Saturday, June 29, 2013

கழுகின் இளமையென


சிட்டுக்குருவியைப் போன்ற சின்னப் பறவையினத்தைப் பற்றிப் பேசுகின்ற பைபிள் பறவையினத்தின் அரசனாம் கழுகைப் பற்றியும் பேசுகின்றது (மொத்தம் 7 இடங்கள்: திபா 103:5, எசா 40:31, நீமொ 23:5, இச 32:11-12, லேவி 11:13, எபி 1:1-14, திவெ 3:1-3).

இந்த 7 இடங்களில் 3 வாக்கியங்கள் கழுகின் குணம் பற்றிப் பேசுகின்றன. அந்தக் கழுகின் குணங்களை மட்டும் இன்று நாம் சிந்திக்கலாம்:

'ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர். அவர்கள் ஓடுவர். களைப்படையார். நடந்து செல்வர். சோர்வடையார்.' (எசா 40:31)

'அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார். உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும்' (திபா 103:5)

'கழுகு தன் கூட்டின்மேல் அசைந்தாடித் தன் குஞ்சுகளின்மேல் படர்ந்து அணைப்பது போலும், தன் சிறகுகளை விரித்து அவற்றைச் சுமந்து செல்வது போலும் அவற்றைத் தன் சிறகுகளில் சுமப்பது போல், ஆண்டவர் ஒருவரே அவனை வழிநடத்தினார்.' (இச 32:11-12)

கழுகு பற்றி இணையத்தில் நான் வாசித்த மூன்று குட்டிக்கதைகள் இவை:

1. கழுகும் புயலும்

புயல் வருகின்ற நேரமும் இடமும் கழுகிற்குத் தெரியுமாம். புயல் வருகின்ற சில நாட்களுக்கு முன்னேயே கழுகு உயரமான இடத்திற்குச் சென்றுவிடும். புயல் புறப்படும்போது அதன் காற்று தன்னை உயர்த்திச் செல்லுமாறு தன் இறக்கைகளை விரித்துக் காத்திருக்கும். புயல் தன்னை அடித்துச்செல்லும்போது அதன் வேகத்தைப் பயன்படுத்தி அக்காற்றைவிட உயரமாகப் பறந்து விடும். புயல் கீழே, கழுகு மேலே என்று வேகமாகப் பறந்து செல்லும். கழுகு புயலைப் பற்றி பயப்படுவதில்லை. புயலின் அபாயத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தன்னைக் காத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் தன்னால் இன்னும் உயரமாகச் செல்லமுடியும் என்ற தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்கின்றது.

வாழ்க்கையில் நமக்குத் துன்பங்கள் வரவே கூடாது என நினைக்கிறோம். அதற்காக 'வருமுன் காப்போம்' என்ற அடிப்படையில் பல துன்பங்கள் பட்டு 'வந்துவிடும்' எனக் கற்பனை செய்யும் துன்பங்களை விட அதிகமாகவே துன்பப்படுகிறோம். அப்படியே ஏதாவது ஒரு பிரச்சினை வந்துவிட்டால் அதிலிருந்து எப்படித் தப்பி ஓடுவது என்பதில் நேரத்தைச் செலவிடுகிறோம். மாறாக வருகின்ற துன்பத்தைப் பயன்படுத்தி அதன் வழியாக இன்னும் அதிக உயரத்திற்குப் பறந்து செல்வது கழுகு நமக்குச் சொல்லும் பாடம்.

இதற்கு நமக்குத் தேவையானது நம்பிக்கை – நம் மேலும். கடவுள் மேலும். பறவைகள் கிளைகளில் அமர்ந்திருப்பது அந்தக் கிளைகள் வலிமையானவை என்ற நம்பிக்கையில் அல்ல, மாறாக, தங்கள் இறக்கைகள் வலிமையானவை என்ற நம்பிக்கையில்தாம். 'இவ்வளவு நாட்கள் காத்து வந்த இறைவன் இனியா கைவிடுவார்?' என்று நடந்த நிகழ்வுகள் நமக்கு இறைவன்மேல் நம்பிக்கை தந்தால் நடக்கவிருக்கின்ற எந்த நிகழ்வுகளையும் நாம் எளிதாக எதிர்கொள்ளலாம்.

'ஆண்டவரின்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்'.

2. கழுகின் மறுபிறப்பு
தன் இனத்திலேயே அதிக வாழ்நாளைக் கொண்டது கழுகு. இதன் ஆயுட்காலம் ஏறக்குறைய 70 ஆண்டுகள். அந்த வயதை எட்ட அதன் 40 வயதில் அது ஒரு பெரிய முடிவை எடுக்க வேண்டும். அதன் 40வது வயதில் அதன் நீளமான அலகு இரையைப் பிடிப்பதற்கும் உண்பதற்கும் பயனற்றதாகி விடும். அதன் அலகு வளைந்து விடும். அதன் இறக்கைகளும் தடித்து பறப்பதற்கு கனமாக மாறிவிடும். அந்த நேரத்தில்தான் கழுகின் முன் இரண்டு வாய்ப்புகள்: ஒன்று, இறந்து விடுவது. அல்லது மாற்றம் என்னும் வலிமிக்க நிகழ்விற்குத் தன்னையே உட்படுத்துவது. இந்த மாற்றம் நிகழ ஏறக்குறைய 150 நாட்கள் ஆகும். இந்த மாற்றத்தை அடைய வேண்டுமானால் உயர்ந்ததொரு மலைக்குப் பறந்து செல்ல வேண்டும். தன் கூட்டில் குடியிருக்கும் கழுகு அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அந்த அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தன் கூட்டிலேயே தனித்திருக்கும். புதிய அலகு வளர்ந்தபின் அதைக் கொண்ட தன் உடலில் இருக்கும் அனைத்து இறகுகளையும் தானே பிய்த்தெடுக்கும். 5 மாதங்களுக்குப் பின் புதிய இறகுகள் எல்லாம் முளைக்க மீண்டும் தன் வழி செல்லும். இந்த மறுபிறப்பு அதை இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக்கும்.

கழுகின் மறுபிறப்பு நமக்கு வைக்கும் சவால் மாற்றம். நம் பழைய காயங்கள், அனுபவங்கள், தோல்விகள், ஏமாற்றங்கள் இவற்றை அனுதினம் சுமந்த ஒட்டகக் கூன்களாய் நிற்கும் நாமும் மாற்றம் என்னும் வலிமிக்க நிகழ்விற்கு உட்படுத்தவேண்டும். 'மாற்றத்திற்கு உட்படாத எந்த உயிரினமும் அழிந்துவிடும்' என்பது டார்வினின் உயிரியல் பரிணாமக் கோட்பாடு. இருப்பது போலவே இருப்பது அல்ல வாழ்க்கை. மாறாக அன்றாடம் 'இன்று நாம் புதிதாய்ப் பிறந்தோம்' என்ற அடிப்படையில் நம்மையே மாற்றத்திற்கு உட்படுத்தும்போது நாம் மனதளவில் மட்டுமல்ல உடலளவிலும் இளமையோடு இருக்கலாம். இதையே ஸ்டீபன் கோவே என்ற நிர்வாகவியல் அறிஞர், 'ரம்பத்தைக் கூர்மையாக்குவது' என அழைக்கிறார். உடல், மன, ஆன்ம, சிந்தனை புதுப்பித்தலுக்கு நம்மையே உட்படுத்தும்போது நாம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த மனிதர்களாக மாற முடியும்.

'உன் இளமை கழுகின் இளமையெனப் பொலிவுறும்!'

3. கழுகும் கோழிக்குஞ்சும்
விவசாயி ஒருவர் தன் தோட்டத்தில் கிடைத்த கழுகு முட்டையை எடுத்து தன் வீட்டில் அடைகாக்கும் கோழியின் முட்டைகளோடு வைக்கின்றார். கோழிக்குஞ்சுகளோடு இணைந்து கழுகுக்குஞ்சும் பிறக்கிறது. கோழிகளோடு மேயும் கழுகுக்குஞ்சு கோழியின் உணவுப்பழக்கம், நடை, ஓட்டம் அனைத்தையும் கற்றுக்கொள்கிறது. வானில் ஒய்யாரமாய் வட்டமிடும் கழுகை ஏறிட்டுப் பார்க்கும் கழுகுக்குஞ்சு மற்ற கோழிக்குஞ்சுகளைப் பார்த்து, 'அங்கே தூரத்தில் பறக்கும் பறவை என்ன?' எனக் கேட்கிறது. 'அதுதான் பறவைகளின் அரசன் கழுகு, நம்மால் அப்படியெல்லாம் பறக்க முடியாது' என வருத்தப்பட்டுக்கொள்கின்றன கோழிக்குஞ்சுகள். 'தன்னாலும் பறக்க முடியாது' என்று நினைத்தே இறந்து விடுகிறது கழுகுக்குஞ்சு.

தான் யார் என்பதை அறியாத கழுகு தன்னைச் சுற்றியிருக்கும் கோழிக்குஞ்சுகள் போலவே தன்னை நினைத்துக்கொள்கிறது. அந்த நினைப்பே ஒரு சின்ன நூற்கண்டாய் அதைச் சிறைப்படுத்திவிடுகிறது. நாம் வாழ்வில் தோற்க காரணங்கள் இரண்டு: ஒன்று, நாம் யார் என்பதை நாம் இறுதிவரை அடையாளம் காண மெனக்கெடுவதேயில்லை. நமக்கென்று உள்ள தனித்தன்மை, நம் திறன்கள், நம் ஆற்றல்கள் அனைத்தையும் அடையாளம் காணாமலே விட்டுவிடுகிறோம். இரண்டு, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற நினைவும் நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிறது. 'ஊரோடு ஒத்துப்போக வேண்டும்' என்று நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக்கொண்டு எதிர்நீச்சல் போட மறுத்துவிடுகின்றோம்.

'கழுகைப்போல ஆண்டவர் ஒருவரே வழிநடத்தினார்!'

***

[4:10 மணித்துளிகள் ஓடும் இந்தக் காணொளி கடவுள் நம்மை இறக்கைகளுக்குள் வைத்துப் பாதுகாப்பதை நினைவுபடுத்துகின்றது: On Eagle's Wings]



3 comments: