Saturday, February 4, 2023

மனிதர்முன் ஒளிர்க!

ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு

எசாயா 58:7-10 1 கொரிந்தியர் 2:1-5 மத்தேயு 5:13-16

மனிதர்முன் ஒளிர்க!

அடுத்தவர்கள் நம்மைப் பார்க்கிறார்கள் என்றால், அல்லது அவர்கள் பார்ப்பது நம் செய்கையைப் பாதிக்கிறது என்றால், நாம் அவர்கள் முன் ஒளிர வேண்டும் என்று நம்மை அழைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு!

இன்று நாம் ஒளிர்கிறோமோ இல்லையோ நம்மைச் சுற்றி நிறைய ஒளிரிகள் இருக்கின்றன. நம்முடைய கைகளில் ஒட்டிப்போன ஸ்மார்ட்ஃபோன், நமக்கு முன் ஒய்யாரமாக சுவரில் அறையப்பட்ட செவ்வகமாய் எல்இடி டிவி, நம் மடிக்கணினி திரை, அறையின் ஒளிவிளக்குகள் என நம்மைச் சுற்றி நிறைய ஒளிர்ந்துகொண்டே இருக்கின்றன. இவற்றை நோக்கி நம் கண்கள் இயல்பாகவே செல்கின்றன. இவை ஒளிரும்போது நாம் ஒளிர வேண்டாமா?

எதற்காக ஒளிர்தல் வேண்டும்

'உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க' என்று தன்னுடைய சீடர்களைப் பார்த்துச் சொல்கின்ற இயேசு, இதே மத்தேயு நற்செய்தியின் மலைப்பொழிவில், தர்மம் செய்தல், இறைவேண்டல் செய்தல், நோன்பிருத்தல் என்னும் அறச்செயல்கள் பற்றிய அறிவுரைப் பகுதியில், 'மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்' (காண். மத் 6:1) என எச்சரிப்பது ஏன்?

இயேசுவைப் பொருத்தவரையில் நம்முடைய செயல்கள் ஒளிர வேண்டும். ஏன்? அவற்றால் விண்ணகத்தந்தை பெருமைப்படுத்தப்படுவதால்!

இன்றைய முதல் வாசகமும் (காண். எசா 58:7-10) நற்செய்தி வாசகமும் (காண். மத் 5:13-16), 'ஒளி' என்ற வார்த்தையை மையமாக வைத்தே சுழல்கின்றன. 

நற்செய்தி வாசகத்திலிருந்து நம்முடைய சிந்தனையைத் தொடங்குவோம். இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் மலைப்பொழிவில், பேறுடைமைகளைத் தொடர்ந்து அமைந்திருக்கிறது. 'நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் ... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்' என்கிறார் இயேசு. 'நீங்கள்' என்பது இங்கே இயேசுவின் சீடர்களைக் குறிக்கிறது. 'உப்பாக இருக்கவும், ஒளியாக இருக்கவும்' அறிவுறுத்தவோ அல்லது வலியுறுத்தவோ இல்லை இயேசு. மாறாக, சீடர்கள் உப்பாகவும் ஒளியாகவும் இருப்பதாகவே சொல்கின்றார். 

இயேசுவைப் பொருத்தவரையில் அவருடைய குழுமம் அல்லது குழுமத்தில் உறுப்பினர்களாக இருக்கிறவர்கள் எல்லாருமே உப்பாகவும் ஒளியாகவும் இருக்கிறார்கள்.

உப்பு மற்றும் ஒளி உருவகங்களை எப்படிப் புரிந்துகொள்வது?

உப்பு என்பது முதல் ஏற்பாட்டில் பலிப்பொருளில் கலக்கப்படும் பொருளாகவும், உடன்படிக்கை நிகழ்வில் பயன்படுத்தப்படும் பொருளாகவும், உணவைப் பாதுகாக்கும் பொருளாகவும், உணவிற்கு சுவையூட்டும் பொருளாகவும், கெட்டதைத் தூய்மையாக்கும் (கசப்பான தண்ணீரை நல்ல தண்ணீராக்கும்) பொருளாகவும் பயன்படுகிறது. ஒரே உப்பைச் சாப்பிடுவதன் வழியாக நட்பு வலுப்படுகிறது என்று மக்கள் நம்பினர். மேலும், ஆங்கிலத்தில் உள்ளத்தில் 'ஸேலரி' (சம்பளம்) என்ற வார்த்தையே 'ஸாலே' (உப்பு) என்ற இலத்தீன் சொல்லிலிருந்தே வருகிறது. ஏனெனில், தொடக்கத்தில் உரோமை படைவீரர்களின் சம்பளமாக உப்புதான் வழங்கப்பட்டது. இப்படிப் பல புரிதல்கள் இருந்தாலும், இன்றைய நற்செய்தியின் பின்புலத்தில் பார்க்கும்போது, உவர்ப்புத் தன்மையைக் கொண்டிருக்கும் வரைதான் உப்பு மதிப்பு பெறுகிறது. ஆனால், அத்தன்மையை இழந்துவிட்டால் அது குப்பையாக மாறிவிடுகிறது, பயன்படாப் பொருளாக, வைத்திருப்பவருக்குச் சுமையாக மாறிவிடுகிறது. நீண்ட காலமாக உப்பை வைத்திருக்கும்போது, அல்லது அதிகமான வெயில், அதிகமான குளிர் என்று தட்பவெப்பநிலை மாறிக்கொண்டிருக்கும்போது, அல்லது தூசியான இடத்தில் வைக்கும்போது என இந்நேரங்களில் உப்பு தன் தன்மையை இழக்கும் வாய்ப்பு உள்ளது. உப்பானது நீரில் கரைக்கப்படும்போது அல்லது உணவுப்பொருள்களில் கலக்கும்போதும் அது தன் தன்மையை இழக்கும். ஆனால், அப்படிப்பட்ட இழப்பு வரவேற்கத்தக்கது. ஏனெனில், அங்கே அது பயன்பாட்டுப்பொருளாக மாறிவிடுகிறது. பயன்பாட்டுப் பொருளாக மாறாமல் தன்னிலேயே தன்மை இழப்பதுதான் ஆபத்தானது. ஏனெனில், அப்படிப்பட்ட நேரத்தில் உப்பு யாருக்கும் பயனில்லாமல் போய்விடுகிறது. ஆக, உப்பு சுவையாவதும், சுமையாவதும் அதனுடைய உவர்ப்புத்தன்மையில்தான் இருக்கிறது. அது போலவே, இயேசுவின் குழும உறுப்பினரும் சீடரும் உறுப்பினருக்குரிய சீடருக்குரிய தன்மையைக் கொண்டிருக்கும் வரை தான் அவர்கள் குழுமத்தில் இருக்க முடியும்

ஒளி என்பது கடவுளையும் வாழ்வையும் குறிக்கிறது. படைப்பின் தொடக்கத்தில், இருளும் வெறுமையும் குழப்பமும் நிறைந்த இடம், 'ஒளி உண்டாகுக!' என்ற வார்த்தைகளால் உயிர்பெறுகின்றன. இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலை பெற்று வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குச் செல்லும்போது நெருப்புத்தூணாக உடன்செல்கின்றார் ஆண்டவராகிய கடவுள். இஸ்ரயேலைத் தன்னுடைய ஒளி என அழைத்து மகிழ்கின்றார் கடவுள். 'ஒளி இனிமையானது' என்று ஞான இலக்கியங்கள் கொண்டாடுகின்றன. இரண்டாம் ஏற்பாட்டிலும் ஒளி கடவுளிடமிருந்து வருவதாகவும், கடவுள் சார்ந்த செயல்கள் செய்பவர்கள் ஒளியிடமிருந்து பிறக்கிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீடத்துவம் என்பது இத்தகைய ஒளியைத் தன்னகத்தே கொண்டிருப்பது. மேலும், இயேசுவின் சமகாலத்துப் பாலஸ்தீனத்தில் எல்லா வீடுகளிலும் விளக்கு எப்போதும் அணையாமல் இருக்கும். தீப்பெட்டி பயன்பாடு அரிதாக இருந்த காலத்தில் விளக்கை அணைந்துவிடாமல் பார்த்துக்கொள்வதும், திரியைச் சுருக்கி எரியவிடுவதும் இன்னும் கிராமங்களில் வழக்கத்தில் இருக்கிறது. அப்படி திரியை அணையவிடாமல் பாதுகாக்க அதை அவர்கள் மரக்காலின் கீழ் அல்லது கட்டிலின் கீழ் அல்லது ஒரு பாத்திரத்தால் மூடி வைப்பது வழக்கம். வீட்டிற்குள் யாராவது வரும்போதுதான் அவர்கள் அதைத் திறந்து வைப்பர். ஸ்விட்சைப் போட்ட அடுத்த நொடி எரியும் விளக்குகளுக்குப் பழகிவிட்ட நமக்கு இந்த உருவகம் சற்று தூரமாகவே இருக்கிறது. ஆனால், பொருள் மிகவும் எளிது. ஒளி பிறருக்குப் பயன்பட வேண்டும்.

ஆக,

உப்பு தன்னுடைய உவர்ப்புத்தன்மையாலும், ஒளி தன்னுடைய ஒளிரும் தன்மையாலும் மற்றவர்களின் வாழ்வுக்குப் பயன்தர வேண்டும். அப்படிப் பயன்பதருவதற்கான ஒரு வழியே நற்செயல்கள்.

இந்நற்செயல்கள் எவை என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது:

பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய வழிபாடு சார்ந்த செயல்பாடுகளில் மூழ்கிக்கிடந்து வாழ்வுசார் செயல்களை மறந்துவிட்ட நிலையில் அவர்களுக்கு நோன்பு பற்றிய புதிய வரையறையைத் தருகின்றார் எசாயா. நோன்பு என்றால் என்ன? 'பசித்தோருக்கு உணவைப் பகிர்வது, தங்க இடமில்லாதவர்களுக்குத் தங்குவதற்கு இடம் தருவது, ஆடையற்றோரை உடுத்துவது, இனத்தாருக்கு உடனிருப்பது'. இத்தகைய நோன்பை மேற்கொள்பவர்கள் கடவுளின் உடனிருப்பைக் கண்டுகொள்வர். மேலும், 'உன்னிடம் இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு,' 'சுட்டிக் காட்டி குற்றம் சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு,' 'பசித்திருப்போருக்கு ஒருவர் தன்னையே கையளித்து,' 'வறியோரின் தேவையை நிறைவு செய்தால்' இருள் நடுவே உன் ஒளி உதிக்கும். இவை இஸ்ரயேல் மக்களின் இயலாமைகளாக, குறைகளாக இருந்தவை. இவற்றைக் களைய அவர்களை அழைக்கின்றார் கடவுள்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 2:1-5) புனித பவுல், தான் கொரிந்து நகர மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றபோது தன்னிடமிருந்த உணர்வையும் மனப்பாங்கையும் பதிவுசெய்கின்றார்: 'நான் உங்கள் நடுவில் வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும், நடுக்கத்தோடும் இருந்தேன்.' இப்படிப்பட்ட நிலையில் நற்செய்தி அறிவத்ததுதான் பவுலின் நற்செயல். இந்நற்செயலாலேயே இவர் ஒளிர்கின்றார்.

இன்று நாம் மனிதர்முன் எப்படி ஒளிர்வது?

அ. நற்செயல்கள் செய்வதால்

- எசாயா இறைவாக்கினர் முன்வைக்கும் பிறரன்புச் செயல்கள் வழியாக.

ஆ. நற்செய்தி அறிவிப்பதால் 

- பவுல் போல தன்னையே இறைவனுக்கு சரணாகதியாக்கி அந்த அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்வது.

இ. கலப்பதாலும் கடந்து நிற்பதாலும்

உப்பு தன்னையே அழித்து, மறைத்து, தன் இயல்பை இழந்து உணவோடு கலக்கும்போது சுவை தருகிறது. தனித்து நிற்றலில் அல்ல, மாறாக, கலந்துவிடுவதில்தான் உப்பின் பயன்பாடு இருக்கிறது. ஒளி தன் இருப்பைவிட்டு கடந்து நிற்றால்தான் மற்றவர்களுக்குப் பயன்தர முடியும்.

இப்படி வாழ்வதால் நமக்கு மன அழுத்தம் கூடிவிடாதா? எந்நேரமும் நாம் ஏன் பயன்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்? நாம் என்ன பயன்பாட்டுப் பொருள்களா? நாம் என்ன கால்நடைகளா? இப்படிப்பட்ட கேள்விகளால் எழும் ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து நாம் எப்படி விடுபவது?

நம்முடைய செயல்களால் இறைவன் அதாவது நம்முடைய விண்ணகத்தந்தை மாட்சி பெற வேண்டும். ஒரு குழந்தையின் செயலைக் கண்டு அதன் தாயையும் தந்தையையும் பாராட்டுவதுபோல இறைவன் பாராட்டப்பட வேண்டும். ஏனெனில், சீடத்துவம் என்னும் உவர்ப்புத்தன்மையின் ஊற்றும், ஒளிரும்தன்மையின் ஊற்றும் அவரே. 'அவருக்கு அஞ்சிநடப்போர் இருளிலும் ஒளியென மிளிர்வர்' (திபா 112) என்கிறது இன்றைய பதிலுரைப்பாடல்.


No comments:

Post a Comment