Thursday, February 2, 2023

சாட்சியத்தின் விலை

இன்றைய இறைமொழி 

வெள்ளி, 3 பிப்ரவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 4ம் வாரம்

எபி 13:1-8. மாற் 6:14-29.

சாட்சியத்தின் விலை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் கொலை செய்யப்படும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

திருமுழுக்கு யோவான் - ஏரோது - ஏரோதியா - சலோமி

இந்த நான்கு பேருக்கும் இடையில் வேகமாக நடந்தேறும் நாடகத்தில் திருமுழுக்கு யோவான் தன் இன்னுயிரை இழக்கின்றார்.

'மனிதர்களின் வாழ்க்கையின் இலக்கு மகிழ்ச்சியில்தான் இருக்கின்றது. மகிழ்ந்திருக்கும் ஒவ்வொருவரும் இறைவனின் திருவுளம் நிறைவேற்றுகிறார்' என்கிறார் இரஷ்ய எழுத்தாளர் டோஸ்டாய்வ்ஸ்கி. மேலும் அவர், மறைச்சாட்சியாளர்கள் தங்கள் இன்னுயிரை அழித்துக்கொள்ளத் தயாராக இருப்பதும் இம்மகிழ்விலேயே என்கிறார் அவர்.

மேற்காணும் நான்கு பேரும் தங்கள் வாழ்வின் மகிழ்ச்சியைத் தேடுகின்றனர்.

ஏரோது - இவர் தன் மகிழ்ச்சியை தன் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதிலும், தன் சகோதரன் மனைவியைத் தன் பொருள்களால் கவர்ந்து கொள்வதிலும், தனக்குக் கீழிருக்கும் அலுவலர்கள் மற்றும் தான் அழைத்த விருந்தினர்களைத் திருப்திப்படுத்துவதிலும் காண்கின்றான்.

ஏரோதியா - இவர் பிலிப்பின் மனைவி. பிலிப்பும் இவரும் ஒருவரையொருவர் நெருக்கமாகக் காதலித்தவர்கள். ஒரு கட்டத்தில் பிலிப்பு இவரிடம் சொல்வார், 'அன்பே, நான் உன்னிடம் 'ஐ லவ் யு' என்று சொல்ல மாட்டேன்!' ஏனெனில், அப்படிச் சொல்வதில் உனக்கும் எனக்கும் இடைவெளி வந்துவிடுகிறது. ஆனால், 'ஐ லவ் அஸ்' என்றே சொல்வேன். நாம் இருவர் இணைந்திராமல் ஒருவர் மற்றவரை எப்படி அன்பு செய்ய முடியும்?' இப்படிச் சொன்னவரிடமிருந்து ஏரோதியா எப்படி விலகிச் சென்றார்? காரணம், ஏரோதிடம் இருந்த பதவியும், செல்வமும். எது தேவையோ அதுவே தர்மம் என்பது இவருடைய கொள்கை. இவர் ஒரு சந்தர்ப்பவாதியாக இருந்ததால், 'ஒவ்வொன்றுக்கும் ஒரு சந்தர்ப்பம் அமையும்' என்று காத்திருந்ததால்தான், யோவானை அழிக்க சந்தர்ப்பம் தேடுகிறாள். இவள் தன் மகிழ்ச்சியை பொருளிலும், பொருளை வைத்திருப்பவர்களிடமும் தேடுகிறாள்.

சலோமி - சொன்னதைச் சொல்லும், செய்யும் கிளிப்பிள்ளை. நடனம் கற்ற இவளுக்கு வாழ்க்கையைக் கற்க நேரமில்லை. தாய் சொல்லைத் தன் செயலாக்குகிறாள். பாவம்! இவள் தன் பாதுகாப்பிற்குத் தன் தாயையே நம்பியிருந்தாள். இவள் தன் மகிழ்ச்சியை தன் தாயோடு சுருக்கிக் கொண்டாள்.

யோவான் - பிரித்துக் கொடுக்கப்படும் அன்பு அனைத்தும் பிரிந்து போகும் என்று உணர்ந்ததாலும், ஏரோதின் செயல் கடவுளின் 6வது மற்றும் 9வது கட்டளைக்கு எதிராக இருந்ததாலும் யோவான் ஏரோதைக் கண்டிக்கிறார். இவரின் கண்டிப்பிலும் கரிசனை இருந்தது. ஆகையால்தான், ஏரோது இவரின் வார்த்தைகளைக் கேட்கும்போதெல்லாம் உள்ளம் கலங்குகிறான். இவர் தன் மகிழ்வைத் தன் உறுதிப்பாட்டில் தேடினார்.

இவரின் உறுதிப்பாடு அன்பின் சாட்சியாக இருந்தது. அந்த சாட்சியத்திற்கு விலை அவருடைய உயிராகவே இருந்தது.

ஏரோதியாவின் மகள் சலோமியின் ஆட்டம் அடங்கிய கொஞ்ச நேரத்தில் இவரின் வாழ்வும் அடங்கிவிடுகிறது.

ஏரோது போதை மயக்கம் தெளிந்து அடுத்த நாள் தேடியிருப்பான் யோவானை. ஆனால், இனி அவரது குரலைக் கேட்கப்போவதில்லை. அவரின் மௌனமே அவனுடைய காதுகளைக் கிழிக்கும்.

மேற்காணும் நால்வரின் செயல்களின் நோக்கம் அவர்களுடைய மகிழ்ச்சியே. மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதே மகிழ்ச்சி என நினைத்தார் ஏரோது. சந்தர்ப்பம் பயன்படுத்துவதே மகிழ்ச்சி என்றார் ஏரோதியா. தாயின் சொல் நிறைவேற்றுவதே மகிழ்ச்சி என நினைத்தார் சலோமி. இறைவனின் திட்டம் நிறைவேற்றுவதே மகிழ்ச்சி என உறுதியாக இருந்தார் திருமுழுக்கு யோவான். 

மகிழ்ச்சியில் உயர்வு தாழ்வு இருக்கிறது. உயர்வான மகிழ்ச்சியின் விலையும் உயர்வே!


No comments:

Post a Comment