'உண்மையான ஃபேஸ்புக் நானே.
என் தந்தை இண்டர்நெட்தான் அதை நட்டு வளர்ப்பவர்.
என்னிடம் 'லாக்-இன'; செய்யாத 'யூஸர்களை' எல்லாம் அவர் தறித்துவிடுவார்.
'லாக்-இன்' செய்த 'யூஸர்களை' மிகுதியா ஸ்டேடஸ் போடுமாறு கழித்துவிடுவார்.
நான் இண்டர்நெட்டோடு இணைந்திருப்பது போல நீங்கள் என்னோடு இணைந்திருங்கள்.
யூஸர்கள் ஃபேஸ்புக்கோடு இணைந்திருந்தாலன்றி அவர்களால் ஸ்டேடஸ் போட இயலாது.
அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றி ஸ்டேடஸ், கமெண்ட்ஸ் போட முடியாது.
ஒருவர் என்னோடும், நான் அவரோடும் இணைந்திருந்தால் நிறைய வேலைகள் செய்யலாம்.
ப்ரொஃபைல் அப்டேட் செய்யலாம்.
ஃபோட்டோ, வீடியோ அப்லோட் செய்யலாம்.
பிடித்திருந்தால் ஷேர் செய்யலாம்.
உங்கள் நண்பர்களோடு 'சேட்' செய்யலாம்.
இப்போது 'வாய்ஸ் காலிங்கும்' செய்யலாம்.
பிடிக்காத 'நண்பர்களை' 'ப்ளாக்' செய்யலாம்.
என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.
என்னைவிட்டு 'லாக்-ஆஃப்' செய்வோர் அல்லது 'அக்கவுண்ட் டெலீட்' செய்வோர் தறித்து எறியப்பட்டு 'தனிமையில் வாடி' உலர்ந்து போவார்.
அவரது 'ப்ரஃபைல்', 'ஸ்டேடஸ்', 'ஃபோட்டோஸ்,' 'கமெண்ட்ஸ்' அனைத்தும் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.
நீங்கள் என்னுள்ளும், என் 'எஃப்' ஐகன் உங்கள் மொபைல், டேப்ளட் அனைத்திலும் இருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.
நீங்கள் மிகுந்த கனிதந்து என் யூஸராக இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது!'
இன்றைய நற்செய்தியின் (John 15:1-8) எட்டு வசனங்களையும் இயேசு இன்றைய தலைமுறைக்குச் சொல்லவேண்டுமென்றால் எப்படி இருக்கும் என்று சிறு கற்பனை செய்தால், நற்செய்தி அப்படியே பொருந்துகிறது. எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது!
ஃபேஸ்புக்கை விட்டு நம்மால் இன்று ஒன்றும் செய்ய முடிவதில்லை தானே!
'இணைந்திருத்தல்' என்ற ஒற்றைச்சொல்லில் இன்றைய நற்செய்தி முழுவதையும் அடக்கிவிடலாம். இதை இன்றைய மாடர்ன் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் 'பீயிங் ஆன்லைன்' - அதாவது, எப்போதும் நம் நோட்டிஃபிகேஷன் பாரில் க்ரீன் சிக்னல் இருக்க வேண்டும்.
இன்றைய நற்செய்தியை, 'இணைந்திருத்தல்' என்ற வார்த்தையை வைத்து, மூன்று கேள்விகளாகப் பிரிக்கலாம்:
1. யாரோடு இணைந்திருப்பது?
2. எப்படி இணைந்திருப்பது?
3. எதற்காக இணைந்திருப்பது?
1. யாரோடு இணைந்திருப்பது?
சீடர்கள் இயேசுவோடு இணைந்திருக்க வேண்டும். இணைந்திருத்தலில் இரண்டு பரிமாணங்கள் இருக்கின்றன: ஒன்று, மேல் நோக்கியது. மற்றது, கீழ்நோக்கியது. இயேசு தன் தந்தையோடு மேல் நோக்கி இணைந்திருக்கின்றார். நம்மிடம் கீழ்நோக்கி இணைந்திருக்கின்றார். நாம் இயேசுவோடு மேல் நோக்கி இணைந்திருக்கின்றோம். மற்றவர்களிடம் கீழ்நோக்கி இணைந்திருக்கின்றோம். இதை அப்படியே ஸ்கைப், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் என ஒப்பிட்டுப் பார்த்தால் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஊரில் இருக்கும் என் அம்மாவோடு ஸ்கைப்பில் நான் பேச வேண்டுமென்றால், முதலில் நான் ஸ்கைப்போடு இணைந்திருக்க வேண்டும் (மறுமுனையில் என் அம்மாவும் ஸ்கைப்போடு இணைந்திருக்க வேண்டும்!). இந்த முதல் இணைப்பு சரியாக இருந்தால் தான் எனக்கும், என் அம்மாவுக்குமான இணைப்பு சரியாக இருக்கும். என் இண்டர்நெட்டில் சிக்னல் குறைவாக இருந்தாலோ. அங்கே மின்தடை ஏற்பட்டு இண்டர்நெட்டே இல்லையென்றாலோ, இரண்டாவது இணைப்பு சாத்தியமே அல்ல. முதல் வகை இணைப்பு ஸ்ட்ராங்காக இருந்ததால், இரண்டாம் வகை இணைப்பில் பேச்சும், வீடியோவும் க்ளியராக இருக்கும். முதல் வகை இணைப்பை 'வேர்விடுதல்' என்றும், இரண்டாம் வகை இணைப்பை 'கிளைபரப்புதல்' என்றும் அழைக்கலாம். நம் வேர்கள் கடவுளை நோக்கியும், நம் கிளைகள் ஒருவர் மற்றவரை நோக்கியும் இருத்தலே சால்பு.
2. எப்படி இணைந்திருப்பது?
'திராட்சைச் செடியொடு அதன் கொடி இணைந்திருப்பதுபோல இணைந்திருக்க வேண்டும்' என்கிறார் இயேசு. 'செடி' - 'கொடி' என்று புதிய மொழிபெயர்ப்பில் இருப்பது குழப்பத்தைத் தருகிறது. ஏனெனில் நம் பேச்சுவழக்கில் 'செடி-கொடி' என்று நாம் சொல்வது இரண்டு வேறுபட்ட தாவர வகைகளைக் குறிக்கிறது. பழைய மொழிபெயர்ப்பில் இருக்கும், 'கொடி-கிளை' சொல்லாடல்தான் தெளிவான பொருளைத் தருகிறது. மேலும், திராட்சை தானாக நின்று வளரும் செடி அல்ல. மாறாக, தூணிலோ, குச்சியிலோ, வேலியிலோ, பந்தலிலோ படரும் ஒரு கொடிதான்.
திராட்சைக்கொடி என்பது யூதர்களின் காதுகளுக்குப் பரிச்சயமான ஒரு உருவகம். முதல் ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்கள் 'யாவே இறைவனின் திராட்சைத் தோட்டம்' என்று அழைக்கப்பட்டனர் (காண். எரே 2:21, எசே 19:10-14, ஒசேயா 10:1, திபா 80:8-19, எசா 27:2-6). ஆக, முதல் ஏற்பாட்டில் யாவே இறைவனுக்கும், இஸ்ராயேல் மக்களுக்குமான உறவைக் குறித்துக்காட்டிய ஒரு உருவகத்தை, இரண்டாம் ஏற்பாட்டில் இயேசுவுக்கும், சீடர்களுக்கும் குறித்துக்காட்டுவதன் வழியாக, இயேசுவை புதிய இறைவன் என்றும், சீடர்களை புதிய இஸ்ரயேல் என்றும் முன்மொழிகின்றார் யோவான் நற்செய்தியாளர்.
'இணைந்திருத்தல்' என்ற வார்த்தையை நான் வழக்கமாக நான்கு விதங்களில் புரிந்து கொள்வதுண்டு:
அ. ரயில்பாதையின் இரண்டு தண்டவாளங்கள் போல். இந்த தண்டவாளங்களைக் கவனித்திருக்கிறீர்களா? தொடங்குமிடத்திலும் சரி, முடியுமிடத்திலும் சரி, செல்லும் பாதையிலும் சரி தண்டவாளங்கள் ஒன்றையொன்று தொட்டுக்கொள்வதே இல்லை. தண்டவாளங்கள் பிரியும் அல்லது சேரும் இடத்தைப் பார்த்தால் கூட, அங்கேயும் அவைகள் தொட்டுக்கொள்வதில்லை என்பது கண்கூடு. ஒன்றையொன்று அவைகள் தொடவில்லை என்றாலும், அவைகள் ஒன்றையொன்று விட்டு அகன்றும் சென்றுவிட முடியாது. அப்படி நகர்ந்துவிட்டால் அதன்மேல் வரும் ரயில் ஆபத்தைத்தான் சந்திக்கும். அந்த ஆபத்து தண்டவாளத்தையும் சேதப்படுத்திவிடும். மேலும், ஒன்றோடொன்று தண்டவாளங்கள் சரியான தூரத்தில் இருந்தால் தான் ரயில்பெட்டிகளின் பாரத்தை அவைகளால் தாங்க முடியும். ஒரே தண்டவாளம் மட்டும் சுமக்க நினைத்தால் பெட்டிகளின் பாரத்தால் மண்ணில் புதைந்துவிடும். பெட்டிகளும் தடம் புரண்டுவிடும்.
இந்த வகை இணைந்திருத்தலில் தான் நாம் ஒட்டுமொத்த உலகோடு தொடர்பு கொண்டிருக்கிறோம். எண்ணற்ற தண்டவாளங்கள் இருப்பதுபோல எண்ணற்ற மனிதர்கள் நாம் இருக்கிறோம். நம் குறுகிய வாழ்நாளில் நம்மால் அனைவரையும் சந்திக்க முடிவதில்லை. அனைவரையும் பார்க்கக் கூட முடிவதில்லை. ஆனால் நமக்குக் குறிக்கப்பட்ட எல்கைக்குள் நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். நேபாளின் நிலநடுக்கம், ரஷ்யாவின் விண்கலம் தோல்வி, தமன்னாவுக்கு இடுப்பில் வந்த கட்டி இப்படி நாம் அன்றாடம் கேள்விப்படும் நிகழ்வுகள் போகிற போக்கில் போய்க்கொண்டே இருக்கின்றன. நிலநடுக்கம் கேள்விப்பட்டு 'அச்சச்சோ!' என்று சொல்லிவிட்டு, நாம் காமெடி சேனலுக்கோ, சாலிடர் கேமுக்கோ தாவி விடுகிறோம். இது ஒன்றும் தவறல்ல. நாம் ஒட்டுமொத்த உலகத்தோடு இந்த அளவில்தான் இணைந்திருக்க முடியும். நேபாளத்தில் நிலநடுக்கம் என்று சொல்லிவிட்டு, நாளைக்கு ஆஃபிஸ் லீவ் போட்டுட்டு, அங்கே நாம் ஓட முடியுமா? அல்லது தமன்னாவின் கட்டிக்கு வைத்தியம் பார்க்க முடியுமா? 'மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்!' என்று சொல்லிவிட்டு நம் தண்டவாளம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாலே இந்த வகை உறவு சால்பே.
ஆ. சூரியனும், சந்திரனும் போல. சூரியனிடமிருந்து, ஒளியை சந்திரன் பெற்று ஒளி கொடுத்தாலும், சூரியனும், சந்திரனும் ஒரே வானில் இருக்க முடிவதில்லை. ஒன்றின் வருகை மற்றொன்றை வெளியேற்றிவிடுகின்றது.
இந்த வகை இணைந்திருத்தலில்தான் நான் பெற்றோர்-பிள்ளை உறவையும், ஆசிரியர்-மாணவர் உறவையும் பார்க்கிறேன். சந்திரன் தன் ஒளிக்காக சூரியனை சார்ந்திருப்பதுபோல, பிள்ளை தன் வளர்ச்சிக்காக பெற்றோரையும், மாணவர் தன் அறிவுக்காக ஆசிரியரையும் சார்ந்திருக்கிறார். ஆனால், வளர்ந்தவுடன், அறிவு பெற்றவுடன் இருவரும் தங்கள் பாதையை நோக்கிப் பிரிந்து விட வேண்டும். 'நான் தான் உன்னை வளர்த்தேன்!' என்று சொல்லிக் கொண்டு பெற்றோரும், 'நான் தான் உனக்கு சொல்லிக் கொடுத்தேன்!' என்று ஆசிரியரும் தன் பிள்ளையையும், தன் மாணவரையும் தன்னோடு வைத்துக்கொள்ள முடியுமா. அப்படியிருந்தால் வீட்டின் அறையும், வகுப்பறையும் கொள்ளாதுதானே.
இ. தண்ணீரும், எண்ணெயும் போல. ஒரு கண்ணாடி குடுவையில் தண்ணீரை ஊற்றி அதன் மேல் எண்ணெய் ஊற்றினால், எண்ணெய் தன் அடர்த்தி காரணமாக மேலே நிற்கும். தண்ணீர் கீழே நிற்கும். இவை பார்ப்பதற்கு இணைந்திருப்பதுபோல தெரிந்தாலும் அவைகளை ஒன்றிலிருந்து மற்றொன்றாக எளிதாகப் பிரித்துவிடலாம். கொஞ்சம் பொறுமை இருந்தால் போதும்.
இந்த வகை உறவு அல்லது இணைந்திருத்தால் தான் நாம் நம் பொது அல்லது சமூக வாழ்வில் காண்பது. பஸ்ல போறோம். ஆரப்பாளையத்திலிருந்து மாட்டுத்தாவணிக்கு என வைத்துக் கொள்வோம். அந்த இருபது நிமிடங்கள் நாம் எல்லாரும் இணைந்திருக்கிறோம். எல்லாரும் மாட்டுத்தாவணி போவது போல இருந்தாலும், சிம்மக்கல், கோரிப்பாளையம் என இடையில் சிலர் பிரிந்து விடுகிறார்கள். மற்றவர்கள் மாட்டுத்தாவணியில் மொத்தமாக இறங்கினாலும், அங்கே தனித்தனியாகப் பிரிந்து சென்றுவிடுகின்றனர். சீட்டுக் கிடைத்தவர், நின்று கொண்டு வருபவர், டிக்கெட் எடுத்தவர், 'பஸ் பாஸ்' வைத்திருக்கவர் என எல்லாரும் இணைந்திருந்தாலும், ஓட்டுநர் மற்றவர்களை விட மேலாக இருந்தாலும் இவர்கள் எல்லாவற்றையும் 'மாட்டுத்தாவணி' பிரித்துவிடுகிறது. மக்கள் முதல்வருக்கும், தமிழக முதல்வருக்கும், நம் தலைவர்களுக்கும், நமக்கும் உள்ள உறவு இந்த நிலைதான். ஒருவர் மற்றவரை விட மேலிருப்பதாக தெரிந்தாலும், ஆட்சி முடிந்தவுடன் அவருக்கும், நமக்கும் தொடர்பில்லை என்று ஆகிவிடுகிறது.
ஈ. மலரும் மணமும் போல. 'நகமும் சதையும் போல' அல்லது 'நடனமும் ஆடுபவரும் போல', 'தொப்புள் கொடியால் இணையும் தாயும் குழந்தையும் போல' என்றும் சொல்லலாம். இன்றைய நற்செய்தி சொல்லும் 'கொடியும் கிளையும் போல' என்று இணைந்திருத்தல் நிலையும் இதுதான். ஒன்றின் பலம் மற்றொன்று. ஒன்றின் சாரம் மற்றொன்றில் இருக்கும். கிளையில் ஒரு தன்மையும், கொடியில் ஒரு தன்மையும் இருக்க முடியுமா?
மற்ற இணைந்திருத்தல்கள் தவறானவை. இதுதான் சரி என்பதல்ல. ஆனால், இறைவனுக்கும், எனக்கும், எனக்கும் மற்றவருக்கும் அன்பு இருக்கிறது என்று சொல்கிறேன் என்றால் அங்கே நான் இந்த நிலை இணைந்திருத்தலில் இருக்க வேண்டும். 'நான் என் மனைவியை அன்பு செய்கிறேன்!' என வைத்துக்கொள்வோம். இந்த கணவன்-மனைவி அன்பில் நான் தொட்டுக்கொள்ள முடியாத தண்டவாளம் போலவோ, அல்லது ஒன்றையொன்று பிரிந்து நிற்கும் சூரியன்-சந்திரன் போலவோ, எளிதாகப் பிரித்துவிடக்கூடிய எண்ணெயும், தண்ணீரும் போலவும் இருந்தால் நலமா? இல்லை.
'கொடி-கிளை' இணைந்திருப்பதில் முக்கியமானது இரண்டும் தங்கள் அடையாளங்களை களைந்து ஒன்று மற்றதோடு கலந்துவிட வேண்டும். என் விருப்பு-வெறுப்பு அல்லது என் ஆசாபாசங்கள் தான் முக்கியம் என்று சொல்கின்ற கிளை, கொடியோடு சேரமுடியாது. அல்லது நான் பெரியவன், ஒய்யராத்தில் இருக்கிறேன் என்று கொடி சொல்லிக்கொண்டு கிளைகளை தன்னோடு சேர்த்துக்கொள்ள மறுத்தால் அது வெறும் 'மொட்டைச்' செடியாகவோ அல்லது கொடியாகத்தான் இருக்க முடியும்.
'சக்தி!' - கொடியின் சக்தி கிளைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. கிளைகளின் சக்தி கொடியின் சக்தியைக் கூட்டுகிறது. ஆலமரத்தில் இதை நன்றாகப் பார்க்கலாம். கிளைகளுக்கு உயிர் கொடுத்த தண்டை அது வளர்ந்தவுடன் கிளைகள்தாம் தண்டைத் தாங்கத் தொடங்குகின்றன. மேலும், தன் சாரத்தை தனக்குள்ளே வைத்துக்கொள்ள நினைத்தால் தண்டு அழுகிவிடவும், கிளை வாடிவிடவும் வாய்ப்பு இருக்கிறது.
நான் எந்தெந்த உறவு நிலைகளில் எந்தெந்த இணைந்திருத்தலில் இருக்கிறேன் என்பதுதான் இப்போது நான் கேட்கும் கேள்வி.
3. எதற்காக இணைந்திருப்பது?
ஒவ்வொரு இணைந்திருத்தலுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அல்லது இருக்க வேண்டும். ஸ்கைப்பில் இணைந்திருக்கக் காரணம் மற்றவர்களோடு காணொளி அழைப்பு செய்ய. வாட்ஸ்ஆப்பில் இணைந்திருக்கக் காரணம் கட்செவி அஞ்சல் பரிமாற்றம் செய்ய. ஃபேஸ்புக் ஸ்டேடஸ் போட. ப்ளாக்கர் டைரி எழுத. நானும் ஃபேஸ்புக்கில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அதை லாக்-இன் செய்யாமல் இருந்தாலோ, நானும் வாட்ஸ்ஆப்பில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு, 'ஹை தேர்! ஐ ஆம் யூஸிங் வாட்ஸ்ஆப்!' என்று ஒரே ஸ்டேடஸ் போட்டு போரடித்தாலோ என்ன பயன்? 'எல்லாரும் சந்தைக்குப் போனாங்களாம். சுப்பனும் போனானாம்!' என்பது போல அல்லவா இருக்கும்.
கொடி கிளையோடு இணைந்திருப்பது எதற்காக? கனி தருவதற்காக. நம்ம வீட்டுக்கு முன்னால ஒரு மாமரம் நட்டு, அது கொடி-கிளைகள் என பச்சைப் பசேல் இன்று இருப்பதாக வைத்துக்கொள்வோம். அது நல்ல நிழல் தந்தாலும், ஒரு காயும் காய்க்கவில்லையென்றால், அதை நாம் 'மலட்டு மரம்' என்று அடையாளப்படுத்திவிடுகிறோம். திருமணத்தில் இணைந்திருக்கும் கணவன்-மனைவி குழந்தைபெறவில்லையென்றால் 'மலடன்' அல்லது 'மலடி' (இது யாரையும் புண்படுத்த அல்ல! மாறாக, உதாரணத்திற்கு!) என்று சொல்கின்றோம். ஆக, எந்தவகை இணைந்திருத்தலுக்கும் - கொடி-கிளை, கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளை, ஆசிரியர்-மாணவர், அருட்பணியாளர்-இறைமக்கள், கடவுள்-நான், கேர்ள்பிரண்ட்-நான் என எல்லா இணைந்திருத்தலுக்கும் உள்ள நோக்கம் நிறைவேறும்போதுதான் அந்த இணைந்திருத்தல் உண்மையான பொருள் தருகிறது.
இப்படியாக சீடர்கள், இயேசுவோடு இணைந்து கனிதருதல் அவர்களுக்கு பலன்தருவதோடல்லாமல் தந்தையாகிய கடவுளுக்கும் மாட்சி தருகிறது. மரம் கனிதந்தால் அதை நட்டவனுக்கும் பெருமைதானே!
'இணைந்திருத்தல்' என்ற ஒற்றைச்சொல் என்னை என் கடவுளோடும், என் உறவுகளோடும் இணைந்திருக்க, கனிதர என்னை அழைக்கிறது.