செவ்வாய், 14 பிப்ரவரி 2023
ஆண்டின் பொதுக்காலம் 6ஆம் வாரம்
தொநூ 6:5-8; 7:1-5,10. மாற் 8:14-21.
ஆண்டவர் மனம் வருந்தினார்
படைப்பின் தொடக்கத்தில், மனிதனின் தனிமை நல்லதன்று எனக் கண்ட ஆண்டவராகிய கடவுள், நோவா காலத்தில், மனித குலமே நல்லதன்று எனக் காண்கின்றார். மனிதரின் இதயச் சிந்தனை நாள் முழுவதும் தீமையை உருவாக்குவதை ஆண்டவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. படைப்பின் தொடக்கத்தில் கடவுள் அனைத்தையும் நல்லதெனக் கண்டார் எனில், மனிதனுக்குள்ளே இருக்கிற தீமை எங்கிருந்து வந்தது? வெளியிலிருந்து உந்ததா? அவனுக்குள்ளேயே உருவானதா? என்னும் கேள்விகள் விடைகளில்லாமல் நம் விரல்களிடையே கடந்து போகின்றன.
மானுடம் தீமை நிறைந்ததாக இருந்தாலும், அங்கும் நேர்மையாளர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் நோவா. மற்றவர்களின் தீமை தன்னைப் பாதிக்காவண்ணம் தற்காத்துக்கொண்டார் நோவா. அதாவது, மற்றவர்கள் தீயவர்களாக இருந்தாலும் தான் நேர்மையாளராக இருக்க முடியும் என்பது நோவாவின் வாழ்வியல் நோக்கமாக இருந்தது. விளைவு, ஒரு மனிதரின் நேர்மையால் அவருடைய குடும்பத்தார் அனைவரும் காப்பாற்றப்படுகின்றனர்.
நற்செய்தி வாசகம், பரிசேயருக்கும் இயேசுவுக்கும் இடையே நடந்த விவாதத்தின் தொடர்ச்சியாக இருக்கிறது. பரிசேயர்களைப் பற்றி தம் சீடர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விரும்புகிற இயேசு, புளிப்பு மாவு என்னும் உருவகத்தைப் பயன்படுத்தி, 'எச்சரிக்கையாக இருங்கள்' என மொழிகின்றார். ஆனால், சீடர்களின் எண்ணமெல்லாம் அப்பக் கூடைமேலே இருக்கிறது. அப்பம் பலுகச் செய்பவர் தங்களிடையே இருப்பதை மறந்துவிட்டு, அப்பங்கள் இல்லையே எனக் கவலைப்படுகின்றனர். இயேசு அவர்களை மிகவே கடிந்துகொள்கின்றார். 'இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?' என்னும் அவருடைய வினாவில், அவருடைய விரக்தியை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இரு வாசகங்களையும் எப்படி இணைத்துப் புரிந்துகொள்வது?
ஒன்று, மனித உள்ளத்தில் இருக்கும் தீமை புளிப்பு மாவு போன்றது. அதை உடனே நீக்காவிட்டால், அது பிசைந்த நல்ல மாவையும் புளிக்கச் செய்துவிடும். புளிப்பேறிய மாவிலிருந்து புளிப்பை அகற்றுவது கடினம்.
இரண்டு, பல நேரங்களில் நாம் கடவுளின் உடனிருப்பை மறந்துவிட்டு, நம் அன்றாட அலுவல்கள் பற்றியே கவலைப்பட்டுக் கலங்குகிறோம்.
மூன்று, பாலைவனத்தில் எப்படி மழை பெய்யும் என நோவா கடவுளிடம் கேள்வி கேட்கவில்லை. தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்கின்றார். அவருடைய ஊரார் அவர் பேழை கட்டுவதைப் பார்த்துக் கேலி செய்திருப்பார்கள். வெள்ளம் வருமுன் படகு செய்தல் அவசியம். பின்வருபவை பற்றி முன்னரே திட்டமிட்டுச் செயல்படுதல் நலம்.
No comments:
Post a Comment