இன்று ஜெர்மன் மொழி கற்கத் தொடங்கினேன். 'ஒருவரின் கனவு எந்த மொழியில் வருகிறதோ அந்த மொழியே அவரது புலமைபெற்ற மொழி' என்பார்கள். நம்மில் பலருக்குக் கனவுகள் நம் தாய்மொழியில் தான் வரும். சின்ன வயசுல இருந்தே ஆங்கிலம் படிக்கிறேன். ஆனால் கனவு ஆங்கிலத்தில் வந்ததேயில்லை. ஆங்கில அறிவு நம்மை தோலளவில் கறுப்பாகவும், மனதளவில் வெள்ளையாகவும் மட்டுமே வைத்திருக்கின்றது.
ஒரு மொழியைக் கற்க பல வழிகள் உண்டு. அந்த மொழி பேசப்படும் நாட்டில் சென்று வாழ்ந்து அம்மொழி பேசும் மக்களோடு பழகி கற்றுக்கொள்ளலாம். ஆனால் நான் 7 ஆண்டுகள் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்தேன். மராத்திய மொழி என் காதுகளுக்கு வந்துவிட்டு காற்றோடு மறைந்துவிட்டது. புத்தகங்கள் வாங்கிக் கற்கலாம். ஆனால் புத்தகங்கள் வழி நான் கற்றதெல்லாம் புத்தகத்தை மூடியவுடனேயே மறந்து விடுகின்றது. ஆகையால் நான் தேர்ந்து கொண்டது 'மிஷல் தாமஸ் மெதட்' என அழைக்கப்படும் வழி. 'உங்கள் தாய்மொழி போல் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம்' என்ற வாக்குறுதியோடு மிஷல் தாமஸ் என்ற ஆங்கிலேய மொழி ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தது தான் இது. எதையும் மனப்பாடம் செய்யத் தேவையில்லை. எதையும் எழுதிப் பார்க்கத் தேவையில்லை. ஓடுகின்ற சவுண்ட் டிராக்கோடு இணைந்து நாம் பயணம் செய்தால் போதும். அந்நிய மொழி நம் இயல்பு அறிவாகவே மாறிவிடுகின்றது.
இந்த ரெக்கார்டிங்கில் மிஷலும் அவருடைய இரண்டு மாணவர்களும் உரையாடுவார்கள். அந்த உரையாடலின் நான்காவது நபர் (அதாவது மூன்றாவது மாணவர்தான்) கற்பவர்.
இந்தக் கற்றலின் முதல் விதிமுறை: திங்க் இட் ஓவர் (சொல்வதற்கு முன் ஒரு செகன்ட் சரியா தவறா என யோசிக்க வேண்டும்). இந்த விதிமுறையைக் கேட்டவுடன் எனக்கு இதில் பெரிய லைப் ஃபிலாஸஃபி இருப்பது போல் தெரிந்தது. நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தவறான அர்த்தத்தில் இருப்பதற்கும், நாம் தவறான செயல்களில் ஈடுபடுவதற்குக் காரணம் நாம் ஒரு செகண்ட் கூட யோசிப்பதில்லை என்பதுதான்.
'சே...நான் ஒரு செகண்ட் யோசிச்சிருக்கணும்' என்று எத்தனை முறை யோசித்திருக்கிறோம். நாம ஓடுற வாழ்க்கையில யோசிக்கிறதுக்கே இடமில்லை. ஓடிக்கொண்டே இருந்தால்தான் வெற்றி என நினைக்கிறோம்.
ஒரு அப்பா தன் 25 வயது மகனோட ஒரு டிரெயின்ல போயிட்டிருக்கார். மகன் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிக்கொண்டு சத்தம் போட்டுக்கிட்டே வர்றான். 'அப்பா, அங்க பாருங்க மரங்கள்;லாம் பின்னால ஓடுது', 'அப்பா, அங்க பாருங்க மேகங்கள்லாம் நம்ம கூடவே வேகமாக வருது' என்று அப்பாவைப் பார்த்துச் சொல்லிக் கொண்டே வருகிறான். 'என்ன இது சின்னப்பிள்ளத்தனமா இருக்கு!' என்று சக பயணிகள் முணுமுணுத்துக் கொண்டே வருகின்றனர். 'அப்பா அங்க பாருங்க கொக்கு நிக்குது!', 'அப்பா அங்க பாருங்க தண்ணீர்' என்று தொடர்ந்து சத்தமிட்டுக்கொண்டே வருகிறான். பயணிகளுக்குப் பொறுமையில்லை. அந்த அப்பாவிடம் சொல்கிறார்கள், 'உங்க பையன் இவ்ளோ வளர்ந்திருக்கான். ஆனால் இன்னும் சின்னக் குழந்தை மாதிரி சத்தம் போட்டுக்கிட்டே வர்றானே. அவன ஏதாவது மனநல ஆஸ்பத்திரில சேருங்க!' அவர்களின் எரிச்சலைக் கேட்ட அப்பா சொல்கின்றார்: 'இவனுக்குப் பிறவியிலேயிருந்தே ரெண்டு கண்ணும் தெரியாது. இன்னைக்கு தான் ஆபரஷேன் முடிஞ்சு பார்வையோடு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டுருக்கேன்!'
'ஒரு நிமிடம் யோசிச்சிருந்தா'... நாம நம் வாழ்வின் எவ்வளவோ தர்மசங்கடங்களைத் தவிர்க்கலாம்.
நம்மள யோசிக்க விடாம தடுக்குறது நம்மோட 'அவசரம்'. 'எல்லாமே உடனே' என்ற இன்ஸ்டன்ட் மனநிலை நம்மை யோசிக்க விடுவதில்லை. எதற்காக இவ்வளவு அவசரம்? எஸ். ராமகிருஷ்ணனின் வார்த்கைளில் சொல்ல வேண்டுமென்றால், 'கரும்பைச் சுவைப்பது போல கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்துச் சுவைக்கவேண்டிய வாழ்க்கையை, லேகியம் விழுங்குவது போல நாவில் படாமலே விழுங்கிக்கொண்டிருக்கிறோமே, ஏன்?'
No comments:
Post a Comment