Tuesday, June 18, 2013

'ஆட் மேக்கிங்' முதல் 'ஆடு மேய்க்கிங்' வரை


சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் என் உறவினர் ஒருவரிடம் இன்று ஃபோனில் பேசிக்கொண்டிருந்தேன். 'என்ன செய்து கொண்டிருக்கிறாய்?' என்று கேட்டபோது, 'ஆட் மேக்கிங்' என்று பதில் சொன்னாள். 'ஆட் மேக்கிங்' என்றால் 'ஆடு மேய்க்கிங்கா' என்று கேட்டேன். 'ஆடு' அல்ல 'ஆட்' என்று விளக்கம் தந்தாள்.

'ஆட்' 'ஆடு' - இந்த இரண்டிற்கும் தொடர்பு இருக்கிறதா என்று யோசித்துக்கொண்டே இன்றைய மதிய செய்தி கேட்பதற்காக டிவியைப் போட்டேன். நேற்றைய தினம் போப் பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய ஒரு பிரசங்கத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர் சேனல்காரர்கள். இயேசு சொன்ன 'காணாமற்போன ஆடு' எடுத்துக்காட்டைப் பற்றி போப் இவ்வாறு போதிக்கின்றார்: 'இயேசு சொன்ன எடுத்துக்காட்டில் வருகின்ற ஆடு மேய்ப்பவர் தொலைந்து போன ஒரு ஆட்டைத் தேடுவதற்காக இருக்கின்ற 99 ஆடுகளைவிட்டுப் புறப்படுகின்றார். ஆனால் இன்று திருச்சபைக்குள் இருப்பது ஒரு ஆடு மட்டும்தான். 99 ஆடுகள் தொலைந்து போய்விட்டன. நாம் எப்படி தேடிக் கண்டுபிடித்து மீட்டுக் கொண்டுவரப்போகிறோம்?' தொடர்ந்து இன்றைய தினத்தில் உள்ள குருக்களின் பணியாக அவர் சொல்வது: 'இன்று குருக்களாகிய, இறைவனின் பணியாளர்களாகிய நாம் ஆடு மேய்க்கும் ஆயனாக இருப்பதற்குப் பதிலாக ஆடுகளுக்கு முடி கத்திரிக்கும் பணியாளர்களாகவே இருக்கிறோம். காணாமற்போன ஆடுகளைத் தேடுவதற்குப் பதிலாக, இருக்கின்ற ஆட்டை முடிவெட்டி அழகுபடுத்திக் கொண்டிருக்கின்றோம் (இருக்கின்ற ஆட்டை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் பொருள் மாறிவிடும்!).

மேற்கத்திய நாடுகளில் ஏற்கனவே 'சமயம்' இறங்குமுகத்தில் இருக்கின்றது. இது கீழை நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக வழிந்தோடிய கோவில்கள் இன்று கேட்பாரற்றுக் கிடக்கின்றன. கோவில்கள் வணிகக் கூடங்களாகவும், கேளிக்கை விடுதிகளாகவும், பொது வளாகங்களாகவும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 'கடவுள் தேவையில்லையா?' அல்லது 'மதம் தேவையில்லையா?' என்ற எண்ணத் தேடல்களும் அதிகமாகவே உள்ளன. 'எங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கின்றது', ஆனால் 'மதத்தில் நம்பிக்கை இல்லை' என்று சொல்பவர்கள் இதை ஒரு நாகரீக அடையாளமாகவே பார்க்கின்றனர்.

மதங்கள் விரித்த கட்டமைப்புப் போர்வைகள் மக்களை மூச்சு விடாமல் செய்து விட்டன. 'இது குற்றம், அது குற்றம், நின்றால் குற்றம், செய்தால் குற்றம், செய்யாவிட்டால் குற்றம்' என அனைவரையும் குற்ற உணர்வில் ஆழ்த்திவிட்டதும் மதம்தான். 'கடந்த' கடவுளை எந்தக் கட்டமைப்பும் தன் கட்டுக்குள் அடக்கிவிட முடியாது. கடவுளின் பெயரால், கடவுள் நம்பிக்கை என்ற கட்டமைப்பின் பெயரால் நம் மனித வரலாறு சிந்திய கண்ணீரும், இரத்தமும் நாம் அனைவரும் அறிந்ததே.

பூமியைப் போலவே வாழத் தகுதியுள்ள ஒரு கோளத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம் விஞ்ஞானிகள். அங்கே சென்று குடியிருக்கும் மனித இனம் தன்னோடு கடவுளையும் கூட்டிச் செல்லுமா? எந்தக் கடவுளைக் கூட்டிச் செல்லும்? அல்லது அந்தக் கோளத்திற்கும் கடவுளர்கள் அவதாரம் எடுத்து வருவார்களா? அந்தக் கோளத்தில் வாழ்பவர்கள் இறக்கும் போது மோட்சத்திற்குப் போவார்களா? நரகத்திற்குப் போவார்களா? ஏழுமுறை மறுபிறப்பு எடுப்பார்களா? கடவுள் மனித குலத்தின் வரமா? சாபமா?

மற்றொரு பக்கம், நாத்திகம் பேசும் மனிதர்கள் ஆத்திகம் பேசும் மனிதர்களைச் சாடுவதிலேயே தங்கள் நேரத்தைச் செலவிடுகின்றனரே தவிர, ஆக்கமாக எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.

மதம் ஒரு மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலாக அல்லாடுகின்றது. ஓட்டைகள் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றன. 'எல்லா ஓட்டைகளையும் சரி செய்து விடலாம்' என்கின்றனர் சிலர். 'அதோ கரை தெரிகிறது. சீக்கிரம் போய்விடுவோம். கவலை வேண்டாம்' என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் சிலர். 'இங்கே வாருங்கள். நாங்கள் காப்பாற்றுகிறோம்' என்ற விளம்பரங்கள் ஒரு பக்கம். 'தப்பித்தோம், பிழைத்தோம்' என்று கப்பலைவிட்டு வெளியே கடலில் குதிக்கும் ஒருசிலர். 'எங்கே போகிறோம். என்ன நடக்கிறது' எனத் தெரியாமல் பீதியில் அங்கும் இங்கும் ஓடும் எலிகளாக ஒரு கூட்டம். அந்த எலிகளை முடிந்தவரை வேட்டையாடித் தன் வயிறு நிரப்பும் பூனைகள் கூட்டம் ஒரு புறம். கப்பல் மூழ்கிவிடுமா? கப்பல் கரைசேருமா? இன்னொரு கடவுள் வரவேண்டுமா?

போப் பிரான்சிஸ் சொல்லும் 'ஆடு மேய்க்கும் பணியாளர்களில்' நானும் ஒருவன்தான். என் பணியும் 'முடி கத்திரிக்கும் பணியாகவே' சுருங்கிப் போய்விட்டது. காணாமற்போன 99 ஆடுகளை நான் எப்படித் தேடுவேன்? எப்படிக் கண்டுபிடிப்பேன்? எப்படி மீண்டும் கொட்டில் சேர்ப்பேன்?

ஏதாவது 'ஆட் மேக்கிங்' பண்ணியாவது இந்த 'ஆடு மேய்க்கிங்கை' பண்ணிவிடலாம்!

'தீயா வேல செய்யனும் குமாரு!'

1 comment:

  1. I believe by this blog writing, you have renewed many souls.
    So, தீயா வேல செய்றீங்க யேசு...

    ReplyDelete