செல்வம் வந்தவுடன் பணிவும் பனிபோல மறைந்துவிடுகிறது.

ஆக, பவுல் முன்வைக்கும் மாற்று மதிப்பீடுகள் ஆச்சர்யம் தருபவையாக இருக்கின்றன.

நாளைய நற்செய்தியில் (லூக்கா 8:1-3) இயேசுவின் பணியை பல பெண்கள் தங்களின் பொருளாதாரத்தாலும், உடனிருப்பாலும் தாங்கினார்கள் என்று வாசிக்கின்றோம். ஆக, இறைப்பற்றால் வரும் மனநிறைவு கொண்டவர்களுக்கு இறைவன்தாமே தன் வானதூதர்களை அனுப்பி அவர்களை மேலும் நிறைவுசெய்வார் என்பது இயேசுவின் வாழ்விலேயே வெள்ளிடைமலையாக இருக்கிறது.


Wednesday, September 16, 2015

இளவல் திமொத்தெயு

இன்று மதியம் உணவறையில் என் மேசையில் உடன் அமர்ந்திருந்த அருட்பணியாளர் ஒருவர், 'புதிய ஏற்பாட்டில் யாராவது விஷனரி இருக்கிறார்களா?' என்று கேட்டார். எனக்கு உடனே பவுலின் பெயர்தான் நினைவிற்கு வந்தது. 'பவுல்' என்றேன். உடனே அவர், 'பவுல் ஒரு மிஷனரி, விஷனரி அல்ல!' என்றார். நான் உடனே நாளைய முதல் வாசகத்தை (காண். 1 திமொ4:12-16) மேற்கோள் காட்டினேன். பவுல் மிஷனரியாகப் போன இடங்களில் எல்லாம் திருஅவை வேகமாக வளர்கிறது. இப்போது அவரால் எல்லா இடங்களுக்கும் போக முடியாத நிலை. அங்கங்கே தலைவர்களை நியமிக்க வேண்டும். தலைவர்களைத் தெரிந்து கொள்வதும், அவர்களைத் தயார் செய்வதும்தான் ஒரு விஷனரியின் வேலை. திமொத்தேயு என்ற இளைஞரைத் தெரிவு செய்கிறார். திமொத்தேயு ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டபோது அவருக்கு ஏறக்குறைய 25 அல்லது 30 வயதுதான் இருந்திருக்கும். ஆனால், அவரைத் தெரிந்து கொண்டு, அவரைத் தயார் செய்யும் பவுலுக்கு நாம் ஆயிரம் சபாஷ் சொல்லலாம்.

நாளைய முதல் வாசகப் பகுதி மறைமாவட்ட அருட்பணியாளருக்கு எழுதப்பட்டதாகவே நான் எப்போதும் உணர்கிறேன்.

1. 'நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிருக்கட்டும்.' உதவி அருட்பணியாளராக பங்குத்தளத்தில் இருக்கும் எந்த அருட்பணியாளருக்கும் 'தாழ்வாகக் கருதப்படும்' அனுபவம் நிச்சயம் இருக்கும். அங்கு ஏற்கனவே இருக்கும் பங்கு அருட்பணியாளரும் இவரைக் கண்டுகொள்ளமாட்டார். 'ஒருவருடம் தானே இருப்பார்!' என மக்களும் கண்டுகொள்ளமாட்டார். உதவிப் பங்குப்பணியாளர் என்பவர் ஓட்டலில் உணவு தீர்ந்தவுடன் தயார் செய்யப்படும் உப்புமா போல என நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன். பங்குத்தந்தை என்ற உணவைத் தேடி வருபவர்கள், அவர் இல்லாதபோது வேண்டா வெறுப்பாக சாப்பிட்டுச் செல்லும் உப்புமா இவர். ஆனாலும், இவர் மனம் தளர்ந்து போவதில்லை. இது இன்றைய பிரச்சினை மட்டுமல்ல. திமொத்தெயுவுக்கே இந்த பிரச்சினை இருந்திருக்கின்றது.

2. 'பேச்சு, நடத்தை, அன்பு, நம்பிக்கை, தூய்மை' - இந்த ஐந்திலும் நீ விசுவாசிகளுக்கு முன்மாதிரியாய் இரு. அதாவது ஒரு அருட்பணியாளரைப் பார்ப்பவர்கள் தாங்களும் அவரைப் போல பேச வேண்டும், நடக்க வேண்டும், அன்பு செய்ய வேண்டும், நம்பிக்கை கொள்ள வேண்டும், தூய்மையாக இருக்க வேண்டும் என நினைத்தால் எவ்வளவு நலம்! இன்று வகுப்பறையில் 'ஒரு கடவுள் நம்பிக்கை' பற்றி வாக்குவாதம் எழுந்தது. காரசாரமாக மாணவர்கள் விவாதித்தனர். 'நிறையக் கடவுளர்கள் இருக்கிறார்கள்!' என்றனர் சிலர். 'இல்லை நம் கடவுள் மட்டும்தான் கடவுள்' என்றனர் பலர். நான் இரண்டு பக்கமும் ஆதரவாகச் சொல்லி முடித்தேன். வெளியில் வரும்போது அறைக்கு வெளியே சுத்தம் செய்து கொண்டிருந்த லதா பானர்ஜி என்ற வேலைக்காரப் பெண்மணி தன் புதிய செபமாலையை ஆவலுடன் காட்டினார். 'இதுதான் நம்பிக்கை!' என நினைத்துக்கொண்டேன். இன்று நானே பல நேரங்களில் 'கடவுள் நம்பிக்கை' பற்றி அடிக்கடி விவாதம் செய்கிறேன். சில நேரங்களில் 'கடவுள் இருக்கிறார்' என ஏற்றுக்கொள்ளவும் அஞ்சுகிறேன். ஆனால், அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருப்பவர்கள் என் பங்கில் இருக்கும் இறைமக்கள். பவுல் சொல்லும் இந்த ஐந்து குணங்களிலும் நானும் மேலோங்க வேண்டும் என்பது என் செபம்.

3. 'மறைநூலைப் படித்துக் காட்டுவதில், அறிவுரை வழங்குவதில், கற்பிப்பதில் கவனம் செலுத்து.' இன்று பங்குத்தளங்களில் பல இடங்களில் ரெடிமேட் மறையுரைகள்தான் வைக்கப்படுகின்றன. சில ரெடிமேட் மறையுரையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பங்கும் தெரியாது. பங்கில் உள்ள பிரச்சினைகளும் தெரியாது. பங்கு மக்களையும் தெரியாது. ஆனாலும், அவர்கள் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் சிறப்பு திருப்பலிக்கு அழைக்கப்படுவார்கள். இந்த மறையுரை கேட்பதற்கு நன்றாக இருக்குமே தவிர, பங்கு மக்களை ஒருபோதும் தொடாது. இதுவே, பங்கு அருட்பணியாளர் தனக்கு தெரிந்ததை நாலு வார்த்தைகள் நல்ல வார்த்தையாகச் சொன்னால், அது மக்களை எளிமையாகச் சென்றடையும். இன்று மக்கள் அறிவுரை வேண்டியும் அருட்பணியாளரிடம் வருகிறார்கள். நல்ல மறையுரை, நல்ல அறிவுரை, நல்ல படிப்பினை - இந்த மூன்றும் அருட்பணியாளரின் கடமைகள்.

4. 'உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையவற்றனாய் இராதே!' ஒவ்வொரு அருட்பணியாளரும் தன் அருட்பொழிவு நிகழ்வை மனத்தில் வைத்து வாழ வேண்டும். பல அருட்பணியாளர்களின் அறையில், ஏன் என் அறையிலும், குருத்துவ அருட்பொழிவு நிழற்படம் இருக்கும். இது நமக்கு அந்த நாளை மட்டுமல்ல, அந்த நாளின் அருளையும் நினைவூட்டுகிறது. இறைமக்கள்முன் 'இதோ! நான் வருகிறேன்!' என்று சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காகத்தான் இன்று இறைமக்கள் நம்மை மதிக்கிறார்கள். நாம் யாருடைய வற்புறுத்தலின்பேரிலோ, அல்லது எந்தவித ஒப்பந்தத்தின் அடிப்படையிலோ இந்தப் பணியைத் தெரிந்துகொள்ளவில்லை. இதன் இன்ப-துன்பங்கள் நமக்குத் தெரிந்துதான், 'இதோ! வருகிறேன்!' என்று சொன்னோம். இப்படி அன்று சொல்லிவிட்டு, இன்று நான் முணுமுணுத்தால், அல்லது 'எல்லாரும்தான் இதைச் செய்றாங்க! நான் செய்வதில் என்ன?' என்று மதிப்பீடுகளில் சமரசம் செய்தால், நான் அருள்கொடையைக் குறித்து அக்கறையவற்றவனாய் ஆகவிட்டேன் என்றே அர்த்தம்.

5. 'நீ வளர்ச்சி அடைய வேண்டும். இந்த வளர்ச்சி உன் செயல்களில் இருக்க வேண்டும்!' ஒரு அருட்பணியாளரும், அவரின் பங்குத்தளமும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர வேண்டும். எல்லாவற்றிலும் வளர வேண்டும் - நிதி நிலைமையில், புதிய முன்னெடுப்புகளில், ஆன்மீகத்தில். என் வயதையொத்த குடும்பத் தலைவர் தன் குடும்பம் எப்படியெல்லாம் முன்னேற வேண்டும் என கணக்குப் போட்டு அதற்காக உழைக்கிறார். ஆனால், நான் மட்டும் ஏன் மறைமாவட்டம் அருட்பணியாளருக்கான உதவியைக் கூட்ட வேண்டும் என்றும், அல்லது மக்கள் வரி அதிகமாகக் கொடுக்க வேண்டும் எனவும் கணக்குப் போட வேண்டும்? என் ஆற்றலை நான் செலவழித்து என் வளத்தையும், என் பங்கின் வளத்தையும் நான் வளர்க்கலாமே!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் பவுலின் வார்த்தைகள் உந்துசக்தியாக இருக்கின்றன என்றால், அவர் ஒரு விஷனரிதான்.

நாளைய முதல் வாசகத்தில் நாம் காணும் இந்த இளவல் திமொத்தெயு என்னையும், என் போன்ற அருட்பணியாளர்களையும் தூண்டுவாராக!


Tuesday, September 15, 2015

ஆதலினால் இணையதளத்தில்

இன்று புனே ஞானதீப பல்கலைக்கழக நூலகத்தில் புத்தகம் ஒன்று பார்த்தேன். ஆரோன் பென்-சே'வ் (Aaron Ben-Ze'ev) அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய, Love Online: Emotions on the Internet 'ஆன்லைன் அன்பு: இணையதளத்தில் உணர்வுகள்'. புத்தகத்தைப் புரட்டிய நான்கைந்து பக்கங்களில் மணி ஒன்றாகிவிட்டது. அப்படியே அதை விட்டுவிட்டு வர மனமில்லாததால் கொஞ்ச நேரம் உட்கார்ந்து படித்தேன். மிக எதார்த்தமான ஒரு புத்தகம். சாட்டிங், சைபர் செக்ஸ், டெலிஃபோன் செக்ஸ் என போகிற போக்கில் இணையதள எதார்த்தங்களைச் சுட்டிக்காட்டுகின்றார்.

இணையதள உரையாடல்களில், ஸ்கைப் மற்றும் ஃபேஸ்டைம் செயலிகளில் பகிரப்படும் ஒலி, ஒளி தரவுகளைக் கேட்டால் அல்லது பார்த்தால், நாம் பெற்றோர் காலத்தில் இயல்பாக நடந்த கடிதக் காதலும், காத்திருந்த காதலும், ஏதோ கற்கால நிகழ்வுகள் போல நமக்குத் தோன்றுகின்றன.

'எவ்வளவு மனிதர்கள்! ஆனால் எவ்வளவு குறுகிய நேரம்!' என்று இன்ற இணையதளக் காதலுக்கு நேரமில்லாமல் தவிக்கின்றோம்.

இன்று அன்பு, காதல், நட்பு, செக்ஸ் எல்லாம் வேறு புதிய தளத்திற்குக் கடந்து சென்றுவிட்டன. இந்த ஓட்டத்தோடு சேர்ந்து ஓடாதவர்கள் ஏதோ 'ஏலியன்கள்' போலவே பார்க்கப்படுகின்றனர்.

சரி எதற்கு இந்தப் பின்புலம்?

மேற்காணும் ஓட்டத்தோடு சேராதவர்கள் அல்லது ஓட்டத்தில் பங்கேற்காதவர்கள், பங்கேற்கும் மற்றவர்களை எப்படிப் பார்ப்பார்கள் என்பதை நாளைய நற்செய்தியில் சொலவடையாக இயேசு சொல்கின்றார்:

'நாங்கள் குழல் ஊதினோம். நீங்கள் கூத்தாடவில்லை.
நாங்கள் ஒப்பாரி வைத்தோம். நீங்கள் அழவில்லை!'

இதை இன்றைய இயங்குதள வார்த்தைகளில் சொன்னால்,

'நாங்கள் ஸ்கைப்பில் கூப்பிட்டோம். நீங்கள் பதில் தரவில்லை.
நாங்கள் இன்ஸ்டன் மெசஜ் அனுப்பினோம். நீங்கள் கண்டுகொள்ளவில்லை.

நாங்கள் ஸ்டேடஸ் போட்டோம். நீங்கள் லைக்ஸ் போடவில்லை.
நாங்கள் சாட்டிங்க செய்தோம். நீங்கள் ஆஃப்லைன் போய்விட்டீர்கள்!'

அதாவது, உண்டு குடிக்காத திருமுழுக்கு யோவானை 'பேய்பிடித்தவன்' என்று சொல்லும் மக்கள் கூட்டம், உண்டு குடித்த இயேசுவை 'பெருந்தீனிக்காரன்' என்கிறது.

அதாவது, திருமுழுக்கு யோவான் காலத்தில் இருந்த சமூகத்தின் மதிப்பீடுகள், சட்டென்று மாறும் வானிலை போல இயேசுவின் காலத்தில் மாறிவிடுகிறது. ஆகையால், இயேசு அவர்களின் எதிர்பார்ப்பு என்ற கட்டத்திற்குள் பொருந்த மறுக்கின்றார். அவப்பெயரைச் சம்பாதிக்கின்றார்.

இப்போ நாம என்னதான் செய்வது?

நம் உலகின் மதிப்பீடுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றனவே. நாமும் மாறிக்கொண்டே இருப்பதா? நம் மதிப்பீடுகள், வாக்குறுதிகள் போன்றவவையும் மாற வேண்டுமா?

இல்லை...

'ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று!' என மிக அழகாகச் சொல்கின்றார் இயேசு.

அதாவது, ஒரு சிலர் இதை முட்டாள்தனம் என்று சொல்வதால், ஞானம் மடமை ஆகிவிடுமா. இல்லை. மனிதர்கள் ஏற்றுக்கொண்டாலும், இல்லையென்றாலும், மாறினாலும், மாறாவிட்டாலும், ஞானம் என்றும் ஒன்றே. ஆக, இதை ஏற்றுக்கொள்பவரின் செயல்களும் ஒன்றே. அவைகள் மாறத்தேவையில்லை.

சரி...இப்போ இண்டர்நெட் ஆன் செய்வதா, ஆஃப் செய்வதா?

ஆதலினால் இணையதளத்தில் காதல் செய்வீர்! - என்று சொல்வது யாருடைய ஞானம்?


Monday, September 14, 2015

கண்ணீர் விடுவதற்கே

பெண் -

கண்ணீர் விடுவதற்கே கடவுள் படைத்த உயிரா இவர்?

என்று தண்ணீர்குடம் உடைத்து ஒரு மகனைப் பெற்றெடுக்கிறாரோ,

அன்றே இவரின் கண்ணீர்குடமும் உடைந்து விடுகிறது போல!

நாளை தூய மரியாளை வியாகுலத்தாய் எனக் கொண்டாடுகிறோம்...

'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்'

என்ற பொய்யாமொழிப் புலவனின் வார்த்தைகள் பொய்யாய்ப் போனதோ இவரிடம்!

இவரின் மகனைப் பற்றி இவரிடம் என்ன சொல்லியிருப்பார்கள் மற்றவர்கள்?

அந்த நேரத்தில் இவரின் உள்ளக்கிடக்கை என்னவாக இருந்திருக்கும்?

தான் இறக்கும் அந்தத் தருணத்தில்கூட

இவர் வளர்த்த ஆசை மகன்

'இதோ! உன் அன்பார்ந்த மகன்!'

என்று தன்னை; சுட்டிக்காட்டாமல்
தன் சீடன் ஒருவரைக் காட்டி விடுகின்றார்.

'என்னது இவர் என் மகனா? அப்படின்னா நீ எனக்கு யார்?'

'இதோ உன் தாய்!' என உன் சீடனிடம் என்னை ஏன் தள்ளி விடுகிறாய்?

என்னையும் உன்னோடு எடுத்துக்கொள்ளேன்!

'நான் உனக்கு யார்?'

எனக் கேட்டிருப்பார் இந்தக் கன்னித் தாய்.

'உன் இதயத்தை ஒரு வாள் ஊடுருவும்!'

என்று சிமியோன் சொன்னது இந்த நாளைக் குறித்துத்தானோ?

மரியாளின் கன்னிமை, அமல உற்பவம், இறைத்தாய்மை

என எல்லா இறையியல்களும் நம்மைத் தொடவில்லையென்றாலும்,

அவர் வடித்த கண்ணீர் என்னவோ நம் மனதையும் பிசைந்து விடுகிறது.

நாளை இந்த அன்னையின் கண்ணீரைக் கொண்டாடும் வேளையில்

அன்றாடம் கண்ணீர் வடிக்கும் ஒரு பெண்ணின் கண்கள் நோக்கி

என் கரம் நீண்டால்

நாளைய திருநாள் வெற்றி!



Friday, September 11, 2015

சஷ்டியில் இருந்தால்

நான் 10ஆம் வகுப்பு படித்தபோது எனக்கு வகுப்பெடுத்த தமிழாசிரியர், மாணவரிடம் பாடம் சார்பாக கேள்வி கேட்டு மாணவன் விடையளிக்காமல் விழித்தாலோ, அல்லது எழுத்து தேர்வில் ஒன்றும் எழுதாமல் இடம் விட்டிருந்தாலோ, 'சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்!' என்று பழமொழி சொல்வார். அதாவது, உள்ளுக்குள் இருந்தால்தான் வெளியில் வருமாம். அல்லது உள்ளே என்ன இருக்கிறதோ அதுதான் வெளியில் வருமாம்.

விடுமுறைக்குச் சென்றபோது என் வீட்டில் நான் இதே பழமொழியைப் பயன்படுத்த, வீட்டு வாசலில் தன் கூந்தலை உலர்த்திக்கொண்டிருந்த என் அய்யாமை (அப்பாவின் அம்மா), 'தம்பி! நீ சொல்லும் பழமொழி தவறு!' என்றார்கள். 'தவறா! அப்படின்னா சரியான பழமொழி என்ன?' என்று கேட்டேன்.

'சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்!' என்பதுதான் பழமொழியாம்.

அதாவது, திருமணம் ஆகியும் குழந்தைப்பேறு இல்லாத பெண்கள், முருகனை வேண்டி சஷ்டி விரதம் (கந்த சஷ்டி விரதம் - கந்தன் என்பது முருகனின் பெயர்) இருக்க வேண்டும். அப்படி சஷ்டியில் விரதம் இருந்தால், அகப்பையில், அதாவது கருப்பையில், குழந்தை வருமாம்!

இது காலப்போக்கில் மருவியதோடல்லாமல் பொருளும் மாறியிருப்பது ஆச்சர்யமே!

நாளைய நற்செய்தியில் (லூக்கா 6:43-49) இயேசுவின் சமவெளிப்பொழிவு தொடர்கிறது: 'மரம் எந்த இயல்பைக் கொண்டிருக்கிறதோ, அதே இயல்பைத்தான் கனியும் கொண்டிருக்கும்!' - ஆக, உள்ளே எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் வெளியேயும் இருக்கும்.

உள்ளத்தில் நன்மை இருந்தால், அது நன்மையாகவே வெளியே வரும். தீமை இருந்தால், அது தீமையாகவே வெளியே வரும்.

வெளியே தெரிவது வெறும் அறிகுறிதான். ஆனால், நோய் ஆழமாக உள்ளிருக்கக் கூடியது. இன்றைய மருத்துவத்தைப் பற்றி முன்னோர்கள் சொல்லும்போது, இன்றைய மருத்துவம் அறிகுறிகளைக் குணமாக்குகிறதே தவிர, நோயைக் குணமாக்குவது இல்லை என்பார்கள். உதாரணத்திற்கு, வாயில் புண் வருகிறது என்றால், அது வயிற்றின் உள்ளிருக்கும் புண்ணின் வெளிப்பாடு என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், பல நேரங்களில் நாம் வாயில் புண் ஆறிவிட்டால் எல்லாம் சரியாகிவிட்டது என மருந்து எடுப்பதை நிறுத்திக்கொள்கிறோம். பின் சில நாட்களில் மீண்டும் புண் வருகிறது. ஏன்? நாம் நமது மருந்துகளால் அறிகுறிகளைத்தான் குணப்படுத்தினோமே தவிர, புண்ணைக் குணப்படுத்தவில்லை.

ஒருவேளை நம் உள்ளத்தில் தீமைதான் இருக்கிறது என்றால் அது குறித்து கவலைப்பட தேவையில்லை. மாறாக, 'எல்லா பாவ நிலையையும் அகற்ற இயேசு இவ்வுலகிற்கு வந்தார்' என்று நம்பிக்கை தருகின்றார் பவுல் (1 திமொ 1:15-17). இயேசு நம்முள் வந்து எல்லாவற்றையும் அகற்றிவிட நம் உள்ளம் தூய்மை பெறுகிறது. அப்படி இயேசுவும், அவருடன் நன்மையும் உள்ளே வந்துவிட்டால் நம் சொற்களும், செயல்களும், அவற்றைப் பிரதிபலிக்க வேண்டும்தானே!



Thursday, September 10, 2015

இரண்டு வகைக் கேள்விகள்

விவிலியத்தில் இரண்டு வகைக் கேள்விகள் உள்ளன: முதல் வகைக் கேள்விகள் விடைகளைத் தங்களுக்கு வெளியே கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நாளைய பதிலுரைப்பாடலில் (திபா 15) வரும் கேள்வி: 'ஆண்டவரே உம் இல்லத்தில் தங்கியிருப்போர் யார்?' இரண்டாம் வகைக் கேள்விகள் விடைகளைத் தங்களுக்கு உள்ளே கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நாளைய நற்செய்தியில் வரும் கேள்வி: 'குருடர் குருடருக்கு வழிகாட்ட முடியுமா?' இந்தக் கேள்விக்குப் பதில் 'முடியாது!' என்பதுதான்.

நாளைய நற்செய்தி வாசகம் (லூக்கா 6:39-42) இந்த ஒரு கேள்வி மட்டும்தான். இந்தக் கேள்விக்குப் பின் வரும் மற்ற வசனங்கள் இந்தக் கேள்வியின் விளக்கவுரைதான். எப்படி? 'தன் அறிவுக்கண்ணில் இருளைக் கொண்டிருக்கும் சீடன் தன் தலைவருக்கு வழிகாட்ட முடியாது.' 'தன் கண்ணில் மரக்கட்டையைக் கொண்டிருக்கும் நபர் தன் நண்பரின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க முடியாது.' ஆக, குருடர் குருடருக்கு வழிகாட்ட முடியாது. அப்படி அவர்கள் காட்ட முயற்சித்தால் இருவரும் குழியில் விழுவர்.

நாளைய முதல் வாசகத்தில் (1 திமொ 1:1-2, 12-14) திமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட மடலின் முகவுரையை வாசிக்கின்றோம். ஒருகாலத்தில் இருளில் இருந்த பவுல், ஒரு காலத்தில் குழியில் விழுந்து கிடந்த பவுல் கடவுளின் அருளால் இன்று ஒளிபெற்று நிற்கின்றார். ஒளிபெற்ற நிலையில் புறவினத்தாருக்கு திருத்தூதனாகவும், திமொத்தேயுவுக்கு நம்பிக்கையின் தந்தையாகவும் துலங்குகின்றார். தன் கடந்தகால இருளைப் பற்றி திமொத்தேயுவுக்கு எழுதும் பவுல், தான் மூன்று நிலைகளில் இருளில் இருந்ததாக எழுதுகின்றார்: பழித்துரைத்தேன், துன்புறுத்தினேன், இழிவுபடுத்தினேன். இறைவனுக்கும் தனக்கும் உள்ள உறவுநிலையில் தவறி இறைவனைப் பழித்துரைக்கவும், பிறருக்கும், தனக்கும் உள்ள உறவுநிலையில் தவறி பிறரைத் துன்புறுத்தவும், தனக்கும், தனக்கும் உள்ள உறவுநிலையில் தவறி தன்னையே இழிவுபடுத்தவும் செய்கின்றார். ஆனால், சரியான சந்தர்ப்பம் வருகிறது. இறைவனின் பரிவாலும், அருட்பெருக்காலும் ஆட்கொள்ளப்பட்டு முற்றிலும் ஒளிபெற்றவராகின்றார். வலுவற்ற நிலையிலிருந்து வலுவான நிலைக்கு உயர்கின்றார்.

நாளைய இறைவாக்கு வழிபாடு எனக்கு இரண்டு சவால்களை முன்வைக்கின்றது:

அ. அக இருளும் புற இருளும் என்னை வழிநடத்த நான் என்னையே கையளிக்கின்றேனா?

ஆ. நானே இருளில் இருந்து கொண்டு மற்றவருக்கு ஒளிகாட்ட நினைக்கின்றேனா?

மிகவும் தெரிந்த நிகழ்வுதான். இருந்தாலும் மீண்டும் குறிப்பிடுகிறேன் இங்கு:

பங்குத்தந்தை ஒருவர் மருத்துவமனையிலிருந்த பெண்மணி ஒருவருக்கு நோயிற்பூசுதல் அருளடையாளம் அளிக்கச் செல்கின்றார். முடித்து வெளியேறும்போது, 'ஃபாதர் ஒரு நிமிடம்!' என அருட்பணியாளரை நிறுத்துகிறார் பெண்.

'என்னம்மா?'
'நான் உங்களை ஒன்று கேட்கலாமா?'
'கேளுங்கள்!'
'என் இறுதி ஆசை ஒன்றை நிறைவேற்றுவீர்களா?'
'என்ன ஆசை? சொல்லுங்கள்!'
'நான் இறந்தபின் என்னை அடக்கத்திருப்பலிக்கு கொண்டு வரும்போது என் கைகளை வெளியே தொங்கவிட்டு, அதில் ஒரு ஸ்பூனும், ஒரு ஃபோர்க்கும் வைக்க வேண்டும். செய்வீர்களா?'
'சரிம்மா, செய்கிறேன்! ஆனால் எதற்காக இப்படி செய்யச் சொல்கிறாய்?'
'ஃபாதர், எங்க வீட்டுல நாங்க 7 குழந்தைகள். எப்போதெல்லாம் குடும்ப விருந்து நடக்கிறதோ, அப்போதெல்லாம் ஒவ்வொரு குழந்தையின் அருகில் வந்து என் அம்மா, 'ஸ்பூனையும், ஃபோர்க்கையும் கையில் வைத்துக்கொள்ளுங்கள். தெ பெஸ்ட் இஸ் எட் டு கம்' என்பார். நான் இதை என் வாழ்வியல் பாடமாகவும் எடுத்துக்கொண்டேன். எப்போதெல்லாம் இருள் சூழ்ந்து நம்பிக்கையின்மை மேலோங்குகிறதோ, அப்போதெல்லாம் 'தெ பெஸ்ட் இஸ் எட் டு கம்!' என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்.'

பவுலுக்கு பெஸ்ட் தமாஸ்கு சாலையில் வந்தது.

இருள் உள்ளே, வெளியே நம்மைச் சூழும்போது நமக்கு நாமே சொல்லிக் கொள்வோம்:

'தெ பெஸ்ட் இஸ் எட் டு கம்!'


Wednesday, September 9, 2015

அன்பிற்கினிய இறைமக்களே!

'அன்பிற்கினிய இறைமக்களே!' - ஏறக்குறைய இந்த வார்த்தைகளோடுதான் ஒரு பங்கு அருட்பணியாளரின் மறையுரையோ, அறிவிப்போ தொடங்கும்.

'இறைமக்கள்' என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தம் கொடுத்தது இரண்டாம் வத்திக்கான் சங்கம். அதாவது, திருச்சபை என்றால் இறைமக்கள் என்ற புதிய அர்த்தத்தின் வழியாக, திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், பொதுநிலையினர் என்ற பிரமிடு போல இருந்த திருஅவை, இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின் இறைமக்கள், அருட்பணியாளர்கள், ஆயர்கள், அவர்களோடு இணைந்த திருஅவை என தலைகீழ் பிரமிடு ஆனது.

தூய பவுலடியார் கொலோசை நகர திருஅவை உறுப்பினர்களை 'இறைமக்கள்' என அழைக்கின்றார் (காண். கொலோசை 3:12-17).

'நாம் உங்கள் கடவுளாய் இருப்போம், நீங்கள் என் மக்களாக இருப்பீர்கள்!' என்ற எரேமியாவின் புதிய உடன்படிக்கை (எரே 31:33) பற்றிய இறைவாக்கு பகுதியிலேயே 'இறைமக்கள்' என்ற சொல்லாடல் ஒளிந்து நிற்கிறது. 'அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்' (யோவான் 1:12) என யோவான் நற்செய்தியாளரும், இயேசுவில் அனைவரும் இறைமக்கள் ஆவதை முன்வைக்கின்றார்.

கொலோசை நகர மக்களை இறைமக்கள் என அழைக்கின்ற பவுலடியார், இறைமக்களுக்குரிய அணிகலன்களாக எட்டு பண்புகளைக் குறிப்பிடுகின்றார்: பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, அன்பு, நன்றி.

இந்த எட்டையும் ஒரே வாக்கியமாக அவரே எழுதுகின்றார்: 'எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்யுங்கள்...'

'நான் இறைவனின் மகன் அல்லது மகள்' என்ற எனக்கு நானே கொடுக்கும் வாக்குறுதி, எனக்கு அளவில்லா ஆற்றல் தருகின்றது. மேலும், இந்த வாக்குறுதி எனக்கு அருகிருப்பவரையும் சகோதரன் அல்லது சகோதரி என அழைக்க எனக்குத் தூண்டுதலாக இருக்கின்றது.

ஆக, இறைமக்களே என்று நாம் எந்த இடத்தில் இந்த வார்த்தையைக் கேட்டாலும், தூய பவுலடியார் சொல்லும் பண்புகளை ஒருநிமிடம் எண்ணிப்பார்க்கலாமே!



Tuesday, September 8, 2015

கிறிஸ்துவே அனைத்துமாய்

நாளைய நற்செய்தியில் (காண். லூக்கா 6:20-26) லூக்கா நற்செய்தியாளரின் சமவெளிப்பொழிவை வாசிக்கின்றோம். மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் மலைப்பொழிவை (காண். மத் 5) பதிவு செய்கின்றார். மலைப்பொழிவின் தொடக்கத்தில் எட்டு வகையான மனிதர்களை பேறுபெற்றவர்கள் என அழைக்கின்றார் இயேசு.

லூக்கா நற்செய்தியின் இயேசு நான்கு பேரை பேறுபெற்றவர்கள் எனவும், நான்கு பேரை சபிக்கப்பட்டவர்கள் எனவும் அழைக்கின்றார்.

லூக்கா நற்செய்தியின் இயேசு இரக்கமே வடிவானவர். அப்படிப்பட்ட ஒருவர் எப்படி மனிதர்களை சபிக்கலாம்? மேலும், செல்வம் கொண்டிருப்பவர்கள், உண்டு கொழுத்திருப்பவர்கள், சிரித்து இன்புறுவோர், புகழ்ந்து பேசப்படுவோர் அனைவரும் சபிக்கப்பட்டவர்கள் என்கிறார் இயேசு.

செல்வம் கொண்டிருத்தலும், நல்ல சாப்பாடு சாப்பிடுவதும், சிரித்து மகிழ்ச்சியாக இருப்பதும், மற்றவர்கள் புகழும்படி நடந்து கொள்வதும் தவறா? இல்லை! பின் இயேசு எதற்காக இத்தகைய மனிதர்களைச் சாடுகின்றார். இந்த நான்கும் ஒருவரை தன்னை நோக்கி மட்டுமே கவனம் செலுத்த வைத்துவிட்டதென்றால் அது தவறான வழிமுறை. இந்த நான்கும் ஒருவரிடம் இருந்தாலும், அவர் தனக்கு அடுத்திருப்பவரையும், தனக்கு மேலிருப்பவரையும் நோக்கி தன் கண்களைப் பதிய வைக்க வேண்டும்.

இதைத்தான் நாளைய முதல் வாசகத்தில் (காண். கொலோ 3:1-11), 'நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்!' என்கிறார். ஆக, செல்வம், உடல், மகிழ்ச்சி, புகழ் என எல்லாம் நம் வாழ்வில் உயர்கிறது என்றால், நாம் நம்மையே நோக்கக் கூடாது. மாறாக, நம் கண்களை மேல்நோக்க வேண்டும்.

கீழ்நோக்கி அல்லது தன்-நோக்கி நம் பார்வை திரும்பியது என்றால் வேற்றுமை, சினம், சீற்றம், ஒழுக்கக்கேடு உருவாகும்.

கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருந்தால் இந்த மேல்நோக்கும் முயற்சி எளிதாகும்.

Monday, September 7, 2015

நமக்கு பொண்ணு பொறந்திருக்கு!

'நமக்கு பொண்ணு பொறந்திருக்கு!' - இந்த வார்த்தைகளுடன்தான் மரியாளின் பிறந்தநாள் விடிந்திருக்கும் நாசரேத் மக்களுக்கு.

விவிலியம் 'ஆண்களின்' நூலாக மட்டுமே இருந்ததால் என்னவோ, ஆண்களின் பிறப்பை மட்டுமே அது பதிவு செய்கிறது. விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ள பிறப்பு கதையாடல்களை மூன்று தலைப்புக்களின்கீழ் பிரிக்கலாம்: அ. அற்புதமான பிறப்பு, ஆ. அசாதாரணமான பிறப்பு, மற்றும் இ. சாதாரண பிறப்பு, ஆனால் அற்புதமான மீட்பு

அ. அற்புதமான பிறப்பு: ஈசாக்கு (தொநூ 21:1-8), இம்மானுவேல் என்னும் எசேக்கியா (எசா 7:14), சிம்சோன் (நீத 13), சாமுவேல் (1 சாமு 1:19-23), திருமுழுக்கு யோவான் (லூக் 1:5-25, 57-66) மற்றும் இயேசு (லூக் 1:26-38, 2:1-7) ஆகியோரின் பிறப்பு கதையாடல்கள் 'கன்னி அல்லது கருவுற இயலாதவர் கருவுறுதல்' என்னும் 'மாதிரிக் காட்சி' (type-scene) இலக்கியப் பண்பைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த இலக்கியப் பண்பின் படி முதலில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு வயது, மலட்டுத்தன்மை அல்லது கன்னிமை தடையாக இருக்கும் (ஆனால் எசேக்கியாவின் பிறப்பில் ஆகாசின் 'உள்ளத்தின் மலட்டுத்தன்மையான' நம்பிக்கையின்மை தடையாக இருக்கிறது). இரண்டவதாக, 'தடை நீங்கும்' என்ற வாக்குறுதி கிடைக்கும். மூன்றாவதாக, கருவுறுதலும், கதாநாயகனின் பிறப்பும் நடக்கும்.

ஆ. அசாதாரணமான பிறப்பு: ஏசா மற்றும் யாக்கோபு (தொநூ 25:19-26), யோசேப்பு (தொநூ 30:22-24), பெரேட்சு மற்றும் செராகு (தொநூ 39:27-30), ஓபேது (ரூத் 4:13-17) ஆகியோரின் பிறப்பு கதையாடல்கள் மேற்காணும் இலக்கிய பண்பைப் பெற்றிராவிட்டாலும், இவர்களின் பிறப்பு ஒரு அசாதரண முறையில்தான் நடந்தேறுகிறது.

இ. சாதாரண பிறப்பு, ஆனால் அற்புதமான மீட்பு: மோசேயின் பிறப்பு (விப 2:1-10) மிக சாதாரணமாக இருந்தாலும், அவர் எகிப்தின் பாரவோனின் கைகளிலிருந்து காப்பாற்றுப்படுதல் ஒரு அற்புதம் போல நடந்தேறுகிறது. இதில் விந்தை என்னவென்றால் பாரவோனின் வாளிலிருந்து மோசேயைத் தப்புவிக்கும் கடவுள் பாரவோனின் மகளின் மடியில் அவரை வளரச் செய்கின்றார்.

மரியாளின் பிறப்பு நிகழ்வு அல்லது கதையாடல் விவிலியத்தில் பதிவு செய்யப்படவில்லையென்றாலும், தொடக்கக் கிறித்தவர்களின் யாக்கோபின் முன்நற்செய்தி அல்லது முதல்நற்செய்தி (Protoevangelium of James) என்ற ஏற்றுக்கொள்ளப்படாத அல்லது ஐயத்துக்கிடமான நற்செய்தியிலும் (பிரிவு 5, எண் 2), இசுலாமியர்களின் திருக்குரானிலும் (3:33-36) பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாக்கோபின் முன்நற்செய்தியின்படி யோவாக்கீம்-அன்னா தம்பதியினர் தங்கள் முதிர்ந்த வயதில் மரியாளைப் பெற்றெடுக்கின்றனர். வானதூதர் ஒருவர் அன்னாவுக்கு மரியாளின் பிறப்பை முன்னறிவிக்க, அன்னாவும் தன் முதிர்வயதில் மரியாளைப் பெற்றெடுக்கின்றார். யோவாக்கீமுக்கும் இரண்டு தூதர்கள் வழியாக அன்னா கருவுற்றிருப்பதும், அதற்காக மாசற்ற பத்து இளம் ஆடுகளை அவர் காணிக்கையாகக் கொண்டு வர வேண்டும் என்பதும் தெரிவிக்கப்படுகிறது. 'மாசுமறுவற்ற ஆடுகளைக் காணிக்கையாக்குதல்' மரியாளின் மாசற்ற அமல உற்பவத்திற்கு உருவகமாக இருக்கிறது என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். 

திருக்குரானின்படி இம்ரான்-அன்னா தம்பதியினருக்கு மர்யாம் (மரியாள்) பிறக்கின்றார். மர்யாம் பிறந்தவுடன் தன் குழந்தைக்காக கடவுளுக்கு நன்றி செலுத்தும் அன்னா, அந்தக் குழந்தையின்மேல் சாத்தானின் நிழலே படாமல் இறைவன் காத்தருள வேண்டும் என்று மன்றாடுகின்றார்.

மரியாளின் பிறப்பு மேலே நாம் கண்ட மூன்று விவிலியப் பண்புகளையுமே கொண்டிருக்கிறது. பெற்றோர்களின் வயது தடையாக இருக்க, அந்தத் தடையைத் தகர்த்து, இறைவனின் வாக்குறுதியின் கனியாகப் பிறக்கின்றார் மரியாள். மற்றொரு பக்கம், மரியாளின் பிறப்பு சாதாரணமாகத் தெரிந்தாலும், அவர் அற்புதமான முறையில் பாவத்தின் நிழல் படாமல் பாதுகாக்கப்படுகின்றார்.

இந்தப் பெண் குழந்தையின் பிறப்பு நமக்குச் சொல்வது என்ன?

ஷேக்ஸ்பியர் தன் 'பன்னிரண்டாம் இரவு' (பகுதி 2, காட்சி 5) நாடகத்தில் மூன்று வகையான பிறப்பை அல்லது மனிதர்களைப் பற்றிச் சொல்கின்றார்:

'சிலர் பிறக்கும்போதே மேன்மையானவர்களாய்ப் பிறக்கின்றனர்,
சிலரின் மேல் மேன்மை திணிக்கப்படுகிறது,
சிலர் மேன்மையை தாங்களாகவே அடைகின்றனர்!'

சிம்சோன், சாமுவேல் போன்றோர் பிறக்கும்போதே மேன்மையானவர்களாய்ப் பிறக்கின்றனர். மோசே, எசேக்கியா, திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசுவின் மேல் மேன்மை திணிக்கப்படுகிறது. மரியாள் தானாகவே மேன்மையை அடைகின்றார்.

இதை அப்படியே சதுரங்க ஆட்டத்தின் உருவகமாக சொல்ல வேண்டுமென்றால், மேன்மையாகவே பிறப்பவர்கள் சதுரங்க ஆட்டத்தின் யானை, குதிரை, மந்திரி, இராணி போன்றவர்கள். இவர்கள் கட்டத்தின் எங்கும் தாங்களாகவே பாதையை அமைத்துக் கொண்டு செல்லலாம். மேன்மை தங்கள்மேல் திணிக்கப்படுபவர்கள் சதுரங்கத்தில் இராஜா போன்றவர்கள். இப்படி ஒரு கட்டம், அப்படி ஒரு கட்டம் என்றுதான் இவர்களால் நகர முடியும். ஆனால், இவர்கள் இல்லையென்றால் ஆட்டம் முடிந்துவிடும். மேன்மையை தாங்களாகவே அடைபவர்கள் சிப்பாய்கள் போன்றவர்கள். ஒவ்வொரு கட்டமாகத்தான் இவர்கள் முன்னேறிச் செல்ல முடியும். ஆனால், இப்படி முன்னேறும் அவர்கள் கட்டத்தின் அடுத்த முனையைத் தொட்டுவிட்டார்கள் என்றால் இவர்களைப்போல பலசாலிகள் சதுரங்க ஆட்டத்தில் வேறு யாரும் இல்லை.

தன் பிறப்பு, வளர்ப்பு, திருமணம், தாய்மை, இயேசுவோடு உடனிருப்பு, திருத்தூதர்களுக்குத் துணை என்று ஒவ்வொரு கட்டமாக நகர்ந்த மரியாள், விண்ணிற்கும், மண்ணிற்கும் அரசியாய் இன்று மேன்மையடைந்து நிற்கின்றார்.

நம் பிறப்பு ஒரு வரலாற்று விபத்து அல்ல. 'நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம்திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றவதற்கு முன்பே கடவுள் தம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்' (எபே 1:4). மரியாளைத் தெரிந்து கொண்ட கடவுள் நம்மையும் தெரிந்து கொண்டுள்ளார். நம் அழைப்பு நிலையில் நாம் நம் பிறப்பின் மேன்மையை அடைதலே நம் பிறப்பின் நோக்கம்.

நம் மேன்மையைக் காணும் கடவுள் நம்மைக் கரங்களில் ஏந்தியவாறு சொல்வார்:

'நமக்கு பையன் பொறந்திருக்கு!'

'நமக்கு பொண்ணு பொறந்திருக்கு!'


Thursday, September 3, 2015

ஆயினும் உமது சொற்படியே

'ஆயினும் உமது சொற்படியே' என்று சொன்ன சீமோன் பேதுருக்கு இறைவனையும் தெரியும். இறைவார்த்தையையும் தெரியும். தொடக்கத்தில் கடவுள் உலகைப் படைத்தபோது, வார்த்தைகளைக் கொண்டே அவற்றைப் படைக்கின்றார். 'ஒளி உண்டாகட்டும்!' என்கிறார். 'ஒளி உண்டாகிறது!' ஆக, கடவுள் சொல்லும் ஒரு வார்த்தை அப்படியே அதன் சுடுபொருளாக உருவாகிறது.

'மீன்!' என்று இயேசு சொன்னால் 'மீன்' கிடைக்கும்.

இதுதான் பேதுருவின் நம்பிக்கை நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக்கா 5:1-11)

'விடிய விடிய காத்திருந்தும் ஒன்னும் கிடைக்கலயே ப்ரதர்!' என்று சொல்லும் பேதுருவின் மனதில் ஒரு சின்ன தயக்கம்: 'தண்ணீரின் ஓட்டம் இந்த தச்சனுக்கு எப்படித் தெரியும்?'

இருந்தாலும் ஆழத்திற்குச் செல்கின்றார்.

மிகுதியான மீன்பாடு கிடைக்கிறது.

நம் வார்த்தைகளும் தாங்கள் சுட்டிக்காட்டுவதை அப்படியே விளைவாக ஏற்படுத்தினால் எத்துணை நலம்!


Tuesday, September 1, 2015

மாமியார் இல்லா ஊரில்

'மாமியார் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!'

'கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!' - என்ற பழமொழியை கொஞ்சம் மாற்றிப் பார்ப்போமே.

விவிலியம் இரண்டே பேரின் மாமியார் பற்றித்தான் பேசுகின்றது: ஒன்று, ரூத்து நூலில் வரும் நகோமி என்ற முதல் ஏற்பாட்டு மாமி. இரண்டு, நாளைய நற்செய்திப் பகுதியில் (காண். லூக்கா 4:38--44) வரும் 'அனோமி' (பெயரில்லாத!) என்னும் சீமோனின் மாமியார். முதல் ஏற்பாட்டில் 'மாமியார்-மருமகள்', இரண்டாம் ஏற்பாட்டில் 'மாமியார்-மருமகன்'. விவிலியத்தில் மாமியார் இருந்திருக்கவே வாய்ப்பில்லை என்று நாம் சொல்ல முடிபவர்களும் இரண்டு பேர்தாம்: முதல் ஆதாம், அதான் நம்ம ஏவாளின் வீட்டுக்காரர். இரண்டாம் ஆதாம், இயேசு, மரியின் மகன்.

இரத்த உறவுக்கு எப்படி தாய் அவசியமோ, அப்படி அவசியம் மாமியார் திருமண உறவுக்கு.

மாமியார் உறவை நான் நேரடியாக அனுபவிக்க வாய்ப்பில்லை. ஆக, சாமியாரா வந்தால் மாமியார் இல்லை. ரைமிங் நல்லாதான் இருக்கு!

பெண்களை மூன்றுவகைகளாப் பிரிப்பார் கவிஞர் பா. விஜய்: சிலர் ஒருமுறை பார்ப்பது போல இருப்பர், சிலர் திரும்பிப் பார்ப்பது போல இருப்பர், சிலர் நினைத்து நினைத்துப் பார்ப்பது போல இருப்பர்.

மாமியார்களையும் இந்த மூன்றுவகைகளுக்குள்; அடக்கலாம் என நினைக்கிறேன்:

முதல் வகை மாமியார்கள் ஒரே ஒருமுறை, திருமணத்தன்றுதான் பார்க்கலாம். அத்தோடு சரி, மருமகன் மற்றும் மருமகளுக்கு அவரோடு ஒத்தே போகாது.

இரண்டாம் வகை மாமியார்கள் 'நீயும் என் வீட்டுக்கு வா', 'நானும் உன் வீட்டிற்கு வருகிறேன்', 'நீ எனக்கு இதைச் செய்', 'நான் உனக்கு இதை செய்கிறேன்' என்று இருப்பார்கள்.

மூன்றாம் வகை மாமியார்கள். மிக அரிது. இவர்களை நினைத்துப் பார்த்தாலே மகிழ்வாக இருக்கும். இந்த வகை மாமியார்களில் ஒருவராகத்தான் சீமோனின் மாமியாரும் இருந்திருக்க வேண்டும். ஆகையால்தான் தன் மாமியாரின் காய்ச்சலையும் அவரின் உடல்நலனையும் குறித்துக் கவலைப்பட்ட சீமோன் இயேசுவை தன் இல்லத்திற்கு அழைத்து வருகின்றார்.

பெண்கள் என்றும் ஆச்சரியமானவர்கள்!

எப்படி என்று சொல்லவா?

தன் நோய் நீங்கியவுடன் மாமியார் இயேசுவுக்கு பணிவிடை செய்வதில் கவனமாயிருக்கிறார்.

இதுவே இயேசு சீமோனின் மாமனாருக்கு காய்ச்சலை குணமாக்கியிருந்தால், அவர் உடனே எழுந்து தன் வலைகளைத் தூக்கிக் கொண்டு மீன்பிடிக்க போயிருப்பார். அல்லது வரவு செலவு பார்க்கத் தொடங்கியிருப்பார். அல்லது, 'இந்தக் காய்ச்சலால் எனக்கு எவ்வளவு நஷ்டம்? அல்லது இன்னும் எத்தனை வேலைகள் காத்திருக்கின்றன?' என்று கணக்குப் பார்க்க அல்லது சொல்லிப் புலம்ப ஆரம்பித்திருப்பார்.

ஆனால் இந்த மாமியார் மிகவும் நல்லவர்.

சீமோனின் மாமியாரின் கவனிப்பில் அவரின் நன்றி வெளிப்படுகிறது.

ஆக, இயேசுவால் தொடப்பட்ட ஒருவர் இனி தன் வேலைகளைப் பார்ப்பதில் மும்முரமாக இருக்கக் கூடாது. இனி அவரின் வேலை இயேசுவும் அவர் சார்ந்தது மட்டும்தான். இது என் அருள்நிலை வாழ்வுக்கு மிகவும் நல்ல சவாலாக இருப்பதாக உணர்கிறேன். நான் அனுதினம் இயேசுவை நற்கருணையில் தொடுகிறேன். அல்லது இறைவார்த்தையாகக் கேட்கிறேன். வாசிக்கிறேன். அதைப் பற்றி பேசுகிறேன். அப்படியெனில் என் கவலையெல்லாம் இயேசுவைக் கவனித்துக்கொள்வதிலும், அவருக்கு பணிவிட செய்வதிலும்தானே இருக்க வேண்டும்?

நாளை நாம் வாசிக்கும் முதல் வாசகத்தில் (காண். கொலோசையர் 1:1-8) தூய பவுல் இதையொட்டித்தான் கொலோசை நகர மக்களுக்கு எழுதுகின்றார்:

'கிறிஸ்து இயேசுவின்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை பற்றியும் இறைமக்கள் அனைவரிடமும் செலுத்தும் அன்பு பற்றியும் நாங்கள் கேள்வியுற்றோம்!'

ஆக, கொலோசை நகர மக்கள் இயேசுவின் மேல் உள்ள தங்களின் நம்பிக்கைக்கு, பிறர்மேல் கொண்டுள்ள அன்பினால் செயல்வடிவம் கொடுக்கின்றனர்.

நம்பிக்கை, அன்பு - இதுதான் எல்லா மாமியாரின் பண்புகளும்கூட. தன் மருமகன் மேல் கொண்டுள்ள நம்பிக்கையால் தன் அன்பிற்குரிய மகளை அவருக்கு கொடுக்கிறார். இல்லையா?

ஆக, நல்ல மாமியாராக இருக்கவும், நல்ல சாமியாராக இருக்கவும் தேவை இவைதாம்: 'நம்பிக்கை, அன்பு'


வெறும் கூச்சல்

கடந்த வியாழன் அன்று மதிய உணவிற்காக எலிசா பாட்டி வீட்டிற்குச் சென்றேன். அவருக்கு வயது 79. சாப்பிட்டுக் கொண்டிருந்த பாட்டியிடம், 'உங்கள் வாழ்க்கை தத்துவம் என்ன?' என்று கேட்டேன். 'உனக்கு என்ன காஃபி பிடிக்கும்?' என்று கேட்டாலே எனக்கு பதில் சொல்வதற்கு 10 நிமிடம் ஆகும். ஆனால் இவ்வளவு பெரிய கேள்விக்கு உடனே பதில் சொன்னார் பாட்டி: "Poche, ma buone!" 'குறைந்த பொருட்கள், ஆனால் சிறந்த பொருட்கள்!' ("Poche cose, ma buone cose!") இதை அப்படியே நீட்டினால், 'குறைந்த நபர்கள், ஆனால் சிறந்த நபர்கள்', 'குறைந்த சொற்கள், ஆனால் சிறந்த சொற்கள்', 'குறைந்த பயணம், ஆனால் சிறந்த அனுபவம்' என எல்லாவற்றிலும் பொருத்திப் பார்க்கலாம். எலிசா பாட்டியின் வாழ்க்கை தத்துவம் இன்று நாம் நடைமுறையில் காணும் வாழ்க்கைத் தத்துவத்திற்கு முரணாக இருக்கிறது. எப்படி? இன்று நாம் எதையும் 'நிறைய' அதாவது 'அதிகமாக' இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். நிறைய பொருட்கள் வாங்கணும், நிறைய சாப்பிடணும், நிறைய படம் பார்க்கணும், நிறைய நேரம் பேசணும், நிறைய இடங்கள் போகணும், ஃபேஸ்புக்கில் நிறைய லைக்ஸ் விழணும், அல்லது நிறைய ஃப்ரண்ட்ஸ் இருக்கணும், நிறைய படிக்கணும், நிறைய ஃபோட்டோ எடுக்கணும், ஃபோனில் நிறைய மெமரி இருக்கணும் என எல்லாமே அதிகமாகவே எதிர்பார்க்கின்றோம். ஆனால் எதிலும் 'அதிகத்தை' எதிர்பார்க்கும் அளவுக்கு நாம் 'சிறந்ததை' எதிர்ப்பார்க்கிறோமா என்றால் அதன் பதில் பல நேரங்களில் 'இல்லை' என்றே இருக்கின்றது.

'விளைவை ஏற்படுத்தாத எந்த வார்த்தையும் வீணான வார்த்தை' என்பார் சே குவேரா.

நாளைய நற்செய்தியில் (காண். லூக்கா 4:31-37) இப்படித்தான் ஒரு நிகழ்வு நடக்கிறது. கப்பர்நகூமில் உள்ள தொழுகைக்கூடத்தில் இயேசு நுழைந்தபோது அங்கே ஒரு நபருள் குடியிருந்த தீய ஆவி நம்பிக்கை அறிக்கை சொல்கிறது. மிக அழகான வார்த்தைகளில் அதைப் பதிவு செய்கிறார் லூக்கா:

'ஐயோ! நாசரேத்து இயேசுவே! உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்!'

ஆக, இந்த தீய ஆவிக்கு இயேசுவின் சொந்த ஊரிலிருந்து அவரின் கடவுள்தன்மை வரை இயேசுவைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்கிறது.

'wow...what a belief?' என்று இயேசு தட்டிக்கொடுத்தாரா?

இல்லை.

'வாயை மூடு! வெளியே போ!' - அடுக்கடுக்காய் கட்டளையிடுகின்றார்.

'எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க! நான் யாருன்னு இப்போதாவது தெரியுதா?' என்று இயேசு இந்ந நிகழ்வை தனக்கான விளம்பரமாக பயன்படுத்தி, தன் இறையரசை கொஞ்சம் 'விற்பனை' செய்திருக்கலாம். ஆனால் அப்படியும் அவர் பயன்படுத்தவில்லை.

ஏன்?

தீய ஆவியின் அல்லது மனிதர்களின் நம்பிக்கை அறிக்கையினால் கடவுளின் குணமும், பண்பும் மாறப்போவதில்லை.

கடவுள் எப்போதும் ஒரே போலத்தான் இருக்கின்றார்.

ஆனால், நாம் கடவுள் மேல் கொள்ளும் நம்பிக்கையும், அவரை அழைக்கும் விதமும் நம்முள்தான் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு, கடவுளை 'அப்பா' என நான் அறிக்கையிடுகின்றேன் எனில், எல்லாரையும் 'சகோதரன், சகோதரி' என்று பார்க்கும் பக்குவம் என்னில் பிறக்கிறது. ஆக, 'கடவுள் என் அப்பா' என்னும் என் நம்பிக்கை என்னுள் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்குகிறது.

கடவுளை நான் எப்படிப் பார்க்கிறேன் என்பதில் நான் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அந்தப் பார்வைதான் என் அறநெறியையும் பாதிக்கிறது. உதாரணத்திற்கு, கடவுள் 'என்னை எப்போதும் மன்னிக்கக்கூடியவர்' என நான் சொல்லிக்கொண்டு, 'என்ன செய்தாலும் கடவுள் மன்னித்துவிடுவாரே!' என நான் தவறுகள் செய்துகொண்டே நான் இருந்தால், என் பார்வை தவறுதானே! என் தவறுகளைத் திருத்த நான் என்ன செய்ய வேண்டும்? 'கடவுள் கண்டிப்பானவர்' என்று என் பார்வையை மாற்ற வேண்டும்.

நற்செய்தியில் நம்பிக்கை அறிக்கை செய்வது ஒரு தீய ஆவி. தீய ஆவியின் நம்பிக்கையால் அல்லது அதன் வார்த்தைகளால் அதன் இயல்பு ஒருபோதும் மாறப்போவதில்லை. அது எப்போதும் தீய ஆவியாகவே இருக்கத்தான் செய்யும். ஆகவேதான், 'நீ பேசும் வார்த்தைகளால் உனக்கே பயனில்லாதபோது பின் ஏன் பேசுகிறாய்? வாயை மூடு!' எனக் கடிந்து கொள்கிறார் இயேசு.

ஞாயிறு திருப்பலிகளில் நாம் திருத்தூதர் அல்லது நிசேன் திருச்சங்க நம்பிக்கை அறிக்கை சொல்கிறோம். இந்த நம்பிக்கை அறிக்கையோ, அல்லது இயேசுவைப் பற்றிய நம் தனிப்பட்ட நம்பிக்கை அறிக்கையோ நம்மைப் பாதிக்கவில்லை அல்லது நம்மில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை எனில் நாமும் வாயை மூடிக்கொண்டிருப்பதே நலம்!

இறப்பிற்கு பின் உள்ள வாழ்வு பற்றி நேற்று பேசத் தொடங்கிய பவுல் நாளைய முதல் வாசகத்தில் (காண். 1 தெச 5:1-6, 9-11) இறப்பிற்கு முன் உள்ள வாழ்வு பற்றி அறிவுரை தருகின்றார்.

இறப்பிற்கு முன் உள்ள வாழ்விற்கு பவுல் ரொம்ப புத்திமதி சொல்லவில்லை. அவரும் நம்ம எலிசா பாட்டி மாதிரிதான்: 'குறைவாக செய்ய வேண்டும். ஆனால் சிறந்ததைச் செய்ய வேண்டும்!'

அப்படி என்ன செய்ய வேண்டும்?

1. 'ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்!'
2. 'ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்!'

உள்ளத்தில் தளர்ந்தவர்கள், உடலில் தளர்ந்தவர்கள், உறவில் தளர்ந்தவர்கள், உணர்வில் தளர்ந்தவர்கள் என எல்லாருக்கும் கொஞ்சம் 'ஊக்கம்' என்ற டானிக் கொடுக்கவும், 'நான் வளர்வது போல, நீயும் வளர்' என அடுத்தவர் வளர இடம் கொடுப்பதும் அவசியம் ஆகிறது.

இந்த புதிய மாதத்தில் நான் ஒரு முயற்சி செய்யலாம் என நினைத்திருக்கிறேன்:

ஒவ்வொரு நாள் இரவு தூங்கப்போகுமுன் நான் ஒரு தாளில் எழுதப்போகிறேன். என்னவென்று?

1. இன்று நான் ஊக்குமூட்டிய மூன்று நபர்கள்.
2. இன்று அடுத்தவர் வளர்வதற்கு நான் எடுத்த மூன்று முயற்சிகள்.

'குறைவாகச் செய்தாலும், சிறந்ததாகச் செய்யாவிடில்', நிறைவாக நாம் செய்வதாக நாம் நினைக்கும் அனைத்தும் தொழுகைக்கூடத்தில் தீய ஆவி போடும் வெறும் கூச்சல்போல அல்லவா இருக்கும்!