ஒருமுறை ஒரு கணவர் தன் மனைவியின் பிறந்தநாளன்று அவருக்கு அழகியதொரு காரை பரிசளித்தார். முதலில் கார் சாவிகளைக் கொடுத்தார். பின் அவரது மனைவியின் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் காரின் முக்கிய ஆவணங்களை ஒரு ஃபைலில் வைத்துக் கொடுத்தார். கொடுத்துவிட்டு அன்பாக ஒரு புன்சிரிப்பையும் கொடுத்தார். அன்றைய தினம் குழந்தைகளை தான் கவனித்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு புதிய காரை ஓட்டிப் பார்த்து வருமாறு மனைவியை அனுப்புகின்றார். மனைவியும் நன்றி சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு புறப்படுகின்றார். ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் சென்றதுதான் தாமதம் காரை வேகமாக சாலையின் குறுக்குச் சுவற்றில் போய் இடிக்கின்றார். அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் காரின் முன்பகுதி மிகவும் பாதிக்கபட்டுவிடுகிறது. 'கணவரிடம் என்ன சொல்வேன்?
'நான் சொல்வதை அவர் எப்படி எடுத்துக் கொள்வார்?' என்று மனதுக்குள் குற்ற உணர்வுடன் புலம்புகிறார். விபத்து நடந்த இடத்திற்கு போலீஸ் உடனடியாக வந்துவிட்டார்கள். 'உங்க டிரைவிங் லைசன்ஸ் ப்ளீஸ்!' கேட்கிறார்கள் போலீஸார். நடுங்கிய கைகளுடன் தன் கணவர் கொடுத்த ஃபைலைத் திறக்கின்றார். கண்களிலிருந்து கண்ணீர் ஓடுகிறது. ஃபைலைத் திறந்தவுடன் உள்ளே கணவரின் கையெழுத்துடன் ஒரு துண்டுச்சீட்டு இருந்தது: 'அன்பே, ஏதாவது விபத்து நேர்ந்து விட்டால், ஒன்றை மட்டும் மறந்துவிடாதே. நான் அன்பு செய்வது உன்னை. காரை அல்ல. அன்புடன், ஹென்றி.' (நன்றி: T.T. Ranga Rajan, Unposted
Letter, Frozen Thoughts:Chennai, 2009)
மனிதர்களை அன்பு செய்யவும் பொருள்களை பயன்படுத்தவும் வேண்டும். பொருள்களை அன்பு செய்து மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று கற்றுக்கொண்டோர் பேறுபெற்றோர்.
காரில் ஏற்படுகின்ற ஒரு கோடு நமது இரத்த அழுத்தத்தை உயர்த்துகிற அளவிற்கு பல நேரங்களில் நமது மனத்தில் இருக்கின்ற கோட்டை நாம் கண்டுகொள்வதில்லை. ஒருவர் ஒருநாள் தான் வைத்திருந்த 18 ஆண்டுகள் பழமையான கண்ணாடி தாஜ்மஹால் ஒன்றை வேண்டுமென்று கீழே போட்டு உடைக்கின்றார். அதைப் பார்த்தவர்கள், 'ஐயோ, ஏன் இப்படிச் செய்றீங்க?' என்று கேட்டபோது அவர் சொல்கின்றார்: '18 வருடங்களாக கீழே விழுந்துவிடுமோ, உடைந்துவிடுமோ என இது எனக்கு பலமுறை டென்ஷன் தந்தது. நான் இன்றுதான் முடிவெடுத்தேன், என்னை ஆளப்பிறந்து அல்ல இது, நான்தான் இதை ஆளப்பிறந்தவன். உடைத்தேன். நிம்மதியாயிருக்கின்றேன்'. மற்றொரு நபர் தான் புதிதாக வாங்கிய மெர்சிடெஸ் பென்ஸ் கார் விபத்தில் ஒன்றுமில்லாமல் ஆனபோது தன் நண்பர்களையெல்லாம் அழைத்து விருந்து கொடுத்தாராம். விருந்திற்கு முன் அவர் சொன்னது: 'கார் முழுவதும் உடைந்து போனாலும் உள்ளேயிருந்த எனக்கு ஒன்றும் ஆகவில்லை. நான் நன்றாக இருப்பதால் என்னால் இன்னொரு கார் வாங்க முடியும். ஆனால் கார் நன்றாக இருந்து நான் இல்லாமல் போயிருந்தால் எப்படியிருக்கும்?'
நமது வாழ்க்கையை நாம் சிறுவயதில் தொடங்கும்போது வெறும் 60 ரூபாய் பொம்மை காரோடு தொடங்கினோம். அது உடைந்தபோது நாம் அழுதோம். அதிலிருந்து கொஞ்சம் வளர்ந்து 2000 ரூபாய்க்கு கார் ரிமோட்-கண்ட்ரோல் கார் வாங்கினோம். அது உடைந்தபோதும் நாம் அழுதோம். இன்னும் கொஞ்சம் வளர்ந்தபின் நமது பிறந்தநாளுக்கு 20000 ரூபாய் மதிப்புள்ள பேட்டரியில் இயங்குகின்ற கார் நமக்கு பரிசாகக் கிடைத்தது. அது ஒருநாள் பழுதானபோது நாம் ரொம்பவே நொந்து போனோம். அதற்கு பிற்பாடு 4 இலட்சம், 22 இலட்சம், 86 இலட்சம் என்று கார் வந்தாலும், அதில் ஒரு கிறுக்கல் ஏற்பட்டாலோ, பெயின்ட் உரிந்தாலோ, லைட் உடைந்தாலோ, கண்ணாடியில் கறைபட்டாலோ, உள்புறம் ஏதோ சிந்தினாலோ என்று நமது கவலைகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேதான் இருந்தது. நமது பொம்மையின் மதிப்பு வளர்ந்தது. ஆனால், நாம் வளரவில்லை. நாம் எதற்காக அழுதோமோ, அது மாறிவிட்டது. ஆனால் நமது அழுகையும், கண்ணீரும் மாறவில்லை. நமது அழுகைக்கு நாம் கோபம், ஏமாற்றம், விரக்தி, அழுத்தம், கவலை என மேன்மையான பெயர்களையும் சூட்டிக் கொண்டோம்.
பொம்மைகள் நமது பொழுதுபோக்கிற்கானவை. நாம் வைத்திருப்பதன் ஒரே நோக்கம்: அவைகளைப் பயன்படுத்த. நாம் வசிக்கின்ற நமது கனவு இல்லம் முதல் நாம் வைத்திருக்கின்ற செல்ஃபோன் வரை, நாம் அணிகின்ற ஆடைகள் முதல் கையில் கட்டுகின்ற டைட்டன் வரை அனைத்தும் இருப்பவை நமது வாழ்வை சுகமாக்குவதற்காக. சுமையாக்குவதற்காக அல்ல. நாம் வைத்திருக்கின்ற அனைத்தையும் விட நாம் மேலானவர்கள். நாம் உரிமையாக்கி வைத்துள்ள அனைத்தையும் விட நாம் அதிக மதிப்பு பெற்றவர்கள். நமது வாழ்க்கைக்குள் வருபவைகளைவிட நாம் அதிக முக்கியத்துவம் பெற்றவர்கள்.
பொம்மைகள் பொம்மைகள்தாம். பொம்மைகளை வாங்கி பயன்படுத்தலாம். இன்னும் அதிக பொம்மைகள் வாங்கினாலும் அவைகளை வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம். அவைகள் நமது பயன்பாட்டிற்கு மட்டும்தான் உள்ளன. அவை நமது சுகத்திற்காக மட்டும்தான். இனியும் நமது விலைமதிப்பற்ற கண்ணீர்த் துளிகளை அவைகளை வீணாக்க வேண்டாம், அவை எவ்வளவு பெரியவையானாலும்!
Impressive story... Really superb.. Thanks
ReplyDeleteman is a bandle of emotions...
ReplyDeleteமனிதர்களை அன்பு செய்யவும் பொருள்களை பயன்படுத்தவும் வேண்டும். பொருள்களை அன்பு செய்து மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று கற்றுக்கொண்டோர் பேறுபெற்றோர்
ReplyDeleteஅன்பே, ஏதாவது விபத்து நேர்ந்து விட்டால், ஒன்றை மட்டும் மறந்துவிடாதே. நான் அன்பு செய்வது உன்னை. காரை அல்ல.
ReplyDeleteபொம்மை car to 85 lakhs car.....நகர்த்தி செல்லும் விதம் அருமை..👌