Tuesday, May 26, 2015

பாதி வழி

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் ஒரு இளைஞனை சந்தித்தோம். இயேசுவிடம் வருகின்ற அவன் நிறைவாழ்வு பெற தான் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்கிறான். 'கட்டளைகளைக் கடைப்பிடி!' என்று இயேசு சொன்னதற்கு, 'சிறுவயது முதல் நான் கடைப்பிடித்து வருகிறேன்!' என பதிலளிக்கிறான். 'உனக்குள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு! பின் வந்து என்னைப் பின் செல்!' என்று இயேசு சொன்னவுடன், முகவாட்டத்தோடு திரும்பிச் செல்கிறான்.

இயேசு இந்த இறுதி வார்த்தைகளைச் சொல்லும்போது, அவனை உற்று நோக்கி, அவனை அன்பு செய்து சொல்வதாக நற்செய்தியாளர் எழுதுகின்றார்.

ஆன்மீகத்தில் பாதி வழி வந்த அந்த இளைஞனுக்கு அடுத்த பாதி முடியாமல் போய்விடுகிறது.

இது ஆன்மீகத்தில் மட்டுமல்ல. நம் அன்றாட வாழ்விலும் வரலாம்.

பேருந்தில் செல்லும்போது நாம் பார்க்கும் பாதிக்கட்டிய வீடு, ஒவ்வொரு நாளும் டைரி எழுதணும் என நினைத்து பாதி வழி வந்து, பாதிக்கு மேல் ஒன்றும் எழுதாமல், நாம் வீடு கூட்டும்போது குப்பையில் போடும் டைரி, பாதி எழுதாத நோட்டு புத்தகங்கள், நிறைய சாப்பிட வேண்டும் என நினைத்து பாதியிலேயே கைகழுவும்போது நம்மை ஏக்கத்தோடு பார்க்கும் பந்தி இலை, பேசிக்கொண்டிருக்கும்போதே சார்ஜ் இறங்கி அல்லது பேலன்ஸ் முடிந்து பாதியில் முடியும் உரையாடல் என பாதியில் நாம் முடிக்கும் செயல்கள் நிறையவே இருக்கின்றன. இந்த பாதி வேலைக்குப் பின்னால் தனிநபரின் இயலாமை, வலி, சில நேரங்களில் சோம்பேறித்தனம் ஒழிந்திருக்கிறது.

என் முதுகலைப்படிப்பின் ஆய்வுத்தாளை எழுதும்போதும் எனக்கு இந்த சோதனை வந்தது. மூன்று வாரங்களுக்கு முன்னால் நான் எதிர்பார்த்த அளவுக்கு ஆய்வுத்தாளில் முன்னேற்றம் இல்லாததால், வேறு ஒரு தலைப்பை எடுத்து புதிதாக தொடங்கலாமோ என்றும் தோன்றிற்று. இருந்தாலும் அந்த சோதனையை வெற்றி கொண்டுவிட்டேன்.

'இது நல்லாயில்ல!' 'அது நல்லாயில்ல!' என பாதியில் விட்டுவிட்டு ஓட, பின் புதியதும் நன்றாக இல்லையென்றால் என்ன செய்வது?

நேற்று நாம் சந்தித்த இந்த நற்செய்தி இளைஞன் பாதிவழி வந்தவன், மீதி வழி போக மறுக்கிறான். வாழ்க்கை நம்மை முழுப்பயணமும் செய்ய விடுவதில்லை. பாதியிலேயே அழைத்து விடுகிறது. ஆக. செய்ய வேண்டிய ஒவ்வொன்றையும் முழுமையாகவும், அன்பு செய்யும் ஒவ்வொருவரையும் முழுமையாகவும் செய்யவும் நம்மைத் தூண்டுகிறான் இந்த இளைஞன்.


1 comment:

  1. யோசிக்கவைக்கும் பதிவு.பல சமயங்களில் நாம் விரும்பி செய்ய நினைத்து அது பாதியில் தடைபட்டு நிற்கும்போது, நமக்கு மிக நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதை சரிசெய்ய முடியாமல் பாதி வழியில் தடுமாறி நிற்கும்போது மனம் வலிப்பது சகஜம்." பாதியிலேயே முடியப்போகும் நம் வாழ்க்கையில் செய்ய விழையும் ஒவ்வொன்றையும் முழுமையாகவும், அன்பு செய்யும் ஒவ்வொருவரையும் முழுமையாகப் புரிந்து கொள்ளவும்" தூண்டும் தந்தையின் வார்த்தைகள் நம் வாழ்க்கையின் முழு மகிழ்ச்சிக்கு வழி சொல்கின்றன.நன்றிகள்!!! இந்தப் பதிவில் வரும் இளைஞனின் முகவாட்டத்திற்குக் காரணம் அவன் இயேசுவை முழுமையாக நம்பாத்துதான்....

    ReplyDelete