Wednesday, May 13, 2015

கண்களைப் பொறுத்ததே!

"Providence, like beauty, is in the eye of the beholder!"

அழகு பார்ப்பவரின் கண்களைப் பொறுத்ததே! என்பார்கள்.

அதுபோல இறைப்பராமரிப்பும் பார்ப்பவரின் அல்லது அதை அனுபவிப்பவரின் கண்களைப் பொறுத்ததே!

நேற்றைய தினம் ரூத்து நூலில் வரும் ஓர்ஃபா பற்றிப் பார்த்தோம்.

ரூத்துதான் இந்த நூலின் கதாநாயகி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்த ரூத்து உயர்ந்து நிற்கக் காரணம் அவர் கண்ட இறைப்பராமரிப்பு.

தன் முன்பின் தெரியாத ஊரில் அவளுக்கு அடைக்கலம் கிடைக்கிறது. அறுவடைக்குப் பின் சிந்திக் கிடந்த தானியங்களை அள்ளச் சென்றவளுக்கு அறுவடை செய்த பயிர் கிடைக்கிறது. வயலின் உரிமையாளன் இவளின் கணவன்வழிச் சொந்தம், இவளின் சொந்தமாகிறான்.

வேகமாக நடந்தேறுகிறது அதிசயங்கள்.

'கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்!' என்பதன் பொருள் என்ன தெரியுமா? தெய்வம் நம் கூரையைப் பிய்க்கும் என்பது பொருள் அல்ல. மாறாக, தெய்வம் கொடுக்கின்ற பொருட்களை, பரிசுகளை வீடு கொள்ளாமல் கூரையே பிய்த்துக்கொள்ளுமாம்! கற்பனை செய்து பார்த்தாலே புல்லரிக்கிறது.

இறைப்பராமரிப்பை உணர்ந்தார் ரூத்து. ரூத்து உணர்ந்த அளவுக்கு உணரவில்லை ஓர்ஃபா.

நம்ம ஜெயா தீர்ப்பையே எடுத்துக்கொள்ளுங்களேன். தான் கும்பிட்ட தெய்வம் கைவிடவில்லை என்று இறைப்பராமரிப்பிற்கு நன்றி கூறுகின்றார் ஜெயா. மொட்டையெடுக்கின்றனர் அவரது கட்சியினர். ஆனால் தெய்வமே நீதி தேவதையோடு இணைந்து கண்களை மூடிக்கொண்டது என்கிறார்கள் மற்ற கட்சியினர். ஆக, ஒருவருக்கு பராமரிப்பாக தெரிவது மற்றவருக்கு கடவுளின் இல்லாமையாக தெரிகிறதே!

இறைப்பராமரிப்பு என்பது ஒருவரின் தனிப்பட்ட உணர்வு. அந்த உணர்வு அவருடைய உரிமை.

வெறுங்கையாய் நின்றவளுக்கு, கையில் ஒரு குழந்தை கொடுத்து, அந்தக் குழந்தையின் வழியாக யூதாவின் பெரிய அரசானம் தாவீதைக் கொடுத்ததுதான் கடவுள் ரூத்துக்கு அருளிய மிகப்பெரிய இறைப்பராமரிப்பு.


1 comment:

  1. என் மனம் கவர்ந்த ரூத்தை 'கதாநாயகி அந்தஸ்துக்கு உயர்த்திய தந்தைக்கு ஒரு சல்யூட்! கண்டிப்பாக இறைப் பராமரிப்பு என்பது ஒருவரின் தனிப்பட்ட உணர்வுதான்; உரிமைதான்.நாம் கேட்டு மறுக்கப்பட்ட சில விஷயங்கள் கூட அதில் உள்ள நியாயத்தைக் காலம் கடந்து நமக்குப் புரிய வைக்கின்றன.நம் தின வாழ்க்கையிலும் 'கூரையைப்பிய்க்கும்' அளவுக்குத் தினம் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.அவற்றை நின்று நிதானமாகப் பெற்றுக்கொள்வதும், இது போதுமே என்று மறுப்பதும் நம் உணர்வுகளில் தான் இருக்கிறது."Yes,no doubt Providence is in the eyes of the beholder"......

    ReplyDelete