Friday, May 8, 2015

ஓக் மாதா

இன்று எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழா. ஒவ்வொரு ஆண்டுவிழாவிற்கும் ஒவ்வொரு இடத்திற்கு சுற்றுப்பயணம் செல்வோம் ஆசிரியர்களும், மாணவர்களும்.

இன்று நாங்கள் சென்ற இடம் இத்தாலியின் லாட்சியோ மாகாணத்தில் உள்ள வித்தேர்போ. வித்தேர்போ இத்தாலியின் பழமையான நகரங்களில் ஒன்று. ரோமிலிருந்து பேருந்தில் இரண்டு மணிநேர தொலைவு.

12 முதல் 15ஆம் நூற்றாண்டுகளில் திருத்தந்தையர் வாழ்ந்த இடம். கத்தோலிக்க திருஅவை வரலாற்றில் நீண்ட நாட்கள் (1005 நாட்கள்) 'கான்க்ளேவ்' (அதாவது, திருத்தந்தை தேர்வு) நடந்த இடம் இது.

மூன்று இடங்களைப் பார்த்தோம்:

அ. ஓக் மாதா. அதாவது, வேளாங்கண்ணி மாதா அல்லது பூண்டி மாதா என்று இடத்தை வைத்து அழைப்பது போல, ஓக் மாதா (இத்தாலியனில், ல மதோனா தி க்வெர்ச்சா). 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து தொமினிக்கன் சபைக்குருக்கள் ஒரு ஓவியம் வரைந்து, அந்த ஓவியத்தை மையமாக வைத்து கட்டப்பட்டிருக்கும் ஆலயம். இந்த ஆலயத்திற்குள்ளும், இதையொட்டிய அருட்தந்தையர் இல்லத்திற்குள்ளும் (இப்போது இந்த இடம் பயன்பாட்டில் இல்லை!) நுழையும்போது ஏதோ காலச்சக்கரத்தில் பின்னோக்கி நகர்ந்தது போன்ற உணர்வு. அவர்களின் பாத ஓசைகள், பாடல்கள் இன்றும் அந்தக் காற்றில் கலந்திருக்கிறது என்றே எண்ணத் தோன்றியது.

ஆ. கான்க்ளேவ் நடந்த இடம். திருத்தந்தையர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வு நடந்த இடம் என்றதும் நம் நினைவிற்கு வருவது 'சிஸ்டைன் ஆலயம்' தான். ஆனால், வரலாற்றில் வௌ;வேறு காரணங்களுக்காக, திருத்தந்தையரும் நாடோடிகளாய்த்தான் வாழ்ந்திருக்கின்றனர். கான்க்ளேவ் நடந்த அந்த இடம் நல்ல உயரமான கட்டிடம். கல்தரை. மரத்தாலான மேற்கூரை. தட்பவெட்பநிலையை சமநிலையில் வைக்க மேல்மாடம். மிக அருமையான பொறியியல் யுக்தியைக் கையாண்டு கட்டியிருக்கின்றனர். கடவுளால் எந்த இடத்திலும் தன் பணிக்கு ஆட்களைத் தெரிந்தெடுக்க முடியும் என்பதை இந்த இடம் நினைவூட்டியது.

இ. பசிலிக்கா. வித்தேர்போ மறைமாவட்டத்தின் கதீட்ரல். தூய லாரன்ஸ் அவர்களுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. இங்கே என்னைக் கவர்ந்தவை ஓவியங்கள். அதாவது, இரண்டு பரிமாண சுவரில் மூன்று பரிமாண ஓவியங்கள் வரையப்பட்ட ஆச்சர்யம். ஆண்டுகளைக் கடந்து நிற்கும் அழகு ஆச்சர்யமாக இருந்தது.

நம்ம ஓக் மாதாவுக்கு வருவோம்.

முதன்முதலாக மாதாவுக்கு கிரீடம் வைக்கும் வழக்கத்தைத் தொடங்கியது இந்த ஓவியம்தானாம். இயேசுவின் கையில் விளையாட்டு பொம்மை ஒன்று இருக்கும். ஆனால், அது இன்று மங்கலாக இருக்கிறது. இந்த மாதாவை செபமாலை மாதா என்று அழைத்தார் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் (2003). மாதாவை குழந்தை இயேசுவை தூக்கி நமக்குக் கொடுப்பது போல இருக்கிறது இந்த ஓவியம்.

இந்த ஓவியத்தைப் பார்க்கும்போது நம் கால்கள் 14ஆம் நூற்றாண்டில் நின்று கொண்டிருப்பதுபோல இருந்தது.

ஓக் மாதா நம் அனைவரையும் தன் பாதுகாவலில் ஏற்றுக்கொள்வாராக!

1 comment:

  1. 'ஓக் மாதா'....கேள்விப்பட்டதாக்க்கூட நினைவில் இல்லை."இந்த ஆலயத்தையொட்டிய இடங்களுக்குள் நுழைகையில் அன்று வாழ்ந்த அருட்தந்தையர்களின் பாத ஓசைகளும்,பாடல்களும் காற்றில் கலந்திருப்பதை உணர முடிகிறது".... நல்ல அனுபவம். எவ்விடம் சென்றாலும் அதைத் தாங்களும் முழுமையாக அனுபவித்து அதை எமக்கும் படம்பிடித்துக்காட்டும் தங்களையும்,தங்கள் அனைத்து முயற்சிகளையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்!!!

    ReplyDelete