ரேகை ... எனக்குத் தெரிந்து இந்த வார்த்தையை முதலில் நான் கேட்டது 6ஆம் வகுப்பு பழனியம்மா டீச்சரிடம். பூகோளவியல் நடத்திய அவர் பூமத்திய ரேகை பற்றிப் பேசினார். பின் அறிந்தது கைரேகை. குற்றவாளிகள் விடும் தடயம் அறிய கைரேகை. எதிர்காலம் பார்க்க கைரேகை என அறிந்த எனக்கு இப்போது புது இன்ஃபோ.
கையை மூடிப்பாருங்களேன். ரேகை உள்ள இடங்களில்தான் கையைச் சுருக்க முடியும். நம் கைக்கு ரேகை இருப்பது போல காலுக்கும் ரேகைகள் உண்டு. தோலின் சுருக்கம் ரேகை. என்னதான் மாய்ஸரைசர் போட்டுக் கெட்டியாக வைத்தாலும் நம் முகத்தின் தோலும் சுருங்கி ரேகைகள் விழத் தொடங்கும்.
நம் கையில் இருக்கும் ரேகை நம் வாழ்வைக் காட்டுகிறதோ இல்லையோ நாம் பதிக்கும் கைரேகை கண்டிப்பாக நம் வாழ்வைப் பாதிக்கும். நாம் குற்றவாளி என்றால் நம் விடும் ரேகைக்குப் பெயர் தடயம். நாம் நல்லவர் என்றால் நாம் விடும் ரேகைக்குப் பெயர் தாக்கம்.
நம்மையறியாமலே அன்றாடம் நம் ரேகைகள் பிரதியெடுக்கப்படுகின்றன.
கைபிடிக்கும் பேனாவில்.
டைப்படிக்கும் கீபோர்டில்.
மொபைல் டச்ஸ்கீரின்.
வாழ்க்கை ஸ்டெரஸ் தாங்காமல் வலுவற்று நாம் சாயும் பாத்ரூம் சுவர்.
நெற்றிப் பொட்டு அமைப்பாய் இருக்கா எனப் பார்க்க
ஒற்றைக் கை ஊன்றும் கண்ணாடி.
பேருந்தின் கம்பி.
ஏடிஎம் அட்டை.
வாசிக்கும் புத்தகம்.
விளையாடும் பந்து.
சாப்பிடும் தட்டு.
ஓட்டும் பைக்.
ஓங்கி அறையும் கன்னம்.
கதவின் கைப்பிடி.
கைக்குட்டை.
இவை அனைத்திலும் நம் ரேகைத்தடங்கள்.
இன்று என் தவம் கலைத்தவை என் தலையணை ரேகைகள்.
என் மகிழ்ச்சி
என் தனிமை
என் உடல்நலம்
என் நோய்
என் எல்லா இரவுகளிலும் என் உடன் இருக்கும் துணை என் தலையணை.
என் கண்ணீர்
என் சிரிப்பு
என் ஜொல்லு
என் லொல்லு
அனைத்தையும் அறிந்தவள் அவள்...
இன்று என் உள்ளங்கையின் ரேகை தாங்கிபவள்
நாளை என் கன்னங்களின் ரேகை தாங்குவாள்
தினமும் அவள் சொல்லும் மௌனமொழி இதுதான்:
'உன் ரேகை தடயமா? தாக்கமா?'
No comments:
Post a Comment